சுப்பிரமணி இரமேஷின் ‘தமிழ் நாவல் வாசிப்பும் உரையாடலும்’ (ஆதி வெளியீடு, 2021) ஒரு கட்டுரைத் தொகுப்பு நூல். ஏறக்குறைய சென்ற எழுபதாண்டுகளில் (1950 – 2021) வெளியான 25 தமிழ் நாவல்களைக் குறித்த விமர்சனப் பார்வைகளை இத்தொகுப்பில் ஆசிரியர் முன்வைக்கிறார்.

இத்தொகுப்பு ஜெயமோகனின் ‘நாவல் கோட்பாடு‘ போல நாவல் என்கிற வடிவத்தை வரையறுக்கும் முயற்சியோ ஆ.இரா.வேங்கடாசலபதியின் ‘நாவலும் வாசிப்பும்‘ போல வாசிப்பு முறைகள் எழுத்துக்கலை வடிவத்துடன் ஊடாடிய விதங்களைக் கூர்நோக்கும் முயற்சியோ அல்ல. அதேசமயம், ஒரு நாவலின் கதைக்குள் புகுந்து அதைச்சுருக்கிச் சொல்லிக்கொண்டேபோய், இறுதியில் தன் வாசிப்பனுபவத்தை ஓரிரு வரிகளில் சுருக்கி, அந்தச் சுருக்கத்தைக்கொண்டு நாவலை வகைப்படுத்தவும் தீர்ப்பிடவும் முயலும் எளிய விமர்சனமும் அல்ல.

ஒவ்வொரு நாவலைக் குறித்து எழுதுவதற்கும் ஒவ்வொரு அணுகுமுறையைக் கையாள்கிறார். ‘காதுகள்’ (எம்.வி.வெங்கட்ராம்) நாவலை ஆசிரியரின் தனிப்பட்ட அனுபவங்களின் வடிவமாக, வெளிப்பாடாக ஆக்கி வாதிடுகிறார் என்றால் ‘காகித மலர்கள்’ (ஆதவன்) நாவலில் காலமாற்றம் என்னும் பொதுத்தன்மை ஆசிரியரின் வழியாக வெளிப்பட்டுள்ளதாகப் பார்க்கிறார். எந்த விமர்சனத்தையும் போலவே இந்த 25 கட்டுரைகளைக்கொண்டு அந்த 25 நாவல்களின் சாராம்சங்களையும் நாம் குறுக்குவழியில் பெற்றிட இயலாது என்றாலும் இத்தொகுப்பிற்கான தேவை நூலின் தலைப்பில் உள்ள ஓர் சொல்லான ‘உரையாடல்’ என்பதுதான்.

நாவல்களைக் குறித்த தன் கருத்துகளை அவற்றுக்கான காரணங்களுடன் இரமேஷ் முன்வைக்கும்போது அவற்றை மறுப்பதற்கும் நாம் காரணங்களைத் தேடவேண்டியிருக்கிறது. ஓர் உரையாடல் அவ்வாறே பொருளுள்ளதாக ஆகமுடியும். இல்லாவிடில் ஒன்று ‘உன் பார்வை உனக்கு, என் பார்வை எனக்கு’ என்று சுருங்கிக்கொள்ள நேரும் அல்லது வாக்குவாதமாக ஆகித் தனிப்பட்ட காழ்ப்பிலும் வன்மத்திலும் சென்று முடியும். அவ்விரண்டு நிலைகளுமே உரையாடலுக்கு நேரெதிர் நிலைகள். உரையாடலில் இறங்கும் இருதரப்புக்கும் எதிர்த்தரப்பு முட்டாள்தனமோ முன்முடிவோ இல்லாதது என்ற நம்பிக்கை அவசியம். அதன்மேல்தான் உரையாடல் நிகழமுடியும். வாசகரை இரமேஷ் நம்பியிருக்கிறார், இரமேஷை வாசகர் தாரளமாக நம்பலாம்.

