‘தி சிராங்கூன் டைம்ஸ்’ மாத இதழ், 2015-ஆம் ஆண்டின் மத்தியில், புத்துயிர் பெற்று அச்சிதழாக வெளிவரத் தொடங்கியபின் கடந்த நான்கரை ஆண்டுக்காலம் சிங்கைத் தமிழரின் சிந்தனைகளோடு பயணித்துத் தற்போது 50-ஆவது இதழை வெளியிடுகிறது.

சிராங்கூன் டைம்ஸின் ஒவ்வோரிதழும் சுமார் 50 பக்கங்களைக் கொண்டது. ஆக ஐம்பது இதழ்களில் இதுவரை சுமார் 2500 பக்கங்களில் சிங்கைத்தமிழர் சிந்தனைகளும் செயல்பாடுகளும் புனைவுகளும் போக்குகளும் விவாதங்களும் அச்சில் பதிவாகிவிட்டன. சில ஆயிரம் பக்கங்களில் இத்தனை ஆண்டுகாலத் தொடர்ந்த வெளியீடுகளின் வழியாக சிராங்கூன் டைம்ஸ் சாதித்திருப்பது என்ன என்ற கேள்விக்கு விடைகாணவேண்டிய தருணம் இது. அடுத்த ஐந்தாண்டுப் பயணத்துக்கான பாதையை அது தெளிவுபடுத்தக்கூடும்.

WhatsApp Image 2022-04-18 at 5.13.55 PM

தற்போது நாம் எதிலும் தரத்தை அதிகம் விரும்புகிறோம். சிங்கப்பூரில் தரமில்லையேல் இடமில்லை. தரமே தாரகமந்திரம். சிராங்கூன் டைம்ஸ் தனக்கென்று ஒரு தரத்தை வைத்திருக்கிறதா என்பது ஒரு முக்கியமான கேள்வி.

சிராங்கூன் டைம்ஸ் தன்னுடைய அடையாளத்துக்காகப் போராடிக்கொண்டிருக்கிறது என்று முன்பு ஒரு கட்டுரையில் எழுதியிருக்கிறேன். அதன்பின் சில காலத்துக்குப் பிறகு எழுதிய இன்னொரு கட்டுரையில் வெகுஜன கேளிக்கை இதழாக ஆகவும் விரும்பாமல் தீவிர இலக்கியப் பண்பாட்டு இதழாக மலரவும் முடியாமல் ஆனால் ஒரு ‘தரமான’ இடைநிலை இதழாகச் சிங்கைத் தமிழரிடையே சிராங்கூன் டைம்ஸ் தன்னை நிலை நிறுத்திக்கொண்டுள்ளது என்றும் ஓர் அவதானிப்பை வெளியிட்டிருக்கிறேன்.

‘தரமான’ என்று துணிந்து குறிப்பிட்டதற்கு இரண்டு காரணங்கள் உண்டு.

முதலாவது, நான் ஆசிரியர் குழுவில் பணியாற்றிய காலத்தில் சிறுகதைச் சிறப்பிதழ் ஒன்று வெளியிடத் திட்டமிட்டு சிங்கைத் தமிழ் எழுத்தாளர்களை அணுகியபோது,

‘சிராங்கூன் டைம்ஸ் கதைகளுக்கென்று ஒரு தரமிருக்கிறது. அதனால் உடனடியாக எழுதித்தருவது கடினம். போதிய அவகாசம் கொடுத்தால் முயற்சிக்கிறோம்’

என்பதே நான் அணுகிய பலரின் பதிலாக இருந்தது. அவர்களுள் பலர் ஏற்கனவே நல்ல சிறுகதைகளை எழுதியவர்கள் என்பதால் இதழின் ‘தரம்’ குறித்து ஒரு பொதுவான எண்ணம் சூழலில் உருவாகியிருப்பதை நான் உணர்ந்தேன்.

