கவிஞர்களை அவர்களின் கட்டுரைத் தொகுப்புகளின் வழியாக அறிமுகம் கொள்வதைத் தரக்குறைவான காரியமாகச் சிலர் கருதுகின்றனர். நான் அப்படி நினைக்கவில்லை. சொற்களை சுண்டக்காய்ச்சுவதற்காக கலையின் உலையில் கிடந்து வேகவோ, வரிகளை இடையில் அடித்து முறிக்கும் இலக்கிய வன்முறையில் ஈடுபடவோ அவசியமில்லாமல் வடிவ சுதந்திரத்துடனும் சொற்களிடையே அஹிம்சையுடனும் கவிதையின் அதே மின்னற்சுவையைக் கட்டுரையில் பாய்ச்ச முடியுமென்றால்… நிச்சயம் முடியும். அக்கலை கைவந்த கவிஞர்கள் சிலர் இருக்கிறார்கள். அவர்களுள் தனக்கும் முதல் வரிசையில் இடமுண்டு என்று ‘மூவந்தியில் சூலுறும் மர்மம்’ – அதன் 37 கட்டுரைகள் மற்றும் ஒரு நேர்காணல் – வழியாக அனாயசமாக ஓர் ‘உள்ளேன் ஐயா’ சொல்லி அமர்கிறார் சாம்ராஜ்.

IMG_2143

இக்கட்டுரைகளில் தான் சொல்லவந்த விஷயங்களுக்கு சாம்ராஜ் அளிக்கும் ஒப்புமைகள் தனித்துவமானவை. பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் இடதுகை சுழல்பந்து வீச்சாளர் அப்துல் ஹாதீர், முதலில் ஏதோ நடுவருக்குப் பந்துவீச வருவதுபோல அவரை நோக்கி ஓடிவந்து, ஒரு புள்ளியில் சடக்கென்று ‘L’ வடிவில் திரும்பி மட்டையாளரை நோக்கிப் பந்துவீசுவதுபோல லிபி ஆரண்யா தன் கவிதைகளை எங்கேயோ தொடங்கி சட்டென்று கோணத்தை மாற்றி நம்மைத் தகர்த்துவிடுகிறார் என்று ஓர் ஒப்புமை வைக்கிறார் சாம்ராஜ்.

வேடிக்கையான ஒப்புமையாக முதலில் ஒரு புன்னகையை வரவழைக்கிறது என்றாலும், அதன் காட்சிப்படுத்தல் வழியாகக் கருத்து வலுவாகச் சிறைப்பிடிக்கப்படுகிறது. மேலும், கவிதையின் சடக்கென்று திரும்பும் தன்மை மட்டுமின்றி, பந்துவீச்சாளரின் கையிலிருந்து விடுபடும் பந்தின் வேகத்தைப் போலவே கவிஞரின் சொல்லின் வேகம் நம்மை ஆக்கிரமிப்பதாக அந்த ஒப்புமை பொருந்திப் போவதிலுள்ள அழகும் ரசனைக்குரியது. கவிஞர் இசையின் ‘வரலாறு’ கவிதையைப் பற்றிச் சொல்லும்போது, “நம் சமகாலத்தின் தத்துவச் சிக்கல்களையும் வரலாற்றுத் துயரங்களையும் ஒரு மீன் விற்பவனைப் போல சைக்கிள் பின் கேரியரில் வைத்துக்கொண்டு அலட்சியமாய்ப் போகிறார் இசை” என்று எழுதுகிறார். வரலாற்றுத்துயரம் ஒரு சைக்கிள் கேரியரில் போகும் வினோதமான அக்காட்சி… நெடுங்காலம் என் நினைவில் தங்கப்போகும் ஒன்று.

சில படைப்பாளுமைகளைக் குறித்து ஒருவித வழிபாட்டுணர்வுடன் கட்டுரைகளை எழுதியிருக்கிறார் என்றாலும் அவ்வாளுமைகளிடம் கலைக்குறைபாடு தென்படும் இடங்களை மறைக்கத் தன் உணர்வை சாம்ராஜ் அனுமதிக்கவில்லை. வண்ணதாசனின் கடிதங்கள் “உத்திரத்தில் கட்டி இழுத்துப் பார்க்கப்பட்ட நைலான் கயிறுகளை அறுத்திருக்கின்றன” என்று ஒரு கட்டுரையில் போற்றும் அதேவேளையில், வண்ணதாசனின் பிற்காலக் கவிதைகளைக் குறித்து, “இரண்டாயிரத்துப் பத்து வாக்கில் முகநூலுக்குள் அவரது ரயில் நுழைகிறது. விருப்பக்குறிகள் வேறேதோ செய்கின்றன. ஜன்னலுக்கு வெளியே செயற்கையான வானவில்கள் தோன்றுகின்றன” என்று இன்னொரு கட்டுரையில் நேர்மையாக விளம்பவும் இவரால் முடிகிறது.

