நினைவுக் குறிப்புகள் எழுதுவது பிற அல்புனைவு வடிவங்களைக் காட்டிலும் இலகுவானது. காலவொழுக்கோ நெருக்கமான தொடர்ச்சியோ பேணவேண்டியதில்லை. தொடக்கத்திற்கும் முடிவுக்குமிடையே தொடர்போ சீர்மையோ இருந்தாகவேண்டிய கட்டாயமில்லை. தன்னளவில் முழுமைகொள்ளவேண்டிய அவசியமுமில்லை. என்ன காரணத்தினால் ஒரு நினைவு, காலத்தில் கரைந்துவிடாமல் தனக்குள் தங்கியிருக்கிறது என்பதை வாசிப்பவர் உணர்ந்துகொள்ளும்படி எழுதினாலே போதும். மற்றபடி ‘சித்தம் போக்கு சிவம் போக்கு’. இப்படி எனக்குள் உருவாகியிருந்த ஒரு கருத்தைச் சுக்குநூறாக உடைத்தது அண்மையில் வாசித்த ‘நடைவழி நினைவுகள்’ நூல்.

சி.மோகன் எழுதிய, நவீனத் தமிழிலக்கிய ஆளுமைகள் குறித்த, இக்கட்டுரைத் தொகுப்பு அதன் பெயரே உணர்த்துவதுபோல ஒரு நினைவுக்குறிப்பு நூல்தான். க. நா.சுப்ரமண்யம் (க.நா.சு.), சி.சு.செல்லப்பா, ப.சிங்காரம், தி.ஜானகிராமன், நகுலன், ஜி.நாகராஜன், சார்வாகன், சுந்தர ராமசாமி, அசோகமித்திரன், மா.அரங்கநாதன், வெங்கட் சாமினாதன், ந.முத்துசாமி, தருமு சிவராம் (பிரமிள்), எஸ்.சம்பத், பிரபஞ்சன், கோபிகிருஷ்ணன் ஆகிய 16 இலக்கிய ஆளுமைகளுடன் பழகிய தனது அனுபவங்களைத் தொட்டுக்கொண்டு அவர்களின் ஆளுமையைச் சித்திரித்துக்காட்டவும், ஒவ்வொருவரின் ஒட்டுமொத்த இலக்கியப் பங்களிப்பைப் பருந்துப் பார்வையிடவும், நட்பைத் தள்ளிவைத்து எடைபோடவும் செய்திருக்கும் சி.மோகனின் இக்கட்டுரைகள், இவ்வளவு செறிவாக எழுதினாலும் ஓட்டமும் சுவாரஸ்யமும் குன்றாமல் எழுதவியலுமா என்கிற பிரமிப்பை அளிக்கின்றன.

இக்கட்டுரைகள் அனைத்துமே ‘இந்து தமிழ் திசை’ நாளிதழின் நடுப்பக்கத்தில், வாரம் ஒரு கட்டுரை என்கிற கணக்கில், ஓர் ஆளுமைக்கு நான்கு கட்டுரைகள் என்று திட்டமிடப்பட்டு எழுதப்பட்டவை. இந்த ஏற்பாட்டில் பல நெருக்கடிகள் உள்ளன. நடுப்பக்கக் கட்டுரை என்பதால் சொற்கள் எண்ணிக்கை துல்லியமாக அமையவேண்டும். ஓர் ஆளுமைக்கு நான்கு கட்டுரைகள் என்றாலும் ஒவ்வொரு கட்டுரையும் அவ்வாளுமையைச் சரியானபடி உள்வாங்கிக்கொள்ள ஏதுவாக அமைவதோடு தன்னளவில் முழுமையும் பெற்றிருக்க வேண்டும். அதேவேளையில் நான்கையும் தொடர்ச்சியாக வாசிப்பவருக்குப் பெரிய அளவில் கூறியதுகூறல் இருக்கலாகாது. நினைவுக் குறிப்பு எழுத்து அளிக்கும் சுதந்திரங்களாக முன்னர் குறிப்பிட்டவை அனைத்தும் இக்கட்டுப்பாடுகளில் அடிபட்டுப்போவதைக் காணலாம். ஆனாலும் அனைத்தையும் எதிர்கொண்டு தடைக்கற்களையே படிக்கற்களாக்கி எழுதி இருக்கிறார் சி.மோகன்.

