அன்றாடத்தின் சலிப்பும் அங்கீகாரத்திற்கான அலைக்கழிப்பும் மெல்லமெல்லச் சேர்ந்து – ஒருகட்டத்தில் – நேர்நிலை எண்ணங்கள், உறவுகள், செயல்பாடுகளின்மீது அடிப்படையான ஐயங்களையும் அச்சங்களையும் எழுப்பும்போது காந்தி வாசிப்பைக் கைக்கொள்வது பக்கவிளைவுகள் அற்ற நற்பலன்களையும் மீட்பையும் அளிக்கும் என்பது என் சொந்த அனுபவம்.

கடந்த மாதம் சிங்கப்பூர் எழுத்தாளர் விழாவில் பங்கேற்க வந்திருந்த எழுத்தாளர் சுனில் கிருஷ்ணன் ஒரு காந்திகாரர். அவரது காந்தி உரையாடல் நிகழ்ச்சிக்குச் சென்று திரும்பியபோது அவருடைய நாளைய காந்தி (யாவரும் பதிப்பகம், டிசம்பர் 2021), ஆயிரம் காந்திகள் (நன்னூல் பதிப்பகம், நவம்பர் 2022) இரு கட்டுரைத் தொகுப்புகளை வாங்கி வந்தேன்.

காந்தி வாசிப்பு என்பது நேரடியாக அவரது எழுத்தை, உரையை வாசிப்பதாகவே இருக்கவேண்டும். அவரைக் குறித்துப் பிறர் எழுதுவது அது எவ்வளவு சிறப்பாக இருந்தாலும் ஒரு மாற்றுக் குறைவுதான். ஆயினும் நம் கவனத்திற்கு வராமலே போய்விடக்கூடிய முக்கியமான காந்தி, காந்தியப் பதிவுகளும் வரலாறுகளும் பிறர் எழுதும் நூல்கள் வழியாகக் கிடைக்கலாம். ஆகவே இதுபோன்ற நூல்களை காந்தி வாசிப்புக்கான வழித்துணைகளாகவும் வழிகாட்டிகளாகவும் கொள்ளலாம்.

சுனிலின் அன்புள்ள புல் புல் காந்தி தொகுப்பை நான் 2020-இல் வாசித்திருக்கிறேன். நாளைய காந்தி தொகுப்பு அதற்குப்பின் வெளிவந்தது. ஒன்பது கட்டுரைகளும் ஆழமும் விரிவும்கூடி மணிமணியாக வந்திருப்பதைப் பார்க்கிறேன். விரும்பியோ விரும்பாமலோ தனது அடையாளங்களுள் ஒன்றாக காந்தி ஆகிவிட்டார் என்று கூறும் சுனீல், “எழுத்தாளர் எனும் பீடத்தில் நின்றபடி காந்தியை ஒரு விற்பனைப் பண்டமாகப் பார்க்கிறேனா?” என்ற சுயபரிசோதனையுடன்தான் எழுதத்தொடங்குகிறார். காந்தி மேலிருந்த தொடக்ககாலப் பரவசங்கள் காலப்போக்கில் குறைவதுபோலவும், பிடி நெகிழ்வதுபோலவும், ஒரு புனைவை எழுதி தான் ஒரேயடியாக காந்தியைக் கடந்துபோனாலும் போய்விடக்கூடும் என்றும் தன் உணர்வுகளை அப்படியே பதிவுசெய்திருப்பது அவருக்கு காந்தியுடன் வலுப்பட்டிருக்கும் உள்ளார்ந்த நெருக்கத்தையே காட்டுகிறது.

காந்தியைக் குறித்து இவ்வளவு வாசித்தும் எழுதியும் பேசியும் காந்தியின் தன்வரலாறான ‘சத்திய சோதனை’யை இதுவரை முழுமையாக வாசிக்கவில்லை (சுனில் குறிப்பிடுவது சத்திய சோதனை மலிவுவிலைச் சுருக்கப்பதிப்பை அல்ல; 166 இயல்கள் 5 பகுதிகளாகத் தொகுக்கப்பட்டு வெளியான முழுமையான வடிவத்தை) என்ற சத்தியத்தை வெளிப்படுத்தி சுனில் தொடங்கியிருக்கும் ‘கல்மலர்’ கட்டுரை ஓர் அற்புதமான படைப்பு.

