உலகின் ஆக உயரமான மலையான எவரெஸ்ட்டின் உச்சியை 2012-இல் அடைந்த சிங்கப்பூர்த் தமிழர் குமரன் ராசப்பன், மலையேறும் பேரார்வத்தின் வழியாகத் தன்னைக் கண்டடைந்தவர். சாதனையாளர்களுக்கு உந்துவிசையாக அமையும் தன்முனைப்பைக் (ego) கட்டுக்குள் வைத்துத் தேவையான அளவுக்குமட்டும் பயன்படுத்தலாம் என்று நிரூபித்தவர். மனிதாபிமானத்தாலும் தொடர்சேவையாலும் நேபாள மலைவாழ் மக்களின் மனதில் நிரந்தர இடத்தைப் பிடித்தவர். அவரது கதை ஒரு சாகச, சாதனை, நெகிழ்ச்சிக் கதை.

 

குமரன் ஒரு யீஷூன் பையன். நேவல் பேஸ் தொடக்கப்பள்ளியில் படித்தவர். அதே பள்ளியில் அவரது தாய் முத்துலெட்சுமி தமிழாசிரியர். தந்தை ராசப்பன் தமிழாசிரியராக இருந்து பிறகு கல்வித்துறை அதிகாரியானவர். ராசப்பன் சிறுவயதிலேயே அவருடைய அண்ணன் செல்லப்பனுடன் சிங்கப்பூரில் குடியேறியவர். கல்வியால் முன்னேறியவர். குமரனும் குமுதமலரும் ஆசிரிய இணையரின் பிள்ளைகள். 

தொடக்கப்பள்ளியில் குமரன் உடற்கட்டிலும் விளையாட்டிலும் சராசரி மாணவராகத்தான் இருந்தார். பிறகு உண்டான ஆர்வத்தால், உயர்நிலைக்கு இராஃபிள்ஸ் கல்வி நிறுவனத்தில் சேர்ந்தபோது, விளையாட்டில் சிறந்து விளங்கவேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டார். ஆனால் அங்கோ இணைப்பாடமாக விளையாட்டில் சேர்வதற்குக் கடும் போட்டி.

குமரனுக்கு விளையாட்டுகள் கிட்டவில்லை. சாரணர் இயக்கத்தில்தான் (Scout) இடம் கிடைத்தது. முதலில் அரைமனதாகச் சேர்ந்தாலும் விரைவிலேயே சாரணியத்தின் மகத்துவத்தை உணர்ந்து முழு ஈடுபாடு காட்டத் தொடங்கினார். சிங்கப்பூரில் 1912-லிருந்து இயங்கிவரும் நூற்றாண்டு காலப் பழமை வாய்ந்த இளையர் இயக்கம் அது. சிங்கப்பூரின் முதல் பிரதமர் லீ குவான் இயூ, இரண்டாம் பிரதமர் கோ ச்சோக் டோங் இருவரும் சாரணீயர்களே 

குமரன் சிறப்பான சாரணராகச் செயல்பட்டு சிங்கப்பூர் சாரணீயத்தின் உயர்ந்த விருதான அதிபர் விருதை 2002-இல் அதிபர் நாதனிடமிருந்து பெற்றார். கட்டுப்பாட்டையும், திட்டமிடுதலையும், சமயோசிதச் செயல்பாட்டையும், விடாமுயற்சியையும் சாரணர் இயக்கத்தில் கற்றுக்கொண்ட குமரன், பத்தாண்டுகள் கழித்து இமயமலை உச்சியை அடைந்தபோது அங்கு சிங்கப்பூர்க் கொடியுடன் சாரணர் கொடியையும் ஊன்றினார். குமரனின் ஆளுமை உருவாக்கத்தில் அந்த அளவுக்கு ஆழமான தாக்கத்தை அவ்வியக்கம் அளித்திருந்தது.

