‘ஒட்டகம் ஊசியின் காதில் நுழைவது, செல்வந்தன் தேவனின் இராஜ்யத்தினுள் நுழைவதைக் காட்டிலும் எளிதாக இருக்கும்’ என்பது ஒரு விவிலிய வாசகம். இவ்வரியை முதன்முதலில் வாசித்தபோது ஒட்டகத்துக்கும் ஊசியின் காதுக்கும் என்ன தொடர்பு என்று நான் யோசிக்கவில்லை. சமீபத்தில் நாஞ்சில் நாடன் ‘ஓங்கு நிலை ஒட்டகம்’ என்றொரு கட்டுரை எழுதியிருந்தார். அதில் ஆங்கிலத்தில் camel என்ற சொல்லுக்கு தடித்த கயிறு (வடம்) என்ற பொருளும் இருப்பதை ஓர் அறிஞர் எடுத்துக்காட்டியதாகக் குறிப்பிட்டிருந்தார்.

IMG_2138.jpg

அந்த அறிஞரைப்போல எந்த விஷயத்தைக்குறித்தும் கேள்விகளை எழுப்பிக்கொண்டு அவற்றுக்கு நதிமூலம் ரிஷிமூலம் தேடிக்கொண்டு அலைபவர்கள் இருக்கிறார்கள், ஆனால் அபூர்வம். அழகுநிலாவை அப்படிப்பட்ட ஒருவர் என்பேன். விவரம் தெரிந்த நாளிலிருந்து தமிழகக் கிராமத்தில் பச்சை பெல்ட் கட்டியவர்களையும், சிங்கப்பூர் வருபவர்களிடம் பச்சை பெல்ட் வாங்கிவரச்சொல்லிக் கேட்பவர்களையும் பார்த்திருப்போம். ஆனால் அந்தப் பச்சை பெல்ட் உருவான பின்புலத்தை அறியவேண்டும் என்ற தேடல் அழகுநிலாவுக்கு எழுந்துள்ளது. அதுவே ‘வாசம் சுமக்கும் பச்சை’ கட்டுரையாகப் பிறந்துள்ளது.

 

இணையப்புழக்கம் மிகுந்தபிறகு, குறிப்பாக 2010க்குப் பிறகு, கட்டுரை எழுதுவது உலகிலேயே ஆகச்சுலபமான காரியங்களில் ஒன்றாக ஆகிவிட்டது; மேசையுழைப்பை மட்டும் செலுத்தி, வெறும் தகவல்களை இணையத்தில் தேடி அவற்றை ஒரு குறிப்பிட்ட சூத்திரத்தில் ஒருங்கிணைத்துக் கவர்ச்சியாக ஒரு தலைப்பைப் போட்டுவிட்டால் வேலை தீர்ந்தது. விவரங்கள் போதாத இடத்தில் அறச்சீற்றத்தோடு சில கேள்விகளைக் கேட்டுவைக்கலாம். அதோடு பிறந்த வேகத்திலேயே அற்பமான ஆயுளுடன் மறைந்துவிடுகின்றன என்றபோதும் குறும்பத்திகள், அனுபவப் பதிவுகள், நட்பு ஊடகக் கலாட்டாக்களையும் கட்டுரைகளாகக் குறிப்பிடும் ஆபத்தும் உருவாகியுள்ளது.

 

இப்படிப்பட்ட சூழலில் சற்று ஆசுவாசப்படுத்திக்கொள்ள, தன் ‘ஆறஞ்சு’ சிறுகதைத் தொகுப்பின் மூலம் புனைவாசிரியராகப் பரவலாக ஏற்கனவே அறியப்பட்டுவிட்ட அழகுநிலா,  அபுனைவிலும் ஆர்வம்கொண்டு இக்கட்டுரைத் தொகுப்பைக் கொண்டுவந்துள்ளார். இத்தொகுப்பின் எந்தக் கட்டுரையையும் ஒருவர் மேசையில் அமர்ந்து எழுதிவிட இயலாது என்பதை வாசகர்கள் உணரமுடியும். அந்தத் தேடற்பயணத்தின் பயனாக இக்கட்டுரைகளின் சாராம்சம் வாசிப்பவர்களின் நினைவில் நீண்டிருக்கும் என்பதோடு நல்லதொரு முன்னுதாரணமாகவும் இருக்கும் என்று எதிர்பார்க்கிறேன்.

 

சிங்கப்பூரை அறியாதவர்களுக்கு களிநயத்தோடு கூடிய புதிய தகவல்களையும், பல்லாண்டுகளாக இங்கேயே வாழ்பவர்களுக்கு அவர்கள் அனேகமாகப் பெயரளவில் மட்டுமே அறிந்திருக்கும் ஒரு விஷயத்தைக்குறித்துச் செறிவுள்ள தகவல்களையும் நிதானமான பார்வைகளையும் வழங்குபவை இக்கட்டுரைகள். உதாரணமாக, ‘நீறுபூத்த நட்சத்திர மாடங்கள்’ கட்டுரை, மனித வாழ்வை இருந்த தடமே தெரியாமல் துடைத்துவிடும் காலத்திடம் அதை எதிர்த்துநின்று தன் வல்லமையைக் காட்டமுனையும் மானுட குலத்தின் போராட்டத்தை  எனக்குக் காட்டியது. ஒவ்வொரு கட்டுரையும் தனித்துவமிக்கதாக இருக்கிறது என்பதைக் குறிப்பிட்டுச் சொல்ல விழைகிறேன்.

 

அளவிற்சிறியது என்றாலும் இந்நூல் சரளமான வாசிப்பின்பத்துக்கும் தீர்க்கமான சிந்தனைகளுக்கும் நாற்றங்காலாக இருக்கிறது. வாசகர் செலவழிக்கும் நேரத்துக்கு மிகுந்த பயனைத்தருகிறது என்ற அடிப்படையில் வாசித்துப்பார்த்து இலாபமடைய பரிந்துரைக்கிறேன்.