சிங்கப்பூருக்கு வந்த புதிது. அன்றே முடிக்கவேண்டிய வேலை ஒன்று இருந்ததால் அலுவலக நேரம் முடிந்தும் வேலை பார்த்துக்கொண்டிருந்தேன். அங்கு வந்த சீன நண்பர் ஒருவர், உடன் வேலைபார்க்கும் இன்னொரு நண்பரின் பெயரைச்சொல்லி, “you see her?” என்று என்னிடம் விசாரித்தார். நான் “she just left” என்றேன். ஒருகணம் தாமதித்து சுதாரித்த அவர் “she goba(ck) ready ah?” என்று கேட்டு உறுதிப்படுத்திக்கொண்டார். நான் முதலில் எதிர்கொண்ட அல்லது மறக்கவியலாதபடி என்னுள் உறைந்த முதல் சிங்கிலிஷ் பயன்பாடு அதுதான். விரைவிலேயே சிங்கிலிஷ் மீது ஓர் ஈர்ப்பு உண்டாகிவிட்டது.

எழுத்தில் பதிவான முதல் சிங்கிலிஷ் ஆவணம் எதுவாக இருக்கும் என்ற என் தேடலுக்கு அண்மையில் வெளியான சிங்கிலிஷ் குறித்த ஓர் ஆவணப்படத்தில் ஒரு பதில் கிட்டியது. The Singapore Free Press and Mercantile Advertiser என்ற பத்திரிகையில், 1922-இல், ஒரு வாசகர் கடிதம் வெளிவந்துள்ளதாகவும், அது சிங்கிலீஷின் தொடக்ககால அடையாளங்களுள் ஒன்றாக இருக்கலாம் என்றும், அதிலிருந்து சில வரிகளும் அப்படத்தில் காட்டப்பட்டிருந்தன. தேசிய நூலக வாரியத்தின் இணையதளத்தில் பழைய சிங்கப்பூரின் பத்திரிகைகள் அனைத்தும் கிடைப்பதால் அக்கடிதத்தைத் தேடி எடுத்தேன்.

மிகவும் சுவாரஸ்யமான அக்கடிதம் இங்கே:

Screenshot 2022-10-04 at 9.49.57 AM

சிங்கிலிஷ் வரலாற்றில் இந்தக் கடிதத்தை எழுதிய ‘Ah Fat’-க்கு எவ்வளவு முக்கியத்துவமோ அதேயளவுக்கு ‘அப்படியே’ அக்கடிதத்தை வெளியிட்ட அப்பத்திரிகையின் ஆசிரியருக்கும் உண்டு என்பேன். இந்தக் கடிதத்தை உற்றுக் கவனித்தால், ஒரேயொரு வாக்கியம்கூட ஆங்கில இலக்கணப்படி சரியாக அமையவில்லை ஆயினும் எழுத்துப்பிழை (dam – damn தவிர) அனேகமாக இல்லை!

என் ஊகம் என்னவென்றால், வாசிப்பவருக்குப் புரியவேண்டும் என்பதற்காக ஆசிரியர் எழுத்துப்பிழைகளைத் திருத்தியிருக்கிறார், நிறுத்தற்குறிகள் சேர்த்திருக்கிறார், ஒரு சொல்லுக்கு மொழிபெயர்ப்பையும் [inspector] அடைப்புக்குள் சேர்த்திருக்கிறார். ஆனால் வாக்கிய அமைப்புகளைத் திருத்தாமலும் பிறமொழிச் சொற்களை நீக்காமலும் அப்படியே வெளியிட்டிருக்கிறார்.

