கோழியிலிருந்துதான் முட்டை வருகிறதென்றால், முட்டை அளவுக்கு ஒரு துளை கோழியின் உடலில் இருந்தாக வேண்டுமே என்ற கேள்வி ஆறுவயது சிறுமி ஜேனை வெகுநாட்களாகவே அரித்துக்கொண்டிருந்தது. அன்று எப்படியும் அதற்கு விடையைக் கண்டே தீருவது என்று கோழிகளை உள்ளே வைத்துக் கவிழ்த்துவிடும் பெரிய பஞ்சாரக் கூடைக்குள் புகுந்துகொண்டாள்.

நேரம் ஓடிக்கொண்டே இருந்தது ஆனால் பஞ்சாரத்துக்குள் இருந்த கோழி, முட்டை போடுவதாகத் தெரியவில்லை. ஆயினும் ஜேன் பொறுமை இழக்கவில்லை. ஏறக்குறைய ஆறுமணி நேரம் கழித்துக் கோழி முட்டையிட்டது. ஜேனுக்கும் விடை கிடைத்தது. கொள்ளை மகிழ்ச்சியுடனும் வெற்றிக் களிப்புடனும் வெளியே வந்தாள். அப்போதுதான் மகளைக் காணவில்லை என்று புகாரளிக்க அவளது தாயார் காவல் நிலையத்திற்குப் புறப்பட்டுக் கொண்டிருந்தார்.

கோழிக்கூடைக்குள் தான் கண்ட அதிசயத்தை மகிழ்ச்சியுடன் விளக்கத் தொடங்கினாள் ஜேன். தாயும் பொறுமையாகக் கேட்டார். மகளைக் கடிந்துகொள்ளவோ அவள்மீது ஆத்திரப்படவோ இல்லை. மாறாக மேலும் கேள்விகள் கேட்டு விடைகளைக் கண்டுவரச் சொன்னார், பாராட்டவும் செய்தார். அவர் எப்போதுமே அப்படித்தான், ஜேன் மண்புழுக்களைப் படுக்கையில் வைத்து மணிக்கணக்கில் உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தபோதும் கூட! அவை இறந்துபோகும் என்பதால் அவற்றை மீண்டும் மண்ணில்விட்டு கவனிப்பைத் தொடருமாறு அறிவுறுத்தினார். இதெல்லாம் நடந்தது 1940களின் தொடக்கத்தில், இங்கிலாந்திலுள்ள ஒரு கிராமத்தில்.

ஏனோ சிறுமி ஜேனுக்கு உயிரினங்களின் மீதும் அவற்றின் நடவடிக்கைகளைக் கண்காணிப்பதிலும் அப்படியொரு ஆர்வம். ஆனால் அடைத்து வைக்கப்படிருக்கும் விலங்குகளைக் காண்பதில் அவளுக்கு ஒருபோதும் விருப்பமிருந்ததில்லை. இயற்கையுடன் இயைந்து அதனதன் போக்கில் வாழும் உயிரினங்களைக் காணும்போது தானும் அவற்றின் உலகில் ஒன்றுகலந்து வாழமுடியாதா என்ற ஏக்கம் அவளுக்குள் ஆழமாக வேர்விட்டது. பள்ளியில் நன்றாகப் படித்தாள் என்றாலும் பள்ளி நாட்களைவிட வாரயிறுதியும் விடுமுறை நாட்களுமே அவளது விருப்பம். அதிகாலையில் எழுந்து பொழுதுமுழுக்கப் போவது அவளுக்குப் புழுபூச்சிகளுடனும் விலங்குகளுடனும்தாம்.

