‘கணக்காயர்’ என்னும் சொல்லை யாரோ accountant என்கிற ஆங்கிலச் சொல்லுக்கு இணைச்சொல்லாகத் தமிழில் பயன்படுத்திவிட்டனர். அக்கவுண்ட்டண்ட்டும் கணக்குப்பார்க்கிறார், இந்தச் சொல்லிலும் கணக்கு இருக்கிறது ஆகவே கணக்கு சரிதான் என்று நான் உட்படப் பலரும் பயன்படுத்தத் தொடங்கிவிட்டோம். ஆனால் கணக்காயர் என்ற சொல் ஆதியில் ஆசிரியரைக் குறிக்கப் புழங்கிய ஒன்று. கணக்கு என்றால் நூல். கீழ்க்கணக்கு, மேல்கணக்கு எனப் பழந்தமிழ் நூல்கள் வகைப்படுத்தப்படுவதைக் காணலாம். கணக்காயன் தத்தனார் என்று ஒரு சங்கப்புலவர் இருக்கிறார். நிச்சயம் அவர் அக்கவுண்ட்டண்ட் அல்ல. எது எப்படியானாலும் இது 2022க்குக் ‘கணக்கு’ முடிக்கும் நேரம்.

வாசிப்பு ஒருபக்கம் புதிய உலகங்களைத் திறக்கிறது என்றால் இன்னொரு பக்கம் தெரிந்ததாக நினைத்துக்கொண்டிருந்த உலகத்தையே புதிதாகத் துலக்கியும் காட்டுகிறது. நான் நம் நூலகங்களுக்குத்தான் நன்றி சொல்லவேண்டும். எவ்வளவு சொன்னாலும் தகும். ஒரு குறிப்பிட்ட புத்தகத்தைக் கடன்பெறவேண்டி நூலகத்துக்குச் செல்வது உண்டு என்றாலும் கண்போனபோக்கில் மேய்ந்ததில் கிடைத்த வைரங்கள் அதிகம். காற்றுவாங்கச்சென்று வாங்கிவந்த கவிதைகளும் அனேகம். எழுத்தாளர் அழகுநிலா தன்னுடைய ‘மொழிவழிக் கனவு’ நூலை ‘சிங்கப்பூர் நூலகங்களுக்கு’ என்று சமர்ப்பணம் போட்டிருந்தார். தேசிய நூலக வாரியத்துக்கும் அதன் தமிழ்ப்பிரிவுக்கும் வந்தனம்!

இனி 2022 கணக்கு ஒப்படைப்பு.

  1. வெயிலின் கூட்டாளிகள் – கணேஷ் பாபு, யாவரும் வெளியீடு, 2021

‘டிராகன் பொம்மை’ என்ற கதையை 2012இல் எழுதியவர் ஏறக்குறைய பத்தாண்டு கழித்து 15 கதைகள்கொண்ட தன் முதல் தொகுப்பை வெளியிடுகிறார். ஆகவே ஒவ்வொரு கதையும் நினைவில் நிற்பதாக அமைவதில் வியப்பில்லை. தொன்மங்களைத் தொடர்வதில் கணேஷ் பாபு புதுப்புதுத் தடங்களை அமைத்துச் செல்பவர் என்பது குறிப்பிடத்தக்கது. ‘அரூ’ கனவுருப்புனைவு இணைய இதழில் கணேஷ் எழுதிய ‘அந்தரத்தில் நிற்கும் வீடு’ என்ற சிறுகதை மற்றொரு தொன்மத்தொடர்ச்சி.

2. துருக்கித்தொப்பி – கீரனூர் ஜாகிர்ராஜா, விஜயா பதிப்பகம், 2017

வாழ்ந்துகெட்ட குடும்பங்களின் கதைகள் புதிதல்ல, ஆனால், குடும்பத்தின் பொருளாதார வீழ்ச்சி சமூகத்தின் பார்வையில் மதிப்புக்குறைவை உண்டாக்குகிறது என்பதைத்தாண்டி, குடும்ப உறுப்பினர்களும் அவர்களாகவே தம்முடைய கண்ணியத்தைக் காலப்போக்கில் குறைத்துக்கொள்ளவும் ஆன்மிகச் சீரழிவுக்கு உள்ளாகவும் வழிசெய்கிறது என்பதை ஆசிரியர் நுட்பமாகச் சுட்டும் நாவல்.

