‘குறைவாக்கம்’ (Minimalism) என்பதுஅண்மையில் உலகெங்கும் பிரபலமாகிவரும் ஒரு கண்டடைவு. ஏதாவது ஒரு சமூகத்தேவை அல்லது அழுத்தம் இத்தகைய கண்டடைவுகளுக்குக் காரணமாக விளங்குகிறது. 

பெற்றோர் இருவருமே பொருளீட்ட வேண்டிய அவசியம் உண்டாகி,  பிள்ளைகளோடு செலவிடும் (செலவைவிட முதலீடு என்பதே சரி. அன்பு விளைச்சலுக்கான பிணைப்பு முதலீடு) நேரம் குறைந்தபோது ‘தரமிக்க நேரம்’ (quality time) என்ற ஒன்றைக் கண்டடைந்தோம். அதாவது குறைவான நேரத்தைக்கொண்டே வழக்கமான பலனை அடைவது. நேரத்தைக் குறைப்பது இங்கு விருப்பமல்ல, வேறுவழி இல்லாததுதான் காரணம். 

அதைப்போல ஒருபக்கம் நகரநெருக்கம், குறைவான பிள்ளைப்பேறு, விலைவாசி உயர்வு போன்ற பல்வேறு காரணங்களால் வீட்டின் பரப்பளவு  சிறுத்துக்கொண்டே போவதாலும், மறுபக்கம் தள்ளுபடியில் கிடைக்கும் அத்தனை பொருட்களையும் தேவையோ இல்லையோ வாங்கி வீட்டுக்குள் வைத்துக்கொள்ளும் நுகர்விய ஆசை பெருத்துக்கொண்டே வருவதாலும், இரண்டுமாகச் சேர்ந்து, வீட்டில் இடநெருக்கடி உண்டானதால்  வேறுவழியின்றி, குறைவான பொருட்களைக்கொண்டே நிறைவாக வாழக் கற்பிக்கும் குறைவாக்க முறைகளும் கண்டடையப்பட்டுள்ளன.

‘சிறுகக்கட்டிப் பெருகவாழ்’ என்பது பன்நெடுங்காலமாகத் தமிழில் வழங்கி வந்தாலும் அது ஓர் அறிவுரைதான். ஆனால் பூகம்ப நாடான ஜப்பானில் அது அத்தியாவசியத் தேவை. அரைமணி நேரத்தில் இடம்பெயரும் அளவுக்கு மட்டுமே பொருள்கள், ஒருவாரத்தில் கட்டிக்கொள்ள முடியுமளவுக்கு ஒரு வீடு என்பதுதான் அவர்களுடைய சூழலுக்கு உகந்தது. ஆகவே அங்கிருந்து மரிய கண்டோ (Marie Kondo) போன்ற குறைவாக்க குருமார்கள் உற்பத்தியாவதில் ஆச்சரியமில்லை. 

இட நெருக்கடியைவிட நேர நெருக்கடியே நம் காலத்தின் தலையாய பிரச்சனை. கணினியோ கணிதட்டையோ  கைபேசியோ மின்னிலக்கத் திரைகளே இன்று நம் நேரத்தை விழுங்கி ஏப்பம்விடும் பகாசுரர்கள். அவற்றுள் திறன்பேசிக்கு முதலிடம் உண்டு என்பதில் ஐயமில்லை.

தேவையற்ற தகவல் குப்பைகளை – அவை நமக்கு வந்துசேரும் அதேவேகத்தில் – உடனுக்குடன் நம் மூளைக்குள் அனிச்சையாகச் செலுத்துகிறோம். வைரச் சுரங்கமான நம் மூளையைக் குப்பைத்தொட்டியாகப் பயன்படுத்துகிறோம். நம் பொன்னான நேரத்தையும் ஆற்றலையும் அநியாயமாக வீணடிக்கிறோம். வேலைத்திறன் அதிகரிப்பு, பாதுகாப்பு, மேம்பட்ட தொடர்பு என்றெல்லாம் கனவுகண்டு சொந்த செலவில் சூனியம் வைத்துக்கொண்டுவிட்டோம். திறன்பேசிக்குள் நுழைவது எளிது, விடுபடுவதற்கோ பிரம்மப் பிரயத்தனம் வேண்டும். 