நாகப்பட்டினம் சௌந்தரராஜ பெருமாள் கோவில் பிரகாரத்தில், ஓரிடத்தில், இரண்டு பாதங்களைப்போல ஒரு வடிவம் தரையில் பொறிக்கப்பட்டிருக்கும். அதன்மீது ஏறி நின்று பார்த்தால் அக்கோவிலின் அனைத்து கோபுரக் கலசங்களும் தெரியும். உச்சிகளை மட்டும் ஒரே இடத்தில் நின்றபடி பார்ப்பதற்கு வசதியாக அப்படி ஓர் இடம். ஓர் இலக்கியப் படைப்பை, நூலை, ஆளுமையை, திரைப்படத்தை எந்த இடத்தில் நின்று பார்த்தால் உச்சங்கள் தெரியுமோ அங்கு நின்று இக்கட்டுரைகளை சாம்ராஜ் எழுதியிருக்கிறார். சொற்கூர்மை, பகடி எதற்கும் குறைவில்லை என்றாலும் இடுப்புக்குக்கீழே தாக்குவதில் அவருக்கு நிச்சயமாக ஆர்வமில்லை.

கவின் மலரின் ‘நீளும் கனவு’ சிறுகதைத் தொகுப்பு குறித்து எழுதுபவர் அத்தொகுப்பின் சிறப்பான கதைகளாகத் தான் கருதுபவற்றை எடுத்துக்கொண்டு அவற்றின் குறைநிறைகளைப் பேசுகிறார். குறிப்பாக ‘மீனுக்குட்டி’ கதையில், தான் பிறந்தபோது பெண்ணாகவும் கருப்பாகவும் பிறந்ததற்காக அப்பா அழுதார் என்று பாட்டி சொல்லிக் கேள்விப்படும் மீனு, ஒருநாள் முழுக்கக் காத்திருந்து, அப்பாவிடம் அதைக் கேட்கிறாள். ஆமாம் என்பவர், “அப்ப மீனுக்குட்டின்னு தெரியாதுல்ல… ராசாத்தின்னு தெரிஞ்சிருந்தா அழுதுருக்க மாட்டேன்” என்கிறார். அப்படியான மெய்யுருகும் தருணத்தைக் கொண்டிருக்கும் அற்புதமான கதை எப்படியான சிற்சிறு போதாமைகளால், கோளாறுகளால் வாசகரிடமிருந்து அன்னியப்பட்டுப் போகிறது என்று விளக்கிச் செல்கிறார் சாம்ராஜ். இலக்கியப் படைப்பை விமர்சனத் தராசில் ஏற்றி எடைபோட்டு இன்னவிலை என்று சொல்லிவிடாமல், முத்து திரண்டுவிட்டது ஆனால் சிப்பிதான் இன்னும் மூடியே இருக்கிறது என்று திறந்து காட்டுகிறார்.

மலேசியக் கவிதைகளை விமர்சிக்கும்போதும், ஓரளவுக்காவது நவீனக் கவிதைகளின் தன்மைகளைக் கொண்டுள்ள கவிதைகளை எழுதியவர்களிடம் உரையாடுவதற்கே அதிகமாக முயல்கிறார். அவர்களிடமே மேன்மேலும் குறைகளைக் காண்கிறார். வகுப்பிலேயே நல்ல மாணவனைக் கடிந்துகொள்வதைப் போன்ற அபத்தமாக முதலில் தோன்றினாலும், “மற்ற எல்லோரையும்விட இவர்களுக்குக் கூடுதல் பொறுப்பு இருக்கிறது” என்ற சாம்ராஜின் நியாயம் ஏற்கத்தக்கதே. தமிழகத்தில் காலாவதியான பாடுபொருள்கள், மொழி போன்றவற்றை இக்கவிஞர்கள் பயன்படுத்துவதை, மேலை நாடுகளில் காலாவதியான தொழில்நுட்பங்கள் மூன்றாம் உலக நாடுகளில் கோலோச்சுவதுடன் ஒப்பிடுகிறார்.

