நவீன சிங்கப்பூருக்கு அடித்தளமிடப்பட்ட 1819ஆம் ஆண்டிலிருந்து 200 ஆண்டுகள் நிறைவுற்றதை நினைவுகூறும் வகையில் 2019ஆம் ஆண்டில் பல நூல்கள் வெளியிடப்பட்டன. சிங்கப்பூர்த் தமிழ் இளையர் மன்றம் (சி.த.இ.ம.) வெளியிட்டுள்ள ‘சிங்கப்பூர்த் தமிழர் இருநூற்றுவர்‘ என்ற நூல் அவற்றுள் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். சிங்கப்பூர்த் தமிழ்ச் சமுதாய மேம்பாட்டிற்குப் பாடுபட்ட 200 ஆளுமைகளையும் அவர்களது பணிகளையும் குறித்த கட்டுரைகளின் தொகுப்பு நூலிது.

தலைமைத் தொகுப்பாசிரியராகப் பேராசிரியர் அ.வீரமணியும் இணை ஆசிரியர்களாக மாலதி பாலா மற்றும் மா.பாலதண்டாயுதமும் இணைந்து அவர்தம் குழுவினருடன் பணியாற்றி, சுமார் மூன்றாண்டுக்கால உழைப்பில் இந்த நூல் வெளியிடப்பட்டுள்ளது. இணையத்தில் கிடைக்கும் குறிப்புகளிலிருந்து மட்டும் கட்டுரைகளை உருவாக்கிவிட எண்ணாமல் பலரையும் நேர்காணல்கள் செய்து, சமயங்களில் மொழிபெயர்ப்பும் செய்து வரையப்பட்டுள்ள இக்கட்டுரைகள் உழைப்புக்கேற்ற உயர்வை அடைந்துள்ளன.

ஒவ்வொரு ஆளுமையையும் சுருக்கமாகச் சில சொற்களில் வரையறுக்கும் துணைத்தலைப்புகளையும் குறிப்பிட்டுச் சொல்லவேண்டும். எடுத்துக்காட்டாக, ‘சிங்கப்பூரின் பெரியார், பாடப்படாத சமூகத் தலைவர்’ என்ற அ.சி.சுப்பையா குறித்த தலைப்பைச் சொல்லலாம். பெட்டிச் செய்திகளாகவும் மேற்கோள்களாகவும் அளிக்கப்பட்டுள்ள குறிப்புகளும் தகவல்கள் விரைந்து மனதிற்சென்று தைக்கும்படியாக மெருகூட்டப்பட்டுள்ளன.

இந்த நூலுக்கு முன்னமைவாக ‘மலாயா மான்மியம்‘ என்ற நூலைக் குறிப்பிடலாம். சி.த.இ.ம. வெளியீடாகக் கடந்த ஆண்டு (2019) வெளிவந்த அந்நூலில் 1870கள் தொடங்கி 1930கள் வரையிலான அன்றைய மலாயாவின் தமிழர்கள் 127 பேரின் சுருக்கமான வாழ்க்கைக் குறிப்புகளும் ஒளிப்படங்களும்  இடம்பெற்றிருந்தன. அந்த நூலைக் குறித்து எழுதப்பட்ட ஒரு கட்டுரையை இவ்விணைப்பில் வாசிக்கலாம். அதன் தொடர்ச்சியாக 1940கள் முதல் 2019 வரையிலான காலகட்டத்தின் 200 ஆளுமைகளை ஆவணப்படுத்தும் வகையில் சிங்கப்பூர்த் தமிழர் இருநூற்றுவர் நூல் அமைந்துள்ளது. 

