ஏ.பி.ராமன் என்று அழைக்கப்பட்ட அய்யாவய்யர் பட்டாபிராமனின் (1932-2022) வாழ்க்கை வரலாற்றிலிருந்து சில குறிப்புகள், எனக்கும் அவருக்கும் இடையிலான சில அனுபவங்கள், அவருடைய பங்களிப்புகள் குறித்த எனது பார்வைகள் என மூன்று அம்சங்களை இக்கட்டுரையில் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

கும்பகோணத்தில் பிறந்து வளர்ந்த ஏ.பி.ராமன், அங்கேயே எஸ்.எஸ்.எல்.சி. முடித்தார். வேலைக்குச் செல்ல எண்ணியபோது, தன்னுடைய கோலாலம்பூர் உறவினரின் அழைப்பை ஏற்று குடும்பத்தைப் பிரிந்து (3 சகோதரர் ஒரு சகோதரி) மலாயாவுக்குக் கப்பலேறத் தயாரானார். அப்போதிருந்த (1952) நடைமுறை குறித்தும் தான் புலம்பெயரத் தயாரான சூழல் குறித்தும் ராமன்,

அந்தக் காலத்திய ‘சூரா’ என்கிற காகிதத்தை இங்குள்ள எந்த நண்பரும் தங்களுக்கு வேண்டியவர்களுக்கு அனுப்பித்தந்து யாரையும் இங்கு அழைக்க இயலும். ‘மலாயா வரும் இந்த நபரின் எல்லாச் செலவுகளுக்கும் நான் பொறுப்பேற்கிறேன்’ எனக் கையெழுத்திட்டு கோர்ட் அதிகாரி ஒருவரிடம் ஒருவெள்ளி கட்டி முத்திரை குத்திவிட்டால், அந்த நபர் சென்னையிலிருந்தோ நாகையிலிருந்தோ சிங்கப்பூருக்குக் கப்பல் ஏறமுடியும். அப்படிக் கப்பல் ஏறியவன் தான் நான். ஏழைக் குடும்பம், வசதியற்ற சூழல், தாய் தந்தையற்ற நிலை… இது போதாதா? தமிழ் நாட்டைப் பிரிய! நான் உடன் தயாரானேன்

என்று சிங்கப்பூர்த் தமிழர் இருநூற்றுவர் நூலில் குறிப்பிடுகிறார். நூறு ரூபாய்க்குக் கப்பலில் பயணச்சீட்டு வாங்கி ஆறு நாட்கள் பயணித்து பினாங்கு வந்துசேர்ந்தார்.

ஏ.பி.ராமனை மலாயாவுக்கு வரவழைத்த உறவினர் காவல்துறை தலைமையகத்தில் வேலைசெய்ததால் அங்கேயே இவருக்கும் கிராணி (குமாஸ்தா) வேலை கிட்டியது. பிரச்சார இலாகா குமாஸ்தாவாக இருந்தவருக்கு, அன்று கம்யூனிசத்துக்கு எதிரான போராட்டத்தில் இருந்த அராசாங்கத்திற்கு உதவியாக, வானொலியில் அன்றாடம் கம்யூனிஸ்ட் பயங்கரவாத விழிப்புணர்வுப் பிரச்சாரம் செய்ய – அவரது சொற்களில் “30 நிமிட நிகழ்ச்சியில் பயங்கரவாதிகளைக் காரசாரமாகத் திட்டித் தீர்ப்பதே அந்தப்பணி” – வாய்ப்பு ஏற்பட்டது. எதிர்பாராதவகையில் உண்டான அந்த ஊடகத் தொடர்பு அவரைக் கடைசிவரை ஓர் ஊடக ஆளுமையாகவே நிலைநிறுத்திவிட்டது.

