சிங்கப்பூரரான நெடுமாறன் நமசிவாயம் ஓர் ஆய்வாளர், எழுத்தாளர், இராணுவ வரலாற்றாளர், முன்னாள் போர் அருங்காட்சியகக் காப்பாளர். இராஃபிள்ஸ் மாணவர். இங்கிலாந்தின் பிரிஸ்டல் பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்றவர். போர்களைக் குறித்த நூல்களை வாசிப்பது, போரில் பங்கேற்றவர்களிடம் நேர்காணல் செய்வது, இராணுவம் சார்ந்த கருவிகள், உடைகள், ஆயுதங்களின் மாதிரிகள் உருவாக்குவது என்று சிறுவயதிலிருந்தே வளர்ந்த இவரது ஆர்வம் ஒருகட்டத்தில் ஆவேசமாகவே மாறியது.

nedu-2

நெடுமாறன் நமசிவாயம்

சட்டத் தொழிலை மேற்கொள்ளாமல், 2000-ஆம் ஆண்டில் போர் அருங்காட்சியகத்தின் (The Battle Box at Fort Canning Hill) காப்பாளராக ஆனார். பிறகு, 2008-லிருந்து தனித்துவம் வாய்ந்த ஆய்வுத் திட்டங்களிலும் நூல் வெளியீடுகளிலும் ஈடுபட்டு வருகிறார். ‘தி சிராங்கூன் டைம்ஸ்’ இதழுக்காக அவருடைய நேர்காணல் இங்கே.

சிங்கப்பூரிலும் தென்கிழக்காசியாவிலும் சிப்பாய்களின் வரலாற்றை ஆராய்ந்து நூலாக வெளியிடவேண்டும் என்ற எண்ணம் எவ்வாறு உருவானது?

என்னுடைய தந்தை திரு.நமசிவாயம் முக்கியக் காரணம். மலாயாவை ஜப்பானியர் ஆக்கிரமித்தபோது அவருக்கு வயது 15. மரண ரயில்பாதை என்று அழைக்கப்படும் பர்மா-சயாம் ரயில்பாதைத் திட்டத்தில் அவர் ஜப்பானியரால் வலுக்கட்டாயமாக மொழிபெயர்ப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டவர். நேதாஜியை அருகிருந்து கண்டவர். ஜப்பானியர் 1945-இல் சரணடைந்தபோது பிரிட்டிஷ் சிப்பாய்கள் மீண்டும் மலாயாவுக்குள் வெற்றிக்களிப்புடன் நுழைந்ததைக் கண்டவர். போரைக் குறித்தும் சிப்பாய்களைக் குறித்தும் எப்போதும் பேசிக்கொண்டே இருந்தவர். நான் இளவயதில் அவற்றால் மிகவும் கவரப்பட்டேன்.

இளைய தலைமுறைக்கும் சரி, 90-களின் பிற்பகுதியிலிருந்து அதிக அளவில் சிங்கப்பூரில் குடியேறியவர்களுக்கும் சரி, சிப்பாய்களைக் குறித்த நேரடி அனுபவமோ அல்லது நேரில் கண்டவர்களிடமிருந்து கேட்கும் அனுபவமோ இருக்காது. இந்தியாவிலும் இங்கிலாந்திலும் சிப்பாய்கள் குறித்த புத்தகங்கள் வெளியிடப்பட்டுள்ளன என்றாலும் அவை தென்கிழக்காசிய வட்டாரத்தை அதிகம் பொருட்படுத்தவில்லை. அதிகபட்சமாக நேதாஜி, அவரது இந்திய தேசிய இராணுவம் என்பதோடு முடித்துக்கொண்டுவிட்டனர். 

பேரரசின் துருப்புகள், பிரிட்டிஷ் படைகள், காலனியப் படைகள் போன்ற பொதுவான பெயர் சூட்டல்களால், வரலாற்றையே மாற்றியமைத்த போர்களில், முன்னணியில் இருந்தும் சிப்பாய்கள் முகமிழந்து போனார்கள். அவர்களைக் குறித்த தகவல்களைத் திரட்டியபோது, சிப்பாய்கள் என்றாலே சீக்கியர், கூர்க்கா, பிற வட இந்தியர் என்ற பொதுப்புத்தி எண்ணம் தவறானது என்று விளங்கியது. தமிழரும் பிற தென்னிந்தியரும் பிரிட்டிஷ் மலாயாவில் 150 ஆண்டுகளாகப் பங்களித்துள்ளனர். மலாயாவில் தமிழர் பங்களிப்பு என்றாலே தோட்டத் தொழிலாளர் மட்டுமே என்பதுபோல மீண்டும் மீண்டும் நினைவுகூறப்படுகிறது. 

இவையெல்லாம்தான் சிப்பாய்களின் வரலாற்றை நானே தேடி, ஆராய்ந்து, தொகுத்து வெளியிட உந்தின.

