அரங்கிலிருக்கும் அனைவருக்கும் என் பணிவான வணக்கம்!

தங்கப்பா என்று அழைக்கப்பட்ட மதனபாண்டியன் இலெனின் தங்கப்பா (1934-2018) அவர்களின் வாழ்க்கையைக் குறித்தும் அவருடைய படைப்புகளில் சிலவற்றைச் சுட்டிக்காட்டியும் இன்று உங்களுடன் சில செய்திகளைப் பகிர்ந்துகொள்ள விழைகிறேன்.

தங்கப்பாவின் தந்தை புலவர் மதனபாண்டியன் திருநெல்வேலி பூர்விகத்தைக் கொண்டவர். தங்கப்பாவும் இளமைக்காலத்தைத் திருநெல்வேலியில்தான் கழித்தார். ஆங்கிலம் கற்பிக்கும் ஆசிரியராகப் பணி நிமித்தம் ஐம்பதுகளில் புதுச்சேரிக்குக் குடிபெயர்ந்த தங்கப்பா அங்கேயே தங்கிவிட்டதால் இன்று அவர் புதுச்சேரி எழுத்தாளராகத்தான் அறியப்படுகிறார். இயற்கை ஆர்வலர். இவரது இல்லத்தின் பெயர் வானகம். பிள்ளைகளின் பெயர் செங்கதிர், இளம்பிறை, விண்மீன், மின்னல். இப்பெயர்களிலிருந்தே அவரது இயற்கை, தமிழ் ஆர்வத்தைக் காணலாம். மறைவுக்குப்பின் தன் உடலை புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு ஆய்வுக்காகக் கொடையளிக்க ஏற்பாடு செய்திருந்தார்.

10LRThangappaJPG

ம.இலெ.தங்கப்பா

PC:thehindudotcom

தங்கப்பா பெரிய அளவில் அறியப்பட்ட ஓர் எழுத்தாளரல்ல. அவருடன் எனக்கு நேரடிப்பழக்கமுமில்லை. அவருடைய நூல்களை வாசித்தும், அவர் தொடர்பான சில காணொளிகளைக் கண்டும், அவருடன் பழகியவர்களுடன் உரையாடியும் அவரது ஆளுமையைக் குறித்தும் பங்களிப்பின் முக்கியத்துவம் குறித்தும் அறிந்துகொண்டேன். சுமார் 50 நூல்களை எழுதியுள்ளார். அவற்றுள் இரண்டுக்கு சாகித்ய அகாதெமி விருது அளிக்கப்பட்டுள்ளது; ஒன்று குழந்தை இலக்கியத்திற்காக, மற்றொன்று சங்க இலக்கியத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்ததற்காக.

தங்கப்பாவின் பங்களிப்புகளுள் தமிழிலக்கிய, தமிழர் மேம்பாட்டிற்கு முதன்மையாக விளங்குபவை என மூன்று முக்கியமான விஷயங்களைக் குறிப்பிடலாம் என்று நினைக்கிறேன்.

1. சிறார் இலக்கியப் பங்களிப்பு

2. சங்க இலக்கியத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தது

3. தனித்தமிழின் அவசியத்தை வலியுறுத்தியது

முதலில் சிறார் இலக்கியப் பங்களிப்பைப் பார்க்கலாம்.

பாரதி முதல் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை, அழ வள்ளியப்பா என்று ஒரு சிறப்பான தொடக்கம் தமிழில் சிறார் இலக்கியத்திற்கு அமைந்தபோதும் வலுவான தொடர்ச்சியில்லை என்றுதான் சொல்லவேண்டும். தமிழில் குழந்தைகளுக்கு நீதிநெறிக்கதைகளையும் கட்டுப்பாடுகளை ஒழுக்கத்தை போதிக்கும் கதைகளையுமே வெவ்வேறு வடிவில் அளிக்கும்போக்கு மேலோங்கிவிட்டதால், தாய்மொழியின் உணர்வுகளுடன் கொண்டாட்டமான குதூகலமான ஆர்வம் மங்கிவிட்டது.