ஏ.பி.ராமன்

இவருடைய வானொலிப் பேச்சைக் கேட்ட மலாயா தேசியத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச்செயலாளர் பி.பி. நாராயணன், தோட்டத் தொழிலாளர் சங்கம் 1952லிருந்து கோலாலம்பூரில் வெளியிட்டுவந்த வார இதழான ‘சங்கமணி’யில் கட்டுரைகள் எழுத அழைத்தார். ஏ.பி.ராமனின் எழுத்து ஊடக அறிமுகம் அவ்வாறு அமைந்தது. அவ்வாறு சுமார் ஓராண்டு கழிந்தபோது, சிங்கப்பூரில் ‘புதுயுகம்’ என்ற வார இதழைத் தொடங்க இருப்பதாகவும் அதில் துணையாசிரியராக வேலைசெய்ய வருமாறும் ராமனை சி.ஆர். நரசிம்மராஜ் அழைத்தார் (சி.ஆர்.தசரதராஜ் என்று ஏ.பி.ராமன் ஒரு கட்டுரையில் குறிப்பிடுகிறார். சி.ஆர்.நரசிம்மராஜ் என்பது ஆய்வாளர் கோட்டி திருமுருகானந்தம் ‘சிங்கப்பூர் இதழியல் வரலாறு’ நூலில் குறிப்பிட்டுள்ள பெயர்). அதை ஏற்று ஏ.பி.ராமன் சிங்கப்பூருக்கு 1953-54இல் இடம்பெயர்ந்தார். புதுயுகம் ஓராண்டில் நின்றுபோனது.

‘மலாயா நண்பன்’ பத்திரிகையில் 1955-56இல் பணியாற்றியதாக சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் வெளியிட்ட எழுத்தாளர் விவரக்குறிப்பு தெரிவிக்கிறது. அதன்பிறகுதான் ‘கலைமலர்’ என்னும் திரைப்பட இதழை ஆசிரியராகவும் வெளியீட்டாளராகவும் 1956இல் ஏ.பி.ராமன் தொடங்குகிறார். கலைமலர் தொடங்கிய ஆண்டு 1958 என எழுத்தாளர் கழக வெளியீட்டிலும், 1960 என சிங்கப்பூர்த் தமிழர் இருநூற்றுவர் கட்டுரையிலும் ஆண்டுகள் உள்ளன. முனைவர் கோட்டி திருமுருகானந்தத்தின் ஆய்வுநூல் 1956 என்கிறது. கலைமலர், 1977வரை, 21 ஆண்டுகள் வெளிவந்ததாகவும் அந்நூல் கூறுகிறது.

மேற்கண்ட சங்கமணி, புதுயுகம், மலாயா நண்பன், கலைமலர் ஆகிய இதழ்களைத் தவிர தமிழ் முரசு, தமிழ் நேசன், தமிழ் மலர், ‘ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்’ இருமொழி இணைப்பு என அனேகமாக இவ்வட்டாரத்தில் அப்போது வெளியாகிக்கொண்டிருந்த அனைத்து இதழ்களிலும் ஏ.பி.ராமன் எழுதியிருக்கிறார். வானொலியில் செய்திப்பிரிவிலும் ஈராண்டுகள் வேலைபார்த்திருக்கிறார். வானொலிக்காகவும் உள்ளூர், வெளிநாட்டுத் தொலைக்காட்சிகளுக்காகவும் 700க்கும் மேற்பட்ட நாடகங்களை எழுதியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பின்னாளில் தமிழ்மணி இதழின் ஆசிரியரானார். கடைசியாக, எனக்குத் தெரிந்தவரை, ‘மந்திரச்சொல் எம்.ஜி.ஆர்.’ என்ற இணைய இதழில் கௌரவ ஆசிரியர் (2019) எனத் தொடர்ந்தது அவர் எழுத்துப் பயணம். கணினி, இணையத் தொழில்நுட்பங்களையும் கற்றுக்கொண்டு சமூக ஊடகங்களில், குறிப்பாக ஃபேஸ்புக்கில், அரசியல், திரை, இசை, இலக்கியம், நிகழ்ச்சிப்பதிவுகள் என இறுதிவரை அனேகமாக ஒவ்வொரு நாளும் எழுதிக்கொண்டே இருந்தார்.

இது அவரது வாழ்க்கை, வேலை குறித்த சில் தகவல்கள். இனி எனக்கும் அவருக்குமிடையே ஏற்பட்ட சில அனுபவங்கள்.

