சிங்கப்பூர் எழுத்தாளர் விழா (SWF 2022) ‘எனில்’ என்ற கருப்பொருளில் கடந்த வெள்ளிக்கிழமை (04/11/2022) துவங்கிவிட்டது. நவம்பர் 20-ஆம் தேதிவரை வெளிநாட்டு, உள்நாட்டுக் கலைஞர்களுடன் இருநூற்றுக்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகள் ஆர்வலர்கள் நேரடியாகக் கலந்துகொள்ளும் வகையில் நடக்கவுள்ளன. கடந்த ஈராண்டுகள் 2021, 2020 இணையவழியில் நடந்ததாலும் பெரும்பாலான நிகழ்சிகளின் ஒளிப்பதிவு வலையேற்றம் செய்யப்பட்டதாலும் நிறைய நிகழ்ச்சிகளை ரசிக்க முடிந்தது. இம்முறை நேரடி நிகழ்ச்சிகளாக நடக்கவுள்ளதால் வார நாட்களில் பலருக்கும் கலந்துகொள்வது சிரமமாக இருக்கலாம். அதற்கேற்ப வார இறுதிகளில் அதிக நிகழ்ச்சிகள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. நாம் திட்டமிட்டுத் திரளாகக் கலந்துகொண்டு ஆதரவளிக்க வேண்டும். முப்பது வெள்ளிக்கு Festival Pass வாங்கினால் அனேகமாக எல்லா நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்ளலாம். கட்டணமின்றிக் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளும் உண்டு.

சனியன்று (05/11/2022) ‘சித்திரமும் அடையாளமும்: வரைகலை வரலாற்றில் தமிழ் அடையாளத்தின் பரிணாமம்‘ என்ற தலைப்பில் கலை ஆளுமை டிராட்ஸ்கி மருதுவுடன் இந்திய மரபுடைமை நிலையத்தில் நடந்த உரையாடல் நிகழ்ச்சிக்குச் சென்றேன். ‘அரூ‘ ராம்சந்தர் செறிவாக நிகழ்ச்சியை வழிநடத்திச் சென்றார். எடுத்துக்காட்டாக, மருது சிறு வயதில் வீட்டைச் சுற்றி அதிகமாகக் குதிரைகளின் நடமாட்டத்தை ஊன்றிக் கவனித்து ஆழப்பதிந்துபோன குதிரைகளின் அசைவுகள் அவரின் ஓவியங்களில் நேரடியாகவே குதிரைகளாகவும், குதிரைகளே இல்லாத ஓவியங்களிலும் ‘குதிரைத்தன்மை’களுடனும் அமைந்திருப்பது போன்ற ஆழமான அவதானிப்புகளை முன்வைத்துக் கேள்விகளைக் கேட்டார்.

டிராட்ஸ்கி மருதுடன் ‘அரூ’ ராம்சந்தர்

அதுமட்டுமின்றி ஆங்காங்கு மருது குறிப்பிட மறந்த ஆனால் கேட்போருக்குப் பயனுள்ளதாக இருக்கும் என்று தன் ஆராய்ச்சியில் கண்டடைந்த இடங்களை நினைவூட்டி, விளக்கிச்சொல்லும்படிக் கேட்டார் ராம்சந்தர். கலை ஆளுமைகளை, முன்னோடிகளை எவ்வாறு அர்ப்பணிப்புடன் ஆராய்ந்து, நேர்கண்டு ஒரு மணி நேரத்தில் செறிவான சாராம்சத்தை வெளிக்கொணரவேண்டும் என்பதைக் காட்டிய இந்நிகழ்ச்சி பாராட்டத்தக்கது. மேலும் காலத்தின் திரைச்சீலை, வாளோர் ஆடும் அமலை, கோடுகளும் வார்த்தைகளும் போன்ற மருதுவே படைத்த அல்லது மருதுவின் கலையைக் குறித்துப் பிறர் எழுதிய பல்வேறு நூல்களையும் கையோடு கொண்டுவந்து அறிமுகப்படுத்தினார். அவற்றுள் பல நூல்கள் தேசிய நூலக வாரியத்தில் இரவல் கிடைக்கின்றன.

