பாலா என்று நண்பர்களிடையே அறியப்படும் . பழனியப்பன் சிங்கப்பூரில் நன்கு அறியப்பட்ட மொழிபெயர்ப்பாளர். புக்கிட் மேரா தொடக்கப்பள்ளியிலும் பிறகு இராஃபிள்ஸ் பள்ளியிலும் பயின்றவர். குடும்பத்தின் மூத்த ஆண் பிள்ளை. பள்ளிப் படிப்பை முடித்ததும், குடும்பச் சூழல் காரணமாக 1968ல் உடனடியாக வேலைக்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆசிரியர் பணிக்கு விண்ணப்பித்த அவரை நேர்காணல் தேர்வின்போது அரசாங்க அதிகாரிகள் மொழிபெயர்ப்பாளராக ஆகும்படி ஊக்குவித்தனர். அப்போது ஆசிரியர்களின் ஊதியத்தைவிட மொழிபெயர்ப்பாளர்களின் சம்பளம் அதிகம்.

அவ்வாறு தொடங்கிய பாலாவின் மொழிபெயர்ப்புப் பயணம் நீதிமன்றம், நாடாளுமன்றம் என முக்கியமான அரசமைப்புகளில் சுமார் அரைநூற்றாண்டுக்கு நீண்டு பல்வேறு வளர்ச்சிக்கட்டங்களைத் தாண்டியது. தற்போது பணிஓய்வு பெற்றுவிட்ட பாலாவின் பயணத்தையும் அரசாங்க மொழிபெயர்ப்புப்பணி குறித்தும் அறிந்துகொள்ள அவருடன் உரையாடினோம்.

3ac2eaf0-c3db-4314-81ab-a1d068389f7d

ஆ. பழனியப்பன்

PC: Palaniappan

பள்ளிப்படிப்போடு வேலைக்குச் சென்ற தாங்கள் உயர்கல்வி பெறவேண்டும் என்று விரும்பினீர்களா?

இராஃபிள்ஸ் பள்ளியில் படிக்கும்போதுஇளங்கதிர்என்ற தமிழ் இதழை வெளியிட்டு தமிழ் இளைஞர் மன்றத்தின் கவனத்தை ஈர்த்தேன். பள்ளிப் படிப்பை முடித்துக்கொண்டதும், மறைந்த வழக்கறிஞர் ஜி ராமனின் சகோதரர் கங்காதரனின் தூண்டுதலால், தமிழ் இளைஞர் மன்றத்தின் செயலாளராகவும் தலைவராகவும் செயல்பட்டு வந்தேன். அதேநேரத்தில்நிலைப் படிப்பை இரவு நேரங்களில் படித்து முடித்தேன்.

 நான் தொடக்கத்தில் வாழ்ந்த தெலுக் பிளாங்கா பகுதியில் குடியிருப்பாளர் குழுத்தலைவராகவும் அத்தொகுதி குடிமக்கள் ஆலோசனைக் குழு உறுப்பினர்செயலாளராகவும் பணியாற்றினேன். அதே காலத்தில் பெருமாள் கோவில் செயலாளராகவும் இந்து ஆலோசனை மன்றத்தின் செயலாளராகவும் சேவையாற்றினேன். இத்தகைய பொதுச் சேவைகளின் காரணமாக என் பகுதிநேர சட்டப்படிப்பு பெரிதும் பாதிப்படைந்தது. இளம் வயதிலேயே திருமணமும் ஆகிவிட்டதால் பட்டம் பெற வேண்டும் என்ற இலக்கைத் தொடர்ந்து தள்ளிப்போட வேண்டியதாயிற்று.

பல்லாண்டுகள் கழித்து 1995ல்சிம்பல்கலையில் சேர்ந்து ஆங்கில மொழி இலக்கியத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றேன்.

 

தாங்கள் சிங்கப்பூர் நாடாளுமன்றத்தில் மொழிபெயர்ப்பாளராக ஆன கதையை எங்களிடம் பகிர்ந்துகொள்ளுங்களேன்.

கீழ் நீதிமன்ற மொழிபெயர்ப்பாளராக 1968ம் ஆண்டு ஜூலை மாதம் வேலையில் சேர்ந்தேன். கீழ் நீதிமன்றத்திலிருந்து உயர் நிதீமன்றத்திற்குச் சென்று, அதன் பின்னர் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் அப்போதைய தொலைக்காட்சி நிறுவனமான சிங்கப்பூர் ஒளிபரப்புக் கழகச் செய்திப்பிரிவில் பணியாற்றி, மீண்டும் நீதிமன்ற மொழிபெயர்ப்பாளராகி பின்னர் நாடாளுமன்ற மொழிபெயர்ப்பாளரானேன்.

நான் அப்போதைய உயர்நீதிமன்றத்தில் (இப்போதைய தேசிய கலைக்கூட கட்டடம்) வேலை செய்தபோது நாடாளுமன்றத்திற்குப் பகுதிநேர மொழிபெயர்ப்பாளர்கள் தேவை எனக் கேள்வியுற்று விண்ணப்பித்தேன். அப்போது மொழிபெயர்ப்பாளராக இருந்த திரு நாராயணன் என்னைப் பகுதிநேர மொழிபெயர்ப்பாளராகச் சேர்த்துக்கொண்டு பயிற்சியும் தந்தார். 1970களின் தொடக்கத்தில் உயர்நீதிமன்றத்தில் பணியாற்றிக்கொண்டே நாடாளுமன்றப் பகுதிநேர மொழிபெயர்ப்பாளராகவும் பணியாற்றினேன். கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் பகுதிநேரப் பணி தொடர்ந்தது.

