ஈராண்டுக்குமுன் எழுதிய ஒரு கட்டுரையில், “இவருடைய முதல் சிறுகதைத் தொகுப்பான ‘நான் கொலை செய்யும் பெண்கள்’ (2006) வெளியாகி சுமார் பதினைந்தாண்டு ஆகிறது என்றாலும் அதன் தாக்கம் தொடர்ந்து இங்கு இலக்கிய விவாதங்களில் நீடிக்கிறது. இவரது இரண்டாம் தொகுப்பு வரும்போது அது சிங்கைத் தமிழ் இலக்கியத்தின் நிரந்தர அடையாளங்களுள் ஒன்றாக இருக்கும் என்பது என் கணிப்பு” என்று எழுதியிருந்தேன். நான் குறிப்பிட்ட அந்த எழுத்தாளர் லதா. எதிர்பார்த்திருந்த அந்த இரண்டாம் சிறுகதைத் தொகுப்பு ‘சீனலட்சுமி’ (தமிழினி, ஜனவரி 2022) இரண்டு மாதங்களுக்கு முன் வெளிவந்துவிட்டது.

சீனலட்சுமி தொகுப்பிலுள்ள ஒன்பது சிறுகதைகளும் கடந்த பத்தாண்டுகளில் எழுதப்பட்டவை (2012-2022).  லதாவின் ஒரு புதிய கதையை வாசிக்க என்னைப்போன்ற வாசகர்கள் சராசரியாக  12 மாதம் காத்திருக்கவேண்டும். ஆனால் இதுவரை எனக்குக் காத்திருப்பு வீண்போணதில்லை. ஒவ்வொன்றும் ஆழக்கடலில் தேடிய முத்து. ‘சீனலட்சுமியின் வரிசை’ கதையை ‘நகர்மனம்’ தொகுப்பிலும் ‘காவடி’ கதையை ஆங்கிலத்திலும் முதலில் வாசித்திருக்கிறேன். காவடியைத் தமிழில் இத்தொகுப்பில்தான் வாசிக்கிறேன். மற்றவை அனைத்தும் ‘வல்லினம்’ இணைய இதழில் வெளிவந்த கதைகள். தனித்துவமிக்க உதிரிப்பூக்கள் தொடுக்கப்பட்டுள்ளதால் புதுமையான சரமாக விளங்குவதோடு சாரத்தின் தாக்கமும் உக்கிரமாகவே இருக்கிறது.

IMG_1212

சீனலட்சுமி என்கிற தலைப்பு, தொகுப்பின் முன்பின் அட்டைகளில் காணப்படும் பெண்களின் படங்கள், “லதாவின் சிறுகதைகள் நவீனப் பெண்களின் அடையாளப் பரிமாணங்களை பிரகடனமில்லாமல் முன்வைக்கின்றன” என்று தொடங்கும் பின்னட்டைக் குறிப்பு ஆகியவை இவை பெண்ணியம் பேசும் கதைகளோ என்று சிந்திக்கச் செய்யலாம். பெண்ணியம் பேசும் படைப்புகளில் ஒவ்வாமைகொண்ட வாசகர்கள் புத்தகத்தைத் திறக்காமலேயே விட்டுவிடும் அபாயமும் உள்ளது. ஆனால் ஒன்பது கதைகளில் ஒரு கதைகூட பெண்ணியம் ‘பேசவில்லை’ என்பது என் பார்வை. பெண்களின் பார்வையில், அனுபவத்தில், சிந்தனையில் வெளிப்படும் வாழ்க்கைச் சீவல்களின் தொகுப்பு என்றால் பொருத்தமாக இருக்கும்.

மேலும் லதா படைப்புகளின் பெண்ணியம் என்பது பொதுப்புத்தியில் உறைந்திருக்கும் ‘அதிரடித் தீர்வை நோக்கிய ஆர்ப்பாட்டப் பெண்ணியம்’ அல்ல, இழந்தவற்றை மீட்டெடுத்து நிலைநிறுத்தி அடுத்த தலைமுறைக்குக் கையளிக்க விழையும் ஆதாரசுருதிப் பெண்ணியம்.

இரண்டு கதைகளை விவாதித்தால் விஷயம் விளங்கிவிடும்.