‘யாதனின் யாதனின் நீங்கியான் நோதல் அதனின் அதனின் இலன்’ என்பது வள்ளுவன் வாக்கு. எதிலிருந்தெல்லாம் விடுபடுகிறோமோ அதிலிருந்தெல்லாம் நமக்குத் துன்பம் வராது என்பது பொழிப்புரை. ஆயினும் முற்றும் துறப்பது தற்காலத்திற்குப் பொருத்தமானதாக இல்லை என்பதால் சிறிய அளவில், முடிந்தவரையில், அவ்வப்போது கைக்கொள்ளும் ‘அன்றாடத்துறவு’ என்ற கோட்பாட்டை முன்மொழிகிறேன். இக்கோட்பாடு எல்லா இடங்களிலும் வேலைசெய்யும் என்றாலும் முதலில் செயல்படுத்த வேண்டியது ‘அன்றாடத் திரைத்துறவு’தான் (screen minimalism or digital minimalism) என்பது என் பார்வை.

தொலைக்காட்சி வந்தபோது இப்படித்தான் புலம்பினோம், கணினி வந்தபோது இப்படித்தான் கவலைப்பட்டோம், இணையம் வந்தபோது இப்படித்தான் அரற்றினோம். ஆனால் என்ன கெட்டுவிட்டது? காலப்போக்கில் அதனதன் இடத்தை அதது அடையும் என்றும், ஆகவே திறன்பேசியின் மீது பழிபோடுவது அர்த்தமற்றது என்றும் சிலர் நினைக்கலாம். 

ஆனால் தொலைக்காட்சியோ கணினியோ நம்மோடு அலுவலகம் முதல் ஆலயம் வரை, கழிப்பறை முதல் கல்விச்சாலை வரை, கண்விழிப்பதிலிருந்து கண்ணயர்வது வரை கால்சராய்ப் பைக்குள்ளேயே ஒட்டிக்கொண்டு இடைவிடாது நம்மை அடிமைப்படுத்தி வைத்திருக்கவில்லை என்ற முக்கியமான வேறுபாட்டை நாம் கவனிக்கத் தவறிவிடுகிறோம். தொலைக்காட்சியையும் கணினியையும் தேவைப்படும்போது மட்டும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு, நாம் பயன்படுத்தினோம். ஆனால் திறன்பேசி நம்மைப் பயன்படுத்துகிறது. பூனையும் புலியும் ஒரே இனம்தானே என்று அலட்சியமாகப் புலியை வீட்டுக்குள் விட்டுவிட்டோம். அதையும் வெளியேற்ற முடியவில்லை, நாமும் வீட்டைவிட்டு வெளியேற முடியவில்லை!

‘எல்லாத்துக்கும் ஒரு இடம் பொருள் ஏவல் வேணாமா?’ என்று கேட்கும் வழக்கமுள்ள நாம் ஏனோ கைபேசியிடம் மட்டும் அதைக் கேட்கவில்லை. அது நமக்கு எஜமானாகிவிட்டதாலோ? எஜமானர்களிடம் நாம் கேள்விகேட்க முடியாது. தலைகுனிந்து சேவகம் மட்டுமே செய்யலாம், செய்துகொண்டிருக்கிறோம். கைபேசி சிற்றோசை எழுப்பினால் போதும் ‘உள்ளேன் ஐயா’ என்று உடனே துண்டை உதறிக் கக்கத்தில் இடுக்கிக்கொண்டு ஓடுகிறோம். நம்மை மதித்து நம் முன்னால் அமர்ந்து உரையாடிக் கொண்டிருப்பவரை உதாசீனப்படுத்திவிட்டுத் திறன்பேசியை நோண்டுகிறோம். இதுவா நாம் கனவுகண்ட மேம்பட்ட தொடர்பு?