யூமா வாசுகி போன்ற ஒருசிலர் தொடர்ந்து தம் வாழ்நாள் பணியாக சிறார் இலக்கியத்தை வண்ணமயமாக ஆக்க முனைந்து வருகின்றனர் என்றாலும் ஓரிருவர் செயல்பாடுகள் நிச்சயம் போதாது. இந்தப் பின்புலத்தில் பார்த்தால் தங்கப்பா குழந்தை இலக்கியத்திற்குப் ஆற்றியது சரியான நேரத்தில் சரியான திசையில் சிறப்பாக அளிக்கப்பட்ட பங்களிப்பு என்பதை உணரமுடியும்.

நான் சிறுவயதில் பாடி மகிழ்ந்த “தோட்டத்தில் மேயுது வெள்ளைப்பசு, அங்கே துள்ளிக்குதிக்குது கன்றுக்குட்டி, அம்மா என்குது வெள்ளைப்பசு, அதன் அண்டையில் ஓடுது கன்றுக்குட்டி” போன்ற கவிமணியின் பாடல்கள் என்னை அறியாமலேயே தமிழ்ச்சுவையை ஊட்டி என்னைத் தமிழுக்குள் ஈர்த்துள்ளன என்பதை இப்போது யோசித்துப்பார்த்துப் புரிந்துகொள்ள முடிகிறது. அத்தகைய, இலகுவான, தங்கப்பாவின் ஒரு குழந்தைப் பாடலை எடுத்துக்காட்டாக இங்கே வாசித்துக்காட்டுகிறேன்.

“தடதடவென மழை விழுகுது தகரக்கூரை மேலே

சடசடவென அது வழியுது தழைத்த செடிகள் மேலே

படபடவென இலை துடிக்குது பட்ட மழையினாலே

மடமடவென நீர்பெருகுது மரஞ்செடிகளின் கீழே”

இப்படியாக நீள்கிறது அப்பாடல். இரட்டைக் கிளவியும், சந்த நயமும், தாளமும் இணையும்போது குழந்தைகளுக்கு அது சுமையாக அல்லாமல் கொண்டாட்டமாக ஆகிவிடுகிறது. தங்கப்பா கவிதை என்று சொல்வதே இல்லை. பாடல் என்றுதான் குறிப்பிடுகிறார். இசைத்தன்மையை இழந்துவிடும் கவிதை தன்னுடைய ஒரு முக்கியமான பகுதியை என்றென்றைக்குமாக இழந்துவிடுகிறது என்பது தங்கப்பாவின் கருத்து.

மொழியில் உணர்வு கலவாமல் கற்றால் அது உயிர்ப்புடன் இராது.  அதிலும் குறிப்பாகக் குழந்தைகளைப் பொறுத்தவரை இது முற்றுமுழுதான உண்மை.  தங்கப்பாவின் குழந்தைப் பாடல்கள் எந்த அளவுக்குப் பிரபலமானவை என்று எனக்குத் தெரியவில்லை ஆனால் அவற்றை வாசித்தபோது என் பால்யகால உணர்வுகள் மீண்டும் எனக்குள் பொங்குவதை உணரமுடிந்தது.

இரண்டாவது, பழந்தமிழிலக்கியத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தது.  

அண்மையில் கீழடி தொல்லியல் ஆய்வுகள் குறித்து சு.வெங்கடேசன் சிங்கப்பூர் நூலகத்தில் உரையாற்றினார். உரையாடல் நேரத்தின்போது, “இதையெல்லாம் ஆங்கிலத்தில் எழுதுவதற்கு ஆட்கள் இருக்கிறார்களா?” என்ற கேள்வியை அவரிடம் அருண் மகிழ்நன் அவர்கள் முன்வைத்தார்.

ஏன் நம் பெருமையை ஆங்கிலத்தில் எழுதவேண்டும்? பாரதி சொன்னதுதான்; “மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள் சொல்வதிலோர் மகிமையில்லை, திறமான புலமையெனில் வெளிநாட்டோர் அதை வணக்கஞ்செய்தல் வேண்டும்”. வெளிநாட்டோர் வணக்கஞ்செய்ய வேண்டுமென்றால் அவர்கள் மொழிக்கு அதைக்கொண்டுசெல்ல வேண்டும், குறிப்பாக ஆங்கிலத்திற்கு. அது நம் கடமை.