கூலித்தொழிலாளர் அடைந்த பாதிப்பு அழுத்தமாக வெளிப்படவேண்டும் என்பதற்காக அசல் மொழியிலேயே விட்டிருக்கலாம். இருப்பினும் எங்கே கருத்து விளங்காமற் போய்விடுமோ என்றஞ்சி அல்லது Ah Fat கேட்டுக்கொண்டபடி மேலிடத்திற்குப் பரிந்துரைக்கும் நோக்கில் கடிதத்தின்கீழே ஆசிரியர் தன் குறிப்பை இவ்வாறு சேர்த்துள்ளார்:

Source: NewspaperSG

தன் கடிதத்தில் Ah Fat குறிப்பிடும் இடம் இதுவாகத்தான் இருக்கக்கூடும் என்று முதலில் தன் குறிப்பில் தெளிவுபடுத்துகிறார். மேலும், நகராண்மைக் கழக இடமாக இருக்கலாம் என்று நம்பப்படும் அவ்விடத்தில் மலிவான சீன உணவுகள் விற்கப்படும் பெயர்பெற்ற திறந்தவெளி உணவகங்கள் இருந்தன ஆனால் தற்போது தெரு மேம்பாட்டுக்காக அக்கடைக்காரர்கள் விரட்டப்பட்டுவிட்டனர், ஏற்கெனவே கூலிக்காரக்களுக்குப் பிழைப்பு கடினமாக உள்ள இந்நேரத்தில் மலிவு உணவு கிடைப்பது அவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும், இந்த இடத்தில் மலிவு உணவு விற்கப்படுவதால் நகராண்மைக் கழகத்திற்கு எவ்வித இடையூறும் உண்டாகும் எனத் தோன்றவில்லை என்றெல்லாம் மெனக்கெட்டு விளக்கமளித்து எழுதியுள்ளார்.

ஒரு பத்திரிகையின் ஆசிரியருக்குச் செம்மைப்படுத்துவதே அன்றாட வேலை. Ah Fat-இன் கடிதத்தை வெளியிடலாம் என்று முடிவுசெய்தவுடன், ஒருகணம்கூட யோசிக்காமல் அக்கடிதத்தின் வாக்கியங்களைச் சரிப்படுத்தி வெளியிடுவதுதான் ஒரு வழக்கமான பத்திரிகை ஆசிரியரின் இயல்பு. அதுவே கடிதத்தை எழுதியவருக்கும் அக்கடிதம் எழுதப்பட்ட நோக்கத்திற்கும் தன்னால் ஆன உதவி என்றும் அவர் கருத இடமுண்டு. மேலும் அது ஆசிரியரின் தாய்மொழி என்னும் நிலையில் இத்தகைய பிழைகளை அனுமதிக்க மனமிராது. ஆனால் என்ன காரணத்தினாலோ வாக்கியங்களைத் திருத்தாமல் அப்படியே வெளியிடுவது அவசியம் என்று இந்த ஆங்கிலேயர் கருதியுள்ளார்.

Ah Fat கடிதம் வெளியான அதே (ஆகஸ்ட் 11, 1922) இதழின் 12-ஆம் பக்க வலதுகீழ் முனையில் ‘Printed and published by Reginald Downing Davies at the Office of the Singapore Free Press Ltd., 20-2 Raffles Place, Singapore, Straits Settlements’ என்று உள்ளது. ஆனால் ரெஜினால்ட் டவுனிங் டேவிஸ் (Reginald Downing Davies) 1926-இல்தான் முழுமையாக ஆசிரியரானதாகவும் அதுவரை வால்டர் மேக்பீஸ் (Walter Makepeace) உடன் இணைந்து பணியாற்றியதாகவும் வேறுசில குறிப்புகளைக் காணமுடிகிறது. எது எப்படியானாலும் இவ்விருவருமோ அல்லது இருவரில் ஒருவரோதான் முதல் ‘சிங்கிலிஷ்’ எழுத்துப்பதிவை வெளியிட்டவர்கள்.

Source: NewspaperSG

மேக்பீஸ் அன்றைய சிங்கப்பூரில் மிகவும் புகழ்பெற்றிருந்தவர் என்பது தெரிகிறது. அவர் ஓய்வுபெற்றபிறகு ஒரு சாலைக்கு (புக்கிட் தீமாவில்) அவருடைய பெயர் சூட்டப்பட்டு இன்றும் அதேபெயரில் இருக்கிறது. இவரைக் குறித்து ஆராய்ந்தபோது கிடைத்த சில தகவல்கள் R.D. டேவிஸைவிட இவரே அக்கடிதத்தை வெளியிட்டிருக்க வாய்ப்புகள் அதிகம் என்று எண்ணச் செய்கின்றன.

