சாகித்திய அகாதெமி வெளியீடான (2020) ‘காலவெளிக் கதைஞர்கள்’, இருபது சிறுகதையாசிரியர்களின் படைப்புலகை ஆராய்ந்து இருபது பேர் எழுதிய திறனாய்வுக் கட்டுரைகளின் தொகை நூல். கட்டுரைகள் தேர்வு, தொகுப்பு, அறிமுகம் செய்திருப்பவர் தொகுப்பாசிரியர் சுப்பிரமணி இரமேஷ். 356 பக்கம்.

புதுமைப்பித்தன், ந. பிச்சமூர்த்தி, கு.ப. ராஜகோபாலன், மௌனி, க.நா.சு., லா.ச.ரா., சி.சு. செல்லப்பா, எம்.வி. வெங்கட்ராம், கு. அழகிரிசாமி, தி. ஜானகிராமன், ஜெயகாந்தன், ஜி. நாகராஜன், சுந்தர ராமசாமி, கிருஷ்ணன் நம்பி, ஆர். சூடாமணி, அசோகமித்திரன், ஆதவன், ஜெயந்தன், கந்தர்வன், கோபி கிருஷ்ணன் ஆகியோரின் சிறுகதைகள் இக்கட்டுரைகளில் ஆராயப்பட்டுள்ளன. தொகுப்பாசிரியரின் சொற்களில், இவர்கள் ‘அனைவருமே சிறுகதையின் தனித்தன்மையை உணர்ந்து செயல்பட்டவர்கள்; காலவெள்ளத்தை எதிர்த்துக் கரையேறிய கதைகளை எழுதிவிட்டுக் காலமானவர்கள்..’.  

முறையே, வீ. அரசு, சுந்தர ராமசாமி, பெருமாள் முருகன், பிரமிள், அசோகமித்திரன், ச. தமிழ்ச்செல்வன், சு. வேணுகோபால், ரவிசுப்பிரமணியன், கல்யாணராமன், சுகுமாரன், நவபாரதி, சுப்பிரமணி இரமேஷ், அரவிந்தன், நகுலன், ஷங்கர்ராமசுப்பிரமணியன், க. மோகனரங்கன், இந்திரா பார்த்தசாரதி, கவிதைக்காரன் இளங்கோ, ந. முருகேச பாண்டியன், ஆதிரன் ஆகியோர் அக்கட்டுரைகளை எழுதியுள்ளனர்.

IMG_8837

கடந்த சுமார் இருபதாண்டுகளில் (2000-2020) நவீனத் தமிழிலக்கிய நூல்களின் வெளியீட்டுப் பரப்பில் நிகழ்ந்துள்ள ஒரு தேவையான, குறிப்பிடத்தக்க, வரவேற்கத்தக்க நிகழ்வாக மறைந்த பல இலக்கிய முன்னோடிகளின் படைப்புகள் திரட்டப்பட்டு முழுத்தொகுப்புகளாக வெளிவந்துள்ளதைச் சொல்வேன், குறிப்பாகச் சிறுகதைத் தொகுப்புகள்.

ஒரு புத்தகத்தைக் கையிலெடுத்தால் அப்படைப்பாளியின் சிறுகதை உலகை முழுமையாக வாசித்துவிடலாம் என்கிற எண்ணமே ஓர் இலக்கிய வாசகருக்குக் கூடுதலான உற்சாகத்தையும் எதிர்பார்ப்பையும் அளிக்கிறது. ஒரு படைப்பாளியின் எழுத்திலுள்ள பரிமாணங்களை மட்டுமின்றி, காலப்போக்கில் அவரது எழுத்து பெற்றுள்ள பரிணாம வளர்ச்சியையும் கண்டுகொள்ள முழுத்தொகுப்புகள் வாய்ப்பளிக்கின்றன. மேலும் அவ்வாறாகத் தொகுப்பவர்கள் அந்தப் படைப்பாளியின் எழுத்தின் மீதுள்ள பிரேமையால்தான் அப்பணியில் இறங்குகின்றனர் என்பதால் முழுத்தொகுப்புக்கு அவர்கள் எழுதக்கூடிய முன்னுரைகளில் தோய்ந்த வாசிப்பும் உணர்வாழமிக்கக் கருத்துகளும் பொதிந்திருப்பதைக் காணலாம்.

புதுமைப்பித்தன் (வீ.அரசு), கு.ப.ரா., (பெருமாள்முருகன்), தி. ஜானகிராமன் (சுகுமாரன்), அசோகமித்திரன் (க. மோகனரங்கன்) ஆகியோரின் சிறுகதைகள் குறித்த கட்டுரைகள் அப்படியான முழுத்தொகுப்புகளுக்கு அவற்றின் தொகுப்பாசிரியர்களாலேயே எழுதப்பட்டதுதான். அவை செறிவாகவும் செம்மையாகவும் அமைந்துள்ளதில் வியப்பில்லை. இந்த விஷயத்தை சுப்பிரமணி இரமேஷ் கவனித்து அம்முன்னுரைகளை இத்தொகுப்பில் பொருத்தமாகப் பயன்படுத்தியிருக்கிறார் என்று நினைக்கிறேன்.