ஜேன் வீட்டில் நாய் வளர்க்கவில்லை. ஆனால் அண்டை வீட்டாரின் நாய் இவளிடம்தான் பொழுதைக் கழித்தது. பந்தை விட்டெறிந்தால் கவ்விக்கொண்டு வரும்படி பழக்குவது நாய் வைத்திருப்போர் வழக்கமாகச் செய்வதுதான். ஆனால் மாடியிலிருந்து விட்டெறிந்ததும் பந்து துள்ளித்துள்ளிக் கடைசியாக எங்கே சென்று நிற்கிறது என்பதைப் பார்த்துவிட்டு, அதற்கேற்ப எந்த வழியாகப் போகலாம் என்று நாய் திட்டமிடுவதை ஜேன் கவனித்தாள். மேலும் வெயில் சுள்ளென்று விழும் நேரத்தில் பந்தை எறிந்தால், வெளியே செல்லும் நாய் அருகிலுள்ள நீர் நிலையில் இறங்கி ஒரு சிலுப்பு சிலிப்பி வெக்கையைத் தணித்துக்கொண்டு திரும்புகாலில் பந்தைக் கவ்வி வருவதையும் அவள் பார்த்தாள். மனிதர்களைப் போலவே நாய்கள் சிந்திக்கின்றன, திட்டமிடுகின்றன என்பதெல்லாம் அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது.

புத்தகம் வாசிக்கும் பழக்கம் ஜேனுக்குச் சிறுவயதிலேயே இருந்தது. அதிலும் மனிதர்கள் விலங்குகளின் உலகத்தில் கலந்துறவாடி வாழும் கதைகளைக்கொண்ட (டாக்டர் டூலிட்டில், ஜங்கிள் புக், டார்ஸான்) புத்தகங்களே அவளது பிரியம். டார்ஸானின் இணையாகக் கதையில் வரும் பெண்ணின் பெயரும் ஜேன். தன்னையே அவளிடத்தில் கற்பனை செய்துகொண்டாள். பெரியவளானதும் ஜேன் செய்ய விரும்பியதெல்லாம் நாளெல்லாம் விலங்குகளைப் பார்த்துக்கொண்டிருந்துவிட்டுப் பிறகு பார்த்ததைப் புத்தகங்களாக எழுதவேண்டும் என்பதுதான். அந்தச் சிறுமிதான் பின்னாளில் புகழ்பெற்ற முதனியியலாளராக (primatologist) ஆன ஜேன் கூடால் (Jane Goodall).

Siva-2-pc-meerdotcom

pc: meer.com

இங்கிலாந்தில் 1934-இல் பிறந்த ஜேனின் தந்தை ஒரு பொறியியலாளர், தாயார் எழுத்தாளர். மனதிற்குள் டாக்டர் டூலிட்டிலையும் டார்ஸானையும்போல ஆப்பிரிக்க வனாந்திரத்தில் விலங்குகளுடன் பழகவேண்டும் என்ற ஆசை ஜேனுக்குள் தொடர்ந்து வலுவடைந்தது என்றாலும், பள்ளிப்படிப்பு முடிந்ததும், அக்காலப் பெண்களின் வழக்கப்படி உதவியாளர் (secretary) படிப்பு முடித்தால் எங்கும் வேலை கிடைக்கும் என்று கருதி அப்பட்டயப் படிப்பை முடித்தார். பிறகு ஒரு மருத்துவரிடம், அதன்பிறகு பல்கலைக்கழகத்தில், ஆவணப்பட நிறுவனத்தில் என இலக்கின்றி ஏதேதோ வேலைகளைச் செய்துகொண்டிருந்தார்.

வேலைபோகப் பிற பொழுதுகளில் ஆப்பிரிக்க விலங்குகளைக் குறித்துப் புத்தகங்களிலும் அருங்காட்சியங்களிலும் கற்பதிலேயே இன்புற்று வந்தார். அந்தசமயத்தில் பள்ளித்தோழி ஒருவர் பெற்றோருடன் கென்யாவிற்குப் புலம்பெயர்ந்துவிட்டதாகவும் அங்கு வந்தால் தன்னுடன் தங்கலாம் என்றும் ஜேனுக்குக் கடிதம் எழுதவும் உடனடியாகக் கப்பல் பயணத்திற்குப் பணம் சேர்க்கத் தொடங்கினார் ஜேன். உணவகங்களில் பரிமாறுபவராக வேலைக்குச் சேர்ந்தார். அங்கு தேட்டையாக வேலைசெய்து பணத்தைச் சேர்த்துத் தன் கனவுதேசமான ஆப்பிரிக்காவிற்கு 23வது வயதில் பயணமானார்.