முதலாவது, மேக்பீஸ் ஓய்வுபெற்றபோது எழுதப்பட்ட பத்திரிகைக் குறிப்பொன்றில் அவர் ஒரு மொழியியலாளர் (linguist) என்ற குறிப்பு காணப்படுகிறது. அந்தவகையில் ஒரு மொழியின் தனித்துவமிக்க, கலப்பு வடிவங்களின்மீது இவருக்கு ஒரு புரிதல் இருந்திருக்கலாம். இரண்டாவது, திறமையான சுருக்கெழுத்தர் என்று பெயரெடுத்திருக்கிறார். அக்கடிதத்தின் (சிங்கிலிஷின்) நேரடியான, திறமான, ரத்தினச்சுருக்க வடிவம் இவரைக் கவர்ந்திருக்கலாம். அதற்கு நேர்மாறாக, மேக்பீஸைப்போலத் துல்லியமாக எழுத டேவிஸுக்கு வரவில்லை என்றும் டேவிஸுக்கு நல்ல யோசனைகள் இருந்தும் நிறுத்தற்குறிகளே அற்ற வெகுநீண்ட வாக்கியங்களுள் அவை மறைந்துவிட்டன, வாசகர்க்கு அவை எரிச்சலூட்டின என்று C.M.Turnbull என்ற வரலாற்றாசிரியர் தன் Dateline Singapore: 150 years of the Straits Times என்ற புத்தகத்தில் (பக்கம் 89) குறிப்பிட்டுள்ளார். அதுபோன்ற அம்சங்கள் எவையும் அந்த ஆசிரியர் குறிப்பில் காணப்படவில்லை.

அனைத்திற்கும் மேலாக, இவ்வட்டாரத்தில் சுமார் நாற்பதாண்டுகள் வாழ்ந்து அனைவருடனும் பழகி அனைத்துநிலை மக்களிடமும் அன்பையும் ஆதரவையும் நம்பிக்கையையும் பெற்றவர் மேக்பீஸ் என்றும் இன்னொரு குறிப்பு கிடைக்கிறது. மேக்பீஸ் காலத்துக்கு முன்னோ பின்னோ அப்படியொரு Ah Fat கடிதம் வெளியாகவில்லை என்பதையும் கணக்கிற்கொண்டு பார்க்கும்போது, மேக்பீஸிடம் சொன்னால் காரியம் நடக்கும் என்ற நம்பிக்கை மக்களிடம் இருந்திருக்கவேண்டும். அதனாலேயே அக்கடிதம் எழுதப்பட்டிருக்கவேண்டும். அவரும் அதற்கேற்ப வெளியிட்டிருக்கவேண்டும்.

கருத்து மட்டும் போதுமென்று எண்ணிவிடாமல் வடிவமும் அவசியம் என்று கருதியதற்கு வரலாறு அவருக்குக் கடன்பட்டுள்ளது. ஒருவேளை Ah Fat என்பதே மேக்பீஸின் சொந்தக் கண்டுபிடிப்புதான் என்றால் மக்களின் மொழியை இவ்வளவு துல்லியமாகப் பதிவுசெய்ததற்கு இன்னும் அதிகமாகக் கடன்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் 1965-1990 காலகட்டத்தில் கடுமையான எதிர்ப்புகளுக்கு உள்ளானது என்றாலும் பிறகு மெல்லமெல்ல சிங்கிலிஷ் தவிர்க்க இயலாத ஓர் இடத்தை அடைந்துவிட்டது. அறியாதவர்களுக்கிடையே, இனங்களுக்கிடையே ஒரு பாலமாக சிங்கிலிஷ் விளங்குவதை நானே பலமுறை வேலையிடத்தில் அனுபவபூர்வமாக உணர்ந்துள்ளேன். தன்னிடம் சிங்கிலிஷ் பேசும் ஒரு மேலதிகாரி தனக்காக மேலிடத்தில் பரிந்துபேசுவார் என்ற நம்பிக்கையைப் பலரிடம் கண்டதுண்டு. ஆங்கிலத்தில் அக்கறையை எளிதில நடிக்கலாம், சிங்கிலிஷில் கடினம், உண்மை வெளிப்பட்டுவிடும்.