காந்தி ஆயிரக்கணக்கான பக்கங்கள் எழுதியிருந்தாலும், இன்னும் அவரது வெளிவராத எழுத்துகள் தொடர்ந்து கண்டுபிடிக்கப்பட்டுக்கொண்டே இருக்கின்றன என்றாலும் ஒரு புத்தகமாக வெளியிடவேண்டும் என்று உத்தேசித்து காந்தி எழுதியது மூன்று புத்தகங்களே: இந்திய சுயராஜ்ஜியம், தென்னாப்பிரிக்காவில் சத்தியாகிரகம், சத்திய சோதனை. இவை மூன்றையும் முன்வைத்து எழுதப்பட்டிருக்கும் கல்மலர் கட்டுரை காந்தி தன் லட்சியவாதத்துக்கும் நடைமுறைத் தேவைகளுக்கும் சாத்தியங்களுக்கும் இடையில் கிடந்துழன்று அல்லற்பட்ட அனேக தருணங்களைச் சுருக்கமாகவும் கோர்வையாகவும் அளித்துள்ளது.

கிறிஸ்தவர்களும் இஸ்லாமியர்களும் காந்தி ஆசிரமத்தில் மாட்டுக்கறி உட்பட அசைவ உணவுகளை அவர்கள் வழக்கப்படி உண்ணலாம் என்று காந்தி அனுமதித்தும் அவர்களாக சைவ உணவைத் தேர்ந்தெடுத்தனர் என்பது முதல் “சத்தியாகிரகத்தில் அடிப்படைக் கொள்கைக்குப் பங்கம் ஏற்படாத அளவில் சமரசங்களுக்கு இடமுண்டு” என்பதுவரை பல்வேறு அதிகம் அறியப்படாத, பின்புலத்தோடு புரிந்துகொள்ளப்படாத, தற்காலத்திற்கு மிகவும் அவசியமான தகவல்களுடனும் பார்வைகளுடனும் இக்கட்டுரை அமைந்துள்ளது.

“சத்தியம் கல்போல இறுக்கமானது அதேசமயம் தாமரைபோல மென்மையானதும்கூட” என்ற காந்தியின் கூற்றிலிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட கல்மலர் என்ற பொருத்தமான, அழகிய தலைப்புடன் கல் உயிர்பெற்றுப் பூக்கும் தருணங்களைக் கோத்துள்ளது இக்கட்டுரை.

‘கதைகளின் ஊடாகக் காந்தி’ கட்டுரையில் சுனிலின் வாசிப்பு, புனைவாசிரிய நோக்கு, காந்திய அபிமானம், விமர்சனம் என்று அனைத்தும் ஒன்றோடொன்று போட்டிபோடுகின்றன. ‘காந்தியும் ஆயுர்வேதமும்’ கட்டுரையும் தொழிலால் ஆயுர்வேத மருத்துவரான சுனிலின் பார்வைகளால் பொலிவுற்றிருக்கிறது. அதிலும் ‘காந்தியுடன் ஒரு நாத்திகன்’ என்ற கோபராஜு ராமச்சந்திரராவின் (கோரா) சிறுநூலில், காந்தி ரகுபதி ராகவ வகைக் கடவுள்களில் தொடங்கி மெல்லமெல்ல வாய்மை, சத்தியமே கடவுள் என்று மாறிவந்ததாகவும் மனிதனுகாகக் கடவுளைக்கைவிட வேண்டிவந்தால் அதைச்செய்யத் தயங்கவே மாட்டார் என்ற கோராவின் மனப்பதிவும் வெளிப்படுகிறது என்று சுனில் எழுதும்போது வியக்காமல் இருக்கமுடியவில்லை.