இத்தொகுப்பின் கட்டுரைகள் மெல்லிய எல்லைகளைக் கொண்ட பல இடங்களைச் சுட்டிக்காட்டுகின்றன. ஜீ.முருகனின் ‘மரம்’ நாவலில் வரும் வெளிப்படையான பாலியல் சித்தரிப்புகளைச் மென்மையாக நொந்துகொண்டு நகர்ந்துவிடும் விமர்சகர், விநாயக முருகனின் ‘சென்னைக்கு மிக அருகில்’ நாவலில் அதையே முதன்மைப்படுத்திப் படைப்பை நிராகரிப்பது ஏன்? அந்த உணர்வுநிலை மாற்றத்தை உண்டாக்கும் அம்சங்கள் எவை? போன்ற கேள்விகளுக்கு விடைகாணுவதற்கேனும் மேலும் சில நாவல்களை வாசிப்பேன் என்று நினைக்கிறேன். அதற்காகவும் இத்தொகுப்பை வரவேற்கிறேன்.

கலைமகள் இதழில் தொடராக வெளியான ‘குறிஞ்சித்தேன்’ நாவலில் வரும் வரலாற்றுச் செய்திகளுக்கு ராஜம் கிருஷ்ணன் அடிக்குறிப்பு போட்டு அனுப்ப, ‘புனைகதைக்கு அடிக்குறிப்பு கொடுக்கும் மரபு இல்லை’ என்று கலைமகள் ஆசிரியர் கி.வா.ஜ. அவற்றை நீக்கிப் பதிப்பித்தது போன்ற அதிகம் கேள்விப்பட்டிராத, சுவாரஸ்யமான இலக்கிய வரலாற்றுச் செய்திகளும் இத்தொகுப்பில் உண்டு.

மாதொருபாகனில் (பெருமாள் முருகன்) ஒருசில பகுதிகளை மட்டும் பிடுங்கியெடுத்து வாசித்து அதைத் தம் அரசியலுக்குப் பயன்படுத்திய வாசிப்புத் தரப்பால் நாவலின் மையம் சிதறடிக்கப்பட்டதுபோல, கானகன் (லக்‌ஷ்மி சரவணகுமார்) நாவலில் வலிந்து திணிக்கப்பட்ட பாலியல் சம்பவங்களால் படைப்புத் தரப்பிலும் மையச் சிதறலாக்கம் நடைபெறுகிறது என்ற பார்வை அவ்விரு நாவல்களைக் குறித்த கட்டுரைகளையும் இணைத்துப் பார்க்கும்போது உருவாகிறது. சில நாவல்களிலுள்ள காலக்குழப்பம் எவ்வாறு நாவலின் மையத்தை பாதிக்கிறது என்றும் கூர்மையாக விவாதிக்கிறார் இரமேஷ். ‘தீர்ப்புகளின் காலம்’ (அபிமானி) கட்டுரையில் கைபேசிக் காலமும் நிலப்பிரபுத்துவக் காலமும் குழம்புவதால் உண்டாகும் நம்பிக்கையின்மை ஓர் எடுத்துக்காட்டு.

‘சோளகர் தொட்டி’ (ச. பாலமுருகன்) நாவலைக் குறித்த கட்டுரை நாவலை அனேகமாக மறந்துவிட்டு, சோளகர் பழங்குடி மக்கள் சந்தன வீரப்பனை வேட்டையாடச் சென்ற படைகளால் பட்ட அவதிகளையே ஆதாரங்களுடன் பேசிமுடித்துவிட்டது. அந்த நாவல் கிட்டத்தட்ட வரிக்குவரி உண்மை என்கிற நிலையில் எழுதப்பட்டதால் விமர்சனமும் அப்படி நிகழ்ந்திருக்கலாம். ஆயினும் ஓர் அண்மைக்கால உண்மைச் சம்பவத்தை ஒட்டிப் புனைவாக எழுதப்படும் (இதை nonfiction fiction என்று அழைக்கின்றனர்) நாவல்களோடு அவற்றை ஒப்பிட்டு விமர்சித்திருந்தால் அக்கட்டுரை பொலிவடைந்திருக்கும். அல்புனைவுப் புனைவு என்பது சித்திரிப்பு, களம் போன்றவற்றில் புனைவாம்சம் குறைவாகவும், மொழியிலும் உரையாடலிலும் இதழியல் அம்சங்கள் நிறைந்த புனைவாகவும், சமகால வரலாறாகவும் அமைவது என்று ஓர் வரையறையை ஒருமுறை நான் சீனிவாசன் நடராஜனின் ‘1967 தாளடி’ நாவலைக் குறித்துக் கேட்டபோது மாலன் குறிப்பிட்டார். இவ்வரையறை சோளகர் தொட்டிக்குச் சரியாகப் பொருந்தும் என்று தோன்றுகிறது.