உயர்நிலை மூன்றாம் ஆண்டில் இருந்தபோதுதான் குமரனுக்கு நேபாளம் செல்லும் வாய்ப்பு முதலில் (1999) கிடைத்தது. வரலாற்றாசிரியர் கிருஷ்ணன் பிள்ளையின் முயற்சியே அதற்குக் காரணம். அவர் ஏற்கனவே நேபாள மலைவாழ் மக்களிடையே ஓராண்டு வாழ்ந்து, கல்விச் சேவையாற்றியவர். வசதியான சிங்கப்பூர்ச் சூழலில் வாழும் பிள்ளைகளை, அடிப்படை வசதிகளுக்குக்கூடப் போராடவேண்டிய சூழலிலும் அமைதியுடனும் உற்சாகத்துடனும் வாழ்க்கையை எதிர்கொள்ளும் நேபாள மலைவாழ் மாணவர்களின் வாழ்க்கையை சில நாட்கள் வாழச்செய்வது பயனளிக்கும் என்று அவர் நம்பினார். 

குமரன் உட்பட மொத்தம் 19 மாணவர்கள், ஏறக்குறைய 3,200 மீட்டர் உயரமுள்ள, நேபாளத்தின் பூன் மலையில் (Poon Hill) நான்கு நாட்கள் மலையேறச் சென்றனர். அப்போது குமரனுக்கு வயது 15. பயிற்சிக்காகக் குமரன் சிங்கப்பூரில் ஏறியிருந்த அதிகபட்ச உயரம், புக்கிட் தீமா மலை, 164 மீட்டர்தான்.‘முஸ்தஃபா செண்ட’ரில் அப்பா வாங்கிக்கொடுத்த சாதாரணக் குளிராடையை அணிந்துகொண்டு சென்ற குமரனுக்கு நேபாளச் சூழலும் அம்மக்களின் வாழ்க்கையும் இனம்புரியாத நெருக்கத்தை அளித்தன.

நண்பர்களுடன் பூன் மலை உச்சியை அடைந்தபின், அங்கிருந்து தெளிவாகத் தெரிந்த, 8,000 மீட்டருக்கு மேற்பட்ட உயரமுள்ள அன்னபூர்ணா, தௌலகிரி மலைகளைக் காட்டி, “நாளைக்கு அவற்றில் ஏறலாமா?” என்று ஆசிரியர் கிருஷ்ணனிடம் வெள்ளந்தியாகக் கேட்டார் குமரன். அதற்கு இன்னொரு 13 ஆண்டுகள் அவர் முயற்சியும் பயிற்சியும் செய்யவேண்டியிருந்தது! 

இளநிலை மருத்துவக் கல்விக்காக சிங்கப்பூர்த் தேசியப் பல்கலைக் கழகத்தில் சேர்ந்த குமரன், அங்கே பாறையேறும் (rock climbing) குழுவில் ஒருவராக இணைந்துகொண்டார். வாரம் மும்முறை சிங்கப்பூரின் பல இடங்களிலுள்ள செயற்கைப் பாறையேற்றம், அவ்வப்போது மாரத்தான் ஓட்டம், ஒருமுறை தாய்லாந்தின் க்ராபியிலுள்ள (Krabi) சுண்ணாம்பு மலை ஏற்றம் என்று உடலுறுதியையும் பயிற்சியையும் தொடர்ந்து அடுத்த மூன்றாண்டுகளுக்கு அதிகரித்தபடியே இருந்தார்.

kumaran-7

அந்தக் காலகட்டத்தில் பாறையேறும் குழுவிலிருந்த ரொமானியாவைச் சேர்ந்த ஒரு முனைவர் பட்ட மாணவி, கிளாடியா, அர்ஜெண்டினாவின் ஆக உயர்ந்த மலையான அகோன்காகுவா (Aconcagua, ~7000m) உச்சியை அடைந்தபின் எடுத்து அனுப்பியிருந்த ஒளிப்படம் ஒன்றை முகநூலில் குமரன் கண்டார். அதுதான் உலகின் உச்சிகளைத் தேடிச்செல்லவேண்டும் என்ற உந்துதலை முதலில் குமரனுக்குள் எழுப்பியது. 

