யீஷுன் பொது நூலகம் புதுப்பித்தலுக்காக மூடப்பட்டபின் கடந்த ஐந்தாறு மாதத்தில் என் நூலகப் புழக்கம் குறைந்துபோய்விட்டது. இன்று உட்லண்ட்ஸ் நூலகத்துக்குச் சென்று சில புத்தகங்களை இரவல்பெறச் சென்றபோது, அங்கு ‘தமிழ் வரவுகள்’ பகுதியில் வைக்கப்பட்டிருந்த இந்நூல் கண்ணில்பட்டது. ஏ.பி.ராமன் ஐயா சிறுகதைகள் என்றதும் உற்சாகத்துடன் எடுத்துவந்து முதல் காரியமாகப் படித்துமுடித்தேன்.

14 சிறுகதைகளில் ‘விமலா’ ஒன்றைத்தவிர மற்றவை 90களில் எழுதப்பட்டவை என்ற குறிப்பை ஆசிரியர் ‘என்னுரை’யில் அளித்துள்ளார். விமலா என்ற அந்த ஒரு பெருங்கதை எப்போது எழுதப்பட்டது என்ற குறிப்பு இல்லை.

மிகுந்த ஆர்வத்துடன் வாசிக்க ஆரம்பித்த எனக்கு ஒவ்வொரு கதையைத் தாண்டும் போதும் மன உளைச்சலும், ஆன்மிக நஷ்டமும் அதிகரித்துக்கொண்டே போனது. அதிலும் நான்காவது கதையாக இருக்கும் ‘லட்சியக் கனவு’ வாசித்ததும் அதிலிருந்து என்னை மீட்டுக்கொள்ளும் வழிதெரியாமல் தவித்தேன்.

அம்மா, அப்பாவுக்கு உதவியாக ஒரு பெண் வீட்டில் உலவவேண்டும்(!) என்பதற்காகத் திருமணத்துக்கு சம்மதிக்கும் கதிரேசன் ஓர் இளம் விதவையைத்தான் மணப்பேன் என்கிறான். அப்படி ஓர் இளம்விதவையும் கிடைக்கிறாள். ‘அந்த இரவு அவர்களுக்கு முதலிரவு. இருவருக்குமா? இல்லை. அவனுக்கு மட்டும்தான். மல்லிகா முன்பே முதலிரவைப் பார்த்தவள் ஆயிற்றே!’ என்ற வரியை ஒரு திடுக்கிடலுடன் கடந்து போய் மேலே வாசித்தால், கதிரேசன் ஆண்மையற்றவன். ஆனாலும் ஒரு விதவைக்கு வாழ்வு(?) கொடுத்திருக்கிறான். அப்பெண்ணும் ஏற்கனவே ஒருவருடன் வாழ்ந்தபின்பு இன்னொருவருடன் சுகம் காண்பதில்லை என்ற முடிவை ஏற்கனவே எடுத்திருப்பதால், அவர்கள் இருவருமே தங்கள் லட்சியக் கனவை நிறைவேற்றுவதாகக் கதை முடிகிறது.

எப்பேர்ப்பட்ட திருகலான இலக்கியச்சிந்தனை! இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் இளம்விதவைகளுக்கு இப்படி ஒரு மறுவாழ்வு அமையும் என்பது மட்டும் தெரிந்திருந்தால், நிச்சயமாக ராஜா ராம்மோகன் ராய் உடன்கட்டை ஏறுதலை எதிர்த்துப் போராடி இருக்கமாட்டார். ஆயாசமாக இருக்கிறது.

‘பாவம் கனகா’ என்ற கதையில் எங்கே புதிதாகக் குடிவந்துள்ள எதிர்வீட்டுப் பெண் கனகாவுடன் காதலில் விழுந்து அதனால் உறவுக்காரப் பெண் உஷாவை மணக்காமல் போய்விடுவானோ என்று மகனைக்குறித்து கவலைப்படும் தாய், எதிர்வீட்டுக்காரர் உதவியுடன் கனகாவை ஊமையாக நடிக்கச்செய்து மகனை உஷாவின் பக்கம் திருப்புகிறார். இப்படியாகப் பிரச்சனை தீர்ந்தவுடன் வரும் பத்தி இது; ‘வாயாடி கனகாவைப் பேசாத பெண்ணாகக் காட்டி, முறைப்பெண் உஷாவுக்கு உயிர்ப்பிச்சை(?!) தந்த எதிர்வீட்டுக்காரர் மறுநாளே வேலை மாறி பம்பாய்க்குப் போய்விட்டார் குடும்பத்துடன்’.