தங்கள் The Forgotten Sentinels: The Sepoys of Malaya, Singapore & South-East Asia (The Founding Years: 18th to early 20th Centuries) நூலின் உருவாக்கம், உள்ளடக்கம் குறித்துக் கூறுங்கள்.

போர் அருங்காட்சியகக் காப்பாளர் வேலையை 2008-இல் விட்டபின், நான் இவ்வட்டாரத்தில் சிப்பாய்கள் பங்களிப்பு குறித்துத் தேடிச்சேமித்திருந்த பல்வேறு தரவுகளின் அடிப்படையில் ஒரு புத்தகம் எழுதலாம் என்று முடிவுசெய்தேன். எழுதத் தொடங்கியபோது, ‘இரண்டாம் உலகப்போர்க்கால பிரிட்டிஷ் மலாயாவில் சிப்பாய்கள்’ என்று எழுதத்தான் திட்டமிட்டேன். அதற்குள் போவதற்குமுன் ஓர் ‘அறிமுகம்’ எழுதலாம் என்று இவ்வட்டாரத்தின் பழைய இராணுவ வரலாற்றைத் தேடியலைந்தேன்.

இந்தியா, இங்கிலாந்து, மலேசியா, சிங்கப்பூர் நாடுகளின் ஆவணக் காப்பகங்களில் உள்ள தரவுகளை நான் சேர்க்கச் சேர்க்க, சிப்பாய்களின் வரலாற்றை 18-ஆம் நூற்றாண்டிலிருந்து தொடங்கினால்தான் அவர்களின் கதை முழுமையாக அமையும் என்பது தெளிவாக விளங்கியது. எட்டாண்டுகள் தொடர்ந்த அந்த ஆய்வில் குறிப்புகள் வளர்ந்துகொண்டே போயின. ஒருகட்டத்தில் ‘அறிமுக’மே ஒரு புத்தகமாக உருக்கொண்டுவிட்டது. இரண்டாம் உலகப் போர்க்காலச் சிப்பாய்களை இன்னொரு புத்தகமாகத்தான் எழுதவேண்டும்.

Nedu4

பிரிட்டிஷ் இராணுவத்தின் முன்னாள் தலைவர், ஃபீல்ட் மார்ஷல் சர் ஜான் சேப்ல் (Sir John Chapple (1931-2022) தலைமையிலான ஆய்வுக்குழு என் புத்தகத்திலுள்ள தரவுகளைச் சரிபார்த்தது, உள்ளடக்கத்தைச் செம்மைப்படுத்தியது. மலாயாவிலும் சிங்கப்பூரிலும் 1950களில் போரிட்டவர் சர் ஜான் சேப்ல். அவரே என் நூலுக்கு முன்னுரை எழுதினார். பிறகு 2018-இல் The Arts House-இல் என் நூல் வெளியிடப்பட்டது. 

Nedu3

சிங்கப்பூருக்கான இந்தியத் தூதர் ஜாவித் அஷ்ரஃப் நூலை வெளியிடுகிறார் (2018)

இன்று ‘ஆர்ட்ஸ் ஹவுஸ்’ இருக்கும் அதே இடத்தில்தான் சர் ஸ்டாம்ஃபோர்டு இராஃபிள்ஸ் முதல் சிப்பாயுடன் சென்று, உள்ளூர்த் தலைவரிடம் சிங்கப்பூரை பிரிட்டிஷ் வர்த்தகத் தளமாக ஆக்கப் பேச்சுவார்த்தை நடத்தினார். அந்தவகையில் ஆகப் பொருத்தமான இடத்தில் என் நூல் வெளியிடப்பட்டதில் மிக்க மகிழ்ச்சியடைந்தேன்.

தென்கிழக்காசியாவுக்கு வருவதற்கு முன்பே இந்தியாவில் பல பத்தாண்டுகளாக பிரிட்டிஷார் சிப்பாய்களைக் கடும் பயிற்சியளித்து உருவாக்கியதாகத் தங்கள் நூலில் குறிப்பிடுகிறீர்கள். இவ்விஷயத்தில் பிரிட்டிஷார்க்கு முன்னரே இந்தியாவில் படைசேர்த்த பிற ஐரோப்பியர் (போர்த்துக்கீசியர், டச்சுக்காரர், பிரெஞ்சுக்காரர்) பங்கு என்ன?

இந்தியாவிற்குள் 16-ஆம் நூற்றாண்டில் வந்த போர்த்துக்கீசியரும் டச்சுக்காரரும் தம்முடன் ஐரோப்பியப் போர்வீரர்களைக் கொணர்ந்தனர். உள்ளூர்க்காரர்களை உதவிக்குச் சேர்த்துக்கொண்டனர். உள்ளூர் உதவியாளர்களுக்கு ஐரோப்பிய பாணி உடையோ, பயிற்சியோ கிடையாது. அவர்கள் போரில் ஈடுபட்டபோதும்கூட இந்திய பாணி உடை, ஆயுதங்களுடனேயே கலந்துகொண்டனர். 