‘A.P. ராமன் சிறுகதைகள்’ என்ற தொகுப்பை 2017இல் வாசித்தேன். அத்தொகுப்பின் கதைகளைக் கடுமையாக விமர்சித்து எழுதினேன். என் விமர்சனத்தில் உள்நோக்கம் இருப்பதாகக் கருதி ஏ.பி.ராமன் ஒரு முகநூல் பதிவு எழுதினார். உள்நோக்கம் ஏதுமில்லை என்றும் மேலும் விளக்குவதற்கு நேரில் சந்திக்கவும் நேரம் கேட்டேன். அவர் வீட்டுக்குச்சென்று சந்திக்க நேரம் கொடுத்தார், சென்றேன்.

அப்போது சக்கர நாற்காலியில் இருந்த ஏ.பி.ராமன் வீட்டின் கீழே புறாக்களுக்குத் தீனி போட்டுக்கொண்டிருந்தார். எப்படி ஆரம்பிப்பது என்று தெரியாமல், “புறாவுக்குத் தீனி போடுவது சிங்கப்பூரில் குற்றமாச்சே” என்றேன். அவர் சிரித்துக்கொண்டே, “குற்றம்தான். என்னை (சக்கர நாற்காலியைக்காட்டி) ஒன்னும் பண்ணமாட்டாங்க. உள்ள போட்டா அரசாங்கத்துக்குதான் செலவு அதிகம்” என்றார். சூழல் இலகுவானதும் இலக்கியம், விமர்சனம், இதழியல், சிங்கப்பூர் வரலாறு எனக் கிட்டத்தட்ட 2 மணி நேரம் உரையாடி வீடுதிரும்பினேன். விமர்சனம் குறித்த என் விளக்கங்களைப் பொறுமையாகக் கேட்டார். எந்த வழிகாட்டலும் இல்லாத காலத்தில் எழுதநேர்ந்த கதைகள் அவை என்றார். சில கதைகள் பாராட்டப்பட்டன என்றும் சொன்னார். யார்பக்கம் வெற்றி என்ற முனைப்பு இருபக்கமும் இல்லாத உரையாடலாக அது அமைந்தது.

அதன்பிறகு அவ்வப்போது வாட்ஸாப் குறுஞ்செய்திகள் பரிமாறிக்கொண்டுள்ளோம். பெரும்பாலும் அவர் அனுப்பும் தகவல், கருத்து குறித்த என் பதிலாக அவ்வுரையாடல் இருக்கும். ஒருமுறை ஒரு நடிகை திருமணம் குறித்த செய்தியும் குறும்புக் கருத்தும் அனுப்பியிருந்தார். அதற்கு, “.. உங்கள் கலை இலக்கிய நிகழ்ச்சிப்பதிவுகள், வரலாற்றுச் செய்திகள், அரசியல் சூழ்நிலைகள் குறித்த விவரங்கள் அனைத்தும் பயனுள்ளதாக இருக்கின்றன. மிகவும் நன்றி! சினிமா நடிகர் நடிகைகளின் சொந்த விஷயங்களை அறிந்துகொள்வதில் எனக்கு ஆர்வமில்லாததால் தயவுசெய்து அவற்றை அனுப்பவேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறேன். உங்கள் துடிப்பான பிற பதிவுகள் வழக்கம்போலத் தொடரட்டும். நன்றி!” என்று பதில் அனுப்பினேன். அதற்கு அவர் பதிலளிக்கவில்லை என்றாலும் கோபித்துக்கொள்ளவில்லை. அதன்பிறகு திரைச்செய்திகள் எதுவும் வரவில்லை, பிற செய்திகள் மட்டும் வந்தன.

மேற்கண்ட இரு சம்பவங்களிலும் அவருடைய விமர்சனத்தை எதிர்கொள்ளும் பக்குவம், பிறரைப் புரிந்துகொண்டு அதற்கேற்ப தன்னை மாற்றிக்கொண்டு பழகும் பண்பு ஆகியவற்றைக் கண்டேன். அவரும் மனதிற்படும் விமர்சனங்களை வெளிப்படையாக வைப்பவர் என்பதும் பல்லாண்டுகால ஊடகத்துறை அனுபவமும் காரணங்களாக இருக்கலாம் என்று நினைத்துக்கொண்டேன். விமர்சனங்கள் நம் சூழலில் விரும்பப்படுவதில்லை என்ற கருத்து அவருக்கும் இருந்தது.

