சா.கந்தசாமி என்று அறியப்பட்ட சாந்தப்பதேவர் கந்தசாமி தமிழ் கலை, இலக்கிய  உலகில் நன்கு அறியப்பட்ட ஓர் ஆளுமை. எழுத்தாளர், ஆவணப்பட இயக்குநர், கலை ஆர்வலர் என்று பன்முகத் தளங்களில் தனது பங்களிப்பை வெளிப்படுத்தி வந்த சா.கந்தசாமி, சாகித்திய அகாதமி, திரைப்படத் தணிக்கை வாரியம் போன்ற அமைப்புகளிலும் பல்லாண்டுகள் பணியாற்றியுள்ளார்.

‘சாயாவனம்’ கந்தசாமி என்றே அழைக்கப்படும் அளவுக்கு அவரது முதல் நாவலான ‘சாயாவனம்’ (1968) ஓர் அழுத்தமான இலக்கிய அடையாளத்தை அவருக்குப் பெற்றுத்தந்துள்ளது. அந்நாவல் சூழலியல் குறித்த விழிப்புணர்வை உண்டாக்கிய முதல் தமிழ் நாவல் என்று தற்போது கருதப்பட்டாலும் சா.கந்தசாமிக்கு அவ்வாறான வகைபிரிப்புகளில் நம்பிக்கையில்லை. மக்களின் பிரச்சனைகளை, மக்களின் மொழியில், மக்களுக்காக எழுதுவது என்பதே இலக்கியத்தைப் பொறுத்தவரை அவரது கொள்கையாக இருந்துவந்துள்ளது.

sa-kandasamyjpg

தொடர்ந்து வாசிப்பதும் சிந்திப்பதும் எழுதுவதுமாக சுமார் அறுபது ஆண்டுகள் செயல்பட்டுள்ள சா.கந்தசாமி, அறிவு என்பது மொழியில் இல்லை மனிதனிடம்தான் இருக்கிறது என்ற கருத்துடையவர். ‘தொட்டணைத்தூறும் மணற்கேணி’ குறளுக்கு அவர் கொடுக்கும் விளக்கம் இந்த விஷயத்தைத் தெளிவாக விளக்குகிறது. தோண்டுபவர் மணற்கேணிக்குத் தண்ணீர் அளிப்பதில்லை. தோண்டும் செயல்பாடு ஏற்கனவே உள்ளிருக்கும் தண்ணீரை வெளிக்கொணர உதவுகிறது அவ்வளவுதான். தோண்டுவதுதான் அறிவுச் செயல்பாடு, சுரப்பது உள்ளிருந்தே நிகழவேண்டும் என்பது அவர் விளக்கம். ஆகவே உள்ளிருக்கும் அறிவை வெளிக்கொணர்வதே மொழியின் வழியிலான வாசிப்பு, எழுத்துச் செயல்பாடே ஒழிய வெளியிலிருந்து பெற்றுக்கொள்வதற்கான வழியல்ல என்கிறார். ஆகவே அறிவு என்பது மொழியில் இல்லை.

உண்மையும் அழகும் இயற்கையாகவே எளிமையானவை என்பது அவரது கருத்து. ஆத்திசூடியோ திருக்குறளோ காலம்கடந்து நிற்பதற்கு அதன் உண்மையும் எளிமையும்தான் காரணம் என்கிறார். உண்மை குறைவுபடும் எழுத்துகளைத் தாங்கிப்பிடிக்கவே அலங்கார அணிகலன்கள் தேவையாகின்றன. தனது எழுத்துகளில் கைதவறியும் அலங்காரச் சொற்சேர்க்கைகள் இடம்பெற்றுவிடக்கூடாது என்பதற்காக எழுதியபின் பலமுறை பிரதியை மீள்வாசிப்புச்செய்து தேவையான திருத்தங்கள் செய்தபிறகே அச்சுக்கு அனுப்பியதாக ஒரு நேர்காணலில் தெரிவித்துள்ளார். இந்த விஷயத்தில் தீவிரமான உறுதியுடன் இறுதிவரை செயல்பட்டு வந்துள்ளார். அந்த உறுதி தளராமலேயே சாகித்ய அகாதமி விருது (விசாரணை கமிஷன் நாவல்) உட்பட பல விருதுகளையும் சக எழுத்தாளர்களின் போற்றுதல்களையும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

மலேசியாவிலிருந்து வெளிவரும் ‘வல்லினம்’ இணைய இதழுக்கு அப்பெயரை ‘கசடதபற’ என்ற சிறுபத்திரிகையின் பெயரால் உந்தப்பட்டே வைத்ததாக அதன் ஆசிரியர் ம.நவீன் எழுதியிருக்கிறார். ‘கசடதபற’ தொடங்கிய குழுவில் இருந்த சா.கந்தசாமி அதன் வளர்ச்சிக்கும் அடையாளத்திற்கும் குறிப்பிடத்தக்க பங்கை ஆற்றியுள்ளார். 

