ஒவ்வொரு மனிதரையும் தனித்துவமுள்ளவராக ஆக்கும் காரணிகள் இரண்டு வகை; பிறப்போடு வரும் உடல் தோற்றம் சார்ந்த அம்சங்கள், இயற்கையாக அமைவதல்லாமல் சூழலாலும் வளர்ப்பாலும் இரண்டறக் கலந்துவிடும் குணாதிசயங்கள். ஆயினும் எல்லாத் தனித்துவங்களும் நம்மை பாதிப்பதில்லை.

ஒருவரின் தனித்துவமிக்கத் தோற்றம், குணாதிசயங்கள் இவற்றுடன் நமது தனிப்பட்ட அனுபவங்களும் சேரும்போது அக்கலவை நமக்குள் ஓர் ஆளுமையாகப் படிகிறது. அவற்றுள் சில ஆளுமைகள் நம்மை ஆழமாக ஆக்கிரமிப்பதுடன் என்றென்றைக்குமாக நம்முடனேயே தங்கிவிடுகின்றனர்.

ஆயிரக்கணக்கில் முகங்களை (அவர்களின் பெயர்கள் மறந்துவிடும்!) மனிதர்கள் நினைவிற்கொள்ள இயலுமென்றாலும், நூற்றுக்கணக்கிலேயே நம்மால் ஆளுமைகளை உள்வாங்கிச் செரிக்கமுடிவதோடு ஒருவித ஸ்திரமான உறவுகளையும் நினைவுகளையும் பேணிக்கொள்ள முடிகிறது என்கின்றன ஆய்வுகள். நமது மூளையின் வடிவமைப்பும் பரிணாம வளர்ச்சியும் அப்படி.

சுமார் இருபது வயதுக்குள் தனக்குள் படிந்த நினைவுகளில் இன்னும் மங்காமல் நீடிக்கும் இருபது பேரை இத்தொகுப்பில் ‘காரெக்டர்’களாகப் படைத்து நம்முன் உலவவிட்டிருக்கிறார் மஹேஷ். இவர்களுள் மருத்துவர், பொறியாளர் உண்டு. நூலகர், தகவல் உள்ளீடு செய்வோர் உண்டு. மிதிவண்டி, வானொலி பழுது பார்ப்போர் உண்டு. பொடிக்கடை, உரக்கடைக்காரர் உண்டு. ‘பெயிண்டர்’, ஆசாரிகளும் உண்டு.

IMG_1237

கொங்கு வட்டார வழக்கு, சென்னை வழக்கு, பிராமணப் பேச்சு வழக்கு, மலையாளித் தமிழ் என காரெக்டர்கள் பேசும் மொழிகளை அழகுறவும் தோய்ந்து ரசித்து வாசிக்கும்படியும் எழுதக் கைவந்துள்ள மஹேஷ்க்கு, அவர்களை நம்மிடம் கடத்திவிடத் தேவையான நட்பூடக ஆங்கிலத் தமிழும் அனாயசமாகக் கைகொடுத்துள்ளது. இக்காரெக்டர்களை அனேக வாசகர்களிடம் விதைத்துவிடவேண்டும் என்கிற முனைப்பும் இந்த அணுகுமுறையில் தெரிகிறது.

தொழில், பின்புலம், நிலப்பரப்பு, பேச்சுமொழி, வயது, பாலினம் என இக்காரெக்டர்கள் பல்வேறு வகைகளில் வேறுபட்டிருந்தாலும் ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது அவர்களை ஒரு மேன்மையான இழை இணைப்பதைக் காணமுடிந்தது. பெரும் சுழிப்புடன் நீண்டநெடுங்காலமாக ஓடிக்கொண்டிருக்கும் மானுடப்பிரவாககத்தின் ஒரு சிறுதுளியாகவே – அவர்கள் அறிந்தோ அறியாமலோ – இக்காரெக்டர்களின் நடவடிக்கைகள் அமைந்துள்ளன. ஒருவேளை மஹேஷின் மனம் அப்படிப்பட்டவர்களிடம்தான் லயிக்கிறது என்பதும் அதற்குக் காரணமாக இருக்கலாம்.