‘சிங்கப்பூர்த் தமிழர்’ என்ற வரையறையைப் புவியியல், தாய்மொழி சார்ந்த எல்லைகளை வைத்துக் குறுக்கிக்கொள்ளாமல் சிங்கப்பூர்த் தமிழ்ச் சமூக முன்னேற்றத்திற்குக் குறிப்பிடத்தக்கப் பங்களிப்பை ஆற்றிய எவரையும் உள்ளடக்கும் விதமாக ஒரு பரந்த வரையறை இந்த நூலில் கைக்கொள்ளப்பட்டுள்ளது.  ஆகவே லீ கொங் சியாங், லீ பொக் குவான், டான் டின் வீ போன்ற சீனர்களும் கெர்னியல் சிங் சாந்து, வினிதா சின்ஹா போன்ற வட இந்தியர்களும் இருநூற்றுவரில் இடம்பெற்றுள்ளனர். அவ்வாறு இடம்பெற்றவர்கள் தமிழ்ச் சமூகத்திற்காக அளித்துள்ள அறிவுசார், நிபுணத்துவ, பொருளாதாரப் பங்களிப்புகளைப் பார்க்கும்போது இந்த பரந்துபட்ட வரையறை தனிப்பட்ட ஆளுமைகள் என்ற அளவில் மட்டுமன்றி நவீன விழுமியங்களுக்கும் பல்லின சிங்கப்பூருக்கும் பொருத்தமான ஒன்றாகவும் வரவேற்கத்தக்கதாகவும் இருப்பதை உணரமுடிகிறது.

மொத்தம் 840 பக்கங்களில் விரியும் இக்கட்டுரைகளின் ஆளுமைகளுள் அரசியல்வாதிகளிலிருந்து ஆன்மிகவாதிகள்வரை, தொழிலதிபர்களிலிருந்து தொழிற்சங்கவாதிகள்வரை, சமூகத் தொண்டர்களிலிருந்து சமையற்கலை வல்லுனர்கள்வரை, வழக்குரைஞர்களிலிருந்து வள்ளல்கள்வரை,  பத்திரிகையாளர்களிலிருந்து பேச்சாளர்கள்வரை, இலக்கியவாதிகளிலிருந்து இடதுசாரிகள்வரை, மருத்துவர்களிலிருந்து விளையாட்டு வீரர்கள்வரை எனச் சிங்கைத் தமிழ்ச் சமூகத்தின் அடிமுடிதொட்டுப் பல தளங்களில் தமிழ்ச்சமூக வரலாறு வெளிக்கொணரப்பட்டுள்ளது. அந்தவகையில் இந்நூல் வரலாற்றின் நினைவுகளை ஆக்கபூர்வமாகச் சமப்படுத்த முயன்றுள்ளது எனலாம். மேலும் சிங்கையின் அரசியல் வரலாறு, பொருளாதார எழுச்சி, சட்டதிட்டங்கள் ஆகியவற்றை  ஒட்டிய மனச்சித்திரத்தை மட்டும் உள்வாங்கிக்கொண்டு சிங்கப்பூரை அதன் முழுமையுடன் அறிந்துகொள்ள இயலாது என்பதையும் இந்நூல் உணரச்செய்கிறது.

IMG_7653

நூலின் ஆளுமைகளுள் 15 பேர் பெண்கள். மலாயா மான்மியத்தில் ஒரே ஒரு பெண் இடம்பிடித்திருந்தார், அவரும் தமிழ் கற்றுக்கொண்ட சிங்களப்பெண் என்பதைப் பார்க்கும்போது இது குறிப்பிடத்தக்க முன்னேற்றம் என்பது விளங்கும். மேலும் இந்த நூலின் 200 கட்டுரைகளையும் படைத்துள்ள மொத்தம் 136 கட்டுரையாளர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் பெண்கள் என்பதையும் கருத்திற்கொண்டு பார்த்தால் சிங்கைத் தமிழ்ச் சமூகத்தில் பெண்களின் பங்கு அபரிமிதமானதாகவும் அசுரவளர்ச்சி அடைந்துவரும் ஒன்றாகவும் இருப்பதைக் காணமுடிகிறது.

