அவதானிப்பும் அவதானிப்பவரும் வேறுவேறல்ல (Observer is the Observed) என்று உணர்ந்துகொள்வதே ஞானம் என ஜே.கிருஷ்ணமூர்த்தி தன் வாழ்நாள் முழுதும் பேசிவந்தார். நாற்பது வருடங்களாகத் தொடர்ந்து அவரது உரைகளைக் கேட்டவர்களாலும்கூட அதைப் புரிந்துகொள்ள இயலவில்லை. எப்படியும் அடுத்த உரையில் பிடித்துவிடலாம் என்ற நம்பிக்கை மட்டுமே தொடர்ந்து எஞ்சியது, உந்தியது. அறிவின் வழியாக அனுபவத்தை எட்டும் முயற்சி அது. ஒருவேளை அம்முயற்சி, படிகளில் ஏறிச்செல்வதாக அல்லாமல் எம்பிக்குதிப்பதாகவே நீடித்திருக்கலாம். ஒவ்வொரு உரையிலும் ஒரு குதி. நிற்பது என்னவோ அங்கேயேதான். ஒருவேளை கண்டவர் விண்டிலர் என்றும் ஆகியிருக்கலாம். நான் களத்தில் இறங்கியவன் அல்லன், அதையெல்லாம் வேடிக்கை மட்டும் பார்த்தவன். ஊகம்தான் சொல்லமுடியும்.

எந்த விஷயத்தையும் சிந்திப்பதற்கு, சிந்திக்கப்படும் விஷயத்திலிருந்து சிந்திப்பவர் தன்னைச் சற்றுத் தொலைவில் வைத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. ஆயினும் அது வெறும் தொலைவுதானே ஒழிய பற்றற்ற நிலையோ பாரபட்சமற்ற பார்வையோ அல்ல. அதிலும் தன்னிடமிருந்து தன் உடலையும் மனதையும் பிரித்தெடுத்து சிந்திப்பதென்பது ஆவதரிது. மேலும், மின்னலைப்போல உக்கிரமாக நிகழ்ந்த அனுபவங்களை ‘ஸ்லோ மோஷனில்’ அடுக்குகளாகப் பிரித்தெடுத்து சிந்தித்து எழுத்தில் வடிப்பதென்பது கற்பனையும் தர்க்கமும் ஒன்றையொன்று வெட்டிக்கொள்ளும் சாகச விளையாட்டு.

அண்மையில் கொவிட்கால எண்ணங்களைப் பதிவுசெய்திருந்த இரு புத்தகங்களைத் தற்செயலாக வாசிக்க நேர்ந்தது. ஒன்று வி. அமலன் ஸ்டேன்லியின் ‘உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே: கோவிட் காலக் குறிப்புகள்’. முதன்மையாகத் தன் அனுபவங்களைக்கொண்டு ஆசிரியர் படைத்த 17 பகுதிகளின் தொகுப்பு. இன்னொன்று ‘UNMASKED: Reflections on Virus-time’, curated by Shamini Flint. இது கவிதை, பத்தி, துணுக்கு, மீம், ஒளிப்படம், ஓவியம் என்று பலர் பங்களித்த பலவகைப் படைப்புகளின் தொகுப்பு. வடிவங்கள் வெவ்வேறாக இருந்தாலும் அவற்றின் கரு ஒன்றுதான் (Reflections on Virus-time). இரண்டு நூல்களுமே 2020-2021 காலத்தில் வெளிவந்தவை; தமிழ் நூல் தமிழகத்திலும், ஆங்கில நூல் சிங்கப்பூரிலும்.