3. அத்தர் – கே. முகம்மது ரியாஸ், சீர்மை வெளியீடு, 2021

“பயப்பட வேண்டாம். இப்போதெல்லாம் நாங்கள் மனித மாமிசம் சாப்பிடுவதில்லை” என்று ஒரு கதைக்கான முதல் வரியிலேயே வாசகரை வலுவான கொக்கியால் கொத்தித் தூக்கிப் புனைவுக்குள் இழுத்துச் செல்லும் இலாவகத்திலும் சரி, “பூக்கள்தான் ஞானம். கசக்கிய கரங்களுக்கு வாசனையைத் தவிர வேறொன்றும் தராது. எல்லோருக்குள்ளயும் பூ இருக்குதானே” என்று ஒரு கதையை ஆன்மிகமாக முடித்து வாசித்தவரை வெளியேறிவிடாமல் கதையைச் சுற்றியே சிந்திக்கவைக்கும் நுட்பத்திலும் சரி – ரியாஸ் ஆடிப்பழக வரவில்லை, அரங்கேற்றம் செய்யவே வந்திருக்கிறார் என்பது தெரிகிறது. ‘அத்தர்’ தன் சுகந்தத்தைச் சிங்கப்பூரின் எல்லைகளைத் தாண்டியும் பரப்பும்.

4. சுண்ணாம்பு அரிசி – பொன் சுந்தரராசு, கிரிம்சன் ஏத் வெளியீடு, 2021

புக்கிட் தீமா மலையில் பதுங்கிக்கொண்டு ஜப்பானியருக்கு எதிராக ஆயுதப் போராட்டத்தைக் கையிலெடுத்த சீனருடன் அது தீவிரவாதம் என்று தெரியாமலேயே தன் சொந்தக் காரணங்கள் மற்றும் துப்பாக்கியைத் தூக்கும் ஈர்ப்பு போன்றவற்றால் முத்து சென்று இணைவது ஒரு குறிப்பிடத்தக்க காட்சி. மேலும், “ஆச்சி, ஜப்பூன் உங்களை ஒன்றும் செய்யமாட்டார்கள்” என்று பாதுகாப்பிற்காகத் தம் பெண்டிரைத் தமிழர் குடும்பங்களில் சீனர்கள் விட்டுச் சென்றபோது, சீனருக்கும் உதவவேண்டும் ஜப்பானியர் பகையையும் தேடிக்கொள்ளக்கூடாது என்ற தமிழரின் தர்மசங்கடத்தையும் பாதுகாப்பிற்காக ஒப்படைக்கப்பட்டவர்களைப் பாதுகாக்க இயலாதபோது அவர்களுக்கு உண்டான கையறு நிலையையும் ‘சுண்ணாம்பு அரிசி’ நாவல் திறம்படச் சித்தரித்துள்ளது.

5. சீனலட்சுமி – லதா, தமிழினி, 2022

நாளிதழின் ஒரு பக்கத்தில் கதையை அடக்கவேண்டிய கட்டுப்பாடு இன்று இல்லை. எழுத்தாளர்களின் கைக்கட்டுகள் தொழில்நுட்பத்தால் அறுத்தெறியப்பட்டுவிட்டன. லதா தனக்கெனப் புதிய தடத்தை அமைத்துக்கொண்டு முன்னே சென்றுகொண்டிருக்கிறார். சிங்கப்பூரின் முதல் தமிழ்ச் சிறுகதை ‘பாவத்தின் சம்பளம் மரணம்’ பொதுஜனமித்திரன் பத்திரிகையில் 1924-இல் வெளிவந்ததாக ஆய்வாளர் பாலபாஸ்கரன் பத்தாண்டுக்குமுன் வெளியிட்ட ஆய்வு முடிவுக்கு இன்றுவரை மறுப்பில்லை. அப்படிப்பார்த்தால், 2024இல் சிங்கப்பூர்த் தமிழ்ச் சிறுகதை நூற்றாண்டு காணவுள்ளது. சிங்கப்பூர்ச் சிறுகதை நூற்றாண்டு விடிந்துகொண்டிருக்கும் இந்நேரத்தில் விடிவெள்ளியாக வெளிவந்திருக்கும் சீனலட்சுமியைக் குறித்து ஓர் இலக்கிய வாசகனாகப் பெருமகிழ்ச்சி அடைகிறேன். இனி சிங்கைத் தமிழ்ப்புனைவுலகை நோக்கி, “நூறாண்டாகச் சிறுகதையில் என்ன செய்துகொண்டிருந்தீர்கள்?” என்று எவரும் கேட்டுவிடமுடியாது.