ஜி. நாகராஜன் சிறுகதைகள் குறித்து இரமேஷ் இத்தொகை நூலுக்காக ஒரு கட்டுரையும் எழுதியிருக்கிறார். அக்கட்டுரையும் நன்கு மிளிர்ந்துள்ளது. பாலியல் தொழிலாளிகளின் வாழ்க்கையின் புறச்சித்திரத்திற்கு ஜெயகாந்தன் வண்ணம் தீட்டினார் என்றால், ஜி.நாகராஜன் அந்த வண்ணமாகவே இருந்தார் என்று கூர்மையாகவும் ரசனையோடும் அக்கட்டுரையில் எழுதியிருக்கிறார். ஜெயகாந்தனின் ‘அக்கினிப் பிரவேசம்’ (1966) சிறுகதையைப் பகடிசெய்யும் நோக்கில்தான் ஜி.நாகராஜன் அதேபெயரில் 1967இல் ஒரு சிறுகதை எழுதியிருக்கவேண்டும் என்று ஊகிப்பவர் அதில், ‘ஏம்மா, மனசு வேறே, உடல் வேறயா?’ என்று ஜெயகாந்தனுக்குச் சவால் விட்டிருப்பதைச் சுட்டிக்காட்டுகிறார்.

‘காலத்தை எதிர்த்துக் கரையேறிய கதைகள்’ என்ற தலைப்பில் இரமேஷ் எழுதியிருக்கும் முப்பது பக்க முன்னுரையும் குறிப்பிடத்தக்க ஆக்கம். பல கட்டுரையாளர்கள் இடம்பெறும் இதுபோன்ற தொகை நூல்களுக்கு முன்னுரை எழுதுவோர் அக்கட்டுரைகளின் கருத்துகளை சுருங்கச்சொல்லும் உப்புசப்பில்லாத முன்னுரைகளை எழுதுவதுண்டு. ஆனால் இரமேஷ் இம்முன்னுரையை அதிகம் கேள்விப்பட்டிராத தமிழ்ச் சிறுகதை வரலாற்றுத் தகவல்களுடன் தொடங்கி, தேர்ந்துகொண்ட எழுத்தாளர்களின் படைப்புலகுகளைக் குறித்த, தன்னுடைய பார்வைகளைப் பிரதானமாகக்கொண்டு எழுதியிருக்கிறார்.

கதைசொல்லிகளாக நம் குடும்பங்களில் பெண்கள்தான் தொடக்கத்தில் இருந்திருக்கிறார்கள். ஆனால் நவீன சிறுகதை  வடிவத்தைக் கைப்பற்றும்போது அவர்கள் பின்னால் சென்றது ஏன் என்று ஒரு நல்ல கேள்வியை எழுப்பியிருக்கிறார். இலக்கியப் படைப்புகளை ரசனையோடு அணுகுவது, வரலாற்று நோக்கில் பார்ப்பது, இலக்கிய வரலாற்றைச் சேர்ப்பது, சமூகத்தோடு இணைத்துப் பார்ப்பது என்று நாலாபக்கங்களிலும் இரமேஷ் தன் எழுத்தில் கவனம் செலுத்தியிருக்கிறார். அவருடைய கட்டுரைத் தேர்வுகளிலும் அக்கவனம் பிரதிபலித்துள்ளது.

இருபது கட்டுரைகளிலும் கொஞ்சம் சோடை என்றால், சுந்தர ராமசாமி சிறுகதைகள் குறித்து அரவிந்தன் எழுதிய கட்டுரையையும், ஜெயந்தன் கதைகள் குறித்து கவிதைக்காரன் இளங்கோ எழுதிய கட்டுரையையும்தான் சொல்வேன். அதுவும் புனிதர்களுக்கு முன் சாதாரண மனிதர்கள் பாவியாகத் தெரிவர் என்பார்களே அதுபோல ஒப்பீட்டளவில்தான். உயிர்த்துடிப்பு குறைந்த கட்டுரைகளாக அவ்விரண்டும் அமைந்துவிட்டன. ஆனாலும் முழுமையாக வாசிக்க முடிந்தது.

