முன்னுரை

ஜெயமோகனின் ஒரு கட்டுரையில் ‘பல்லிக்குஞ்சு போன்ற விரல்கள்’ என்று ஒரு பெண்ணின் விரல்களை அ.முத்துலிங்கம் வர்ணித்திருந்ததாக எழுதியிருந்தார். அந்த உவமை என்னை மிகவும் கவர்ந்தது. அப்படித்தான் நான் முத்துலிங்கத்தின் கதைகளை வாசிக்கப்போனேன். வாசிக்கத் தொடங்கியதும் அது ஒரு போதையாக ஆகியது.

எழுத்தாளரின் ஒரு சில கதைகள் பிடித்திருந்தால் அவரது பிற கதைகளையும் தேடிப்பிடித்து சலித்துப்போகும்வரை வாசிப்பது என் இயல்பு. சலிப்புத்தட்ட ஆரம்பிக்கும்போது அக்கதைகளின் பொதுவான அம்சங்களாக எது என்னைக் கவர்ந்தது என்று யோசிப்பது வழக்கம்.

அ.முத்துலிங்கத்தின் புனைவுகள் தம் நடையில் ஒருவிதமான கவர்ச்சியைக் கொண்டிருக்கின்றன. அது முதன்முதலாக ஒரு புனைவை வாசிப்பவரையும் இதுவரைத் தமிழில் வெளியான அத்தனை புனைவுகளை வாசித்தவரையும் ஒரே நேரத்தில் கவரக்கூடியதாக இருக்கிறது. குழந்தைத்தனத்தின் குதூகலம், வாலிபத்தின் வனப்பு, முதுமையின் கனிவு, துறவின் அமைதி என்று அனைத்தையும் கலந்த ஒருவிதமான கவர்ச்சி அது.

எளிமையான சொற்களின் கோர்வையாகத் தென்படும் அவரது புனைவுகளில் இன்ன இடத்தில்தான் அக்கவர்ச்சி இருக்கிறது என்று குறிப்பிட்டுச் சொல்லிவிட முடியாத மாயமாக அது நழுவிக்கொண்டே இருக்கிறது. அம்மாயக்கலவையின் ஓரிரு தனிமங்களையாவது கண்டறிய முயல்வதே இக்கட்டுரையின் நோக்கம்.

 

தகவல் நுணுக்கம்

தகவல்களை அவரால் அழகியல் தன்மையோடும் அதோடு கதைக்கான அத்தியாவசியப் பொருட்களில் ஒன்றாகவும் ஒரே நேரத்தில் வைக்கமுடிகிறது. வரலாற்றுத் தகவல்கள்கூட முத்துலிங்கத்தின் கைவண்ணத்தில் அவரது புனைவுகளில் புதிய சாத்தியத்துடன்கூடிய பொலிவை அடைகிறது.

‘அமெரிக்காவில் ஜனாதிபதி ஐஸன்ஹோவர் தனது இரண்டாவது தவணை ஆட்சியைத் தொடங்கி நாலு மாதங்கள் ஆகிவிட்டன. அவனுடைய நாட்டு ஜனாதிபதி மகசெசெ விமான விபத்தில் இறந்துபோய் இரண்டு வாரம் ஆகிறது. பின்னாளில் உலகப் பிரபலமாகப்போகும் ஒசாமா பின்லேடன் பிறந்து ஒருமாதம் ஆகியிருந்தது. இது ஒன்றும் அவனுக்குத் தெரியாது’

‘குதிரைக்காரன்’ கதையில் வரும் மேற்கண்ட பத்தி ஓர் உதாரணம். கதையில் மார்ட்டின் என்பவனின்  நாட்டையும், கதை நடக்கும் காலத்தையும், அவனுக்கு உலக விஷயங்கள் தெரியாது என்பதையும் இப்பத்தியில் ரத்தினச்சுருக்கமாகவும் சுவாரஸ்யமாகவும் சுட்டுவது மட்டுமல்லாமல், வரலாறு தவிர்க்கமுடியாத மூன்று ஆளுமைகளையும் வாசகருக்கு நினைவில் மீட்டிச்செல்கிறார்.