6. ரேடியோ நாயுடு: மனதில் நின்ற மனிதர்கள் – மஹேஷ் குமார், கோதை பதிப்பகம், 2022

சுமார் இருபது வயதுக்குள் தனக்குள் படிந்த நினைவுகளில் இன்னும் மங்காமல் நீடிக்கும் இருபது பேரை இத்தொகுப்பில் படைத்து நம்முன் உலவவிட்டிருக்கிறார் மஹேஷ். இவர்களுள் மருத்துவர், பொறியாளர் உண்டு. நூலகர், தகவல் உள்ளீடு செய்வோர் உண்டு. மிதிவண்டி, வானொலி பழுது பார்ப்போர் உண்டு. பொடிக்கடை, உரக்கடைக்காரர் உண்டு. ‘பெயிண்டர்’, ஆசாரிகளும் உண்டு. தனக்கு, குடும்பத்துக்கு என்று மட்டுமில்லாமல் பிறருக்காக ஏதோவொரு வகையில் ஒரு துரும்பையாவது நிச்சயமாக இவர்களுள் பலர் அசைத்திருக்கின்றனர். அந்தவகையில் இவர்கள் மேலும் அணுக்கமாக ஆகின்றனர்.

7. மூவந்தியில் சூலுறும் மர்மம் – சாம்ராஜ், சந்தியா பதிப்பகம், 2022

தன் விமர்சனங்களில் அற்புதமான கதை எப்படி சிற்சிறு போதாமைகளால், கோளாறுகளால் வாசகரிடமிருந்து அன்னியப்பட்டுப் போகிறது என்று விளக்கிச் செல்கிறார் சாம்ராஜ். இலக்கியப் படைப்பை விமர்சனத் தராசில் ஏற்றி எடைபோட்டு இன்னவிலை என்று சொல்லிவிடாமல், முத்து திரண்டுவிட்டது ஆனால் சிப்பிதான் இன்னும் மூடியே இருக்கிறது என்று திறந்து காட்டுகிறார். எந்த சூத்திரத்திற்குள்ளும் சிக்காதவை  சாம்ராஜுடைய கட்டுரைகள். படைப்பாளிக்கும் வாசகருக்கும் இடையே செயல்படும் மொழிபெயர்ப்பாளர் தன் மிகப்பெரிய இல்லாமையைக்கொண்டே தன் இருப்பை வலுவாக்கவேண்டும் என்று வாதிடும் ஒரு கட்டுரை மிக ஆழமானது. சாம்ராஜ் கட்டுரைகளை உயிர்த்துடிப்புள்ள அல்புனைவு எனலாம்.

