சிங்கைத் தமிழ்ப் புனைவுலகிற்குப் புதிய சிறுகதைத் தொகுப்பு வரவு, உமா கதிரின் ‘ரோவெல் தெரு மனிதர்கள்‘. ஸீரோ டிகிரி பதிப்பகத்தின் இலக்கிய நூல்களை வெளியிடும் பிரிவான எழுத்து பிரசுரம், பத்து சிறுகதைகள் கொண்ட இந்தத் தொகுப்பை பிப்ரவரி 2021இல் வெளியிட்டுள்ளது. ரோவெல் தெரு மனிதர்கள் தொகுப்பை வாசிப்பதற்காகக் கையில் எடுத்தகணம் உமா கதிரின் எழுத்துலகப் பரிணாம வளர்ச்சி என் நினைவில் மீண்டது.

‘தி சிராங்கூன் டைம்ஸ்’ இதழில், 2016-17 காலகட்டத்தில், ‘சிங்கப்பூர் செல்ஃபி’ என்றொரு கட்டுரைப் பகுதி வந்துகொண்டிருந்தது. அதில்தான் உமா கதிர் என்ற பெயரை முதன்முதலில் பார்த்தேன். ‘காலையிலேயே யாரோ கதவு தட்டினார்கள்’ என்ற கட்டுரைதான் [ஜூன் 2016 இதழ்] நான் வாசித்த அவரது முதல் படைப்பு. NEA அதிகாரி காலையிலேயே வந்து கதவைத்தட்டி, தேங்கியிருக்கும் தண்ணீரில் டெங்கி கொசுக்கள் உருவாகும் என்று, அபராதம் விதித்துச் செல்வதை விவரித்து கூடவே டெங்கி பற்றி சில விஷயங்களைப் பகிர்ந்துகொள்ளும் கட்டுரை. இவருடைய எழுத்தில் ஒரு வசீகரம் உள்ளதே என்ற எண்ணத்தை முதல் வாசிப்பிலேயே உண்டாக்கிய கட்டுரை அது.

அதற்கடுத்த இதழில் [ஜூலை 2016] வெளியான அவரது ‘வழி தப்பிய பறவை’ என்ற கட்டுரை முன்னதைக்காட்டிலும் சிறப்பாக அமைந்திருந்தது. ரபீக் என்ற பங்களாதேஷ்காரன் தனக்கு நண்பனாக ஆன கதையையும், திடீரென்று சில மாதங்கள் ஆளைக்காணாமல், பிறகு ஒருநாள் பார்த்தபோது சிங்கப்பூர் சிறையில் தேவையில்லாமல் எட்டு மாதங்கள் அவன் கழித்த கதையையும் அதில் எழுதியிருந்தார். பிறகு ‘வாசிப்பில்லாமல் வாழ்க்கையா?’ [அக் 2016], ‘மண்டை ஓடி’ [டிச 2016] என அவரது கட்டுரைகள் அனைத்துமே நிறைவான வாசிப்புகளாக அமைந்தன. அப்போதுதான் அவரது அனைத்து கட்டுரைகளிலும் ஒரு கதை சொல்லப்பட்டிருப்பதையும் அதனாலேயே அவை நினைவில் பதிவதையும் உணர்ந்தேன். சிங்கப்பூரில் நம் கண்களுக்குப் படாமல் அல்லது பட்டாலும் உணராமல் நாம் தாண்டிப் போய்விடுபவர்களை மையப்படுத்தியே தன் கட்டுரைகளை அமைக்கிறார் என்பது தெரிந்தது. தன்னை வெளிப்படுத்தத் தகுந்த வடிவத்தை அவர் தேடிக்கொண்டிருந்த காலம் அது.

