அன்றாடம் நமக்குப் பல அனுபவங்கள் ஏற்படுகின்றன. அவற்றில் சில நம் நினைவில் பதிந்து, அனுபவத்திற்கான மூலகாரணம் குறித்துக் கேள்விகளை எழுப்புகின்றன. சில சமயங்களில் அவற்றுக்கான விடைகளை நாமே கண்டடைந்துவிட இயலும். பல நேரங்களில் அறிவியலின் உதவியை நாடவேண்டியிருக்கலாம்.

அப்படி எனக்கு எழுந்த சில அனுபவக் கேள்விகளையும் அவற்றுக்கு அறிவியல் அளிக்கும் விளக்கங்களையும் இங்கு பகிர்ந்துகொள்கிறேன். தனி ஒரு மனிதரின் அனுபவம் அவருடைய தனித்த அனுபவமாக மட்டும் இருப்பதில்லை. ஆகவே இவ்வனுபவங்கள் உங்களுக்கும் ஏற்பட்டிருக்கலாம் அல்லது ஏற்படவிருக்கலாம்.

ராகமும் வரிகளும் 

ஒரு பாடலை விரும்பி ரசிக்க ஆரம்பித்துவிட்டால் அதையே மீண்டும் மீண்டும் கேட்பது என் பழக்கம். அதன் ராகமும் சரி வரிகளும் சரி இரண்டறக் கலந்து என்னுள் பதிவாகிவிடும். ராகம் என்பதை இங்கு ‘ட்யூன்’ என்ற பொருளில் பயன்படுத்துகிறேன். பல்லாண்டுகள் கழித்தும் எங்கோ நினைவடுக்கின் ஆழத்திலிருந்து அப்பாடலைச் சேதாரமின்றி உருவியெடுக்கமுடிகிறது. ஆனால் இதற்கு நேரெதிரான ஓர் அனுபவமும் இருக்கிறது; பலமுறை விரும்பிக்கேட்ட பாடலின் வரிகளும்கூட நாளடைவில் தேய்ந்துபோய் ராகத்தை மட்டும் முணுமுணுக்கிறேன். வாய்விட்டுப் பாடவேண்டும் போல இருந்தால் சொந்தமாக மனம்போன போக்கில் சொற்களை நிரப்பிக்கொள்வதும் உண்டு. ஒருவேளை சிலருக்கு வரிகள் நினைவிருந்து ஆனால் ராகம் மறந்துபோகலாம்!

ஏன் இப்படி நடக்கிறது? நவீன அறிவியல் ஒரு விடையைக் கண்டறிந்துள்ளது.

சுருக்கமாகச் சொன்னால், காதுகளின் வழியாக மூளைக்குள் பாடல் செல்லும்போது ராகமும் வரிகளுமாக கைகோத்துச் செல்வதென்னவோ உண்மைதான் ஆனால் ஒரு கட்டத்தில் மூளைக்குள் அவையிரண்டும் தனித்தனியாகப் பிரிக்கப்படுவது கண்டறியப்பட்டுள்ளது. மூளையின் எவ்வெந்தப் பகுதிகளில் தூண்டல்கள் நிகழ்கின்றன என்பதைக் கண்டறியும் எம்ஆர்ஐ கருவிகளின் உதவியுடன் நிகழ்த்தப்பட்ட ஆய்வுகள் இவ்விடையைக் கொடுத்துள்ளன.

ஒரு பாடலைப் பலமுறை கேட்டுப் பழகியவர்களிடம் – அதே ராகத்தில் வெவ்வேறு வரிகளை மாற்றியும், அதே வரிகளுக்கு வெவ்வேறு ராகங்களை மாற்றியும் கேட்கச்செய்து மூளையின் பகுதிகள் தூண்டப்படுவதில் ஏற்படும் மாற்றங்களைக் கணக்கிற்கொண்டு இம்முடிவு எய்தப்பட்டுள்ளது. சங்கீதமும் சாகித்யமும் வெவ்வேறு இடங்களுக்குச் சென்றுவிடுவதால் அவை காலவோட்டத்தில் வெவ்வேறு விதமான நினைவுத் தேய்மானங்களுக்கு உட்படுகிறது என்ற விளக்கத்தை நம்மால் ஏற்கமுடிகிறது.