இரண்டாவது, சிராங்கூன் டைம்ஸ் கட்டுரைகள் தரமானவை என்ற கருத்தை என்னிடம் பலர் தெரிவித்துள்ளனர். அதை எதிரொலிக்கும் விதமாக எழுத்தாளர் சித்துராஜ் பொன்ராஜ், தன் வலைப்பூவில் (நவம்பர் 2018) எழுதிய கட்டுரையொன்றில்,

சிராங்கூன் டைம்ஸ்-இல் கட்டுரைக்கென மிக உயர்ந்த தகுதியை வைத்திருக்கிறார்கள். சரியான தரவுகளின் அடிப்படையில் ஆழமான கருத்துகளை முன்னெடுத்து வைக்கும் கட்டுரைகள். எனக்குத் தெரிந்த வரைக்கும் தற்காலச் சிங்கப்பூர்ச் சூழலில் தமிழில் கட்டுரைகளை வளர்த்ததில் சிராங்கூன் டைம்ஸ்-க்குத்தான் மிகப் பெரிய பங்கு உண்டு

என்று குறிப்பிட்டிருந்தார்.

ஆக நம் சூழலில் புனைவு, அபுனைவு இரண்டிலும் தரத்துக்கான அளவுகோல்களைக் காலப்போக்கில் சிராங்கூன் டைம்ஸ் நிர்ணயித்திருக்கிறது என்பது ஒரு குறிப்பிடத்தக்க சாதனை. எதிர்காலத்தில் எச்சூழலிலும் எக்காரணத்தை முன்னிட்டும் இந்தத்தரம் குறைவுபடாமல் பார்த்துக்கொள்ளவேண்டியது சிராங்கூன் டைம்ஸின் முன்னாலுள்ள பெருஞ்சவால். ஏனெனில் தொடர்ந்து புதிய எழுத்தாளர்களை அறிமுகப்படுத்தும் பணியும் இதழுக்கு இருக்கிறது. அதேவேளையில் படைப்புகளுக்குச் சன்மானம் அளிக்கும் பொருளாதாரச் சூழலும் கண்ணுக்கெட்டிய தூரத்தில் இல்லை. இந்த நிலையில் தரத்தைத் தக்கவைப்பது கம்பசூத்திரம்தான். ஆனாலும் சிராங்கூன் டைம்ஸ் அந்த வித்தையைக் கற்றிருப்பதை ஏற்கனவே நிரூபித்துள்ளது. தொடர்ந்து தக்கவைத்துக்கொள்ளவேண்டும்.

சரி. தரத்திலிருந்து அடுத்தது எண்ணிக்கைக்கு வருவோம். இத்தனை ஆண்டுகாலச் செயல்பாடுகளின் வழியாக எத்தனை எழுத்தாளர்களை சிராங்கூன் டைம்ஸ் உருவாக்கியிருக்கிறது?

இது எப்போதுமே சுவாரஸ்யமான ஆனால் ஆபத்தான கேள்வி. சிராங்கூன் டைம்ஸ் ஒரு தளத்தைக் கொடுக்கிறது. ஆசிரியர் குழுவின் பார்வைகள், கொள்கைகள் வழியாகச் சில ஆலோசனைகளையும் கருத்துகளையும் படைப்பாளிகளுக்குக் கொடுக்கிறது. அவ்வளவுதான். மற்றபடி எழுத்தாளர்கள் அவர்களாகத்தான் உருவாகின்றனர். அதற்கு சிராங்கூன் டைம்ஸ் சொந்தம்கொண்டாடுவது முறையாகாது.