இந்திய வீரர்கள் அப்போது வருமானத்திற்காகச் சேர்ந்தார்களே ஒழிய ஐரோப்பியர்களிடம் விசுவாசமோ, தன் வேலையில் பெருமிதமோ அவர்களுக்கு இருக்கவில்லை. ஆகவே ஒழுங்கு, கட்டுப்பாட்டுப் பிரச்சனைகள் இருந்தன. மலாக்காவை 1511-இல் போர்த்துக்கீசியர் கைப்பற்றியபோது அவர்களுடன் மலபார் போர்வீரர்கள் இணைந்து போரிட்டதற்கான ஆவணங்கள் உள்ளன. அவர்களும் ஒரு துணைப்படைபோலத் தமது மரபான ஆயுதங்கள், போர்முறைகள் என்றுதான் செயல்பட்டனர். 

ஆனால் பிரெஞ்சு ஆளுகையின்கீழ் இருந்த பாண்டிச்சேரியை 1693-இல் டச்சுக்காரர் பெரும்படையுடன் தாக்கியபோது, வெறும் 400 பயிற்சிபெற்ற இந்திய வீரர்கள் 2 வார காலம் தாக்குப்பிடித்துப் பிறகு சரணடைந்தனர். அது ஒரு வெற்றிகரமான தோல்வி. அப்போதிலிருந்து இந்தியர்களை அதிக அளவில் சேர்த்து, ஆயுதப் பயிற்சி அளித்து, போர்ப்படை உருவாக்குவதை பிரெஞ்சுக்காரர் பெருமளவில் தொடங்கினர். ஐரோப்பியரால் பயிற்றுவிக்கப்பட்ட இந்தியர்களுக்கு ‘சிப்பாய்கள்’ என்ற பெயரையும் இட்டனர். ஆகவே பிரெஞ்சுக்காரரே சிப்பாய் மரபைத் தோற்றுவித்தவர்கள். 

இந்தியச் சிப்பாய்களைக்கொண்டு இவர்கள் ஆங்கிலேயரின் ஐரோப்பிய வீரர்களை 1746-இல் தோற்கடித்து மெட்ராசின் புனித ஜார்ஜ் கோட்டையைக் கைப்பற்றினர். அதைப்பார்த்த பிரிட்டிஷார் அடுத்த இரண்டே ஆண்டுகளில் இந்தியரைச் சேர்த்துப் பயிற்சியளித்து ‘மெட்ராஸ் மாகாண இராணுவ’த்தையே உருவாக்கிவிட்டனர்.

 

இந்தியாவில், 18-ஆம் நூற்றாண்டில், பிரிட்டிஷார் உருவாக்கிய சிப்பாய்களும் ஏற்கனவே அங்கு இந்திய அரசர்கள் உருவாக்கி வைத்திருந்த படைவீரர்களும் அடிப்படையில் எவ்வாறு வேறுபட்டிருந்தனர்?

வட, தென் இந்திய அரசர்கள் உருவாக்கியிருந்த படைகளில் சில பொதுத்தன்மைகளைக் காணமுடிகிறது. படைவீரர்கள் பொதுவாக ஓர் அரசருக்கோ, நவாபுக்கோ அவர்களது குடும்பத்தினருக்கோ விசுவாசமாக இருந்தனர். ஆகவே தலைமை மாறிவிட்டால் இன்னொருவருக்குத் தங்கள் விசுவாசத்தை மாற்றிக்கொள்வது அவர்களுக்கு மிகவும் கடினம். 

மேலும், போர்க்காலங்களில் ஒன்றுதிரள்வது, அமைதிக்காலங்களில் பிற தொழில்களில் ஈடுபடுவது என்பதே பெரும்பாலான படைவீரர்களின் நிலை. போர்ச் சாதிகள், பரம்பரையாகப் போரிடுபவர்கள் போன்ற குறிப்பிட்ட பிரிவினர் இதற்கு விதிவிலக்கு. இவர்கள் எண்ணிக்கையிலும் குறைவு. நவீனப் போர்முறை விரிவடைய அது சாதிகளையும் குறுங்குழுக்களையும் தாண்டிச் செயல்படவேண்டி இருந்தது.

பிரிட்டிஷாருடையது நிரந்தர இராணுவம். போர் நடந்தாலும் நடக்காவிட்டாலும் போர்ப்பயிற்சி நடந்துகொண்டே இருக்கும். தலைமை மாறினாலும் விசுவாசம் மாறாது. ஏனெனில் சிப்பாய்கள் தம் ‘ரெஜிமெண்ட்’டைக் குடும்பத்தைப் போலக் கருதினர். வீரர்களின் திறனும் தொடர்ந்து மெருகேறவும் வெளிப்படவும் முடிந்தது. விவசாயிகள் உட்பட எவரும் பிரிட்டிஷ் படையில் சேர்ந்து நிரந்தர வருமானமும் தம் வேலையைக் குறித்த பெருமிதத்தையும் அடையமுடிந்தது.