ஒரு பத்திரிகையின் வாடிக்கையாளர்கள் வாசகர்களே என்று கருதி வாசகர் எண்ணிக்கையை அதிகரிக்க முயல்வதும், அவர்களிடம் சந்தா சேர்ப்பதும், பத்திரிகை விலையை ஏற்றுவதுமாக காலம் ஓடிக்கொண்டிருந்தபோது, பத்திரிகை விலையைப் படுபாடாகக் குறைத்து, பல்லாயிரம் பேரை வாங்கச் செய்து, அதன்மூலம் வாசகர்களையே விற்பனைப் பொருளாக ஆக்கி விளம்பரக்காரர்களிடம் விற்றுவிடும் வித்தையை 1830இல் கண்டுபிடித்தவர் ‘பெஞ்சமின் டே’ என்ற ‘நியூயார்க் சன்’ செய்தித்தாள் வெளியீட்டாளர் என்கிறார் பேராசிரியர் டிம் வு (The Attention Merchants: The Epic Scramble To Get Inside Our Heads by Tim Wu, 2016).

பின்னாளில் வானொலி, தொலைக்காட்சி, இன்றைய சமூக ஊடகங்கள் செய்வதும் அதையேதான். தற்போது நிலைமை மேலும் ஒருபடி மோசம். ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டகிராம், வாட்ஸாப், யூட்யூப் என எல்லாமே இலவசம். நம்மை நாமே விற்றுக்கொண்டிருக்கிறோம் என்பது புரியாமல் மந்திரத்தால் மாங்காய் காய்க்கிறது, அது அபாரமாக இனிக்கவும் செய்கிறது என்று அந்த மாயக்கனியை மணிக்கணக்கில் சுவைத்து மயங்குகிறோம். 

நமது நேரத்தைப் பாழடிக்கிறது, வீணான அக்கப்போர்களின் பகுதியாகிறோம், நிதானமாகவோ ஆழமாகவோ சிந்திக்க முடியாத பரபரப்பை எந்நேரமும் உணர்கிறோம், போலியான நிறைவை அடைவதன் மூலம் உருப்படியான இலக்குகளை உதறிவிடுகிறோம் என்று கைபேசித்திரை வழியாகச் சமூக ஊடகங்கள் அளிக்கும் பல பாதிப்புகளைப் பல்வேறு தருணங்களில் நாம் உணர்ந்திருக்கிறோம் என்றாலும் அதற்கு உடனடியாக ஒரு தீர்வு காணவேண்டும் என்று அவ்வப்போது எழும் உந்துதல்களை ஏனோ நாம் பொருட்படுத்துவதில்லை. விளைவுகள் தெரிந்தே புகைப்பவர்கள் போல.

இவ்விஷயத்தில் என்னுடைய சொந்த அனுபவத்தை இங்கே பகிர்வது பொருத்தமாக இருக்கும். நான் ஃபேஸ்புக்கிலிருந்து விலகி நான்காண்டுகள் ஓடிவிட்டன. ட்விட்டர், இன்ஸ்டகிராம், டிக்டாக் போலப் பின்னால் வந்த மிருகங்களுடன் நான் அறிமுகமே செய்துகொள்ளவில்லை. வாட்ஸாப் தனிக்கதை, அதைப்பற்றிப் பின்னால் சொல்கிறேன். 

ஃபேஸ்புக்கிலிருந்து வெளியேறிய கடந்த நான்காண்டுகளில்தான், வாழ்வாதாரத்திற்காகச் செய்யும் வேலையை உற்சாகமாகச் செய்ய முடிந்தது. வருடத்திற்கு சுமார் நாற்பது நூல்களை ஆழமாக வாசிக்கமுடிந்தது. மொழிபெயர்ப்புகளில் ஈடுபட முடிந்தது. இரண்டு புத்தகங்கள் வெளியிட முடிந்தது. ‘தி சிராங்கூன் டைம்ஸ்’ ஆசிரியர் குழுவில் பங்களிக்க முடிந்தது. நடைப்பயிற்சிக்கும் நட்புகளுக்கும் குடும்ப அளவளாவல்களுக்கும் போதுமான நேரம் கிட்டியது. அன்றாடம் சராசரியாக ஃபேஸ்புக்கில் நான்கைந்து மணிநேரம் செலவிட்டப் பழைய வாழ்க்கையைத் தொடர்ந்திருந்தால் இவற்றுள் பல நடவாமற் போயிருக்கலாம் அல்லது அழுத்தமும் உளச்சோர்வும் அதிகரித்திருக்கலாம்.