‘சுமக்காத பாரம்’ என்ற சிறுகதை பிப்ரவரி 2017 ‘தி சிராங்கூன் டைம்ஸ்’ இதழில் வெளியானபோது உமா கதிர் தனது எழுத்து அமையவேண்டிய வடிவத்தைக் கண்டடைந்துவிட்டார் என்று பட்டது. சிங்கையில் அறையைப் பகிர்ந்துகொண்டிருக்கும் 12பேர்களில் ஒருவரான ‘வாத்தியார்’, அன்றாடம் காலை ஆறு மணிக்கு அலாரம் வைக்காமல் எழுந்து குளித்துமுடித்து சாமிக்கு பூஜைசெய்வதை வழக்கமாகக்கொண்டவர். தனக்கு என்னென்னவோ கஷ்டங்கள் வந்தபோதும் கடவுளைக் கைவிடாத அவர் ஒருகட்டத்தில் அவரது அன்புக்குரியவர் ஒருவருக்கு உண்டாகும் இழப்பினால் சாமி படங்களைக் கொண்டுபோய்த் தோம்புப்பையில் போடுவதோடு கதை முடியும். அதன்பிறகு அவர் வாழ்க்கையில் பிடிப்பற்றுப்போவதை, ‘இப்போதெல்லாம் அலாரம் வைத்துதான் எழுகிறார் வாத்தியார்’ என்ற ஒருவரியில் உமா கதிர் சிக்கெனப் பிடித்திருந்தது என்னை நெகிழச்செய்தது. ரோவெல் தெரு மனிதர்கள் தொகுப்பில் ‘வாத்தியார்’ என்ற தலைப்பில் இக்கதை வெளியாகியுள்ளது.

அடுத்த சில மாதங்களில் வெளியான ‘மார்க்கும் ரேச்சலும்’ [மே 2017 இதழ்] சிறுகதை இன்று உமா கதிரின் அடையாளமாகவே ஆகிவிட்டது. இக்கதையை வாசித்தவுடன் அதன் பக்கங்களை ஒளிப்படம் எடுத்து சிங்கையில் புனைவு வாசிக்கும் நண்பர்களுக்கெல்லாம் பெரும் உற்சாகத்துடன் அனுப்பிவைத்தேன். பாராட்டு தெரிவித்தவர்களிடமும் சரி குறை கண்டவர்களிடமும் சரி, அதில் வரும் மார்க் க்றிஸ்னி அவர்களுக்குள் ஒருபகுதியாக ஆகிவிட்டிருந்தார். பிறகு ‘அக்கரைப்பச்சை’ தொகுப்பில் [அகநாழிகை வெளியீடு, தொகுப்பாசிரியர் பொன். வாசுதேவன்] அக்கதை வந்தபோது மேலும் கவனம் பெற்றது. 4D என்ற பெயரில் குறும்படமாகவும் வந்தது. அக்கதையின் தாக்கம் அந்த அளவுக்கு இருந்தது; இன்றும் இருக்கிறது. ரோவெல் தெரு மனிதர்கள் தொகுப்பில் இன்னொரு முறை மார்க்கும் ரேச்சலும் கதையை வாசித்து அவ்வனுபவத்தைப் புதுப்பித்துக்கொண்டேன்.

image0-7

சமுதாயத்தின், குடும்பவாழ்வின் பொதுவான சட்டதிட்டங்களுக்குள்ளும் நடைமுறைகளுக்குள்ளும் தங்களைப் பொருத்திக்கொள்வதில் ஏதோவொரு வகையில் சிக்கல்களை எதிர்கொண்டு உதிரிகளாக ஆகிவிட்டவர்கள், குடும்பத்திற்குள் இருந்தாலும் பொருளாதாரக் காரணங்களால் சிறுவட்டத்தில் சிக்கியுழலும் அடித்தட்டு மக்கள் இவர்களே உமா கதிரின் ரோவெல் தெரு மனிதர்கள். ‘கடைத்தெருக் கதைகள்’ என்ற தலைப்பில் தான் வியாபாரம் செய்த சாலைக்கம்போளத் தெருவின் மனிதர்களின் கதைகளை சிறுகதைகளாக எழுதித் தொகுப்பாக ஆ. மாதவன் வெளியிட்டார். இலக்கிய வட்டாரங்களில் நன்கு அறியப்பட்ட தொகுப்பு அது. அத்தொகுப்பு வெளியாகி சுமார் அரைநூற்றாண்டு கடந்தபின் வந்திருக்கிறது ரோவெல் தெரு மனிதர்கள். [ஆ. மாதவனின் கதையுலகைக் குறித்து பிப்ரவரி 2021 காலச்சுவடு இதழில் கே.என். செந்தில் ஒரு நல்ல கட்டுரை எழுதியிருக்கிறார்]