தமிழ் ஓவியங்கள், பழைய திரைப்படங்களில் ஆடை அலங்காரங்கள் ‘பார்சி’ கலைவடிவ பாதிப்புகளுக்கு ஆட்பட்ட வரலாறு, தமிழ்த்தன்மைக்கு அவற்றை மாற்றும் முயற்சிகள் போன்றவற்றையும் மரபான கலை வடிவங்களில் தொழில்நுட்ப வளர்ச்சியின் ஊடாட்டங்கள், வெகுஜனக்கலைக்கும் சீரிய(ஸ்) கலைக்குமான எல்லைகள் கலைந்தது என இங்குமங்குமாக அலைபாய்ந்து மருது விவரித்தையெல்லாம் ‘தி சிராங்கூன் டைம்ஸ்’சில் தனிக்கட்டுரையாகத்தான் எழுதவேண்டும். ஒரு வார இறுதிக்கு இப்படி ஓர் அனுபவம் வாய்க்குமென்றால் போதும்!

ஞாயிறு (06/11/2022) கிட்டத்தட்ட முழுநாளையும் எழுத்தாளர் விழா நிகழ்ச்சிகளிலேயே கழித்தேன். ஆர்ட்ஸ் ஹவுஸ் அல்லது அதையொட்டிய இடங்களில் நடந்த நிகழ்ச்சிகள் இவை.

‘கலாச்சாரப் பதக்கம்’ பெற்ற முன்னோடிகளை கௌரவிக்கும் நிகழ்ச்சிகள் இம்முறை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. ‘Our Cultural Medallion Stories‘ என்ற தலைப்பில் வார இறுதிகளில், முடிந்தவரை கலாச்சாரப் பதக்கம் பெற்றவர்களையே வரவழைத்து அவர்களுடைய படைப்புகளிலிருந்து சில பகுதிகளை வாசிக்கச் செய்கின்றனர். அவர்களின் அனுபவங்கள் குறித்த பகிர்வுகளும் இருக்கும். அவர்களால் வரவியலாத நிலையில் அவரைப் பிரதிநிதித்து ஒருவர் வாசிப்பார். சீன, தமிழ், மலாய் மூன்று மொழிகளும் ஒரு நிகழ்வில் இடம்பெறும் என்பதால் வாசிப்பு அவ்வந்த மொழிகளிலும் உரையாடல் ஆங்கிலத்திலும் இடம்பெறுகின்றன. நான் பி.கிருஷ்ணனைப் பிரதிநிதித்து அவருடைய ‘மெக்பத்’ நாடக மொழியாக்கத்திலிருந்து முதல் காட்சியை வாசித்தேன். கைவைக்கும் எதிலும் உயர்ந்த தரத்தைத் தொடர்ந்து வெளிப்படுத்தும், 90 வயதிலும் சுணக்கமின்றித் தீவிரமாக இலக்கியத்தில் செயல்படும் புதுமைதாசனைக் குறித்துச் சுருக்கமாகப் பேசினேன்.

(இடமிருந்து வலமாக) முனைவர் வோங் யூன் வா, சிவானந்தம் நீலகண்டன், ச்சியா வீ ஃபெங், சயீத் முகமது ஹஃபிஸ்

இந்நிகழ்ச்சியில் தன் கவிதையை மலாய் மொழியில் வாசித்த முனைவர் வோங் (இவர் சிங்கப்பூர்த் தேசியப் பல்கலைக்கழகத்தில் சீன மொழித்துறை தலைவராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர்) அதன் அசல் வடிவமான சீனத்திலும் அதிலிருந்து ஆங்கிலத்திலும் என மூன்று மொழிகளிலுமே வாசிக்க ஏற்பாடு செய்திருந்தார். பொம்மலாட்டம் குறித்த அவரது கவிதை என்னைக் கவர்ந்தது. அழகிய பெண்களையும் அதிகாரமிக்க அரசர்களையும் பொம்மலாட்டுபவன் ஓர் அவலட்சணமான, நொய்ந்த கிழவன் என்றும், ஆட்டம் முடிந்ததும் அவர்களின் தலைகளைக் கொய்து உடல்களைச் சேர்த்து ஒன்றாகக் கட்டிப் பெட்டிக்குள் போட்டுவிடுவான் என்றும் கவிதையின் பல இடங்கள் ரசிக்கும்படியும் வாழ்க்கையுடன் தொடர்புபடுத்திப் பார்க்கும்படியும் இருந்தன. எளிமைக்குள்ளும் பல அடுக்குகளை அமைக்கலாம் என்றார்.