தேக்காவில் ஒரு பாலம் இருந்தது‘ கதை. இந்தியருள் தென்னிந்தியர் என்ற ஒதுக்கல், தமிழர் என்றுபார்த்தாலும் சாதிப் பிரிவினைத் தாழ்வு, ஒரே சாதிக்குள்ளும் பெண் என்பதால் பாலினத் தாழ்வு, ஆணாதிக்கக் குடும்ப அமைப்பில் வன்முறைக்குள்ளாகும் அடிமைநிலை என்று எல்லாத் தளங்களிலும் சிறுமைக்குள்ளாகும் ‘போராளி அக்கா’. யதார்த்தம் தொடர்ந்து வெவ்வேறு வடிவங்களில் அவரைக் கீழே இழுக்கிறது. அதேவேளையில் அவரது உடற்திறனும், அறிவுத்திறனும், மொழித்திறனும், அரசியலறிவும் விடுதலைப் போராட்டக் களத்தில் மேலே இழுக்கிறது. மண் விடுதலையோடு சேர்த்து அக்கா தன் விடுதலையையும் பெண் விடுதலையையும்கூடக் கற்பனை செய்திருக்கலாம். ஆனால் அது அப்படி சுளுவாக நடந்து முடிந்துவிடும் காரியமாக இருந்தால் எப்போதோ நடந்திருக்குமே!

பொறுத்துப்பொறுத்துப் பார்த்தும் இழிவுக்கு ஆளாகும் நிலையே தொடர்வதால் குடும்ப, சமூக அளவில் முதலில் மதிப்பைப் பெறுவதற்கான போராட்டத்தைத் தொடங்க வேண்டியிருப்பதை உணர்கிறார். அதற்குத் துப்பாக்கி அவசியமில்லை என்பதையும்தான். தேக்கா பாலத்தில் நின்றுகொண்டு போராளி வாழ்க்கையின் அடையாளங்களை ஒவ்வொன்றாகத் தண்ணீருக்குள் வீசி இறுதியாக அக்கா துப்பாக்கியைப் பார்க்கும் இடம் அபாரமான சித்தரிப்பு. அவர் தளவாடங்களைத் துறப்பதைப் பார்த்து, “நாம சண்ட போடப்போறதில்லையா?” என்று எழுப்பப்படும் கேள்விக்கு “போடத்தான் வேணும்” என்று அக்கா பதிலளிக்கிறார். அவருடைய போராட்டம் வேறு இடத்தில் வேறு வடிவில் தொடரவிருக்கிறது. எதிரிகளை அழித்துவிடலாம் ஆனால் பங்காளிகளை என்ன செய்வது? அவர்கள் அடக்குபவர்களானாலும் வாழ்க்கையை அவர்களிடம்தானே தேடவேண்டியிருக்கிறது!

வரலாற்றுக்களமும், புனைவுமொழியும், யதார்த்தமும் ஒன்றையொன்று வளப்படுத்தியிருக்கும் இப்புனைவு, எவரையும் உள்சென்று தைக்கும்படியாகவும் பெண்ணிய வெறுப்புள்ளோரிடம்கூட சஞ்சலத்தை உண்டாக்கிவிடும் தாக்கமுடையதாகவும் இருக்கிறது. பெண்ணியம் என்பதை அறிவுசார் கருத்தாக்கமாக அல்லாமல் அதன் நடைமுறைப் பொருளில் புரிந்துகொண்டு லதாவின் புனைவுகள் எழுதப்பட்டுள்ளன.

இளவெய்யில்’ இன்னொரு கதை. வாசிக்கும்போது ஆர்வமும் ஆழமும் கூடிக்கொண்டேபோய், வாசித்து முடித்ததும் திகைப்புற்று, பிறகு மீண்டும் வாசிக்கவும் யோசிக்கவும் வைக்கும்.

நீலமலர் போன்ற ஒரு பெண்ணுக்கு, தாய்மைக் கனவுகளில் வெகுகாலமாக சஞ்சரித்தவள், தாய்மை ஒரு சுகமான சுமை என்று அமையாமல் உடல்நலம், உறக்கம், அறிவுச்செயல்பாடு, ஆசாபாசங்கள், அடையாளம் உட்பட வாழ்க்கையின் மற்ற அனைத்தையும் ஒட்டுமொத்தமாக அடகுவைத்துப் பெற்றுக்கொள்ளக்கூடிய ஒன்றாக இன்றைய நவீன வாழ்க்கைமுறை மாற்றிவைத்திருப்பதன் சோகம் இக்கதையில் நம்மைத் தாக்கும்.

முதலாவது, பிள்ளையை சரியாகப் பார்த்துக்கொள்கிறோமா இல்லையா என்கிற அலைக்கழிவில் உண்டாகும் குற்றவுணர்ச்சி. காலையிலும் மாலையிலும் பிள்ளை உறங்கும்போது மட்டும் பார்க்கும்படி ஆனதால், பணியிடத்தில் நீண்டகால விடுப்பெடுத்து, ஊனுறக்கமின்றி பிள்ளையைக் கவனித்துத் தன் குற்றவுணர்ச்சியைப் போக்கிக்கொள்ள முயல்கிறாள்.