A joke is a very serious thing என்று சொல்லப்படுவதுண்டு. கவிதை, சிறுகதை, நாவல், வரலாறு குறித்த கட்டுரைகளில் ஏன் அஞ்சலிக் கட்டுரைகளில்கூடத் திரைப்படக் காட்சிகளை, வசனங்களைப் இலகுவாகத் துணைகொள்ளும் சாம்ராஜ், திரைப்படங்களைக் குறித்த தன் கட்டுரைகளில் ஒரேயொரு ‘கோபாலகிருஷ்ணன் – சப்பாணி’ குறிப்பைத்தவிர அறவே திரைப்பட வசனங்களுக்கு இடமளிக்கவில்லை! ஆனாலும் வாசிப்பில் சுவாரஸ்யம் பொட்டுகூடக் குறையவில்லை.

நாஞ்சில் நாடனின் ‘தலைகீழ் விகிதங்கள்’ நாவல், வீட்டோடு மாப்பிள்ளையாவதன் துயரத்தை, எழுதப்பட்டு நாற்பதாண்டுகள் கழித்து இன்று வாசித்தாலும் வாசிப்பவரைத் துயர்கொள்ளச்செய்யும் என்று குறிப்பிட்டுவிட்டு, “அது தங்கர்பச்சான் இயக்கத்தில் திரைப்படமாகும்பொழுது படத்தின் தலைப்புக்கு மிக நேர்மையாக இருந்தது. படத்தின் தலைப்பு, சொல்ல மறந்த கதை” என்று சாம்ராஜ் எழுதும்போது எப்படி சுவாரஸ்யம் குன்றும்?

ஜெயகாந்தனின் ‘ஊருக்கு நூறு பேர்’ நாவல் அதே பெயரில் படமானபோது “ஊருக்கு நூறுபேர் கூடப் பார்க்காததுபோல் பார்த்துக்கொண்டது திரைப்படம்” என்பது இன்னொரு வரி. சில பிரபல எழுத்தாளர்களைக் குறிப்பிட்டு, “புலி மார்க் சீயக்காய்க்கும் புலிக்கும் உள்ள தொடர்பு என்னவோ அதுவே இவர்களுக்கும் இலக்கியத்துக்குமான தொடர்பு” என்று ஒரு விளாசல். ‘அம்மா வரவில்லை’ என்ற இக்கட்டுரை எடுப்பிலிருந்து முடிப்புவரை ஒரு சரவெடி.

“எடுத்துக்கொண்ட தலைப்பிற்குத் தொடர்புள்ள புள்ளிவிவரங்களை அடுக்கி, அதன் சுருக்கமான வரலாற்றைக் கோர்த்து, தான் சொல்லவந்ததை வலியுறுத்தும் சம்பவமொன்றை இணைத்து, இறுதியில் இந்தியப் பிரதமருக்கு ஒரு கேள்வியுடன் முடித்துவிட்டால் ஒரு சமஸ் கட்டுரை தயார்” என்று சமஸுடைய ‘யாருடைய எலிகள் நாம்?’ கட்டுரைத் தொகுப்பைக் குறித்து எழுதியிருந்தேன். அப்படி எந்த சூத்திரத்திற்குள்ளும் சிக்காதவை  சாம்ராஜுடைய கட்டுரைகள்.

விவிலிய வசனங்களும் திரைப்பட வசனங்களும் இடம்பெறுவது பல கட்டுரைகளில் ஒரு பொதுவான அம்சம் என்றாலும், அள்ளிப் போடாமல் கிள்ளிப்போட்டு முடித்துவிடுகிறார் என்பதால், அவை சுவைகூட்டுகின்றனவே ஒழிய சலிப்பூட்டுவதில்லை. விரிவான மேற்கோள்கள் உண்டு என்றாலும் ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு குறித்த ஒரு கட்டுரை தவிர பிறவற்றில் சரியான விகிதத்திலேயே கலந்துள்ளன என்பேன். பெரும்பாலான கட்டுரைகள் பேசப்பட்டு எழுதப்பட்டவை (அல்லது எழுதப்பட்டுப் பேசப்பட்டவை) என்பதால் அவற்றில்  கேட்போர் குறித்த ஓர்மை தவிர்க்கவியலாமல் தங்கிவிட்டது என்று தோன்றியது. அதனால் பாவமில்லை.

அபாரமான ஒப்புமைகளின் வழியாக அழுத்தமான காட்சிப்படுத்தல்கள், வழிபாட்டுணர்வில் மங்கிவிடாத நீதியுணர்வு, உச்சங்களை மட்டுமே உரைத்துப் பார்த்தல், மறைந்துகிடக்கும் மாணிக்கங்களைத் தொட்டுக்காட்டல், இலக்கியவாதிகளிடம் பொறுப்பைச் சுட்டிக்காட்டல், சூத்திரத்திற்குள் அடங்காத ஓட்டம் என்று முக்கியமான பல அம்சங்களுடன் இலகுவான மொழியில், களிநயமிக்க வழியில் இத்தொகுப்பின் கட்டுரைகளை சாம்ராஜ் எழுதிக்காட்டியிருக்கிறார். இவை போதாதென்று அவரது தீர்க்கமான சிந்தனைகள், பார்வைகள் பலவும் இக்கட்டுரைகளுக்கு வலுசேர்க்கின்றன.

