ஹேமா எனக்குப் புனைவெழுத்தாளராகத்தான் அறிமுகமானார். அவரது ‘அவளுக்கென்று ஒரு தினம்’ சிறுகதை அன்றாடம் மற்றவர்களுக்காகவே வாழ்ந்து கடக்கும் ஒரு குடும்பத்தலைவியின் உண்மையான உணர்வுகளை ஆர்ப்பாட்டமின்றி வெளிப்படுத்தியிருந்ததால் மனதில் ஆழமாகச் சென்றமர்ந்தது. பிறகு அவருடைய ‘வலை’ குறுநாவலை ‘சிங்கப்பூர்க் குறுநாவல்கள் தொகுப்பு’ என்ற நூலில் வாசித்தேன். மிகவும் புத்திசாலி மாணவியாக இருந்தும் ஒரு பதின்மவயதுப்பெண் எவ்வாறு சூழ்நிலைக் கைதியாகிக் கழிவிரக்கமும் ஆதங்கமும் மேவித் தற்கொலையை நோக்கி உந்தப்படுகிறாள் என்கிற உளவியல் அப்படைப்பில் மிகவும் துல்லியமாகப் பதிவாகியிருந்தது. இந்த நிலையில் அவரது முதல் நூல் ஒரு வரலாற்று நூலாக வெளிவருகிறது என்றறிந்தபோது எனக்கு ஆச்சரியம்தான்.

vaazhaimara nottu cover design

மார்ச் 2018 ‘தி சிராங்கூன் டைம்ஸ்’ மாத இதழில் ‘இரைச்சல்’ என்ற சிறுகதையை ஹேமா எழுதியிருந்தார். அக்கதையின் ஜென்னி கதாபாத்திரம் தன்னுடன் உறவாடும் ஒரு மாயக்குரலுடன் சிங்கப்பூரில் ஜப்பானியர் ஆக்கிரமிப்பின்போது நடந்த வரலாற்றுச் சம்பவங்களை அசைபோடுவதாக அக்கதை அமைந்திருந்தது. முழுமையான சமூகக் களங்கள் சார்ந்த புனைவுகளிலிருந்து வரலாறு நோக்கி அவரது பார்வை திரும்பி ‘வாழை மர நோட்டு’க்கான விதை விழுந்தது அக்காலகட்டத்தில்தான் என்று ஊகிக்கிறேன். சிங்கப்பூரில் இரண்டாம் உலகப்போர் தொடர்பான நினைவிடங்களை அவர் நேரிற்சென்று பார்ப்பதையும் ஒளிப்படங்கள் பதிவுசெய்வதையும் நட்பூடகங்களின் வழியாக அறிந்தபோது வரலாறு அவரை ஆட்கொள்ளத்தொடங்கிவிட்டது புரிந்தது.

ஒரு புனைவெழுத்தாளர் ‘இரைச்சல்’ போன்ற வரலாறு சார்ந்த புனைவு எழுதப்புகுவதில் சிக்கலொன்றுமில்லை. ஆனால் முழுக்கமுழுக்க ஆதாரங்களை மட்டுமே அடிப்படையாக் கொண்டு, அதற்குட்பட்ட ஊகங்களை மட்டுமே வெளியிட அனுமதிக்கும் நேரடியான வரலாறு எழுதுவதென்பது கரணம் தப்பினால் மரணம்தான். வரலாற்றை சுவாரஸ்யமாகக் கதைத்தன்மையுடன் சொல்லக்கூடிய திறனும் மொழியும் ஆய்வாளர்களைத்தாண்டி பொதுவாசகர்களை வரலாற்றுக்குள் வசீகரிக்க உதவும் அதேநேரத்தில் சற்றுக்கூட்டிக்குறைப்பது, உண்மைகளை ஒட்டி சம்பவங்களை நெகிழ்த்திக்கொள்வது போன்ற பழக்கதோஷப் புனைவுச்சடங்குகள் வரலாற்றெழுத்தை கேலிக்குரியதாக்கிவிடக்கூடும் அபாயமுமுண்டு. அந்த விஷயத்தைப் பொறுத்தவரை ஹேமா இரட்டைக்குதிரை சவாரிசெய்யும் திறமையுள்ளவராக இருக்கிறார் என்பதை ‘வாழை மர நோட்டு’ உறுதிசெய்கிறது.

பேராசிரியர் தான் தோய் யோங், வரலாற்றை உணர்தல் என்பது தனிமனித அளவிலும் ஒரு சமூகமாகவும் வரலாற்றைப் பொருளுள்ளதாக மாற்றிக்கொள்வது என்கிறார். ‘வாழை மர நோட்டு’ வாசகர்களுக்கு உதவியுள்ளது அத்தளத்தில்தான் என்பது என் கருத்து. எங்கோ யாருக்கோ எப்போதோ நடந்தது என்ற தொடர்பறுந்த இடத்திலிருந்து வரலாற்றை மீட்டு வாசகரைத் தன்னைத்தானே இருளும் ஒளியுமாக மாறிமாறி வரலாற்றின் பக்கங்களில் பயணம் செய்யவைத்து வரலாற்றைப் பொருள்பொதிந்ததாக ஆக்கித்தந்திருக்கிறார். வரலாற்றில் வாழ்தல் ஒன்றே வரலாற்றைப் புரிந்துகொள்ளும் வழி என்ற புள்ளியிலிருந்து விலகாமல் ஜப்பானின் எழுச்சியையும் வீழ்ச்சியையும் எழுதியிருக்கிறார்.

சிங்கப்பூரில் ஜப்பானியர் ஆக்கிரமிப்பை ஹேமா ‘தி சிராங்கூன் டைம்ஸ்’ இதழில் தொடராக எழுதிக்கொண்டிருந்த காலகட்டத்தில் ஒருமுறை நான் ஆய்வாளர் பாலபாஸ்கரனைச் சந்திக்கச் சென்றிருந்தேன். அவர் ஹேமாவின் அக்கட்டுரைகளில் ஒன்றைத் தனியாக எடுத்து பத்திரப்படுத்தி வைத்திருப்பதைக் கண்டேன். ஆய்வாளர்களின் கண்கள் கூர்மையானவை. பொருட்படுத்தும்படியான எதையும் அவர்கள் தவறவிடுவதில்லை. அந்தவகையில் அக்கட்டுரைகள் மேலும் தகவல்கள் சேர்க்கப்பட்டு, செம்மை செய்து, படங்களுடன் சிறப்பான வரலாற்று நூலாக வந்திருப்பதில் ஒரு வாசகனாக மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.

வரலாற்றை மீண்டும் மீண்டும் சொல்லவேண்டிய தேவை எப்போதும் எல்லாச் சமூகங்களுக்குமே இருந்திருக்கிறது, இருக்கிறது. அத்தேவையை நிறைவேற்றுவதற்கு எல்லாக் காலத்திலும் சிலர் எழுந்துவந்தபடியே இருக்கின்றனர். காலத்தை அணுவணுவாக ஆராயும் அத்தொடரோட்டத்தில் ஹேமா துணிந்து பங்குபெற்றிருப்பது பாராட்டத்தக்கது. அவரது வரலாற்றுத் தேடலும் எழுத்துப்  பயணமும் மேன்மேலும் நீண்டு செறிவுற வாழ்த்துகிறேன்!

சிங்கப்பூர்                                                                                              சிவானந்தம் நீலகண்டன்
06.09.2019