ஒரு குறிப்பிட்ட தெருவின் உதிரிகள், அடித்தட்டு மக்களின் வாழ்க்கை பதிவுசெய்யப்பட்ட தொகுப்புகள் என்ற வகையில் இரண்டையும் ஒப்புநோக்கலாமேயொழிய, அம்மக்களைக்குறித்த மாதவனின் பார்வையும் உமா கதிரின் பார்வையும் முற்றிலும் வெவ்வேறானவை. மனிதர்களின் இருண்ட பக்கங்களின்மீது தீர்ப்புகளின்றி வெளிச்சம்போட்டுக்கொண்டு போவதே ‘கடைத்தெருக் கதைகள்’. என்னதான் இந்த சமுதாயத்தின்மீது கோபம், வெறுப்பு, விலகல் இருந்தாலும் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் உதிரிகளிடமிருந்தும் அடித்தட்டு மக்களிடமிருந்தும் சகமனிதர்களுக்கான அன்பு எட்டிப்பார்த்துக்கொண்டே இருக்கிறது என்பதைக் காட்டுவதே ‘ரோவெல் தெரு மனிதர்கள்’.

‘..ஜீவராசிகளில் எல்லாவற்றையும்விட கழிசடையாக வாழ்கிறான்’ என்று ஆ. மாதவன் எழுதுவதைப்போல உமா கதிர் ஒருபோதும் எழுதுவதில்லை. அதேவேளையில் போர்ஹேயைப்போல, ‘ஒரு மனிதன் சக மனிதனுக்கு குறிப்பிட்ட நேரங்களில் வேண்டுமானால் விரோதியாக இருக்கலாம். சூர்யோதயங்களுக்கோ நதிகளுக்கோ மலைகளுக்கோ ஒருமனிதன் விரோதியாக முடியாது’ என்று தத்துவார்த்தமாகவும் உமா கதிர் பேசுவதில்லை. அவர் தன் பாணியில், ‘முதல் டின் பியர் உள்ளே போனதும் இந்த உலகத்தின் மேலும், மக்களின் மேலும், மரங்களின் மேலும் எல்லா ஜீவராசிகளின் மீதும் அன்பு சுரந்தது’ என்று பகடியைப்போல எழுதிவிட்டு நகர்ந்துவிடுவதால் நாமும் ஒரு புன்னகையுடன் தாண்டிப்போய்விடுகிறோம். ஆனால், மனிதர்கள் அடிப்படையில் மேன்மையானவர்கள் ஏதோ சில சூழ்நிலைகளால் அவர்கள் தடுமாறுகிறார்கள் என்ற பார்வை அவரிடம் இருக்கிறது. நீண்ட காலம் நினைவுகூரப்படும் படைப்பாளிகளிடம் இப்பார்வை இருப்பதைக் கண்டிருக்கிறேன்.