இரமேஷிடம் கேட்கவேண்டிய கேள்விகளும் இத்தொகுப்பில் இல்லாமலில்லை. ‘ஆத்துக்குப் போகணும்’ (காவேரி) நாவலில் வரும் கணவன் “..கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கொள்ளக்கூடாது?” என்று மேலதிகாரியைக் குறிப்பிட்டுக் கேட்பதை நாவலின் முக்கியப் பகுதிகளுள் ஒன்றாகக் குறிப்பிடும் கட்டுரையாளர், ‘அட்லாண்டிஸ் மனிதன் மற்றும் சிலருடன்’ (எம்.ஜி.சுரேஷ்) நாவலில் வரும் நடிகையை மணந்த கணவன் “..அட்ஜஸ்ட் செய்துகொள்ளேன்” என்று தன் படத்தின் நிதியாளரைக் குறிப்பிட்டுக் கேட்கும்போது அது ஊடகத்தனமான மதிப்பீடு, வாசகனைக் கிளர்ச்சி ஊட்டுவதற்காக எழுதப்பட்டது என்று சாடுவது ஏன் என்று எனக்குக் குழப்பம் உண்டானது. ஒரேவிதமான சூழலில் ஒரேவிதமான உரையாடலுக்கு முற்றிலும் வெவ்வேறு விமர்சனம் அளிக்கப்படும்போது அதற்கான போதிய பின்புலமும் விளக்கமும் அவசியம். கட்டுரைகளை ஒரு தொகுப்பாக ஆக்கும்போது இதுபோன்ற அம்சங்களில் கவனம் செலுத்தவேண்டும்.

இரமேஷ் ஓர் ஆய்வாளர் என்பதால் பின்னிணைப்பாக 25 நாவல்களும் முதலில் வெளியான ஆண்டு, நாவலாசிரியர் குறித்த சிறுகுறிப்பு ஆகிவற்றைச் சேர்த்துள்ளார். கட்டுரைகளில் பொதுவாக உணர்ச்சிகரமான வாசகராகத்தான் வெளிப்படுகிறார் என்பதால் வாசிக்கச் சலிப்பில்லை. மேலும், ‘சினிமாவுக்குப் போன சித்தாளு’ (ஜெயகாந்தன்) குறித்த கட்டுரையின் இறுதியில் அளிக்கப்பட்டுள்ள “இக்கட்டுரையில் இடம்பெறும் ‘வாத்தியார்’ என்ற சொல் கண்டிப்பாக எம்.ஜி.ஆரைக் குறிக்காது; ஆனால் எம்.ஜி.ஆர். என்ற சொல் வாத்தியாரைத்தான் குறிக்கும். எக்காரணத்தைக் கொண்டும் நீங்கள் நினைப்பதுப்பொல அது எம்.ஜி.ஆரைக் குறிக்காது” என்ற பின்குறிப்பைப்போல வாய்விட்டுச் சிரிக்கச்செய்யும் தருணங்களும் இத்தொகுப்பில் உண்டு.

ஒரு தொகுப்பாசிரியராக ‘காலவெளிக் கதைஞர்கள்‘ நூலில் மிளிர்ந்த சுப்பிரமணி இரமேஷ், ஓர் அணுக்கமான விமர்சகராக இத்தொகுப்பில் வெளிப்பட்டுள்ளார். அவரது பயணமும் பணியும் தொடர்ந்து சிறக்க வாழ்த்துகள்!

***