ஏ.பி.ராமன் ‘தி சிராங்கூன் டைம்ஸ்’ இதழைத் தொடர்ந்து வாசித்தவர் என்பதால் ஒரு சிறப்பிதழில் வாசகர் கருத்து எழுத வேண்டுகோள் விடுத்தேன். அவர், “வேண்டாம் நண்பரே! நான் நம் எதிர்கால உணர்வோடு என் கருத்திற்பட்டதை எழுதுவது மட்டுமே எனக்கு சாத்தியம். குறைகளை ஏற்க இயலாத எழுத்து சமுதாயம் நம்முடையது என்பதில் சந்தேகமே கிடையாது. அரைகுறைத் தனத்தோடு வேகமாக முன்னேறும் வாய்ப்புகளை அரசு தந்துகொண்டிருக்கிறது. ஆண்டுத் தொடக்கத்தில் வசந்தம் ஆடிஷனுக்கு வரும் பாடகன் ஆண்டிறுதியில் பிரதான விழாவில் பாடகனாக விருது பெறுமளவுக்கு உயர்த்தப்பட வேண்டிய வளர்ச்சி யுகத்தில் நாம் இருக்கிறோம். இதே நிலை எழுத்திலும்! புதியதாக எழுதும் அவசியம் இல்லாதவரை இதே நிலைதான் தொடரும். ஒரு இதழை டைஜஸ்ட் மாதிரி நடத்த முயன்றாலே விஷயம் தெரியாதவர்களாகி விடுகிறோம். அதை ஐந்துபேர் படித்தாலே போதும் என்ற முடிவுக்குவர படாதபாடு படவேண்டி இருக்கிறது. ஆகவே என்னை விட்டுவிடுங்கள். நம்பிக்கை இருக்கும்வரை இதேபோல முனைப்பாகச் செயல்படுங்கள். நன்றி!” என்று பதிலனுப்பி மறுத்துவிட்டார்.

ஆனாலும் சில மாதங்கள் கழித்து ஜனவரி 2018 தி சிராங்கூன் டைம்ஸ் இதழைக் குறித்து எழுதியிருந்தார். ‘காலச்சிறகு 25’ தொகுப்பில் அவரது ‘சிங்கப்பூரில் தமிழ் வாழ்கிறது’ கட்டுரையைச் சேர்க்க அனுமதி கேட்டபோது உடனே அனுமதித்தார். நவம்பர் 2018 இதழில் வெளியான என் ‘தீர்மானச் சோர்வு‘ கட்டுரை குறித்து சிலாகித்துப் பதிவு எழுதினார். ‘புனைவெழுத்தின் புதிர்‘ கட்டுரையை அற்புதம் என்றார். அனைத்திற்கும் மேலாக என்னுடைய முதல் கட்டுரைத் தொகுப்பான ‘கரையும் தார்மீக எல்லைகள்’ வெளியானபோது நுணுக்கமாகப் பாராட்டி மதிப்புரை எழுதியிருந்தார். அதன்பிறகும் அவ்வப்போது மலாயா மான்மியம் போன்ற சில கட்டுரைகளைப் பாராட்டி செய்தி அனுப்பியிருக்கிறார். அவர் மனதில் எதையும் வைத்துக்கொள்ளவில்லை என்பது தெளிவு. ஆ.பழனியப்பன் நேர்காணலை பார்த்துவிட்டு, “தகுதியானவருக்கு மிகத் தகுதியான புகழாரம்” என்று அவர் அக்டோபர் 2021இல் அனுப்பிய செய்தியும் என்னுடைய நன்றியுமே எங்களுக்கிடையிலான இறுதிப் பரிமாற்றமாக அமைந்துவிட்டது.

இனி ஏ.பி.ராமன் பங்களிப்புகள் குறித்த எனது பார்வை.