8. No Mountain Too High – Dr Kumaran Rasappan (with Julian Shaw), Marshall Cavendish, 2022

அனைத்துத் தடைகளையும் சமாளித்து மே 26, 2012 அன்று எவரெஸ்ட் உச்சியை அடைந்த மருத்துவர் குமரன், சிங்கப்பூர்க் கொடியை ஊன்றினார். பத்திரமாக இறங்கிய குமரன் 12 கிலோ குறைந்திருந்தார்! தன் வேலை முடிந்தது என்று போகாமல் நேபாள மலைவாழ் மக்களுக்குத் தொடர்ந்து உதவவேண்டும் என்று ‘ஆஷா’ திட்டத்தைத் தொடங்கினார். சிங்கப்பூரிலிருந்தும் பிற தேசங்களிலிருந்தும் நிதிதிரட்டி நேபாளத்தில் மருத்துவ உதவி, கல்வி உதவி என்று ஒவ்வோராண்டும் நேரடியாகவே அங்குசென்று அளித்துவருகிறார். தங்கள் நலனில் தொடர்ந்து அக்கறை காட்டி நிற்கும் குமரனை ஷெர்பா இனத்தினர் அவர்களுள் ஒருவராகவே கருதி ‘குமார் ஷெர்பா’ எனக் கொண்டாடுகின்றனர்.

9. உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே – வி. அமலன் ஸ்டேன்லி, தமிழினி, 2022

10. UNMASKED: Reflections on Virus-time, curated by Shamini Flint, 2021

கொவிட்கால எண்ணங்களைப் பதிவுசெய்திருந்த இரு புத்தகங்கள். ‘உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே’ முதன்மையாகத் தன் அனுபவங்களைக்கொண்டு ஆசிரியர் படைத்த 17 குறிப்புகளின் தொகுப்பு. ‘UNMASKED’ கவிதை, பத்தி, துணுக்கு, மீம், ஒளிப்படம், ஓவியம் என்று பலர் பங்களித்த பலவகைப் படைப்புகளின் தொகுப்பு. தர்க்கம், கற்பனை இரண்டையும் ஒரேகூண்டுக்குள் அடைப்பதற்கு ஒரு நுண்மை வேண்டும். அவற்றை ஒரே வண்டியில் பூட்டிக்கொண்டு மெய்ம்மை நோக்கிச்செல்ல வன்மையும் வேண்டும். அதற்கு ஒருவர் ஒரேநேரத்தில் விஞ்ஞானியாகவும் கவிஞராகவும் ஞானியாகவும் இருக்கவேண்டும். அமலன் அந்தப் புள்ளியைத் தொடுகிறார். UNMASKED நூல் பக்கத்துக்குப் பக்கம் மாறுபடும் அனுபவங்கள் என்பதால் ஒரு ரங்கராட்டினப் பயணம். ‘வீடடங்கு மத்தியான மழை’ என்ற கவிதையை வாசித்தபோது, கொவிட், ஓடிக்கொண்டே இருந்த அனைவரையும் ஒருகணம் நின்று நிதானிக்க வைத்திருப்பதை உள்ளோட்டமாக உணரமுடிந்தது. 

11. கரமுண்டார் வூடு – தஞ்சை ப்ரகாஷ், டிஸ்கவரி புக் பேலஸ் வெளியீடு, 2016

கடைசிப் பக்கத்தோடு ஒரு நாவல் முடிந்துபோய்விடாமல் வாசகருக்குள் வளர்கிறது என்பதே அதன் உயிர்த்தன்மைக்கு ஆதாரம். இதுவரை இந்நாவலை வானளாவப் புகழ்ந்து பாராட்டியும்சரி இடக்கையால் புறந்தள்ளியும்சரி, இணையத்தில் வெளிவந்துள்ள கருத்துகள், விமர்சனங்கள் அனைத்தும் காமம், அருவருப்பு, பிறழ்வு, சாதி, தஞ்சை வரலாறு இவற்றுக்குள் வைத்தே நாவலை மதிப்பிட்டுள்ளன. என் பார்வையில், கரமுண்டார் வூட்டின் தனித்துவம் அதுவொரு ‘விடுதலைப் பிரதி’ என்பதுதான். இலக்கியப் பிரதியில் செய்யக்கூடாதது இங்கொன்றும் அங்கொன்றுமாக வரிகளை உருவி எடுத்து ‘மாதிரி’ பார்ப்பது. அது அர்த்தப்படாதது மட்டுமல்ல, ஆபத்தாகவும்கூட முடியலாம். வாழ்வின் ஒட்டுமொத்தத்தைப் பார்க்கும் இலக்கியத்தை முழுமையாக வாசித்து ஒரு முடிவுக்கு வருவதே நல்லது.

