நூல்கள் வெளியிடுவது சிங்கப்பூர்த் தமிழ்ச் சமூகத்திற்குப் புதிதல்ல, சுமார் 150 ஆண்டுகளாகப் பழக்கமான ஒன்றுதான். ஆனால் கடந்த தொழிலாளர் தினத்தன்று (மே 1, 2021) சிங்கையில் வெளியிடப்பட்ட நூல் ஒன்றை அந்த நீண்ட வரிசையில் மற்றொரு நூலாகச் சேர்த்துவிட்டுப் போய்விடமுடியாது. இந்திய மரபுடைமை நிலையமும் கொள்கை ஆய்வுக்கழகமும் இணைந்து வெளியிட்டுள்ள ‘ஊர் திரும்பியவர் வேர் ஊன்றியவர் – தென்கிழக்காசியாவிலும் சிங்கப்பூரிலும் தமிழர்’ என்பதே அந்நூல்.

Sojourners to Settlers – Tamils in Southeast Asia and Singapore’ என்ற தலைப்பில் இரு பாகங்களாக ஆங்கிலத்தில் வெளியிடப்பட்ட (2019) நூலிலிருந்து சிங்கைத் தமிழ்ச்சமூகத்தின் தேவை, ஆர்வம் ஆகியவற்றைக் கருத்திற்கொண்டு 18 இயல்களைத் தேர்ந்தெடுத்து, மொழிபெயர்த்து,செம்மைசெய்து, தொகுத்து ‘ஊர் திரும்பியவர் வேர் ஊன்றியவர்’ உருவாக்கப்பட்டுள்ளது. ஆய்வாளர்கள் அருண் மகிழ்நன், நளினா கோபால் ஆகிய இருவரும் இப்பணியைச் செய்துமுடித்துள்ளனர்.

புலம்பெயர் தமிழர் வரலாற்றின் ஆக அண்மைக்கால சான்றுகள், அவரவர் துறைகளில் முன்னணியிலுள்ள ஆய்வாளர்கள் அளிக்கும் புதிய பார்வைகள், கூரிய வாதங்கள் என உள்ளடக்கத்தில் உலகத்தரமிக்க ஓர் ஆய்வுநூலாக இந்நூல் மலர்ந்துள்ளது. அதேவேளையில், பொதுமக்களில் அனைத்துத் தரப்பினரும் வாசிக்க ஏதுவான மொழிநடையில், அரிய ஒளிப்படங்களும் இணைக்கப்பட்டு சிறப்பான வாசிப்பனுபவத்தை அளிக்கும்படியும் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆகவேதான் இந்நூலைப் பத்தோடு பதினொன்றாக அல்லாமல் ஒரு முன்னுதாரண வெளியீடாகக் கருதவேண்டியுள்ளது.

bookmockup_720x

நம் கண்முன் நடந்தேறும் ஒரு நிகழ்ச்சிக்கே அதற்கடுத்த நாள் ஒன்றுக்கும் மேற்பட்ட ‘வரலாறு’கள் உருவாகிவிடுகின்றன. சமகால விஷயமே அப்படியிருக்கும்போது ஆயிரமாண்டுகட்கு முன் சிங்கப்பூர் நீரிணை வழியாகச் சோழக்கடற்படை சென்றபோது சிங்கப்பூரில் இறங்கினார்களா இல்லையா என்பதை எந்த அளவுக்குத் துல்லியமாகச் சொல்லமுடியும்? சவாலான கேள்விதான். ஆனால் பழைய சிங்கபுராவில் சோழர்களின் சுவடுகள்என்ற இயலில் ஆய்வாளர் இயன் சிங்கிளேர் அச்சவாலைத் திறம்பட எதிர்கொண்டுள்ளார்.

சோழர் வெற்றிகொண்டதாகக் கருதப்படும் 13 மலாய்த் தீவுக்கூட்டப் பகுதிகளில் இன்னும் அடையாளம் காணப்படாத ‘வளைப்பந்தூரு’தான் சிங்கப்பூரா? ‘சிங்கப்பூர்க் கல்’ என்று அழைக்கப்படும் ஓர் உடைந்த கல்லில் புரியாத மொழியில் எழுதப்பட்டிருக்கும் எழுத்துகள்தான் அதற்கு ஆதாரமா? ‘தலையற்ற குதிரைவீரன்’ என்றழைக்கப்படும் தொல் கைவினைப் பொருளில் உள்ள வீரன் ராஜராஜசோழனா? தஞ்சோங் காத்தோங்கில் கரையொதுங்கிய பிள்ளையார் சிலை சோழர் பாணி சிற்பக்கலையா? என்றெல்லாம் சிங்கிளேர் துருவித்துருவி ஆராய்ந்துகொண்டுபோகிறார்.