ஒரேவரியில் சொல்லவேண்டுமானால் அமலனின் நூல் களத்தில் இறங்கியுள்ளது, ஷாமினியின் நூல் வேடிக்கை பார்த்துள்ளது என்பேன். இதை நான் களத்தில் இறங்குவது மேலானது, வேடிக்கை பார்ப்பது கீழானது என்ற விமர்சனமாக அல்லாமல் அவதானிப்பாக, வரையறையாக மட்டும் சொல்கிறேன். இரண்டுமே வேண்டியதுதான். வேடிக்கை பார்ப்பதற்குத்தானே விளையாட்டைப் பொதுவில் ஆடுகின்றனர்? வேடிக்கை பார்க்கும் சிறார்தானே பின்னாளில் களத்தில் இறங்கி விளையாடப் போகின்றனர்?

அமலன் தன் நூலில் தந்துள்ள கொவிட்கால அனுபவக் குறிப்புகள் தம்மளவிலேயே ஆழமானவை என்பது மட்டுமின்றி வாசகரை வெவ்வேறு திசைகளில் சிந்திக்க வைப்பவை. எடுத்துக்காட்டாக, ‘உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே’ என்ற திருமூலரின் சொற்களில் அமைந்துள்ள நூலின் தலைப்பு. உள்ளே ஓரிடத்தில், வள்ளுவர் சொல்லும் ‘உடம்போடு உயிரிடை நட்பு’ வருகிறது. உடம்பார் அழியின் உயிரார் அழிவர் என்ற திருமூலரின் உடலுயிர் ஒருமையிலிருந்து நகர்ந்து, கூட்டிலிருந்து பறவை பறப்பதுபோல உயிர் பறந்துவிடும் என்கிற உடல்-உயிர் இருமைக்கு வருகிறார் வள்ளுவர். நூலில் அப்படியான ஒப்பீடு ஏதுமில்லை ஆனால் மூலரின் மந்திரமும் வள்ளுவரின் வாக்கும் முன்பே படித்திருக்கிறேன் என்றாலும் அமலனின் நூலை வாசிக்கும்வரை ஏனோ அப்படி யோசிக்கத் தோன்றவில்லை. ஒரு நல்ல புத்தகம் புதிதாக நமக்கு ஏதும் தருகிறதோ இல்லையோ ஆனால் நம்மையே நமக்குப் புதிதாகத் தருகிறது!

அனுபவங்கள் தீவிரப்படுவதால் சிந்தனைகள் தீவிரப்படுகின்றனவா அல்லது மாற்று வரிசையிலா என்பதில், கோழி-முட்டை விவாதத்தைப்போல, உறுதியான ஒரு முடிவுக்கு வரவியலாது என்றே நினைக்கிறேன். “மூச்சில் விழிப்பை நிறுத்தி தியானக் குன்றேறி தவக்களத்தில் மெய்யறிவை உணர்ந்திட இறங்கினேன்” என்று ஓரிடத்தில் எழுதிச் செல்கிறார் அமலன். ஏற்கெனவே ஒரு தேடலின்பொருட்டுத் தன்னைத்தானே எதிர்கொள்ளவும் குலைத்துக்கொள்ளவும் உள்ளேயே தாக்கிக்க்கொள்ளவும்கூடத் தயாராகிவிட்ட மனம் குடியிருக்கும் ஓர் உடலில், வெளித்தாக்கமாகக் கொவிட்டும் நுழைவது எத்தகைய விளைவுகளை உருவாக்கும் என்பதை மூன்றாம் ஆளாக நின்று பார்க்க முயன்றிருக்கிறார். அல்லது அப்படித்தான் நான் புரிந்துகொண்டேன். ஒருமை இருமையாகி இந்த இடத்தில் மும்மையும் ஆகிவிடுகிறது!