ஆயிரம் காந்திகள் நூலின் கட்டுரைகள் நாளைய காந்தி தொகுப்போடு ஒப்பிடும்போது பொதுவாக எளிமையானவை நேரடியான தகவல்களுடன்கூடிய காந்தியர்களின் வரலாறு குறித்தவை. காந்தியிடமிருந்து காந்தியர்கள் செயலாக்கத்திற்காகப் பெற்றுக்கொண்டவற்றையும், காலப்போக்கில் காந்திய வழிமுறைகள் சமுதாயத்தில் அளிக்கும் தாக்கம் மாறிவந்துள்ள விதங்களையும் சுவாரஸ்யமாக அவதானிக்க ஏற்றவை. ஏற்கெனவே ஓரளவுக்கு காந்தியை வாசித்தறிந்தவர்களுக்கு ‘நாளைய காந்தி’ சரியாக இருக்கும். அல்லாதவர்கள் ‘ஆயிரம் காந்திகள்’ நூலை முதலில் வாசிக்கலாம்.

காந்தியப் பொருளாதார மேதை ஜே.சி.குமரப்பாவைக் குறித்த மூன்று விரிவான கட்டுரைகள் இத்தொகுப்பின் பிற கட்டுரைகளிலிருந்து வேறுபட்டவை. குமரப்பாவைக் குறித்து எழுத வெகுகாலமாக யோசித்துவந்திருக்கிறேன். இந்நூலில் ‘கலோனல் சாப்’, ‘குமரப்பாவின் தனிமனிதன்’, ‘இயற்கையின் உயிர்வட்டம்’ ஆகிய மூன்று கட்டுரைகளை வாசித்ததும் இதற்குமேல் எழுதுவதற்கு என்னிடம் புதிதாக ஏதுமில்லை என்று தோன்றியது.

‘டிராக்டர் சாணி போடுமா? – ஜே.சி.குமரப்பாவின் தத்துவப் புரிதலுக்கான கட்டுரைத் தொகுப்பு’ என்ற கட்டுரைத் தொகுப்பு நூலை சில ஆண்டுகளுக்குமுன் ‘தன்னறம் குக்கூ காட்டுப்பள்ளி’ வெளியிட்டது. அதில் வெளியான குருமூர்த்தி எழுதிய ‘தமிழகம் மறந்த தமிழ் மகாத்மா’, முனைவர் மா.பா. குருசாமி எழுதிய ‘புதுமைப் பொருளியலறிஞர்’, என். ராஜகோபால் எழுதிய ‘டிராக்டர் சாணி போடுமா? ஆகிய மூன்று கட்டுரைகள் குறிப்பிடத்தக்கவை. குமரப்பாவையும் அவரது வாழ்க்கைப் பார்வைகளையும் அறிமுகப்படுத்தும் இந்நூலில் பல புள்ளிகள் நிறுத்தி நிறுத்தி வாசிக்கவும் சிந்திக்கவும் செய்துவிடுபவை.

குமரப்பா தஞ்சாவூரில் பிறந்தவர். இங்கிலாந்தில் கணக்காயமும் அமெரிக்காவில் பொருளாதாரமும் படித்தவர். ஒருமுறை காந்தியை நேரில் பார்த்துவிட்டுப் போகலாம் என்று வந்தவர் அவருடனேயே தங்கிவிட்டார். “திட்டங்களைச் செயல்படுத்துவதற்குமுன் ஏழை உழவர்களை அழைத்து விலா எலும்புகளை எண்ணவேண்டும். செயல்படுத்தியபின் எலும்புகளை மூடும்படியாக சதை வளர்ந்திருக்குமானால் அதுவே உண்மையான வெற்றி” என்றவர். “நான் ஏதும் தயார்ப்படுத்தவில்லை அவர் ரெடிமேடாகத்தான் என்னிடம் வந்தார்” என்று காந்தியால் வருணிக்கப்பட்டவர்.