அடுத்தவர் கஷ்டத்தைக் காணச்சகியாமல் கடவுளைத் துறக்கும் வாத்தியார், ஏதோ வேகத்தில் ஓர் எலியைக் கொன்றுவிட்டு அன்றிலிருந்து தூக்கம்கெட்டுத் தவிக்கும் ராஜன், தன்னை உணர்ந்திருக்கிறாரா என்று ஐயத்திற்கிடமான நிலையிலும் அடுத்தவர்களுக்கு ஏதாவது செய்யவேண்டும் என்ற வேட்கை தணியாமல் திரியும் ப்ளூடூத் ஜோஹன், ஒரேயொரு நாள்கூட ஓய்வொழிச்சல் இல்லாமல் பல்லாண்டுகள் உழைத்த நிலையில் அரிதாக ஓய்வுகிடைத்த ஒருநாளையும் இன்னொருவரை மகிழ்ச்சிப்படுத்திப் பார்க்கலாம் என்று தேடிச்சென்று செலவழிக்கும் ஷாகுல் என உமா கதிர் காட்டும் மனிதர்கள் எல்லாச் சூழலிலும் அடுத்தவர் மீதான கரிசனத்தை இழந்துவிடாதவர்களாகவே உள்ளனர்.

உமா கதிரும் நானும் ஒரு முறை எழுத்தாளர் கோணங்கியுடன் மலேசியாவில் ஒரு விடுதி அறையில் நள்ளிரவு தாண்டியும் வெகுநேரம் பேசிக்கொண்டிருந்தோம். எனக்கும் இலக்கியத்தில் சில விஷயங்கள் தெரியும் என்று காட்டிவிடத்துடிக்கும் தன்முனைப்பால் நான் கோணங்கி பேசும்போது இடையிடையே ஏதாவது சொல்லிக்கொண்டே இருந்தேன். ஆனால்  உமா கதிர் அங்கு இருந்தாரே தவிர பேசினார் என்று சொல்லமுடியாது. கோணங்கியிடம் தன்னை முற்றாக இழந்துபோய் கேட்டுக்கொண்டிருந்தார்.

அவருடைய அந்த இயல்பே அவரை ஒரு நல்ல புனைவெழுத்தாளராக ஆக்கியிருக்கிறது என்று சொல்வேன். அதனால்தான் சிங்கையின் கடைகளில் ஆப்பிள் வைத்திருந்து தூக்கியெறியப்பட்ட அட்டைப்பெட்டியைப் படுக்கையாகப் பயன்படுத்தும் அலி கதாபாத்திரத்தை எழுதும்போது, அலி நியூஸிலாந்து ஜாஸ் ஆப்பிள் பெட்டியை மட்டுமே குறிப்பாகத் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்துகிறார் என்று உமா கதிரால் ஊடுருவிப் பார்க்கமுடிகிறது. இரவில் தூங்குவதற்கு பகிர்அறை பிடித்தால்கூட மாதம் 250 வெள்ளி ஆகலாம் என்று நெட் கஃபேவில் உட்கார்ந்த வாக்கில் சிலமணி நேரம் மட்டுமே உறங்கிக் காலந்தள்ளும் சிங்கப்பூரர்களைக் காட்டமுடிகிறது. சிங்கப்பூரில் வீடற்றவர்கள் மொத்தமாகவே சுமார் ஆயிரம்பேர்தான் இருக்கின்றனர் என்கிறது ஓர் அண்மைய ஆய்வு. அவர்களில் ஒருசிலரின் பின்புலத்தை உமா கதிர் நமக்குக் காட்டுகிறார். அவ்வகையில் குரலற்றவர்களின் குரல் என்று சொல்வது இவரது எழுத்துகளுக்கு முற்றாகப் பொருந்தும்.