“இத்தொடரின்வழி எளிமையும் செறிவும் கூடிய ஓர் அழகிய நடையைக் கண்டடைய முடிந்தது நான் பெற்ற பெரும்பேறு” என்று ‘என்னுரை’யில் அவர் எழுதியிருக்கும் ஒரு வரி அதன் முற்பாதியில் உண்மையையும் பிற்பாதியில் பெருந்தன்மையையும் காட்டுகிறது.

இத்தொகுப்பின் கட்டுரைகளை வாசிக்கும்போது இலக்கிய ஆளுமைகளின் சுபாவங்களும் உக்கிரங்களும் அளித்த அளவுக்கே சி.மோகனின் எழுத்துமுறையும் சொற்சேர்க்கையும் அணுகுமுறையும் வியப்பளித்தன.

“‘மானுடம் வெல்லும்’ என்பதைத் தன் படைப்புக் குரலாகவும், ‘வானம் வசப்படும்’ என்பதைத் தன் கலை நம்பிக்கையாகவும் கொண்டியங்கிய படைப்பு சக்தி” என்பது பிரபஞ்சனைக் குறித்த கட்டுரையின் அறிமுகவரி. பிரபஞ்சனின் மானுடம் வெல்லும், வானம் வசப்படும் ஆகிய இரு நாவல்களின் பெயர்களைக்கொண்டு சாதுரியமாக எழுதிவிட்டார் என்பதைவிட, அவ்விரண்டு படைப்புகளையுமே தன்னுடைய மதிப்பீட்டில் பிரபஞ்சனின் உச்சமான படைப்பூக்கம் வெளிப்பட்டவைகளாக சி.மோகன் கருதுகிறார் என்பதைக் கவனிக்கும்போது ஒவ்வொரு வரியையும் சிற்பம்போலச் செதுக்குகிறார் என்பது உறைக்கிறது.

நெருக்கம், கொண்டாட்டம், இடைவெளி, விலகல் என்று ஆளுமைகளுடனான தனது பழக்கம் பல்வேறு கட்டங்களை அடையும்போதும் அததற்கான காரணங்களை அவரவர் நியாயங்களுடன் மதிப்பீட்டுத் தொனியின்றி ‘அப்படித்தான் நடந்தது’ என்பதுபோல எழுதிச்செல்வது சி.மோகனின் முக்கியமான சிறப்பம்சங்களுள் ஒன்று. அதிலும் சுந்தர ராமசாமியுடனான தன் நெருக்கமான அனுபவங்களை அற்புதமாக விவரித்து எழுதிவிட்டு, கட்டுரையின் இறுதியில், “அஞ்சலி நாளன்று வந்திருந்த பல எழுத்தாளர்கள் … அனேகமாக ஒவ்வொருவருமே மற்ற எவரையும்விடத் தனக்குத்தான் சு.ரா. மிக நெருக்கமானவர் என்ற அலாதியான உணர்வோடு கலங்கிக்கொண்டிருந்தார்கள்” என்கிற வெளியிடும் அவதானிப்பு அவரை மேலும் உயர்த்துகிறது.