கென்யாவில் தன் தோழியுடனும் வனாந்திரத்திலுமாக ஒருமாதத்தைக் கழித்தபின் அங்கேயே வேலை தேடினார். அப்போது, விலங்குகளின்மீது ஆர்வமிருப்பதால் லூயிஸ் லீக்கியைச் சென்று பார்க்கச்சொல்லி ஒருவர் ஜேனிடம் சொன்னார். லூயிஸ் லீக்கியும் அவரது மனைவியும் மனிதரின் தொடக்கத்தைப் புதைபடிமங்களைக்கொண்டு ஆராயும் ஆய்வாளர்கள். அதிலும் லீக்கி ஆப்பிரிக்காவிலேயே பிறந்து வளர்ந்த வெள்ளைக்காரர். ஸ்வாஹிலி மொழி சரளமாகப் பேசக்கூடியவர். ஜேன் சென்ற நேரம் லீக்கியின் உதவியாளர் வேலையை விட்டிருந்தார். கையோடு ஜேன் லீக்கியிடம் வேலைக்குச் சேர்ந்துவிட்டார். ஜேனின் ஆப்பிரிக்க விலங்குகள் குறித்த அறிவு லீக்கிக்கு ஆச்சரியத்தை அளித்தது.

Siva-4-pc-janegoodall.org

pc: https://janegoodall.org/

ஆப்பிரிக்காவுக்கு வந்துவிட்டோம், நல்ல வேலை ஒன்றும் கிடைத்துவிட்டது என்று ஜேன் திருப்தி அடைந்தாலும், ஆயிரக்கணக்கான ஆண்டுக்குமுன்பே இறந்துவிட்ட நம் ‘முன்னோர்களின்’ மண்டையோடுகளையும் எலும்புகளையும் அவர்கள் விட்டுச்சென்ற கருவிகளையும் தோண்டி எடுப்பதிலும், அவற்றை அடிப்படையாகக்கொண்டு மனிதரின் தொடக்ககாலத்தைக் குறித்த அறிவியல்பூர்வமான வரலாற்றை உருவாக்குவதிலும் ஜேனுக்கு அவ்வளவு ஆர்வமில்லை. அவரது ஆர்வமெல்லாம் உயிருடன், சுதந்திரமாக உலவிக்கொண்டிருக்கும் விலங்குகளை அவதானிப்பதே.

நல்லவாய்ப்பாக அந்த நேரத்தில் லீக்கிக்கும் அப்படி ஒரு தேவை இருந்தது. கற்கால மனிதரின் எச்சங்களைக்கொண்டு அவர்களின் காலத்தையும் உருவத்தையும் கணிக்க முடிந்ததே தவிரப் பழக்கவழக்கங்களைக் கண்டறிய இயலவில்லை. அதுவும் கிடைத்தால் தனது ஆய்வு முழுமையடையும் என்று லீக்கிக்குத் தோன்றியது. ஆகவே மனிதருடன் ஒரே முன்னோர்களைக்கொண்ட சிம்பன்சி, கொரில்லா, ஓராங் ஊத்தான் ஆகிய முதனிகளை (primates) காட்டுக்கே சென்று தங்கி கவனித்து ஆராயும் திட்டமொன்றை லீக்கி யோசித்திருந்தார். அதற்குப் பொருத்தமான ஆட்களையும் தேடிக்கொண்டிருந்தார்.

சிம்பன்சியை ஆராயும் வேலைக்குத் தான் தயார் என்று ஜேன் சொன்னதும், லீக்கி புன்னகையுடன், “உன்னிடமிருந்தே வரட்டும் என்றுதான் காத்திருந்தேன்” என்றார். தனக்கு விலங்கு ஆய்வு முறைமைகளில் முறையான கல்வியோ பயிற்சியோ இல்லையே என்று கவலைப்பட்ட ஜேனிடம், ஏற்கனவே எந்த முன்முடிவுகளும் இல்லாத பார்வையே ஆய்வுக்கு நல்லது என்றார் லீக்கி. மேலும் ஆண்டுக்கணக்கில் காட்டில் தங்கி, கிடைத்ததைக்கொண்டு, விருப்பத்துடன் விலங்குகளுடன் வாழவேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக அசாத்தியப் பொறுமை வேண்டும். இவற்றை மனதிற்கொண்டு பார்த்தபோது வேறு எவரைவிடவும் ஜேன் பொருத்தமாகவே இருந்தார்.