திரு லீ குவான் யூவின் தேசிய தினப் பேருரைகளை திரு நாராயணனுடன் இணைந்து நேரடி மொழிபெயர்ப்புச் செய்தேன். பின்னர் மற்ற மொழிபெயர்ப்பாளர்களுடனும் சேர்ந்து அதனைச் செய்துள்ளேன், திரு நாராயணன் ஓய்வு பெற்றபோது 1990 செப்டம்பரில் நாடாளுமன்ற முழுநேர மொழிபெயர்ப்பாளனாகச் சேர்ந்தேன். கடந்த 2020 ஜூலையில் ஓய்வுபெற்றேன்.

 

சிங்கப்பூர் நாடாளுமன்ற உரைகள், விவாதங்கள் அனைத்தும் ஒருவரி விடாமல் தமிழில் மொழிபெயர்க்கப்படுகிறதா? எப்போதிலிருந்து இவ்வாறு செய்யப்படுகிறது? நாடாளுமன்றத்தின் ஆங்கிலப் பதிவுகளை இணையத்தில் வாசிக்கமுடிவதைப்போலத் தமிழ் மொழிபெயர்ப்பையும் வாசிக்க இயலுமா?

இச்சேவை 1959லிருந்து சிங்கப்பூர் சட்ட சபையில் (Legislative Assembly) தொடங்கியது. முதல் முழுநேர மொழிபெயர்ப்பாளர் திரு நாராயணன். அவரைத் தொடர்ந்து நான் அப்பணியில் இருந்தேன். இப்போது வீரமணி எனும் ஓர் இளைஞர் இருக்கிறார். இப்போது ஆங்கிலம், மாண்டரின், மலாய் ஆகிய மூன்று மொழிகளிலும் உரையாற்றும் ஆற்றலுள்ள உறுப்பினர்கள், பிரதமர் உட்பட, சிலர் உள்ளனர். தமிழையும் சேர்த்து நான்கு மொழிகளிலும் பேசக்கூடியவர்கள் தற்போது யாரும் இல்லை. எதிர்காலத்தில் வரக்கூடும்.

நாடாளுமன்றக் கூட்டங்களில் மாண்டரின், மலாய், தமிழ் ஆகிய மொழிகளில் மொழிபெயர்ப்புச் சேவை வழங்கப்பட்டாலும், உரைகளின் எழுத்துவடிவம் ஆங்கிலத்தில் மட்டுமே கிடைத்துவந்தது. பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னர் ஆங்கிலம் தவிர்த்த மற்ற மொழி உரைகளின் பிரதிகளையும் நாடாளுமன்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய முடிவுசெய்யப்பட்டது.

எடுத்துக்காட்டாக, தமிழ் பேசும் உறுப்பினர் ஒருவர் தமது ஆங்கில உரையின் தொடக்கத்திலோ, நடுவிலோ, இறுதியிலோ தமிழில் உரையாற்றியிருந்தால் அவரின் தமிழ் உரைக்குக் கொடுக்கப்பட்டுள்ள இணைப்பைச் சொடுக்கினால் அவரின் உரையைத் தமிழில் படிக்கலாம். ஒலி வடிவத்தில் கேட்க இயலாது. வழக்கமாக வானொலியிலோ தொலைக்காட்சியிலோ அன்றைய தினம் அவ்வுரையைத் தமிழில் ஒலிபரப்புவர்.

தொடக்ககாலத்தில் ஓர் உறுப்பினர் ஒரு மொழியில் (.கா. ஆங்கிலம்) பேசத் தொடங்கினால் அவரின் உரையின் இறுதி வரை அம்மொழியில்தான் பேசவேண்டும் என்ற விதிமுறை இருந்தது. ஆனால் இருமொழியறிவுக் கொள்கையின் காரணமாக அதிகளவிலான உறுப்பினர்கள் ஆங்கிலம் தவிர்த்த மற்றொரு மொழியிலும் பேச விரும்பியதால் நாடாளுமன்ற விதிமுறைகள் திருத்தப்பட்டு, ஓர் உறுப்பினர் தமது உரையை நான்கு அதிகாரபூர்வ மொழிகளிலும் பேசலாம் என அறிவிக்கப்பட்டது. ஆகவே உரையை முழுமையாகப் பிற அதிகாரபூர்வ மொழிகளில் மொழிபெயர்ப்பதும் நடப்புக்கு வந்தது.

  

நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் ஆங்கிலத்தில் பேசுகிறார் என்றால், அவர் பேசத் தொடங்குவதிலிருந்து அப்பேச்சு தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு இறுதிசெய்யப்படுவதுவரை உள்ள  நடவடிக்கைகள் என்னென்ன? அவை ஒவ்வொன்றுக்கும் எவ்வளவு கால அவகாசம் கிடைக்கும்? 

உறுப்பினர் ஆங்கிலத்தில் பேசும்போது பிற மூன்று மொழிப் பிரிவைச் சேர்ந்த மொழிபெயர்ப்பாளர்களும் (மாண்டரின், மலாய், தமிழ்) தத்தம் மொழிகளில் உடனடியாக மொழிபெயர்க்கத் தொடங்குவர். இவர்களை உரைபெயர்ப்பாளர்கள் (interpreters) என்றும்  ஏககால மொழிபெயர்ப்பாளர்கள் (simultaneous interpreters) என்றும் அழைக்கின்றனர்.