இரண்டாவது, நவீன வாழ்க்கைமுறை சமூகத்திலும் வேலையிடத்திலும் ஒரு பெண்ணுக்குக் கூட்டிக்கொண்டே செல்லும் எதிர்பார்ப்புகள். வீட்டில் சமைத்து சாப்பிடவும் உடற்பயிற்சி செய்யவும் தோழி நீலமலருக்கு அறிவுறுத்துகிறாள். ‘மெக்டொனால்ட்ஸ்’ மூதாட்டி நீலமலரிடம் எடைபோட்டுவிட்டதால் நிறைய நடக்கச்சொல்கிறாள். சட்டையைச் சுருக்கம் நீங்க ‘அயர்ன்’ செய்யாமல் போட்டுவந்ததால் பள்ளிமுதல்வர் வகுப்பெடுக்கிறாள். ஆலோசனைகளையும் அறிவுரைகளையும் அள்ளிவீச எங்காவது ஒருவர் காத்துக்கொண்டே இருக்கிறார்.

மூன்றாவது, தனித்திறனையும் அடையாளத்தையும் வெளிக்காட்ட வாய்ப்புகள் அற்றுப்போவதால் குறுக்குவழி ஆறுதல்தேடல் முயற்சிகள். தன்னால் பிள்ளை பராமரிப்பு, வேலை, குடும்பம் எல்லாவற்றையும் இலகுவாக சமாளிக்கமுடிகிறது என்று பிறருக்கு நிரூபிக்கவேண்டி நட்பூடகங்களில் ‘ரிலாக்ஸிங்’ நிலைத்தகவல்கள் போடுகிறாள். பணிவுயர்வு தாமதப்படுவதைத் தன் தோல்வி என்றெண்ணி அதை ஈடுகட்ட கைபேசி விளையாட்டில் தொடர்ந்து வெற்றிகளை ஈட்டுகிறாள். ஆனால் அந்தக் குறைந்தபட்ச ஆறுதலும்  பிரச்சனையாக ஆகிறது.  பால்கொடுத்துக்கொண்டே அவள் கைபேசியில் விளையாடுவதால்தான் பிள்ளை உறங்கவில்லை என்று கணவனும், அழைப்பு வந்தவுடன் கைபேசியை எடுத்துப் பேசாததற்கு ‘கேம்’தான் காரணம் என்று அம்மாவும் கண்டுபிடிக்கின்றனர்.

நீலமலர்கள் பல்வேறு பக்கங்களிலும் தாக்குண்டு, சுருண்டு, உடலாலும் உள்ளத்தாலும் நைந்துபோய் இருகரம் நீட்டி உதவி கோரினாலும் ‘என்ன அதிசயமா பிள்ள பெத்திட்ட’ என்ற கேள்வியை எதிர்கொள்ளவேண்டியுள்ளது. தாய்மையைப் பாதுகாக்கத் தன்னை மெல்ல அழித்துக்கொள்ளவேண்டிய நிலைக்குத் தள்ளப்படும் நீலமலர்களைப் பலகாலமாகக் கண்டும்காணாமல் விட்டுவரும் குடும்ப, சமூக நெருக்கடிகளுக்குள் வாசகரை இக்கதை வாழச்செய்கிறது. தாய்மையை இறைநிலையோடு இணைத்துப்பேசிவரும் நம் இரட்டை நிலையையும் கூர்ந்து நோக்குகிறது.

சமுதாயத்தில் எத்தனை நீலமலர்கள் இருக்கிறார்கள் என்பது கேள்வி அல்ல. கடைசி நீலமலர் இருக்கும்வரை அவர்களுக்கான குரல் இலக்கியத்தில் கேட்டுக்கொண்டுதான் இருக்கும். சாதாரணமாகத் தோன்றும் விஷயங்களை அதன் எல்லைகளுக்கு நீட்டிச்சென்று பார்க்கும்போதுதான் ஆழம் புலப்படும். யதார்த்தத்திலும் ஒரு தீவிரத்தைக் காட்டுவதே கலையின் தன்மை.

போராளி அக்கா இரண்டாம் உலகப்போர்க் காலத்தவள். நீலமலர் இன்றைய இளம் தாய். இருவருக்கும் இதே மண்தான் என்றாலும் மூன்றுதலைமுறை இடைவெளியுள்ளவர்கள். முக்கால் நூற்றாண்டு இடைவெளியில் போராளி அக்காக்கள், நீலமலர்களின் எண்ணிக்கை இம்மண்ணில் குறைந்துள்ளதா என்று அலசுவது புனைவாளரின் வேலையல்ல, ஆய்வாளரின் வேலை. இத்தொகுப்பின் இன்னொரு கதையில், “அவளால் ஆய்வுகளின் அடிப்படையில் எல்லாம் கதை எழுத முடியாது” என்றொரு வரி இருக்கிறது. அதை இங்கு நினைத்துக்கொள்கிறேன். வாழ்வனுபவங்கள் மேம்பட்டுள்ளனவா என்று மதிப்பிடுவதும்கூடப் புனைவின் அக்கறை அல்ல. ஆனால் கேள்விகள் வாசகர் மனசாட்சியை நோக்கித் தானாக எழும்பும்வண்ணம் கண்ணாடியில் சமூகத்தைக் காட்டிக்கொண்டே இருப்பதுதான் முக்கியம். அதுவே லதாவின் இலக்கியம், பெண்ணியம்.

