சிங்கப்பூர் எழுத்தாளர் விழா 2022 (04/11 – 20/11) நிகழ்ச்சிகள் இரண்டில் இன்று கலந்துகொண்டேன். முற்பகலில் ‘Be Like the Cool Kids: Teen Identity in Fiction‘ என்ற கலந்துரையாடல் நிகழ்ச்சி. தேசியக் கலைக்கூடத்தில் நடந்தது. பதின்ம வயதினருக்கான புனைவுகள் படைக்கும் எழுத்தாளர்கள் மூவரிடம் – இருவர் சிங்கப்பூரர், ஒருவர் ஆஸ்திரேலியர் – அவர்களுடைய சொந்த, எழுத்து அனுபவங்களிலிருந்து பதின்ம வயதினரின் அடையாள உருவாக்கம், அது சக மாணவர்களால் பார்க்கப்படும், ஏற்கப்படும் விதம், அது சார்ந்த அழுத்தம், சமூக ஊடாட்டங்கள் என்று அவசியமான புள்ளிகளை சுவாரஸ்யமாக, கலகலப்பாக அலசிய உரையாடல். எதிர்பார்த்தபடியே என்னைவிட என் மகள் ஈடுபாட்டுடன் ரசித்ததைக் கண்டேன். கேள்விகேட்டவர்களும் சரி பதில்சொன்னவர்களும்சரி அவ்வப்போது DM, POV என்று குழூஉக்குறிகளிலேயே பேசியபோது மகளிடம் Direct Message, Point of View என விரிவாக்கங்களைத் தெரிந்துகொண்டேன். நாம் காலாவதி ஆகிக்கொண்டிருப்பதை நாமே கண்முன் காண்பது ஒரு சோகம்தான். ஆனால் உலகம் எப்போதும் அப்படித்தான் என்பதில் ஒரு வரலாற்று ஆறுதல்!

அனிதா தனபாலன், மெலிஸ்ஸா கெய்ல், ஜாய்ஸ் சுவா ஆகிய எழுத்தாளர்களுடன் உரையாடி நெறியாண்டவர் மெலனி லீ. எழுத்தாளர்கள் பதின்ம வயதினராக இருந்தபோது அவர்கள் அடையாளம் சார்ந்து எதிர்கொண்ட சொந்த அனுபவங்களைகேட்டு உரையாடலைத் தொடங்கினார் மெலனி. பிறருடன் பொருந்திப்போகவேண்டும், பிறரின் அங்கீகாரத்தைப் பெறவேண்டும் என்பதில் இயல்பாகத் தொடங்கும் பதின்மவயது துடிப்புகள், வயது ஏற ஏற ஒவ்வொருவரும் ஒருவிதம் என்பதைப் புரிந்துகொண்டு அதற்கேற்ப தகவமைத்துக்கொள்வதாக மாறி அடங்குவதுவரை பகிரப்பட்ட அனுபவங்கள் மிகவும் நெருக்கமாகவும் தொடர்புறுத்திக்கொள்ளும் வகையிலும் அமைந்திருந்தன.

(இடமிருந்து வலமாக) அனிதா தனபாலன், மெலிஸ்ஸா கெய்ல், ஜாய்ஸ் சுவா, மெலனி லீ

ஓரிரு கேள்விகளுடன் முடித்துக்கொண்டு அரங்கிலிருப்போருக்கு வாய்ப்பளித்தார் மெலனி. முதலில் எழுத்து உத்திகளைக் குறித்து ஒரு கேள்வி வந்தது. அடுத்தது நான் இரண்டு கேள்விகள் கேட்டேன்; உங்கள் நாவல்களில் பிரதானமான கதாபாத்திரங்கள் பெண்களாக இருப்பது ஏன்? இதுபோன்ற காதல்கதைகளுக்கு இளம்பெண்கள் மட்டுமே வாசகர்களாக இருப்பது ஏன்? இரண்டாவது கேள்வியில் ஏற்கெனவே ஏற்பட்டிருந்த ‘டஸ்டின் தாவ்‘ அனுபவத்தையும் குறிப்பிட்டேன்.