12. நடைவழி நினைவுகள் – சி. மோகன், இந்து தமிழ் திசை வெளியீடு, 2020

இந்த நூலின் கட்டுரைகளில் வரும் 16 இலக்கிய ஆளுமைகளும் சி.மோகன் என்கிற மற்றோர் இலக்கிய ஆளுமையின்மீது பட்டுத் தெறிக்கின்றனர். இலக்கிய ஆளுமைகள் கொண்டிருந்த கொந்தளிப்புகளையும் வினோதமான சுபாவங்களையும் காட்ட சி.மோகன் தேர்ந்தெடுத்துள்ள சம்பவங்களும், ‘தகிக்கும் படைப்பு மனம்’ போன்ற பொருத்தமான தலைப்புகளோடு அவற்றைப் பதிவுசெய்துள்ள விதமும் மேதமையைக் காட்டுகிறது. அப்பிரதிபலிப்புகள் பெறுமதியானவை. படைப்புகளை மதிப்பிடும்போது சி.மோகனின் பார்வைகள் தனித்துவமிக்கவைகளாக மிளிர்கின்றன. 

13. சிற்றிலக்கியச் சீர் வலையுரைத்தொடர் – தொகுப்பு இன்பா, கவிமாலை வெளியீடு, 2021

வலையுரைத் தொடராக வந்த 20 உரைகளையும் வெறுமே ‘எழுத்தாக்கம்’ மட்டும் செய்து கடமை தீர்ந்தது என்று போய்விடாமல் ‘கட்டுரையாக்கம்’ செய்து வெளியிட்டுள்ளனர். வடிவமைப்பிலும் உள்ளடக்கத்திலும் மிகத்தரமான நூலாக உணர்ந்தேன். உரைகளை உரையாடல்களை ஏற்பாடு செய்து அவற்றைச் செம்மைப்படுத்தி வலையேற்றக்கூட விரும்பாமல் காற்றில் கலக்கவிட்டுச் சென்றுவிடும் பொதுப்போக்கிலிருந்து மாறுபட்டுச் சிறப்பான நூலாக்கம் என்று செயல்பட்டுள்ளது.

14. நாளைய காந்தி (யாவரும், 2021), ஆயிரம் காந்திகள் (நன்னூல் பதிப்பகம், 2022) – சுனில் கிருஷ்ணன்

கிறிஸ்தவர்களும் இஸ்லாமியர்களும் காந்தி ஆசிரமத்தில் மாட்டுக்கறி உட்பட அசைவ உணவுகளை அவர்கள் வழக்கப்படி உண்ணலாம் என்று காந்தி அனுமதித்தும் அவர்களாக சைவ உணவைத் தேர்ந்தெடுத்தனர் என்பது முதல் “சத்தியாகிரகத்தில் அடிப்படைக் கொள்கைக்குப் பங்கம் ஏற்படாத அளவில் சமரசங்களுக்கு இடமுண்டு” என்பதுவரை பல்வேறு அதிகம் அறியப்படாத, பின்புலத்தோடு புரிந்துகொள்ளப்படாத, தற்காலத்திற்கு மிகவும் அவசியமான தகவல்களுடனும் பார்வைகளுடனும் அமைந்த கட்டுரைத் தொகுப்பு நூல்கள். ஏற்கெனவே ஓரளவுக்கு காந்தியை வாசித்தறிந்தவர்களுக்கு ‘நாளைய காந்தி’ சரியாக இருக்கும். அல்லாதவர்கள் ‘ஆயிரம் காந்திகள்’ நூலை முதலில் வாசிக்கலாம்.