போராளி அக்காக்களுக்கும் நீலமலர்களுக்கும் குடும்ப அமைப்பை உதறி வெளியே செல்ல வெகுநேரம் ஆகாது. அதற்கான அறிவுக்கூர்மையும் திறனும் அதீதமாகவே உள்ளவர்கள் அவர்கள். ஆனால் அப்படி அதிரடியாக வீட்டை எரித்துப் பெறப்படும் ‘உடனடி விடுதலை’யை இப்புனைவுகள் முன்வைக்கவில்லை. அசாத்தியப் பொறுமையுடன் தொடர்ந்து போராடுவதற்கும் தனிப்பட்ட அளவில் மனமாற்றத்தை உண்டாக்குவதற்குமே அவர்கள் மல்லுக்கட்டுகின்றனர். ஒரு படைப்பாளியின் வாழ்க்கையைக் குறித்த உறுதியான நம்பிக்கையிலிருந்தும் நேர்நிலை நோக்கிலிருந்தும்தான் இப்படியான படைப்புகள் எழமுடியும்.

சிங்கப்பூர்ச் சிறுகதைகள்தாம் என்றாலும் சீனலட்சுமி தொகுப்பில் கமழும் மண்மணம் புதிதாக இருக்கிறது. இதாலோ கால்வினோ ‘புலப்படாத நகரங்கள்’ என்றதுபோல இதுவரை நமக்குப் புலப்படாத பல சிங்கப்பூர்கள்  லதா புனைவுகளிலிருந்து புறப்பட்டு வந்துகொண்டேயிருக்கின்றன. ‘அலிசா‘ கதை குறித்த என் அனுபவத்தை விளக்குவது இங்கு பொருத்தமாக இருக்கும்.

அலிசாவை 2017-இல் வாசித்திருக்கிறேன். சிங்கையின் சிறுதீவான புலாவ் உபினில் வசிக்கும் ஒரு தாத்தா, பாட்டி, தற்காலிகமாக சிங்கைப் பெருந்தீவிலிருந்து அவர்களுடன் தங்க வரும் பேத்தி அலிசா ஆகியோரைக்கொண்டு துல்லியமான காட்சிகளுடன் எழுதப்பட்டுள்ள கதை. நகரத்தில் பிறந்து வளர்ந்த அலிசா, புலாவ் உபினில் முதலில் முயலுக்கு வெட்டப்பட்ட குழியில் விழுந்து மீட்கப்படுகிறாள். பிறகு காலில் தூண்டில்முள் குத்தி கடுங்காயப்பட்டு குணமாகிறாள். கடைசியில் கடலுக்குள் மூழ்கி மரணத்தை நேருக்குநேர் கண்டபின் காப்பாற்றப்படுகிறாள்.

நகரமயமாதலில் இயற்கையிலிருந்து விலகிச்செல்வதும், தம்மையே உலகத்தின் மையமாக எண்ணிக்கொள்வதும், உடலில் சிறு கீறல்கூட விழாமல் தவிர்த்துக்கொண்டு இயற்கையை வென்றுவிட்டதாக நினைத்துக்கொள்வதின் அபத்தத்தையுமே அலிசா இறுதியில் கடலைப்பார்க்கும் அந்தப் பார்வையில் என்னுடைய முதற்கட்ட வாசிப்பில் நான் பார்த்தேன். ஆனால் இப்போது வாசிக்கும்போது கதை என்னை வேறெங்கோ கொண்டுசெல்கிறது. வள்ளுவன் ‘நவில்தொறும் நூல்நயம்’ என்றது இதைத்தான் போலும். ஒவ்வொரு வாசிப்பிலும் புதிய நயங்கள் தென்பட்டால்தான் அது நூல் என்று நான் பொருள்கொள்கிறேன்.

சிங்கப்பூர்த் தமிழிலக்கியத்தில்தான் ‘திணையற்ற தமிழரின் முதல் குரல்’ ஒலித்தது என்ற கருத்தை லதா விரிவாக ‘ஊர் திரும்பியவர் வேர் ஊன்றியவர்‘ தொகுப்பில் ஓர் இயலில் முன்வைத்திருக்கிறார். அதன் சுருக்கமான செம்மைப்படுத்தப்பட்ட வடிவம் ‘தி சிராங்கூன் டைம்ஸ்’ ஏப்ரல் 2022 இதழில் வெளியாகியுள்ளது. “திணை சார்ந்த வாழ்க்கையில் நிலத்துக்கும் மனிதனுக்கும், நீருக்கும் மனிதனுக்கும் கொடுத்தல் வாங்கல் எனும் தொடர்பு இருக்கிறது. பெற்றுக்கொடுக்கும் வாழ்க்கை, நகர மனிதன் பெறக்கூடியவனாக மட்டுமே உள்ளான்.” என்ற லதாவின் வரி சிந்திக்கத்தக்கது.