இலக்கிய ஆளுமைகள் கொண்டிருந்த கொந்தளிப்புகளையும் வினோதமான சுபாவங்களையும் காட்ட சி.மோகன் தேர்ந்தெடுத்துள்ள சம்பவங்களும், ‘தகிக்கும் படைப்பு மனம்’ போன்ற பொருத்தமான தலைப்புகளோடு அவற்றைப் பதிவுசெய்துள்ள விதமும் மேதமையைக் காட்டுகிறது. ‘இடைவெளி’ நாவலை எழுதிய எஸ்.சம்பத், அதை செம்மைப்படுத்த சி.மோகனுடன் உட்கார்ந்தபோது, ‘சாவு என்பது இடைவெளி’ என்று நாவலில் வரும் இடத்தில், “எவன் இதைச் சொல்லியிருக்கான். இதுக்கே நோபல் பரிசு தரணும்” என்று ஆவேசமாகத் தரையில் குத்தியதை எழுதியிருக்கும் இடம் ஓர் எடுத்துக்காட்டு. சாவை எளிமையாகப் படைப்பூக்கத்துடன் விளக்கிவிடும் நோக்கில் எப்போதும் உழன்றுகொண்டிருந்த சம்பத் ‘இடைவெளி’ நாவலில் அதைச் சாதித்திருக்கிறார் என்பது சி.மோகனின் கருத்து.

இலக்கிய ஆளுமைகள் ஒரே விஷயத்தை அவர்களின் இயல்புகளுக்கேற்ப எவ்வாறு வெவ்வேறு விதமாக எதிர்கொள்கிறார்கள் என்பதை இக்கட்டுரைகளில் காணமுடிவது சிறப்பான அனுபவம். நாற்பதாண்டுகள் ஒரே அலுவகத்தில் ஒரேவேலையை மகிழ்ச்சியாவே செய்யமுடிந்ததாகக் குறிப்பிடும் மா.அரங்கனாதனிடம் துளிர்த்துச் செயல்படும் அதே கலைமனம்தான் படைப்பூக்கமற்ற எழுத்துப்பிழை திருத்தும் பணியைப் பிழைப்புக்காக நாற்பது நிமிடம்கூடத் தொடர்ந்து செய்யமுடியாத பிரபஞ்சனிடமும் செயல்பட்டுள்ளதை அவர்களைக் குறித்த கட்டுரைகளிலிருந்து காணமுடிகிறது. பல வண்ணங்களில் பேனாக்கள் வைத்துக்கொண்டு பிழைதிருத்தத்தின்போது அவற்றை மாற்றிக்கொள்வதன்மூலம் அதில் ஒரு ‘படைப்பூக்கத்தை’க் கொண்டு வந்து சமாளிக்க முயன்றிருக்கிறார் பிரபஞ்சன்!

புகை, போதை இவற்றை ஒழுக்க அடிப்படையில் அறவே தவிர்த்தவர் பிரமிள், அவற்றை மட்டுமே உணவாக உட்கொண்டவர் ஜி.நாகராஜன். எதிரும் புதிருமான தன்மைகள் கொண்டவர்களிடம் இலக்கியம் முயங்கிய விதங்களும் தனிப்பட்ட ஊடாட்டங்களும் சி.மோகனின் எழுத்துகளில் செழிப்பாக வந்துள்ளன.

தன்னுடைய வாசிப்பின் விரிவைக் காட்டுவதற்காகத் தேவையற்ற இடங்களிலும் மேற்கோள்களை அள்ளித்தெளிக்கும் பழக்கம் சி.மோகனிடம் அறவே இல்லாதது பெருத்த ஆசுவாசத்தை அளிக்கிறது. அரிதினும் அரிதாக இடம்பெற்றுள்ள மேற்கோள்கள் அரிதினும் அரிய பார்வைகளைக் கொண்டிருக்கின்றன. எடுத்துக்காட்டாக, டி.எச்.லாரன்ஸின் Why the Novel Matters என்ற கட்டுரையிலிருந்து மொழிபெயர்த்து அவர் அளித்திருக்கும் கீழ்க்கண்ட மேற்கோள் அக்கட்டுரையைத் தேடிவாசிக்க எவரையும் உந்தக்கூடியது:

