பேராசிரியர் அ.வீரமணி தொகுத்து சிங்கப்பூர்த் தமிழ் இளையர் மன்றம் வெளியிட்டுள்ள ஆவண நூல் ‘மலாயா மான்மியம்’. மொத்தம் 444 பக்கங்கள்.

1930களில் ச.முத்துத்தம்பி பிள்ளை இரண்டு தொகுதிகளாக (1937,39) ரோச்சோர் கேனல் சாலையிலிருந்த விக்டோரியா அச்சகத்தில் அச்சிட்டு வெளியிட்ட மலாயா மான்மியத்தைத் தேடியலைந்து முதல் தொகுதியை பிரிட்டிஷ் நூலகத்திலும் இரண்டாம் தொகுதியை மலாயா பல்கலைக்கழகத்திலும் கண்டுபிடித்து அவையிரண்டையும் முறையான வகையில் இணைப்புச்செய்து வெளியிட்டுள்ளார் தொகுப்பாசிரியர்.

நூலின் அமைப்பு முறைகளை சீர்படுத்தியுள்ள அதேவேளையில் முத்துத்தம்பி பிள்ளையின் அக்கால மணிப்பிரவாள தமிழ், நடை, எழுத்துகளின் அசல் வடிவம் (font) ஆகியவற்றில் கைவைக்காமல் பழமையின் செறிவோடு புதிய நூலாக ஆக்கி நமக்களித்துள்ளார் பேராசிரியர் வீரமணி. ஒருவகையில் பழைய ஆலயங்களைப் புதுப்பிக்கும் பணியைப்போன்ற சிக்கலான பணி இது. தற்கால வண்ணங்களைப் பூசிவிடவும்கூடாது அதேவேளையில் பாசி தூசிகளை நீக்கிப் போனது வந்தது பார்த்து புதுப்பொலிவு கூட்டவேண்டும். அதைச் சிறப்பாகச் செய்துள்ள பேராசிரியர் வீரமணி, முத்துத்தம்பி பிள்ளை குறித்த விரிவான அறிமுகக் கட்டுரை ஒன்றையும் எழுதி இணைத்திருக்கிறார்.

IMG_6819

சரி இந்த நூலில் என்ன இருக்கிறது?

சரவண முத்துத்தம்பி பிள்ளை எழுதிய வரலாற்றுக் கட்டுரைகளும் சிங்கப்பூர் உட்பட அன்றைய மலாயாவில் வசித்த தமிழர்கள் 127 பேரின் சுருக்கமான வாழ்க்கைக் குறிப்புகளும், அவர்களின் படங்களுடன். இவர்கள் அனைவரும் 19ம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியிலும் இருபதாம் நூற்றாண்டின் தொடக்க காலத்திலும் வாழ்ந்தவர்கள். இந்த நூலை உருவாக்குவதற்கு படாதபாடு பட்டுள்ளார் முத்துத்தம்பி பிள்ளை என்பது நூலின் சில இடங்களில் தெரிகிறது.

மேலை வரலாற்றாசிரியர்களையும் வரலாறுகளையும் ஒப்பிட்டு தமிழர்கட்கு வரலாற்று உணர்வு குறைவுதான் என்ற வழக்கமான பல்லவியைப் பிலாக்கணம் வைத்துவிட்டு நகர்ந்துவிடுவதை இன்று தமிழ் அறிவுலகில் அடிக்கடிக் காணமுடிகிறது. ஆனால் முத்துத்தம்பி பிள்ளை காலத்தில் நிலைமை இன்னும் மோசமாக இருந்திருக்கிறது. இதெல்லாம் என்ன வேலையத்த வேலை என்ற கிண்டலுக்கும் இகழ்ச்சிக்கும் ஆளாகியிருக்கிறார். வெப்பிராளம் தாங்கமுடியாமல் ‘வெங்கருக்கும், கம்பருக்கும் நடந்த சம்பாஷணை’ என்ற தலைப்பிட்டு கேலிசெய்பவர்களின் கேள்விகளுக்கு விரிவாக பதிலுரைத்ததோடு,

‘…1-வெள்ளிகொடுத்து வாங்கி வாசிக்க ஏதுவிருந்தும் புண்ணியத்திற்கு அதைச் செலவழிக்க மனமின்றி வாய்புளித்ததோ மாங்காய் புளித்ததோவென்று அறியத்தானுஞ் சக்தியற்று வாய்ப் பறையடிக்கின்றார்’