இலக்கியத்தில் ஓர் எழுத்தாளராக அவரது நேரடிப் பங்களிப்பு குறிப்பிடத்தது அல்ல. ஆயினும் 21 ஆண்டுகள் வெளிவந்த கலைமலரின் இலக்கியப் பங்களிப்பு குறித்து ஒரு கட்டுரைகூட நம்மிடம் இல்லை. ‘சிங்கப்பூர்த் தமிழ் இலக்கியம்: ஒரு வரலாற்றுப் பார்வை‘ கட்டுரையில் “.. கலைமலர், இந்தியன் மூவி நியூஸ், மனோகரன் முதலிய சினிமா இதழ்களும் இலக்கிய வளர்ச்சிக்கு ஓரளவு உதவின” என்ற ஒற்றைவரிக்காக ஆய்வாளர் ஆ.இரா.சிவகுமாரனுக்கு நன்றி சொல்லவேண்டும்.

கலைமலர் திரைப்பட இதழ் என்றாலும் வசந்தி, வல்லிக்கண்ணன் போன்றோரின் சிறுகதைகள், ஜமீலா, உலக நாதன் போன்றோரின் கவிதைகள், எஸ்.வையாபுரிப்பிள்ளை, மு.வரதராசன் போன்றோரின் கட்டுரைகள் என இலக்கியப் படைப்புகளும் வெளிவந்துள்ளன. “தமிழ் எழுத்தாளர்களை வெற்றிகரமாக அறிமுகப்படுத்தி அன்றைய இள எழுத்தாளர்களை ஊக்கப்படுத்தும் நோக்கத்துடன் கலைமலரை நடத்தினேன்” என்றும் “ஆண்டுதோறும் முருகு சுப்பிரமணியம், தி.சு.சண்முகம், பைரோஜி நாராயணன் போன்றோரின் கண்காணிப்பில் சிறுகதைப் போட்டிகள் நடத்தி வெற்றி பெற்றோருக்கு தங்கம்-வெள்ளிப் பரிசுகள் வழங்கினோம்” என்றும் ஏ.பி.ராமன் ஒரு கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். பொழுதுபோக்கைத் தாண்டி கலைமலரின் பிற அம்சங்களையும் முழுமையாக ஆராய்ந்தால்தான் அவரின் இதழியல், இலக்கியப் பங்களிப்புகளைக் குறித்து ஒட்டுமொத்தமாக மதிப்பிடவியலும்.

அதேபோல ஏ.பி.ராமன் எழுதியவை எழுநூற்றுக்கும் மேற்பட்ட நாடகங்கள் எனும்போது அவரது எழுத்துமுறையோ அணுகுமுறையோ நேயர்களின் சில தேவைகளை நிறைவேற்றிய காரணத்தால்தான் தொடர்ந்து ரசிக்கப்பட்டிருக்க வேண்டும். அந்நாடகங்களின் பெயர்ப்பட்டியல்கூட எங்கேனும் உள்ளதா என்பது தெரியவில்லை.

ஜூன் 2019 ‘தி சிராங்கூன் டைம்ஸ்’ இதழில் ‘தமிழ் மேடை நாடகத்தின் தந்தை தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள்’ என்றொரு கட்டுரையை ஏ.பி.ராமன் எழுதினார். தெருக்கூத்து-மேடைநாடகம்-திரைப்படம் அவற்றின் இசை, நடனம் என்று நிகழ்கலை வளர்ச்சிப்போக்கின் வரலாற்றையும் பால கான சபாக்கள் தோன்றியதற்கான தேவை போன்ற ஊகங்களையும் இணைத்து அபாரமாக எழுதியிருந்தார். தகவல்களும் அதிகம் கேள்விப்பட்டிராதவை. அவருக்கு இசைப் புலமையும் இருந்ததால் நாடகப் பாடல்களின் ராகப் பொருத்தங்கள், எடுத்துக்காட்டுகள் என்று விரிந்த கட்டுரை அது. அந்தக் கட்டுரையின் ஆழத்தைக்கொண்டு பார்க்கும்போது அவருடைய நாடகங்களையும் ஆய்வுக்குட்படுத்தவேண்டும் என்று தோன்றுகிறது.