அதை வாசிக்கும்போது சோழர்படை சிங்கப்பூரில் இறங்கியதா இல்லையா என்ற கேள்வி மறந்து, ஒரு சீரிய ஆய்வு வரலாற்றை எப்படி கவனமாகவும் நுணுக்கமாகவும் ஊடும்பாவுமாக நெய்து உருவாக்குகிறது என்ற சிலிர்ப்பு மேலோங்குகிறது. அப்படிப்பட்ட ஓர் ஆய்வு அணுகுமுறையின்மீது உண்டாகும் நம்பிக்கையே அந்த ஆய்வுமுடிவின் மீதான உறுதிப்பாடாக நம் எண்ணங்களில் நிலைகொள்கிறது.

சோழர் ஆதிக்கச் சுவடுகளை ஏதோ வரலாற்று ஆய்வாளர்களுக்கானவை என்று விட்டுவிடுவதற்கில்லை, பல நூற்றாண்டுகள் கழித்தும் இங்குள்ள தமிழ்ச் சமூகத்தின் அன்றாடவாழ்விலும்கூட ஏதோவொரு வகையில் அவற்றின் தாக்கம் நீடித்துக்கொண்டிருந்தது. தமிழர்களின் நீள்பயணம்: சோழமண்டலக்கரைப் பூர்வீக மக்களின் வரலாற்றுக் குறிப்புகள் என்ற இயலில் நளினா கோபால் அப்படியொரு வரலாற்றுச் சித்திரத்தை வரைந்துகாட்டுகிறார்.

‘கோரமேண்டல்’ என்று இன்று ஆங்கிலத்தில் வழங்கப்படும்சொல் சோழமண்டலம் என்ற தமிழ்ச் சொல்லிலிருந்து உருவான வரலாற்றை விரிவாக எழுதியுள்ள நளினா, அதற்கான முதற்சான்றாக 15ஆம் நூற்றாண்டில் வாஸ்கோடகாமா எழுதிய ‘Chomandarla’ அன்று எழுதிய பயணக்குறிப்பில் காட்டுகிறார். சோழமண்டலக்கரையின் பூர்வகுடிகள் என்பதைக் குறிப்பிட்ட ‘கிளிங்’ என்ற சொல் எவ்வாறு முதலில் பெருமையின் அடையாளமாகவும் காலப்போக்கில் இழிசொல்லாக மாற்றமடைந்ததையும், நூறாண்டுகளுக்குமுன் ‘கிளிங் ஸ்ட்ரீட்’டின் பெயர் ‘சூலியா ஸ்ட்ரீட்’ என்று மாற்றம் பெற்ற வரலாற்றையும் விவரிக்கிறார்.

சிங்கப்பூரின் முதல் தமிழராகச் சொல்லப்படும் நாராயணபிள்ளையின் தமிழ்க் கையொப்பத்தை (1822) மறைந்துகிடந்த ஆவணங்களிலிருந்து மீட்டெடுத்து நம் பார்வைக்குக் கொடுத்திருக்கும் ஆய்வாளர் நளினா, ஏழெட்டுத் தலைமுறைகளாகச் சிங்கப்பூரில் வசித்துவரும் சங்கு தேவர், இராம வெ.ல.நா. செட்டியார், சீதாராம பிள்ளை ஆகியோரது குடும்பங்களின் கதைகளையும் அவற்றின் வம்ச விருட்சங்களுடன் ஆவணப்படுத்தியுள்ளார். ஆட்சியாளர்களின் கதை மட்டுமல்ல, மக்களின் கதையும் வரலாற்றுக்கு அவசியமே என்று காட்டியுள்ளார்.

