கடந்த ஆண்டு (2021) தொடக்கத்தில் சிங்கப்பூரின் சில புதிய இலக்கிய, இதழியல் முயற்சிகளைக் குறிப்பிட்டு எழுதிய ஒரு கட்டுரையில் இவ்வாறு குறிப்பிட்டிருந்தேன்:

சிங்கையின் இலக்கிய அமைப்புகள் பலவிதமான பயிற்சிப் பட்டறைகள், போட்டிகள், உரையாடலுக்கான சந்திப்புகள் ஆகியவற்றைப் பலகாலமாக நடத்திவருகின்றன. அவற்றுள் சில புத்தக வடிவிலோ அல்லது பதிவு செய்யப்பட்டு இணையத்திலோ வரும். பல வராமலும் போகும். அந்தவகையில் இவையனைத்தும் முதன்மையாக அப்பட்டறைகளில், போட்டிகளில், சந்திப்புகளில் கலந்துகொள்வோரை மனதிற்கொண்டு செய்யப்படும் முயற்சிகள். இதிலிருந்து வேறுபட்டு ‘கவிமாலை‘ அமைப்பு அண்மைக்காலத்தில் சில சீரிய முயற்சிகளை உலகளாவிய தமிழிலக்கிய ஆர்வலர்களுக்கு இணையத்தின் வழியாகப் படைத்துவருகிறது.

சிங்கைக் கவிஞர்கள் 30 பேரைக் குறித்து ஒவ்வொரு பகுதியும் 3-4 நிமிடம் நீடிக்கும்படி ‘வரலாறும் வரிகளும்‘ என்ற தலைப்பில் வெளியிட்ட ஆவணப்படங்கள். சுருக்கமான வாழ்க்கை வரலாறு, படைப்புகள் குறித்த அறிமுகம், சில ஒளிப்படங்கள் என நேர்த்தியாகத் தயாரிக்கப்பட்ட ஆவணங்கள் இவை. அடுத்ததாக ‘சென்றிடுவீர் எட்டுத்திக்கும்‘ என்ற தலைப்பில் சுமார் 20 சிங்கப்பூர்க் கவிதைகளை ஒவ்வொன்றும் 1-2 நிமிடத்தில் வாசிக்கப்பட்டு வெளியிடப்பட்டன. இதில் சிறப்பு என்னவென்றால் தங்கமுனை விருதுபெற்ற இக்கவிதைகள் அனைத்தும் சீன, மலாய், ஆங்கில மொழிகளிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்ப்பு செய்யப்பட்டவை. சிங்கைத் தமிழ் இலக்கிய உலகுக்குப் பிற மொழிகளின் நடப்பை வெளிக்கொணர்ந்த பதிவுகள் இவை. ஓரிரு நிமிடங்களே நீளும் நிகழ்ச்சி என்றாலும் மொழிபெயர்ப்பு, சொற்களுக்கேற்ற படங்கள், ஒலிப்பதிவு, பின்னணி இசை என்று மிகுந்த உழைப்பைக்கோருபவை.

அண்மையில் தொடராக ஆரம்பிக்கப்பட்டு இன்னும் வெளிவந்துகொண்டிருக்கும் இன்னொரு காணொலி வரிசை ‘சிற்றிலக்கியச் சீர்‘. இதுவரை 16 வலையுரைகள் வெளியாகியுள்ளன. இவை ஒவ்வொன்றும் சராசரியாக 30 நிமிடங்கள் நீளும் உரைகள். பழந்தமிழிலக்கிய ஆர்வலர்களுக்குக் கொள்ளை. சிற்றிலக்கியங்கள் குறித்து இதுவரை அறிந்திராதோர் அவசியம் கேட்கவேண்டிய உரைகள். அதிலும் பெருமாள் முருகன், நாஞ்சில் நாடன் போன்ற படைப்பிலக்கியவாதிகள் பழந்தமிழிலக்கியம் குறித்துப்பேசும்போது அது தனித்த சுவையை அடைகிறது. தூது இலக்கியம் எப்படி காலத்திற்கேற்ற வடிவங்களை எடுத்து தற்போது திரைப்படப்பாடல்களிலும் நுழைந்துவிட்டது என்று பெருமாள் முருகன் விவரித்தது ஓர் எடுத்துக்காட்டு.

மேலும், உள்ளூர் இலக்கிய வளர்ச்சிக்கு வழமையான முறைகளில் செயல்பட்டுக்கொண்டே புத்தாக்கமுள்ள இணைய முயற்சிகளிலும் ஈடுபடுவது என்று கவிஞர் இன்பா தலைமையில் கவிமாலையின் இலக்கியப் பயணம் தொடர்ந்து கவனத்திற்குள்ளாகிறது என்றும் எழுதியிருந்தேன்.