ஆனால் என் சொந்த அனுபவத்தில் இன்னொரு பரிமாணமும் உண்டு. ஒருவேளை சிராங்கூன் டைம்ஸ் 2015-இல் என்னைக் கட்டுரை எழுதச்சொல்லிக் கேட்டிருக்காவிட்டால் நான் பொருட்படுத்தும்படி எதையும் எழுதியிருக்கமாட்டேன் என்று உள்ளபடியே நம்புகிறேன். அதிகபட்சமாக முகநூல் பதிவுகளோடு திருப்தியடைந்திருப்பேன். என் கட்டுரைத் தொகுப்பான ‘கரையும் தார்மீக எல்லைகள்’ நூலை முதன்மை ஆசிரியர் ஷாநவாஸ்க்கு சமர்ப்பணம் செய்ததும் அதன்பொருட்டுத்தான். சிராங்கூன் டைம்ஸ் எழுத்தாளர் என்பதே இன்றும் என்றும் என் அடையாளமாக இருக்கும். என்னைப்போல இன்னும் சிலர் இருக்கலாம்.

ஐந்தாண்டுகள் என்ற குறுகிய கால அளவை மனதிற்கொண்டு பார்த்தால் இது ஒரு குறிப்பிடத்தக்க சாதனைதான். மேலும் சிங்கையில் கடந்த சில ஆண்டுகளில் வெளியான ‘சிறுகாட்டுச் சுனை‘ (அழகுநிலா), 5.12PM, ஓந்தி (எம்.கே.குமார்), வாழைமர நோட்டு (ஹேமா), சிங்கைத் தமிழ்ச் சமூகம் – வரலாறும் புனைவும் (சிவானந்தம் நீலகண்டன்) ஆகிய நூல்களின் பல படைப்புகள் முதலில் சிராங்கூன் டைம்ஸில் வெளியானவை.

உமா கதிர் போல அனேக படைப்புகளைச் சிராங்கூன் டைம்ஸில் எழுதிய சிலர் விரைவில் தங்கள் புனைவு, அபுனைவு நூல்களை வெளியிடுவர் என்றும் எதிர்பார்க்கிறேன். உமா கதிர் எழுதி சிராங்கூன் டைம்ஸில் வெளியான “மார்க்கும் ரேச்சலும்” சிறுகதை “4D” என்ற பெயரில் ஒரு குறும்படமாகவும் வெளியாகி சர்வதேச விருதுகளையும் பெற்றது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. எந்த அளவுகோலின்படியும் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களின் எண்ணிக்கை என்ற வகையிலும் சிராங்கூன் டைம்ஸ் சாதனை செய்துள்ளதாகவே நினைக்கிறேன்.

சரி. எழுத்தில் தரம், எழுத்தாளர் எண்ணிக்கை இவையெல்லாம் இருக்கின்றன. வாசகப்பரப்பின் நிலை என்ன? பொது சிங்கைத் தமிழ்ச் சமூகத்திடம் எப்படியான வரவேற்பையும் ஆதரவையும் இதழ் பெற்றுள்ளது? ‘தேனிருக்கும் இடத்தினைத் தேடி மொய்க்கும் வண்டு’ என்பதுபோல நல்ல தரமான படைப்புகளை வெளியிட்டிருந்தால் ஆதரவு கிடைத்திருக்கவேண்டுமே?

இது நியாயமான கேள்விதான் என்றாலும் வரலாற்றுச்சுமை கூடிய கேள்வி.

தமிழரிடையே பொதுவாக வாசிப்பு குறைவு. அவர்கள் கல்வி, தொழில் ரீதியான தேவைகளுக்கப்பாற்பட்டு தமிழில் வாசிப்பது அதனினும் குறைவு என்பதைப் பலரும் சுட்டிக்காட்டியுள்ளனர். அதையும் கவனத்திற்கொண்டுதான் மேற்கண்ட கேள்விக்கு பதிலைத் தேடவேண்டும்.