சுந்தர ராமசாமிக்கும் அசோகமித்திரனுக்கும் இந்த நூலில் ஒரு சிறப்பு. அவர்கள் இருவரும் கட்டுரை ஆசிரியர்களாகவும் கட்டுரை நாயகர்களாகவும் இடம்பெற்றுள்ளனர். அவர்கள் பிறருடைய கதைகளைப் பார்த்த கோணம் அவர்களுடைய கதைகளில் எவ்வாறு அமைந்துள்ளது என்று தீவிர வாசகர்கள் பார்த்துக்கொள்ளலாம்.

சில கட்டுரைகள் சிறுகதைகளின் வழியாக அவற்றின் ஆசிரியரைத் தீட்டிக்காட்டுவது போலவும், பிற கட்டுரைகள் ஆசிரியரின் ஆளுமை, பின்புலம், சார்பு எவ்வாறு படைப்புகளில் படிந்துள்ளது என்று பார்ப்பதுபோலவும் அமைந்துள்ளன. கட்டுரைகளின் தலைப்புகளே ஓரளவுக்கு ஒருகட்டுரை இவ்விரண்டில் எவ்விதம் என்று காட்டிக்கொடுக்கின்றன. எடுத்துக்காட்டாக, ‘கந்தர்வன் என்ற கதைசொல்லி’ என்ற ந. முருகேச பாண்டியனின் கட்டுரையையும், ‘கிருஷ்ணன் நம்பியின் கதைகள்’ என்ற நகுலனின் கட்டுரையையும் குறிப்பிடலாம். இந்த அணுகுமுறை எவ்விதமாக இருந்தாலும் கட்டுரைகள் காட்டும் படைப்புலகச் சாரத்தில் கூடக்குறைச்சல் சொல்வதற்கில்லை.

இங்கு இடைவெட்டாக ஒருவிஷயத்தைக் குறிப்பிட விரும்புகிறேன். படைப்பாளியையும் படைப்பையும் பிரித்துப்பார்க்கச்சொல்லும் வாதம் தொடர்ந்து வலுவிழந்துவருகிறது. ‘Author denotes Authority’ என்பதால் படைப்பாளியை படைப்பிலிருந்து விடுவித்த ரொலான் பார்த் இன்று சில அசந்தர்ப்பமான சூழல்களில் படைப்பாளி தன்னைத் தற்காத்துக்கொள்வதற்கான கேடயமாக மட்டும் பயன்பட்டுவருகிறார். இது விவாதத்திற்குரியது.

இத்தொகை நூலிலுள்ள சில கட்டுரைகளிலிருந்து சில வரிகளைக் கவனப்படுத்தலாம் என்று நினைக்கிறேன். வாசிக்கும்போது எழுச்சியூட்டக் கூடியதாகவும் கட்டுரை ஆசிரியர்கள் சரியான இடங்களைத்தான் தொட்டுக்காட்டுகிறார்கள் என்று வாசகரை நம்பச்செய்வதாகவும் அவை தோன்றின.

புதுமைப்பித்தன் தன் கதைகளுக்குப் பாராட்டுகளை எதிர்பார்த்தவர் அல்ல என்பது போல ஒரு எண்ணம் அவரது வரலாற்றை வாசித்த அனைவருக்கும் உண்டு. ஆனால் அவரது ‘கடிதம்’ சிறுகதையிலிருந்து வீ.அரசு ஒரு பகுதியை எடுத்துக்காட்டி இதுவே புதுமைப்பித்தனின் உள்ளமாக இருந்திருக்கலாம் என்கிறார். அப்பகுதியிலிருந்து ஒரு பத்தி இங்கே:

“புகழ் இல்லாமல் இலக்கிய கர்த்தா உயிர்வாழ முடியாது. முகஸ்துதி வேண்டாம். இல்லாததை நீங்கள் சொல்லவேண்டாம். செய்வது சரிதான்; நன்றாயிருக்கிறது என்று சொல்லவாவது வேண்டாமா? நேர்மையான புகழ் இலக்கிய கர்த்தாவுக்கு ஊக்கமளிக்கும் உணவு. இதைக் கொடுக்கக்கூடச் சக்தியற்ற கோழையான ஒரு சமூகத்திற்கு என்ன எழுதிக் கொட்ட வேண்டியிருக்கிறது! இதில் வாழும் கிரந்த கர்த்தா மனமிடிந்து பாழாய்ப் போவான்.”