சிங்கப்பூர் கையேடு, தமிழ் சினிமா 2000, சவாலே சமாளி ஆகிய நூல்கள் அவை வெளிவந்த காலத்திற்கான பயன்பாடுகளும் சில சிறப்பம்சங்களும் உண்டு என்கிற அளவில் குறிப்பிடத்தக்கவை. செவ்விசை, திரையிசை குறித்த ஏ.பி.ராமனின் பல குறுங்கட்டுரைகளும் ரசிக்கத்தக்கவை. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ‘சிங்கப்பூரில் தமிழும் தமிழரும்’ வரலாற்றுப்பதிவு நூல் துரதிருஷ்டவசமாகச் சிறப்பாக அமையவில்லை. நூலை எனக்கு அஞ்சலில் அனுப்பியிருந்தார். சில அரிய 19-20ஆம் நூற்றாண்டு ஒளிப்படங்கள், தமிழ் முன்னோடிகள், தமிழ்ப் பள்ளிகள் குறித்த இரண்டு கட்டுரைகள் ஆகியவற்றைத் தவிர பிற பகுதிகள் பொலிவுறவில்லை என்ற கருத்தை அவரிடம் தெரிவித்தேன். பலரும் அதைப்போன்ற கருத்துகளை அவரிடம் தெரிவித்திருக்கவேண்டும்.

அந்நூலின் பகுதிகளிலிருந்த தாவித்தாவிச் செல்லும் தன்மை, உதிரி வரலாற்றுத் தகவல்கள், வரலாற்றுக் கதையாடல் தொடர்பும் ஒருங்கிணைவும் இன்மை, மலிந்திருந்த எழுத்துப்பிழைகள் ஆகியவற்றைக் குறித்து அவரே முகநூலில், “அதற்கெல்லாம் காரணம் சொல்ல முனைவது என் போன்ற பத்திரிக்கையாளனுக்கு அழகல்ல. தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும், என் இன்றைய உடல் நிலையில் எதிர்பாராத விதமாக யாருமே உதவி இன்றிப் பல பொறுப்புகளை ஏற்க நேரிட்டது உண்மைதான். இந்தச் சூழலில் நான் இதில் ஈடுபட்டிருக்கக்கூடாது. அவசியமும் இல்லை. ஆனாலும் செய்தேன். அதுதான் நேரம்” என்று எழுதியிருந்தார். வேறுயாரும் அவ்வரலாற்றை மேம்படுத்தி எழுத முன்வந்தால் தன்னால் ஆனதைச் செய்வதாகவும் அப்பதிவில் வாக்குறுதி அளித்திருந்தார். யாரும் முன்வந்ததாகத் தெரியவில்லை, இப்போது காலம் கடந்துவிட்டது.

இவ்வட்டாரத்தில் தன்னுடைய 65 ஆண்டுக்கால இதழியல், ஒலிபரப்பு, நாடக, இசை, இணைய அனுபவங்களையும் சிங்கப்பூரின் அரசியல், சமூக மாற்றங்களையும் – அவற்றை நேரடியாக அதுவும் பத்திரிகையாளரின் கூர்மையான கண்களுடன் அணுவணுவாகப் பார்த்தவர் என்றவகையில் – தொடர்ச்சியுடனும் விரிவாகவும் பதிவுசெய்திருந்தாலே அரிய ஆவணமாக மலர்ந்திருக்க வேண்டிய நூலது. ஆனால், ஒரு செய்தியைத் தெரிவிப்பதுபோல வரலாற்று எழுத்தையும் உடனடியாகச் செய்துமுடிக்க முயன்றதாலேயே அவ்வாறு மலராமற் போய்விட்டதாகக் கருதுகிறேன். சிங்கப்பூரில் தமிழும் தமிழரும் நூலுக்கும் இப்போதுள்ள வடிவிலேயே ஒரு சமூகத்தேவை இருக்கிறது என்றாலும் ஏ.பி.ராமன் போன்ற பழுத்த அனுபவமுள்ள ஒருவர் செய்திருக்கவேண்டியது வேறுதளத்தில் என்பது என் கருத்து.