எழுத்தாளர்கள் மூவருமே விரிவாக, வெளிப்படையாக பதிலளித்தனர். பிரதானமான பாத்திரம் பெண் என்பதில் வேறுபட்ட கருத்துகளை வெளியிட்ட எழுத்தாளர்கள் பெண்களே வாசகர்கள் என்பதை ஒருமித்த குரலில் ஒப்புக்கொண்டனர். பல காரணங்களை முன்வைத்தனர். சாராம்சமாகச் சொன்னால், பதின்மவயதுப் பையன்கள் அறிவியல் புனைவு, அதிரடி ‘ஆக்‌ஷன்’ கதைகளை வாசிப்பதே பொதுப்போக்காக இருப்பதால் அதை ஒட்டியே எழுத்தாளர்கள் எழுதுகின்றனர். நூல் வெளியீட்டாளர்களும் அதையே எதிர்பார்க்கின்றனர். அட்டை வண்ணம்கூட இளஞ்சிவப்பு, ஊதா என்று பெண்கள் வண்ணமாக அறியப்படும் வண்ணங்களிலேயே அமைக்கவேண்டியுள்ளது. ஆகவே விருப்பமிருந்தாலும் அத்தகைய புத்தகத்தை ஒரு பையன் எடுத்து வாசிக்கத் தயங்குகிறார் அல்லது வாசிப்பதை வெளியே காட்டிக்கொள்வதில்லை. ஒருவகையில் பையன்கள் இவற்றைப் படிப்பதில்லை என்பதைவிட பையன்களின் கைகளுக்கு இத்தகைய புத்தகங்கள் சென்றுசேராமல் நாம் பார்த்துக்கொள்கிறோம் என்பதே உண்மை என்றனர். வாசிப்புப் பழக்கமே இல்லாதிருந்த நண்பர் (ஆண், இளையர்) ஒருவர் இத்தகைய காதல் கதைகளை யதேச்சையாக வாசிக்க ஆரம்பித்து இன்று தீவிர வாசகராக மாறிய அனுபவத்தை ஜாய்ஸ் பகிர்ந்தார்.

பதின்மவயதுப் பெண்களாகத் தோற்றமளித்த இளையரும் கேள்விகள் பின்னியெடுத்தனர். இளம்பெண்கள் என்றாலே ஏன் எப்போதும் ‘பாய்ஃபிரண்ட்’ சிந்தனையில் இருப்பதைப்போலவே கதைகளை அமைக்கிறீர்கள் என்பதுமுதல் பாலுணர்வு சார்ந்த அடையாளங்களை எழுதுவதில், வெளியிடுவதில் உள்ள நடைமுறைச் சிக்கல்கள்வரை கூர்மையாகக் கேட்டனர். எழுத்தாளர்களும் சுற்றிவளைக்காமல் நேரடியாகத் தங்கள் அனுபவங்களிலிருந்து எடுத்துக்காட்டுகளை முன்வைத்து பதிலளித்தனர். ஆசிய சமூகங்களிலும்சரி சிங்கப்பூரிலும்சரி பார்வைகள் தொடர்ந்து மாறிவருவதைச் சுட்டிக்காட்டி நம்பிக்கையுடன் செயல்படலாம் என்றனர். இறுதியாக இளம் எழுத்தாளர்களுக்காகச் சில சொற்கள் வேண்டப்பட்டபோது, எழுத்தாளராக ஓரளவுக்குப் பெயர்போடுவதற்கேகூட தேவைப்படும் அதீத உழைப்பு, தியாகம், தொடர் ஓட்டம், இற்றைப்படுத்தல், புத்தாக்கம் ஆகியவற்றை கவனப்படுத்தியதோடு அவசரப்பட்டு சம்பளம் தரும் வேலையை விட்டுவிடவேண்டாம் என்றும் எச்சரித்தனர். எல்லாக் கஷ்டங்களும் அச்சில் புத்தகத்தைக் கண்டவுடன் மறைந்துவிடும் மாயத்தையும் அவர்கள் குறிப்பிட மறக்கவில்லை.

இந்த நிகழ்ச்சி நடந்த அதே நேரத்தில் தாமஸ் ஹிட்டோஷி புரூக்ஸ்மாவின் ‘செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம்’ நிகழ்ச்சியும் நடந்ததால் ஆர்வமிருந்தும் அதில் கலந்துகொள்ள இயலாமற் போய்விட்டது. அபாரமான நிகழ்ச்சி என்றனர் கலந்துகொண்ட சில நண்பர்கள். நேற்றும் தாமஸின் ஔவையார் குறித்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இயலவில்லை. அக்குறைகளை இன்று பிற்பகலில் கலந்துகொண்ட ‘School of Kural: Thirukkural’s Place among World Philosophies of Wisdom‘ நிகழ்ச்சி போக்கியது. திருக்குறளைக் குறித்து தாமஸ், முனைவர் அசார் இப்ரகீம், தெக் செங் சோவ் மூவரும் பேசிய இந்நிகழ்ச்சியை லதா நெறியாண்டார். தாமஸ் திருக்குறளைத் தமிழிலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர். தமிழ்நாட்டில் சில ஆண்டுகள் வாழ்ந்து தமிழ்கற்ற அமெரிக்கர். அசார் இப்ரகீம் மலாய் மொழியில் குறளை அறிந்துகொண்டவர். தெக் செங் சீன மொழியில் 1960களில் செய்யப்பட்ட ஒரு திருக்குறள் மொழிபெயர்ப்பை முன்வைத்தும் சீனத் தத்துவங்களுடன் குறளை ஒப்பிட்டும் பேசினார்.