சிங்கப்பூர் ஒருகாலத்தில் 70 சிறு தீவுகளைக் கொண்டிருந்தது. மையப்பெருந்தீவின் நிலப்பரப்பு விரிவுபடுத்தப்பட ஆரம்பித்ததும் இத்தீவுகள் ஒன்றன்பின் ஒன்றாக மறைந்துபோயின. தற்போது அவற்றில் 40 சிறுதீவுகள் மிச்சமிருக்கின்றன. அங்கு வாழ்ந்துகொண்டிருந்த மக்கள் மையத்தீவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டபின், அத்தீவுகள் மக்கள் குடியேற்றத்துக்கு அல்லாத பயன்பாடுகளுக்கு ஒதுக்கப்பட்டன. இன்று மனித வாழ்வு இல்லாத அத்தீவுகள், மெல்ல மங்கி மறந்துகொண்டிருக்கும் பெரும் வரலாற்றைத் தம்முள் இழுத்துப்பிடித்து வைத்துக்கொண்டிருக்கின்றன. யாராவது நம்மையும் எழுதமாட்டார்களா என்று ஏக்கத்துடன் பார்த்துக்கொண்டிருக்கின்றன.

இந்தப் பின்புலத்தில் பார்த்தால் அலிசா ஏதோ நகரத்திலிருந்து கிராமத்திற்குச் சென்ற இன்னொரு சிறுமி அல்ல. அவள் ஓர் யுகசந்தி. திணை சார்ந்த (உபின் போன்ற சிங்கை சிறுதீவுகளில் செழித்திருந்த மீன்பிடி நெய்தல் வாழ்க்கை) வாழ்க்கைக்கும் திணையற்ற நகர வாழ்க்கைக்கும் இடையே ஆடிக்கொண்டிருந்த கடைசி ஊசல். இரண்டையும் ஒருங்கே கண்ட சிங்கப்பூரின் கடைசித் தலைமுறையின் கடைசிக்கண்ணி. நகர வாழ்க்கை X கிராம வாழ்க்கை என்று குறுக்கிப் பார்க்காமல் திணையற்றுப்போகும் தருணமாகப் பார்க்கும்போது அப்புனைவின் வீச்சு பன்மடங்காகிறது. வாழ்வாதார மேம்பாட்டிற்கும், பொருளாதார வளர்ச்சிக்கும் கொடுக்கப்பட்டுள்ள விலை அதன் மொத்த வரலாற்று, பண்பாட்டுச் சுமைகளோடு மேலே கவிழ்ந்து மூச்சடைக்கச் செய்கிறது.

இரண்டும் வெவ்வேறு கதைகள் என்றாலும் இத்தொகுப்பிலுள்ள ‘வலி‘ கதையை அலிசாவின் தொடர்ச்சியாகப் பார்க்கலாம். வலி கதையில் உணரப்படுவது கைகள் விபத்தில் துண்டிக்கப்பட்டதால் உண்டான வலி மட்டும் அல்ல, வரலாற்று இழப்பின் வலி. கடலுக்குப் பதிலாக மீன்தொட்டியை வைத்துக்கொண்டு சமாதானம் கொள்ளவேண்டியிருப்பதன் வலி. அலிசா கதையில் வரும் ஓர் வரி இது; “அவள் சிங்கப்பூரில் நீச்சல் குளத்தில் நீந்தியிருக்கிறாள். ஆனால் கடல், நீச்சல் குளம் போலில்லை.” நீச்சல் குளத்தில் கடலைத் தேடும் வலி.

‘காவடி’ கதையில் ஆத்தாவின் காவடி எடுக்கும் ஆசை பலருக்கும் இருக்கும் எத்தனையோ நிறைவேறாத ஏக்கங்களைப் போல இன்னொன்றுதான் என்றாலும் இந்த மண்ணில் அதற்கு ஒரு சிறப்பான தொடர்பு இருக்கிறது. சுயமரியாதை இயக்கம் தமிழ்நாட்டிலிருந்து வங்கக்கடலைத்தாண்டி இங்கு நுழைந்தபோது, அதைக் கடவுள் எதிர்ப்பு இயக்கமாகச் சுருக்கி ஏற்கனவே இங்கு சிறுபான்மை இனமாக இருக்கும் தமிழரிடையே மேலும் பிரிவினைகளை உண்டாக்கிவிடக்கூடாது என்று சில நீக்குப்போக்குகளுடன் கைக்கொள்ளப்பட்டது. கடவுள் வழிபாடு இருக்கலாம் ஆனால் அலகு காவடி வேண்டாம், தீமிதி வேண்டாம் என்பதுபோலப் பல ஆரம்பகாலப் பரிந்துரைகள் இருந்துள்ளன.