என்று அவர்களைக் கடுமையாகச் சாடியுமிருக்கிறார்.  நம்மாட்கள் தமிழ்ப் பெற்றோர்க்குப் பிறந்தும் தமிழ் படிக்காமல் இருக்கிறார்கள். ஆகவே படங்களோடு இணைத்து பெரிய மனுஷர்களின் வரலாறுகளைப் போட்டால் முதலில் படங்களைப் பார்ப்பார்கள் பிறகு வாசித்துப் பழகுவார்கள் என்ற அவருடைய எதிர்பார்ப்பையும் இந்த நூலின் பயன்களில் ஒன்றாகக் குறிப்பிடுகிறார் பிள்ளை. நூலின் இறுதியிலுள்ள மூன்று இணைப்புகளில் இந்த உரையாடலும் ஒன்று. மற்றொரு இணைப்பான ‘மலாயாவில் வெள்ளி காய்த்த காலம்’ கட்டுரை நாம் அனைவரும் அவசியம் வாசிக்கவேண்டிய ஒன்று. அவர் காலத்தைவிட சில கருத்துகள் தற்காலத்துக்கு நல்ல பொருத்தமாக இருக்கும் என்று நம்புகிறேன்.

பிள்ளை யாழ்ப்பாணத் தமிழர். இந்த நூலில் அவர் வரலாறு காட்டியுள்ளவர்களில் பெரும்பான்மை யாழ்ப்பாணத்தையோ அன்றைய தஞ்சாவூர் ஜில்லாவையோ பூர்விகமாகக் கொண்டவர்களே. இவர்களோடு நாட்டுக்கோட்டைச் செட்டிமார்கள். பலரது குடும்பங்கள் இந்த வரலாறு எழுதப்பட்ட காலத்திலேயே மலாயாவில் நூறாண்டு வரலாறுள்ளவை.  அக்கால வழக்கப்படி சாதியடையாளங்கள் பெயர்களுடன் இருப்பதால் அடிநிலைச் சாதியினர் எவரும் அநேகமாக இல்லை எனலாம்.

அடித்தள மக்கள், விளிம்பு நிலை மாந்தர் வரலாறு போன்ற கருத்தாக்கங்களெல்லாம் எழுந்திராத காலம் அது என்பதை மனதிற்கொள்ளவேண்டும். மேலும் மற்ற இனத்தார்க்கு இணையாகத் தமிழரும் மலாயாவின் மான்மியத்துக்குப் பங்களித்தனர் என்பதை எடுத்துக்காட்டும் நோக்கத்துடன் பிள்ளை இந்த நூலை உருவாக்கியதால் பதவி, செல்வம், தொழில், தர்மம், கல்வி ஆகியவற்றில் மேம்பாடான நிலையிலிருந்த தமிழர்களையே சேர்த்திருக்கிறார் என்பதையும் ஊகிக்கலாம்.

அப்படியும் ஒரு விதிவிலக்கைப் பார்த்தேன். அது ம.கடுத்தூசி என்பவரின் வரலாறு (பக்கம் 166).

கடுத்தூசியின் பாட்டனார் தமிழகத்தின் கடலூர் பகுதியிலிருந்து ஏதோ குற்றத்துக்காக நாடு கடத்தப்பட்டு சிங்கப்பூர் வந்தவர். இவ்வாறு வந்தவர்கள் சிங்கப்பூருக்கு ஆற்றிய பங்களிப்புகளைக் எடுத்துக்காட்டிவிட்டு கடுத்தூசி பலருக்கும் உபயோகமான ஒருவராக நடந்துவருவதால் அவரைப்பற்றிக் குறிப்பிடுவதாக பிள்ளை எழுதியிருக்கிறார்.

மற்றொரு விதிவிலக்காக ஒரு பெண் இருக்கிறார். அத்தனைபேரிலும் இவர் ஒருவரே பெண். ஶ்ரீமதி B.C. கண்டி. இவர் சிங்களப் பெண்ணாயினும் தமிழ் நன்கு கற்றுக்கொண்டு தமிழ்ப்பெண்களிடையே சமூகசேவை செய்துவந்ததாகவும் சிங்கப்பூர் மாதர் கழகத்தைத் தோற்றுவித்தவராகவும் பிள்ளை குறிப்பிடுகிறார்.