ஜேன் வனத்தில் தங்கி ஆராயத் தேவையான பொருளாதார உதவியைத் திரட்ட லீக்கி முழுமூச்சாக இறங்கினார். அது ஒருபக்கம் நடக்கும்போது சிம்பன்சியைக் குறித்துப் புத்தக அறிவை வளர்த்துக்கொள்வதற்காக ஜேனை மீண்டும் இங்கிலாந்துக்கு அனுப்பிவைத்தார். பணத்தையும் அனுமதியையும் திரட்டி, தான்சானியா காட்டுக்கு ஜேனை அனுப்ப முயன்றபோது ஒரு பெண் தனியாக இப்படியான ஆபத்தான வேலைக்குச் செல்லக்கூடாது என்று அனுமதி மறுக்கப்பட்டது. ஜேனுடைய தாய் தன் மகளின் கனவை நனவாக்க அவருடன் துணைக்குச் சென்றார். ஜேன் தன் 26-வது வயதில் (1960) தான்சானியாவின் கோம்பி வனப்பகுதிக்குள் சிம்பன்சி ஆய்வுக்காக நுழைந்தார்.

சிம்பன்சிகளைத் தேடிக் காலையிலேயே மலைமுகடுகளுக்குத் தொலைநோக்கியுடன் ஏறிவிடுவதும், காட்டில் நடந்து, தவழ்ந்து திரிவதும், அன்றாடம் ஆபத்தான விலங்குகளை எதிர்கொள்வதும், குறைந்தபட்ச வசதிகளுடன் கூடாரத்தில் வாழ்வதும் எனப் பல மாதங்கள் ஓடின. ஆனால் ஆய்வில் ஏதும் முன்னேற்றமில்லை. தூரத்தில் இவரைக் கண்டுவிட்டாலே சிம்பன்சிகள் மாயமாக மறைந்தன. வாலுள்ள குரங்குகள் கூடாரத்திற்கு வந்து வாழைப்பழம் வாங்கிச் சென்றதுதான் இவருக்கு ஒரே ஆறுதல். ஆயினும் இந்தத் தொடக்க காலத்திலேயே வாலுள்ள குரங்குகளைப்போல பெருங்குழுக்களாக அல்லாமல் சிம்பன்சிகள் ஆறு உறுப்பினர் கொண்ட சிறு குழுக்களாகவே வாழ்கின்றன என்பதைக் கண்டார். அதேவேளையில் தேவையானபோது உரத்து ஒலியெழுப்பி ஒரு சமூகமாக அவை திரண்டுகொள்வதையும் பார்த்தார்.

மரக்கிளைகளைக் கொண்டு சிம்பன்சிகள் படுக்கை அமைப்பதையும் தலைக்கு வசதியாக இலைதழைகளைச் சேர்த்துத் தலையணை செய்வதையும் தூரத்திலிருந்தே பார்த்துப் பதிவுசெய்தார். ஜேனின் பொறுமைக்குப் பலன் கிடைத்தது. அங்குலம் அங்குலமாக இவருக்கும் சிம்பன்சிக் கூட்டத்திற்கும் இடைவெளி குறைந்தது. ஓராண்டில் சுமார் நூறு மீட்டர் தூரத்திற்குள் வந்தார்.

ஒருநாள் ஜேனின் கூடாரத்திற்கு அருகில் ஒரு பெரிய ஆண் சிம்பன்சி வந்தது. அதன் தோற்றத்தை வைத்து  ‘டேவிட் வெண்தாடியன்’  (David Greybeard) என்று பெயரிட்டார். வெண்தாடியன் மட்டும் துணிந்து அணுகியிராவிட்டால் ஒருவேளை சிம்பன்சி உலகுக்குள் தன்னால் செல்லவே முடியாமற் போயிருக்கும் என்று பின்பு பலமுறை ஜேன் குறிப்பிட்டுள்ளார். காலப்போக்கில் ஜேனின் கையிலிருந்தே வாழைப்பழத்தை வாங்கிச்செல்லும் அளவுக்கு டேவிட் நெருங்கியது. பிற சிம்பன்சிகளையும் அது அழைத்து வந்தது. அதைவிட டேவிட் செய்த ஒரு காரியம் மனிதரின் வரையறையையே மாற்றியது!