சுயமரியாதை இயக்கத்தின் தாக்கம் பிரதிபலித்த சிங்கப்பூர்க் குடும்பங்களுள் ஒன்றுதான் காவடி ஆத்தாவினுடையது. ஆத்தா சிறுமியாக இருந்தபோது அவரது தாத்தா அரிகண்ட காவடி  எடுத்தவர் என்றாலும், ஆத்தாவின் அப்பா காலத்தில் காவடியைப் பார்க்கக்கூட அனுமதிக்காத அளவிற்கு இறுக்கமான சூழ்நிலை. அந்தப் பின்புலத்தையும் தன் இளவயதில் ஆழமாகப் பதிந்துவிட்ட காவடி நினைவுகளுடன் ஆத்தா தன் மரணப்படுக்கையில் உடலெங்கும் நவீன மருத்துவத்தின் ‘அலகுகள்’ பொருத்தப்பட்டு உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும் கசப்பான இறுதிக் காலத்தையும் பொருத்திப் பார்த்தால் காவடி கதைக்கு மேலுமொரு பரிமாணம் கூடும்.

இப்படியாக இவ்வட்டாரத்திற்கே உரிய தனித்துவங்களைத் தன் புனைவுகளில் இடம்பெறச் செய்வதாலேயே லதா புனைவுகளில் வீசும் மண்மணம் தனித்து நிற்கிறது என்று நினைக்கிறேன். ஆனால் அனைத்துமே வரலாற்று எடைகொண்ட கடுமையான கதைகள் என்று சொல்லமுடியாது. இலகுவான கதைகளும் உண்டு. ‘சீனலட்சுமியின் வரிசை’ அப்படித்தான். பிறப்பில் சீனராக இருந்தாலும் வினாதெரிவதற்கு முன்னரே தமிழ்க்குடும்பத்தில் வளக்கப்பட்டு மனதளவில் தமிழராக வளரும் சீனலட்சுமியின் மொத்த வாழ்க்கையும் கோட்டுச்சித்திரமாக இக்கதையில் வருகிறது. சீனக்குழந்தைகள் தமிழ்க்குடும்பங்களில் வளர நேர்ந்ததற்கும் இரண்டாம் உலகப்போர்க்கால வரலாறு உண்டு என்றாலும் அதற்குப் பின்னான காலத்தில் கதை நிலைகொள்கிறது.

வரிசையில் நிற்பதில் சிங்கப்பூரர்களை விஞ்சவியலாது என்று சொல்லப்படும் கேலிப்பெருமிதத்தை ஒட்டியும் கொஞ்சம் உள்ளூர் அரசியல் வரலாறு தெரிந்தால் – “சுதந்திரம் கெடைச்சி அம்பதாவது வருசத்துலதான் எல்லா தொகுதியிலயும் தேர்தல் நடக்குது” – ரசித்து வாசிக்கும்படியாகவும் எழுதப்பட்டுள்ள கதை. ‘கிழவர்’ மறைவுக்கு அஞ்சலி செலுத்த வரிசையில் நிற்கும் சீனலட்சுமி, “வாய்க்குள்ளேயே ‘தென்பாண்டிச் சீமையில’ என்று பாடத்தொடங்கினாள். அவளுக்குள் பெரும் சோகம் கிளர்ந்தது. கண்கள் கலங்கின.” என்று கதையில் வாசித்தபோது எனக்குள் உண்டான கலவையான உணர்வுகளைச் சொற்களில் வடிப்பது கடினம்.

இனம் என்பது உயிரியல் உண்மை அல்ல, அது சமூக உளவியல் கருத்தாக்கம். மானுடப் பொதுமைகளை அணுக்கமாக விசாரிக்க இனங்கள் சங்கமிக்கும் இடங்கள் அபரிதமான வாய்ப்புகளை அளிக்கின்றன. அவற்றைப் புனைவாளர்கள் பொருட்படுத்தியே தீரவேண்டும் என்பதை லதாவின் புனைவுகள் காட்டுகின்றன. அதற்கான கண்களும் சிந்தனைகளும் அவருக்கு வாய்த்தது சிங்கப்பூர்த் தமிழ் இலக்கியத்திற்குக் கிடைத்துள்ள பேறு.

