சிங்கப்பூர் புனைவிலக்கியப் பரப்பிற்குள் இன்னொரு சிறுகதைத் தொகுப்பு நுழைந்துள்ளது; கணேஷ் பாபுவின் ‘வெயிலின் கூட்டாளிகள்’. ஆசிரியரின் முதல் நூல். யாவரும் பதிப்பக வெளியீடு, 152 பக்கம், நவம்பர் 2021.

யாராவது என்னிடம் ‘நிறைய வாசிக்கிறீங்க’ என்று பாராட்டிப் பேசினால், நான் உடனே குறுக்கிட்டு எனக்குத் தெரிந்தே என்னைக் காட்டிலும் பன்மடங்கு தீவிரமாகவும் விரிவாகவும் இலக்கியம் வாசிப்பவர்கள் இங்கு சிங்கப்பூரிலேயே இருக்கின்றனர் என்று சிலரைக் குறிப்பிடுவது வழக்கம். அச்சில பெயர்களுள் கணேஷ் பாபுவும் ஒன்று.

அதிகமான எண்ணிக்கையில் வாசிப்பவர் என்பதைத்தாண்டி, ஒரே நூலை பலதடவை வாசிப்பது, ஒரு நூலின் பல்வேறு மொழியாக்கங்களை வாசிப்பது என்று அவரது வாசிப்பு முறைகள் அலாதியானவை. வாசிப்பின் மீது தீராக்காதல் இருந்தாலொழிய அது சாத்தியமில்லை. வாசித்தவற்றைக் காற்றில் கரைந்துபோக விட்டுவிடாமல் தன்னுடைய மொழியில் எழுதியும் பேசியும் கருத்துகளாகவும் அனுபவங்களாகவும் ஆக்கிக்கொள்ளும் திறனும் கைவரப்பெற்றவர்.

வாசகர் வட்ட ஆண்டு விழாவை ஒட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒரு சிறுகதைப் பட்டறையை, மார்ச் 2016இல், நாஞ்சில் நாடனும் சுப்ரபாரதி மணியனும் நடத்தினர். அதில் கலந்துகொண்டோர் எழுதியதில் சிறந்த கதையாக கணேஷ் பாபுவின் கதையை நாஞ்சில் தேர்ந்தெடுத்து அங் மோ கியோ நூலகத்தில் நடந்த நிகழ்வில் அறிவித்தபோதுதான் நான் கணேஷ் பாபுவை முதலில் பார்த்தேன். பிறகு அதே ஆண்டின் ஜூன் மாதத்தில் ‘பிடிகடுகு’ என்ற அவரது கதையை ‘தி சிராங்கூன் டைம்ஸ்’ இதழில் வாசித்து அவரது எழுத்தின் ரசிகனாக ஆனேன்.

மரணம் நிகழா வீட்டிலிருந்து ஒருபிடி கடுகு பெற்றுவந்தால் குழந்தையைப் பிழைக்கச்செய்யலாம் என்று புத்தர் கோதமியிடம் கூறியதாகச் சொல்லப்படும் புத்தஜாதகத் தொன்மத்தை அபாரமான முறையில் பிடிகடுகு கதையில் மீள்புனைவு செய்திருந்தார்.

கோதமி ஆயிரமாயிரம் ஆண்டுகளாகத் தோளில் இறந்த குழந்தையுடன் எப்படியும் இறப்பில்லா வீட்டிலிருந்து ஒருபிடி கடுகு கிடைக்கும் என்று அலைந்து திரிந்து, ஒருகட்டத்தில் சிங்கப்பூரின் பூன்லேவிலுல்ள புத்தர் ஆலயத்துக்கே வருகிறாள். அங்குள்ள பிட்சுவிடம் தனக்கு ஒரு வழிசொல்லுமாறு கேட்கிறாள். அவரும் ஆசையும் மரணமும் ஒன்றுதான் என்பதால் ஆசையை விட்ட யாரிடமாவது ஒரு பிடி கடுகு பெற்றுவந்தால் குழந்தையை பிழைக்கவைக்கலாம் என்கிறார். கோதமி உடனே அங்கிருந்த புத்தர் சிலையொன்றின் கைகளில் ஒருபிடி கடுகைக் கொடுத்துப் பிறகு அதைப் பிள்ளையின் மேல் தூவுகிறாள். பிள்ளை பிழைத்ததா என்பதைக் கதையை வாசித்துப் பார்த்துத் தெரிந்துகொள்ளுங்கள். வெயிலின் கூட்டாளிகள் தொகுப்பில் இக்கதை இடம்பெற்றுள்ளது.

தொன்மங்களைத் தொடர்வதில் கணேஷ் பாபு புதுப்புதுத் தடங்களை அமைத்துச் செல்பவர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. ‘அரூ’ கனவுருப்புனைவு இணைய இதழில் இவர் எழுதிய ‘அந்தரத்தில் நிற்கும் வீடு’ என்ற சிறுகதை மற்றொரு தொன்மத்தொடர்ச்சி.

இக்கதையில் வேதாளம்-விக்கிரமாதித்யன் தொன்மத்தை எடுத்து மீளுருவாக்கியுள்ளார். ஏன் இந்த வேதாளத்தைச் சுமந்தலையவேண்டும் என்ற எண்ணம் விக்ரமனுக்கு ஏற்படுவதாகவும், அச்சமயத்தில் வேதாளமும் இதுவே இறுதிக்கேள்வி என்று கூறி ஒரு கதைசொல்வதாகவும் அமைக்கப்பட்டுள்ள கதை. அதுவே இறுதிக்கேள்வியாக அமைந்ததா என்பதையும் நீங்களே வாசித்துப்பாருங்கள். இக்கதையும் தொகுப்பில் உண்டு.