நான் ஏற்கெனவே வாசித்தும் புரிந்தும் வைத்திருந்த குமரப்பாவுடன் சுனிலின் கட்டுரைகள் அளித்தவற்றையும் இணைத்தபோது, காந்தியிலிருந்து நீக்குப்போக்கு என்ற அம்சத்தைக் கழித்துவிட்டால் அதுதான் குமரப்பா என்று தோன்றியது. காந்தி ஒரு கல்மலர் என்றால் குமரப்பா ஒரு மலர்ந்த கல். எவராக இருந்தாலும் முன்கூட்டிய அனுமதியின்று சந்திக்க மறுப்பது, ஒருசில அணாக்கள் குறைகிறது என்று நாள்கணக்கில் கணக்குப்பார்ப்பது, மாற்றுப் பார்வைகள் உள்ளன என்பதால் ஒரு குழுவில் இணைந்து செயல்பட மறுத்து வெளியேறுவது எனப் பல்வேறு தருணங்களில் காந்தி சற்று நெகிழ்வாகச் செயல்பட்டிருப்பாரோ என்று எண்ணச்செய்கிறார் குமரப்பா.

இத்தனைக் கோடி சூரியக் குடும்பங்களில் பூமியில் மட்டும்தான் உயிர்கள் இருக்கக்கூடுமா என்று அறிவியலாளர் ஐயம் கொள்வதுபோல முப்பதுகோடி மக்களில் ஒரு காந்திதான் இருந்தாரா என்ற கேள்வி எனக்கு எழுவதுண்டு. ஆனால் இன்னும் ஒருநூல் நெருங்கினால் அக்கினி எரித்துவிடும், ஒருநூல் விலகினால் குளிர் உறையச்செய்துவிடும் என்கிற புள்ளியில் அகலாது அணுகாது பூமி சுழல்வதால் அதில் உயிர்கள் தோன்றி ஜீவித்திருப்பதைப் போலத்தான் காந்தியும் தோன்றி ஜீவித்தார் என்று இப்போது படுகிறது. காந்தி ஒருநூல் கடினமாகியிருந்தால் குமரப்பா. மேலும் ஒருநூல் நெகிழ்ந்திருந்தால் இன்னொரு சாதாரணத் தலைவர்.

காந்திய வழியில் கட்டடக்கலை செய்த லாரி பேக்கர், ஏழை மக்களுக்கு வாழ்வாதாரம் அளிப்பதை வாழ்க்கைப்பணியாகச் செய்த ஜர்ணாதாரா சௌத்ரி ஆகியோரைக் குறித்த அறிமுகங்கள் சுருக்கமாக அமைந்துள்ளன. மலாலாவை குறித்து எழுதும்போது சுனில் ஒருவகைத் தற்காப்புடன் எழுதுவதை உணரமுடிகிறது. மதுவிலக்குக்கான உண்ணாவிரதம், அறப்போராட்டம் என்று இறங்கி அதில் உயிர்துறந்த சசிபெருமாளைப் பற்றிய கட்டுரை முக்கியமானது. அவருடன் சுனில் நேரடியாகப் பழகியிருக்கிறார் என்பதால் ஊடகச் செய்திகளைத் தாண்டிய தகவல்களும் பிம்ப உடைவுகளும் இக்கட்டுரையில் நிகழ்கின்றன.

அசைவ உணவைக்கூட சூழலுக்கேற்ப, தேவைக்கேற்ப ஏற்கலாம் ஆனால் கொஞ்சமாக மதுவை அருந்தி ஒரு ஓரமாகத் துயில்கொண்டு யாருக்கும் இடைஞ்சலின்றி ஒருவர் ஆசுவாசப்படலாமே என்றாலும்கூட அதை எற்கமுடியாது என்று உறுதியாக இருந்தவர் காந்தி. ஆனால் பூரண மதுவிலக்கு என்பது இன்று நடைமுறை சாத்தியமில்லை. சசிபெருமாளின் அணுகுமுறையைப் பொறுத்தவரை குமரப்பாவைக் காட்டிலும் ஒரு நூல் கடினமாகப் போய்விட்டார் என்று தோன்றியது. இன்று காந்தி இருந்திருந்தால் சசிபெருமாளைப்போலக் காணாமற்போயிருப்பாரா அல்லது மதுவைக் கையாள வேறு புத்தாக்க அணுகுமுறைகளுடன் வந்திருப்பாரா என்பது காந்திகாரர்களுக்கான நல்ல விவாதப்புள்ளி. சுனில் இக்கட்டுரையில் அவ்விவாதத்துக்கான சில திசைகளைத் திறம்படவும் திறந்தமனதுடனும் காட்டியுள்ளார் என்பேன்.