காதல் சம்பந்தப்பட்ட சிக்கல்களைத் தீர்க்க இப்படி ஓர் அபாரமான, சாத்வீகமான வழி இருப்பது தெரியாமல் ஏன் காதலிக்க விட்டுவிட்டுப் பிறகு வெட்டிக்கொண்டும் குத்திக்கொண்டும் சாகிறார்கள் தமிழ்நாட்டில்?

‘விமலா’ கதையில் தன் சகோதரி விமலாவை விபச்சாரத்தில் தள்ளிவிடும் குடிகார அப்பாவைப் பழிவாங்குவதற்காக அவருடைய கடைசி காலத்தில் நீரிழிவு நோயை வேண்டுமென்றே கவனிக்காமல் விட்டு ஒரு காலை இழக்க வைக்கிறான் சகோதரன். பிறகு மேலும் அப்படியே விட்டு ஒரு கண்ணும் போகிறது. இதைக்குறித்து வெகுகாலம் கழித்துத் திரும்பிவரும் விமலாவிடம் அவளது அம்மாவே விவரிக்கிறாள். ‘என் அப்பாவை அல்ல, என் சகோதரியைப் பொசுக்கிய யாரோ ஒருவரைத்தான் நான் பழிவாங்கினேன்’ என்று சகோதரன் சொல்லும்போது விமலா, ‘யு ஆர் கிரேட் சிவா’ என்கிறாள்!

நான் மரணதண்டனைக்கு எதிரானவன் அல்ல. குறிப்பாக இக்கதையில் வருவதுபோல பெண்களை விபச்சாரத்தில் இழுத்துவிடுபவர்களுக்கு அதுவே சரியான தண்டனை என்ற எண்ணமும் எனக்கு உண்டு. ஆனால் அப்படியான ஒருவனைக்கூட மெல்ல மெல்ல சித்ரவதை செய்து கொல்வதில் எனக்கு உடன்பாடில்லை. எந்த உணர்ச்சியும், கருணையும் இல்லாத சட்டம்கூட தூக்கிலிடுவதற்குமுன் குற்றவாளியின் முழு ஆரோக்கியத்தை உறுதிசெய்கிறது. மரணதண்டனைக்கு ஆதரவளிக்கும் நாடுகளும்கூட எப்படி வலியின்றி நொடியில் உயிரைப்போக்குவது என்று புதிய முறைகளைக் கண்டறிகின்றன.

தகப்பனை நீண்டகாலம் வீட்டில் வைத்து, கதையில் வரும் சொற்களில் ‘புழுங்கப் புழுங்கத் துடிக்க வச்சு’ கொல்லும் சிவா எப்பேர்ப்பட்ட மனநோயாளியாக இருக்கவேண்டும். அந்த சிவாவுக்கு அவசியம் மனநல மருத்துவ சிகிச்சை தேவை. தற்போது இந்த சிவாவுக்கும் தேவைப்படுகிறது.

மிகவும் ஆபத்தான சிந்தனைகளைத் தாங்கி வந்துள்ள இத்தொகுப்பைக் குறித்து எழுதத்தான் வேண்டுமா என்று கொஞ்சம் யோசித்தேன். சிறுகதை எழுதுவது எப்படி என்று ஏகப்பட்ட புத்தகங்கள் வந்துவிட்டன. ஆனால் மொழி, வடிவம், உத்தி, இலக்கியச்சிந்தனை அனைத்திலும் எப்படி எழுதக்கூடாது என்பதற்கு இதை ஒரு பாடநூலாகவே வைக்கமுடியும் என்று சமாதானப்படுத்திக்கொண்டு…..

A.P.ராமன் சிறுகதைகள், 92 பக்கம், கலைஞன் பதிப்பகம், 2014