நிகழ்ச்சி முடிந்ததும் அவரிடம் அக்கவிதையை மொழிபெயர்த்து ‘தி சிராங்கூன் டைம்ஸ்’ இதழில் போட அனுமதி கேட்டேன். மகிழ்ச்சியுடன் அனுமதி தந்ததோடு அக்கவிதை வெளிவந்த அவரது Beyond Symbols நூலையும் பரிசளித்தார். சிங்கப்பூர் எழுத்தாளர் விழாவில் இதுபோன்ற மொழி, பண்பாட்டு ஊடாட்டங்களுக்கு அனேக வாய்ப்புகள் உள்ளன, நாம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

இந்த நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்தபோது ஒரே கூட்டம். ஓர் இளையரிடம் அவரது நூலில் ‘ஆட்டோகிராஃப்’ வாங்க இளையர் வரிசைபிடித்து நின்றனர். இப்படியெல்லாம்கூட நடக்கிறதா என்று ஆச்சரியப்பட்டு அங்கேயே நின்றுவிட்டேன். விசாரித்ததில் அவர் Dustin Thao என்ற வியட்நாமிய அமெரிக்க எழுத்தாளர் என்பது தெரிந்தது. தற்போது முனைவர் பட்டத்திற்கு அமெரிக்காவில் படித்துவரும் இவரது முதல் நாவலான You’ve Reached Sam கடந்த ஆண்டு இறுதியில் வெளியாகி இன்னும் விற்பனையில் சக்கைபோடு போடுகிறதாம். பதின்மவயதுக் காதல், காதலன் இறப்பு, காதலின் நினைவுகள் என உருக்கமாக எழுதிவிட்டார் என்கின்றனர். வரிசைபிடித்து நின்ற அனைத்து இளையருமே பெண்கள்! சிங்கப்பூர் இளையரில் பெண்கள்தான் இப்படியான நாவல்களைப் படிக்கின்றனரா அல்லது அவர்களுக்குத்தான் டஸ்டினின் எழுத்து பிடித்துள்ளதா என்று யோசித்துக்கொண்டே வெளியே வந்தேன்.

மதிய உணவை முடித்துகொண்டு நேராக ‘Latest Drop: Why Artists Collab‘ என்ற கலந்துரையாடல் நிகழ்ச்சிக்குச் சென்றேன். நைஜீரியாவில் பிறந்து பங்களாதேஷில் வளர்ந்து தற்போது அமெரிக்கராக வாழும் Abeer Y. Hoque, உள்ளூர்க் கலைஞர் Felix Cheong இருவரும் கலந்துகொண்ட இந்நிகழ்ச்சியை Desmond Kon நெறிப்படுத்தினார். இருவேறு கலைவடிவங்களில் செயல்படும் கலைஞர்கள் ஒன்றிணைந்து புதிய சாத்தியங்களை உருவாக்கும் அனுபவங்களைப் பேச்சாளர்கள் இருவரும் பகிர்ந்துகொண்டனர். சிலபல முயற்சிகள் சரியாக அமையாமற் போகலாம் என்பதையும் குறிப்பிட அவர்கள் மறக்கவில்லை.

(இடமிருந்து வலமாக) Desmond Kon, Abeer Y. Hoque, Felix Cheong

கவிதையைத் திரைவடிவில் ஆக்குவது, செவ்வியல் இசையைத் ‘தகர்ப்பமைப்பு’ செய்து புதிய இசைவடிவத்தைக் கண்டடைவது என அவர்களது சொந்த முயற்சிகளை முன்வைத்துப் பேசினர். பெருந்தொற்றுக் காலக் கட்டுப்பாடுகள் எவ்வாறு புத்தாக்கத்தை நோக்கித் தங்களை உந்தின என்று பகிரப்பட்ட செய்திகளும் திரையிடப்பட்ட காணொளிகளும் ஆர்வமூட்டின. கலை ரசிகர்களைக் காட்டிலும் கலைஞர்களுக்கு அதிகம் பயனளிக்கக்கூடிய நிகழ்ச்சி என்று தோன்றியது.