வரலாற்று நிகழ்ச்சிகளை வைத்துக்கொண்டு கதைகளைப் புனைவதுபோல மக்களின் மொழியை வைத்துக்கொண்டு வரலாறுகளைக் கற்பனையாக எழுதிவிட முடியாது. அதேவேளையில் மக்களிடையே புழங்கும் மொழிக்குள் வரலாற்றின் அறுபடாத தொடர்ச்சி இருக்கிறது என்பதால் வரலாற்று நோக்கில் மொழியை அணுகுவதைப் புறக்கணித்திடவும் இயலாது.

தமிழிலும் மலாயிலும் மொழியியல் சந்திப்புகள் என்ற இயலில் ஆய்வாளர் டாம் ஹோகர்வோர்ஸ்ட், தன் பன்மொழி வன்மையாலும் கூர்ந்த அவதானிப்பாலும் தமிழ்ச்சொற்கள் தென்கிழக்காசிய மொழிகளுள் எவ்வாறு கலந்துள்ளன என்று எடுத்துக்காட்டுவதோடு, இவ்வட்டாரத்தில் தமிழின் தொன்மையையும் பயன்பாட்டையும் புறவயமான சான்றுகளைக்கொண்டு மெய்ப்பிக்கிறார்.

இவரது ஆய்வின்படி, சான்றுகாட்டக்கூடிய அளவில், ஒரு தென்கிழக்காசிய மொழியில் (தொல் கெமர்) சென்றுகலந்த முதற்சொல் ‘கட்டி’ என்ற தமிழ்ச்சொல்லே. ஏழாம் நூற்றாண்டு கல்வெட்டு, சாசனங்களை சான்றுகளாகச் சுட்டுகிறார். சுமார் 600 கிராம் எடையைக் குறிக்கும் ‘கட்டி’ என்ற சொல் சிங்கப்பூரில் அறுபதுகள்வரை புழக்கத்திலிருந்தது. பிற மொழிகளுக்குச் சொற்களை அளித்த தமிழுக்குள் காலப்போக்கில் இவ்வட்டாரத்தின் பிறமொழிச் சொற்களும் ஆங்கிலமும் கலந்துவருவதையும் அதன் பின்னணியையும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் சுவைபட விளக்கியுள்ளார்.

புதுமைதாசனின் ‘அடுக்குவீட்டு அண்ணாசாமி’ நாடகத்தில், ‘கூட்டாளிங்கல்லாம் ஒங்களைக் கண்டாலே கோஸ்தான்லே போறாங்க’ என்று நான் வாசித்தபோது ‘கோஸ்தான்’ என்ற சொல்லுக்கு ‘பின்னோக்கிச் செல்லுதல்’ என்ற விளக்கத்தை அறிந்துகொண்டேன். ஆனால் அது எந்தமொழிச்சொல் என்று தெரியாமலிருந்தது. டாம் ஹோகர்வோர்ஸ்ட் அது ‘go astern’ என்பதிலிருந்து வந்தது என்றும், தற்போது சிங்கப்பூரில் 60வயதுக்கு மேற்பட்டவர்களால் மட்டுமே அச்சொல்லை விளங்கிக்கொள்ளமுடிகிறது என்றும் ஓரிடத்தில் குறிப்பிடுகிறார். தமிழை அதன் தொன்மை, ‘தூய்மை’ குறித்த கண்ணோட்டங்களிலேயே பார்த்துக்கொண்டிருக்கும் பலருக்கும் வரலாற்றில் தமிழிலுள்ள கொடுக்கல்வாங்கல்களை நிர்ணயிக்கும் காரணிகள் குறித்த பார்வைகள் இவ்வியலில் புதிய திறப்புகளை அளிக்கக்கூடும்.

நவீன சிங்கப்பூரில் தமிழ்ச் சமூகத்தின் பரிணாமத்தை நான்கு கட்டங்களாகப் பிரித்துக்கொண்டு ஆராய்ந்துள்ளார் ஆய்வாளர் அ.வீரமணி.வந்ததும் வேரூன்றியதும்என்ற அவ்வியலில், 19ஆம் நூற்றாண்டு, இரண்டாம் உலகப்போருக்கு முந்திய 20ஆம் நூற்றாண்டு, போருக்குப்பின் 1965 வரையிலான காலம், சிங்கப்பூர் தனிநாடாக மலர்ந்தபின் இன்றுவரையுள்ள காலகட்டம் ஆகிய அந்நான்கு கட்டங்களில் சிங்கப்பூர்த் தமிழ்ச்சமூக வரலாற்றைத் தன் சீரிய சிந்தனைகளாலும் சுற்றிவளைக்காத எழுத்தாலும் விரிவாக விவாதித்துள்ளார்.

நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து உழைப்பாளிகளை ஏற்றுமதி செய்வதற்கு பிரிட்டிஷ் அரசு சில கட்டுப்பாடுகளை விதிக்குமளவுக்கு 19ஆம் நூற்றாண்டின் பஞ்சங்கள் அளித்த வறுமையிலிருந்து தப்பித்துக்கொள்ள புலம்பெயர்ந்த தமிழராகச் சிங்கையில் தொடங்கிய தமிழரின் வரலாறு,இன்று சிங்கையில் ஆங்கிலக் கல்வி, பொருளாதார வளர்ச்சி, தேசிய அடையாளத்தோடு ஒத்திசையும் இனஅடையாளம் என்று முழுமையாக இன்னொரு மண்ணின் சமூகமாக நிலைபெற்றுள்ள வரலாற்றின் படிநிலைகளை சூடும் சுவையும் குன்றாமல் கொடுத்துள்ளார்.

இந்தியர் என்ற இன அடிப்படையிலான அடையாளத்திற்குள் தமிழர் என்ற மொழி அடிப்படையிலான அடையாளம் சிங்கப்பூர்த் தமிழ்ச் சமூகத்தின் தனித்துவமிக்க அம்சங்களுள் ஒன்று. அச்சமூகத்திற்கு மொழியின் உச்சபட்ச சாத்தியக்கூறுகளைக் கண்டடைந்து உணர்வுகளை வெளிப்படுத்துவதன்வழியே மாட்சியும் மீட்சியும் பெறும் தளமாக இலக்கியம் அமைகிறது.

ஆயிரமாயிரமாண்டுத் தொன்மையுள்ள தமிழர் இலக்கியம், மக்களின் வாழ்நிலத்தையும் அவர்களின் கற்பனையையும் பிணைக்கும் ‘திணை’ என்ற கோட்பாட்டுக்கு உள்ளடங்கியே இதுவரை பயணித்துவந்துள்ளது. சிங்கப்பூர்த் தமிழ் இலக்கியம் முதன்முறையாக அதை மீறிவிட்டது என்று துணிகிறார் திணையற்ற தமிழரின் முதல் குரல் என்ற தன் இயலில் ஆய்வாளர் கி. கனகலதா.

தொழிலாளர்கள், தமிழ் முஸ்லிம்கள், செட்டியார்கள், இலங்கைத் தமிழர் என்ற அதிக ஒட்டுறவில்லாத குழுமங்களாகச் சிங்கையின் தொடக்ககால புலம்பெயர் தமிழர்களைப் பிரித்துக்கொள்ளும் இவர் அவர்கள் ஒரே தமிழ்ச்சமூகமாக ஒருங்கிணையத் தொடங்கிய புள்ளியையே சிங்கைத் தமிழிலக்கிய வரலாற்றின் தொடக்கப்புள்ளியாகக் கொள்கிறார்.

‘திணை’ என்கிற கோணத்திலிருந்து பார்த்தால் சிங்கப்பூரின் நகர வாழ்க்கை பிற நகரங்களின் வாழ்க்கையிலிருந்து வேறுபட்டது என்று வாதிடுகிறார் ஆய்வாளர். மலேசிய இலக்கியத்திலிருந்து சிங்கை இலக்கியம் வேறுபடுகிறது என்று தான் கருதும் இடங்களைத் தன் வாதத்திற்குத் துணைகொள்கிறார். சிங்கப்பூர் என்ற தேசியத்தைக் கட்டமைக்க வேண்டுமானால் இங்குள்ள இனக்குழுமங்கள் தம் பாரம்பரியப் பெருமைகளை மறந்து புதிதாகத் தொடங்க வலியுறுத்திய லீ குவான் இயூவின் அரசியல் சித்தாந்தத்தின் தாக்கத்தையும் அதில் இணைக்கிறார்.