பல சிறுபத்திரிகைகள் தொடர்ந்து பிறப்பதும் குறுகிய காலத்தில் மறைந்துவிடுவதுமாக இருந்த வரலாற்றை கணக்கிற்கொண்டு பார்க்கும்போது,வெறும் 36 இதழ்கள் மட்டுமே வெளியான ‘கசடதபற’, தொடர்ந்து தன்னை வரலாற்றில் நிலைநிறுத்திக் கொண்டு, அடுத்தடுத்த தலைமுறை எழுத்தாளர்களை ஆகர்ஷிப்பதற்கு அதன் தெளிவான நோக்கமும் உக்கிரமான செயல்பாடுமே காரணம் எனலாம். அதில் சா.கந்தசாமியின் பங்கு கணிசமானது.

சா.கந்தசாமி கொள்கைப்பிடிப்பில் உறுதியாக இருந்த அதேவேளையில் நடைமுறைச் சாத்தியங்களையும் உதறிவிடாதவராக இருந்துள்ளதே அவர் சாகித்ய அகாதமி, திரைப்படத் தணிக்கை வாரியம் போன்ற அமைப்புகளில் பல்லாண்டுகள் இயங்குவதற்கு வாய்ப்பளித்துள்ளது. அவ்வாய்ப்புகளைத் தமிழ்ச் சமூகத்திற்குச் சாதகமாகப் பயன்படுத்துவதில் சா.கந்தசாமி பெருமுனைப்புடன் செயல்பட்டுல்ளார்.

இந்திய எழுத்தாளர்களைக் குறித்த ஆவணப்படங்கள் சாகித்ய அகாடமியால் எடுக்கப்பட்டு வந்தபோதும் அவற்றில் தமிழ் எழுத்தாளர்கள் இடம்பெறவில்லை. தொடர்ந்து போராடி அதற்கு அனுமதிபெற்ற சா.கந்தசாமி, முதலில் ஆவணப்படம் எடுப்பதற்காக ஜெயகாந்தனை அணுகியுள்ளோர். அவரோ இதெல்லாம் அவசியமா கந்தசாமி என்று தயங்கியுள்ளார். ‘உங்களுக்கோ எனக்கோ அவசியமில்லாமல் இருக்கலாம் ஆனால் வரலாற்றுக்கு அவசியம்’ என்று ஜெயகாந்தனை சம்மதிக்கச் செய்த சா.கந்தசாமி ஆவணப்படத்தை எடுத்துள்ளார். பல சமயங்களில் கந்தசாமியின் கருத்தும் தொனியும் ஜெயகாந்தன் போலவே இருப்பதையும் காணமுடிகிறது. 

சாகித்ய அகாடமி சார்பில் தமிழ் எழுத்தாளரைக் குறித்து எடுக்கப்பட்ட முதல் தமிழ் ஆவணப்படம் அது. அசோகமித்திரன், பிரபஞ்சன் ஆகிய எழுத்தாளர்களைக் குறித்தும் ஆவணப்படங்களை பின்னாளில் எடுத்துள்ளார். சுடுமண் சிற்பங்கள் குறித்த இவரது ஆவணப்படம் ஒன்று புகழ்பெற்றது. தன் செயல்பாடுகளைத் தனிப்பட்ட விருப்புவெறுப்புகளைத்தாண்டி வரலாற்றில் பொருத்திப்பார்க்கும் பார்வையை இவர் பெற்றிருந்திருக்கிறார். ஆகவேதான் தான் இருக்கும் அமைப்பைக் குறித்த விமர்சனங்களை இவர் வைத்தாலும் அது நல்ல நோக்கத்தில் ஆக்கபூர்வ மாற்றத்தை உத்தேசித்து செய்யப்படுபவை என்பதால் அவரின் கருத்துகள் பல சமயங்களில் ஏற்கப்படாவிட்டாலும் அவர் ஒருபோதும் வேண்டாதவராக ஆகவில்லை.

தணிக்கை வாரியத்திலும் அப்படியே. கையில் கத்தரிக்கோலும் அதிகாரமும் இருக்கிறது என்பதற்காகத் தனக்கு உவப்பில்லாத இடங்களிலெல்லாம் வெட்டித்தள்ளும் போக்கை வெறுப்பவராக சா.கந்தசாமி இருந்துள்ளார். ஒரு திரைப்படம் வியாபாரத்தையும் வெகுஜன நுகர்வையும் மட்டுமே குறிக்கோளாகக்கொண்டு சமூகத்தில் தேவையற்ற தாக்கத்தை விளைவித்துவிடக்கூடாது அதேவேளையில் கலைச்செயல்பாட்டுச் சுதந்திரத்தில் கைவைக்கலாகாது, பணம்போட்டுப் படமெடுத்த தயாரிப்பாளர் பாதிக்கக்கூடாது எனப்பல்வேறு தரப்புகளிலிருந்தும் கவனமாக ஆராய்ந்து தேவைகருதிமட்டுமே தணிக்கை அமையவேண்டும் என்கிற கொள்கையைக் கடைப்பிடித்துள்ளார்.