முதல் முயற்சி என்பதால் சற்று எளிதான பெருமலை எதுவென்று தேடினார். ஆப்பிரிக்காவின் தான்சானியாவிலுள்ள கிளிமாஞ்சாரோ (Kilimanjaro, ~6000m) என்று தெரிந்ததும், மலையேறும் ஆர்வமுள்ள சக மருத்துவ மாணவர்கள் ஐவருடன் 2008-இல் தான்சானியாவுக்குக் கிளம்பிவிட்டார். உள்ளூர் வழிகாட்டி ஒருவரின் உதவியுடன் ஏறத்தொடங்கினர். கன்னி முயற்சியின் அத்தனை சிரமங்களையும் எதிர்கொண்டதில் களைத்துப்போய் நால்வர் பாதியிலேயே திரும்பிவிட்டனர். வழிகாட்டிகூட, “மலை எப்போதும் இங்குதான் இருக்கும், ஆனால் நீங்கள் இருக்கவேண்டும் பார்த்துக்கொள்ளுங்கள்” என்று எச்சரித்தார். ஆனால் குமரன் பின்வாங்கவில்லை. 

குமரனும் அவரது நண்பர் ஒருவரும் உச்சியை அடைந்தனர். அவர்களிடம் சக்தியேதும் எஞ்சியிருக்கவில்லை. பிறகு ஒருவழியாகத் தட்டுத்தடுமாறி இறங்கினர். அந்தநேரத்தில், இதுதான் மலையேறுவது முதலும் கடைசியும் என்று குமரனுக்குத் தோன்றியது. ஆனால் விரைவிலேயே மலையேற்றம் தன்னை மீண்டும் புதிதாகப் பிறக்கச் செய்திருப்பதை உணர்ந்தார். உலகின் உச்சியான எவரெஸ்ட்டையும் ஏறிப்பார்த்துவிட வேண்டியதுதான் என்று தீர்மானித்துக்கொண்டார். அதற்கு அவர் மேலும் நான்காண்டுகள் உழைக்க வேண்டியிருந்தது.

சிங்கப்பூரிலிருந்து இருவர் (Edwin Siew and Khoo Swee Chiow) ஏற்கெனவே 1998-இல் எவரெஸ்ட் உச்சியை அடைந்திருக்கின்றனர். அதைச் சாத்தியப்படுத்தியது ‘Make It Real’ என்ற தேசியப் பல்கலைக்கழகத்தின் மலையேறு மன்றம். கிளிமாஞ்சாரோவுக்குப்பின் அம்மன்றத்தில் குமரனும் சேர்ந்துகொண்டார். ஒருபக்கம் மருத்துவப் படிப்பின் கடுமையான தேவைகள், இன்னொரு பக்கம் தொடர்ந்து கடுமையான உடற்பயிற்சிகள், வெளிநாடுகளில் மலையேற்றப் பயிற்சி என்று இரண்டு குதிரைகளை ஒரே நேரத்தில் சமாளித்து ஓட்டிக்கொண்டிருந்தார்.

மலையேற்றத்தின் இன்னொரு கிளை பனிப்பாறை ஏற்றம். ஒப்பீட்டளவில் பனிப்பாறை ஏற்றம் எளிமையானது. பனிக்காலணி, பனிக்கோடரி, இதர கருவிகளைப் பயன்படுத்தக் கற்றுக்கொண்டுவிட்டால் போதும் என்கிறார் குமரன். சீனா, ஐஸ்லாந்தில் பனிப்பாறை ஏற்றத்தையும் பழகினார். மலையேற்றமும் மருத்துவமும் அவருடைய நேரத்திற்குப் போட்டியிட்டன என்றாலும் ஒன்றில் தொய்வு ஏற்பட்டபோதெல்லாம் இன்னொன்று ஈடுகட்டியதால் ஒருவகை நிறைவையும் அடைந்தார்.

