கடந்த ஆண்டு (2017) டிசம்பர் மாதத்தில் தேசிய நூலக வாரியம் முதன்முறையாக ஏற்பாடு செய்திருந்த ‘நினைவின் தடங்கள்’ என்ற, அவ்வாண்டில் மறைந்த தமிழ் எழுத்தாளர்களை நினைவுகூர்ந்து பெருமைப்படுத்தும், நிகழ்ச்சி சிறப்பாக அமைந்தது. அந்நிகழ்ச்சியில் எனக்கு மேலாண்மை பொன்னுச்சாமியின் பங்களிப்பைக் குறித்துப் பேசும் வாய்ப்புக்கிடைத்தது. அப்பேச்சின் எழுத்துவடிவத்தை இப்பதிவில் கொடுத்துள்ளேன்.

டிசம்பர் 2, 1950ல் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மேலாண்மறைநாடு கிராமத்தில் பிறந்தவர். ஆரம்பப்பள்ளிக்கல்வி மட்டுமே பெற்றவர். சொந்த முயற்சியால் தொடர்ந்த வாசிப்பினாலும் இடதுசாரிச் சிந்தனைகளாலும் உந்தப்பட்டு, கிராம மக்களின் வாழ்க்கையை அவர்களின் மொழியோடு அப்படியே இலக்கியத்தில் பதிவுசெய்வதற்காக 1972ல் எழுதவந்தார். நாவல்கள், குறுநாவல்கள், கட்டுரைகள் எழுதியிருந்தாலும் சிறுகதைகளுக்காகவே (22 தொகுப்புகள்) அதிகம் அறியப்படுகிறார். ஆனந்தவிகடனில் இவரது சிறுகதைகள் தொடர்ந்து வெளிவந்ததும் ஒரு முக்கியக்காரணம். இவர் அக்டோபர் 30, 2017ல், 66ம் வயதில், உடல்நலக் குறைவால் சென்னையில் காலமானார்.

MELANMAIPONNUCHAMY

மேலாண்மை பொன்னுச்சாமி

PC:thehindudotcom

அவருடைய ஒரு சிறுகதையில் இருந்து தொடங்கலாம்.

திடீர்திடீரென்று வலிப்பு வந்துதுடிக்கும் மகளை நோயிலிருந்து விடுவித்தால் கிடாவெட்டிப்  படையலிடுகிறேன் என்று குலதெய்வத்துக்கு நேர்ந்துகொள்கிறாள் ஒரு கரிசல் கிராமத்துத் தாய். முறையான மருத்துவமும் ஒரு பக்கம் நடக்கிறது. எப்படியோ நோய் தீர்ந்துவிடுகிறது. வேண்டிக்கொண்டபடி படையலுக்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுப் படையல்போட ஏற்பாடு செய்கையில் அரசு ஆலயத்தில் பலிகொடுப்பதைத் தடைசெய்து சட்டம் கொண்டுவந்து தீவிரமாகச் செயல்படுத்தியும் வருகிறது. நேர்ந்துகொண்டு நிறைவேற்றாவிட்டால் தெய்வக்குத்தமாகி மீண்டும் தன் மகளுக்கு வலிப்பு திரும்பிவிடுமோ என்று அத்தாய் அரற்றுகிறாள்.

கிராம நிர்வாக அதிகாரியை எப்படியாவது கரைத்து பலியை நடத்திவிடலாமென்று முயலும்போது, தான் பதவி இடை நீக்கம் செய்யப்பட்டு சமீபத்தில்தான் மீண்டும் வேலையில் சேர்ந்துள்ளதாகவும் பலிக்கான அனுமதி மட்டும் கொடுக்கவேமுடியாது என்றும் அவர் உறுதியாக மறுத்துவிடுகிறார்.

‘ஏங் குலை கொதிக்குதே..நெஞ்சு எரியுதே..எம்புள்ளையை காப்பாத்த நேத்திக்கடன் செலுத்தவுடாம…குறுக்க நிக்குறவுக வெளங்குவாகளா? எங்கொல தெய்வம் சும்மாவுட்ருமா? கேக்காம வுட்ருமா?’

என்று அத்தாய் மார்பிலறைந்து ஒப்பாரிவைத்து அந்த அதிகாரி வீட்டிலேயே அழுவதுடன் கதை முடிகிறது.

சாகித்ய அகடமி விருது பெற்றுள்ள தமிழ் நூல்கள் அனைத்தையும் வாசித்துவிடவேண்டும் என்ற ஆர்வத்தில் சில ஆண்டுகளுக்குமுன் சிங்கை நூலகங்களில் கிடைக்கும் நூல்களைத் தேடினேன். அப்படித்தான் 2008ல் அவ்விருதைப் பெற்ற மேலாண்மை பொன்னுச்சாமியின் ‘மின்சாரப்பூ’ என்ற சிறுகதைத் தொகுப்பை வாசித்தேன். அதில் உள்ளதுதான் ‘காலப்பார்வை’ என்ற, மேலே சுருக்கமாகத் தரப்பட்டுள்ள, சிறுகதை.