இந்த நிகழ்ச்சி முடிந்ததும் ‘பின்னணியின் பின்புலம்: கதையும், காட்சியும், கலை இயக்குநரும்‘ கலந்துரையாடல் நிகழ்ச்சிக்குச் சென்றேன். முனைவர் இளவழகன் முருகன் நெறியாண்ட இந்த நிகழ்ச்சியில் உள்ளூர் நாடகக் கலைஞர்களான செல்வா, வடிவழகன், சுப்பிரமணியம் கணேஷ் ஆகியோருடன் டிராட்ஸ்கி மருதும் கலந்துகொண்டார். சவாலான மேடை நாடக அனுபவங்களை சுவாரஸ்யமாக உள்ளூர்ப் பேச்சாளர்கள் விவரித்தவிதம் சிறப்பாக இருந்தது. வசனங்கள், நடிப்பு, ஆடையலங்காரம் போன்றவற்றைத்தாண்டி திரை, அரங்கப் பொருட்கள், ஒளியமைப்பு அனைத்துமே நாடகத்தின் வலுவான பகுதியாக ஆகமுடிவதன் பல்வேறு அம்சங்கள் வியப்பளித்தன. ஒருகாலத்தில் தொழில்நுட்பம் இல்லாமலும் அவற்றைச் சிறப்பாகப் பயன்படுத்தத் திறனுள்ள கலைஞர்கள் இல்லாமலும் இருந்த நிலைமாறித் தற்போது பொருளாதார வசதிதான் முக்கிய நெருக்கடி என்பதை வடிவழகன் தொடர்ந்து வலியுறுத்தினார். பிறரும் ஆமோதித்தனர். நல்ல நிகழ்ச்சி.

(இடமிருந்து வலமாக) முனைவர் இளவழகன் முருகன், டிராட்ஸ்கி மருது, சுப்பிரமணியம் கணேஷ், செல்வா

இதற்கடுத்த நிகழ்ச்சியாக அதே அரங்கில் நான் நெறிப்படுத்திய கலந்துரையாடல். ‘போர் நிகழாதிருந்தால்: இரண்டாம் உலகப்போரும் சிங்கைத் தமிழ் வரலாற்றுப் புனைவும்‘ என்ற தலைப்பில் ஹேமா, பொன் சுந்தரராசு, ரமா சுரேஷ் (இணைய வழி) மூவரும் பேச்சாளர்களாகக் கலந்துகொண்டனர். வரலாற்றுப் புனைவு என்பதன் வரையறை, போர்க்காலப் புனைவுகள்- அல்புனைவுகளை அவர்கள் படைத்ததற்கான உந்துதல்கள் எழுந்த பின்புலம், இரண்டாம் உலகப்போர் – ஜப்பானியர் ஆக்கிரமிப்பு தவிர்த்த பிற சிங்கப்பூர் வரலாற்றுப் புனைவுக்கான களங்கள் எனப் பேச்சாளர்கள் தம் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டனர். கேள்வி நேரத்தின்போது எழுந்த கேள்விகளும் வெளியிடப்பட்ட கருத்துகளும் இத்தலைப்பை ஒட்டிய பார்வையாளர்களின் சிந்தனைகளையும் ஆர்வத்தையும் காட்டின. நிகழ்ச்சித் தரம் குறித்துப் பார்வையாளர்கள்தான் சொல்லவேண்டும்.

(இடமிருந்து வலமாக) சிவானந்தம் நீலகண்டன், ஹேமா, பொன் சுந்தரராசு. திரையில் மெய்நிகர் பங்கேற்ற ரமா சுரேஷ்.

இந்த நிகழ்ச்சி முடிந்ததும் ஒரு டீ அடித்துவிட்டு, ஆசிய நாகரிக அரும்பொருளகத்தின் நிலவறை அரங்கத்தில் ‘கவிமாலை’ அமைப்பின் ஒருங்கிணைப்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ‘கவிதை எனில், நாடகம்?: எம். டி. முத்துக்குமாரசாமியுடன் ஓர் உரையாடல்’ நிகழ்ச்சிக்குச் சென்றேன். எம்டிஎம்மின் கவிதை ஒன்றை ஒலிக்கவிட்டு அதற்கேற்ப ராணி கண்ணா நிகழ்த்திய தனி நடிப்பு அங்கத்துடன் நிகழ்ச்சி தொடங்கியது. அதைத்தொடர்ந்த எம்டிஎம்மின் உரை அபாரம்.