வழக்கம்போல இம்முடிவுகள் வேறு சில கேள்விகளை ஆய்வாளர்களிடம் எழுப்பியுள்ளன என்றாலும் நமக்கு இவ்விஷயத்தில் ஓர் ஆரம்பகட்ட விடை கிடைத்துள்ளது என்ற அளவில் மகிழ்ச்சியடைந்துகொள்ள வேண்டியதுதான்.

பிடித்த உணவும் பிடித்த உடையும்

கடந்த பத்தாண்டுகளாக எப்போது கேஎஃப்சி சென்றாலும் பாப்கார்ன் கோழிவறுவலும் சீஸ் ஃப்ரைஸும்தான் வாங்குகிறேன். எப்போது மெக்டோனல்ட்ஸ் சென்றாலும் ஃபிஷ் ஓ ஃபில்லட்டும் சூடான தேநீரும்தான் கேட்கிறேன். மதியம் கோமளாஸ் போனால் முழுச்சாப்பாடு மட்டும்தான். கிட்டத்தட்ட அதே விலைக்கு அனேக வெவ்வேறு உணவுகளைச் சுவைத்திருக்கலாம். அவ்வளவு ஏன்? வீட்டில் எத்தனை விதமான சட்டினிகள் செய்தாலும் இட்லிக்குத் தொட்டுக்கொள்ளப் பொடி-எண்ணெய்தான் வேண்டியிருக்கிறது. அதைப்போலவே உடைகளும். விதவிதமாக வாங்கினாலும் நாளடைவில் அவை ஓரங்கட்டப்பட்டு அதே இரண்டு அல்லது மூன்று ஜோடி உடைகளையே நைந்துபோகும்வரை திரும்பத்திரும்ப அணியவிரும்புகிறேன்.

ஏன்?

அறிவியல் அளிக்கும் விடை, ‘தீர்மானச் சோர்வு‘ (decision fatigue). பலவற்றிலிருந்து ஒன்றைத் தேர்ந்தெடுப்பது என்பது எப்போதும் நம் மூளைக்குச் சோர்வளிக்கும் ஒன்றாக இருப்பதை ஆய்வுகள் வெளிக்காட்டியுள்ளன. அது வாழ்க்கைப் பாதையையே மாற்றிவிடும் முக்கியமான முடிவுகளாக இருந்தாலும் சரி அல்லது மேலே கண்டதுபோல அன்றாட உணவு, உடை விஷயமாக இருந்தாலும் சரி – மூளையின் செயல்பாடு ஒன்றுதான். ஆகவே முடிந்தவரை முடிவெடுக்கும் விஷயங்களுக்குள் செல்லாதே என்று நம்மை மூளை அறிவுறுத்திக்கொண்டே இருக்கிறது. புதிதாக எடுக்கப்படும் ஒரு முடிவு என்பது ஒரு புதிய அபாயத்தைக் கொண்டுவரக்கூடும் என்ற கூடுதல் சிக்கலும் இதில் அடங்கியுள்ளது.

ஸ்டீவ் ஜாப்ஸ், மார்க் ஸுகர்பர்க், பராக் ஒபாமா போன்ற புகழ்பெற்றவர்கள் உட்படப் பலர் ஒரேவிதமான ஆடைகளை அன்றாடம் அணிகிறார்கள். தமக்கென்று ஒரு ‘பிராண்ட்’ உருவாக்கவே அவர்கள் இதைச்செய்வதாக நான் நினைத்தேன். ஆனால் உண்மை என்னவென்றால் நாம் தினசரிப் பணிகளில் தொடர்ந்து பற்பல முக்கியமான முடிவுகளை எடுக்கவேண்டியுள்ளது. அதன்பொருட்டு முடிந்தவரை முக்கியமற்ற முடிவுகளைக் குறைத்துக்கொள்வதற்காகவே ஒரெ விதமான உடை, உணவுப் பழக்கத்தைக் கைக்கொண்டுவிடுகிறோம். ஆண்/பெண் பாகுபாடு இந்த விஷயத்தில் இல்லை என்பது அறிவியல் முடிவு. சொந்த அனுபவத்துடன் அது ஒத்துப்போகிறதா என்பதை நீங்களே சோதித்துக்கொள்ளுங்கள்.