15. தமிழ் நாவல் வாசிப்பும் உரையாடலும் – சுப்பிரமணி இரமேஷ், ஆதி வெளியீடு, 2021

இந்த நூலிலுள்ள 25 கட்டுரைகளைக்கொண்டு அந்த 25 நாவல்களின் சாராம்சங்களையும் நாம் குறுக்குவழியில் பெற்றிட இயலாது என்றாலும் இத்தொகுப்பிற்கான தேவை நூலின் தலைப்பில் உள்ள ஒரு சொல்லான ‘உரையாடல்’ என்பதுதான். இத்தொகுப்பின் கட்டுரைகள் மெல்லிய எல்லைகளைச் சுட்டிக்காட்டுகின்றன. ஜீ.முருகனின் ‘மரம்’ நாவலில் வரும் வெளிப்படையான பாலியல் சித்தரிப்புகளைச் மென்மையாக நொந்துகொண்டு நகர்ந்துவிடும் விமர்சகர், விநாயக முருகனின் ‘சென்னைக்கு மிக அருகில்’ நாவலில் அதையே முதன்மைப்படுத்திப் படைப்பை நிராகரிப்பது ஏன்? அந்த உணர்வுநிலை மாற்றத்தை உண்டாக்கும் அம்சங்கள் எவை? போன்ற கேள்விகளை எனக்குள் எழுப்பியதால் இத்தொகுப்பை வரவேற்கிறேன்.

16. கோபுரத் தற்கொலைகள் – ஆ. சிவசுப்பிரமணியன், பரிசில் வெளியீடு, 2019

சைவம் உறிஞ்சிய முன்னோர் வழிபாடு, பக்தி இலக்கியத்தில் தீண்டப்படாதார் நிலை, தமிழ் வைணவத்தில் சூத்திரர், கோபுரத் தற்கொலைகள், விலங்கு உயிர்ப்பலித் தடைச்சட்டத்தின் அரசியல், அர்ச்சகரும் சாதியும், சித்தர்கள்: மீறலே மரபாய் ஆகிய 7 கட்டுரைகளின் தொகுப்பிது. கட்டுரைகள் ஆசிரியரின் பார்வையுடன் இணைந்தோ எதிர்த்தோ வேறுகோணங்களை உள்ளடக்கியோ பல புள்ளிகளைத் தொடும் சிந்தனைகளை எழுப்பக்கூடியவை. சித்தர்கள் கட்டுரையில் மாற்றுக்கருத்து (dissent), எதிர்ப்பு (protest), சீர்திருத்தம் (reform) என சமூக மரபுகள் மாற்றியமைக்கப்படும் படிநிலைகளாக ஆசிரியர் முன்வைக்கும் கோட்பாடு ஆழ்ந்து சிந்திக்கத்தக்கது.

17. In the Shadow of Man – Jane Goodall, Mariner Books, 2010

மனிதர்கள் விலங்குகளின் உலகத்தில் கலந்துறவாடி வாழும் கதைகளைக்கொண்ட (டாக்டர் டூலிட்டில், ஜங்கிள் புக், டார்ஸான்) புத்தகங்களே அவளது பிரியம். டார்ஸானின் இணையாகக் கதையில் வரும் பெண்ணின் பெயரும் ஜேன். தன்னையே அவளிடத்தில் கற்பனை செய்துகொண்டாள். பெரியவளானதும் ஜேன் செய்ய விரும்பியதெல்லாம் நாளெல்லாம் விலங்குகளைப் பார்த்துக்கொண்டிருந்துவிட்டுப் பிறகு பார்த்ததைப் புத்தகங்களாக எழுதவேண்டும் என்பதுதான். அந்தச் சிறுமிதான் பின்னாளில் புகழ்பெற்ற முதனியியலாளராக (primatologist) ஆன ஜேன் கூடால் (Jane Goodall). “இந்த பூமியை நாம் முன்னோரிடமிருந்து சொத்தாகப் பெறவில்லை, நம் குழந்தைகளிடமிருந்து கடனாகப் பெற்றுள்ளோம்” என்ற தத்துவமே ஜேன் கூடாலின் நம்பிக்கை, வாழ்க்கை!