கூடியவரை சொல்லுக்குச் சொல் ஓர் உறுப்பினர் பேசப் பேச மொழிபெயர்ப்பாளர் செவிவழி உள்வாங்கிக் கொண்டு, மனம் வழி அதனை தமிழ்ப்படுத்தி, வாய் வழி அதனை மற்றவர்களுக்குக் கேட்கச் செய்கின்றனர். ஒரு சமயத்தில் குறைந்தது மூன்று போராவது மொழிபெயர்ப்புக் கூடத்திற்குள் இருப்பர். ஒவ்வொருவரும் 10-15 நிமிட இடைவெளிவிட்டு மொழிபெயர்ப்பர்.

சில சமயங்களில் உரையின் எழுத்துப்படிவம் முன்னரே கொடுக்கப்பட மாட்டாதுஉறுப்பினர் பேசும் வேகத்திற்கு ஈடுகொடுத்து மொழிபெயர்ப்பதுதான் மொழிபெயர்ப்பாளர்கள் எதிர்கொள்ளும் சிரமங்களில் தலையாயது. எல்லாத் துறைகள் பற்றியும் அவர்கள் அறிந்திருக்கவேண்டும். யாருக்காவது சொல் கிடைக்காமல் தடுமாறினால் அருகிலிருக்கும் மற்ற மொழிபெயர்ப்பாளர்கள் சொல்லை எழுதிக்காட்டி உதவுவர்.

இவை அனைத்துமே ஆங்கிலத்திலிருந்து மாண்டரின், மலாய், தமிழில் செய்யப்படும் உரைபெயர்ப்புதான். எழுத்து வடிவத்தில் அமைவதில்லை. இத்தகைய ஆங்கில உரைகளைக் கேட்டு உடனுக்குடன் கணினியில் உள்ளீடு செய்ய நாடாளுமன்ற படியெடுப்போர் பிரிவு உள்ளது. ஓர் உறுப்பினர் தம் தாய் மொழியில் பேசினால், அதனை ஆங்கிலத்திற்கு மொழிபெயர்க்க வேண்டும். சீன மொழியிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்க்கும்போது அவரின் குரலைக் கேட்டு மலாய், தமிழ் மொழிபெயர்ப்பாளர்கள் தங்கள் மொழிக்கு மாற்றுவர். இதனை  அஞ்சல் (relay) முறை என்பர்.

தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கு மாற்றப்பட்ட மொழிபெயர்ப்பைப் படியெடுப்பவர்கள் அதேநாளில் தமிழ் மொழிபெயர்ப்பாளருக்கு அனுப்பிவைப்பர். தமிழ் மொழிபெயர்ப்பாளர் அது சரியாக உள்ளதா என்பதை உறுதிசெய்து படி எடுக்கும் பிரிவினருக்கு அனுப்பி வைப்பார். தமிழ் உரையின் மொழிபெயர்ப்பு மற்றும் வேறு உரைகள் ஆகியவற்றை சம்பந்தப்பட்ட உறுப்பினருக்கு அன்றிரவு அல்லது மறுநாள் காலையில் அனுப்பிவைக்கப்படும்.

 உறுப்பினர் அவற்றைப் படித்து திருத்தம் செய்ய விரும்பினால் திருத்தங்களைச் சுட்டிக்காட்டி திரும்ப அனுப்பி வைப்பார். முழு வாக்கியங்களை அல்லது பத்தியை மாற்றவேண்டும் என்றால் நாடாளுமன்ற நாயகரின் அனுமதியை உறுப்பினர் பெறவேண்டும். உரையாற்றிய மூன்று நாட்களுக்குள் உறுப்பினரின் உரை நாடாளுமன்ற இணையப் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்படும்.   

  

மொழிபெயர்ப்பு பிழையறவும் துல்லிதமாகவும் உள்ளதா என எவ்வாறு உறுதிசெய்வீர்கள்? ஒருவேளை பின்னாளில் பிழைகள் கண்டறியப்பட்டால் பதிவுகளைத் திருத்த அனுமதியுண்டா? 

ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு செய்ப்பட்ட மொழிபெயர்ப்புகள் பதிவு நாடாக்களில் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு வைத்திருக்கப்படும். உறுப்பினர் தமது ஆங்கில உரை தமிழில் மொழிபெயர்க்கப்பட்டது குறித்து அதிகம் அக்கறை கொள்ளமாட்டார். தமிழில் மொழிபெயர்கப்படுகிறது என்பது அவருக்குத் தெரியும். ஆனால் தமிழிலிருந்து ஆங்கிலத்தில் சரியாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளதா என்பதில் அவர் அக்கறை கொள்வார். அதனைத் திருத்தம் செய்ய இருவருக்குமே நேரம் இருக்கிறது. பதிவேற்றம் செய்யப்பட்டவற்றில் பெரும்பாலும் திருத்தங்கள் செய்யப்படமாட்டாது.

 

பேச்சாளர் பேசுவதை நீங்கள் புரிந்துகொண்டு அந்தப் புரிதலைத் தமிழில் மொழிபெயர்க்க நேரும்போது கருத்துக் கலப்புகள் நடப்பதற்கு வாய்ப்புண்டா? அப்படிப்பட்ட சூழல்களை எவ்வாறு களைகிறீர்கள்?

 சரியான புரிதலோடுதான் மொழிபெயர்ப்பை அணுகவேண்டும். இருந்தாலும் வாக்கிய அமைப்பு காரணமாக சிலசமயங்களில் புரிதல் சிரமமாக இருக்கக்கூடும். உரையின் பிரதி முன்னரே கிடைத்தால் அதனைப் படித்து நல்ல புரிதலைப் பெற முடியும். தவறான புரிதலில் மொழிபெயர்க்கும்போது விழிப்போடு இருக்கும் மற்ற இருவரில் ஒருவர் குறிப்புச் சொல்லை (prompt) கூறி உதவலாம். ஆனால் கூடியவரையில் தவறுகள் ஏற்படாதவாறு இருக்க, பரவலான வாசிப்பு, இருமொழி சொற்களஞ்சிய நிகரிகள் (equivalence) ஆகியவை உதவி செய்யும்.