“கற்பனையிலும் ஒரு தர்க்க அடிப்படை உள்ளது, தர்க்கத்திற்கும் ஒரு கற்பனை தேவை. முரணாகத் தோன்றும் அத்தகைய கலப்புத்தன்மைகளை நம் மரபில் தாரணை, பாவனை என்று பெயரிட்டு அழைக்கிறார்கள்” என்று ஒருமுறை கவிஞர் இளங்கோ கிருஷ்ணன் கூறினார். தர்க்கம், கற்பனை இரண்டையும் ஒரேகூண்டுக்குள் அடைப்பதற்கு ஒரு நுண்மை வேண்டும். அவற்றை ஒரே வண்டியில் பூட்டிக்கொண்டு மெய்ம்மை நோக்கிச்செல்ல வன்மையும் வேண்டும். அதற்கு ஒருவர் ஒரேநேரத்தில் விஞ்ஞானியாகவும் கவிஞராகவும் ஞானியாகவும் இருக்கவேண்டும். அமலன் அந்தப் புள்ளியை இந்நூலில் தொடுகிறார் என்று நினைக்கிறேன்.

ஒரு கொவிட்கால அனுபவப் பதிவிற்கு இவ்வளவு சூட்சுமங்கள் தேவையா என்று கேட்காதீர்கள். வைரஸ் என்பதே தனக்குள் ஒரு சூட்சுமத்தைக் கொண்டதுதான். ஒரே நேரத்தில் அது உயிராகவும் ஜடமாகவும் இருக்கிறது. ஆம், ஓர் உயிரைச் சேர்ந்தால் அது வளரும், பெருகும், ஜீவிக்கும். சேராவிட்டால் அப்படியே கிடக்கும், மடியும். ஓர் விதையைப்போலத் தனக்குள் உறங்கும் உயிரைக்கொண்ட ஜடம் அது. வைரஸை வகைப்படுத்த முயலும் அறிவியலின் அல்லாட்டங்களை ஆர்வமிருப்போர் இங்கே வாசிக்கலாம்.

கொவிட்டை முன்வைத்து ஆன்ம சாதகத்தில் இறங்கிய நூலென்று அமலனின் நூலைக் கருதிவிடலாகாது. குத்தக நிகாயத்திலிருந்து கார்த்திக் நேத்தாவரை, ஆய்வகப் பராமரிப்பிலிருந்து அரசியல் விமர்சனம்வரை, கபசுரக் குடிநீரிலிருந்து கர்ப்பிணிப் பூனைகள்வரை கொவிட்கால அனுபவக் கரங்களை அகட்டும் நூல். உடலுக்கும் மனதுக்கும் உகந்தது.

UNMASKED நூல் பக்கத்துக்குப் பக்கம் மாறுபடும் அனுபவங்கள் என்பதால் ஒரு ரங்கராட்டினப் பயணம். ‘வீடடங்கு மத்தியான மழை’ என்ற கவிதையை வாசித்தபோது, கொவிட், ஓடிக்கொண்டே இருந்த அனைவரையும் ஒருகணம் நின்று நிதானிக்க வைத்திருப்பதை உள்ளோட்டமாக உணரமுடிந்தது. சத்தமில்லாமல் பெய்யும் மத்தியான மழை மண்வாசனையைக் கிளப்பி கம்பத்து நாட்களுக்கு இட்டுச்செல்வதைக் கண்டடைய ஒரு வீடடங்கு வேண்டியிருக்கிறது!

இறப்பைக் காட்டிலும் தனிமை கொடுமையானது என்பதைப் பல படைப்புகள் பல்வேறு விதங்களில் பதிவுசெய்துள்ளன. ‘அப்பா போனபிறகு என்னை இன்னும் நீ வந்து பார்க்கவில்லை. நான் போவதற்குள் ஒருமுறை வந்து பார்த்துவிடு. பரவாயில்லை, எனக்குப் புரிகிறது, விமானங்கள் பறக்கத் தொடங்கியபின் விரைந்துவா போதும்’ என்பது போன்ற குரல்கள் மௌனமாக ஆனால் உரத்து ஒலிக்கின்றன. பல தனிமை அனுபவங்கள் நெஞ்சைத் தொடுகின்றன. மனிதன் ஒரு சமூக விலங்கு என்ற வரையறை மீண்டுமொருமுறை உறுதிசெய்யப்படுகிறது.

