கடந்த ஆண்டு (2021) தொடக்கத்தில் கீரனூர் ஜாகிர்ராஜாவின் ‘ஞாயிறு கடை உண்டு’ நாவலை வாசித்து அடைந்த ஏமாற்றத்தால், அவரது பிற படைப்புகளை மேலும் வாசிக்க மனமின்றி இருந்துவிட்டேன். ஆனால் ஒருபானை சோற்றுக்கு ஒருசோறு பதம் என்கிற உக்கிராணத்தனமான சிந்தனை இலக்கியத்திற்கு ஒவ்வாது என்ற தீர்க்கதரிசி ஜெயகாந்தனின் வாக்கை உறுதிசெய்யும் விதமாக, ஜாகிர்ராஜாவின் ‘துருக்கித்தொப்பி’ நாவலை (222 பக்கம், விஜயா பதிப்பகம், 2017) அண்மையில் வாசித்தபோது நிறைவாக அமைந்தது. துருக்கித்தொப்பியைக் குறித்து சில கருத்துகளை இங்கே பகிர்ந்துகொள்கிறேன்.

இந்த நாவல் தமிழகத்தில் பழனி அருகேயுள்ள ஒரு தமிழ் முஸ்லிம் சமூகத்தின் பண்பாட்டைச் சித்தரிக்கிறது, வாழ்ந்துகெட்ட குடும்பமொன்றின் கதைதைச் சொல்கிறது, திராவிட அரசியலின் தொடக்ககால எதிர்பார்ப்புகளையும் ஏமாற்றங்களையும் பதிவுசெய்கிறது, மனிதர்களின் வக்கிரங்களையும் சாய்வுகளையும் தயக்கமில்லாமல் திறந்துகாட்டுகிறது என்றெல்லாம் பல்வேறு கோணங்களில் பார்க்கலாம் என்றாலும், குடும்பம் என்கிற அமைப்பின் கடைக்கால் பொருளாதாரத்தில் நிலைகொள்கிறது என்பதையும் அது ஆட்டம்கண்டால் அவ்வமைப்பு நிலைகுலைவதோடு அமைப்பின் உறுப்பினர்களும் ஆன்மிகச் சீரழிவுக்கு உள்ளாகின்றனர் என்ற அடிப்படையின்மீது எழுப்பப்பட்டுள்ளது என்று நான் பார்க்கிறேன்.

அதிலும் நாவலில் வரும் ‘எட்டுக்கல் பதிச்ச வீடு’ போல அதன் வளமைக்காகவே பெருமையாக அறியப்படும் ஒரு குடும்பம் எனும்போது, குடும்பத்தின் மற்ற அனைத்து அம்சங்களும்கூட அதன்மீதே ஏற்றப்பட்டு இணைக்கப்பட்டுவிடுகிறது. அந்த ஆணிவேர் அறுந்தால் குடும்பமரம் இலையுதிர்ந்து, கிளைமுறிந்து, சாய்ந்துவிடுகிறது. ஒருவேளை அம்மரம் குற்றுயிராக நின்றாலும் அன்றாட நெருக்கடிகள், அழுத்தங்களின் பொருட்டு வெட்டி வீழ்த்தப்படுகிறது. கேபிஷே எனப்படும் கே.பி. ஷேக் அலாவுதீன் கம்பீரமாக அணிந்துகொள்ளும் குஞ்சமிட்ட சிவப்புத் துருக்கித்தொப்பியும் அது கடைசியில் வண்ணமிழந்து, சுருங்கி மரக்கிளையில் ஊசலாடுவதும் இங்கே பொருளாதார வளமை, வீழ்ச்சியின் குறியீடே.

வாழ்ந்துகெட்ட குடும்பங்களின் கதைகள் புதிதல்ல, ஆனால், குடும்பத்தின் பொருளாதார வீழ்ச்சி சமூகத்தின் பார்வையில் மதிப்புக்குறைவை உண்டாக்குகிறது என்பதைத்தாண்டி, குடும்ப உறுப்பினர்களும் அவர்களாகவே தம்முடைய கண்ணியத்தைக் காலப்போக்கில் குறைத்துக்கொள்ளவும் வழிசெய்கிறது என்பதை ஆசிரியர் நுட்பமாகச் சுட்டுகிறார். ஓரிடத்தில் அத்தாவுல்லா கதாபாத்திரத்தைக்கொண்டு சற்று கோடிகாட்டியிருக்கிறார்;

“கையிருப்பு கரைந்தவனிடம் இறுதியாகப் பெருமூச்சைக் கிளறிவிட்டால் ரௌத்திரமே எஞ்சியிருக்கும். அத்தாவுல்லா அப்படித்தான் இருந்தான். இயல்பில் அவனுக்கில்லாத கடுகடுப்பும் கோபமும் கொஞ்சகாலமாகத் தொற்றிக்கொண்டது. தொற்றிய வாயிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ள முயற்சித்தான். முடியவில்லை.”