சமூக ஊடகப் பயன்பாடு வெறும் நேர விரயம் மட்டுமன்று. சொல்லப்போனால் நேரவிரயம் அதன் ஆகச்சாதாரணமான தாக்கம் மட்டுமே. எதையும் ஆழமாகவோ, விரிவாகவோ, தொலைநோக்குடனோ சிந்தித்துப் பார்க்கவிடாமல் செய்துவிடுகிறது என்பதே என்னளவில் சமூக ஊடகங்களின் ஆகமோசமான தாக்கம்.

திறன்பேசிகளை அவ்வப்போது இலக்கின்றி எடுத்துத் திரையை நோக்குவதும், சமூக ஊடகங்களில் நுழைந்து திரையைத் தொடர்ந்து நகர்த்திக்கொண்டே இருப்பதும், பொருளற்ற விருப்பக்குறிகளை இடுவதும், தேவையற்ற விவாதங்களில் ஈடுபடுவதும் அத்தாக்கத்தை அளிக்கின்றன. 

ஏன் அவ்வாறு நிகழ்கிறது என்பதற்கு உளவியல் காரணிகள் மட்டுமின்றி, மூளைநரம்பியல் ஆய்வுகளின் அடிப்படையில் அறிவியல் பூர்வமான விளக்கமும் அளிக்கப்பட்டுவிட்டது. ஆதாரம் கேட்பவர்கள் ‘Social: Why Our Brains Are Wired to Connect, Matthew Liberman, 2003’ என்ற புத்தகத்தை வாசித்துப் பார்க்கலாம். மேத்யூ லிபெர்மன் கலிஃபோர்னியா பல்கலையில் பேராசிரியர். அங்குள்ள சமூக உணர்திறன்சார் நரம்பணுவியல் ஆய்வகத்தின் இயக்குநர். 

‘இன்றைய பரபரப்பான வாழ்க்கை’ என்ற சொற்றொடரை நாம் கேட்டவுடனே ஏற்றுக்கொள்கிறோம். உண்மையில் பரபரப்பு நம்மீது திணிக்கப்பட்டதல்ல, வலிந்து நாமாகவே உண்டாக்கிக் கொண்டதுதான். ஆனால் பரபரப்பிலிருந்து விடுபட்டுவிட்டால் எங்கே நாம் ஆட்டத்திலிருந்தே வெளியேறிவிடுவோமோ என்ற பதைபதைப்பில் விஷச்சுழலுக்குள் சிக்கிச் சிதைந்து கொண்டிருக்கிறோம். எப்படியாவது தப்பிப்பிழைத்துக் கரையேறி வருபவர்களையும் சகவழுத்தம் (peer pressure) உதைத்து மீண்டும் உள்ளே தள்ளிவிடுகிறது. 

இப்படிச் சொல்லலாம். மதுவைக் கட்டுப்பாட்டோடு பயன்படுத்த முடியும்போது கஞ்சா, ஹெராயின் போன்ற போதைப்பொருள்களையும் கட்டுப்பாட்டோடு பயன்படுத்தலாம் என்று இறங்குவது அதிக ஆபத்தானது அல்லவா? அதுபோலத்தான் கைபேசியிலுள்ள எத்தனையோ செயலிகளைப் போலச் சமூக ஊடகங்களும் என்று கருதுவதும். நம்முடைய நேரமே சமூக ஊடகங்களின் வருமானம் என்பதால், நம் கண்கள் திரையிலிருந்து அகலாமலிருக்க என்னென்ன செய்யலாம் என்பதை அறிவியல் ரீதியாக ஆராய்ந்து அதற்கேற்ப வடிவமைக்கப்பட்டுள்ள ஒரு லாஹிரிவஸ்துதான் சமூக ஊடகச் செயலி.