இத்தொகுப்பிலேயே ‘சிலந்தி‘யைச் சற்றுக் கடுமையாக உணர்ந்தேன். சரியான பிடி கிடைக்கவில்லை. மீண்டும் மீண்டும் வாசித்துக்கொண்டிருக்கிறேன். மற்றபடி அனைத்துக் கதைகளும் சரளமான வாசிப்புக்கு ஏதுவானவை. நேரடியாகவும் உட்பிரதியாகவும் என பல அடுக்குகள் கொண்டவை. வாசகரின் இவ்வட்டார அறிவு, இலக்கிய வாசிப்புப் பயிற்சி இவற்றைப்பொறுத்து நிச்சயமாக ஏதாவது ஓர் அடுக்கில் தோய்ந்து பயணிக்கலாம்.

எழுத்து நுட்பம், சிறுகதை வடிவம் என்று பார்த்தாலும் சீனலட்சுமி தொகுப்பில் பல புதுமைகளைச் சொல்லலாம். இலக்கணத்தைத் தீர அறிந்தவர்கள் அதை மீறுவதன் வழியாகப் புதிய இலக்கணம் படைக்கிறார்கள், புதிய பாதைகளைத் திறக்கிறார்கள் என்பதை லதாவின் பல கதைகளில் மீண்டும் மீண்டும் காணமுடிகிறது.

ஓரிரு பாத்திரங்கள், உள்ளார்ந்த ஒருமை, இறுதித்திருப்பம், முடிவில் தொடக்கம் என்றெல்லாம் ஒரு வாய்ப்பாடு நவீன சிறுகதைகளின் இலக்கணமாகச் சொல்லப்படுவதுண்டு. நல்ல நோக்கத்தில் சொல்லப்பட்ட அந்த இலக்கணங்களை – நாய் வாலை அசைக்கிறதென்றால் வாலும் நாயை அசைக்கமுடியும்தானே என்று புரிந்துகொண்டு – உத்திகளாகக்கொண்டு கதைகட்டும்போக்கு பரவலாகக் காணப்படுகிறது. அதற்கு ஓர் அழுத்தமான முற்றுப்புள்ளியை லதா வைத்திருக்கிறார்.

‘இளவெய்யில்’ கதையில் ஓரிரு பாத்திரங்கள் இலக்கண விதியை ஓங்கி அடித்துள்ளார். நீலமலரைத்தவிர குழந்தை வியன், மாணவி டயானா, சீன மூதாட்டி, அன்புச்செல்வன், அம்மா, மாமியார், மீனா, பள்ளி முதல்வர், மிஸ் கோ, கிளார்க் கோகிலா என்று பத்து பேருக்குக் குறிப்பிடத்தக்க இடமுண்டு. இருப்பினும் ஒரே வசனம் பேசிச்செல்லும் பாத்திரம்கூட கதையின் மையத்தோடு சென்றிணைவதைக் காணமுடிகிறது. இந்தப்பட்டியலில் வசனமேதுமின்றி ஒரு பார்வையோடு ஒருகணத்தில் கடந்து சென்றுவிடும் பக்கத்துவீட்டு சீனரையும், செல்லப்பிராணியாகத்தான் இருக்கும் என்று ஊகிக்கக்கூடிய கண்மணியையும் சேர்க்கவேண்டும். இவ்வளவுபேர் இருந்தும் கதையின் மையம் சிதறவில்லை, உள்ளார்ந்த ஒருமை கெடவில்லை.

இக்கதையின் இரண்டாவது வரியிலேயே எதையோ மறந்து விட்டோமோ என நீலமலர் யோசிப்பதாக வருகிறது. கடைசியில் அவள் மறந்தது எதுவென்று தெரிந்துபோவதுடன் கதை முடிகிறது. இதை இறுதித் திருப்பமாகக் கொள்ளலாம்தான். அதன்வழியாகக் ‘கதையின் முடிவில் தொடக்கம்’ என்பதும் இயல்பாக நிகழ்கிறது. ஆனால் அலிசா, நிர்வாணம், வலி போன்ற பல கதைகளில் இறுதித் திருப்பத்திற்கெல்லாம் இடமில்லை, தேவைப்படவுமில்லை. ஒரு கதைக்கு இலக்கு என ஒன்று தனியாகத் தேவையில்லை, தீர்க்கமான பயணமே இலக்கு என்று எழுந்துள்ள கதைகள் இவை. இத்தகைய சிறுகதைகளால் சிறுகதை என்கிற இலக்கிய வடிவம் காலப்பொருத்தமுள்ளதாக நீடிப்பதுடன் தொடர்ந்து மேன்மையும் அடைகிறது என்பேன்.

இந்த இடத்தில் சீனலட்சுமி தொகுப்பிலுள்ள அனைத்து சிறுகதைகளிலும் காணப்படும் முக்கியமானதோர் அம்சத்தைக் குறிப்பிடவேண்டும்; கதையின் நீளம். சராசரியாக ஒரு கதை 15 பக்கத்தைத் தாண்டுகிறது. ஒரு திருப்பத்தையும் ஒன்றிரண்டு சம்பவத்தையும் கோத்துக்குழைத்து சிறுகதை ஆக்க முயல்வது எழுதிப் பழகிக்கொள்ள சரிதான் என்றாலும் பதிப்பித்துப் பரிமாற தற்காலத்தில் அவ்வளவு பொருத்தமற்றது.

