வணக்கம்!

ஆ.மாதவன் (1934-2021) வீட்டில் தமிழ் பள்ளியில் மலையாளம் என்ற சூழலில் வளர்ந்தவர். வீட்டில் தமிழ்ப் பத்திரிகைகள் வாங்கப்பட்டதால் கல்கி, தேவன் போன்றோரை அறிந்துகொண்டார். இன்னொரு பக்கம் பள்ளியின் வாயிலாக வள்ளத்தோள் குமரனாசான், பஷீர், தகழி சிவசங்கரன் பிள்ளை என மலையாள எழுத்தாளர்களின் எழுத்துகளுடனும் பரிச்சயம் உண்டானது.

இளவயதிலேயே வாசிப்பை உற்சாகமாக உணர்ந்து தமிழிலும் மலையாளத்திலும் தீவிரமாக வாசித்திருக்கிறார். ஒரு கட்டத்தில் இவரது வாசிப்பு வேகத்தைக் கண்டு பயந்த அவரது தந்தை, ‘பையன் என்னென்னமோ படிக்கான். உருப்டா சரி’ என்று சொல்லி திருநீறு பூசிவிட்டதாக ஒரு குறிப்பில் மாதவன் எழுதியிருக்கிறார். அந்த அளவுக்கு உக்கிரமான வாசிப்பு!

மாதவனுக்கு சுமார் 16 வயது ஆனபோது, தொடர்ந்து அவரது கல்விக்காகப் பணம் செலவழிக்க இயலாத குடும்பச் சூழலாலும் அவரது உதவி குடும்பத்திற்குத் தேவையாக இருந்ததாலும், படித்தவரை போதும் அண்ணன் கடையில் உதவிக்குச் செல் என்று அவரை அனுப்பிவிட்டார்கள்.

அந்தக் கடையில், கடைத்தெருவில்தான் இவர் உழைக்கும் மக்களின் வாழ்க்கையையும் அவர்களது மொழியையும் மனப்போக்குகளையும் நேரடியாக அன்றாடம் காணக்கூடிய வாய்ப்பு அமைகிறது. அதுவரையிலான ஏட்டிலக்கியப் பயிற்சியை, வாசிப்பைத் தாண்டிய வாழ்க்கையின் நேரடி அறிமுகம் கிட்டுகிறது. இரண்டுமே அவரை ஈர்த்தது. ஒன்றையொன்று நிரப்பிக்கொண்டது. ஆ.மாதவனின் ஆளுமையும் அவ்வாறே உருவாகி நிலைபெற்றது.

amadavan.jpg

ஆ.மாதவன்

PC:dinamanidotcom

தன்னுடைய 20ஆம் வயதில், மலையாளத்தில் வெளியாகியிருந்த விக்டர் ஹியூகோவின் ஒரு கதையைத் தமிழில் ‘கழுமரம்’ என்ற தலைப்பில் மொழிபெயர்க்கிறார். அது வெளியாகி அச்சில் தன்னுடைய பெயரைப் பார்த்ததும் ஈடிணையற்ற மகிழ்ச்சியை அடைகிறார். ஆனால் அதை மொழிபெயர்ப்புப் படைப்பு என்று விளங்கிக்கொள்ளக்கூடிய குடும்பத்தினரோ, நட்பு வட்டமோ அவருக்கில்லை. இவர் ஒரு மலையாளக் கதையைக் காப்பியடித்துத் தமிழில் எழுதிவிட்டதாக அவர்களின் கிண்டலுக்கும் கேலிக்கும் ஆளாகிறார். இருந்தாலும் தீராத இலக்கிய வேட்கையின் விளைவாகத் தொடர்ந்து மொழிபெயர்ப்புகளைச் செய்கிறார்.

மொழிபெயர்ப்புக் கதைகளின் வழியாக அடைந்த நம்பிக்கையாலும் மொழித்திறனாலும் ஒருகட்டத்தில் சொந்தக் கதைகளையும் எழுதத் துவங்குகிறார். சரியாக இந்தக் காலகட்டத்தில்தான் – ஐம்பதுகளில் – பல்வேறு திராவிட இதழ்கள் தொடங்கப்பட்டன. திராவிடன், திராவிட நாடு, போர்வாள் போன்ற இதழ்களில் கதைகள், கட்டுரைகள் இடம்பெற்றன. அக்கதைகளால் கவரப்பட்ட இளவயது மாதவன் திராவிடச் சித்தாந்த பிரசாரக் கதைகளைத் தன்னுடைய ஆரம்பகாலக் கதைகளாக எழுதுகிறார். அவை தொடர்ந்து திராவிட இதழ்களில் வெளியானதால் அவ்வட்டாரத்தில் இவர் ஒரு எழுத்தாளராக அறியப்படுகிறார்.