மொழித்திறனும் தொழில்திறனும் கொண்டவனாகவும், கொள்கை சார்ந்த திராவிடப் பிடிப்புள்ளனவனாகவும், நிதானமானவனாகவும் நாவலில் உருக்கொள்ளும் அத்தாவுல்லா, பொருளாதார வீழ்ச்சி கண்டபிறகு கீழான வாழ்க்கை நிலைக்கு மெல்லப் பழகிவிடும்போது, ஜோசியனைச் செருப்பைக் கழற்றி அடிக்கப்பாய்கிறான் என்பதும், “…அதுக்கு எவ தாலிய அறுக்கதுண்டு தெரியில” என்கிற ரீதியில் சிந்திக்கத் தொடங்குகிறான் என்பதையும் ஆசிரியர் உட்பிரதிகளாக விட்டுச்செல்கிறார்.

பத்தாயத்து வகையறா கே.பி.ஷேக் அலாவுதீனுக்கு நிகரான குலப்பெருமையும் செல்வமும் இருந்த குட்டிலெவையின் மனைவி ரஹீமா பொருளாதார வீழ்ச்சியில் உழன்றபிறகு, ” ரெண்டு கொமருங்கள வீட்டுல வச்சு உக்காந்துருக்குது. இவுளுகள கரசேக்க நான் எவன்ட்டப் போய் படுக்கறது?” என்று கணவனிடமே ஆத்திரத்தில் இரைகிறாள். கேபிஷே, பட்டம்மாள், நூர்ஜஹான் என நாவலின் பல குறிப்பிடத்தக்க கதாபாத்திரங்களின் சுபாவங்களில் ஒரு தன்னளவிலான தலைகீழாக்கம் நிகழ்வதைப் பொருத்திப்பார்க்கலாம். மறைவாக ஓடிச்செல்லும் இந்த இழையைத் தொடர்ந்துசென்றால் வாசிக்கும்போது இயல்பாக எழும் சில கேள்விகளுக்கு விடைகிடைக்கலாம். இது முதல் சிறப்பு.

IMG_0931

அடுத்ததாக, சுமார் 20 ஆண்டுக்கால வாழ்க்கை காட்டப்படுகிறது என்பதால், பிறப்பு முதல் இறப்புவரை முக்கியமான சடங்குகள் வரிக்குவரி இஸ்லாமியத் தமிழ் மணக்க, வாசிக்கத்தொய்வின்றி சுவாரஸ்யமாக எழுதப்பட்டுள்ளதைக் குறிப்பிடவேண்டும்.

குடிப்பழக்கமுள்ள குட்டிலெவையிடம் அவர் தாயார், “குட்டி.. டே குட்டி.. கொடல் வெந்து போகுமுடா.. மறுமையில அல்லா ஒன்னிய நரகத்துல தள்ளீருவாண்டா, நரகமுன்னா எப்படியெல்லாம் இருக்குமுண்டு ஒனக்குத் தெரியுமுல்ல. நீ ஓதித் தொழுத புள்ளதான. லெவப்புள்ளைடா. நம்ம வம்சத்துக்கே இது ஆகாதுடா…” என்று பேசுவதைப்போல வாசகரை உள்ளே இழுத்துக்கொள்ளும் ஏராளமான வசனங்கள். அன்னியர்கள் வரத்தயங்கிய எட்டுக்கல் பதிச்ச வீட்டுக்குள் வீழ்ச்சி தொடங்கியபிறகு ஒரு தெருநாய் நுழைந்து சுதந்திரமாக அலைந்து திரிவதைச் சொல்வதைப்போலக் கண்முன் விரியும் ஏராளமான காட்சிகள்.

அவ்வாறாக ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில், ஒரு சமூகத்தின், ஓரிரு குடும்பங்களில் நடந்தேறிய சம்பவங்களை இணைக்கும்  பரபரப்பான ஓட்டத்தை மேற்பரப்பிலும், குடும்ப அமைப்பின் சிக்கல்களையும் பலவீனங்களையும் ஆராய்ந்துபார்க்கும் அமைதியை அடியாழத்திலுமாகக்கொண்டு கட்டமைக்கப்பட்ட பிரதி என்பதாலேயே துருக்கித்தொப்பியை ஒரு கலைப்பிரதி என்று கைகாட்டமுடிகிறது. கலைப்பிரதிகளில் ஒன்றுக்கும் மேற்பட்ட அடுக்குகள் இருக்கும் என்பதோடு எந்த அடுக்கிலும் தொடக்கம் முதல் இறுதிவரை பயணித்து வெளியே வரலாம். அடுக்குகளுக்குக் குறுக்காக வெட்டிக்கொண்டுபோய் ஆழம்பார்க்கவும் செய்யலாம், அது வாசகரின் சமர்த்து.