பிடிகடுகு வாசித்தபோது எனக்கு அவருடன் நேரடி அறிமுகம் உண்டாகியிருக்கவில்லை. அதன்பிறகு, 2017இல், தோ பாயோ நூலகத்தில் நடந்துவந்த ‘தங்கமீன் வாசகர் வட்ட’ச் சந்திப்புகளுக்குச் சென்றபோதுதான் அவரை அறிமுகம் செய்துகொண்டேன். கவிதை ரசனை குறித்த அற்புதமான தொடர் உரை ஒன்றை அவர் தங்கமீனில் ஆற்றிவந்தார். அந்த அங்கத்திற்காகவே நான் தங்கமீன் மாதாந்திரச் சந்திப்புகளில் கலந்துகொள்வதைத் தொடர்ந்தேன்.

கணேஷ் பாபுவின் கதைகளைத் தேடிப்படிக்க ஆரம்பித்தபோதுதான் 2012-இலேயே ‘டிராகன் பொம்மை’ என்ற சிறுகதையை அவர் தங்கமீன் வாசகர் வட்டத்தில் எழுதியது எனக்குத் தெரிந்தது. அக்கதை ‘சிலிக்கான் இதயம்’ (தொகுப்பாசிரியர் பாலு மணிமாறன், தங்கமீன் பதிப்பகம், 2013) தொகுப்பில் இடம்பெற்றுள்ளது. அச்சிறுகதையைப் பற்றி அவரிடம் 2017 வாக்கில் பேசியபோது, ‘கடைசிப்பகுதியைத் திருத்தி எழுதினால் நன்றாக இருக்கும்’ என்று சொன்னார். சொன்னபடியே மாற்றி மெருகூட்டி வெயிலின் கூட்டாளிகள் தொகுப்பில் இடம்பெறச் செய்துள்ளார்.

இப்படியாக ‘கல்மோகினி’, ‘ஒரு நாள்’, ‘தொலைவு’ என்று ‘தி சிராங்கூன் டைம்ஸ்’ இதழில் வெளிவந்த கதைகளானாலும் சரி, ‘கைத்தடம்’, ‘நாற்பதிற்குள் நுழைதல்’ போல தமிழ் முரசில் வெளிவந்த கதைகளானாலும் சரி இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள அவரது ஒவ்வொரு கதையைக் குறித்தும் சொல்வதற்கு எனக்கு ஏதேனும் ஒரு கருத்தோ உரையாடலோ நினைவிலுள்ளது. 2012இல் ‘டிராகன் பொம்மை’ எழுதியவர் பத்தாண்டுகள் கழித்து 15 கதைகள்கொண்ட தன் முதல் தொகுப்பை வெளியிடுகிறார் என்றால் பார்த்துக்கொள்ளலாம். ஆகவே ஒவ்வொரு கதையும் நினைவில் நிற்பதாக அமைவதில் வியப்பில்லை.

IMG_0821

பரந்த வாசிப்பும் விமர்சன நோக்கும் உள்ளவர் என்பதால் அவரது கதைகளில் எனக்குக் குறைகளாகப் பட்டவற்றை அவரிடம் நேரடியாகவே விவாதிக்க முடிந்தது. ‘கைத்தடம்’, கனவுலகவாசிகள்’ கதைகளில் என்னிடமிருந்து விலகியே சென்றுகொண்டிருந்த உங்கள் வர்ணனை வரிகள் ஏனோ ‘கல்மோகினி’யில் மட்டும் ஈர்க்கின்றன என்பேன். அவரும் வர்ணனைகளின் தன்மைகள் குறித்துப் பொறுமையாக பதிலளிப்பார். அரைகுறை விமர்சகர்களுக்குப் படைப்புச் சூட்சுமங்களை விளக்கவேண்டியது இன்றைய எழுத்தாளர் எதிர்கொள்ளவேண்டியிருக்கும் உபத்திரவங்களுள் ஒன்று.

இலக்கியவாதிகளையும் அவர்களின் படைப்புகளையும் சுற்றியே அமையும் ‘நால்வர்’ கதை, கொவிட் பெருந்தொற்றுக் காலம் வாழ்க்கையைக் குறித்து எழுப்பியுள்ள கேள்விகளுக்கு விடைகாண முற்படும் ‘விடுதலை’ கதை என்று பல்வேறு தளங்களில் பயணிக்கும் வெயிலின் கூட்டாளிகள் தொகுப்பிலுள்ள கதைகள் ஒவ்வொன்றும் ஏதோவொரு வகையில் சிங்கப்பூருடனும் தொடர்புடையவை.

பரந்த வாசிப்பும், கூர்ந்த சிந்தனையும், நிதானமான பார்வையும், எழுத்து வித்தையும் கொண்ட ஒருவரின் புனைவுகள் அளிக்கும் வாசிப்பனுபவம் நிச்சயம் வாசகர்கள் அனுபவிக்கவேண்டிய ஒன்று. ஆராய்வதற்கும் அனேக விஷயங்கள் கணேஷ் பாபுவின் படைப்புகளுள் உண்டு. ஆகவே எத்தகைய வாசகராயினும் வாசித்துப்பார்க்க அனைத்து முகாந்திரங்களும் கொண்ட ஒரு தொகுப்பு.

தன் படைப்புகளில் எப்போதும் நிறைவின்மையை மட்டுமே அடையும் கணேஷ் பாபு, தொடர்ந்து வலுவான புனைவுகளைப் படைத்து சிங்கப்பூரின் இடத்தைத் தமிழ்ப் புனைவுப் பரப்பில் அழுத்தமாகப் பதிக்க வாழ்த்துகிறேன்!

***