எம்.கே.குமார் புனைவுகளை வாசிப்பது என்றாலே எனக்கொரு இனம்புரியாத உற்சாகம் அவரது ‘நல்லிணக்கம்’ சிறுகதையை 2015ல் வாசித்ததிலிருந்தே இருந்துவருகிறது. 2017ல் வெளியான அவரது 5:12PM சிறுகதைத் தொகுப்பிற்கு நான் எழுதிய பின்னுரையில், சிங்கைத் தமிழிலக்கியம் பொதுவாகத் தவிர்த்துவிடும் சில விஷயங்களைத் தொடர்ந்து பேசும் எம்.கே.குமாரின் கதைகள் ஒரு குறிப்பிடத்தக்க முன்னகர்வு என்று குறிப்பிட்டிருந்தேன். ‘ஓந்தி’ தொகுப்பும் தொடர்ந்து அம்முன்னெடுப்பைக் கூர்மைப்படுத்தும் வகையில் வெளிவந்திருப்பது மகிழ்ச்சிக்குரியது.

எம்.கே.குமாரின் மருதம், 5:12PM, ஓந்தி ஆகிய மூன்று புனைவுத் தொகுப்புகளையும் ஒருசேர ஆராய்ந்து பார்க்கும்போது இவருடைய புனைவுகளை நுட்பத்திற்கும் அப்பட்டத்திற்குமான ஊடாட்டம் என்று சாராம்சமாக வரையறுக்கிறேன். காமம் நுட்பமானது, மரணம் அப்பட்டமானது. அறம் நுட்பமானது, சட்டம் அப்பட்டமானது. கவிதை நுட்பமானது, உரைநடை அப்பட்டமானது. எம்.கே.குமார் புனைவுகளனைத்தும் ஏதோவொரு வகையில் காமம்-மரணம், அறம்-சட்டம், கவிதை-உரைநடை ஆகிய நுட்ப-அப்பட்ட இருமைகளுக்குள்ளேயே தொழிற்படுகின்றன. அவ்வகையில் அந்த ஊடாட்டமானது அகம், புறம், மொழி மூன்றிலுமே நிகழ்ந்துள்ளது எனலாம்.

இத்தொகுப்பிலுள்ள ‘தொல்குடி’ கதை காமத்தின் மரணமானது மனிதனின் மரணமாகவே இருக்கும் என்று துணிகிறது. கொஞ்சம் உயிர் ஒட்டிக்கொண்டிருந்தாலும் அதில் காமம் கனன்றுகொண்டுதான் இருக்கும். ஒரு கதையை அனுபவமாக்கி அதிலிருந்து தத்துவச் சிந்தனைகளை வாசகர்க்குள் எழுப்புவது புனைவின் சிறப்பான சாத்தியக்கூறுகளுள் ஒன்று. தொல்குடி போன்ற எம்.கே.குமாரின் பல புனைவுகள் அவற்றைச் சாதித்திருக்கின்றன. அதிலும் தொல்குடி கதையில் காம-மரணப் போராட்டத்தில் சிக்குண்டிருக்கும் அப்பெரியவரின் பெயர் மோகன்தாஸ் என்று கதையின் இறுதியில் தெரியவரும்போது அப்புனைவின்மீது வரலாற்றுத் தொடர்பால் உண்டான ஓர் அசாத்திய ஒளியும் ஏறியமர்ந்துவிடுகிறது.

சிங்கப்பூர்த் தமிழ்ப் புனைவுகளின் சில கவனிக்கத்தக்க அம்சங்களை ஐந்து தலைப்புகளில் ஆய்வுக்கட்டுரைகளாக எழுதி இதுவரை வெளியிட்டிருக்கிறேன். அக்கட்டுரைகளில் சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர்கள் உட்பட சுமார் ஐம்பது எழுத்தாளர்களின் படைப்புகள் மேற்கோள் காட்டப்பட்டுள்ளன. அவற்றுள் அதிகபட்சமாக ஆறு முறை குறிப்பிடப்பட்டிருந்தவர் எம்.கே.குமார். ‘ருசி’ சிறுகதை ‘தி சிராங்கூன் டைம்ஸ்’ இதழில் ஜனவரி 2018ல் வெளியானபோது அப்புனைவில் கதாம்சம் குறைவு, வலிந்து சிங்கப்பூர் கதையாக ஆக்கப்பட்டுள்ளது, மொழியின் இயல்பு நவீனத்தைக் காட்டுவதற்காக மீறப்பட்டுள்ளது என்று விவாதங்கள் எழுந்தன. அவற்றை நிராகரித்து அவ்விமர்சனங்களில் அதிக பொருளில்லை என்று நிறுவி விரிவான காரணங்களுடன் ஒரு கட்டுரையை அப்போது நான் எழுதினேன்.

இதையெல்லாம் இங்கு குறிப்பிடுவதற்குக் காரணம் ஒரு படைப்பாளியின் முனைப்பும் முக்கியமான பங்களிப்பும் சரியானமுறையில் கண்டுகொள்ளப்படவேண்டுமே என்கிற படபடப்பில்தான். 5:12PM தொகுப்பிற்கு 2018ல் சிங்கப்பூர் இலக்கியப் பரிசு வழங்கப்பட்டது ஒரு நல்ல தொடக்கம். ‘ஓந்தி’ தொகுப்பும் தமிழ் இலக்கிய ஆர்வலர்களின் கவனத்தையும் மதிப்பையும் பெறுமென்று உள்ளபடியே நம்புகிறேன்.

சிறுகதைக்குள்ளே பெரிதினும் பெரிது கேட்ட எம்.கே.குமாரின் நுட்பமான இலக்கியப் பயணம் சற்று நீண்டு இத்தொகுப்பின் வழியாகக் குறுநாவல்வரை வந்துள்ளது. அடுத்தது முழுநாவலாக இருக்கவேண்டும் என்று அப்பட்டமாகவே வாழ்த்துகிறேன்!

சிவானந்தம் நீலகண்டன்
03.08.2019