ந. பிச்சமூர்த்தியின் சிறுகதைகள் குறித்து சுந்தர ராமசாமி எழுதியுள்ள கட்டுரையில், ஒரு படைப்பை அவ்வாறு ஆராயவேண்டும் என்று ஒரு முக்கியமான கருத்தைத் தெரிவித்திருக்கிறார்:

“ஒரு படைப்பைப் பரிசீலனை செய்யும்போது படைப்பு, பிரக்ஞையின் தளத்தில் நிகழ்ந்திருக்கிறதா அல்லது பழக்கத்தின் எந்திர ரீதியான ஜோடனையா என்பது முதலில் எழுப்பிக்கொள்ள வேண்டிய கேள்வியாகும். தமிழில் எழுதப்படும் கதைகளில் பத்துக்கு ஒன்பது கதைகள் பழக்கத்தின் எந்திர ரீதியான ஜோடனையின் விளைவாகும்”

கிட்டத்தட்ட இதே கருத்தை பிரமிள் தன் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். ‘விரல் ஞானஸ்தன்’ என்பது அவரது பிரயோகம். ‘..சாஸ்திரீயமாகத் தான் கற்ற ஸ்வர உருப்படிகளை மட்டுமே வாசிப்பது போல்..’ என்கிறார். கலையைத் தொழில்நுட்பமாகக் கருதிவிடக்கூடாது என்பதில் முன்னோடிகளுக்கு இருந்துள்ள கவனத்தை இக்கருத்துகள் காட்டுகின்றன. மௌனியின் கதைகள் அலசிப்பார்த்து ஆழம்தேடும் வகையாக அல்லாமல் வாசிக்கும்போதே அனுபவித்து நம்மை இலேசாக்கிக்கொள்ள வகைசெய்கிறது என்ற பொருளில் பிரமிள் எழுதியுள்ள கருத்தும் சிந்திக்கத்தக்கது. சிறுகதைகளின் சுருக்கத்தையும் சூட்சுமத்தையும் கெடுத்து அவற்றை விளக்கிவிளக்கி ஆழம்தேடும் விமர்சனப்போக்கை இவர் விரும்பவில்லை.

க.நா.சு.வின் கதைகளைக் குறித்து எழுதும் அசோகமித்திரன், ‘உரத்த குரலே பழக்கப்பட்டுப் போனவர்களுக்கு அவரது கதைகள் உப்புச் சப்பில்லாமல்தான் தோன்றக்கூடும்’ என்று எழுதியுள்ளார். அசோகமித்திரன் கதைகளும் உரத்துப் பேசாதவை என்பதை இங்கு நாம் கவனிக்கவேண்டும்.

திஜா குறித்து கரிச்சான் குஞ்சு எழுதியதைத் தன் கட்டுரையில் எடுத்தாள்கிறார் சுகுமாரன். அது திஜாவின் பல புனைவுத் தருணங்களுக்கு விடையளிப்பதாக உள்ளது:

“அவனுடைய (திஜாவுடைய) இளைய ஸகோதரி மூத்த ஸகோதரியின் புருஷரையே மணக்கவேண்டிய நிர்ப்பந்தம் நேர்ந்தபோது அவர்கள் குடும்பத்தில் அது பெரிய குழப்பத்தை, அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கிடந்து பொருமினான் இவன். தந்தையாரிடம் இருந்த மரியாதையால் அடங்கினான். ஆனால் பிற்பாடு அந்த ஸகோதரிகள் இருவருடைய கணவனாய் இருந்தவர் இறந்த பத்தாவது நாள் கழுத்தில் புடவை போடுவது வேண்டாமென்று கத்தி ஆர்ப்பாட்டம் செய்து துடிதுடித்தான். புரோஹிதர் வயதாவனவர் ஒருவரைத் திட்டியும் விட்டான். அப்போது சமாதானம் செய்யப்போன என்னையும் அடித்துவிட்டான்.”

ஆதவன் தனக்கு எழுதுவது ஏன் உவக்கிறது என்பது குறித்துக் கூறியதை அவரது படைப்புகள் குறித்து எழுதியுள்ள இந்திரா பார்த்தசாரதி மேற்கோள் காட்டுகிறார்:

“சொற்களைக் கட்டி மேய்ப்பது எனக்குச் சின்ன வயசிலிருந்தே பிடித்தமான காரியம். அவற்றின் இனிய ஓசைகளும் நயமான வேறுபாடுகளும், அவற்றின் பரஸ்பர உறவுகளும், இந்த உறவுகளில் நீந்துகிற அர்த்தங்களும், எல்லாமே எனக்குப் பிடிக்கும். மனிதர்களையும் எனக்குப் பிடிக்கும். மனிதர்களுடன் உறவு கொள்வது பிடிக்கும்.”

இன்னும் எவ்வளவோ எண்ணத்தக்க கருத்துகளும் மனவிகாசங்களை உருவாக்கும் சொற்சேர்க்கைகளும் இத்தொகை நூலின் கட்டுரைகளில் இடம்பெற்றுள்ளன.

தொகுப்பாசிரியர் சு.இரமேஷுக்கு வாழ்த்துகள்! அவரது இலக்கியப் பயணம் தொடர்ந்து செம்மையும் மேன்மையும் அடையட்டும்!

இலக்கிய ஆர்வலர்கள் தவறவிடக்கூடாத நூல்.

***