Siva4-pc-medicalnewstoday

PC:medicalnewstodaydotcom

ஃபேஸ்புக்கின் வருமானத்தில் சுமார் 90 விழுக்காடு கைபேசி வழியாக வருகிறது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். அதனால்தான் திரைத்துறவு குறித்துப்பேசும்போது, ஒப்பீட்டளவில், தொலைக்காட்சித் திரையையோ கணினித்திரையையோ பரவாயில்லை என்று ஏற்கமுடிகிறது. அவை மட்டான ஊடுருவலும் சில மட்டுறுத்தல்களும் கொண்டவை. 

எடுத்துக்காட்டாக, நெட்ஃபிளிக்ஸில் மணிக்கணக்காகப் படம்பார்ப்பதும் ஒரு சமகாலத் திரைப்பிரச்சனைதான் என்றாலும் ஒரு கட்டத்தில் அது சலிப்பை உண்டாக்கிவிடும். அப்போது அதிலிருந்து வெளியேறிவிடுவோம். கொரோனா வீடடங்குக் காலத்தில் அவ்வாறு பலர் சலிப்பை உணர்ந்து வெளியேறினர். ஆனால் சமூக ஊடகம் சலிப்பதேயில்லை என்பதோடு சில நிமிடங்கள் விலகினாலும் பதற்றத்தை அளிக்கும்படியாக அடிமைப்படுத்திவிடுகிறது. சமூக ஊடகங்களைப் பொறுத்தவரை, குறிப்பாகக் கைபேசியில், அடிமையாகாமால் பயன்படுத்துவது அனேகமாக இயலாதது என்கிற நிலையில் ‘எல்லாம் நாம் பயன்படுத்தும் விதத்தில்தான் இருக்கிறது’ என்பது ஒரு பொருந்தாத, பொருளற்ற, ஆபத்தான முடிவு. 

சரி, பிரச்சனைகளை விரிவாகப் பேசிவிட்டோம். இனி தீர்வுக்கு வருவோம். அன்றாடத் திரைத்துறவு என்பது என்ன? அதை எவ்வாறு மேற்கொள்ளலாம்?

வாழ்க்கையில் நீங்கள் பொருளுள்ளதாகக் கருதும் விஷயங்களுக்குத் தீவிரமாக உதவும் வகையில், கவனமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட, சிறிய எண்ணிக்கையிலான, இணையச் செயல்பாடுகளில் மட்டும் ஆழ்ந்து செயல்படுவதே திரைக்குறைவாக்கம் என்ற தத்துவம்

என்கிறார் ‘திரைக்குறைவாக்கம்’ என்ற நூலில் கால் நியூபோர்ட் (Digital Minimalism: Choosing a Focused Life in a Noisy World, by Cal Newport, 2019). அமெரிக்காவின் ஜார்ஜ் டௌன் பல்கலையில் கணினி அறிவியல் பேராசிரியராகப் பணிபுரியும் இவர் எந்தச் சமூக ஊடகத்திலும் இருந்ததில்லை. இவ்வளவுக்கும் 1982இல் பிறந்தவர், இன்னும் நாற்பது வயது நிரம்பாதவர். 

மனிதன் ஒரு சமூக விலங்கு என்கிற அடிப்படையில், தொடர்பு எந்த அளவிற்குத் தேவையோ அதே அளவுக்குத் தனிமையும் நிறைவான வாழ்விற்கு – குறிப்பாக எதையாவது சாதிக்க விரும்புவோர்க்கு – தேவை என்கிறார் கால் நியூபோர்ட். கீழான, தொடர்ச்சியான தொடர்பை அளிப்பதன்மூலம் தேவையான தனிமையைக் கிடைக்காமல் கைபேசித்திரை (மின்னிலக்க உழல்வு) செய்துவிடுகிறது என்கிறார் இவர். மேலும் பல முக்கியமான கருத்துகளையும் ஆய்வுகளையும் இந்நூலில் காணலாம்.

Siva_5

PC:biggerpalteddotcom

நியூபோர்ட்டின் ‘Deep Work: Rules for Focused Success in a Distracted World, 2016’ என்ற புத்தகமும் குறிப்பிடத்தக்கது, என்னுடைய ஃபேஸ்புக் விலகலுக்கு (2017) உந்துதலாக அமைந்தது. 