kumaran-111

எட்டாயிரம் மீட்டர் உயரமுள்ள மலைகளின் உச்சியை எட்டிப்பிடிப்பது வெறும் உடற்திறன், மலையேற்ற நுட்பங்கள், மனோதிடம் ஆகியவற்றைச் சார்ந்தது மட்டுமல்ல. நாம் சுவாசிக்கும் உயிர்வாயு (ஆக்ஸிஜன்) அந்த உயரத்தில் தரைமட்டத்தில் உள்ளதைவிட மூன்றில் ஒரு பங்குதான் இருக்கும். அதாவது ஒரே அளவு உயிர்வாயுவுக்கு அங்கு மூன்று முறை மூச்சிழுக்கவேண்டும். குறைவான உயிர்வாயு மூளைத் திறனை பாதித்துவிடும். உயிர்வாயு உருளைகளைக் கொண்டுசெல்லலாம் ஆனால் அதற்கும் ஓர் அளவு உண்டு. அதனால் இவ்வுயரத்தை மரண மண்டலம் (death zone) என்று அழைக்கின்றனர். சில ஆண்டுகளில் சில மலைகளில் மூவரில் ஒருவர் மாண்டதுண்டு.

உடலைக் குறைவான உயிர்வாயு நிலைக்குப் பழக்குவதற்காக (acclimatization) குறிப்பிட்ட உயரம் ஏறி இறங்குவர். அடுத்தமுறை இவ்வுயரம் கூடும். அதனால்தான் எவரெஸ்ட் போன்ற பெருமலைகளை ஏற இரண்டு மாதம் ஆகும். அதற்குமுன் ஆண்டுக்கணக்கில் பயிற்சி, முயற்சி, திட்டமிடல். இவற்றையெல்லாம் தாண்டி வாழ்க்கைமுறையையே மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும். குறியை எவரெஸ்டில் வைத்திருந்த குமரன் அனைத்திற்கும் தயாராகவே இருந்தார். 

மருத்துவப் படிப்பு 2010-இல் முடிந்து டான் டோக் செங் மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராக இணைந்தபோது கணிசமான மலையேற்றங்களை முடித்திருந்தார். அடுத்த ஈராண்டுகளில் ஏழு மலைகளை ஏறுவது என்றும் அதன் இறுதியில் 2012 மே மாதத்தில் எட்டாவதாக எவரெஸ்ட் உச்சியை எட்டுவது என்றும் ஒரு திட்டம் தீட்டினார். அதற்காக நிதி திரட்டவும் தொடங்கினார். அரசாங்க அனுமதிகள், கருவிகள், வழிகாட்டிகள், உணவு, காப்பீடு என்று நீளும் தேவைகளைத் திட்டமிட்டார். 

இரவு 10 மணியிலிருந்து அடுத்தநாள் காலை 8 மணிவரை இரவுப்பணியை மருத்துவமனையில் முடித்துவிட்டு, அதன்பிறகு ரயிலைப்பிடித்து கிளமெண்டி சென்று அங்குள்ள 40 மாடி வீவக வீடுகளின் மாடிப்படிகளில் முதுகில் மூட்டையுடன் இரண்டு மணி நேரம் ஏறிப் பயிற்சி செய்தார். ஓராண்டுக்கு ஊதியமில்லா விடுப்பு எடுக்கவேண்டும். அது தொழில் முன்னேற்றத்தில் சுணக்கத்தை அளிக்கும். ஆனால் எந்தவகையான பயிற்சிக்கும் தியாகத்திற்கும் தயாராக இருந்த குமரனுக்குச் சோர்வை அளித்ததெல்லாம், “ஏகப்பட்ட பெண்களே எவரெஸ்டில் ஏறிவிட்டனர். இதில் ஏன் நேரத்தை வீணடிக்கிறாய்?” போன்ற அறிவுரைகளே. 