பார்த்திருந்தும் கண்டிராதது

நாம் அன்றாடம் பார்த்துப் பழகிய விஷயங்களிலிருந்தே இவருக்குப் புதுமையான வர்ணனைகளை  எழுதமுடிகிறது. இவர் வர்ணனைகளின் மூலப்பொருட்களாக எளிமையான ஆனால் நாம் எளிதாகத் தவறவிட்டுவிடும் நிகழ்வுகளே இருக்கின்றன. இத்தனை முறை பார்த்தும் இப்படி நமக்குத் தோன்றவில்லையே என்று வாசகரிடம் ஒரு ஏக்கத்தை அவை இயல்பாக ஏற்படுத்துகின்றன. எளிமையாகத் தோன்றும் இவரது வர்ணனைகளை வாசித்துவிட்டுச் சாதாரணமாகத் தாண்டி அடுத்தவரிக்குப்போவது ஒருபோதும் எனக்கு நிகழவில்லை.  அவர் சொற்கள் காட்டும் காட்சிக்குள் முழுமையாகச் சென்று மீண்டபிறகே நகரமுடிந்திருக்கிறது.

‘அவளுக்கு வெடித்து அழுகை வந்தது. கார் கண்ணாடித் துடைப்பான்போல இரண்டு கைகளாலும் மாறி மாறி கன்னத்தை துடைத்தாள். அப்படியும் நிற்காமல் கண்ணீர் பெருகி வழிந்து கன்னத்தை நனைத்தது’

‘புதுப் பெண்சாதி’ கதையில் வரும் மேற்கண்ட வர்ணனையில் ஒரு நுணுக்கம் இருக்கிறது. அவளின் அழுகை, கதையின் அந்த இடத்தில், கணவன் காட்டிய அன்பின் நெகிழ்ச்சியால் வருவது. அக்கண்ணீருக்குப் பின்னால் பொங்கிக்கொண்டிருக்கும் சந்தோஷத்தைப் பெரிதாக வெளியே காட்டிவிடவேண்டும் என்ற ஆசையே ‘கார் கண்ணாடித் துடைப்பான்போல’ துடைத்துக்கொண்டு அவளை அழச்செய்கிறது. நவீனத் தொழில்நுட்பம் ஒன்றை வர்ணனையில் கொண்டுவந்து அதை ஓர் உளவியல் வெளிப்பாட்டுடன் இணைத்துவிடுகிறார். இயந்திரங்கள், செடிகொடிகள், விலங்குகள், மனிதர்கள் என்று அனைத்தின் அசைவுகளையும் ஒன்றுடனொன்று பிணைத்துப் பார்க்கும் ஒரு மனம்தான் இத்தகைய வரிகளை எழுத இயலும்.

‘ஏதாவது கேள்விகேட்டால் சாரா அதை முதலில் தலைக்குள் உள்வாங்கி, பரிசுச்சீட்டு குலுக்குவதுபோலத் தலையைக் குலுக்கி, பின்பு பதில் இறுப்பதுதான் வழக்கம்’

‘புளிக்கவைத்த அப்பம்’ கதையின் சாரா என்ற பாத்திரத்தின் குணாதிசயம் இது. உரையாடலின்போது பேச்சிலோ, உடல்மொழியிலோ அடுத்தவரைத் தவறியும் காயப்படுத்திவிடக்கூடாது என்ற அதீத அக்கறை கொண்டிருப்பதே இவ்வாறு தலைகுலுக்குபவர்களின் பொதுத்தன்மை என்பது என் அவதானிப்பு. இக்குணம்கொண்ட அமெரிக்க, ஐரோப்பியர்கள் சிலரை நானும் சந்தித்ததுண்டு. அதைச் சிக்கலின்றி வெளிப்படுத்தும் முத்துலிங்கத்தின் உவமை அவரது எழுத்தை மேலும் நெருக்கமாக்குகிறது. சாதாரணமாக மாநிறம் என்று அவர் எழுதிவிடுவதில்லை. ‘சற்று அதிகமாகப் பால் கலந்த தேநீர் கலர்’ [ஆச்சரியம்] என்கிறார்.