திரைக்குறைவாக்கத்தை ஒரு தத்துவமாக இல்லாமல், நடைமுறை சாத்தியமுள்ள  அன்றாடத் துறவாகச் சொல்லவேண்டும் என்றால், சொந்த அனுபவத்தில் பலனளித்துவரும் ஒரு சில வழிமுறைகளையே எடுத்துக்காட்டுகளாகச் சொல்லலாம் என்று நினைக்கிறேன்.

எனக்கு நவீனத் தமிழிலக்கியத்தில் ஆர்வம் உண்டு என்பதால், ஃபேஸ்புக்கில் இலக்கியம் தொடர்பான பதிவுகளிலும் செய்திகளிலும் ஒருகாலத்தில் இலக்கின்றி மணிக்கணக்கில் மூழ்கியிருந்தேன். உரையாடல், விவாதம் என்ற பெயரில் வம்புகளும் அக்கப்போர்களும் விளைவித்த நேரவிரயமும் உளைச்சல்களும் வேறு.

ஆனால் தற்போது மூன்று மாதங்களுக்கு ஒருமுறை ‘அரூ’ மின்னிதழ், இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை ‘வல்லினம்’ மின்னிதழ், மாதாமாதம் ‘காலச்சுவடு’ மின்னிதழ் இவற்றை மட்டும் இணையத்தில் வாசிக்கிறேன். இலக்கிய நண்பர்கள் பரிந்துரைக்கும் சில தனிப் படைப்புகளை வாசிக்கிறேன், யூட்யூபில் சில உரைகளைக் கேட்கிறேன். மற்றபடி அச்சு நூல்கள் வாசிப்பதுதான். இவையே நிறைவை அளித்துவிடுகின்றன.

தொலைக்காட்சி பார்க்கும் வழக்கமில்லை என்பதால் அன்றாடச் செய்திகளுக்காக முன்பு ஃபேஸ்புக்கையும் பிற செய்தி இணையதளங்களையும் சார்ந்து இருந்தேன். ஆனால் கடந்த நான்காண்டுகளாக தமிழ் முரசு, ‘தி ஸ்ட்ரெயிட்ஸ் டைம்ஸ்’ இரண்டு அச்சு நாளிதழ்களை மட்டும் வாசிப்பதோடு நிறுத்திக்கொள்கிறேன். அவற்றுக்கு மாதம் சுமார் ஐம்பது வெள்ளி செலவாகிறது என்பதும் பொறுப்பாக வாசிப்பதற்கு ஒரு காரணம். விலையில்லாமல் கிடைக்கும் எதையும் பொறுப்பில்லாமல் பயன்படுத்துவதுதான் மனித இயல்பு. 

அன்றாடம் எழும் புதுப்புதுத் தலைப்புச் செய்திகளுக்குச் சமூக ஊடகங்களில்  எதிர்வினையாற்றிக் கெட்டழிந்து போகாமல், எனக்கு ஆர்வமுள்ள சில பிரச்சனைகளைத் தொடர்ச்சியுடன் அவதானிக்க அச்சு செய்தித்தாள் ஏற்ற வடிவமாக இருக்கிறது. அதில் கவனச் சிதறல்களும் இல்லை. ஏதாவது குறிப்பிட்ட செய்தியைக் குறித்த மேல்விவரங்களுக்கும் இற்றைப்படுத்தலுக்கும் மட்டும் இணையத்தை நாடுகிறேன். இந்த வழிமுறையால் தேவையான செய்தியைத் தேவையான அளவில் தேவைப்படும்போது மட்டும் நுகரமுடிகிறது. இவ்வழிமுறைகளால் இழந்ததைவிட பெற்றது அதிகம் என்பதே என் அனுபவம். ஒருவேளை அப்படி ஏதாவது இழந்திருந்தால் அவை இழக்கப்பட வேண்டியவையே என்பது என் துணிபு.