ஏ.பி.ராமன் விட்டுச்சென்றுள்ள வரலாற்று இடைவெளிகளை நிரப்ப அவரைப்போன்ற அனுபவமிக்க மூத்தோர் தயங்காமல் முன்வரவேண்டும். அவருடைய இதழியல், நாடகப் பங்களிப்புகளை ஆய்வாளர்கள் ஆராயவேண்டும். ‘முகநூல் ஜாம்பவான்’ பட்டம், தமிழவேள், பாரதியார், பாரதிதாசன், க.ப.அறவாணன், கி.வா.ஜ. விருதுகள் எனப் பல்வேறு அமைப்புகள் அவருக்கு அளித்த அங்கீகாரங்களைக் காட்டிலும் அவருடைய படைப்புகளை ஆராய்ந்து எழுதப்படும் ஒரு விரிவான ஆய்வுக்கட்டுரையால் ஏ.பி.இராமன் கூடுதலாக மகிழ்வார் என்று நம்புகிறேன். இனி விருதுகள் அளிப்போர் விருதாளரின் பங்களிப்பு குறித்த ஓர் ஆய்வுநூல் வெளியிடுவதை அவசியம் செய்யவேண்டும். பொன்னாடைகளும் சான்றிதழ்களும் நினைவுப்பரிசுகளும் பணமுடிப்புகளும் மட்டும் போதாது. அறிவுலகச் செயல்பாடுகளைப் பாராட்டி அளிக்கப்படும் விருதில் அறிவுச்சேர்மானமாக ஒரு நூலை வெளியிட்டு சிறப்பிப்பதே பொருத்தம்.

கடந்த மாதம் நடந்த ‘சிங்கப்பூர் எழுத்தாளர் விழா’வில் நான் கலந்துகொண்ட நிகழ்ச்சிகள் சிலவற்றைக் குறித்த அனுபவங்களை (ஒன்று, இரண்டு, மூன்று) எழுதியிருந்தேன். “அடுத்தடுத்தநாளே எழுதிட்டீங்களே” என்று ஆச்சரியப்பட்டார் ஒரு நண்பர். “என்னால் முடிந்தது அவ்வளவுதான். ஏபிஆர் இருந்திருந்தால் அன்றிரவே எழுதியிருப்பார்” என்றேன்!

ஆர்வமுள்ள ஒரு துறையில் தொடர்ந்து இறுதிவரை ஈடுபடுவதற்கான ஊக்கம், புதிய தொழில்நுட்பங்களைத் தொடர்ந்து கற்றுக்கொள்ளும் ஈடுபாடு, விமர்சனங்கள் எழும்போது அவற்றை இலாவகமாக எதிர்கொள்ளும் பக்குவம், தேவையற்ற வஞ்ச உணர்ச்சிகளைச் சுமக்காத பெருந்தன்மை, சமகால நடப்புகளின்மீது சொந்தக் கருத்துகளை வெளியிடும் துணிவு, அவற்றைத் தயங்காமல் எழுத்தில் பதிவுசெய்யும் முனைப்பு, அதன்வழியான அன்றாட சமூக ஊடாட்டங்களில் துடிப்புமிக்கச் செயலூக்கம் ஆகியவற்றை ஏ.பி.ராமன் அவர்களிடமிருந்து அவசியம் நாம் கற்றுக்கொள்ள வேண்டும்.

தேசிய நூலக வாரியம் ஏற்பாடு செய்த நினைவின் தடங்கள் 2022 நிகழ்ச்சியில் ஆற்றுவதற்காகத் தயாரித்த உரை. ஏழு நிமிடச் சுருக்கமாக அவ்வுரை அமைந்ததால் ஒரு சுருக்கம் மட்டும் இடம்பெற்றது. நினைவின் தடங்கள் நிகழ்ச்சியில் இடம்பெற்ற என்னுடைய 20212020201920182017 உரைகளின் கட்டுரை வடிவங்களையும் ஆர்வமுள்ளோர் வாசித்துப் பார்க்கலாம்.

***