(இடமிருந்து வலமாக) லதா, தாமஸ் ஹிட்டோஷி புரூக்ஸ்மா, தெக் செங் சோவ், முனைவர் அசார் இப்ரகீம்

குறள் ஆங்கில, சீன, மலாய்க் குரல்களில் ஒலித்ததைக் கேட்டதே தனி அனுபவம். மலாய் மொழியில் சந்தநயங்கள் அதிகமாகப் பயன்பாட்டில் உள்ளவை என்பதால் பெரிய சவால்கள் ஏதுமின்றியே ஓசை நயத்துடன் குறள் மொழிபெயர்ப்பு அமைந்துவிட்டதைச் சுட்டிக்காட்டிய அசார், மலாய் இளையர்கள் இதற்கு சொல்லிசை (ராப்) அமைத்துவிடுவார்கள் என்றார்! தாமஸின் மொழிபெயர்ப்பும் முடிந்தவரை ஓசைநயத்தை, ஒரே சொல் மீண்டும் மீண்டும் வரும் குறட்பாக்களில் அதேபோல ஆங்கிலத்திலும் வருவதை மனதிற்கொண்டு அமைந்துள்ளது என்பதை அவரது எடுத்துக்காட்டுகள் காட்டின. மேலும் ‘என்ன’ சொல்லப்படுகிறது என்பதும், ‘எப்படி’ சொல்லப்படுகிறது என்பதும் மேலை தத்துவத்தின் பார்வையில் வெவ்வேறானவை என்றாலும் அவை பிரிக்கமுடியாதபடி இரண்டறக் கலக்கின்றன என்பதைக் குறள் மொழிபெயர்ப்பில் தான் உணர்ந்துகொண்டதாகத் தாமஸ் குறிப்பிட்டார். அவ்வாறு உணர்வதற்கு அடிப்படையான காரணங்களாக மனனம் செய்வதற்கு ஏதுவாக வடிவம் அமைவதால் உண்டாகும் விளைவுகள், தர்க்கபூர்வ சிந்தனையிலிருந்து மொழிவழி விளையும் படிமச் சிந்தனை மாறுபடுவது போன்ற ஆழமான கருத்துகளை முன்வைத்தார்.

ஒவ்வொரு கேள்விக்கும் பத்து விநாடிகள் கண்களை மூடி தலையை அண்ணாந்து பிறகு இயல்பாகி விடையிறுக்கும் தாமஸின் மென்மையான ஆனால் தீர்க்கமான குரலில் வள்ளுவரின் குறள் மட்டுமின்றிக் குரலும் ஒலிக்கிறது. நிகழ்ச்சியில் கேட்பதற்கு நேரமின்றிப் போனதால் வெளியே வந்ததும் தாமஸிடம், “எந்த அதிகாரத்தை வாசிக்கிறோமோ அதற்கேற்ப வள்ளுவர் ஒரு மருத்துவராகத்தான் இருந்திருக்கவேண்டும், விவசாயியாகத்தான் இருந்திருக்கவேண்டும், அரச ஆலோசகராகத்தான் இருந்திருக்கவேண்டும் என்றெல்லாம் நினைக்கத் தோன்றுகிறது. உங்களுக்கு அப்படிக் குறிப்பாக ஏதும் தோன்றியிருக்கிறதா?” என்று கேட்டேன். அவர் சிரித்துக்கொண்டே “வள்ளுவர் பேச்சுக்கலையிலும் மனோதத்துவத்திலும்கூட நிபுணராக இருந்திருக்கவேண்டும்” என்றார். சொல்வன்மை, ஊடலுவகை அதிகாரங்களிலிருந்து எடுத்துக்காட்டுகள் சொன்னார். அதன்பிறகு கோப்பிக்கடையில் நண்பர்களின் கேள்விகளும் கருத்துகளுமாக தாமஸுடன் நீண்ட இரண்டுமணிநேர உரையாடலுக்குப்பின் இவரது திருக்குறள் மொழிபெயர்ப்பை முழுமையாக வாசித்துவிட வேண்டியதுதான் என்று நினைத்துக்கொண்டேன்.

சிங்கப்பூர் எழுத்தாளர் விழா இன்று நிறைவடைந்துவிட்டது. இவ்வாண்டு, குறிப்பாக வார இறுதிகளில், ‘எனில்’ என்ற கருப்பொருளை ஒட்டி அமைக்கப்பட்ட நிகழ்ச்சிகளும் ஆர்வலர்கள் பங்கேற்க வசதியான திட்டமிடலும் மிகச்சிறப்பாக இருந்தன. அமைப்பாளர்களுக்கு மனமுவந்த பாராட்டுகள்!

***