18. The Forgotten Sentinels: The Sepoys of Malaya, Singapore & South-East Asia (The Founding Years: 18th to early 20th Centuries) – N. Nedumaran, 2018

சிப்பாய்கள் விட்டுச்சென்று வெகுகாலம் கழித்தும், 1959-76 காலகட்டத்தில், சிப்பாய்களை நினைவூட்டும் ஒரு நாடாளுமன்றத் தொகுதியே நம்மிடம் இருந்தது (Sepoy Lines Constituency). இன்று அது பலவாறாகப் பிரிக்கப்பட்டும் பெயர் மாற்றப்பட்டும் மறைந்துபோனது. மூத்தவர்கள் 1980-களிலும்கூட ‘சிப்பாய் லைன்ஸ்’ என்று பேச்சில் குறிப்பிடுவதைக் கேட்டிருக்கிறேன். இன்று ‘சைனா டவுன்’ என்று ஆகிவிட்டது. சைனா டவுன் முன்பே இருந்தது என்றாலும் ‘சிப்பாய் லைனுக்கு அருகில்’ என்றுதான் வழங்கப்பட்டு வந்தது என ஆய்வாளர் நெடுமாறன் நமசிவாயம் சொல்வதெல்லாம் சிங்கப்பூருக்குப் புதியவர்களுக்கும் இளையோருக்கும் நம்பவே கடினமானதாக இருக்கலாம்.

இவ்வாண்டில் வாசித்து எழுதிய நூல்கள் இவ்வளவுதான்.

வாசித்து எழுதாமல்விட்ட கணக்கில்: விண்ணளந்த சிறகு (சு. தியடோர் பாஸ்கரன்), தேத்தண்ணி (மணிமாலா மதியழகன்), மொழிவழிக் கனவு (அழகுநிலா), சிங்கப்பூர்த் தமிழ்ச் சிறுகதைகள் (இராம கண்ணபிரான்), பாதி நீதியும் நீதி பாதியும் (கே, சந்துரு), கீதாரியின் உப்புக்கண்டம் (வெற்றிச்செல்வன் இராசேந்திரன்), தேகம் (சாரு நிவேதிதா), மூமின் (ஷோபாசக்தி), எழுத்தாளர் பழுவேட்டையருக்கு குழந்தை பிறந்திருக்கிறது (நரோபா), காலனி ஆட்சியில் நல வாழ்வும் நம் வாழ்வும் (டாக்டர் சு. நரேந்திரன்), தமிழவேளும் நானும் (ப. தியாகராசன்), குலக்குறியியலும் மீனவர் வழக்காறுகளும் (ஆ. தனஞ்செயன்), வளரொளி (சுனில் கிருஷ்ணன்) ஆகியவற்றைச் சொல்லலாம். விரிவாக எழுத நேராததால் இந்நூல்களின் எழுத்தாளர்களில் சிலருக்குச் சிறுகுறிப்பு அனுப்பிவைத்தேன். தற்காலத்தில் அதைச்செய்வது எளிது. வாசகர் அப்பொறுப்பை ஏற்கவேண்டும்.

பாதி வாசிப்பில் இருப்பவை: இசூமியின் நறுமணம் (ரா. செந்தில்குமார்), The Last Fools – The Eight Immortals of Lee Kuan Yew (Peh Shing Huei), சிகண்டி (ம.நவீன்), A Quest for Dance (K.P. Bhaskar). சில ஆண்டுகட்கு முன்வரை ஒரே நேரத்தில் பல புத்தகங்களை வாசிக்கும் வழக்கமில்லை. ஆனால் ‘தி சிராங்கூன் டைம்ஸ்’ நேர்காணல்கள், கட்டுரைகள் எனக் குறிப்பிட்ட காலத்திற்குள் முடித்தே தீரவேண்டிய தேவைகளின் பொருட்டு வலுக்கட்டாயமாகத் தொடங்கியது எப்படியோ பழகிவிட்டது. ஒன்றைக்கொண்டு ஒன்றை ஈடுகட்ட நினைப்பது போன்ற சில கெடுதல்கள் இருப்பதாக உணர்ந்தாலும் ஒட்டுமொத்தமாகப் பயனளிக்கும் வழியாகவே இணைவாசிப்பு உள்ளது.

இன்று நள்ளிரவில் மலரவுள்ள 2023 கூடுதல் ‘வாசனை’யுடன் தொடரவேண்டும். அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!

***