கதைக்குள் இரண்டு முக்கியமான காட்சிகள் இருந்தன.
முதலாவது, கிடாய் முத்துவீரனுக்காக வெட்டப்படும்போது ஐயனார் சன்னதியின் திரையை மூடிவிடுகிறார்கள். ஏனெனில் ஐயனாருக்குக் கவிச்சி ஆகாது. இரண்டாவது, ஆட்டுக்கறி சமைப்பவர், அசைவம் சாப்பிடப்பிடிக்காதவர்கள் ஒன்றிரண்டுபேர் வந்தால் தேவைப்படுமே என்று கொஞ்சம் சாம்பாரும் வைக்கிறார். பன்முகச் சமூகத்தின் பண்பாட்டுக்கூறுகள் ஒன்றீன்மீது மற்றொன்று காட்டும் இந்த அக்கறையை மையப்படுத்தியதுதான் இக்கதை.

சமூகத்தில் இயல்பாக இருந்துவரும் இவ்வக்கறையை, சகிப்புத்தன்மையை ஏன் அதிகாரம் தேவையின்றித் தலையிட்டுக் குலைக்கிறது என்பதே இங்கு எழுப்பப்படும் கேள்வி. இச்சிறுகதையில் கதைமாந்தர்களின் மொழியும் கருத்தும் என்னை மிகவும் பாதித்தது. இவருடைய மற்ற கதைகளையும் வாசிக்கவேண்டும் என்றொரு எண்ணம் பிறந்தது.

விவசாய வேலைக்கு ஆட்கள் கிடைப்பது மெல்ல மெல்லக்குறைந்து தற்போது அறவே கிடைப்பதில்லை என்ற குரல் தமிழ்நாட்டின் எல்லாப் பகுதிகளின்   விவசாயிகளிடமிருந்தும் ஒருமித்த குரல் கேட்கிறது ஆனால் அதற்கான காரணங்களாகப் பலவும் சொல்லப்படுகின்றன; போதிய வருமானமில்லை, உழைப்புக்கேற்ற ஊதியமில்லை, விஷக்கடிகள் படும் ஆபத்து நிறைந்த வேலை, தொடர்ந்த நிலையான வேலை கிடைப்பதில்லை, கொஞ்சம் படித்த தலைமுறை சேற்றில் இறங்குவதைக் கௌரவக் குறைச்சலாகக் கருதுகிறது, கட்டிடம்கட்டும் வேலைக்குப் போய்விடுகிறார்கள், இன்னபிற.

‘சித்தாள் சாதி’ என்ற கதையில் இன்னொரு நுட்பமான காரணத்தை பொன்னுச்சாமி கொடுக்கிறார்.
விவசாய வேலையைவிட மிகக் கடினமான வேலை சித்தாள் வேலை. அதோடு இதில் போக்கும்வரத்துமாக தினமும் நான்கு மணி நேரம் பேருந்தில் செலவாகிவிடுகிறது. புதுமனைவியுடன் சண்முகம் இனிமையாகக் கழிக்கவேண்டிய பொழுதுகளும் வீணாகின்றன. சற்று அசந்தால் போதும் என்று அடித்துப்போட்டதுபோல் ஆகிவிடும் இரவுகள். ஆனாலும் உள்ளூரிலேயே ஒரு முதலாளியிடம் பத்து ஏக்கர் கொய்யாத்தோப்பை விவசாய மேற்பார்வை பார்த்துக்கொண்டு கஷ்டமில்லாமல் வசதியாக வாழக்கிடைக்கும் ஒரு வாய்ப்பை அவன் தவிர்ப்பதாகக் கதை முடிகிறது.

காரணம்?

உள்ளூர் முதலாளி வீட்டுப்பையன், சண்முகத்தைவிட வயதில் சிறியவன், ஒருமையில் அழைத்துப்பேசுகிறான். இவன் ‘சரிங்க மோலாளி’ என்று சொல்லவேண்டியிருக்கிறது. ஆனால் சித்தாள் வேலையில் அந்த கணக்கில்லை. வயது கூடியவர்கள் என்றால் அண்ணாச்சி, குறைந்தவர்களைத் தம்பி. அவ்வளவுதான்.

”சரக்கு வரட்டும் அண்ணாச்சி…”
”செங்கல்லு லோடு வரட்டும் அண்ணாச்சி…”
”சிமின்ட்டுப் பாலு கரைச்சுக் கொண்டாங்க அண்ணாச்சி” – 

அண்ணாச்சி…அண்ணாச்சி என்று மூச்சுக்கு முந்நூறு அண்ணாச்சிகள் போடுவான். அவன் உயிருக்கு றெக்கைகள் முளைத்த மாதிரி உல்லாசமாகத் திரிவான்.