 இப்போது கைத்தொலைபேசியிலேயே அகராதிகள் கிடைக்கும் வசதி இருப்பதால் ஒரு மொழிபெயர்ப்பாளர் மொழிபெயர்ப்பு செய்துகொண்டிருக்கும் போது அவ்வுரையின் தொடர்ச்சியான பகுதியை மற்றவர் படித்துப் புரிந்துகொண்டும், கடினமான சொற்களுக்கான பொருளைக் கண்டுபிடித்தும் தயாராக இருப்பார். மனிதத் தவறுகள் நம்மை அறியாமல் ஏற்படுவதற்கு வாய்ப்பு உண்டுதான்.   

 

ஆங்கிலக் கலைச்சொற்களுக்கு நிகரான தமிழ்ச்சொற்கள் இல்லாத, கிடைக்காத நிலையில் புதியசொற்களை உருவாக்குவதுண்டா? வேறெந்த விதமாகவும் இச்சிக்கலைச் சமாளிக்க இயலுமா?

 இது சிக்கல்தான். நிகரான சொற்கள் கிடைக்காதபோது ஆங்கில அகராதிகளைப் பார்த்து, பொருள் உணர்ந்து, உடனடியாக சொல் அல்லது சொற்றொடர் மூலம் மொழிபெயர்க்கிறோம். அச்சொல்லை பின்னர் ஓய்வாக இருக்கும்போது மற்ற மொழிபெயர்ப்பாளர்களிடமும் கலந்து ஏற்றுக்கொள்ளக்கூடிய சொல்லைக் கண்டு பிடிப்போம்.

ஆங்கிலத்தில் புதுப்புதுச் சொற்கள் சொற்றொடர்கள் உருவாகிக்கொண்டே இருக்கின்றன. நமக்கு இற்றைப்படுத்தப்பட்ட (updated) அகராதிகள் இருப்பதில்லை. சிங்கப்பூரில் உள்ள சொல்வளக் குழுவும் இதில் தன் பங்கை ஆற்றி அவ்வப்போது சொற்களால் எழும் பிரச்சனைகளைக் களைய உதவுகிறது.   

 

தமிழ்ப் பேச்சை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து பிறகு மூன்றாவதாக ஒரு மொழிக்கு உருமாற்றும்போது கருத்துக்களில் மாற்றம் வருவதுண்டா? அப்படிப்பட்ட நிகழ்வு நடந்ததுண்டா?

நமது நாடாளுமன்ற மொழிபெயர்ப்பு முறையில் தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்க்கும்போது அதனைக் கேட்டுத்தான் மாண்டரின், மலாய் மொழிபெயர்ப்பாளர்கள் தங்கள் மொழிக்கு மொழிபெயர்ப்பார்கள். பல இன சமுதாயம் என்பதால் மற்ற மொழிக்காரர்கள் எப்படி ஆங்கிலச் சொற்களை உச்சரிப்பர் என்று அறிந்துவைத்திருக்கிறோம். ஆகவே மற்ற மொழிபேசுபவர்களின் உச்சரிப்பு சில சமயங்களில் சவாலாக அமைந்தாலும் அது பெரும் பிரச்சனையல்ல.

  

ஒரு நாடாளுமன்ற மொழிபெயர்ப்பாளராகத் தங்களின் நெடிய அனுபவத்தில் மிகவும் சவாலாக, சுவாரசியமாக அமைந்த மொழிபெயர்ப்பு ஒன்றிரண்டை எங்களுக்குச் சொல்லுங்களேன்.

என்னுடைய 30 ஆண்டுகால நாடாளுமன்ற முழுநேர மொழிபெயர்ப்புப் பணியில், நமது முதல் பிரதமர் திரு லீ குவான் இயூ ஆற்றிய உரையிலிருந்து, பிறகு திரு கோ சொக் தொங், மூன்றாவதாக இன்றைய பிரதமர் திரு லீ சியன் லூங் வரை எல்லோரின் உரையையும் மொழிபெயர்த்துள்ளேன்.

திரு லீ குவான் இயூவும் திரு ஜெயரத்தினமும் பல முறை கருத்து மோதல்களில் ஈடுபட்டுள்ளனர். இருவருமே வழக்கறிஞர்கள் என்பதால் அவர்களின் வாதங்களில் அனல் பறக்கும், வேகமான கருத்துப் பரிமாற்றங்கள் இடம்பெறும். அவர்களின் வாதத்தைப் பின்தொடர்ந்து மொழிபெயர்ப்பது சவாலாகவும், சுவாரசியமாகவும் இருக்கும். எழுதி வைத்துப் படிக்காமல் உடனடியாகச் சிந்தித்து விவாதிக்கும்போது மொழிபெயர்ப்பாளர்களும் ஆர்வத்துடன் அச்சவாலை எதிர்கொள்கின்றனர்.

நீதிமன்றத்தில் வேலை செய்த அனுபவம் இருந்ததால் அவர்கள் பயன்படுத்திய சட்டச் சொற்களை மொழிபெயர்ப்பதில் அவ்வளவாகச் சிரமம் ஏற்படவில்லை. இப்போதுள்ள சட்ட, உள்துறை அமைச்சர் திரு சண்முகத்தின் எதிர்வாதங்களிலும் நாடாளுமன்றங்களில் இடம்பெறும் விறுவிறுப்பான விவாதம் (cut and thrust of debate) சுவாரசியமானதாக அமைந்துவருகிறது.