மொழியும் ஆளுமையும் 

நான் ஆங்கிலத்தில் உரையாடும்போதெல்லாம் அதிக தர்க்கபூர்வமாகவும் உறுதியாகவும் அதிகாரத்துடனும் நடப்பவனாகவும், தமிழில் உரையாடும்போது உணர்வுபூர்வமாகவும் நெகிழ்வுத் தன்மையுடனும் நட்புடனும் நடந்துகொள்வதாகவும் எனக்குத் தோன்றுகிறது. சிலருக்கு இது நேர்மாறாகவோ அல்லது வேறுவிதமாகவோகூட நடக்கலாம். அதாவது ஒரே ஆள் அவர் பேசும் மொழிகளினால் வெவ்வேறு ஆளுமைகளாக – தற்காலிகமாகவேனும் – சாத்தியமுண்டா என்பது இங்கு கேள்வி. மொழியால் சிந்திக்கும், நடந்துகொள்ளும் விதத்தில் மாறுபாடு உண்டாகுமா என்றும் கேட்கலாம்.

அறிவியலின் பதில் என்ன?

ஒருவர் ஒன்றுக்குமேற்பட்ட மொழிகளில் ஆற்றல் பெற்றிருந்தால், அவரின் சிக்கல்களைத் தீர்க்கும் திறனானது ஒரேயொரு மொழியை அறிந்தவரைக் காட்டிலும் பொதுவாகக் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரிப்பதை ஆய்வுகள் காட்டியுள்ளன. அதோடு நாம் பயன்படுத்தும் மொழி நம் கவனம், நினைவாற்றல், சிந்தனை ஆகிவற்றைக் குறிப்பிடத்தக்க அளவில் பாதிக்கிறது என்பதாகவும் சில முடிவுகள் வெளியாகியுள்ளன. ஆனால் வேற்று மொழியில் புழங்கும்போது நாம் இயல்பாகவே வேறொருவராக நடந்துகொள்கிறோம் என்று சொல்லிவிடும்வகையில் ஏதும் நிரூபணங்கள் இதுவரை இல்லை.

அதேவேளையில் நான் ஆங்கிலத்தில் வேறு ஆளாக உணர்ந்தது மாயத்தோற்றம் என்று புறந்தள்ளிவிடுவதற்கும் இல்லை. நான் நினைப்பது என்னவென்றால் இங்கு ‘உணரப்படும்’ ஆளுமை இடைவெளியானது ஒரு மொழி எந்த அளவுக்கு இயல்பான மொழியாக ஆகியுள்ளது என்பதைப் பொறுத்ததே. உதாரணமாகத் தமிழைப் பயன்படுத்தும்போது நான் சிரிப்புத் துணுக்குகளைப் பகிர்ந்துகொண்டு நெகிழ்ச்சியான தருணங்களை ஆக்கும் ஒருவனாக இருக்கலாம் ஆனால் ஆங்கிலத்தில் எனக்கு அந்த அளவுக்கு மொழி கைவராதபோது நான் ஒட்டுமொத்தமாகவே சிரிப்புத்துணுக்களைத் தவிர்த்துவிடலாம். அப்போது என்னை நான் வேறொருவனாக உணர வாய்ப்புள்ளது. இது ஓர் ஊகம் மட்டுமே.

*

அனுபவங்களை உதாசீனப்படுத்தாமல் அவற்றை ஆராய்வதற்கான சிந்தனையைத் தூண்ட வாசகரை உந்தும் நோக்கில் எழுதப்பட்ட பத்தி இது. மேலும், ‘இது ஏன் இப்படி இருக்கவேண்டும்?’ என்ற கேள்வியைக் கேட்பதை ஒரு கட்டத்தில் நாம் நிறுத்திவிடுகிறோம். அந்த ஆர்வத்தை அழிந்துவிடாமல் காத்துக்கொண்டாலே இன்றைய உலகில் விடைகளைக் கண்டுபிடிப்பது அவ்வளவு சிரமமான ஒன்றாக இருக்காது.

(தி  சிராங்கூன் டைம்ஸ், நவம்பர் 2018 இதழில் வெளியானது)