‘ஆயிரம் காந்திகள்’ நூலின் காந்தியர்களைப் பொறுத்தவரை பிறரைக் காட்டிலும் பாபா ஆம்தே அபாரமாக வெளிப்பட்டுள்ளார். இந்தியாவின் பிளவு சக்திகளை மறுதலிக்கும் Knit India இயக்கத்தை முன்வைத்தவர் ஆம்தே என்ற தகவல் எனக்குப் புதிது. இவரைப் பெயரளவில் கேள்விப்பட்டிருந்தேன். பெருஞ்செல்வக் குடும்பத்தில் பிறந்துவளர்ந்து பெருநோய்க்காரர் மறுவாழ்வுக்காக அவர்களுடனேயே முழுவாழ்வையும் செலவிட்ட ஆம்தேவின் கதை ஆழமாக அசைத்துப் பார்த்துவிட்டது.

பொறுமையற்ற இலட்சியவாதி என்று பாபா ஆம்தே அழைக்கப்பட்டார் என்றாலும், சேவை மட்டுமே பிரச்சனையைத் தீர்க்காது என்றும் தம் தேவைகளைத் தாமே நிறைவுசெய்துகொள்ளும் தற்சார்பு நிலைக்கு பாதிக்கப்பட்டவர்களைக் கொணர்ந்து, அவர்களுக்கு அவர்களிடமிருந்தும் பிறரிடமிருந்தும் விடுதலை பெற்றுத்தருவதற்காகத் தகுந்த வேலைகளை உருவாக்கி அளிக்கவேண்டும் (Charity destorys, Work builds) என்றும் செயல்பட்டு வெற்றிகரமாக நடத்தியும் காட்டிய ஆம்தே ஒரு நவீன மனிதராகத்தான் எனக்குத் தெரிகிறார். உதவி என்று வரும்போது சிங்கப்பூரின் கொள்கையும் அதுதான். தனிப்பட்டவர்களைப் பொறுப்பேற்கச்செய்யாத எந்த உதவியும் உருப்படாது. “Does Singapore beleive in the notion of a safety net, for those who fall between the cracks of a successful economy?” என்ற கேள்விக்கு “I beleive in the notion of a trampoline” என்று தர்மன் பதிலளித்ததன் சாராம்சமும் அதுதான்.

இரண்டு தொகுப்புகளிலும் பல இடங்களில் ‘இது புனைவுக்குரியது’, ‘இது நாவலுக்குரியது’ என்று சுனில் குறிப்பிட்டுச் செல்லும்போது அத்தருணங்கள் ஒரு புனைவால் மேலும் துலங்கும், தாக்கத்தையும் மாற்றங்களையும் உண்டாக்கும் என்கிற அடிப்படையில் சொல்கிறார் என்று ஊகித்துக்கொள்கிறேன். வரலாற்றில் ஒரு தகவலாக, சம்பவமாக நீடிப்பதைவிட புனைவில் உயிர்த்துடிப்புடன் வாழ்ந்து அடுத்தடுத்த தலைமுறைகளுடன் ஊடாடும் என்கிற ஆர்வத்தாலும் இருக்கலாம்.

சொல் தேர்வுகளிலும் சுனில் கவனமாக இருக்கிறார். ‘வெள்ளையனே வெளியேறு’ என்று வெகுகாலமாக அறியப்படும் காந்தியின் Quit India இயக்கத்தை ‘இந்தியாவைவிட்டு வெளியேறு’ என்று சுனில் அழைக்கிறார். நிற அடிப்படையில் எதிரியாக பாவிப்பது காந்திக்கு உவப்பாக இராது என்று சுனில் முன்வைக்கும் காரணமும் பொருத்தமானதே. பாடபுத்தகங்களில் இத்தகைய மாற்றங்களை நுழைந்தால் காலப்போக்கில் புதியபெயர் நிலைபெறும்.

நாளைய காந்தி, ஆயிரம் காந்திகள் இரண்டு தொகுப்புகளும் காந்தி ஆர்வலர்கள் வாசிக்கத்தக்கவை, வேண்டியவை.

***