“பிளாட்டோவின் உரையாடல்கள் வினோதமான சிறிய நாவல்கள். தத்துவமும் புனைகதையும் பிரிந்தது, இவ்வுலகின் மிகப்பெரிய சோகமாக எனக்குப்படுகிறது. இரண்டும் ஒன்றாகத்தான் புராணக்கதைக் காலங்களிலிருந்து உருவாகி வந்திருக்கின்றன. அரிஸ்டாடில், தாமஸ் அகின்னஸ் போன்றவர்களால் இவை, ஒருவர்மீது ஒருவர் குற்றம் கண்டுபிடித்துத் தொல்லைப்படுத்திக்கொண்டே இருக்கிற தம்பதிகளைப்போல, தனித்தனியே பிரிந்துபோயின. இதன் காரணமாக, நாவல் மேலோட்டமானதாகவும் தத்துவம் அருவமானதாகவும் வறண்டுபோயின. நாவலில் இவ்விரண்டும் மீண்டும் இணைந்து வரவேண்டும்.”

படைப்புகளை மதிப்பிடும்போது சி.மோகனின் பார்வைகள் தனித்துவமிக்கவைகளாக மிளிர்கின்றன. மா.அரங்கனாதன் கதைகளில், “வெவ்வேறு பின்புலங்களில் வெவ்வேறு பாத்திரங்களாக” ‘முத்துக்கறுப்பன்’ என்ற ஒரேபெயர் வருவதைச் சுட்டிக்காட்டி, “ஒரே பெயர்தான். ஆனால் ஒரே நபரல்ல. ஒரே மன அமைப்பு கொண்டவருமல்ல. அவர் ஒரு கூட்டு நபர். கூட்டு மன உருவகம். தொன்மமான தமிழ்ச் சமூகத்தின் கூட்டு மன வெளிப்பாடு” என்கிறார்.

சார்வாகனின் “‘கனவுக் கதை’ ஓர் அலாதியான புனைவுக் கண்டுபிடிப்பு. … எது யதார்த்தம் எது கனவெனப் பிரித்தறிய முடியா மாயத்தன்மை கொண்டது. இக்கதை அவரது கலைக்கண்டுபிடிப்பு” என்கிறார். கலைக் ‘கண்டுபிடிப்பு’ என்று சி.மோகன் அழுத்திச் சொல்வதற்குக் காரணம், சார்வாகன் என்கிற புனைப்பெயரில் எழுதிய ஹரிஹரன் ஶ்ரீநிவாசன் ஒரு மருத்துவ மேதை. தொழுநோயாளிகளுக்கான அவரது அறுவைசிகிச்சை முறை ஓர் உலகப்புகழ் பெற்ற கண்டுபிடிப்பு!

ப.சிங்காரத்தின் எழுத்துகளைக் கண்டுபிடித்து தமிழுலகுக்கு அவரை மீளறிமுகம் செய்த பெருமை சி.மோகனையே சேரும் என்று பலரும் குறிப்பிடுவதுண்டு. சிங்காரமும் அப்படி சி.மோகனை சந்திக்குந்தோறும் சொல்வாராம். அவரை எப்படியாவது மீண்டும் எழுதவைக்கவேண்டும் என்று சிறுகதை கேட்டபோது மறுத்துவிட்டாராம். மதுரையின் மாற்றங்களைக் குறித்த ஒரு கட்டுரையாவது எழுதுங்கள் என்று வற்புறுத்திப் பெற்ற கட்டுரை “அவரது அவதானிப்புகளின் சுவாரஸ்யத்தை இழந்திருந்தது” என்பதால் தான் வெளியிடவில்லை என்கிறார் சி.மோகன். அப்படியாக எது கலைப்படைப்பு என்பதைக் குறித்த தனிப்பட்ட, தீர்க்கமான பார்வைகள் இருந்தவர் என்பதால்தான் கூர்மையாக மதிப்பிட இயல்கிறது.