“இப்போதெல்லாம் சிறுபிள்ளைகளே ‘அந்த காலத்துல..’ என்றுதான் ஆரம்பிக்கின்றன” என்ற ஒருவரி நகைச்சுவைபோலத் தோன்றினாலும் எத்தனை பொருளுள்ள வரி! இன்னொரு கவிதை சொல்லும் “ரொம்பவும் கரிசனம் காட்டாதீர்கள், கடுப்பாக இருக்கிறது” என்கிற உணர்வும் உண்மையானதுதான். கஷ்டப்படுவதைவிடக் கரிசனத்தைத் தாக்குப்பிடிப்பது சில தருணங்களில் கடினமாகிவிடும்.

நான் ரசித்து ரசித்துச் சிரித்த இடம் ஒன்றுண்டு. அது ஓர் ஓய்வுபெற்ற தலைமையாசிரியர் வீடடங்கு குறித்து சொல்லும் கருத்துகள், அறிவுரைகள். வரிக்குவரி இல்லாவிட்டாலும் அதன் தொனியை இங்கே சுருக்கமாகத் தமிழில் கொடுக்க முயல்கிறேன்:

“என்னப்பா வீடடங்கு. நாங்க பாக்காததா? ஜப்பாங்காரன் காலத்துலேர்ந்து வரிசையா பாத்துகிட்டுதான் இருக்கோம். இங்க போகாத அங்க போகாதன்னு இதெல்லாம் என்ன கூத்து? யாருக்கு எங்க போகணுமோ அங்கதான் போகமுடியும். நீ யாரு சொல்றதுக்கு?

ஆங்.. என்ன சொல்லிகிட்டுருந்தேன்.. ஆமா வீடடங்கு. பாக்டீரியாம்பான், வைரசும்பான், தொத்திக்கும்பான் எல்லாம் வெள்ளக்காரன் கண்டுபுடிச்சி அனுப்பறது. எவனோ எங்கயோ தும்முறதுக்கு நாம மாஸ்க் மாட்டிகிட்டு வீட்ல காலட்டிகிட்டு ஒக்காந்தா ஆச்சா. ஒடம்புன்னு இருந்தா வியாதி வரும் போவும். இதெல்லாம் எப்பவும் உள்ளதுதான். எனக்கு ஃபோன்ல ஒரு சேதி வந்துச்சு. எல்லாமே அருமையான யோசனைங்க. ஒரு நாளைக்கு ஒன்னுன்னு பண்ணா போதும். ஒரு பிரச்சனையும் வராது.

வெளீல போய்ட்டு வந்ததும் கருமிளகைக் கொதிக்கவச்சு எலுமிச்சை சாறைக் கலந்து சூட்டோட குடிச்சுடுங்க. எல்லா வைரசையும் அது கொன்னுடும். அப்பறம் வெந்நீர்ல துளசிய போட்டு குடிங்க. ஐஸ் தண்ணி மட்டும் வேணாம். அம்பது வயசுல அது ஆளக்கொன்னுடும். இத நான் ரொம்ப நாளாவே எல்லாருக்கும் சொல்லிகிட்டிருக்கேன். குளிக்கும்போது அந்தத் தண்ணீல உப்பு போட்டுகுங்க. பத்து காஜால ஒருத்தனுக்கு அப்டிதான், தோல் வியாதி. ஒன்னுத்துக்கும் படியல. கடைசில உப்புத் தண்ணிக்கு ஓடிப்போச்சு.

எல்லாத்துக்கும் மேல ஒன்னு சொல்றன். கெட்ட நேரம்னு வந்தா கெட்ட நேரந்தான். அத இதையும் அதையும் பண்ணி நல்ல நேரமா மாத்திடமுடியாது. பேசாம இருந்தம்னா அது வந்த மாதிரியே போயிடும். கிரக அமைப்புங்களும் நட்சத்திர அமைப்புங்களும் ஒரு வரிசையில அமையும்போது அப்படி நடக்கும். அதுக்கும் எங்கிட்ட ஒரு அருமையான வீடியோ இருக்கு. அனுப்பறன் பாருங்க.”

***