செய்யும் வேலையில் தரம் இருக்கவேண்டும் என்ற நோக்கத்தில் ஒருபடிகூட இறங்கிவிடக்கூடாது என்பதில் கண்ணுங்கருத்துமாக சா.கந்தசாமி இருந்துள்ளார். இக்குணம் தொடக்க காலத்திலிருந்தே அவரிடம் இருந்ததை அசோகமித்திரன் ஒரு நேர்காணலில் பதிவுசெய்துள்ளார். சா.கந்தசாமியும் ஒரே அலைவரிசையில் சிந்திக்கும் வேறுசிலரும் சேர்ந்து நடத்திய ஓர் இலக்கிய இயக்கத்தின் சந்திப்புகளில் பேசவருபவர்கள் எழுதித்தான் வாசிக்கவேண்டும் என்ற விதியை மிகவும் உறுதியாகக் கடைப்பிடித்ததை அசோகமித்திரன் குறிப்பிட்டுள்ளார். 

எழுதித்தான் வாசிக்கவேண்டும் எனும்போது பேச்சாளர் அதைக்குறித்து சிந்திப்பது தன்னியல்பாக உறுதிசெய்யப்பட்டுவிடுகிறது. இவ்வளவுக்கும் அவர்களில் பலரும் வயதில் மூத்தவர்கள், ஏற்கனவே பிரபலமானவர்கள். ஆயினும் இளைஞர்களின் துடிப்பும் மற்றத்தை உண்டாக்குவதற்கான முனைப்பும் அவர்களைக் கவர்ந்ததால் அவர்களும் உடன்பட்டுள்ளனர் என்பது கவனிக்கத்தக்கது.

தான் எழுதியவற்றில் பிரசுரித்த பக்கங்களைவிட பிரசுரத்துக்கு அனுப்பாமல் விட்டவை அதிகம் என்று குறிப்பிடுவதிலிருந்தும் அவரது தரத்துக்கான தேடலை நாம் அறிந்துகொள்ளலாம். ஒரு நூலை வாசித்ததும் இதைவிட நன்றாக நம்மால் எழுதமுடியுமே என்ற உந்துதல் பல சந்தர்ப்பங்களில் எழுதத்தொடங்குவதற்குக் காரணமாக அமையுமென்றாலும் எழுதிமுடிக்கும்போது ஒருக்கால் அது அந்த  வாசித்த பிரதியைக் காட்டிலும் மோசமாகவும் ஆகக்கூடும் என்கிற உண்மையை ஒப்புக்கொள்வதில் இவருக்குத் தயக்கமில்லை. ஆகவேதான் தன்னுடைய எழுத்து என்ற கருணையின்றி நிர்த்தாட்சண்யமாக நிராகரிக்க வேண்டியுள்ளது.  சிறுசிறு முகநூல் குறிப்புகளையும்கூட வீணாக்காமல் தொகுத்து நூல்வெளியீடு செய்துவிடும் இக்காலத்தில் சா.கந்தசாமி மேன்மேலும் பொருத்தமானவராகவும் முக்கியமானவராகவும் ஆகிறார். 

இறுதிமூச்சுவரை வாசித்தவராக சா.கந்தசாமியைத் தயங்காமல் குறிப்பிடலாம். யுவால் நோவா ஹராரியின் ‘சேப்பியன்ஸ்’ நூலை வாசித்ததும் அதை உடனே தமிழில் கொண்டுவருவதற்காக முயன்றதை அவர் ஒரு நேர்காணலில் குறிப்பிட்டுள்ளார். தமிழுக்கு எல்லாமும் வந்துசேரவேண்டும் என்கிற தணியாத ஆர்வம் ஊறிப்போனவராக அவர் இருந்துள்ளார்.

கொள்கைப்பிடிப்பு, சிந்தனைத்தெளிவு, தரத்தில் ஆவேசம், தமிழ்ப்பற்று, விடாமுயற்சி, வரலாற்று நோக்கு, தொடர்ந்த கற்றலிலும் அறிதலிலும் உணர்ச்சிகரமான ஈடுபாடு, மாற்றத்தைக் கொண்டுவருவதற்கான நீக்குப்போக்குள்ள செயல்பாடு ஆகியவற்றால் ஒரு தனித்துவமிக்க ஆளுமையாக சா.கந்தசாமி வாழ்ந்து மறைந்துள்ளார். கலை, இலக்கிய தளங்களைத்தாண்டியும் பல கடைப்பிடிக்கவேண்டிய விழுமியங்களை அவர் நமக்கு விட்டுச்சென்றுள்ளார்.

PHOTO-2020-11-06-20-13-28

**

[தேசிய நூலக வாரியத்தின் ‘நினைவின் தடங்கள் 2020’ நிகழ்ச்சியில் ஆற்றிய உரையின் எழுத்து வடிவம். அக்டோபர் 2020 ‘தி சிராங்கூன் டைம்ஸ் இதழில் வெளியானது]