மூன்றாவதாக, நாவலின் இன்னொரு இழையாக வரும் அரசியல். நாவலில் பகடி தெறிக்கும் இடமென்றால் அது இந்த அரசியல் இழைப் பகுதிகள்தான்.

குறிப்பாக, அத்தியாயம் 15. கொள்கைப் பிடிப்பினாலும் ஆளுமைகள் மீதான பிரேமையினாலும் பிள்ளைகளுக்கு திராவிடராணி, நெடுஞ்செழியன், கருணாநிதி என்றெல்லாம் பிறர் பெயரிடுவதைப் பார்த்துப் பொறாமைகொள்ளும் அத்தாவுல்லா, மதம்சார்ந்த காரணங்களால் அப்துல் காதர் என்றோ அமீனா பீவி என்றோதான் தன் பிள்ளைகளுக்கு வைக்கவேண்டியிருக்கும் என்று வருத்தப்படுவதிலிருந்து அவன் உள்ளுணர்வுகளைக் காட்டி, கடைசியில் அத்தியாயம் முடியும்போது விளையாட்டில் அடிபட்ட திராவிட ராணியின் சிராய்ப்புகளுக்கு நெடுஞ்செழியனும் கருணாநிதியும் டிஞ்சர் வைத்தனர் என்றும் சாவடியைத் தாண்டும்வரை திராவிட ராணியின் அழுகைச் சத்தம் கேட்டிக்கொண்டிருந்தது என்றும் திராவிட நாடு கொள்கை கைவிடப்பட்டதை உணர்த்தி முடித்துள்ள விதம் அபாரம். இந்த அத்தியாயம் அழகிய அரசியல் சிறுகதை.

நாவலின் முற்பாதியில், திராவிட நாட்டை உருவாக்கும் தீவிரக் கனவிற்குப் பங்களிக்க உடல், பொருள், ஆவி தரும் தொண்டனாக வலம்வரும் அத்தாவுல்லாவுக்கு பணத்திற்காகவும் மொழிப்புலமைக்காகவும் மட்டுமே தான் உள்ளூர்த் தலைவர்களால் பயன்படுத்தப்படுகிறோம் என்பது புரிந்துவிட்டாலும், கடைசிவரை அவனால் அரசியலில் ஈடுபடும் போதையிலிருந்து விடுபடமுடியவில்லை என்பதையும் ஆசிரியர் காட்டியிருக்கிறார். எவ்வளவு ஆனபிறகும், கடைசியில் பிழைப்புக்காக மதராஸ்க்கு செல்லும்போது, பெட்டியைத் திறந்து உறுப்பினர் கார்டு இருக்கிறதா என்று சரிபார்த்துக்கொண்டு அவன் செல்வதை ஓரிடத்தில் ஆசிரியர் காட்டுகிறார்.

இந்த அரசியல் இழையின் வாயிலாக, மனிதர்களின் அதிகாரவேட்கை சார்ந்த தனிப்பட்ட பலவீனங்கள் காட்டப்படுவதோடு, சிறுபான்மையினரான இஸ்லாமியர் இந்தியாவில் ஒப்பீட்டளவில் கல்வி, பொருளாதார வளர்ச்சியில் தொடர்ந்து பின் தங்கியிருப்பதை மனதிற்கொண்டு அதற்கான சில தொடக்கப்புள்ளிகளைச் சமூகப் பார்வையில் காட்ட ஆசிரியர் முயல்கிறார் என்றும் நீட்டிப்பார்க்க இடமுண்டு.

அந்த அளவில் பாராட்டுகளை நிறுத்திக்கொண்டு, நாவலின் ஒரு பெரிய பலவீனத்தைப் பார்க்கலாம்.

நாவலுக்கு அணிந்துரை எழுதியுள்ள நாஞ்சில் நாடன் உட்பட, வாசிக்கும் பலரும் குறையாகவும் பலவீனமாகவும் குறிப்பிடும் ஓர் அம்சம் என்னவென்றால் நாவல் மிகவும் சுருக்கமாக எழுதப்பட்டுள்ளது என்பதுதான். அதாவது விரித்து எழுதவேண்டிய தேவையுள்ள, வாய்ப்புள்ள இடங்களையும் ஆசிரியர் வம்படியாகத் தவிர்த்து சுருக்கமாக முடித்துக்கொள்கிறார் அதனால் சில அனுபவங்கள் குறைவுபடுகின்றன என்ற பொருளில்.