அதேவேளையில் அரு.ராமநாதனின் ‘காதல்’ இதழில் திராவிட இயக்கக் கதைகளைப் போலல்லாமல் வேறுவிதமான கதைகள் வெளியாகின்றன. மேலும் காதல் இதழில் கதை வெளியாவது பெரிய விஷயம் என்ற பேச்சும் இருந்த காலம். காதலிலும் மாதவனின் கதை ஒன்று வெளியானதால் இவர் பிரச்சார எழுத்தாளரல்ல, அனைத்து வகைமைகளையும் கையாளக்கூடியவர் என்ற பார்வை சூழலில் எழுகிறது. அப்படியாக ஒரு பத்தாண்டு ஓடுகிறது. பிறகு 32ஆம் வயதில் திருமணமாகிறது.

அப்போது ஆ.மாதவன் இலக்கிய உலகில் நன்கு அறியப்பட்டவராகிவிட்டார். அவரது திருமணத்தில் நகுலன், ஹெப்சிபா ஜேசுதாஸன், சுந்தர ராமசாமி எனப்பலரும் கலந்துகொள்கின்றனர். அங்கு நடந்த உரையாடலால்தான் இவரது இலக்கிய வாழ்க்கை திசைமாறியது என்று சொல்லலாம்.

சுந்தர ராமசாமிக்கு இலக்கியம் அழகியல் சார்ந்ததே தவிர பிரசார ஊடகமல்ல என்ற நம்பிக்கை உண்டு என்பதால், மாதவனிடம் சற்று கிண்டலான தொனியில், ‘ஏன் திராவிட இயக்கக் கதைகளை எழுதுகிறீர்கள், யதார்த்தக் கதைகளையும் எழுதிப் பார்க்கலாமே?’ என்று கேட்டிருக்கிறார். சுரீரென்று ஒரு வேகத்திற்கு ஆட்பட்ட மாதவன், இதை எழுதும்போது அதை எழுதமுடியாதா? என்று எதிர்ச்சவால் விட்டு ஒரு கதையை எழுதுகிறார்.

நா.பார்த்தசாரதியின் ‘தீபம்’ இதழில் ‘பாச்சி’ என்ற அச்சிறுகதை வெளியாகிறது. அது மாதவனின் இலக்கிய வாழ்க்கையை அடியோடு மாற்றியது மட்டுமல்லாமல் அவரது அடையாளமாக இன்றும் விளங்குகிறது. கடைத்தெருவின் தொழிலாளி, அவரிடம் வந்துசேரும் ஒரு நாய்க்குட்டி (அதன் பெயர்தான் பாச்சி), ஒருவகையில் சமூகத்தால் ஒதுக்கப்பட்ட நிலையில் அவ்விருவருக்கும் இடையில் பூக்கும் நட்புறவு என்று வளரும் அக்கதையின் இறுதியில் பாச்சி இறந்துபோகும்போது அவனடையும் மனநிலை என்று வாசிக்கும்போதே கண்முன் விரியக்கூடிய உருக்கமான காட்சிகளுடன் இயல்பான மொழியில் அமைந்திருந்தது அக்கதை.

பாச்சியை வாசித்த சுந்தர ராமசாமி, ‘உங்களைக் கட்டிப்பிடித்து முதுகில்தட்டிப் பாராட்டவேண்டும் போலிருக்கிறது’ என்று மாதவனுக்குக் கடிதம் எழுதினார். அன்றிலிருந்து திரும்பிப்பார்க்க நேரமில்லை என்பார்களே அதுபோலத் தொடர்ந்து எழுதிக்குவிக்கிறார். அன்றைய தீவிர இலக்கிய விமர்சகரான க.நா.சு., தமிழ்ச் சிறுகதையில் புதுமைப்பித்தன், கு.ப.ரா., பிச்சமூர்த்தி, மௌனி ஆகிய நால்வரை விட்டால் வேறு ஆட்களில்லை என்றும் இவர்களோடு தமிழ்ச் சிறுகதை உச்சத்தை எட்டிவிட்டது என்றும் விமர்சனங்களை வைத்துக்கொண்டிருந்தார். அவர்களைத் தாண்டியும் தமிழிலக்கியம் வேறு திசைகளில் பயணிக்கிறது, வளர்ச்சி அடைகிறது என்ற கருத்தை வலியுறுத்திய கு.அழகிரிசாமி தன்னுடைய பேச்சுகளிலும் எழுத்துகளிலும் ஆ.மாதவனை குறிப்பாக அடையாளப்படுத்தினார்.