நமது எம்ஆர்டி தொடர்வண்டிச் சேவைகள் தடைபட்டபோது நாடாளுமன்றத்தில் பல கேள்விகள் எழுப்பப்பட்டன. அப்போது sleeper  என்ற சொல் பயன்படுத்தப்பட்டது. அமைச்சர் குறிப்பிட்ட அச்சொல்லின் பொருள் புரியவில்லை. அப்போது அதனைசிலீப்பர்என்றே சொல்லிக்கொண்டு வரும்போது, இன்னொரு மொழிபெயர்ப்பாளர் அகராதியைப் பார்த்து, அச்சொல் தண்டவாளங்களை இணைக்கும் குறுக்கட்டைகளைக் குறிக்கிறது எனச் சொன்னதும் தொடர்ந்து நடந்த அந்த விவாதத்தில்சிலீப்பரைவிட்டு விட்டு தண்டவாளக் குறுக்கட்டைகள் எனப் பயன்படுத்தத் தொடங்கினோம்.

 

நாடாளுமன்ற மொழிபெயர்ப்பாளர்களின் பணி நாடாளுமன்றக் கட்டடத்திற்குள் மட்டும்தான் அமையுமா?

அனைத்துலக நாடாளுமன்ற கூட்டங்களுக்குச் செல்லும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் செயலாளர்களாக நாடாளுமன்றத்தில் மொழிபெயர்ப்பாளர்கள் வெளிநாடுகளுக்கும் செல்வர். பல அமைச்சுகளின் கருத்துக்களைத் திரட்டி அங்கு பேசப்படும் விஷயங்களில் சிங்கப்பூரின் நிலைப்பாட்டை உறுப்பினர்கள் எடுத்துரைக்க மொழிபெயர்ப்பாளர்கள் உதவுவர். அத்தகைய பணிகளில் எனக்கு உருசியா, அப்பிரிக்க நாடுகள், எகுவடோர், சில்லி, வியட்நாம், லாவோஸ் போன்ற பல நாடுகளுக்கும் செல்ல வாய்ப்புக்கிடைத்தது.

 

தாங்கள் நாடாளுமன்றத்தில் பணியைத் தொடங்கிய காலத்திலிருந்து அண்மையில் ஓய்வுபெற்றதுவரை தேவைகள் சார்ந்தும் தொழில்நுட்ப வளர்ச்சியாலும் மொழிபெயர்ப்புப் பணி எவ்வாறு மாற்றம் கண்டுள்ளது?

 உடனுக்குடன் மொழிபெயர்க்கும் பணியில் மாற்றம் அதிகமாக இல்லை. ஒவ்வொரு பொதுத்தேர்தலுக்குப் பிறகும்  புதிதுபுதிதாக வரும் உயர்கல்வி கற்ற, இருமொழிப் புலமை பெற்ற உறுப்பினர்களின் உரைகளைக் கேட்டு மொழிபெயர்ப்பது இப்போது சவாலாக உள்ளது. அவர்கள் பயன்படுத்தும் துறைசார்ந்த சொற்களின் பொருள் உணர்ந்து மொழிபெயர்ப்பதும் கடினமாகி வருகிறது. இதனால்தான் இத்துறைக்கு அதிகமான இளையர்களை ஈர்ப்பது சிரமமாக இருக்கிறது. இப்போது இருக்கும் பகுதிநேர மொழிபெயர்ப்பாளர்களின் எண்ணிக்கைத் தமிழுக்குப் போதாது.

மின்னஞ்சல், இணையம் போன்றவற்றின் வருகையாலும் உறுப்பினர்களின் தேவைகளை உடனுக்குடன் நிறைவேற்றவும் வேண்டும்.

இணையத்தில் பல விஷயங்கள் குறித்த தகவல்கள் நிறையக் கிடைக்கின்றன. அகராதிகளும் சொற்களஞ்சியங்களும் நிறையவே உள்ளன. ஆகவே சொற்களின் பொருளை அறிந்துகொள்ள அச்சிட்ட அகராதிகளை நாடவேண்டியதில்லைநூலகத்திற்கும் செல்லவேண்டாம். கைத்தொலைபேசியிலேயே இப்போது அகராதிகளை பதிவிறக்கம் செய்துகொண்டு எவ்விடத்திலும் பயன்படுத்தலாம்.

 அச்சுத் தாள்கள் அற்ற அலுவலகம் (paperless office) என்பதற்கிணங்க இப்போது  உறுப்பினர்களின் உரைகளை நாடாளுமன்ற அலுவலகம் மொழிபெயர்ப்பாளர்களுக்கு அவர்களின் மடிக்கணினிக்கு அல்லதுடேப்லட்டிற்கு (கைக்கணிதட்டை) அனுப்பி வைக்கின்றனர். மொழிபெயர்ப்பாளர்கள் அவற்றின் திரையிலிருந்து படித்து, அதே வேளையில் உறுப்பினர் உரையாற்றுவதையும் கேட்டு மொழிபெயர்க்க வேண்டும். இளையோருக்கு இது எளிதாக இருந்தாலும் என்னைப் போன்ற முதிய மொழிபெயர்ப்பாளர்களுக்கு கணினியை இயக்கிக்கொண்டே மொழிபெயர்ப்பது சற்று சிரமமாக உள்ளது. ஆகவே எங்களில் சிலர் பழையை முறைக்கேஅதாவது செவி வழி கேட்டுக்கொண்டே மொழிபெயர்த்தலுக்குதிரும்பியுள்ளோம்.