கார்ப்பயணங்களில் சற்று விலகலுடன் பேசத்தொடங்கும் பல ஓட்டுநர்களிடம் சிங்கிலிஷில் பதில் சொன்னால், நெருக்கத்துடன் பேசத்தொடங்குவதைப் பார்க்கிறேன். பிறகு ஆளின் நடையுடை பாவனையைக்கொண்டு அவர்கள் மனதில் போட்ட புள்ளிக்கும் பேச்சுக்கும் பொருந்தவில்லையே என்று மெல்ல ஜாதகத்தை விசாரிப்பார்கள். ஆனாலும் உருவான நெருக்கம் குறைவதில்லை. ‘நல்ல’ ஆங்கிலம் சிங்கப்பூருக்கு வெளியே எவ்வளவு நன்மைகளைக் கொண்டுவருகிறதோ அதேயளவுக்கு சிங்கப்பூருக்குள் பல்வேறு சூழல்களில் இனங்களுக்கிடையே ஒரு குறைந்தபட்ச ஒருங்கிணைவுத் தொடக்கத்தை அளிக்கும் கருவியாக சிங்கிலிஷ் விளங்குகிறது என்பது என் அனுபவ உண்மை.

மெத்தப் படித்தவர்களின் ஆதரவும் பொதுமக்களின் ஆதரவும் தொடர்ந்து அதிகரிப்பதால் சிங்கிலிஷ் பயன்பாடு அதற்கான இடத்தைப் பெற்று வருகிறது. பன்முகத் திறனாளர் க்வீ லி சுவி, சிங்கிலிஷின் அடையாளமாகவே ஆகிவிட்டார். இவர் ஆங்கிலப் பேராசிரியராகவும் பணியாற்றியவர் என்பதால் இவரது கருத்துகள் எடுபடுகின்றன. எங்கே தம் பிள்ளைகளின் ஆங்கில மொழிப்புலமை சிங்கிலிஷால் கெட்டுவிடுமோ (subtractive bilingualism) என்ற பெற்றோரின் அச்சமும் ஓரளவுக்குத் தணிகிறது.

‘அரூ’ மின்னிதழ் இவரிடம் ஒரு நேர்காணல் செய்து தமிழாக்கி வெளியிட்டது. அதில் சிங்கிலிஷ் குறித்த ஒரு கேள்விக்கு இவ்வாறு பதிலளிக்கிறார்:

உண்மையில் சிங்கிலிஷ் வெறும் பேச்சுமொழி மட்டுமன்று. அது சிங்கப்பூர் மக்களைப் பற்றிய ஒரு பிம்பத்தைக் கொடுக்கிறது — நாங்கள் எவ்வாறு சிந்திக்கிறோம், பன்மொழிச் சமூகமாக எவ்வாறு பேச்சுவார்த்தை நடத்துகிறோம், சொல்ல முடியாதவற்றை எவ்வாறு இயல்பாகவும் அரசியல் பிரக்ஞையுடனும் சொல்கிறோம். எனவே, ஒரு புதிய மொழி எவ்வாறு இவ்வுலகில் நுழைந்து படிப்படியாக வளர்ச்சிபெறுகிறது என்பதை அறிந்துகொள்ள முற்படுபவர்களுக்கு சிங்கிலிஷ் மொழியை வாசித்து ஆராய்வது பயனளிக்கும். சிங்கிலிஷ் சிங்கப்பூரர்களின் மனங்களுக்குள் புகுந்து எங்களின் நாடியைக் கண்டறிய உதவும் ஒரு தனித்துவமான நுழைவாயில்.