ஒருநாள் காலைப்பொழுதில் கரையான் புற்றுக்கு அருகில் அமர்ந்து கரையான்களைத் தின்றுகொண்டிருந்தது டேவிட். ஒரு சிறு கிளையை ஒடித்து, அதிலிருந்த இலைகளை வழித்துத் தள்ளிவிட்டு, குச்சியைக் கரையான் புற்றுக்குள் நுழைத்தது. சிறிது நேரம் வைத்திருந்து குச்சியில் கரையான்கள் போதுமான அளவுக்கு ஏறியவுடன் குச்சியை வெளியே இழுத்துக் கரையான்களைச் சுவைத்தது. அதை ஆச்சரியத்துடன் பதிவுசெய்த ஜேன், லீக்கிக்குத் தகவல் அனுப்பினார். லீக்கி பிறகு இவ்வாறு உலகுக்கு அறிவித்தார்:

“மனிதர்களை நாம் கருவி செய்யும் திறனுள்ளவர்கள் என்று வரையறுத்து வருகிறோம். ஒன்று நாம் அந்த வரையறையை மாற்றவேண்டும் அல்லது சிம்பன்சிகளையும் மனிதர்களாக ஏற்கவேண்டும்”!

Siva-8-pc-TJGI

ஒருவேளை உணவை மட்டும் உண்டு காட்டில், மெலிந்து 40 கிலோ எடையுடன், ஜேன் சிம்பன்சிகளின் பின்னால் திரிந்துகொண்டிருந்தார். ஒரு நிமிடத்தைக்கூட வீணாக்க அவர் விரும்பவில்லை. ஒவ்வொரு நிமிடமாக சிம்பன்சி நடவடிக்கைகளை நோட்டுப்புத்தகத்தில் பதிவுசெய்து கொண்டிருந்தார். முதலில் வேகமாகக் கிறுக்கிக்கொள்வதும் பிறகு கூடாரத்திற்குத் திரும்பியதும் அனைத்தையும் தெளிவாக எழுதுவதும் என உழைத்தார். ஒவ்வோரிரவும் எழுதிமுடித்த பிறகுதான் உணவு, உறக்கம். மீண்டும் அதிகாலையில் எழுந்துவிடுவார்.

நெருக்கமாகப் பார்க்கத் தொடங்கியதும் மனித முகங்களைப் போலவே சிம்பன்சிகளையும் அடையாளம் கண்டுகொண்டார். அவற்றுக்குப் பெயரிட்டார். அவற்றின் குணாதிசயங்கள் தனித்துவங்களுடன் அமைந்திருப்பதைக் கண்டார். ஒரு குழுவில் ஒன்றுக்கொன்று உதவிக்கொள்வதையும், பெண் சிம்பன்சி இணைசேரும் பருவத்தில் தன்னுடன் கூடுவதற்கு அனேக ஆண் சிம்பன்சிகளை அனுமதிப்பதையும் பதிவுசெய்தார். ஆய்வின் தகவல்கள் வெளியுலகில் ஆர்வத்தைக் கூட்டியது. லீக்கிக்கு ஆதரவும் அதிகரித்தது. ஜேனுடன் சென்று சிம்பன்சிகளைப் படம்பிடிக்க ஹியூகோ லவிக் என்ற ஒளிப்படக்காரர் அனுப்பப்பட்டார். அவரும் இயற்கை ஆர்வலர். ஜேன் ஓராண்டில் அவரையே மணந்துகொண்டார்.