  

இயந்திர மொழிபெயர்ப்பின் பயன்பாடு தற்போது எந்த அளவிலுள்ளது? சிங்கப்பூரில் இதுதொடர்பாக நடைபெற்றுவரும் முயற்சிகள் என்னென்ன? 

இயந்திர மொழிபெயர்ப்பு இன்னும் தொடக்கநிலையில்தான் உள்ளது. தகவல் தொடர்பு அமைச்சு அனுப்பும் இயந்திர மொழிபெயர்ப்பைத் திருத்தி இயந்திரத்திற்கு முறையான மொழியியல் அடிப்படையில் அமைந்த மொழிபெயர்ப்பை எங்களில் ஒருசிலர் தற்போது செய்துகொண்டிருக்கிறோம். 40-50 விழுக்காடு சரியாக உள்ளது என்று சொல்லலாம். ‘கூகுள்போன்ற மொழிபெயர்ப்பு இயந்திரங்களும் உள்ளன. ஆனால் அவை செம்மைப்படும்வரை அதிகமாக நம்புவதற்கில்லை.

அரசாங்க அமைச்சுகளுக்கிடையே சிறு சிறு மொழிபெயர்ப்புகளுக்காக இயந்திர மொழி பெயர்ப்பு செய்யப்பட்டு மொழிபெயர்ப்பாளர்களால் சரிபார்க்கப்படுகிறது. சிங்கப்பூரில் மேற்கொள்ளப்படும் இத்திட்டம்இயந்திர மொழிபெயர்ப்புவெற்றிபெற இன்னும் சில ஆண்டுகள் பிடிக்கலாம்.

 

‘சொல்வளக் கையேடு’ என்ற தலைப்பில் சுமார் 4000 ஆங்கிலச் சொற்களைத் தமிழில் மொழிபெயர்த்த குழுவின் தலைவராகப் பணியாற்றியுள்ளீர்கள். அச்சொற்கள் எந்த அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டன? குழுவின் தலைவராகத் தங்கள் பணி என்னவாக இருந்தது?

 சில ஆண்டுகளுக்கு முன்னர் சிங்கப்பூரில் மொழிபெயர்ப்பில்  பிழைகளும், அச்சிடும்போது தமிழ் எழுத்துகளின் வடிவங்கள் மாறுபட்டும் வந்தன. சமூக ஊடகங்களில் இது பற்றிய அக்கறை எழுப்பப்பட்டது. நாடாளுமன்றத்திலும் வரவு செலவுத் திட்ட விவாதத்தின்போது தகவல் தொடர்பு அமைச்சின் வெட்டுகளின்போது (cuts) உறுப்பினர் ஒருவர் கேள்வி எழுப்பினார். தமிழ்மொழி வளக்குழு அதைக் கவனித்து தேவையான பரிந்துரைகளைச் செய்யுமாறும் இளம் மொழிபெயர்ப்பாளர்களுக்கு உதவும் வகையில் ஏற்கனவே தயாரிக்கப்பட்டு வரும் கையேட்டை விரைவுபடுத்தி வெளியிடவேண்டும் எனவும் பணிக்கப்பட்டது. குழு தன் பரிந்துரைகளை குறிப்பிட்ட காலத்திற்குள் செய்து முடித்தது. அந்தப் பரிந்துரைகள் எல்லா அமைச்சுகளுக்கும் அனுப்பப்பட்டு அச்செயல்முறை இப்போது பின்பற்றப்படுகிறது.

சொல்வளக் கையேடு சிங்கப்பூரின் முதல் முயற்சி. நான் இளம் மொழிபெயர்ப்பாளனாக தொழிலைத் தொடங்கியபோதே 1970களிலும் 80களிலும் இம்முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அவை பலனளிக்கவில்லை. ஆகவே தேசிய மொழிபெயர்ப்புக்குழுவின் தமிழ் வளக்குழுவிற்குத் தலைவராக பொறுப்பேற்றபோது தமிழில் இத்தகைய கையேட்டைக் கொண்டுவரவேண்டும் என்ற திட்டத்தை முன்மொழிந்தேன்.

நாடாளுமன்றம், தகவல் தொடர்பு அமைச்சு, கல்வி அமைச்சு, ‘மீடியாகார்ப்செய்திப் பிரிவு ஆகிய இடங்களில் தொகுக்கப்பட்ட சொற்களை ஒன்று திரட்டி பல சொற்களை நீக்கியும் புதுச்சொற்களைச் சேர்த்தும் பலமாதக் கடும் உழைப்பில் அக்கையேடு தயாரிக்கப்பட்டது. ஊடகத்துறை, சில அமைச்சுகள், நீதிமன்றம் போன்ற பலதரப்பட்ட துறைகளைச் சார்ந்தவர்கள் அக்குழுவில் இடம் பெற்றிருந்தனர்.

அது அகராதி அல்ல. சொல்வளக் கையேடுதான். அதற்கான தேவை இருந்தது. இப்போது அது பள்ளி மாணவர்களாலும், ஆசிரியர்களாலும், மொழிபெயர்ப்பாளர்களாலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. வளர் தமிழ் இயக்கத்தின் இணையப் பக்கத்திலும் இடம்பெற்றுள்ளது. அது வெளிவந்தபோது தமிழ்நாட்டு நாளிதழ்கள் சில அதனைப் பாரட்டி எழுதியது நினைவில் இருக்கிறது. அது குறைகளற்ற ஒன்று அல்லதான். ஆனால் ஒன்றுமே இல்லாத நிலையில்  அவசரத்தேவையைக் கருத்திற்கொண்டு வளர் தமிழ் இயக்கம் (நான் அதில் உறுப்பினராக இருந்து அதன் ஆதரவை நாடினேன்) தகவல் தொடர்பு அமைச்சு இரண்டும் சேர்ந்து வெளியிட உதவின.  