இந்த நூலிலுள்ள 18 இயல்களையும் அவற்றின் சிறப்பம்சங்களையும் முக்கியத்துவத்தையும் இப்படியாகச் சொல்லிக்கொண்டே போகலாம். ஆனால் நேரடியாகவும் முழுமையாகவும் ‘ஊர் திரும்பியவர் வேர் ஊன்றியவர்’ நூலை வாசித்தும் யோசித்தும் பார்க்கும் அனுபவத்தை அது ஒருபோதும் ஈடுசெய்யாது.

சிங்கப்பூரில் இலங்கைத் தமிழர் வரலாற்றைப் பேசும் ஆய்வாளர் ஹேமா கிருபாலினியின் இயல், தமிழ் முஸ்லிம்கள் வரலாற்றை வடிக்கும் ஆய்வாளர் டோர்ஸ்டன் சாஹரின் இயல், தமிழரின் அடையாளங்கள் திராவிடர் – தமிழர் – இந்தியர் என மாறிவருவதைக் குறித்து கவனப்படுத்தும் ஆய்வாளர் பிரவீன் பிரகாஷின் இயல், திருமண உறவுகளின் வழியாக இனக்கலப்புகள் தொடர்ந்து அதிகரித்துவரும் நிலையில் சிங்கப்பூரில் இந்தியராக இருப்பது என்றால் என்னவென விவாதிக்கும் ஆய்வாளர் ஏரன் மணியத்தின் இயல், சிங்கையில் தமிழ்மொழிக் கல்வியின் புதிய சவால்களையும் சாத்தியங்களையும் விவாதிக்கும் ஆய்வாளர்கள் எஸ். கோபிநாதன், சீதா லட்சுமி, வனிதாமணி சரவணன் ஆகியோர் எழுதியுள்ள இயல் எனச் சிங்கைத் தமிழ்ச்சமூகத்தின் அக்கறைகள் விரியும் தளங்களுக்கெல்லாம் பயணித்துச் செய்யப்பட்டுள்ள மணிமணியான ஆய்வுகளைத் தாங்கி இந்நூல் வெளிவந்துள்ளது. இங்கு குறிப்பிடப்படாத ஆய்வுகளும் சோடையில்லை.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் சிங்கப்பூரைக் குறித்து எழுதும்போது ‘பனித்துளிக்குள்ளே ஆலவிருட்சமாக இப்பூமண்டலத்திலே சிங்கப்பூர்’ இருக்கிறது என்றார் ‘சிங்கை நேசன்’ பத்திரிகை அதிபர் மகுதூம் சாயபு. ‘ஊர் திரும்பியவர் வேர் ஊன்றியவர்’ நூலையும் நான் அப்படித் தயக்கமின்றிச் சொல்வேன். ஐநூறு பக்கங்களுக்குள் ஆயிரமாண்டுக்கால புலம்பெயர் தமிழர் வரலாற்றைக் குறுகத் தரித்துக்கொண்டு வந்துநிற்கிறது. வாராது வந்திருக்கும் இந்நூலுக்குச் சிங்கைத் தமிழர் பெருத்த ஆதரவையும் ஆழ்ந்த வாசிப்பையும் வழங்கவேண்டும்.

சிங்கப்பூர்த் தமிழர்கள் அனைவரும் தவறவிடாமல் வாசிக்கவேண்டிய நூலிது. சிங்கைத் தமிழ்ச் சமூகத்தின் உறுப்பினர்களில் கணிசமானவர்கள் இந்த நூலை வாசித்தால் தன் சொந்த சமூகத்தின் வரலாறு குறித்த அவர்களின் அறிவுலக வன்மை அடுத்தகட்டத்திற்கு நகரும். அது இதைப்போன்ற பல நூல்கள் உருவாகவும் சிங்கப்பூரில் தமிழர் வரலாறு விரிவாகவும் அறிமுகக் கட்டுரையில் ஆய்வாளர் அருண் மகிழ்நன் தெரிவித்துள்ள கனவை நனவாக்கும்.

‘ஊர் திரும்பியவர் வேர் ஊன்றியவர்’ மின்னூலாகவும் அச்சு நூலாகவும் வாசிக்கக் கிடைக்கிறது. நூலை வாங்குவதற்கான விவரங்களை இந்த இணையப்பக்கத்தில் காணலாம்.

***

[மே 2021 ‘தி சிராங்கூன் டைம்ஸ்’ இதழில் வெளியான கட்டுரை]