2015ம் ஆண்டு செப்டம்பர் மாத சிராங்கூன் டைம்ஸ் இதழில் ‘சிங்கப்பூரில் சிங்கம் இருந்தது’ என்ற தலைப்பில் என் கட்டுரை ஒன்று வெளியானது. அதே இதழில் எம்.கே.குமாரின் ‘நல்லிணக்கம்’ சிறுகதை வெளியாகியிருந்தது. அந்தக் கதையை வாசித்ததும் பிடித்திருந்தது. அப்போது எம்.கே.குமாரை நான் நேரில் அறிந்திருக்கவில்லை.

சில மாதங்கள் கழித்து, இலக்கிய நிகழ்ச்சி ஒன்றில் அவரைச் சந்தித்து அறிமுகப்படுத்திக் கொண்டபோது, அக்கதையின் பெயரை மறந்து, ‘உங்க குரங்கு கதை ரொம்ப நல்லா இருந்துச்சி’ என்று சொன்னேன். அப்போதிலிருந்து எம்.கே.குமார் கதைகளை வெளிவந்தவுடன் வாசித்துவிடுவது என் வழக்கம்.

‘மருதம்’ என்றொரு சிறுகதைத் தொகுப்பை இவர் வெளியிட்டிருப்பதாக அறிந்ததும் அதை வாசித்தேன். சிறப்பான தொகுப்பு அது. ஆனால் அதில் ஒருகதைதான் சிங்கப்பூர் சூழலில் நிகழ்வதாக அமைந்திருந்தது. அக்குறையை 5:12PM தொகுப்பு தீர்த்துவைக்கிறது.

இத்தொகுப்பின் அனைத்து கதைகளுமே சிங்கப்பூரில் நிகழ்பவை. தமிழ் முரசு நாளிதழில் ‘சுழற்சி’ சிறுகதை வெளியானபோது, சிவாண்ணன் என்ற கதாபாத்திரப் படைப்பு ஒருமையுடன் இயல்பாக வளர்ந்து, உச்சத்தில் முழுமை பெறும் பாங்குக்காக சிங்கை இலக்கியச் சந்திப்புகளில் வெகுவாகச் சிலாகித்துப் பேசப்பட்டது. என்னைப் பொறுத்தவரை என்றென்றைக்குமாக என் நினைவில் நிற்கப்போகும் கதை அது.

எம்.கே.குமார் கதைகளில் எனக்கு ஆகப்பிடித்த அம்சம் அவற்றில் இலக்கியத்துக்கே உண்டான சுதந்திரத்தைப் பயன்படுத்தி உணர்வுகள் நுணுக்கமாகப் படம் பிடிக்கப்படுவதுதான். அதிலும் குறிப்பாக சிங்கைத் தமிழ் இலக்கியம் பொதுவாகத் தவிர்த்துவிடும் சில விஷயங்கள்.

உதாரணமாக, ‘மோர்கன் என்னும் ஆசான்’ கதையில் பெரும்பான்மைச் சீனர்களிடையே தன்னைத் தமிழராக உணரும் ஒருவர், இந்தியத் தமிழரிடத்தில் சிங்கப்பூரராக உணர்வது எடுத்துக்காட்டப்பட்டுள்ளது.

பல இனங்கள் அவற்றின் மத நம்பிக்கைகளுடன் வசிக்கும் சிங்கப்பூர் சூழலில், ‘அப்யாசிகள்’ கதை தர்க்கபூர்வமான, தோழமையுடனான உரையாடல் மூலமாகவே ஒரு மதத்தின் நம்பிக்கைகளை அனுபவத் தளத்தில் பொருத்திப் பேசுகிறது, எந்தவிதக் காழ்ப்புமில்லாமல். இது சிங்கைத் தமிழ் இலக்கியத்தில் முக்கியமான ஒரு முயற்சி. முன்னகர்வும் கூட.

வரலாறு, தத்துவம் ஆகியவற்றில் ஆர்வமும், மானுட வாழ்க்கையைக் குறித்த சொந்தமான பார்வையும் இல்லாத ஒரு புனைவெழுத்தாளரின் கதைகள் உள்ளீடற்று இருப்பதை ஒரு நல்ல வாசகரால் எளிதில் கண்டுபிடித்துவிடமுடியும், இக்குறையை மறைக்க ஆர்ப்பாட்டமான மொழியைக் கொண்டு செய்யப்படும் கண்கட்டி வித்தைகளையும்தான்.

நல்வாய்ப்பாகத் தன் கதை சொல்ல வருவது இதுதான் என்ற தெளிவுடைய எம்.கே.குமாரின் கதைகள், இடத்துக்குத் தக்கபடி, நேரடியாகவும் பூடகமாகவும் வாசகரோடு அணுக்கமாக உரையாடுகின்றன. அவற்றில் வரலாற்றின் உண்மைகளும், தத்துவத்தின் கேள்விகளும், அவருடைய சொந்தமான பார்வைகளும் சரியான விகிதத்தில் கலந்திருக்கின்றன.

இத்தொகுப்பை வாசித்ததும் நான் சொன்னவற்றோடு நீங்களும் உடன்படுவீர்கள் என்று நிச்சயமாக நம்புகிறேன்.