சுந்தர ராமசாமியின் கலைநேர்த்தியை வியந்த அதேகாலகட்டத்தில் அவரது கவிதையில் உணர்வெழுச்சி இல்லை என்று அவர் முன்னிலையிலேயே கருத்துத் தெரிவிக்கவும் அதற்கு பதிலளித்த சு.ரா.வின் பேச்சை மீண்டும் ரசிக்கவும் இயன்றதே சி.மோகனின் ஆளுமைச் சிறப்பு. சிங்காரத்தின் எழுத்துகளை சுந்தர ராமசாமி, வெங்கட் சாமினாதன், பிரமிள் எனப் பேராளுமைகள் நிராகரித்த பின்னரும் தன் பார்வைகளை சி.மோகன் மாற்றிக்கொள்ளவில்லை. அதேநேரத்தில் அவர்கள் மூவரின்மீது விலக்கமும் கொள்ளவில்லை.

அரசியல் எனபது காந்தியோடும் இலக்கியம் என்பது ‘எழுத்து’ காலத்தோடும் நின்றுவிட்டதாக சி.சு.செல்லப்பா கருதுவதை அவரது பேச்சுகளில் உணர்ந்தபோது அதற்கு மறுப்புத் தெரிவிக்கும் இளைஞனாகவும் அதேவேளையில் அப்படிப்பட்ட பார்வையுள்ள ஒருவரைக் குறைத்து மதிப்பிடும் அவசரமோ அவசியமோ இன்றி அனைத்தையும் சேர்த்துப் பார்க்கும் கண்களுடனும் சி.மோகனின் ஆளுமை விரிகிறது.

எழுத்தாளர் யூமா வாசுகி வெளியிட்ட ‘குதிரைவீரன் பயணம்’ சிற்றிதழில் வெளிவந்த சி.மோகன் சிறப்பிதழில் (ஜூன் 2016), சி.மோகனின் ஆளுமையை முழுமையாகப் படம்பிடிக்கும் கட்டுரைகள் வெளியாகியுள்ளன.

இவ்விதழில் யூமா வாசுகி சி.மோகனைப் பற்றி எழுதும்போது,

“கலை என்பது மனிதத்தின் பேரர்த்தங்களில் ஒன்று என்று அவர் கனிந்து தணிந்து மொழிந்தபோது என் ஆன்மாவில் ஒரு அசரீரி ஆம் என்று ஒலித்தது. வெவ்வேறு கோணங்களில் வந்து ஒளியால் நிலம் தழுவும் கிரணங்களைப்போல ‘கலை நம்பிக்கை’ என்ற ஒரு தரிசனத்தை அவர் முன்வைத்துக்கொண்டே இருந்தார். இன்றும் அதுதான் அவரின் உள்ளும் புறமுமாக இருக்கிறது. அவரது ஜீவாதாரமாக இருக்கிறது. அது அப்பழுக்கற்ற ஒரு உண்மையாக அவரிடத்தில் எளிதே நிலைபெற்றிருக்கிறது. நான் அதிலிருந்துதான் என் கைவிளக்கை சமைத்துக்கொண்டேன்”

என்கிறார்.

அச்சொற்களின் பொருளை ‘நடைவழி நினைவுகள்’ நூலின் ஒவ்வொரு கட்டுரையிலும் ஒவ்வொரு பத்தியிலும் வரியிலும் காணமுடிகிறது. இந்த நூலில் வரும் 16 இலக்கிய ஆளுமைகளும் சி.மோகன் என்கிற மற்றோர் இலக்கிய ஆளுமையின்மீது பட்டுத் தெறிக்கின்றனர். அப்பிரதிபலிப்புகள், சி.மோகன் அடிக்கடிப் பயன்படுத்தும் ஒரு சொல்லில் சொன்னால் ‘பெறுமதி’யானவை. இலக்கிய ஆர்வலர்கள் தவறவிடக்கூடாத நூல்!

***

நடைவழி நினைவுகள்

சி.மோகன்

இந்து தமிழ் திசை வெளியீடு, 2020