இக்காலகட்டத்தில் ஜேனின் ஆய்வுக் குறிப்புகளையும் சிம்பன்சி ஆய்வின் முக்கியத்துவத்தையும் அடிப்படையாகக்கொண்டு, இளநிலை பட்டம்கூடப் பெறாத ஜேன், நேரடியாக கேம்பிரிட்ஜ் பல்கலையில்  முனைவர் பட்ட ஆராய்ச்சியில் சேர்வதற்கு லீக்கி ஏற்பாடு செய்தார். ஜேனும் துடிப்பாகச் செயலாற்றி ஆய்வை முடித்ததும் முனைவர் ஜேனாக அதே பழைய ஆர்வத்துடன் சிம்பன்சிகளைக் கவனிக்க  மீண்டும் கோம்பி காட்டுக்குள் சென்றுவிட்டார்.

தோளில் தட்டுவது, கைகொடுப்பது, கட்டியணைப்பது, முத்தமிடுவது என்று மனிதரின் பல வழக்கங்கள் சிம்பன்சிகளிடையே அதேவிதமான அர்த்தத்தில் புழங்குவதைக் கண்டார். இருவேறு சிம்பன்சி குழுக்களுக்கிடையே பெண் சிம்பன்சிகள் மட்டுமே வன்முறை இன்றி ஊடாட முடிந்தது. ஆண் சிம்பன்சிகள் எதிர்கொண்டால் அடிதடிதான். சில எல்லைத் தகராறுகள் மரணத்திலும் முடிந்தன. தலைமை ஆண் சிம்பன்சி தன் குழுவிலிருந்து இன்னொரு குழுவிற்குச் சென்றுவிட்ட பெண் சிம்பன்சியை மீட்டுவரும் சம்பவங்களும் சமயங்களில் நடந்தன!

Siva-1-pc-dailymaildotuk

நோட்டுப்புத்தகத்தில் எழுதுவதற்குக் குனியும் நேரத்தில் ஏதாவது விட்டுப்போய்விடுமோ என்று சிறிய ‘டேப் ரிகார்டரில்’ பார்ப்பதை எல்லாம் ஒலிப்பதிவு செய்தார். ஆனால் அவ்வளவையும் தட்டச்சு செய்வதற்கு ஓரிரவு போதவில்லை. அதேவேளையில் தன்னைப்போல மேலும் சிலரும் சிம்பன்சிகளைக் கவனித்தால் இன்னும் விரைவாகத் தகவல்களைச் சேகரிக்கலாம் என்று நினைத்தார். ஆய்வு மாணவர்கள் பலரும் இவருடன் தங்கவும் உதவமும் முன்வந்தனர். கோம்பி காட்டுக்குள் இருந்த அக்கூடாரம் ஆறாண்டு கழிந்தபோது, ஒரு டஜன் மாணவர்களுடன் சிம்பன்சி ஆராய்ச்சியகமாக ஆகியிருந்தது. ஜேன் அதன் இயக்குநரானார்.

ஜேனுக்கு மகன் பிறந்தபோது ஸ்வாஹிலி மொழியில் சிங்கம் என்று பொருள்படும் ‘சிம்பா’ என்று பெயரிட்டார். காட்டுக்குள் விலங்குகள் சுதந்திரமாகச் சுற்றித் திரிந்தாலும், பாதுகாப்புக்காக சிம்பா கூண்டுச் சிங்கமாகத்தான் வளரவேண்டி இருந்தது. சிம்பன்சிகள் குழந்தையைத் தூக்கிச்சென்று விடலாம். அவற்றுக்கு குரங்குக் குட்டிக்கும் மனிதக் குழந்தைக்கும் வேறுபாடு தெரியாது. வளர்ப்பதற்கல்ல, உணவுக்காக! சிம்பன்சிகள் குழுவாகச் செயல்பட்டு குரங்குகளை வேட்டையாடி உண்ணும் என்பதும் ஜேனின் கண்டறிதல்களில் ஒன்று.