Nedu8-மெட்ராஸ் இராணுவ சிப்பாய்கள் 18-ஆம் நூற்றாண்டில். சப்பாத்து இல்லாமலும் வெறுங்காலுடனும் ஆனால் பிரிட்டிஷ் படையின் அடையாளமான சிவப்பு மேலாடையுடன்

மெட்ராஸ் இராணுவச் சிப்பாய்கள் (18-ஆம் நூற்றாண்டு) சப்பாத்து இல்லாமலும் வெறுங்காலுடனும் பிரிட்டிஷ் படையின் அடையாளமான சிவப்பு மேலாடையுடன்

மெட்ராஸ் இராணுவத்தில் அனைத்து சாதி, மதப்பிரிவைச் சேர்ந்தவர்களும் இருந்தனர். அவர்களுடைய சாதி ரெஜிமெண்ட்தான். சிப்பாய்க் கலகத்திற்கு (1857) முன் நிலைமை சற்று வேறாக இருந்திருக்கலாம். இன்றைய பிஹார், உத்தரப்பிரதேசப் பகுதிகளிலிருந்து அப்போது ‘பூமிஹார்’என்று அழைக்கப்பட்ட ‘இராணுவ பிராமணர்’ அதிக அளவில் இருந்தனர். வைதீகமானவர்கள் என்றாலும் போரில் ஈடுபடுவதைப் பெருமையாகக் கருதியவர்கள். தென்னிந்திய பிராமணர்களிடையே இத்தன்மை காணப்படவில்லை.

ராஜபுத்திரர், சீக்கியர், கூர்க்கா போன்ற தம்மைப் போரிடும் இனமாக அடையாளம் கொள்வபர்களுக்குத் தனித்தனி ரெஜிமெண்ட்களை உருவாக்க பிரிட்டிஷார் அனுமதித்தனர். அனைத்து வகுப்பினரும் ஒன்று கலந்து உருவாகும் பெரிய ரெஜிமெண்ட்களும் இருந்தன. அங்கு அனைவரும் சமம். 

‘பஞ்சாப் சிங்கம்’ என்று அழைக்கப்பட்ட ரஞ்சித் சிங் (1770-1839) போன்ற அரிய விதிவிலக்கைத் தவிர்த்து, அத்தகைய சமத்துவம் இந்திய அரசர்கள் உருவாக்கிய படைகளிடையே இல்லை. பிரிட்டிஷ் இராணுவத்தில் மொழி, மத அடிப்படையிலான பிரிவுகள் (battalions) இருந்தன. அவை தொடர்பு வசதிக்காகவும் அவரவர் உணவு, வழிபாடு வசதிகளுக்காகவுமே தவிர உயர்வு தாழ்வு அடிப்படையில் அமைந்திருக்கவில்லை. 

 

இந்தியாவின் வங்காள, மெட்ராஸ் மாகாணங்களிலிருந்து தென்கிழக்காசியாவுக்குச் சிப்பாய்கள் வந்ததாகத் தங்கள் நூலிலிருந்து அறியமுடிகிறது. பம்பாய் மாகாணம் விடுபட்டதற்குக் காரணங்கள் உள்ளனவா?

பல காரணங்கள் உள்ளன. பம்பாய் இராணுவத்தைத் தென்கிழக்காசியாவிற்குக் கொண்டுவருவது, புவியமைப்பு ரீதியில் ஒப்பீட்டளவில் அதிக செலவும் நேரமும் பிடிக்கும் கடினமான காரியம். அதை பிரிட்டிஷார் விரும்பாதது விளங்கிக்கொள்ளக் கூடியதே.

அடுத்ததாக, சிங்கப்பூரும் நீரிணைக் குடியிருப்புகளும் (Straits Settlements) நேரடியாகவோ மறைமுகமாகவோ வங்காள மாகாண ஆளுகையின் கீழேதான் இருந்தன. பினாங்கைக் கேப்டன் ஃபிரான்சிஸ் லைட் 1786-இல் நிறுவியபோதும் சரி, சிங்கப்பூருக்கு இராஃபிள்ஸ் 1819-இல் அடித்தளமிட்டபோதும் சரி, கல்கத்தாவிலிருந்துதான் உத்தரவுகள் வந்தன. மேலும் 1830-1867 காலகட்டத்தில் நீரிணைக் குடியிருப்புகள் நேரடியாகவே வங்காள மாகாண ஆளுகையின் கீழ் வந்தன.