எப்படிப்பட்ட அம்சங்கள் கொண்ட கவிதைகள் நாடகமாகலாம், அவற்றின் வெளிப்பாட்டு வடிவ சாத்தியங்கள், அடிமைகளின் எதிர்ப்புணர்வுகளைக் உணர்வெழுச்சிகளில் கரைத்து நீர்க்கச்செய்யும் நோக்கில் அமைந்த அரிஸ்டாட்டிலியன்வகை (சிக்கல்-உச்சம்-வீழ்ச்சி) அமைப்பிலிருந்து மாறித் தன் நாடகங்களை உச்சத்தில் தொடங்கி மெல்ல வீழ்ச்சிபெற்று இறுதியில் கேள்விகளை எழுப்புவதாக முடியும்படி அமைப்பது எனத் தொன்மங்கள், வரலாறு, கலைவடிவங்களைத் தொட்டு நீண்ட ஆற்றொழுக்கான உரை. எழுத்துவடிவில் வெளியிடப்பட்டால் மேலும் பலரைச் சென்றடையும்.

உரை முடிந்ததும் வடிவழகன், செல்வா, ராணி கண்ணா, எம்டிஎம் பங்கேற்ற உரையாடல் இடம்பெற்றது. உங்கள் கலை போராட்ட குணமுடையதா மகிழ்விக்கும் நோக்கில் அமைவதா என்ற வடிவழகனின் கேள்விக்கு, போராட்ட குணமும் மகிழ்விக்கும் நினைவுகளும் ஒரே கலைவடிவத்திற்குள் இயல்பாக வந்து அமையலாம் என்பதை விளக்கி எம்டிஎம் பதிலளித்ததை மிகவும் ரசித்தேன். ஆனால் ஆழமான சிந்தனைகளுடன் கூடிய விரிவான விளக்கங்கள் அனைவருக்கும் உவப்பதில்லை என்பதை முன்வரிசை முணுமுணுப்புகள் காட்டின. என் கவனத்தையும் அது சிதறடித்தது. உவக்கவில்லை என்றால் எழுந்து சென்றுவிடுவது பிறருக்கு(ம்) நலம்பயக்கும் என்பதைப் பார்வையாளர்கள் அவசியம் கவனத்தில் கொள்ளவேண்டும்.

(இடமிருந்து வலமாக) ச. வடிவழகன், ராணி கண்ணா, செல்வா, எம்.டி. முத்துக்குமாரசாமி

கலந்துரையாடல் முடியும்வரை இருக்கவியலாத ஒரு சூழலில் இரவு 8 மணியளவில் நான் அங்கிருந்து கிளம்பினேன். வெளியே சென்ற எனக்கு இரவுணவைக் கையில் கொடுத்து உபசரித்து அனுப்பினர் விழா ஏற்பாட்டாளர்கள். அரங்கத்தைவிட்டு வெளியேறியதும் செவிக்கு உணவில்லாத அச்சூழலை வயிறு வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொண்டது. ஒருநாள் முழுதும் கலைசார்ந்த சிந்தனைகளில் கழிந்தது சிறப்பான அனுபவமாக அமைந்தது. இந்தவார, அடுத்தவார இறுதிகளிலும் ஒருநாள் ஒதுக்கவேண்டும் என்று நினைத்துக்கொண்டேன்.

வழக்கமாக இலக்கிய நிகழ்சிகளில் பங்கேற்கும் அன்பர்களைக்கூடப் பலரையும் இந்த வார இறுதியில் காணமுடியவில்லை. ஊரில் இல்லையா அல்லது பெருந்தொற்றுக்குப்பிறகு நேரடி நிகழ்ச்சிகளின் மீதான ஈர்ப்பு பட்டுப்போய்விட்டதா என்று யோசித்தபடி வீடுவந்து சேர்ந்தேன். அடுத்தவார இறுதியிலும் பல அருமையான நிகழ்ச்சிகள் தமிழிலும் ஆங்கிலத்திலும் இடம்பெறவுள்ளன. நாம் ஆதரவளிக்க வேண்டும், இன்புற வேண்டும், பண்பாட்டு ஊடாட்டங்களையும் முடிந்தவரை அதிகரிக்க வேண்டும். இது சிங்கப்பூரில் வசிப்பவர்களுக்குக் கிடைத்திருக்கும் அரிய வாய்ப்பு.

***

படங்கள் நன்றி: மஹேஷ், இன்பா, ஷாநவாஸ், ஆயிலிஷா