இராஃபிள்ஸ் முன்னாள் சாரணர் குழு குமரனின் உதவிக்கு வந்தனர். அற நிறுவனமான ‘லீ பவுண்டேஷன்’ உதவியது. தமிழ்முரசு, தி நியூ பேப்பர், தி ஸ்டிரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழ்கள் செய்தி வெளியிட்டன. நண்பர்களும் அவர்களால் இயன்ற நிதியளித்தனர். ஓரளவு நிதி திரண்டது. எவரெஸ்ட் ஏறுவதற்குத் தேவையான பெருநிறுவன ஆதரவவைத் தேடி தொடர்ந்து நம்பிக்கையுடன் பெருநிறுவனங்களுக்கு எழுதிக்கொண்டிருந்தார். அது ஒருபக்கம் நடந்துகொண்டிருக்க, 2011 ஜூலையில், ஏழு மலைகளுள் முதலாம் மலையை ஏறக் கிளம்பிவிட்டார் குமரன்.

சீனாவின் முஸ்டாக் அதா (Muztagh Ata, ~7500m) மலையில் திட்டமிட்டபடி ஏறினார் என்றாலும் உச்சியை அடைய இயலவில்லை. பெருமலைகளின் காலநிலை மாற்றங்கள் துல்லியமான கணிப்பிற்குள் சிக்காதவை. அடிவாரங்களின் அதே தட்பவெப்பம் மலையுச்சிகளில் நிலவாது. கடுங்காற்று வீசும், மழையடிக்கும், பனி சரியும், சடக்கென்று வெயிலும் அடிக்கும். அதனால்தான் ஒவ்வொரு மலைக்கும் தனிக்குணமுண்டு என்று சொல்லப்படுகிறது. 

முஸ்டாக் அதாவின் இறுதிக் கட்டத்தை அடைந்தபோது மேலும் ஏறுவது உயிராபத்தை விளைவிக்கலாம் என்கிற அளவுக்குக் காலநிலை மாற, குமரன் திரும்பிவிட முடிவுசெய்தார். அதையும் மீறி ஏறச்சென்ற இன்னொரு குழு உயிருடன் திரும்பியது என்றாலும் அக்குழுவில் ஒருவர் ஏழு விரல்களை பனிக்கடியால் (frostbite) இழந்தார். தன்முனைப்பும் தீவிரமும் சாதிப்பதற்கு எவ்வளவு அவசியமோ அதேயளவுக்கு அவை வீண்பிடிவாதமாகவோ கண்மூடித்தனமாக உயிர், உடலைப் பணயம் வைக்கும் சூதாட்டமாகவோ ஆகிவிடலாகா எனும் தெளிவு குமரனுக்கு இருந்தது.

முஸ்டாக் அதாவின் உச்சியை அடையவில்லை என்று தளராமல், இதுவரை தான் ஏறியதிலேயே ஆக அதிக உயரம் முஸ்டாக் அதாவில் ஏறிய உயரம்தான் என்று எடுத்துக்கொண்டு, இரண்டாம் மலையான ச்சோ ஓயுவுக்குச் (Cho Oyu, ~8200m) சென்றார். இது எவரெஸ்டின் ‘மாதிரித் தேர்வு’ என்று வருணிக்கப்படும் மலை. எவரெஸ்ட்டை விட 600 மீட்டர் உயரம் குறைவு, சிக்கல்களும் சற்றுக் குறைவு என்பதால் அப்படி ஒரு பெயர். 

இந்த மலையில் ஏறக்குறைய 6500 மீட்டர் உயரத்தில் இருந்தபோதுதான் குமரனின் 27-ஆம் பிறந்த நாள் வந்தது. அங்கேயே சக மலையேறிகளுடன் கொண்டாடினார். ஆனால் மகிழ்ச்சி நீடிக்கவில்லை. ஒரு நிலநடுக்கம் உண்டாகி, பாறை சரிந்து, உயிர்பிழைத்ததே அதிசயம் என்று ஆகிவிட்டது. சில நாட்கள் கழித்து மீண்டும் ஏறினார் என்றாலும் உச்சியை அடையமுடியவில்லை. எதையும் நேர்நிலைக் கண்னோட்டத்துடனேயே பார்க்கும் குமரன், நில நடுக்கத்தில் தப்பித்ததை எண்ணித் தேற்றிக்கொண்டார் என்றாலும், தொடர்ந்து இரண்டு முயற்சிகள் வெல்லாததால் சற்று துவண்டிருந்தார். 