மூன்றாவதாக, மெட்ராஸ், வங்காள மாகாண இராணுவப் படைகள் பம்பாய் மாகாணப் படைகளைக் காட்டிலும் அதிகப் போர் அனுபவம் வாய்ந்தவர்கள். ஹைதர் அலி, திப்பு சுல்தான், சீக்கியப் படைகள், சீனாவில் இரண்டு ‘ஓபியம்’ போர்கள் என்று மெட்ராஸ், வங்காள இராணுவ அதிகாரிகளுக்குக் கணிசமான போர் அனுபவமும் வெளிநாடு சென்று போரிட்ட அனுபவமும் இருந்தன. இறுதியாக, பிரிட்டிஷ் மலாயா ஏற்கெனவே தென்னிந்திய மக்கள் கணிசமாக இருந்த பகுதி என்பதால் இராணுவ-பொதுமக்கள் ஊடாட்டங்களும் சிக்கலின்றி நிகழ்ந்தன. 

இவற்றால்தான் 18, 19-ஆம் நூற்றாண்டுகளில் பம்பாய் மாகாண இராணுவத்தைத் தவிர்த்து மெட்ராஸ், வங்காள இராணுவங்கள் இவ்வட்டாரத்திற்கு வந்தன.

சிங்கப்பூரை பிரிட்டிஷ் வணிகத்தளமாக ஆக்கும் ஒப்பந்தம் கையெழுத்தான (1819 ஜனவரி 29) வரலாற்றுத் தருணத்தில் இராஃபிள்ஸ், ஃபார்க்குவார் இருவருடனும் மூன்றாமவராகச் சென்ற இந்தியச் சிப்பாயின் பெயர் என்ன? அவரைக் குறித்து வேறென்ன தகவல்கள் கிடைக்கின்றன?

அந்த இந்தியச் சிப்பாயின் பெயரோ அடையாளமோ எவருக்கும் இதுவரை தெரியாது. நமக்குத் தெரிந்ததெல்லாம் அச்சிப்பாய் வங்காள இராணுவத்தின் காலாட்படையைச் (Bengal Native Infantry) சேர்ந்தவர் என்பதுதான். அதற்கான ஒரே ஆதாரம் அன்று 15 வயதுப் பையான இருந்த வா ஹகீம் என்பவர் தன் வயதான காலத்தில் அளித்த வாய்மொழி வாக்குமூலம் மட்டுமே. 

Nedu14

இராஃபிள்ஸ், ஃபார்க்குவாருடன் செல்லும் சிப்பாய் (சித்தரிப்பு: நெடுமாறன் நமசிவாயம்)

என்னுடைய நூலில் விரிவாக அந்தச் சிப்பாய் யாராக இருக்கலாம் என்பதைக் குறித்த சாத்தியங்கள், அனுமானங்கள், ஊகங்கள் அனைத்தையும் ‘அந்த முகமற்ற இராஃபிள்ஸ் சிப்பாய்’ என்ற தலைப்பிலான அத்தியாயத்தில் விரிவாக விவாதித்திருக்கிறேன். உண்மை என்னவென்றால், உண்மையில் அந்தச் சிப்பாய் யார் என்பதை நாம் அறிந்துகொள்ள முடியாமலே போய்விடலாம்.

சிங்கப்பூர் சிப்பாய்க் கலகம் (1915) போன்ற ஒருசில அரிதான நிகழ்வுகளைத் தவிர்த்து பொதுவாக இந்தியச் சிப்பாய்கள் பிரிட்டிஷ் ஆட்சிக்கு விசுவாசத்துடனேயே நடந்துகொண்டார்கள் எனலாமா? அதனால்தான் சமகால, தேசிய உணர்வுள்ள வரலாறு அவர்களை மறக்க விரும்புகிறதா?

உண்மைதான். இருநூறு ஆண்டுகளுக்கும் மேலாக பிரிட்டிஷ் பேரரசுக்கு வேலைசெய்த சிப்பாய்கள் பொதுவாகத் தம் வேலையைக் கண்ணியமானதும் கௌரவமானதுமாகத்தான் கருதினர், 

சிங்கப்பூர்ச் சிப்பாய்க் கலகத்திற்கு சிறப்புக் காரணங்கள் இருந்தன. ஒரேயொரு ரெஜிமெண்டில் ஏற்பட்ட கலகம் அது. அதில் முஸ்லிம்கள் அதிகம். துருக்கியப் பேரரசுடன் போரிடத் தம்மைக் கொண்டுபோகின்றனர் என்றும் முஸ்லிம்களுக்கிடையே பகைமையை வளர்க்கிறார்கள் என்றும் அவர்கள் நம்பியதால் உண்டான கலகம். சீக்கியர் ‘கண்டின்ஜெண்ட்’ அக்கலகத்தை அடக்கியது. பல புத்தகங்களும் ஆவணப்படங்களும் இக்கலகத்தைக் குறித்து வெளியிடப்பட்டுள்ளன. 