என்னைப் பொறுத்தவரை சுருக்கம் ஒரு நாவலுக்கு பிரச்சனை அல்ல. கூர்மையான சொல்லம்புகளைக்கொண்டு சரியான திசையில் தாக்கும்போது இலக்கை வீழ்த்த ஒன்றிரண்டு அம்புகளே போதும், ஒருவண்டி தேவையில்லை. அது ஆசிரியருக்கு நன்றாகவே கைவந்துள்ளது. துருக்கித்தொப்பியில் உணரப்படும் ஒருவித புகைமூட்டம் சுருக்கத்தால் அல்ல, தாண்டுதல்களால் ஆனது.

முன்னர் குறிப்பிட்ட, அனேக கதாபாத்திர சுபாவங்களின், தலைகீழாக்கத்தையே எடுத்துக்கொண்டால் ஏன் அவ்வாறு நிகழ்கிறது என்பதற்குத்தான் குடும்பத்தின் பொருளாதார வீழ்ச்சியை ஒரு காரணமாகச் சொல்லமுடியுமே தவிர, ஒவ்வொருவரிடமும் படிப்படியாக அவரவர் இயல்புகளுக்கேற்ப எப்படி மாற்றம் நிகழ்கிறது என்பதை நாவலாசிரியர் தன் எழுத்து வன்மையால்தான் காட்டித்தரவேண்டும். ஆனால் அவை நடக்கவேண்டிய இடத்தில் தாவல்களும் பெரும்பாய்ச்சல்களும் நடந்துவிடுகின்றன. சில பக்கங்கள் காணாமற்போனதைப்போல!

நூர்ஜஹானையே எடுத்துக்கொண்டால், பொருளாதாரச் சிக்கல்களைத் தவிர, ஒரு பெரியம்மை போடுவதும் அதனால் பொலிவிழந்து போவதும் மட்டும் அவளுடைய பேச்சுகளையும் நடவடிக்கைகளையும் ‘நியாயம்தானே’ என்று ஏற்பதற்குப் போதுமானதாக இல்லை. இத்தனைக்கும் கேட்டபோதெல்லாம் நகைகளைக் கழற்றிக்கொடுத்த இயல்புள்ளவள் என்னும்போது கதாபாத்திரங்களை அவர்கள் இச்சைப்படி முழுமையாக விட்டுவிடாமல் ஆங்காங்கு தேவைக்கேற்ப ஆசிரியர் ஆட்டுவித்திருக்கிறாரோ என்ற சந்தேகம் உண்டாகிறது.

கேபிஷேவின் கலாரசிக-காமாந்தக ஊடாட்டங்களுக்கான கோடிகாட்டல்களிலும் போதிய அழுத்தமில்லை. தத்தம் வாசிப்பு வளமைக்கேற்ப வாசகர்கள் படைப்புக் கட்டுமானங்களுக்குள் சிற்சில சல்லிக் கற்களை இங்குமங்குமாக நிரப்பிக்கொள்ளலாம் என்றாலும், அதனை முன்னிட்டு ஒரு நாவல் தன்னளவில் ஒரு வலுவான அஸ்திவாரத்தைக் கட்டமைத்துத் தரவேண்டிய அடிப்படைப் பொறுப்பிலிருந்து நழுவிக்கொள்ளக்கூடாது.

வாசகர் தம்முடன் கொண்டுவரும் வெவ்வேறு பொருட்களைக்கொண்டு விதவிதமான, உயரமான அடுக்குகளைக்கொண்ட கட்டடங்களை எழுப்பிக்கொள்ளட்டும். ஆனால் கடைக்கால் ஓட்டைகளை அடைக்க அவரை எதிர்பார்க்கக்கூடாது. இது திட்டமிட்டுச் செய்யப்பட்ட சோதனைமுயற்சியா என்பது ஆசிரியருக்கு மட்டுமே வெளிச்சம். தொடர்ந்து வரக்கூடிய விமர்சனங்கள் இவ்விஷயத்தில் கூடுதல் வெளிச்சம் காட்ட முயலலாம்.

இது ஒன்றைத்தவிர வேறெதையும் குறையாகச் சொல்ல மனமில்லை.

குடும்பத்தின் ஆணிவேர் பொருளாதாரம் என்று முன்பு குறிப்பிட்ட நாவலின் உள்ளிழைக்கே மீண்டும் வந்தால், மதராஸ் வேலைக்குச்சென்று அத்தாவுல்லா அனுப்பும் ‘மணியார்டர்’ வருவதோடு நாவல் முடிகிறது. அது குடும்பம் மீண்டும் பொருளாதாரத்தில் ஸ்திரப்படப்போகிறது என்பதற்கும் அதன்மூலம் மாறிய பழைய சுபாவங்கள் மீளப்போகின்றன என்பதற்குமான நம்பிக்கைகளை அளிக்கிறது.

துருக்கித்தொப்பி வாசகர்கள் நிச்சயம் அணிந்து பார்க்கவேண்டிய ஒன்றுதான்.

***