இக்காலகட்டத்தில், மலையேற்றங்களுக்கு இடையே சிங்கப்பூர் திரும்பும்போது, சிறைக் கைதிகளிடையே தன் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ள இவர் சென்று உரையாற்றி வருவது வழக்கமாக இருந்தது. இளம் கைதிகளிடையே இவர் பேசினால் அவர்களுக்கும் வாழ்க்கையில் ஒரு பிடிமானம் கிடைக்கும் என்று கருதப்பட்டதால் அழைக்கப்பட்டிருந்தார்.

முதன்முறை பேசும்போது எவரெஸ்ட் ஏறவிருக்கும் திட்டத்தைப் பெரிய ஆர்வமின்றிக் கேட்டிருந்த கைதிகள், பிறகு இவர் வரிசையாக அடுத்தடுத்து இரண்டு மலைகளில் ஏறமுடியாமற் போனதைக் குறிப்பிட்டபோது குமரனிடம் அனுதாபப்பட்டனர். சிலர் உற்சாகப்படுத்தி வாழ்த்து அட்டைகளும் அனுப்பினர். வாழ்க்கையில் எவ்வளவோ சாதிக்க நினைத்து ஆனால் சூழ்நிலைகள் காரணமாக இயலாமற்போன அவர்களுக்குக் குமரனின் நிலை நன்கு புரிந்திருக்கலாம்.

மூன்றாவது மலை, அமா தப்லம் (Ama Dablam, ~6800m). வானிலை சாதகமாக இருந்தாலும் இங்கு குமரனுக்குக் காய்ச்சல், வயிற்றுப்போக்கு என்று உடல்நிலை மோசமானது. ஆனால் அதையும் சமாளித்து ஏறி உச்சியை அடைந்தார். முதல் வெற்றியின் மகிழ்ச்சியை மேலும் கூட்டும் விதமாக ‘செரிபோஸ்’ (Cerebos) என்ற பெருநிறுவனத்தின் நிதி ஆதரவும் தேடிவந்தது. மலையேற்றத்திற்கு மட்டுமின்றி, நேபாள மலைவாழ் பள்ளிப் பிள்ளைகளுக்கு கணினிகள் வழங்கவும் அந்நிறுவனம் முன்வந்தது. உற்சாகமடைந்த குமரன், அடுத்தடுத்து மூன்று மலைகளை ஏறி, தன்னைத் தயார்ப்படுத்திக்கொண்டு நான்காவதாக எவரெஸ்டில் ஏறத்திட்டமிட்டுக் கிளம்பினார். 

எவரெஸ்டில் நான்கு நிலைகளாக ஏறவேண்டும். மேல் நிலைகளில் உயிர்வாயு உருளைகளுடன் உறங்கப்பழக வேண்டும். தூக்கம் கெட்டால் காரியம் கெட்டது. மாத்திரை மருந்துகள் உதவாது. ஒவ்வாமையை அளிக்கலாம். பசி இருக்காது ஆனால் சாப்பிட வேண்டும். சுவை, மணம் தெரியாது. கண்ணாடி அணிபவர்களுக்கு மேலும் தொல்லைகள். தொடுவில்லைகள் (contact lens) அணியவேண்டும். அவை அரிப்பை அளிக்கலாம். அதன் திரவம் உறைந்துபோகலாம். 

தண்ணீர்க் குடுவை, சிறுநீர்க் குடுவை இரண்டையும் உறங்கு பொதிக்குள் வைத்துக்கொண்டு மாற்றிவிடாமல் கவனமாக எடுத்துப் பயன்படுத்த வேண்டும். கழிவறையெல்லாம் அங்கு ஏது? ‘இரண்டு’க்குப் போகவேண்டும் என்றால் அதை ஒரு கலையாகப் பழகவேண்டும். அதுவே அப்படி என்றால் குளியல்? பேச்சே கூடாது. வறட்டு ஷாம்பூவும் ஈரத்திசுத்தாளும்தான் துணை. தங்கு நிலைகளில் வெந்நீர் உண்டு என்றாலும் இடையிடையே ஐஸ்தண்ணீர் வருமாம். அந்தக் கொடுமைக்கு குளிக்காமலிருப்பதே மேல் என்கிறார் குமரன்.