அவ்வளவு ஏன்? இந்தியாவின் முதல் சுதந்திரப்போர் என்று தற்போது அழைக்கப்படும் 1857-ஆம் ஆண்டு சிப்பாய்க் கலகமே வங்காள மாகாண இராணுவத்தை மட்டுமே பாதித்தது என்பதை நினைவிற்கொள்ளவேண்டும். கலகத்தின்போது பம்பாய், மெட்ராஸ் மாகாண இராணுவங்கள் வழக்கம்போலச் செயல்பட்டுக்கொண்டிருந்தன. இந்தியா முழுவதிலிருந்தும் இலட்சக்கணக்கான சிப்பாய்கள் 200 ஆண்டுகளுக்கும் மேலாக பிரிட்டிஷாருக்கு விசுவாசமாகப் பணிபுரிந்தனர் என்பது தற்காலத்தில் நின்றுகொண்டு பார்க்கும்போது அவமானகரமானதாகத் தோன்றலாம். அதற்காக உண்மையை என்ன செய்வது?

சிப்பாய்களை பிரிட்டிஷார் நல்லபடியாக நடத்தினர் என்பதே நம் கண்முன் உள்ள வரலாறு. ஊதியத்திற்காக ஒருவர் ஒரு நிறுவனத்தில் வேலைசெய்யலாம். ஆனால் சண்டையிடுவதற்கும் சாவதற்கும்கூடத் துணிந்து ஒரு வேலைக்குச் செல்வது என்றால் அது ஆழமாக, உணர்வுபூர்வமாகப் பிணைந்த ஒன்றுக்காகத்தானே இருக்கமுடியும்? அதை இன்றைய தேசப்பற்றுமிக்கப் பார்வைகளால் பார்ப்பதும் எடைபோடுவதும் சரியல்ல.

போர்களில் ஈடுபடும் சிப்பாய்களாகவும் உள்நாட்டுப் பாதுகாப்பில் ஈடுபடும் காவலர்களாகவும் சீக்கிய, கூர்க்காப் படையினர் தனிச்சிறப்புடன் குறிப்பிடப்படுவதற்கான காரணம் என்ன? 

ஆங்கில-கூர்க்கா போரின்போதே (1814-16) நேபாள மலைவாழ் மக்களான கூர்க்காக்கள் உருவத்தில் சிறியவர்களாக இருப்பினும் போர்த்திறமும் இறுதிவரை சரணடையாத மனத்திறமும் கொண்டுள்ளதை பிரிட்டிஷார் கண்டு ஆச்சரியமும் அதிர்ச்சியும் அடைந்தனர். பெரிய அளவிலான படைகளை மும்முறை அனுப்பி மூன்றாம் முறைதான் கூர்க்காக்களை வெற்றிகொள்ள முடிந்தது. பழைய போர்முறை, கத்தி, துப்பாக்கிகளை வைத்துக்கொண்டு கூர்க்காக்கள் தளராமல் போரிட்டு பிரிட்டிஷாரைக் கவர்ந்தனர். 

ஐரோப்பியரிடம் ‘ஷிவல்ரி’ (chivalry) என்று அழைக்கப்பட்ட ஒரு பழைய போர்ப்பண்பாடு இருந்தது. தகுதியான எதிரி என்று கருதினால் அந்த எதிரி தோற்றாலும் அவரை மதிப்புடனும் கண்ணியமாகவும் நடத்துவது. கூர்க்காக்களிடமும் அதுபோன்ற பண்பாடு இருந்தது. ஆகவே அந்தவகையில் அவர்கள் ஒருவரையொருவர் கவர்ந்தனர். மேலும் திறனாளரைத் தன் பக்கம் வைத்துக்கொள்வதில் பிரிட்டிஷார் வல்லவர்கள். அவர்களைத் தீர்க்கமான நடைமுறைவாதிகள் என்பேன். அதனால்தான் உலகின் ஆகப்பெரிய பேரரசை நூற்றாண்டுகளாகக் காப்பாற்ற முடிந்தது. பிரிட்டிஷார் வலுக்கட்டாயமாகப் போருக்கு ஆள்பிடிக்கவில்லை.

சீக்கியர்கள் உருவத்தில் கூர்க்காக்களுக்கு நேர்மாறாக உயரமான, திடகாத்திரர்களாக இருந்தனர். அதைவிடுத்து, இரண்டு ஆங்கில-சீக்கியப் போர்களில் (1845-46 & 1848-49) சீக்கியரிடமும் பிரிட்டிஷாருக்கு ‘கூர்க்கா’ அனுபவமே ஏற்பட்டது. சீக்கிய, கூர்க்கா சமூகங்கள் போர்சார்ந்த வாழ்முறையை விரும்பி ஏற்றனர். கடல்கடந்து செல்லத் தயங்கவில்லை. உணவுக் கட்டுப்பாடுகள் இல்லை. பிரிட்டிஷாரின் எதிரிகளைத் தம் எதிரிகளாகப் பாவித்தனர். ஆகவேதான் 1857 சிப்பாய்க் கலகத்தை சீக்கிய, கூர்க்காப் படையினர் அடக்கினர். கலகத்திற்குப் பிறகு இவ்விரு படையினரும் சிறப்பான அங்கீகாரங்கள் அளித்து கௌரவிக்கப்பட்டனர்.