அன்றாடத் திரைத்துறவில் சவால்கள் இன்னும் நிறைய இருக்கின்றன. எடுத்துக்காட்டாக, ஃபேஸ்புக்கை விட்டொழித்ததுபோல என்னால் வாட்ஸாப்பை விடமுடியவில்லை. அது வாழ்வாதாரத்திற்கான வேலைக்கும் அவசியமான தொடர்புகளுக்கும் தேவைப்படுகிறது என்பதே முக்கியமான காரணம். நெல்லுக்கிறைத்த நீர் புல்லுக்கும் பாய்வதுபோல சந்திடைவெளியில் வாட்ஸாப் குழுக்கள் என்ற பெயரில் புற்கள் முளைப்பதும் அவற்றை வெவ்வேறு வழிகளில் களையெடுப்பதுமாக என் போராட்டம் இன்றும் தொடர்கிறது. 

‘திறன்பேசியில் நன்மையுமுண்டு தீமையுமுண்டு, எல்லாம் பயன்படுத்தும் விதத்தில்தான் இருக்கிறது’ என்று ஒரு பொய்யான சமாதானத்தைத் தேடிக்கொண்டு, நாளைக்கு நூறுமுறை கைபேசியை இலக்கின்றித் திறந்து பார்க்கிறோம். ஒரு பேச்சுக்கல்ல, நிஜமாகவேதான். வேண்டுமானால் நீங்களே சோதித்துப்பாருங்கள். திறன்பேசிகளில் ஒருநாளைக்கு எத்தனைமுறை திறக்கிறீர்கள் என்பதைக் காணும் வசதியுண்டு. கடந்த ஆண்டு (2021) டிசம்பரில் ஒரு வியாழக்கிழமை 102 முறை திறந்திருக்கிறேன். காண்க படம், கீழே;

Siva4

வேலை தொடர்பான அல்லது குடும்பத்தாரின் அவசரச் செய்தியாக இருக்குமோ என்ற எண்ணம்தான் உடனே கைபேசியைத் திறப்பதற்குக் காரணம். வேலையிடத்தில் அண்மையில் வாட்ஸாப் தடைசெய்யப்பட்டு ‘டீம்ஸ்’ செயலி பயன்பாட்டுக்கு வந்திருப்பதாலும், அவசியமான சிலரின் செய்திகளை மட்டும் அறிவிக்கும் வகையில் ‘செட்டிங்’ செய்துகொள்ள வாட்ஸாப்பில் வழியிருப்பதாலும் வாட்ஸாப்புக்கு அழுத்தமான மூக்கணாங்கயிறு போட ஒரு வாய்ப்பு அமைந்துள்ளது. செய்யவேண்டும்.

மணிக்கணக்கில் சமூக ஊடகங்களைப் பிடித்துத் தொங்கினாலும் அதிலுள்ள உருப்படியான ‘செட்டிங்’குகளை நாம் தெரிந்துகொள்வதில்லை. இரவில் உறங்கியபின் வரும் செய்திகளால் உறக்கம் கெடுகிறது என்றார் ஒரு நண்பர். அமைதிப்படுத்திவிடலாமே என்றேன். விடலாம்தான் ஆனால் காலையில் ‘அலார்ம்’ அடிக்காதே என்றார்! அமைதிப்படுத்தினாலும் (silent mode) உசுப்பொலி வேலைசெய்யும் என்று தெரியவில்லை. இன்னொருவர், ‘வாட்ஸாப்பில் வரும் படங்கள், காணொளிகள் கைபேசியில் தானாகச் சேமிக்கப்பட்டு விடுகின்றன. அவற்றை நீக்குவதில் நேரம் வீணாகிறது’ என்றார். அவ்வாறு சேமிக்கப்படாமல் செட்டிங் செய்யலாம் என்பது தெரியவில்லை.

தனிப்பட்ட தேவைகளுக்கேற்ப அன்றாடத் திரைத்துறவு அணுகுமுறைகளை நீக்குப்போக்குடன் மாற்றிக்கொள்ளலாம், ஆனால் எந்தக் கட்டுப்பாடுமில்லாமல் இருக்கக்கூடாது என்பது முக்கியம்.

மனம்போன போக்கில் சமூக ஊடகங்களை, கைபேசித் திரையை மணிக்கணக்கில் உற்றுநோக்குவது நம்முடைய வாழ்க்கைத் தரத்தை அடியோடு குலைத்துவிடுகிறது, நம்மை ஆன்மிக வறுமைக்குள் தள்ளுகிறது. 