1887ல் ‘சிங்கைநேசன்’ என்ற வாரமொருமுறை வெளியான செய்தித்தாளை சிங்கப்பூரில் தொடங்கிய சி.கு.மகுதூம் சாயபு  அதன் முதல் வெளியீட்டில்,

‘தங்கள் சொந்தப் பாஷையிலே உள்ளூர் புறவூர் வர்த்தமானங்களை யறியவும் அவற்றிற்கியைய நடப்பதும் எவ்வளவு பிரயோசனமாகும்! ஆகையால் தயவுசெய்து தாங்கள் ஒவ்வொருவரும் இது தங்கள் சொந்தப் பத்திரிகையென்றே கருதிக் கைதூக்கி விடல்வேண்டும்’

என்று வேண்டுகோள் விடுத்தார். மூன்றாண்டுகள் வெளியானபின் சிங்கைநேசன் போதிய சந்தாதாரர்கள் இல்லாமல் நிறுத்தப்பட்டது. கடந்த 130 ஆண்டுகளாக அவரது அக்குரல் சிங்கைத் தமிழ்ச்சமூகத்தினரிடையே எதிரொலித்துக்கொண்டே இருக்கிறது.

தமிழ்முரசு நாளிதழையும் ‘தி சிராங்கூன் டைம்ஸ்’ மாத இதழையும் சிங்கையின் ஒவ்வொரு தமிழ்க் குடும்பமும் சந்தா கட்டி வாங்கிப் படிக்கவேண்டும். தற்போது ‘தி சிராங்கூன் டைம்ஸ்’ தமிழ் மீதும் இலக்கியம் மீதும் பற்றுகொண்ட சில சிங்கப்பூர்த் தன்னார்வலர்களால் தொகுத்து வெளியிடப்பட்டு, குறைந்த அளவிலான உள்ளூர்ச் சந்தாதாரர்களால் ஆதரிக்கப்படுகிறது. ஓரிரு புத்தகக்கடைகளின் வழியாகவும் இலவச விநியோகத்தின் மூலமாகவும் வாசிப்பாளர்களைச் சென்றடைகிறது. ஆனால் இன்னும் பரவலான ஆதரவு தேவைப்படுகிறது.  500 சந்தாதாரர்கள் தொடர்ந்து ஆதரவளித்தால் போதும், சிராங்கூன் டைம்ஸ் தமிழரின் பெருமையாகத் தொடரும்.

‘பிச்சை புகினும் கற்கை நன்றே’ என்ற பண்பாட்டில் வந்தவர்கள் நாம். மாதம் இரண்டு வெள்ளி நம் சொந்தச் சமூக முன்னேற்றத்துக்காகச் செலவிடுவதில் கணக்குப் பார்க்கக்கூடாது. ஒரு குடும்பத்தில் ஒருவருக்காவது வாசிப்பில் இயற்கையான ஆர்வம் நிச்சயம் இருக்கும். அதை அலட்சியப்படுத்திவிடக்கூடாது. அவர்களே நம் சமூக முன்னோடிகளாக வரவிருப்பவர்கள். சிறார் பத்திரிகைகளும் வெகுஜன இதழ்களும் தீவிர இலக்கிய இதழ்களும் புத்தகங்களும் விரவிக்கிடந்த வீடுகளிலிருந்துதான் பல தமிழ்ச் சிந்தனையாளர்களும் சாதனையாளர்களும் வந்துள்ளனர். அப்படியொரு வாய்ப்பை நம் பிள்ளைகளுக்கு நாம் ஏன் மறுக்கவேண்டும்?

எந்த விதத்திலும் எந்த நன்மையும் தராத பல பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை நடுவீட்டில் கொண்டுவந்துகொட்டும் தொலைக்காட்சிக்குப் செலவிடப்படும் பணத்திலும் நேரத்திலும் ஒரு பங்கை இங்கு வெளியிடப்படும் இதழ்களுக்குச் செலவிடவேண்டும். இதை நம் சமூகத்தினர் சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

புத்தகங்கள், இதழ்கள் வாங்க வருமானம் போதவில்லை என்பதோ வாசிக்க நேரமில்லை என்பதோ சாக்குப்போக்குகள் மட்டுமே என்பதையும் உணரவேண்டும். இந்த விஷயத்தில் ஓரளவேனும் மாற்றம் உண்டானால் சிராங்கூன் டைம்ஸ் தனக்கான ஆதரவை உடனடியாகப் பெற்றுவிடும் என்பதில் எனக்குச் சந்தேகமில்லை.