கல்வி தருவதாக வாக்களித்து, நாடுவிட்டு நாடு அழைத்து வந்து, உறவுக்காரச் சிறுமியைத் தன் வீட்டுவேலைக்கு அமர்த்திக்கொள்கிறார் அந்த அம்மாள். வேலையின்போது நடக்கும் சிற்சிறு தவறுகளுக்கும் வசவுகளும் அறைகளும் சிறுமிக்குக் கிடைக்கின்றன. பல்லாண்டுகள் கழித்து, அவள் இன்னும் சிறுமியாக இல்லாத ஒருநாளில் அவளுக்குத் திருப்பித்தாக்கும் தருணம் வாய்க்கிறது. ‘கைகளை இடுப்பில் வைத்துக்கொண்டு அவரை நேருக்கு நேர் பார்த்து ‘அதற்கு என்ன இப்போ?’ என்று கேட்டேன். அவர் அப்படியே நின்றார். முகத்தில் முதல் தடவையாக ஒருவித அச்சத்தைக் கண்டேன். புகைப்படம் எடுக்க மெதுவாக பின்னுக்கு நகர்வதுபோல நகர்ந்தார்’ [ஐந்து கால் மனிதன்] என்று அக்காட்சியை எழுத்தில் வடிக்கிறார்.

ஆயிரமாயிரம் ஆண்டுகளாகத் தமிழில் வர்ணிக்கப்பட்டுவிட்ட பெண்களின் மார்புகளுக்குக்கூட இவர் ஒரு புதுவிதமான வர்ணனையை அளிக்கிறார்; ‘சின்ன உருண்டையான மார்புகள் என்றாலும் விசையானவை’ [22 வயது] என்று. விசை என்ற சொல்லை யாரும் இப்படியொரு இடத்தில் பொருத்திப் பார்த்திருப்பார்களா தெரியவில்லை. அதே கதையில், ‘தாயினுடைய சப்பாத்தை அணிந்து டக்குடக்கென்று நடக்கும் சிறுமியின் நடைபோல அவளுடைய ஆங்கிலம் கனமானதாக இருந்தது’ என்கிறார். அந்த வர்ணனையில் மொழியை ‘எடை’போடும் ஒரு புது அழகு பயின்றுவருகிறது.

 

மூச்சடைக்கும் காதல்

காதலுணர்வு ஒருவரை முற்றாக ஆட்கொள்ளும் தருணங்கள் அழகும் உக்கிரமும் கலந்து வெவ்வேறு கோணங்களில் வந்து விழுகின்றன. முத்துப்பற்களோ, மீன்விழியோ, கனியுதடோ, அன்ன நடையோ மற்ற மரபான, தேய்ந்துபோன நளினங்களோ ஒருபோதும் எட்டிப்பார்ப்பதில்லை.

‘கண்களை எடுக்க முடியாமல் அவளையே பார்த்தான். திடீரென்று ஒரு சுவாசப்பையை நிரப்புவதற்குத் தேவையான காற்றுகூட அறையில் இல்லாமல் போனது’ [பாரம்] என்ற வரியிலும் ‘அவளுடைய கழுத்துக்கும் என்னுடைய இருதயத்துக்கும் ஒருவிதமான தொடர்பு ஏற்பட்டது. அவளது கழுத்து நீண்டு தலை உயரும் ஒவ்வொருமுறையும் என்இருதயம் ஒரு துடிப்பைத் தவறவிட்டது’ [மெய்க்காப்பாளன்] என்ற இடத்திலும் நாம் அடையும் அனுபவம் அவ்வாறனதே.

 

நினைவேக்கம்

எண்பதுகளில் சிறுவர்களான எங்களுக்கு சைக்கிள் டயரை குட்டியால் தட்டி ஓட்டுவது, வைக்கோல்போர் ஏறுவது, பனங்காய் வண்டி ஓட்டுவது, தண்ணீர்தண்டு பறிப்பது போன்ற பலவிதமான விளையாட்டுக்கள் இருந்தன. அவற்றில் ஒன்று நோட்டீஸ் பொறுக்குவது. அரசியல் கூட்டங்கள், கோயில் திருவிழாக்கள், சினிமா வெளியீடுகள் என்று பலவற்றுக்கும் ஆட்டோ அல்லது காரில் வந்து ஒலிபெருக்கியில் விளம்பரம் செய்துகொண்டே நோட்டீஸ் போடுவார்கள். அவற்றை யார் அதிகம் சேகரிக்கிறார்கள் என்பதில் கடும் போட்டி நிலவும். ஓரிடத்திலிருந்து கிளம்பும் வாகனம் எப்படியும்  அடுத்த தெருவில் நிற்கும் என்பதால் பின்னால் கூட்டமாகத் துரத்திக்கொண்டே ஓடுவதும் உண்டு. இது பல பத்தாண்டுகளாக கிராமங்களில் இருந்துவந்த விளையாட்டுத்தான்.