இரண்டு பக்க அளவிலான பல அறிமுகக் கட்டுரைகள் முதல் 17 பக்கங்கள் நீளும் ஓர் ஆய்வுக் கட்டுரைவரை உள்ளடக்கியதாக இந்த நூல் அமைந்துள்ளபோதிலும் சராசரியாக ஓர் ஆளுமையை  நான்கைந்து பக்கங்களுக்குள் ஓரளவுக்கு முழுமையாகக் காட்டவேண்டிய சவால் இருப்பதால் கட்டுரையாளரின் திறனும் நூலின் சிறப்புக்கு அவசியமான ஒன்றாக அமைகிறது. எழுத்தாளர் பி.கிருஷ்ணன் (புதுமைதாசன்) குறித்து எழுதியுள்ள விஜயலெட்சுமி ராஜா, நீதிபதி பஞ்சாட்சரம் குமாரசுவாமி குறித்து எழுதியுள்ள சாம்பவி ராஜாங்கம் போன்ற பல கட்டுரையாளர்கள் இச்சவாலைத் திறம்பட எதிர்கொண்டுள்ளனர். ஆளுமைகள் குறித்த தகவல்களின் தொகுப்பாக மட்டும் அமைந்துவிடாமல் அவர்களை நம் நினைவில் நீடிக்கச்செய்வதில் இவர்களின் எழுத்துமுறை முக்கியப் பங்காற்றியுள்ளது.

பேராசிரியர் அ.வீரமணி எழுதியுள்ள இருபதுக்கும் மேற்பட்ட கட்டுரைகள் சிங்கப்பூர்த் தமிழ்ச்சமூக வரலாற்றில் காலவோட்டத்தில் மறக்கப்பட்டுவிடக்கூடாத ஆளுமைகளையும் நிகழ்வுகளையும் வலுவாகப் பதிவுசெய்கின்றன. வாட்டாக்குடி இரணியன், பி.வீரசேனன், ம.பெ.சாமி, மா.சி.வீரப்பன், அ.சி.சுப்பையா, தி.செல்வகணபதி, கோ.கந்தசாமி, பெ.கோவிந்தசாமி, ஸ்தித்தானந்தா அடிகளார், பிரம்மச்சாரி கைலாசம் போன்ற ஆளுமைகளைக் குறித்த பேராசிரியரின் கட்டுரைகள் சிங்கப்பூர் ஒரு நாடாக உருவாக்கம் பெறுவதற்கு முன்னரும் பின்னரும் எளிய பின்புலங்களைக் கொண்ட ஆனால் பொதுநலத்தை முன்வைத்து சமூகப்பணி ஆற்றியவர்களை வரலாற்றின் இடுக்குகளிலிருந்து மீட்டெடுத்துள்ளது.

பரவலாக அறியப்பட்ட வரலாறுகளுக்கு இணைவரலாறுகளை வெளிப்படுத்தும் கட்டுரைகளாக அவை அமைந்துள்ளன. சில தலைவர்கள், முன்னோடிகளின்மீது விழும் அதீத வெளிச்சம் வரலாற்றை ஒற்றைத்தன்மையுடன் முன்வைப்பதோடு அவர்களின் சமகாலப் பங்களிப்பாளர்களை இருட்டடிப்பும் செய்துவிடுகின்றன என்பதை இவருடைய கட்டுரைகளின் வழியாக அறிந்துகொள்ளமுடிகிறது. அந்தவகையில் பேராசிரியரின் கட்டுரைகளை இணைவரலாறுகள் எழுதப்படவேண்டியதற்கான அழுத்தமான தொடக்கப்புள்ளிகள் எனலாம்.