அவ்வாறு முக்கியமான எழுத்தாளராக அறியப்படத் தொடங்கிவிட்ட ஆ.மாதாவனின் ‘கடைத்தெருக் கதைகள்’ சிறுகதைத் தொகுப்பு 1970களின் முற்பாதியில் வெளியாகிறது. கடைத்தெருவின் கலைஞனாக அப்போதிலிருந்து மாதவன் அறியப்படுகிறார். அதன்பிறகு நாவல்கள், குறுநாவல்கள், சிறுகதைகள் என்று சுமார் 15 ஆண்டுகள் தொடர்ந்து எழுதுகிறார். அவை அனைத்தும் நல்ல வரவேற்பையும் வாசிப்பையும் வாசகர்களிடமும் விமர்சகர்களிடமும் பெறுகின்றன. புனலும் மணலும் அவரது முதல் நாவல். தூவானம், கிருஷ்ணப்பருந்து என்ற பல நாவல்கள். சுமார் 70-80 சிறுகதைகள்.

அதன்பிறகு 1980களின் இறுதியிலிருந்து 2000ஆம் ஆண்டுவரை மாதவன் எழுதி ஓய்ந்த, தொய்வான காலகட்டம் எனலாம். பிறகு, 2001இல் பி.கெ.பாலகிருஷ்ணனின் ‘இனி ஞான் உறங்ஙட்டெ’ மலையாள நாவலைத் தமிழில் ‘இனி நான் உறங்கட்டும்’ என்ற தலைப்பில் மாதவன் மொழிபெயர்க்கிறார். அது சாகித்ய அகாதெமி வெளியீடாக வந்தது. மொழிபெயர்ப்பில் ஆரம்பித்த மாதவனின் பயணம் ஒரு வட்டமிட்டு மொழிபெயர்ப்பிற்கே மீண்டும் வந்துசேர்ந்தது. இதே காலகட்டத்தில் தமிழினி வெளியீடாக ஆ.மாதவனின் சிறுகதைகள் முழுத்தொகுப்பாக வெளியானது.

மொழிபெயர்ப்பினாலும் சிறுகதைகள் முழுத்தொகுப்பினாலும் நீண்ட தொய்விற்குப் பிறகு ஆ.மாதவன் மீண்டும் பேசப்பட்டார். அவரது தனித்துவமிக்க மொழி நினைவுகூரப்பட்டு சிலாகிக்கப்பட்டது. ஆகவே அவ்வகையில் புத்தாயிரத்தில் ஆ.மாதவன் புத்துயிர் பெற்று எழுந்தார் எனலாம். புதிய தலைமுறை வாசகர்கள், வளர்ந்திருந்த வாசிப்பு, இலக்கியப் புரிதல் எல்லாமுமாகச் சேர்ந்து அவரை வாரியணைத்துக்கொண்டன.

நல்வாய்ப்பாக விஷ்ணுபுரம் அமைப்பு, அங்கீகரிக்கப்படாமற்போன முன்னோடி எழுத்தாளர்களை கவனப்படுத்தி விருது வழங்குவதை 2010ஆம் ஆண்டு தொடங்கியது. அதன் முதல் விருதாளராக ஆ.மாதவன் தேர்ந்தெடுக்கப்பட்டார். விஷ்ணுபுரம் விருது என்பது பணமும் பாராட்டும் மட்டுமல்லாமல் விருதாளரின் படைப்புகளை அலசி ஆராயும் இரண்டு நாள் கருத்தரங்கு, படைப்புகள் குறித்த கட்டுரைகள் அடங்கிய நூல் வெளியீடு என்று தமிழிலக்கிய உலகைக் கூர்ந்து கவனிக்கச் செய்யும் ஒரு விருது. ஆகவே மாதவனும் கவனிக்கப்பட்டார்.

ஆ.மாதவனுக்கு 2015இல் சாகித்ய அகாதெமி விருது வழங்கப்பட்டது. இவ்வாண்டு (2021) ஜனவரியில் ஆ.மாதவன் இவ்வுலகை நீங்கினார்.

தன் தனித்துவமிக்க எழுத்துமுறையாலும், ஒரு குறிப்பிட்ட பிரிவினரின் வாழ்க்கையை அச்சுஅசலாக எந்தவிதமான குறுக்கீடுகளும் நிறுத்துப் பார்த்தல்களும் இல்லாமல், அதேவேளையில் அதை ஒரு கலைத்தன்மையுடன் பிரத்தியேகமான மொழியில் செய்யவேண்டும் என தனக்குத்தானே அமைத்துக்கொண்ட பாதையில் பயணித்த ஆ.மாதவன் ஓர் இலக்கிய முன்னோடி. அவருடைய வாழ்க்கையும் எழுத்துகளும் நம்மால் நிச்சயம் பயிலப்படவேண்டியவை.

ஆ.மாதவனை நினைவுகூர ஓர் வாய்ப்பை அளித்த தேசிய நூலக வாரியத்துக்கும் நினைவின் தடங்கள் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றி! வணக்கம்!

ca0a6c46-0ac0-4035-99ba-79698845e0cf

***

நினைவின் தடங்கள் 2021 நிகழ்ச்சியில் ஆற்றிய உரையின் எழுத்து வடிவம். 2020, 2019, 2018, 2017 உரைகளையும் வாசிக்கலாம்.