ஒருக்கால் நிலையான வரும்படியாகவும் தேவைக்கு அதிகமாகவுமே கிடைத்தாலும்கூட விவசாய வேலைக்கு ஆட்கள் வரமாட்டார்கள் என்றும் அதற்குக் காரணம் சுயமரியாதை உணர்ச்சி என்றும் இக்கதையில் காட்டுகிறார் ஆசிரியர். சமத்துவத்தை என்ன விலை கொடுத்தேனும் வாங்கத்துடிக்கிறது மானுட உயிர் என்பது அவர் பார்வை. இவருடைய இடதுசாரிச் சிந்தனை சித்தாந்தங்களை ஒட்டி மட்டும் கருப்பு-வெள்ளையில் வறட்டுத்தனமானதாக இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சரி-தவறு என்ற இருமைக்குள் மட்டுமே வாழ்க்கையின் அனைத்து விஷயங்களும் பிசிறில்லாமல் அடக்கிவிடவியலாது என்பதில் ஆசிரியருக்கு நம்பிக்கை இருப்பதாகத் தோன்றுகிறது. இரண்டு உதாரணங்கள் தருகிறேன்;

தெய்வமும் வழிபாடும் இல்லை என்றால் எளியமக்களுக்குக் கொண்டாட்டங்களில்லை. மூட நம்பிக்கையை ஒழிக்கிறேன் என்று கொண்டாட்டங்களை ஒழிக்கும் முற்போக்கில் ஆர்வமில்லாத ஆனால் அதேநேரம் இந்த விஷயம் குறித்துக் குழப்பிக்கொள்ளாத ‘நமக்காகத்தான் சாமி’ என்று புரிந்துகொண்ட கதாபாத்திரங்கள் இவரது அனேகக் கதைகளில் வருகின்றன.

குழந்தைத் தொழிலாளியாகத் தன் மகளை அனுப்பும் தாய், வயிற்றுப்பிழைப்புக்கு வேறுவழி செய்துகொடுக்காத அரசு எந்த அடிப்படையில் தன் மகள் வழியாக வருகிற வருமானத்தையும் கெடுக்கிறது என்று அவள் மொழியில் கேட்கிறாள். இங்கு தாய் செய்வது சரியா? அரசு செய்வது சரியா?

பெற்ற தாயைவிடக் குழந்தைகளின்மேல் கரிசனமாக நடந்துகொள்வதாகத் தோன்றும் அதிகாரம் எந்த சிக்கலையும் முழுமையாகப் பார்ப்பதில்லை என்ற விமர்சனம் இங்கு எழுப்பப்படுகிறது. தாய்மையை அல்லது ஏழ்மையில் மேன்மையைப் புனிதப்படுத்தும் எந்த முயற்சியும் கதையில் இல்லை என்பதும் கவனிக்கத்தக்கது.

யதார்த்தவாத முற்போக்குச் சிறுகதைகளைப் பற்றி,

“யதார்த்தவாதச் சிறுகதைகளில் வட்டாரமொழிச் சிறுகதைகளில் தேசப்பெரும்பான்மை வாழ்க்கையின் ஆழ் உண்மைகளும், மனித மன நுட்பங்களும், சலனங்களும் பன்முக நம்பகத்தன்மையுடன் வெளிப்படும். வாழ்வின் சிதைவுகளும், மனித மாண்புகளைக் காத்துக்கொள்வதற்கான மனப்போராட்டங்களும், மதிப்பீட்டுச் சரிவுகளும், அதற்கான பொருளியல் காரனங்களும் சகலமும் புலப்படும்”

என்று குறிப்பிடும் மேலாண்மை பொன்னுச்சாமியின் கூற்றுக்கு அவரது கதைகள் வலுசேர்க்கின்றன. இந்த வரையறைகளிலிருந்து அவை வழுவுவதுமில்லை.

இறுதியாக,

‘காலப்பார்வை’யில் பலபண்பாடுகள் ஒன்று கலந்து ஒன்றையொன்று பேணிக்கொள்வதும் சகித்துக்கொள்வதும், ‘சித்தாள் சாதி’யில் சமத்துவத்துக்கான உயிரின் இயல்பான தேடலும், ஏதோவொரு சித்தாந்தத்தை இறுக்கிப்பிடித்துக்கொண்டு வாழ்க்கையை எட்டி உதைத்துவிடாத ‘நமக்காகத்தான் சாமி’ என்ற புரிதலும் இவரது கதைகளில் கரிசல்மண்ணின் குக்கிராமங்களில், கல்வி குறித்து பெரிதாக அலட்டிக்கொள்ளாத மனிதர்களின் வாழ்வில், அவர்களின் மொழியில்தான் வெளிப்பட்டுள்ளது. ஆனாலும் அவற்றின் சாரம் இன்றைய உலகமயமாக்கப்பட்டச் சிற்றுலகின் எந்த சமூகத்துக்குமான ஒன்றாகவும் இருக்கிறது என்பதோடல்லாமல் இன்றைய முதன்மைத் தேவையாகவும் இருக்கிறது.

***