இந்த நூலில் வரலாற்றையே மொத்தமாக ஒதுக்கிவிட்டாலும்கூட வாசிப்புச் சுவைகூடிய பக்கங்கள் நிறைய உண்டு. பல இடங்களில் பட்டினத்தார் பாடல்களையும் இன்று அவ்வளவாகப் புழக்கத்திலில்லாத சொல்லாடல்களையும் பழமொழிகளையும் காணமுடிகிறது. பிள்ளை ஜாதகம் பார்ப்பதில் முழு நம்பிக்கை உள்ளவர் என்பதால் தன்னுடைய ஜாதகத்தை விரிவாக அலசி தான் ஒரு தொழிலையும் நிரந்தரமாகச் செய்யாமற்போனதிலிருந்து நூல்கள் பதிப்பிப்பதில் ஆர்வத்துடன் செயல்படுவதுவரை அத்தனைக்கும் நவகிரகங்கள் எப்படி ஒவ்வொரு காலகட்டத்திலும் காரணமாகிவந்தன என்பதை விரிவாக ‘சுருதி’ மேற்கோள்களுடன்  எழுதியிருக்கிறார். அன்றைய பிரிட்டிஷ் சக்கரவர்த்தி ஆறாம் ஜார்ஜ் மன்னர் ஜாதகத்தை அலசி நீசபங்க ராஜயோகப் பலன்கள் போட்டிருக்கிறார்! இவை ரசமான வாசிப்புக்குரியவை.

பிள்ளையின் எழுத்தில் என் கிராமத்தின் பெயரைக் கண்டேன் என்பது ஆச்சரியம்தான்.

ஶ்ரீமான்.றா.வீரபத்திர முதலியார் என்பவரைப் பற்றிப் பிள்ளை எழுதியுள்ள குறிப்பில் (பக்கம் 193) ‘ஆரம்பத்தில் ஊறுக்கேணி, உறங்காபுரி, தீராவழுக்கு திருக்கணங்குடி முதலிய பலவிடங்களிலிருந்து பண்டுவான்களாக இம்மலாய் நாடுகளுக்கு வந்துகுடியேறிய வம்மிசத்தில்‘ தோன்றியவராகக் குறிப்பிடுகிறார்.

விஷயம் என்னெவென்றால் ஊறாக்கிணறு, உறங்காப்புளி, தீராவழக்கு ஆகியவை என் கிராமத்தின் சிறப்பைச் சொல்வதற்கு உண்டான பழைய வழக்கு. சிலர் அதன் மூலமாகப் பெருமாள் கோவில் ஸ்தலபுராணத்தைக் காட்டுகின்றனர். எது எப்படியாயினும் அவை பல்வேறு இடங்களல்ல. ஒரே ஊர்தான், திருக்கண்ணக்குடி. வாசித்ததும் என் தந்தையைத் தொலைபேசியில் அழைத்து அக்குடும்பத்தின் சந்ததிகளை அடையாளம் கண்டுவிடமுயன்றேன். அவர் வயதிற்கே அறிந்திராத பழைய வரலாறாக இருந்தது றா.வீரபத்திர முதலியாருடையது.

முதலியார் என்ற சாதியடையாளத்தை வைத்துத் தேடுவதிலும் சிக்கல்கள் உள்ளன. ஏனெனில்   பெயர்களின் பின்னொட்டாக வாங்கிவந்த சாதி காலப்போக்கில் பலவிதமாக மாறிவந்துள்ளது. இந்த நூலிலேயே ஈரோட்டுப் பகுதிகளில் ‘பிள்ளை’களைக் கவுண்டர் என்று குறிக்கும் வழக்கம் இருந்ததாக ஒரு பதிவு இருக்கிறது. முதலியார்களும் பிள்ளைகளும் பலசாதிகளிலும் இருந்தனர் என்பதை விவரிக்கும் பேராசிரியர் ஆ.சிவசுப்பிரமணியனின் இக்கட்டுரையை ஆர்வமுள்ளோர் வாசிக்கலாம்.

பிள்ளை இந்த நூலின் பலவிடங்களில் ஒருவரின் பெருமையைக் குறிப்பிடவரும்போது ‘தேசாபிமானமும் பாஷாபிமானமும் சாதியபிமானமும்’ உள்ளவர் என்கிறார். இந்த சாதி நாம் இன்று புரிந்துகொண்டுள்ள சாதி அல்ல. இனம் என்ற பொருளில் பயன்படுத்துகிறார்.

இத்தொகுப்பு அரிய பொக்கிஷம் என்பதில் எள்ளளவு சந்தேகமும் இல்லை. வரலாற்று ஆர்வலர்களும்  சிங்கைத் தமிழர்களும் அவசியம் வாசிக்கவேண்டிய நூல்.

IMG_6821

***