சீக்கியர்களின் நெடிதுயர்ந்த கம்பீரமான தோற்றம் ஒரு கூடுதல் அம்சம். பினாங்கு, சிங்கப்பூர், பிறகு ஹாங்காங் என்று கிழக்கிந்தியக் கம்பெனியின் பாதுகாவலர்களாக சென்ற இடத்திலெல்லாம் உள்ளூர்ப் பொதுமக்களிடையே மதிப்பைப் பெற்றனர். இவையெல்லாம் என்னுடைய தனிப்பட்ட, உணர்ச்சிவசப்படாத வரலாற்றுப் பார்வைகள். பலருக்கும் மாற்றுக் கருத்துகள் இருக்கலாம். 

 

சிங்கப்பூர் இந்தியச் சமூக உருவாக்கத்தில் சிப்பாய்களின் பங்கு என்ன?

இந்தியச் சமூகம் என்று பார்ப்பதற்குமுன் அனைத்து இனங்களையும் உள்ளடக்கிய ஒட்டுமொத்த சிங்கப்பூர் உருவாக்கத்தில் சிப்பாய்களின் பங்கு குறிப்பிடத்தக்கது. பாதுகாப்பையும் அமைதியையும் நம்பிக்கையையும் பொதுமக்களுக்கு அளித்த பணி அவர்களுடையது. அதனால்தான் தொடர்ந்து மக்கள் இங்கே குடியேறவும் நிரந்தரமாகத் தங்கிவிடவும் விரும்பினர்.

இந்தியப் புலம்பெயர்ந்தோருக்கு 19-ஆம் நூற்றாண்டில் இவ்வட்டாரத்தில் மதிப்பைப் பெற்றுத் தந்தவர்களும் சிப்பாய்களே. ஒரு குறிப்பிட்ட, தேர்ந்தெடுக்கப்பட்ட வேலைக்காக அவர்கள் இங்கு கொண்டுவரப்பட்டனர். ரப்பர்த் தோட்டத் தொழிலாளர்கள் பிறகுதான் வந்தனர். 

பினாங்கிலும் சிங்கப்பூரிலும் முதல் இந்தியக் குடியேறிகள் ‘பசார் கண்டின்ஜெண்ட்’ (Bazaar Contingent) என்று அழைக்கப்பட்ட இராணுவத்தினருக்குத் தேவையான அன்றாட உதவிகளை அளிக்கும் குழுவினரே. அவர்களுள் துணிவெளுப்போர் (இன்றைய டோபி காட் பகுதி), சமையற்காரர், தோல், துணி தைப்போர், முடிதிருத்துவோர், வண்டிக்காரர், குதிரை பராமரிப்போர் போன்ற பலவகையினர் இருந்தனர். இசைவாணர்களும் நடனமணிகளும்கூட இருந்திருக்கலாம். 

இன்றைய சிராங்கூன் சாலை, கெப்பல் கட்டுமானத் தளத்தருகே உள்ள பழைய தஞ்சோங் பாகார் பகுதிகளுக்கு இவர்கள் பரவினர். பிறகு செம்பவாங் கப்பல்தளம் போன்ற தீவின் வடபகுதிகளிலும் குடியேறினர். இவர்கள் ஒப்பந்த அடிப்படையில் வந்ததால் பலர் குறிப்பிட்ட காலத்தில் ஊர் திரும்பினர் என்றாலும் பலர் பிரிட்டிஷாருக்கு உதவியாளர்களாக இங்கேயே தங்கினர். ஊரிலிருந்து சொந்தபந்தங்களையும் வரவழைத்தனர். 

Nedu7-பழைய சிங்கப்பூர் வரைபடத்தில் சிப்பாய்கள் குடியிருப்புப் பகுதி

பழைய சிங்கப்பூர் வரைபடத்தில் சிப்பாய்கள் குடியிருப்புப் பகுதி

இன்றைய பிஹார், உத்தரபிரதேசப் பகுதிகளிலிருந்து அன்று வந்த வங்காளச் சிப்பாய்கள் படையிலிருந்து விலகியதும் பால் உற்பத்தித் தொழிலும் கால்நடை பராமரிப்புத் தொழிலும் செய்தனர் என்பதற்கான ஆதாரம் உள்ளது. ‘தவ்கே’ என்று அழைக்கப்பட்ட சீன முதலாளிகளுக்கும் சீக்கியர்கள் பாதுகாவலர்களாக ஆயினர். 