எவரெஸ்ட் ஏறும்போது தீர்ந்துபோன உயிர்வாயு உருளைகளைப் போலவே ஆங்காங்கு மனித உடல்கள் கிடப்பதைப் பார்க்க நேரிடும். குமரன் தன் மருத்துவத் தொழிலில் அடிக்கடி மரணத்தை அருகிருந்து பார்ப்பவரே என்றாலும் எவரெஸ்டில் பார்த்தபோது பதற்றம் உண்டாகியிருக்கிறது. யோசித்தபோதுதான், மரணம் நிகழ்ந்தாலும், மருத்துவமனைச் சூழலானது அனைத்தும் நம் கட்டுப்பாட்டிற்குள் இருப்பதாக ஒரு தோற்றத்தை அளிப்பதை உணர்ந்திருக்கிறார். 

அனைத்துத் தடைகளையும் தடங்கல்களையும் சமாளித்து மே 26, 2012 அன்று எவரெஸ்ட் உச்சியை அடைந்த குமரன், சிங்கப்பூர்க் கொடியை ஊன்றினார்.

Kumaran-8

மகிழ்ச்சி பீரிட்டுக் கிளம்பியது என்றாலும் குமரன் கட்டுப்படுத்திக்கொண்டார். உச்சியை அடைவது பாதி வழிதான், பத்திரமாகத் திரும்பவேண்டுமே! ஏறுபாதையில் போன உயிர்களைக் காட்டிலும் திரும்புகாலில் மறைந்தவர்களே அதிகம் என்கிறது புள்ளிவிவரம். அதிலும் ‘மறைவது’ என்பது எவரெஸ்ட்டுக்கு அப்படியே பொருந்தும். உடல் கிடைக்காது!

பத்திரமாக இறங்கிய குமரன் 12 கிலோ குறைந்திருந்தார்! தன் வேலை முடிந்தது என்று போகாமல் நேபாள மலைவாழ் மக்களுக்குத் தொடர்ந்து உதவவேண்டும் என்று ‘ஆஷா’ திட்டத்தைத் தொடங்கினார். சிங்கப்பூரிலிருந்தும் பிற தேசங்களிலிருந்தும் நிதி திரட்டி நேபாளத்தில் மருத்துவ உதவி, கல்வி உதவி என்று தொடர்ந்து திட்டத்தின் எல்லைகளை விரிவுபடுத்தி வருவதோடு, கொவிட்டால் பயணங்கள் தடைபட்டதைத் தவிர்த்து, ஒவ்வோராண்டும் நேரடியாகவே சென்று அவ்வுதவிகளை அளித்துவருகிறார். 

Kumaran-2

பூன் மலைக்கு அழைத்துச் சென்ற உயர்நிலைப் பள்ளி வரலாற்றாசிரியர் கிருஷ்ணன் பிள்ளை, குமரனின் வளர்ச்சிக்கும் சாதனைகளுக்கும் துணைநின்றதோடு அவரது அனைத்துத் தொண்டு முயற்சிகளிலும் முன்னின்று உதவுகிறார். அவருடன் அப்போது இணைந்து பணியாற்றிய நேத்ரா என்ற நேபாளத்தைச் சேர்ந்த ஆசிரியரும் உதவிகளை விரைவாக, வீணடிப்பின்றிக் கொண்டுசேர்க்க உதவுகிறார். ஒருமுறை குமரனை நேபாளப் பள்ளி ஒன்றில் அறிமுகப்படுத்திய நேத்ரா, 15 வயது சிறுவனாக வந்த குமரன் இப்போது மருத்துவராக வந்திருக்கிறார் என்று புகழ்ந்து தள்ளிவிட்டாராம். எவரெஸ்ட் ஏறியதைக் குறித்து ஒருவார்த்தை பேசவில்லையாம்! அங்கு என்ன அரிதோ அதைத்தானே புகழ்வார்கள்?