எடுத்துக்காட்டாக, தி.செல்வகணபதி. இவர் ‘தமிழ் மலர்’ என்ற நாளிதழை ‘தமிழ் முரசு’ ஊழியர் வேலை நிறுத்தத்தால் வெளிவராத காலத்தில் (1963) தொடங்கிப் பலகாலம் வெளியிட்டுள்ளார்.  சிங்கைத் தமிழ் நாளிதழ் ஒன்றை முதன்முதலில் காலை வெளியீடாக ஆக்கிய முன்னோடியும் இவரே. இக்கட்டுரையை வாசித்தபின் இவரைக்குறித்துப் பழைய நாளிதழ்களில் தேடியபோது கிடைத்த தகவல்கள் திகைக்கச் செய்கின்றன. சிங்கப்பூர் அரசியலைப்பில் திருத்தம் செய்வதற்கான குழுவிடம் அன்றைய 18 தமிழ் அமைப்புகளின் பிரதிநிதியாகச் செயல்பட்டு (1966) இவர் திறம்பட வாதங்களை முன்வைத்த விவரங்களை இந்த இணைப்பில் காணலாம். விரிவான ஆய்வுக்குரிய ஆளுமை. தமிழ் மலரின் மீதும் வரலாற்றின் ஒளி பாய்ச்சப்படவேண்டும். தமிழ் முரசின் இணைவரலாறாக அது இருக்கும்.

சிங்கப்பூர்த் தமிழர் இருநூற்றுவர் நூலில் மேலும் பல சிறப்புகளும் காணக்கிடைக்கின்றன. சிங்கப்பூர்த் தமிழ்ச் சமூக வரலாறு என்பதைத்தாண்டி சில ஆளுமைகளின் தனிப்பட்ட நுண்ணோக்குகள் புதிய திறப்புகளை வாசிப்பவர்களுக்கு அளிக்கின்றன.

பொருட்களை விற்பவர்கள் விலையை அதிகமாகத்தான் சொல்வார்கள் ஆகவே எதையும் பேரம்பேசித்தான் வாங்கவேண்டும் என்பது நம் சமூகத்தின் அன்றைய பொதுப்புத்தி. அதிலிருந்து விடுபட்டு, ஒரேவிலை ஆனால் குறைந்தவிலை என்ற மாற்றத்தைக் கொணர்ந்ததே முஸ்தஃபா மையத்தின் பெரிய வெற்றிக்கு வழிவகுத்ததை ஒரு கட்டுரையில் அறியமுடிகிறது.

பள்ளியில் மொழி, இலக்கியம் சார்ந்த போட்டிகளில் தொடர்ந்து தோல்வியுற்றபோதும் விடாமல் பங்கெடுத்ததற்கான காரணத்தை ஆராய்ந்தபோது, அது தான் மேடையில் நிற்பதையும் பார்வையாளர்களிடம் அளவளாவுவதை விரும்பியதுதும்தான் என்பதைக் கண்டுகொண்டதாகச்  சொல்லும் சமையல் வல்லுநர் தேவகி சண்முகத்தின் அனுபவத்தைக் குறித்த இன்னொரு கட்டுரையும் எதிர்பாராமல் தன்னைக் கண்டடைதல் குறித்த பல எண்ணங்களை எழுப்பக்கூடியதாக உள்ளது.

பல ஆளுமைகள் மிகச் சாதாரணமான குடும்பப் பின்னணி உள்ளவர்கள். அடிப்படைத் தேவைகளுக்கே கடுமையான போராட்டத்தில் இறங்கவேண்டிய சூழலிருந்தவர்கள். ஒரே தலைமுறைக் காலத்தில் தத்தமது சூழல்களுக்கேற்ப அறிவிலும் பொருளாதாரத்திலும் முன்னேற்றம்கண்டு சொந்த வாழ்வை வளப்படுத்திக்கொண்டதோடு தங்கள் சமூகத்திற்கும் பங்களித்துள்ள அவர்களின் வாழ்க்கை பெரும் பாடமாக நம் கண்முன் விரியுமாறு இந்த நூல் தொகுக்கப்பட்டுள்ளது.

சில கட்டுரைகளின் செய்திகள் தன்னியல்பாக ஒன்றையொன்று இட்டு நிரப்பிக்கொள்ளும் வகையில் அமைந்துள்ளன.