ஒருபக்கம் விலங்குகள் விஷப்பூச்சிகளிடமிருந்து தன்னைக் காத்துக்கொண்டும், இன்னொருபக்கம் ஆப்பிரிக்கப் பழங்குடிக் குழுக்களிடையே ஓயாது நடந்துவந்த வன்முறைப் போராட்டங்களுக்குள் சிக்கிக்கொள்ளாமலும் சிம்பன்சி ஆராய்ச்சியைத் திறம்படச் செய்து அவற்றின் உலகிற்கு நம்மை அழைத்துச் சென்றார் ஜேன் கூடால். கருவி செய்வது உட்பட நம்முடைய பல்வேறு ‘நாகரிகப்’ பழக்கவழக்கங்களை மனிதர்கள் முதலில் கண்டறியவில்லை என்பதையும், சில தன்மைகள் இயல்பாகவும் இதர தன்மைகள் குழுவிலிருந்து கற்பதால் வருவதையும் அவரது ஆராய்ச்சி காட்டித்தந்தது. அடுத்த அரை நூற்றாண்டுக்கு அவரது ஆராய்ச்சி தொடர்ந்தது.

தற்போது 88 வயதாகும் ஜேன் கூடால் வருடத்திற்கு 300 நாட்கள் பயணத்தில் இருக்கிறார். உலகெங்கும் சென்று வனங்களையும், வன உயிர்களையும் பாதுகாக்க உரையாற்றுகிறார். அவரைக் கேட்பதற்குச் செல்லுமிடமெல்லாம் ஆயிரக்கணக்கில் மக்கள் திரள்கிறார்கள். கோவிட் காலத்தில் பயணங்கள் தடைபட்டாலும் மெய்நிகர் வழியாக மேலும் பலரைச் சென்றடைந்தார். ‘வேர்களும் விழுதுகளும்’ என்ற அமைப்பைத் தொடங்கி இயற்கைப் பாதுகாப்பை வலியுறுத்தி வருகிறார்.

கோம்பி காட்டின் கூடாராத்திற்குள் தேள், பூரான், பாம்பு புழக்கம் இருந்தது என்றாலும் இத்தனை ஆண்டுகளில் தான் ஒருமுறைகூடக் கடிபட்டதில்லை என்று ஜேன் ஓரிடத்தில் பதிவு செய்திருக்கிறார். காற்று திசைமாறி அடித்ததால் காட்டெருதின் மோப்பத்தில் சிக்காமல் உயிர்தப்பியதை இன்னொரு நூலில் எழுதியிருக்கிறார். ஜேனை சிம்பன்சி ஆய்வுக்கு அனுப்பியதைப் போலவே, லீக்கி கொரில்லாவை ஆய்வுசெய்ய காட்டுக்கு இன்னொரு பெண்ணை அனுப்பினார். ஆனால் மர்மமான முறையில் மரணமடைந்தார். கொரில்லா தாக்கியிருக்கலாம் என்று நம்பப்படுகிறது. இதையெல்லாம் பார்க்கும்போது அதிர்ஷ்டமும் ஜேனின் பக்கம் இருந்தது என்றுதான் சொல்லவேண்டும்.

ஆறு நிமிடம்கூட அமைதியாக அமர இயலாத ஆறுவயதில், ஆறுமணி நேரம் பொறுமையாக, உன்னிப்பாகக் கவனக்கும் ஆர்வம் ஜேனுக்கு இயற்கையாகவே இருந்தது. ஆனால் அவரது தாயார் ஊக்கமளிக்காமற் போயிருந்தால், ஜேன் அக்கால வழக்கப்படி இன்னொரு சாதாரண ஆங்கிலச் சீமாட்டியாக மாறியிருக்கவே வாய்ப்புகள் அதிகம். லீக்கி ஜேனுக்காகச் செய்த முயற்சிகளும் சாதாரணமானவை அல்ல.  ஆக, இயற்கையின் வரம், குடும்ப, சமூக ஆதரவு, கொஞ்சம் அதிர்ஷ்டம் – இவ்வளவும் ஒரே நேர்க்கோட்டில் அமையும்போதுதான் மானுடம் ஓரடி முன்னே எடுத்துவைக்கிறது!