இன்னொரு முக்கியமான விஷயத்தை அடிக்கோடிட்டுச் சொல்லவேண்டும்.

பயனுள்ள வழியில் நேரத்தைச் செலவிட அனேகத் திறன்களும் திட்டங்களும் இருந்து ஆனால் கைபேசித் திரையில் நேரவிரயமும் கவனச் சிதறல்களுமாகச் சீரழிபவர்களுக்குத்தான் இத்தனை கட்டுப்பாடுகளும் அவசியம். உருப்படியான வேலைகள் கைவசம் வேறில்லை என்பவர்கள் முதலில் பயனுள்ள, அர்த்தமுள்ள பொழுதுபோக்குகளைக் கற்றுக்கொண்டுதான் திரைத்துறவுக்கு வரவேண்டும். பயனுள்ளதாக ஆகும்போது அதைப் பொழுது ‘போக்கு’ என்பதைவிட பொழுது ‘ஆக்கம்’ என்பதே சரி. அப்படிப் பொழுதாக்கங்கள் எவற்றையும் கற்க, நாட விருப்பமில்லை என்றால் திரையுழல்வைத் தொடர்வதே நல்லது. 

மணிக்கு நூறு கிலோமீட்டர் வேகத்தில் ஓடக்கூடிய திறனுள்ள வண்டி ஆனால் ‘பிரேக்’ அழுத்திக்கொண்டிருப்பதால் மெதுவடைகிறது என்றால்தான் பிரேக்கை விடுவிக்க வேண்டும். ஓடுவதற்கு எந்த வாய்ப்புமில்லை, எரிபொருளுமில்லை என்றால் பிரேக்கை விடுவித்தாலும் வண்டி நின்ற இடத்தில்தான் நிற்கப்போகிறது. ஒருவேளை, நல்லபடியாக ஓரிடத்திலாவது நின்றுகொண்டிருந்தது  பிரேக்கை விடுவித்ததும் நகர்ந்துசென்று பள்ளத்தில் விழுந்துவிடும் அபாயமும் வந்துசேரும். 

ஒரு நாளைக்கு இரண்டு பெட்டி சிகரெட் புகைத்து வந்த என் நண்பர் ஒருவர்  எத்தனையோ முறை நிறுத்த முயன்று தோற்றுவிட்டார். ஆனால் ஃபேஸ்புக்கின் உதவியுடன் புகைப்பழக்கத்தை வெற்றிகரமாக நிறுத்திவிட்டதாகச் சொன்னார். புகைக்க உந்துதல் எழும்போதெல்லாம் கைபேசியை எடுத்து ஃபேஸ்புக்கில் ஓர் அலை அலைவாராம் அல்லது ஏதாவது பதிவிடுவாராம். அது புகைக்க எழும் குறுகுறுப்பைக் குறைக்கவும் ஆசுவாசமாகவும் நல்ல மாற்றாகவும் இருக்கிறதாம். அவ்வாறு ஒரு ‘சாதுவான தீமை’யாகக் கைபேசித் திரையைப் பயன்படுத்துவோரும் திரைத்துறவு பூணவேண்டியதில்லை, மீறிப் பூண்டால் மீண்டும் புகைக்கவேண்டி வரலாம்!

நம்முடைய வாழ்க்கையை மேலும் பொருளுள்ளதாக ஆக்கிக்கொள்வதற்காக மட்டுமின்றி, ‘மின்னிலக்க இயல்பாளர்களான’ (digital natives) நம் அடுத்த தலைமுறைக்கு முன்னுதாரணமாக நடந்து வழிகாட்ட வேண்டிய கடமைக்காகவும் பொறுப்புக்காகவும் அன்றாடத் திரைத்துறவு நமது உடனடி கவனத்திற்கும் அக்கறைக்கும் உரியதாக இருக்கிறது. 

 ***

[‘தி சிராங்கூன் டைம்ஸ்’ ஜனவரி 2022 இதழில் வெளியான கட்டுரை]