பண்பாட்டை மொழிபெயர்ப்பது பொதுவாகக் கடினம் அதிலும் பழந்தமிழிலக்கியத்தை ஆங்கிலத்திற்குக் கொண்டுசெல்வதில் மேலதிகச் சிக்கலும் உண்டு. ஆழமான தமிழறிவும் அதற்கிணையான ஆங்கிலப் புலமையும் தேவை. நல்வாய்ப்பாக தங்கப்பாவிடம் இரண்டும் இருந்தன. புறநானூற்றுப் பாடல்களை ‘Love Stands Alone’ என்ற தலைப்பில் மொழிபெயர்த்தார். அதற்கு சாகித்ய அகாதெமி விருது வழங்கப்பட்டது.

ஏ.கே.ராமானுஜம் சங்கப்பாடல்களை ஏற்கனவே ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துவிட்டார் என்பதால் இன்னொரு மொழிபெயர்ப்பு தேவையா என்ற கேள்வி எழுந்தது. ஆனால் தங்கப்பாவின் மொழிபெயர்ப்பு நிச்சயமாகப் புதிய பொலிவைக்கூட்டி புத்தொளி பாய்ச்சியுள்ளது என்பது விமர்சகர்கள் கருத்து.

thumb_286_53021

அந்த மொழிபெயர்ப்பிலிருந்து ஓர் எடுத்துக்காட்டை இங்கே பார்க்கலாம்.

நாம் நன்றாக அறிந்த பாரிமகளிரின், ‘அற்றைத் திங்கள் அவ்வென்ணிலவின்’ எனத்தொடங்கும் புறநானூறு 112ஆம் பாடல். எழுத்தாளர் அ.முத்துலிங்கம் தங்கப்பாவின் ஆங்கில மொழிபெயர்ப்பிலுள்ள சிறப்பாக இதைச் சுட்டிக்காட்டியுள்ளார். சில இடங்களில் அபாரமாக மூலத்திற்கே மேலும் மெருகூட்டும் வகையில் தங்கப்பாவின் மொழிபெயர்ப்பு அமைவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அவ்வகையில் இந்த நூலைப் பொறுத்தவரை தங்கப்பாவின் மொழிபெயர்ப்பை, மொழிபெயர்ப்பு என்பதைவிட மொழியாக்கம் எனலாம்.

“அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவின்

When the moon was full

…..

இற்றைத் திங்கள் இவ்வெண்ணிலவின்

The moon is full again

ஒருமுறை முழுமையடையும் நிலவு தேய்ந்து வளர்ந்து மீண்டும் முழு நிலவாக ஆவதற்கு ஒருமாத காலம் ஆகுமென்பது நமக்குத் தெரியும். ஒரு மாதத்திற்கு முன் எங்களிடம் எல்லாம் இருந்தது, தந்தை இருந்தார். இன்று எல்லாம் போய்விட்டது என்று சொல்லும் குரலின் கையறு நிலையை ‘again’ என்ற ஓர் எளிமையான சொல்லைக் கூட்டியதன் வழியாகத் தங்கப்பா கவித்துவத்துடன் உணர்த்திவிட்டார் என்பது முத்துலிங்கத்தின் பார்வை.

இதைப்போன்ற அனேக நுட்பங்கள் தங்கப்பாவின் சங்க இலக்கிய ஆங்கில மொழிபெயர்ப்பில் கிடைக்கிறது என்கிறார்கள். நானும் பல பாடல்களை வாசித்துச் சுவைத்தேன். சங்கத்தமிழை இன்று ஒருவர் விளக்கினால்தான் புரிந்துகொள்ள முடியும் ஆனால் தங்கப்பாவின் ஆங்கிலத்தை எளிமையாக எவருடைய உதவியும் இன்றியே விளங்கிக்கொள்ள முடிந்தது. ஆக சங்க இலக்கியத்தை தமிழரல்லாதோர்க்கு மட்டுமின்றித் தமிழருக்கும் ஆங்கிலம் வழியாக அறிமுகம் செய்துள்ளார் என்று சொல்லலாம்.

மூன்றாவதாக, தனித்தமிழின் அவசியத்தை வலியுறுத்தியது.