இடதுசாரிப் படைப்பாளர்கள் ஒன்று பிரச்சாரமாகவே தொடர்கின்றனர் அல்லது இலக்கியத்தைவிட்டே விலகிவிடுகின்றனர் என்று எடுத்துக்காட்டுகளுடன் தொடங்கி, அவ்விரு முனைகளுக்கு நடுவே அழகியலுடன் பாலமிடும் படைப்பாளியை அடையாளம் காட்டி விளக்கும் ஒரு கட்டுரை சாம்ராஜின் இலக்கியத் திறனை மட்டுமின்றி இலக்கிய விமர்சனத்தின் இடத்தையும் காட்டுகிறது. படைப்பாளிக்கும் வாசகருக்கும் இடையே செயல்படும் மொழிபெயர்ப்பாளர் தன் மிகப்பெரிய இல்லாமையைக்கொண்டே தன் இருப்பை வலுவாக்கவேண்டும் என்று வாதிடும் இன்னொரு கட்டுரை மிக ஆழமானது.

மலையாளத் திரைப்பட உலகு, பிற தென்னிந்தியத் திரைப்பட உலகங்களைப்போல, ஒரு பெரிய நகரத்தைச் சுற்றி அமையாததால் அன்றாட வாழ்வின் யதார்த்தத்தைக்கூட கற்பனை செய்யவேண்டிய துரதிருஷ்டம் உருவாகாமல் தப்பிக்கிறது என்கிற பார்வை ஒருகட்டுரையில் ஸ்தம்பிக்க வைத்தது. ‘ஏ.ஜி.கே’ என்ற இரண்டே பக்க அளவுள்ள கட்டுரையின் அழுத்தம், அந்தணப்பேட்டை கோபாலசாமி கஸ்தூரிரங்கனைக் குறித்து மணிக்கணக்கில் தேடவைத்தது.

படைப்பூக்கமுள்ள அபுனைவு (creative non-fiction) என்று குறிப்பிடுவதுதான் என் வழக்கம். ஆனால் சாம்ராஜ் கட்டுரைகளை வாசித்தபின் அப்பெயர் போதவில்லை. உயிர்த்துடிப்புள்ள அபுனைவு என்று சொல்லத் தோன்றுகிறது.

கவிதை, புனைவு வகைப் பயிர்கள் சிங்கப்பூர் இலக்கியவெளியில் குறுவை, சம்பா, தாளடி என்று மூன்றுபோக விளைச்சலில் செழிக்கின்றன. சாகுபடிக்குத் தேவையான நவீனத் தொழில்நுட்பங்களை குறுகிய, நீண்டகால அளவில் அவ்வப்போது உள்நாட்டு, வெளிநாட்டுக் கார்வாரிகள் அளிப்பதுடன் ஒன்னடி மன்னடியாக இருந்து நீராணிக்கமும் பார்த்துச் செல்கின்றனர். படைப்பூக்கமுள்ள அபுனைவு மட்டும் முறையான சாகுபடியின்றி, அரிதாகப் பெய்யும் மழையில் மெலிதாகத் தலைகாட்டும் மானாவாரிப் பயிராகவே நீடித்துவருகிறது.

ஆய்வுக்கட்டுரைகளை நீக்கியபின் எஞ்சும் சொற்பமானவற்றிலும் உட்கார வைத்துப் பாடம் நடத்தும் கட்டுரைகள் மிகுதி, தோளில் கைபோட்டு நடந்துகொண்டே பேசும் கட்டுரைகள் குறைவு. நேரடியாக இல்லாவிட்டாலும் கொடி அடுப்பிலாவது அபுனைவுக்குக் கொஞ்சம் சூடு காட்டலாம். விழிப்புணர்வே மருந்து என்று நம்புகிறேன். மூவந்தியில் சூலுறும் மர்மம் போன்ற கட்டுரைத் தொகுப்புகள் பல வாசகர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் உத்வேகத்தையும் உற்சாகத்தையும் அளித்து ஒரு மாற்றத்தைக் கொணரவும் உதவக்கூடும். அந்தவகையிலும் இத்தொகுப்பு நமக்கு முக்கியமானது.

***