 

இரசாயனம், விவகாரம், சர்ச்சை போன்ற பல வடமொழிச் சொற்களை சொல்வளக் கையேட்டில் காணமுடிகிறது. மொழிபெயர்ப்பில் மொழித்தூய்மை பேணுவது குறித்த தங்கள் நிலைப்பாடு என்ன?

 மொழித்தூய்மை இருக்கவேண்டும்தான். அதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் சிங்கப்பூரில் தமிழர்களோடு, மற்ற தென் இந்திய மொழிபேசுபவர்களும் இங்கு தமிழ் படிக்கின்றனர். அவர்களுக்கும் நாம் பயன்படுத்தும் சொறகள் எளிதில் புரியவேண்டும். கூடியவரையில் நல்ல தூய்மையான சொற்களைப் பயன்படுத்தியுள்ளோம். உண்மையில் தமிழ் ஆசிரியர்கள் இருவர் குழுவில் இருந்து சமஸ்கிருத சொற்கள், கிரந்த எழுத்துக்கள் அதிகம் இடம்பெறாமல் இருப்பதை உறுதி செய்தனர். இருப்பினும் பயன்பாட்டில் உள்ள இத்தகைய சொற்களைத் தவிர்க்க இயலவில்லை. அவை ஏற்கனவே உள்ளுர் ஊடகங்களிலும் பயன்படுத்தப்படுகின்றன.  

 

சிங்கப்பூரின் முன்னாள் அதிபர் எஸ்.ஆர். நாதனின் தன்வரலாற்று நூலைத் தமிழில் மொழிபெயர்த்துள்ளீர்கள். அவ்வாய்ப்பு எப்படி அமைந்தது? அதிபர் நாதனே தமிழில் எழுதியிருந்தால் எப்படி இருந்திருக்கும் என்று யோசித்து மொழிபெயர்த்தீர்களா? அல்லது ஆங்கில மூலப்பிரதியிலிருந்து சொல்லுக்குச்சொல் பழுதில்லாமல் தமிழில் தந்துவிட நினைத்தீர்களா?

அது தமிழில் வரவேண்டும் என்று முதலில் விரும்பியவர் டாக்டர் சுப திண்ணப்பன் அவர்கள். அவர் முன்னாள் அதிபர் நாதனுக்கு வார இறுதியில் அதிபரின் வீட்டில் தமிழ் கற்றுக்கொடுத்து வந்தார். அத்தகைய வகுப்புகளின்போது அவர் தன் விருப்பத்தை அதிபர் நாதனிடம் தெரிவிக்க அப்பணியை என்னிடம் ஒப்படைக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டது.

இந்தத் தன்வரலாற்று நூலுக்குமுன், அதிபரைப் பற்றி வெளியாகியிருந்த மொழிபெயர்ப்புத் தமிழ்க் கட்டுரை ஒன்றில் அவருக்கு மனநிறைவு இல்லாததால் அதை என்னிடம் கொடுத்து மொழிபெயர்க்கச் சொன்னார். நான் மொழிபெயர்த்ததைப் பாராட்டி அதிபர் அலுவலகத்திலிருந்து கடிதம் ஒன்றை எனக்கு அனுப்பியதுடன் தொலைபேசியில் அழைத்தும் அதிபர் நாதன் நன்றி தெரிவித்தார்.

திரு நாதனின் நூலை தமிழ் முரசு வெளியிடுவதற்கு அப்போது அதன் தலைவராக இருந்த திரு எஸ் சந்திரதாஸ் (முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்) ஒப்புதல் அளித்தார். மொழிபெயர்ப்புச் செலவு, அச்சிடும் செலவு இரண்டையும் தமிழ் முரசு ஏற்றுக்கொண்டது. கூடியவரையில் மொழிபெயர்ப்பாக இல்லாமல் தமிழில் எழுதப்படுவதுபோலவும் அதே சமயத்தில் ஆங்கிலக் கருத்துகளிலிருந்து விலகிவிடாமலும் அந்நூல் மொழிபெயர்க்கப்பட்டது.

ஆங்கில மூலத்தில் உள்ள எல்லாவற்றையும் மொழிபெயர்க்கத் தேவையில்லை, தமிழர்களுக்குத் தேவையனவற்றைத் தேர்ந்தெடுத்து மொழிபெயர்க்கலாம் என்ற சுதந்திரம் எனக்கு அளிக்கப்பட்டது. ஆகவே திரு நாதன் அவர்கள் வெளியுறவு அமைச்சில் பணியாற்றியபோது அவர் ஆற்றிய முக்கியமான பணிகளைத் தேர்ந்தெடுத்தேன். இலங்கை, தமிழ்நாடு, அமெரிக்காவில் இருந்தபோதுமைக்கல் ஃபேவழக்கு தொடர்பான நடவடிக்கைகள் என சிலவற்றைத் தேர்ந்தெடுத்துத்தான் மொழிபெயர்த்தேன்.

நாடாளுமன்றத்தில் என்னுடன் மொழிபெயர்ப்புப் பணியில் ஈடுபட்டுவரும் திரு சுப்பிரமணியம் ஒவ்வொரு அத்தியாயமும் முடிக்கப்பட்டதும் அதைப் படித்து பல யோசனைகளைத் தெரிவித்து உதவினார். முழுமைபெற்ற மொழிபெயர்ப்பை டாக்டர் சுப திண்ணப்பன் அவர்களும் படித்து அது செம்மையுற பல கருத்துகளைத் தெரிவித்தார்கள்.