இந்த உரையைத் தொடங்குவதற்குமுன் ‘அரங்கிலிருக்கும் அனைவருக்கும் என் பணிவான வணக்கம்’ என்று சொன்னேன். அது வழக்கமான ஒன்றுதான் என்று உங்களுக்குத் தோன்றியிருக்கும். ஆனால் நூற்றாண்டுக்குமுன் நான் பேசியிருந்தால் ‘சபையோர்க்கு அனேக கோடி நமஸ்காரம்’ என்று சொல்லியிருப்பேன். அன்றைய மணிப்பிரவாள நடையில் தமிழ் அந்த அளவுக்கு வடமொழிக்கலப்பு மேலோங்கி இருந்தது. தமிழ் ஆர்வலர்களாலேயே அதைத் தவிர்க்கவியலவில்லை.

இன்றைய தமிழ்ப் பேச்சில் வடமொழிக்கு பதிலாக ஆங்கிலக் கலப்பு மிகுந்துவிட்டது என்றாலும் எழுத்தில் அக்கலப்பைக் கூடியமட்டும் தவிர்க்கிறோம். ஆனால் அன்று எழுத்திலும் வடமொழிக்கலப்பு மிகுந்திருந்தது. இந்தப் பின்புலத்தில்தான் தனித்தமிழ் இயக்கத்தின், தனித்தமிழை வலியுறுத்திய ஆளுமைகளின் பங்களிப்பைப் புரிந்துகொள்ளவேண்டும்.

‘உற்ற தேகத்தை உயிர் மறந்தாலும்’ என்று வரும் திருவருட்பா வரியில் ‘தேகம்’ என்ற வடசொல்லுக்கு மாற்றாக ‘யாக்கை’ என்ற தமிழ்ச்சொல் இடம்பெற்றிருந்தால் இன்னும் தமிழ்ச்சுவை தனித்து நிற்குமே என்ற ஓர் எண்ணத்தால்தான் முதலில் வேதாச்சல ஸ்வாமிகள் தனித்தமிழ் சிந்தனையைப் பெற்றார் என்று சொல்லப்படுவதுண்டு. நூற்றாண்டுக்குமுன் தனித்தமிழ் இயக்கத்திற்கு விதைகளைப் போட்டவர்களுள் முக்கியமானவரான வேதாச்சல ஸ்வாமிகள்தான் பின்னாளில் தன் பெயரை மறைமலை அடிகள் (வேதம்-மறை, அசலம்-மலை, ஸ்வாமிகள்-அடிகள்) எனத் தூய்மையான தமிழில் மாற்றிக்கொண்டார். திராவிட இயக்கங்களின் பங்களிப்பும் தனித்தமிழுக்கு உண்டு.

மறைமலையடிகளின் சமகாலத்தவர்களாகவும் தொடர்ச்சியாகவும் தேவநேயப் பாவாணர், பாரதிதாசன், பெருஞ்சித்திரனார் என்ற ஒரு நிரை இருந்தது. அதில் பாரதிதாசனுடன் தங்கப்பாவுக்கு நேரடிப் பழக்கம் இருந்தது. பெருஞ்சித்திரனாருடன் இணைந்து தனித்தமிழ் இதழையும் நடத்தியுள்ளார். தங்கப்பாவின் தனித்தமிழ்ப் பங்களிப்புகளுள் ஆக முக்கியமானதாக நான் கருதுவது, தமிழைப் பாடமொழியாக மட்டும் அல்லாமல் தமிழ்நாட்டில் பயிற்றுமொழியாகவும் ஆக்கவேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தியதுதான். அப்போதுதான் தமிழ் தனக்கான இடத்தை அடையும் என்பது தங்கப்பாவின் நம்பிக்கை.

NT2018

நிறைவாக இப்படிச் சொல்லி முடிக்கிறேன்:

ஒரு பேராசிரியராக, இயற்கையுடன் உறவைப் பேணும் அன்பராக, சிறார் இலக்கியத்தைச் சரியான திசையில் முன்னெடுத்தவராக, சங்க இலக்கியத்தை உலகத்திற்கு அறிமுகமும் தமிழுக்கு மீளறிமுகமும் செய்தவராக, தனித்தமிழ் இயக்கத்தின் தொடர்ச்சியாக வாழ்ந்து மறைந்த தங்கப்பாவின் படைப்புகளை மீண்டும் அறிவுலக வாசிப்புக்கும் உரையாடலுக்கும் கொண்டுவருவதன் மூலமாக அவருடைய எழுத்து வாழ்க்கைக்கு நியாயம் செய்ய முடியும் என்று கூறி முடிக்கிறேன்.

நன்றி, வணக்கம்!

NT-nlb

**