வெறும் சிறுகதைகளை மட்டுமே எழுதி 2013-இல் நொபெல் பரிசு பெற்ற ஆலிஸ் மன்றோவின் ஒவ்வொரு கதையும் குறைந்தது 25 பக்கம் நீளும். நீளமான சிறுகதைகள் எழுதவேண்டும் என்பது எழுத்தாளர்களின் நோக்கமாக இருக்கவேண்டியதில்லை அதேவேளையில் ஆயிரம் சொற்களுக்குள் அடக்கினால்தான் படிப்பார்கள் என்று வாசகரின்மேல் பழியைப்போட்டு குறுக்கிவிடவும் வேண்டியதில்லை. “எனக்கு எல்லாவற்றையும் சொன்னால்தான் திருப்தி” என்று ஆலிஸ் மன்றோ சொன்னதைப்போல எழுத்தாளர்கள் அவரவர் மனப்போக்கில் திருப்தியடையும்வரை சொல்லிவிடுவது நல்லது. வாசகரும் அப்படியான புனைவுகளில் நிதானமாக நீந்திக்களிக்கலாம். குறுக்கெழுத்துப்போட்டி போல முடித்து மூடிவைத்துவிட்டுப் போகவேண்டியதில்லை.

மனனம் செய்வதற்கான அவசியம் ஓசைநய இலக்கணங்களைப் பிறப்பித்தது என்றும், ஓலையின் நீள அகலம் நமது பாவினங்களின் நீள அகலங்களைக் கட்டுப்படுத்தியது என்றும் ஒரு பார்வை உண்டு. நல்வாய்ப்பாகத் தற்போது இணையவெளியும் இணைய இதழ்களும் இருக்கின்றன. கதைகளின் நீளம் அவற்றுக்குப் பொருட்டில்லை. சீனலட்சுமி தொகுப்பின் கதைகள் அனேகமாக அனைத்துமே இணைய இதழில் வெளியானது தற்செயலானதன்று. அததற்கான காலம் வரவேண்டியிருக்கிறது.

பழைய ஊசித்தட்டு ஒலிவட்டில் ஒரு பக்கத்தில் சுமார் 4 நிமிடத்திற்குத்தான் பதிவுசெய்யமுடியும் என்பதால் திரைப் பாடல்கள் ஒரு பல்லவி, இரண்டு சரணங்கள் என்று அந்த அளவில் சென்று அமர்ந்தன. இன்று நவீன குறுவட்டேகூட ஒழிந்துவிட்டது. எந்தக் கட்டுப்பாடும் இல்லை என்றாலும் நமக்குப் பழக்கதோஷம். இன்றும் அதே பல்லவி, அதே 4 நிமிடங்கள். இலக்கியத்திலாவது மாற்றத்தைக் கொணர்வோம். நாளிதழின் ஒரு பக்கத்தில் அடக்கவேண்டிய ஆயிரம் சொற்கள் கட்டுப்பாடு இன்று இல்லை. எழுத்தாளர்களின் கைக்கட்டுகள் தொழில்நுட்பத்தால் அறுத்தெறியப்பட்டுவிட்டன. லதா புதிய தடத்தை அமைத்துக்கொண்டு முன்னே சென்றுகொண்டிருக்கிறார்.

இறுதியாக ஒன்றைச் சொல்லி முடிக்கிறேன்.

சிங்கப்பூரின் முதல் தமிழ்ச் சிறுகதை ‘பாவத்தின் சம்பளம் மரணம்’ பொதுஜனமித்திரன் பத்திரிகையில் 1924-இல் வெளிவந்ததாக ஆய்வாளர் பாலபாஸ்கரன் பத்தாண்டுக்குமுன் வெளியிட்ட ஆய்வு முடிவுக்கு இன்றுவரை மறுப்பில்லை. அப்படிப்பார்த்தால், இன்னும் ஒன்றரை ஆண்டில், 2024-இல் சிங்கப்பூர்த் தமிழ்ச் சிறுகதை நூற்றாண்டு காணவுள்ளது. சிங்கப்பூர்ச் சிறுகதை நூற்றாண்டு விடிந்துகொண்டிருக்கும் இந்நேரத்தில் விடிவெள்ளியாக வெளிவந்திருக்கும் சீனலட்சுமியைக் குறித்து ஓர் இலக்கிய வாசகனாகப் பெருமகிழ்ச்சி அடைகிறேன். இனி சிங்கைத் தமிழ்ப்புனைவுலகை நோக்கி, “நூறாண்டாகச் சிறுகதையில் என்ன செய்துகொண்டிருந்தீர்கள்?” என்று எவரும் கேட்டுவிடமுடியாது.

***