நேபாள மலைவாழ் மக்களிடையே மலையேறிகள் சர்வசாதாரணம். அதிலும் ஷெர்பா இனத்தவர்களுக்குத் தொழிலே இதுதான். மலைகளின் பிள்ளைகளான அவர்களுக்கு உயிர்வாயுக் குடுவைகூட அதிகம் தேவைப்படுவதில்லை. ஒன்றிரண்டல்ல, டஜன் கணக்கான முறை எவரெஸ்ட் உச்சி தொட்டவர்கள் உண்டு. எவரெஸ்ட் உச்சியை முதலில் தொட்ட (1953) எட்மண்ட் ஹில்லரிக்கு எப்படி ஒரு டென்சிங் நோர்கேயோ அப்படி ஒவ்வொரு மலையேறிக்கும் ஒரு ஷெர்பா உண்டு. ஆபத்தான பகுதிகளுக்கு முன்பே சென்று பாதுகாப்பான கயிறு, ஏணிப்பாதைகளை அமைப்பது முதல் சூழ்நிலைக்கேற்ப உதவிகளை வழங்குவதுவரை இந்த ஷெர்பாக்களின்றி மலையேற்றமில்லை.

ஷெர்பாக்களின் மகிமையைச் சொன்னால் தன் பெருமை குறைந்துவிடுமோ என்று பல மலையேறிகள் அவர்களின் பெயர்களைக் குறிப்பிடுவதில்லை. ஆனால் குமரன் தன்னுடன் அத்தனை மலையேற்றங்களுக்கு வந்த அத்தனை ஷெர்பாக்களையும் பெயர்கள், ஒளிப்படங்களுடன் தன்னுடைய ‘No Mountain Too High’ (Marshall Cavendish, 2022) நூலில் ஆவணப்படுத்தியுள்ளதோடு அவர்களோடு இன்றும் நெருங்கிய நண்பராகத் தொடர்கிறார். தங்கள் நலனில் தொடர்ந்து அக்கறை காட்டி நிற்கும் குமரனை அம்மக்களும் ‘குமார் ஷெர்பா’ என்று அவர்களுள் ஒருவராகவே கொண்டாடுகின்றனர்.

Kumaran_1

குமரனின் சிறைப் பேச்சுகளாளும் தோல்வியால் துவளாத முயற்சிகளாலும் எழுச்சிகொண்ட ஓர் இளம் கைதி, அசோக், தானும் சாதிக்கவேண்டும் என்று உறுதிபூண்டார். கடும் உழைப்பைச் செலுத்திப் படித்து ‘ஓ’ நிலைத் தேர்வில் அவ்வாண்டின் தனியார் மாணவர்களிலேயே ஆக அதிக மதிப்பெண் பெற்றார். வெளியில் வந்ததும் குமரனுடன் நட்பைத் தொடர்ந்தார். குமரனும் 2014-இல் சிங்கப்பூர் இளையர் விருது பெற்றபோது தன் விருந்தாளியாக அசோக்கை இஸ்தானாவுக்கு அழைத்துச் சென்றார். சில ஆண்டுகளுக்குப்பிறகு அசோக் தன் திருமணத்திற்கு குமரனை அழைத்தார். 

Kumaran-5-அசோக்குடன்

அசோக்குடன் குமரன்

குமரன் நமக்கு அளிக்கும் செய்தி:

“நாம் அனைவரும் எவரெஸ்ட்டை வெற்றிகொள்ள வேண்டியதில்லை. அவரவருக்கான எவரெஸ்ட்டைக் கண்டுபிடித்து அதை வெற்றிகொள்ள வேண்டும்”

***

படங்கள்: குமரன் ராசப்பன்
[‘தி சிராங்கூன் டைம்ஸ்’ செப்டம்பர் 2022 இதழில் வெளியானது]