எடுத்துக்காட்டாக, தமிழ் மலர் அச்சிடப்பட்டது குறித்து செல்வகணபதி கட்டுரையில் இல்லாத சில தகவல்கள் எஸ்.எஸ்.சர்மா குறித்த கட்டுரையில் அவர் ‘மலேசியா மலர்’ கொண்டுவந்த வரலாற்றை அவர் விவரிக்கும்போது வெளிப்பட்டுள்ளன. அதேபோல, தொழிற்சங்கவாதிகள் குறித்த கட்டுரைகளில் அவர்களுள் பலரும் தொழிலாளிகள் மதுவிற்கு அடிமைப்படுவதைத் தடுக்கவேண்டும் என்று போராடியதன் அவசியத்தை இரா.கலாமோகன் குறித்த கட்டுரையில் அவர் வழக்குரைஞராகப் பணியாற்றிய அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளும்போது மேலும் விளங்கிக்கொள்ள முடிகிறது.  அப்போது துறைமுகத்தில் வாராவாரம் வெள்ளிக்கிழமை சம்பளமாம். கிடைத்ததும் வாங்கிக் குடித்துவிட்டுக் கண்ட இடங்களில் நம் தொழிலாளர்கள் விழுந்துகிடந்ததையும் அதனால் திங்கட்கிழமைகளில் நம்மவர் கூட்டம் நீதிமன்றத்தில் அதிகமாக இருந்ததையும் அவர் குறிப்பிடுகிறார். தமிழர் பிறவிக் குடிகாரர்கள் என்று பிற இனத்தினரிடையே உண்டாகியிருந்த அவப்பெயரைத் துடைக்கப் பலரும் பாடுபட்டுள்ளனர் என்பதைக் காணமுடிகிறது.

சிங்கப்பூர்த் தமிழர் இருநூற்றுவர் நூலின் உள்ளடக்கத்தில் மட்டுமின்றி வடிவமைப்பிலும் போதிய அக்கறை செலுத்தியுள்ளனர். கவனமாக மெய்ப்பும் பார்த்துள்ளனர். இவ்வளவு பெரிய நூலில் எழுத்துப்பிழைகள் மிகக்குறைவாகவே உள்ளன. சில இடங்களில் ஆங்கிலத்திலிருந்து நேரடித் தமிழாக்கம் (tech giant – தொழில் நுட்ப பூதம், goody bag – நல்லவை கொண்ட பை) சற்று புன்னகையரும்ப வைக்கிறது. அதேவேளையில் சிறப்பான  மொழிபெயர்ப்புகள் (keynote speech – முக்கிய முகவுரை) ஈடுகட்டிவிடுகின்றன.

தொகுப்பாசிரியர்களுக்கு அனைத்தையும்விட ஆகக்கடினமான ஒன்றாக எந்த 200 பேரைத் தேர்ந்தெடுப்பது என்பதில்தான் இருந்திருக்கும். பல முக்கியமான ஆளுமைகள் விடுபட்டிருக்கலாம். எடுத்துக்காட்டாக எழுத்தாளர் இராம.கண்ணபிரான் இந்த நூலில் இடம்பெறவில்லை. எனினும் இச்சிக்கலைக் கருத்திற்கொண்டு மேலும் நான்கு தொகுதிகள் ஒவ்வொரு தொகுதியிலும் தலா 200 ஆளுமைகள் என்று மொத்தம் 1000 பேரை ஆவணப்படுத்தி இம்முயற்சி விரிவாக்கப்படுவதாக சி.த.இ.ம. அறிவித்துள்ளது. அடுத்த சில ஆண்டுகளில் இப்பணி நடந்தேறும் என்று தெரிகிறது.

எல்லாம் நல்லபடியாக நடந்தேறும்போது சிங்கைத் தமிழ்ச் சமூகத்தின் ஆயிரங்கால் மண்டபத்தைக் கட்டிய பெருமை சிங்கப்பூர்த் தமிழ் இளையர் மன்ற வரலாற்றில் சேர்ந்திருக்கும்!

***