உடலுழைப்பு இல்லாமல் வாழ்வதே பிரதான வாழ்க்கைமுறையாக ஆகியிருக்கும் சிங்கப்பூரில் தன்னைச் சற்றேனும் ஆசுவாசப்படுத்திக்கொள்ள ஒரு தினம் கிடைக்காதா என்று ஏங்குபவர்களை உமா கதிரின் கதைகளில் காணும்போது, ‘கடமை புரிவார் இன்புறுவார் என்னும் பண்டைக்கதை பேணோம். கடமையறியோம் தொழிலறியோம். கட்டென்பதனை வெட்டென்போம்‘ என்று பாரதியைப்போல வெகுண்டுபேசத் தோன்றுகிறது. தனியொரு மனிதனுக்கு உணவில்லையெனில்.. என்ற பாரதியின் தார்மீகக் கோபத்தைத் தனியொரு மனிதனுக்கு ஓய்வில்லையெனில்.. என்று தன் புனைவுகளில் உள்ளார்த்தமாக நீட்டிக்கிறார் உமா கதிர். யதார்த்தவாதத்தின் உள்ளுறையும் மனிதார்த்தவாதம் என்று ரோவெல் தெரு மனிதர்கள் தொகுப்பைச் சுருக்கமாக வரையறுக்கலாம்.

இத்தொகுப்பின் பிற கதைகளிலிருந்து முற்றாக வேறுபட்டுத் தனித்துத் தெரியும் ஒரு கதை ‘களப எயிறு’. ஊகப்புனைவு வகைகளுள் ஒன்றாக இக்கதையைச் சொல்லலாம். யதார்த்தவாத எழுத்தைத் தனது முத்திரையாக ஆக்கிக்கொண்டுள்ள உமா கதிருக்கு அதற்கு நேரெதிர் முனையில் வைக்கக்கூடிய ஊகப்புனைவும் நன்றாகவே கைவருவது குறிப்பிடத்தக்கது. ஒரு புனைவுப் படைப்பாளியாக எழுத்துக்கலை வடிவத்தின் அனைத்து சாத்தியக்கூறுகளையும் பயன்படுத்த, வெளிக்காட்ட உமா கதிருக்கு வாய்ப்பு அமைந்துள்ளது. கற்பனைகளை எல்லைகளற்று விரிக்கும் அந்த வடிவத்தையும் உமா கதிர் தொடர்ந்து சோதனை செய்து பார்க்கவேண்டும் என்று விரும்புகிறேன். இத்தொகுப்பில் ‘பிரார்த்தனை’ கதைதான் என் பார்வையில் சற்று சவலைப்பிள்ளையாக இருக்கிறது. ஒரேயொரு வலுவான பெண் கதாபாத்திரத்தைக்கூட உமா கதிர் தன் கதைகளில் சித்தரிக்கவில்லை என்பதும் எனக்கொரு குறை.

‘சுமக்காத பாரம்’ சிறுகதை பிப்ரவரி 2017இல் வெளியானது. அதன்பிறகு முழுமையாக நான்காண்டுகள் கழிந்தபின் பிப்ரவரி 2021இல் முதல் தொகுப்பை வெளியிட்டிருக்கிறார் உமா கதிர். அவர் ரோவெல் தெருவில் அன்றாடம் பழகிய மனிதர்களுள் ஒரு பகுதியினரை எழுதியிருந்தாலே இந்நேரம் நான்கு தொகுப்புகள் போட்டிருக்கலாம். ஆனால் மிகவும் நிதானமாகவும், தேர்ந்தெடுத்தும், புனைவுகள் ‘நிகழட்டும்’ என்று காத்திருந்தும் தன் முதல் தொகுப்பை வெளியிட்டிருக்கிறார். அந்தவகையில் உடனடி நிறைவையும் புகழையும் விரட்டிக்கொண்டு போகவேண்டாம் என்று தற்காலச் சூழலிலும் தன்னைத் தக்கவைத்துக்கொள்ளும் ஒரு படைப்பாளியாக உமா கதிர் மிளிர்ந்துள்ளது மகிழ்ச்சிக்குரிய அம்சம்.

சிங்கப்பூர்ச் சிறுகதைத் தொகுப்புகளுள் முக்கியமான ஐந்தைச் சொல்லுங்கள் என்று கேட்டால் தயங்காமல் நான் ‘ரோவெல் தெரு மனிதர்கள்’ தொகுப்பை அப்பட்டியலில் வைப்பேன்.

இலக்கிய ஆர்வலர்கள் தவறவிடக்கூடாத தொகுப்பு.

***