இக்காரெக்டர்களில் பலவிதமான வாழ்க்கைகளைப் போலவே பலவிதமான மறைவுகளும் அமைகின்றன என்பது வியத்தகு உண்மை. மரணப்படுக்கையில் கிடக்கும்போது, காலத்தால் செய்த உதவியைப்பெற்றோர் விசாரிக்க வந்துகொண்டே இருந்ததால், பிறர் பொறாமைப்படும் அளவிற்கு நிறைவாக மறைந்த ‘அப்ரைசர்’ முத்துசாமி. வாழும்போது தொழில்திறமையால் நிலைத்த பெயர், அகால விபத்தொன்றில் இறுதிமுடிவுக்கு இட்டுச்செல்வதால், மரணத்திலும் நிலைத்துவிடும் ‘ஜாக்கி’ ஜோசப். வருமானம் மொத்தத்தையும் விழியிழந்தோர் பள்ளிக்கு அளித்து வாழ்ந்து, ஒருநாள் திடீரென்று, காணாமற்போகும் ‘அடை’ விஜய்.

ஜெயமோகனின் ‘அறம்’ தொகுப்பில் வரும் ஆளுமைகளைப்போல இவர்கள் அனைவருமே தன் வாழ்க்கையையே தான் நம்பும், பொருளுள்ளதாகக் கருதும் ஒன்றுக்காக முற்றாக அர்ப்பணித்துக்கொண்டவர்கள் என்று சொல்லவியலாது. ஆயினும் தனக்கு, குடும்பத்துக்கு என்று மட்டுமில்லாமல் பிறருக்காக ஏதோவொரு வகையில் ஒரு துரும்பையாவது நிச்சயமாக இவர்களுள் பலர் அசைத்திருக்கின்றனர். அந்தவகையில் இவர்கள் மேலும் அணுக்கமாக ஆகின்றனர்.

‘ஷேமமா இருப்பா. கொழந்தேளப் படிக்க வை’ என்று மரமேறிகளிடம் சொல்லி அனுப்பும் சத்திரம் ஐயரின் குரலிலும், ‘நாமளும் கொருக்குப்பேட்டைக்கு எதுனா செய்யத் தாவல?’ என்று கேட்கும் எமரோசின் குரலிலும் இருவேறு விதமாக ஒலிப்பது சக மனிதர்கள் மீதான அக்கறைதான். “மற்றவர்களுக்கான கடமைகளை ஏற்றுக்கொள்ளவேண்டிய நிபந்தனைகளின் அடிப்படையில்தான் மனிதர்கள் பிறக்கிறார்கள்” என்ற வரியை ‘அரிவாள் ஜீவிதம்’ நாவலில் வாசித்தது நினைவில் எழுகிறது.

இந்த நூலில் காரெக்டர்களான எளிய மனிதர்களிடம் ததும்பி வழிந்து நமக்குள்ளும் படியும் மனிதம், அசாத்தியமான முறையில் நம் இருப்பை இலகுவாக்குவதையும் இளைப்பாற்றுவதையும் இத்தொகுப்பை வாசிக்கும்போது உணரமுடிகிறது. அது தவறவிடக்கூடாத ஓர் அனுபவம்.

11/02/2022                                                                                                       சிவானந்தம் நீலகண்டன்

சிங்கப்பூர்

***

[மஹேஷ் குமாரின் ‘ரேடியோ நாயுடு: மனதில் நின்ற மனிதர்கள்‘ (கோதை பதிப்பகம், பிப்ரவரி 2022) தொகுப்பில் வாசகர் பார்வை என்ற தலைப்பில் வெளியானது]