முத்துலிங்கம் அக்காட்சியை ‘அப்படி ஓடும்போது விளம்பரத்துண்டுகளை அள்ளி வீசுவார்கள். வாழ்நாள் முழுக்க இந்த ஒரு தருணத்துக்காகவே காத்திருந்ததுபோல் நானும் தம்பியும் பாய்ந்து புழுதியில் விழுந்து புரண்டு அந்த துண்டுகளைப் பொறுக்குவோம்’ [ஜகதலப்ரதாபன்] என்ற ஒரே வாக்கியத்தில் நோட்டீஸ் பொறுக்குவதை அதன் மொத்த வேகத்துடன் பதிவுசெய்திருக்கிறார்.

‘அப்பொழுது நான் மிகச் சின்னவன். ஒரு வாழைப்பழத்தை முழுதாகக் கடிக்கத் தெரியாது. பக்கவாட்டில் கடித்து உண்ணத்தான் தெரியும்’ [எங்கள் வீட்டு நீதிவான்], ‘வாழ்க்கையில் அதுவரைக்கும் அவன் கட்டியது விளையாட்டுக் கடிகாரம்தான். முதலில் நேரத்தைப் பார்த்துவிட்டு பின்னர் முள்ளைத் திருப்பிவைக்கவேண்டும்’ [தீர்வு] என்பன போன்ற சிறுவயதுக்கே உண்டான சில செய்கைகளை வர்ணனைகளாக ஆக்குவதிலும் இவரது எழுத்துக்கள் தனிச்சிறப்பானவை

 

கேலியில் கையறு நிலை

இவரது புனைவுகளில் மெல்லிய கேலி, கிண்டல்கள் சீராக விரவிக் கிடக்கின்றன. ‘எழுத்தை எழுதிவிட்டு அதைக்கொடியில் காயப்போடுவதுதான் சமஸ்கிருதம் என்று கனகசுந்தரி கேலியாகச் சொல்வாள்’ [கனகசுந்தரி] என்பது ஓர் எடுத்துக்காட்டு.

‘இலங்கை தேசியகீதத்தை நானும் சாவித்திரியும் சேர்ந்து பாடுவதாகத் திட்டமிட்டு ‘மன்மத ராசா மன்மத ராசா’ என்று முதல் இரண்டு வரிகளைப்பாடினோம். நிறைய அகதிகளை ஏற்றுமதி செய்யும் ஒரு நாட்டின் தேசியகீதத்தைப் போலவே அது ஒலித்தது. ஒருவருமே கண்டுபிடிக்கவில்லை ஆனால் கைதட்டினார்கள்’

வெறும் கேலியாக மட்டும் இல்லாமல் என்று ஒரு கசப்பான உண்மையைக் கேலியாக வெளிப்படுத்தும் அம்சமும் ‘மூளையால் யோசி’ கதையில் வரும் மேற்கண்ட பத்தியில் இருக்கிறது.

 

புன்னகையில் மயங்கும் துயரம்

முத்துலிங்கத்தின் சிறுகதைகளைப் பொறுத்தவரை அவரது புன்னகை அரும்ப வைக்கும் வர்ணனைகளின் கீழே மறைந்துள்ள துயரமே ஒருவித ஈர்ப்பையும் வாசகத்தவிப்பையும்  வழங்குகிறதோ  என்று சந்தேகிக்கிறேன்.

என் பார்வையை விளக்கச் சில உதாரணங்களைப் பார்க்கலாம்.

குதிரைக்காரன் கதையில், புலம்பெயர்ந்த வந்த அவனுக்கு, குதிரைகளோடு பழக வாய்க்கிறது. தனக்குப் பயிற்றுவித்தவரின் உதவியின்றி தானே குதிரைகளைச் சமாளிக்க அவன் தயாராகிவிட்டான் ஆனால் அதற்கான சந்தர்ப்பம் வாய்க்காது நாட்கள் கடக்கின்றன. வெகு நாள் காத்திருந்த அந்த வாய்ப்பு வந்தபோது அது உடல் நலம் குன்றிய ஒரு குதிரையைச் சுட்டுக்கொல்லும் வேலையாக இருக்கிறது. அவன் செய்யப்போவதை உணர்ந்துகொண்டோ என்னவோ அந்தக்குதிரை இமைக்காமல் அவனைப் பார்த்துக்கொண்டே குண்டுவாங்கிச் சரிந்து விழுகிறது. அத்துயரம் அவன் கண்களிலிருந்து கடைசிவரை மறைவதில்லை.