அண்மையில் நூலகத்திற்குச் சென்றிருந்தபோது ‘சிற்றிலக்கியச்சீர்: வலையுரைத்தொடர் தொகுப்பு’ என்று தலைப்பிடப்பட்ட நூலைக் கண்டேன். கவிமாலை வெளியீடாக (செப்டம்பர் 2021) இன்பா தொகுத்து வெளிவந்துள்ள இந்நூலில் வலையுரைத் தொடராக வந்த 20 உரைகளும் சிறப்பாகக் கட்டுரையாக்கம் செய்யப்பட்டுத் தொகுக்கப்பட்டுள்ளது. வடிவமைப்பிலும் உள்ளடக்கத்திலும் மிகத்தரமான நூலாக உணர்ந்தேன்.

ஏற்கெனவே வலையுரைகளை நான் கேட்டிருந்தபோதும் நூலாக வாசித்தபோது புதிய தகவல்களை, பார்வைகளைப் பெறமுடிந்தது. எடுத்துக்காட்டாக, நாஞ்சில் நாடனின் கட்டுரையில் சிற்றிலக்கியங்கள் எனப்படும் 96 வகை இலக்கிய வடிவங்களின் பெயர்களையும் பட்டியலிட்டுள்ளார். உரையில் இப்பெயர்களை வரிசையாக வாசிக்க இயலாது ஆனால் நூலாக வெளியிடும்போது அவசியம்.

இன்னொரு எடுத்துக்காட்டு, தசாங்க இலக்கியம் குறித்த முனைவர் பா.ஜெய்கணேஷின் கட்டுரையில் பயன்படுத்தப்பட்டுள்ள அட்டவணை. உரையில் அட்டவணைகளால் பயனில்லை ஆனால் அச்சில் பார்க்கும்போது சடாரென விளங்கிவிடுகிறது. மேற்கோள்களாக வரும் செய்யுள், கவிதை, பாடல் வரிகளுக்கு எழுத்துரு வேறுபாடுகளும் மூலத்தைக் குறித்த குறிப்புகளும் அழகாகவும் தெளிவாகவும் அளிக்கப்பட்டுள்ளன. ஆகவே உரைகளை வெறுமே ‘எழுத்தாக்கம்’ மட்டும் செய்து கடமை தீர்ந்தது என்று போய்விடாமல் ‘கட்டுரையாக்கம்’ செய்து வெளியிட்டுள்ளனர்.

நூலிலுள்ள பல கட்டுரைகள் சுவாரஸ்யமான வாசிப்புக்கு ஏதுவானவை. கருத்துகளும் சிந்திக்கச் செய்பவை. எடுத்துக்காட்டாக, முனைவர் ந. இளங்கோவின் ‘மடல்’ இலக்கியம் குறித்த கட்டுரையில் மடல் எப்படி முதலில் பக்தி இலக்கியத்திற்கு ஏற்றதாக இருந்து பின்னாளில் காமம் சொட்டும் பாடல்கள் இயற்றப்பட்டதால் வீழ்ச்சியடைந்தது, பிற வடிவங்கள் மடலின் அம்சங்களை உள்வாங்கியது என்று சிறப்பான பார்வைகளை முன்வைத்துள்ளார். எழுத்தாளர் விழா 2020-இல் கவிஞர்கள் பெருந்தேவியும் லதாவும் உரையாடிய நிகழ்வொன்றில் மடலூர்தல் குறித்து முன்வைக்கப்பட்ட பார்வை இளங்கோவின் பார்வையிலிருந்து வேறுபட்டிருந்தது. ஆர்வமுள்ளோருக்கு இத்தகைய பல சிந்தனைப் புள்ளிகள் இன்னூலில் கிட்டும்.

பெருமாள் முருகனின் ‘தூது’ இலக்கியம் குறித்த கட்டுரை வாசிப்பவர்கள் தனிப்பாடல்கள் குறித்த அவரது வான்குருவியின் கூடு நூலையும் வாசித்துப்பார்க்கலாம். சில கட்டுரைகள் சுமாராக இருப்பது அந்த இலக்கிய வடிவத்தின் கவர்ச்சியற்ற தன்மையா அல்லது கட்டுரையாசிரியரின் எழுத்துப்பாங்கா என யோசிக்கவைத்தது. ஆயினும் ஏறத்தாழ அனைத்து செய்திகளுமே எனக்குப் புதியவை என்பதால் தொடர்ந்த வாசிப்புக்குத் தொந்தரவாக இல்லை.

கடமைக்காக உரைகளை உரையாடல்களை ஏற்பாடு செய்து அவற்றைச் செம்மைப்படுத்தி வலையேற்றக்கூட விரும்பாமல் காற்றில் கலக்கவிட்டுச் சென்றுவிடும் பொதுப்போக்கிலிருந்து மாறுபட்டுச் செம்மையான வலையுரைத்தொடர், அதனினும் சிறப்பான நூலாக்கம் என்று செயல்பட்டுள்ள இன்பாவுக்கும், கவிமாலைக் குழுவினருக்கும் மனமார்ந்த பாராட்டுகளும் வாழ்த்துகளும்!

***