Screenshot 2022-04-19 183219

சரி. பொத்தாம் பொதுவாக சிங்கைத் தமிழ்ச் சமூகம் என்று பேசிக்கொண்டுபோனால் எப்படி? ஊரிலிருந்து வந்து வேர்பிடிக்க முயன்றுவரும் முதல் தலைமுறைத் தமிழர்கள் தங்கள் தமிழ்மொழி ஆற்றாமைகளைத் தீர்த்துக்கொள்ளும் வடிகாலாக மட்டும் சிராங்கூன் டைம்ஸ் இருக்கிறதா அல்லது இம்மண்ணில் பிறந்து வளர்ந்த இளைய சிங்கப்பூரர்களுக்கும் இடமளிக்கிறதா?

என் அனுபவத்தில் சிராங்கூன் டைம்ஸ் தன் கதவுகளை எப்போதும் நம் சமூகத்தின் அனைத்து வகையான பின்புலத்தைக்கொண்ட மக்களுக்கும் திறந்தே வைத்திருக்கிறது. எழுத்தாளர் சமீப காலத்தில் வந்தவரா, நிரந்தரவாசியா, புதிய சிங்கப்பூரரா, மண்ணின் மைந்தரா, இளையரா, மூத்தவரா என்றெல்லாம் பார்ப்பதில்லை. படைப்புகள் கொடுப்பவர்களிடம் அதுகுறித்த விவரங்களைக் கேட்பதுவுமில்லை.

சிங்கையின் மணத்தை – கதை, கவிதை, கட்டுரை என்று – எவ்வடிவத்திலும் எவ்வகையிலும் பரப்புவதற்கு இடமளிக்கிறது. முன்னர் குறிப்பிட்டதுபோலத் தரமொன்றுதான் அடிப்படையான நோக்கம். புதிதாகப் புலம்பெயர்ந்தோர் அதிகம் எழுத்துத்துறையில் ஆர்வம் காட்டுவதால் அது சிராங்கூன் டைம்ஸிலும் பிரதிபலிக்கிறது. அவ்வளவுதான்.

அதேநேரத்தில் மண்ணின் மைந்தர்களான இளையர்களைத் தமிழ் இலக்கியத்தின் பக்கமும் இதழின் பக்கமும் ஈர்ப்பதற்குத் தொடர்ந்த முயற்சிகள் செய்யப்பட்டுவருகிறது என்பதையும் நானறிவேன். கடந்த ஐந்தாண்டுக்காலத்தில் பல இளையர்களைத் தேடித்தேடிப் படைப்புகள் பெற்று வெளியிட்டுள்ளதில் பெருமைகொள்ள இடமுண்டு. அஷ்வினி தொடர்ந்து மொழிபெயர்ப்பு, கட்டுரைகள், பத்திகள் என்று  பங்களித்து வருகிறார். குமாரி பதாரியா உட்படப் பலரின் ஆய்வுக்கட்டுரைகளையும் சிராங்கூன் டைம்ஸ் தேடித்தேடிப் பிரசுரித்திருக்கிறது. இவற்றில் பல கட்டுரைகள் ஆங்கில மொழியையும் பல்கலைக்கழக வளாகத்தையும் அறிவுஜீவிகள் வட்டத்தையும் தாண்டாதவை. அந்தவகையிலும் சிறிய அளவிலேனும் சாதனை செய்யப்பட்டுள்ளது.