குற்றம் கழிக்க வேண்டும் கதையில், கணிதத்தில் உலக அளவிலான தேர்வில் வெற்றிபெறக்கூடிய அளவுக்குத் திறமான ஒரு பெண் அத்தேர்வில் கலந்துகொள்வதைத் தவிர்க்கிறாள். அதற்கான காரணம் உலகமறியா அவள் தாய் வயதுக்கு வந்தபின் குறிப்பிட்ட நாள்வரை வீட்டைவிட்டு வெளியே போகக்கூடாது என்று எதிர்பார்ப்பதுதான். தன் திறமையால் கிடைக்கப்போகும் ஓர் அடையாளத்தை ஒரு மூடநம்பிக்கைக்காகத் துறக்கும் வலியும் அதன் துயரமும் அவளைக் கவ்விக்க்கொள்கிறது. ஆனாலும் அவள் அதைத் தாங்கிக்கொண்டு தன் தாயின் உலகத்தைப் புரிந்துகொண்ட பெண்ணாக இருக்கிறாள். இங்கு முத்துலிங்கம் பிற்போக்குத்தனத்தை ஆதரிக்கவில்லை. துயரம் எங்கே செல்கிறது என்ற பார்வைதான் அக்கதை. அப்பெண் முற்போக்காக இருந்தால் துயரம் தாய்க்கு. பிற்போக்காக இருந்தால் அவளுக்கு. அவ்வளவுதான் வேறுபாடு.

ஓணானுக்குப் பிறந்தவன் கதையில், கிரேக்கப் போலிஸாரிடம் மாட்டிக்கொள்ளும் அந்த ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்தவனுக்கு என்ன தண்டனை வழங்கலாம் என்று அவர்கள் ஆலோசிக்கிறார்கள். சிறையில் தள்ளுவது, சுட்டுக்கொல்வது உட்பட பல யோசனைகள் வருகின்றன. உலகத்துக்குப் பல புதிய சிந்தனைகளை வழங்கிய பல கிரேக்க மூளைகள் பிறந்த மண்ணில் இவர்கள் மூளைகள் ஏன் இப்படி சுருங்கிவிட்டன என்று அவன் யோசிப்பதாக வரும் இடத்தில் நமக்குப் புன்னகை எழும். ஆனால் அடுத்த வரியில் இலங்கையிலிருந்து வெளியேறிய இந்த ஓராண்டுக்காலத்தில் அனுபவித்தவற்றைக்காட்டிலும் வேறென்ன பெரிதாக தண்டனை வழங்கிவிடப்போகிறார்கள் என்று அவன் யோசிக்கும்போது அவன் துயரத்தின் ஆழம் நம்மை இழுத்துவளைத்துக்கொள்ளும்.

முடிவுரை

காதல், மகிழ்ச்சி, நெகிழ்ச்சி, கேலி போன்றவற்றை வெளிக்காட்டுவதில்தான் அ.முத்துலிங்கத்தின் வர்ணனைகள் சிறக்கின்றன என்று சொல்லிவிட இயலாது. ‘ஒரு மரக்கொப்பு முறிந்ததுபோல நடுவிலே முறிந்துபோய்க் கிடந்தவளைப் பார்க்க முடியவில்லை’ [எல்லாம் வெல்லும்] என்ற வர்ணனை வெளிக்காட்டும் ஈழப்போர்க்காட்சியின் கோரம் வாசகரைப் பதறவைக்கக்கூடியது.

அ.முத்துலிங்கத்தின் உரைநடை எளிமையும் புதுமையும் ஆழமும் சரியான விகிதத்தில் கலக்கப்பட்ட கவர்ச்சியான வர்ணனைகளைக்கொண்டு சமைக்கப்பட்டுள்ளது. இன்னும் நாலு வரி வர்ணனைகள் எழுதமாட்டாரா என்று வாசகரை ஏங்கவைப்பதால் அது முழுமையாக வெற்றியடைந்திருக்கிறது. அதேவேளையில் அவரது புனைவுகள் அனைத்திலும் சிதறும் புன்னகைகளின் அடியில் ஆற்றமுடியாத் துயரம் மறைந்திருப்பதும் அவர் கதைகளின் வசீகரத்திற்குக் காரணம் என்று துணியலாம்.