ஜேன் கூடாலைப் பற்றி வாசித்தும் அவரது நூல்களை வாசித்தும் கவரப்பட்ட நான், 2017-இல் சிங்கப்பூருக்கு வந்திருந்த அவரை நேரில் காணவும் உரையைக் கேட்கவும் விரும்பினேன். முன்பதிவுசெய்து நிகழ்ச்சிக்குச் சென்றேன். ஒலிவாங்கியின் முன் வந்து நின்ற ஜேன், சிம்பன்சியைப் போலவே விட்டுவிட்டு மெல்ல உச்சஸ்தாயியை அடைந்து பிறகு தணியும்படி ஒலியெழுப்பிய பிறகு தன் உரையைத் தொடங்கினார்.

Siva-5-stylistdotcom

pc: stylist.com

பூமியின் நுரையீரல்களான கடலையும் காற்றையும் நாம் பொறுப்புடன் கவனித்துக் கொள்ளவேண்டும் என்றார். மாடுகளை இறைச்சிக்காக வளர்ப்பதில் அவற்றுக்குச் செய்யப்படும் கொடுமைகளையும், அவற்றின் உடலில் செலுத்தப்படும் அளவுகடந்த எதிர் உயிரிகளால் நமக்கு வந்துள்ள (super bugs) ஆபத்தையும் சுட்டிக் காட்டினார். கேள்வி பதில் அங்கம் களைகட்டியது. இன்றைய இளையர் இரக்கமின்றிக் கேள்வி கேட்கின்றனர்.

வருடத்தில் 300 நாட்கள் பயணம் செய்யும் ஜேன் எப்படி அவரது கரிமக் காலடிக்கு (carbon footprint) ஈடுசெய்வார் என்று ஒரு கேள்வி. ‘ஜேன் கூடால் இன்ஸ்டிடியூட்’ நட்டுள்ள மரங்கள் ஈடுகட்டும் என்றார். மேலும், “என்னை ரத்தமும் சதையுமாகத்தான் பார்க்க விரும்புகிறார்கள். என்ன செய்வது?” என்று திருப்பிக்கேட்டார். அனைவரும் சைவ உணவுக்கு மாறவேண்டுமா என்று இன்னொரு கேள்வி. தான் சிறுபிள்ளையாக இருந்தபோது வாரமொருமுறை மட்டுமே இறைச்சி உண்டதாகவும், ஆனாலும் உறுதியாக மகிழ்ச்சியாக இருந்ததாகவும் குறிப்பிட்டு, முடிந்தவரை இறைச்சி உண்பதைக் குறைத்துக்கொள்ளலாம் என்றும் வலியுறுத்தினார்.

இயற்கையுடனான உறவில் மனிதன் செய்ததிலேயே ஆகமோசமானதும் ஆகச்சிறந்ததும் என்ன என்ற கேள்விக்கு, முறையே மக்கள்தொகைப் பெருக்கத்தையும் எதிர்காலத்தைக் குறித்து மனிதன் அக்கறை கொள்வதையும் சொன்னார். சிம்பன்சிகளின் மொழி மனிதர்களின் மொழியைப் போலவே இலக்கண அமைப்புகள் கொண்டதா என்ற கேள்விக்கு, அதில் தான் நிபுணரல்ல என்று சொல்லிவிட்டு, சிம்பன்சிகள் தொடர்ந்து மொழியை மேம்படுத்துவதில் ஈடுபடுவதில்லை என்றார்.

நிகழ்ச்சி நிறைவாக அமைந்தது. உள்ளே கையை வீசிக்கொண்டு சென்ற எனக்கு வெளியே வரும்போது ஏகப்பட்ட பொறுப்புகளைச் சுமந்துகொண்டு வருவதைப்போல எடைகூடியிருந்தது. அடுத்த தலைமுறை இவரது உரையை ஒருமுறையாவது கேட்கவேண்டும். அது மனிதர்களுக்கும் நல்லது, இந்த பூமிக்கும் நல்லது.

“இந்த பூமியை நாம் முன்னோரிடமிருந்து சொத்தாகப் பெறவில்லை, நம் குழந்தைகளிடமிருந்து கடனாகப் பெற்றுள்ளோம்”

என்ற தத்துவமே ஜேன் கூடாலின் நம்பிக்கை, வாழ்க்கை!

***