எதிர்காலத்தில் ஒரு விஷயத்தில் சிராங்கூன் டைம்ஸ் அதிகக் கவனம் செலுத்தவேண்டும். சிங்கப்பூரில் பல தமிழ் இலக்கிய, பண்பாட்டு, சமூக அமைப்புகள் உள்ளன. அவை சிராங்கூன் டைம்ஸைத் தமக்கான பொதுவான தளம் என்றுணரவேண்டும். அந்த உணர்வை உண்டாக்குவதற்கான முன்னெடுப்புகளில் இதழ் ஈடுபடவேண்டும். தனிப்பட்ட முறையிலான அதிருப்தி, கோபதாபங்களைத் தாண்டி சமூக முன்னேற்றம் மற்றும் வரலாற்றுப்பொறுப்பு ஆகியவற்றைக் கருத்திற்கொண்டு செயலாற்றவேண்டும். அதற்கான ஒரு தொடக்கமாக இந்தச் சிறப்பிதழ் அமையவேண்டும். தொடர்ந்து அதை மனதிற்கொண்டு கவனத்துடன் செயல்பட்டால் இன்னும் நான்கைந்தாண்டுகள் கழித்து 100வது இதழ் வெளிவரும்போது அது சிங்கைத் தமிழ்ச் சமூகத்தின் முக்கியமான, பரவலான கொண்டாட்டமாக இருக்கும்.

சிங்கப்பூர்-200 (1819ல் சர் ஸ்டாம்ஃபோர்ட் ராஃபிள்ஸ் நவீன சிங்கப்பூருக்கு அடித்தளமிட்டதிலிருந்து கணக்கிடப்படுகிறது) சிராங்கூன் டைம்ஸ்-50 இரண்டும் ஒரே ஆண்டில் இணைந்திருப்பது ஒரு தற்செயல்தான் என்றாலும் சிங்கப்பூரில் தமிழர்களின் வாழ்க்கையை வரலாற்று நோக்கில் பார்க்க அத்தற்செயல் உதவிசெய்திருக்கிறது. அந்தவகையில் சிங்கப்பூரின் கடந்த இருநூற்றாண்டுக் காலத்தின் இறுதியில் வெளிவந்திருக்கும் ஐம்பது சிராங்கூன் டைம்ஸ் இதழ்களும் சிங்கப்பூருக்கும் தமிழ்ச்சமூகத்திற்கும் நிச்சயமாக ஒரு குறிப்பிடத்தக்க பங்களிப்பு எனலாம்.

இதுவரை விரிவாகப் பார்த்ததைச் சுருக்கமாகக் கூறினால் தரத்தை உருவாக்கி நிர்ணயித்திருப்பதிலும், பொருட்படுத்தத்தக்க எழுத்தாளர்கள் உருவாகும் தளமாக இருப்பதிலும், பின்புலங்களைப் பொருட்படுத்தாமல் எழுத்தாளர்களின் படைப்புகளை வெளியிட்டுத் தொடர்ந்து ஊக்கப்படுத்துவதிலும், அறிவுச் சமூகத்திற்கு தேவையான சிந்தனைகளைத் தேடிப்பிடித்துப் பரவலாக்குவதிலும் குறிப்பிடத்தக்க சாதனைகளை கடந்த ஐந்தாண்டுக்காலத்தில் தி சிராங்கூன் டைம்ஸ் இதழ் செய்துள்ளது.

ஐம்பதாம் இதழ் வெளியாகும் இத்தருணத்தில் அடுத்த ஐந்தாண்டுகளில் முந்தைய சாதனைகளைத் தக்கவைத்துக்கொள்வதோடு சிங்கைத் தமிழ் அமைப்புகளின் பொதுவான தளமாக ஏற்பு உண்டாகவும், சிங்கைத் தமிழ்ச் சமூகத்தின் ஓர் அடையாளமாக வாசக ஆதரவுபெறவும் முயற்சிக்கவேண்டும். வெற்றி கிட்டினால் நிச்சயம் அது நம் தமிழ்ச் சமூகத்தின் பெருமிதமாக இருக்கும். ஒருவேளை அம்முயற்சிக்குப் பெருவெற்றி கிட்டாமற்போனாலும் ‘யானை பிழைத்த வேல் ஏந்தியதாக’ வரலாற்றில் இடம்பெறும்.

**

[‘தி சிராங்கூன் டைம்ஸ்’ 50-ஆவது இதழில் (நவ-டிச 2019) வெளியான கட்டுரை]