தமிழரின் வாழ்க்கைக் குறிப்பு தமிழர்களுக்காக எழுதப்படவேண்டும் என்பது என் மனதில் எப்போதும் இருந்தது. கிட்டத்தட்ட ஓராண்டுப் பணி அது. வேலை செய்துகொண்டே அந்நூலையும் இரவு நேரங்களில், விடுமுறை நாட்களில் என செய்து முடித்தேன். அதோடு அந்நூலைஅதிகாரபூர்வமாக வெளியிட்டு அதிபரின் கையொப்பமிட்ட ஒவ்வொரு நூலுக்கும் குறைந்தது 1000 வெள்ளி நன்கொடையாகப் பெற்று 20,000 வெள்ளிக்கும் மேலாக நன்கொடை திரட்டசிண்டாவிற்கு உதவினேன்.

 

ஆங்கிலத்தில் எஸ்.ஆர். நாதனின் தன்வரலாற்று நூலின் தலைப்பு ‘An Unexpected Journey’ என்று கவர்ச்சிகரமாக உள்ளது. ஆனால் தமிழில் ‘உழைப்பின் உயர்வு’ என்று மாற்றப்பட்டு ஒரு நீதிபோதனை நூலைப்போலத் தோன்றுகிறது. தமிழுக்கு வரும்போது இவ்வாறு ஒரு மரபார்ந்த நோக்கை ஏன் கைக்கொள்ளவேண்டும்? 

உண்மைதான். டாக்டர் சுப திண்ணப்பன் அவர்களும் நானும் கலந்தாலோசித்தபோது ஆங்கிலத்தில் உள்ளதை ஒட்டிஓர் எதிர்பாராப் பயணம்என்று தலைப்பு அமைந்தால் அது ஏதோ கதைப் புத்தகத் தலைப்பின் தோற்றத்தைத் தரக்கூடும் என்பதால் வேண்டாமென முடிவு செய்தோம். ஒரு தமிழர் சிங்கப்பூரில் கடுமையாக உழைத்து நாட்டின் உயர்வான பதவிக்குச் சென்றதைத் தமிழர்களுக்குச் சுட்டிக்காட்டவேண்டும் என்பதற்காக கவர்ச்சியான தலைப்பை விட்டுவிட்டு மரபார்ந்த நோக்கில்தான் தலைப்புக் கொடுக்கப்பட்டது. அதிபரும் அதனை ஏற்றுக்கொண்டார்.

 

மொழிபெயர்ப்பு குறித்து சிங்கப்பூர்க் கல்லூரிகளில் கற்பித்து வருகிறீர்கள். தமிழ் இளையர்களின் இருமொழித் திறன், மொழிபெயர்ப்பு ஆர்வம் பொதுவாக சிங்கப்பூரில் எவ்வாறு உள்ளது? மொழிபெயர்ப்புத் திறனை மேம்படுத்திக்கொள்ள இளையர் என்னென்ன பயிற்சிகளை மேற்கொள்ளலாம்? 

சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக் கழகத்திலும் (NUSS) தேசிய கல்விக்கழகத்திலும் (NIE) மொழிபெயர்ப்புப் பற்றிய கோட்பாடுகளையும், மொழிபெயர்ப்புப் பயிற்சிகளையும் வாய்ப்புக் கிடைக்கும்போது கற்றுக்கொடுக்கிறேன். இளையர்கள் ஆர்வத்துடன் கற்றுக்கொள்கின்றனர்.

வேலைசெய்யும் முதிர்ச்சிபெற்ற மாணவர்கள் எஸ்யூஎஸ்எஸ்சில் பயிலுகின்றனர். காலாண்டுப் படிப்பிற்குள் அவர்களை சிறந்த மொழிபெயர்ப்பாளர்களாக ஆக்கிவிட முடியாது. ஆனால் மொழிபெயர்ப்பாளர்களுக்கு வேண்டிய திறன்கள் என்ன , மொழிபெயர்ப்பு நுட்பங்கள் என்ன, நடைமுறையில் எப்படிப் பனுவல்களை, ஆவணங்களை மொழிபெயர்க்கலாம் என கற்றுக்கொடுக்கலாம். ஒருவேளை மொழிபெயர்ப்புத்துறையை அவர்கள் வாழ்க்கைத் தொழிலாகத் தேர்ந்தெடுக்க விரும்பினால் இது வழிகாட்டியாக அமையும் என்று நம்புகிறேன்.

நூலின் மூலத்தையும் மொழிபெயர்ப்பையும் நிறையப் படிக்கவேண்டும்; தங்கள் மொழிவளத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும்; சொந்தச் சொற்களையும் சொற்களஞ்சியத்தையும் தொகுத்து வைத்துக்கொள்ள வேண்டும் என்றும் கூறி வருகிறேன். கவிதைகள், புதினங்கள் போன்றவற்றை மொழிபெயர்க்கும் ஆற்றல் உள்ளவர்கள் நமக்குத் தேவைப்படுகின்றனர். ஆர்வம் உள்ள இளைஞர்கள் முன்வருவர் என்று நம்புகின்றேன்

 

**

பாலாவைத் தொடர்புகொள்ள: singaipalani@gmail.com

மின்னஞ்சல் வழி உரையாடல்: சிவானந்தம் நீலகண்டன், ஜமால் சேக்

‘தி சிராங்கூன் டைம்ஸ்’ அக்டோபர் 2021 மொழிபெயர்ப்பு இலக்கியச் சிறப்பிதழில் வெளியானது. இந்த இதழில் வெளியான மற்ற படைப்புகளை மின்னிதழாக இங்கே படிக்கலாம்.