நேர்காணலின் இறுதியில், க்வீ லி சுவியின் பன்முகத்திறமை அவரது வாழ்க்கையின் பல கட்டங்களில் வெளிப்பட்டபோது பிறரின் பார்வை என்னவாக இருந்தது என்பதை சிங்கிலிஷிலேயே எழுதியுள்ள ஒரு முகநூல் பதிவையும் காணலாம். எளிமை, தெளிவு, சுருக்கம்! அவையே சிங்கிலிஷின் அடிப்படைத் தன்மைகள். இவரைப் போன்றவர்கள் வெறுமே ஆங்கில சொற்றொடர் அமைப்பில் ஆங்காங்கு பிறமொழிச் சொற்களைக் கலப்பது சிங்கிலிஷ் அல்ல, அதற்கெனத் தனி இலக்கணங்கள் உள்ளன என்று நிரூபித்து வருகிறார்கள். அதைக்குறித்து நாம் அஞ்சவோ சிங்கிலிஷ் இலக்கணங்கள் கற்கவோ வேண்டியதில்லை. இலக்கணங்களைத் தெரிந்து வைத்துக்கொண்டா தமிழ் பேசுகிறோம்?

அன்றைய சிங்கப்பூரில் தன்னை ஏழை கூலிக்காரர் என்று அழைத்துக்கொண்ட Ah Fat தொடங்கி இன்றைய சிங்கப்பூரின் மேதாவிகள், கல்விமான்கள்வரை அனைவரின் உள்ளத்திலும் சிங்கிலிஷ் இடம்பெற்றுவிட்டது என்றாலும் அதன்மீதான இளக்காரம் முழுமையாக நீங்கவில்லை என்பது நடைமுறை உண்மை. திரை, நாடக, மேடை நிகழ்ச்சிகளில் சிரிப்பூட்டும் நோக்கிலேயே அதிகம் சிங்கிலீஷ் இடம்பெறுகிறது.

செந்தமிழில் பேசும் சிவபெருமானிடம் இடையிடையே பேச்சுத் தமிழில் பேசும் ‘திருவிளையாடல்’ தருமியின் இடத்தில் நிற்கிறது. கஷ்டத்தையும் கலகலப்பாக்கும் தருமியின் குறும்பை Ah Fat-இன் கடிதத்திலும் காணலாம். சாப்பாடு கிடைக்காமல் இளைத்துவிட்டேன் என்று பொருள்படும்படி ‘AH FAT before, now AH LIN’ என்று (LIN=LEAN) கடிதம் முடிகிறது. குறும்பு சிங்கிலிஷின் பிறவிக்குணம் போலும். வடிவேலு தமிழ்ச்சமூகத்தில் தன்னுடைய பிரத்தியேக மொழியால் இடம்பிடித்ததைப்போல ஓர் ‘இலகுவாக்கி’யாக சிங்கைச் சமுதாயத்தில் சிங்கிலிஷ் தன் இடத்தை நிலைநிறுத்திக்கொள்ளக்கூடும்.

Ah Fat-இன் 1922-ஆண்டு பதிவின் அடிப்படையில், இவ்வாண்டு (2022) சிங்கிலிஷ் நூற்றாண்டு. ஒரு புதிய மொழிக்கு ஒரு நூற்றாண்டில் இவ்வளவு ஏற்பு கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்க மாற்றம். அந்தப் பயணத்தைக்கொண்டு பார்க்கும்போது, பன்மொழிச் சமுதாயத்தின் நடைமுறை இணைப்பு மொழியாகவும், என்றென்றும் இத்தீவுக்குள் தொடந்து சீராக நுழைந்து வேர்பிடிக்கப்போகும் புதிய வருகையாளர்களை விரைந்து ஒன்றிணைக்க உதவும் ஓர் எளிய, இனிய கருவியாகவும், சிங்கப்பூரின் தனித்துவமிக்க அடையாளங்களுள் ஒன்றாகவும் சிங்கிலிஷ் தொடர்ந்து செம்மையுற்று நிலைக்கும் என்றே நம்புகிறேன்.

***