சிப்பாய்களின் இருப்பே வழிபாட்டுத் தளங்கள் உருவாகவும் வழிவகுத்தன. பினாங்கில் 18-ஆம் நூற்றாண்டின் இறுதியில் ‘கப்பித்தான் கிளிங்’ மசூதி (Kapitan Keling Mosque) தென்னிந்திய முஸ்லிம் சிப்பாய்களின் உதவியுடன் எழுப்பப்பட்டது. சிங்கப்பூரிலும் 1820-களிலேயே ஜாமியா மஸ்ஜித் பழைய சிப்பாய்க் குடியிருப்புப் பகுதியிலேயே அமைந்தது. 

டோபி காட்டின் பழைய சிவன் கோவில் (இக்கோவில் பெருவிரைவு நிலையத்திற்காக வழிவிட்டு நகர்ந்து 1993-லிருந்து கேலாங்கில் உள்ளது) 1850களிலேயே அமைந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது. இதுவும் சிப்பாய்களின் உதவியோடுதான் நடந்திருக்கமுடியும்.

 

சிங்கப்பூரில் சிப்பாய்களின் காலம் எப்போது முடிவுக்கு வந்தது? அவர்களின் நினைவுச் சுவடுகள் தற்போது சிங்கப்பூரில் உள்ளனவா?

ஏப்ரல் 1946-இல் சிங்கப்பூரில் சிப்பாய்களின் காலம் முடிவுக்கு வந்தது. இரண்டாம் உலகப்போரில் பிரிட்டிஷார் வென்றதும் தற்காலிகமாக அமைக்கப்பட்ட இராணுவ ஆட்சி முடிவுக்கு வந்தபோது மௌண்ட்பேட்டனுடன் வந்த இந்தியச் சிப்பாய்களும் இந்தியாவிற்குத் திரும்பினர். மேலும் அடுத்த ஓராண்டில் இந்தியா சுதந்திரம் பெறவிருந்ததால் சிப்பாய்களின் தேவை இந்தியாவில் அதிகமானது. இன்னொரு கண்ணோட்டத்தில் பார்த்தால், உலகெங்கிலுமே இது சிப்பாய்களின் காலம் முடிவுக்கு வந்த நேரம் எனலாம்.

சிப்பாய்களின் நினைவுச் சுவடுகள் இந்தோனீசியா, மலேசியாவில் (Jalan Sepoy Lines என்ற பெயரில் இவ்விரு நாடுகளிலும் சாலைகள்) இருக்கின்றன ஆனால் சிங்கப்பூரில் அறவே இல்லை.

சிங்கப்பூரின் ஆகப்பழைய கோவிலான சௌத்பிரிட்ஜ் ரோடு மாரியம்மன் கோவில் (1827) சிப்பாய்களுடன் நெருங்கிய தொடர்புடையது. முதல் சுமார் எட்டாண்டுகள் (1819-27) சிங்கப்பூரிலிருந்த 25-ஆம் வங்காளக் காலாட்படை இந்தியா திரும்ப, அவ்விடத்தை நிரப்ப 17-ஆம் மெட்ராஸ் காலாட்படை 1827-இல்தான் கொண்டுவரப்பட்டது. அதே ஆண்டில் கோவில் எழுப்பப்பட்டது தற்செயலானதல்ல. 

அதைவிட, பலகாலமாக அக்கோவிலின் கோபுரங்களிலும் சுவர்களிலும் ஆளுயர சிப்பாய்ச் சிலைகள் இடம்பெற்றிருந்தன. அதற்கான ஒளிப்பட ஆதாரமே உள்ளது. என்னுடைய நூலில் ஒரு படத்தை இணைத்துள்ளேன்.

Nedu5-சிங்கப்பூரின் ஆகப்பழைய கோவிலான மாரியம்மன் கோவில் கோபுரங்களிலும் சுவர்களிலும் இருந்த ஆளுயுரச் சிப்பாய் சிலைகள்

சிங்கப்பூரின் ஆகப்பழைய கோவிலான மாரியம்மன் கோவில் கோபுரங்களிலும் சுவர்களிலும் இருந்த ஆளுயரச் சிப்பாய் சிலைகள் (1967)

துரதிருஷ்டவசமாக என்ன காரணத்தினாலோ அவை அகற்றப்பட்டுவிட்டன. இன்று அக்கோவிலில் சிப்பாய்களின் தடமோ தடயமோ அறவே இல்லை. 

Nedu6-சிப்பாய் சிலைகள் 1970களில் அகற்றப்பட்டபோது

சிப்பாய் சிலைகள் 1971-இல் அகற்றப்பட்டபோது (PC: NAS, SPH)

இன்றைய ஊட்ரம் ரோடு பொது மருத்துவமனைப் பகுதியில் சுமார் 150 ஆண்டுகள் நீடித்திருந்த Sepoy Lines District அடையாளமின்றித் தொலைந்துவிட்டது. சிப்பாய் அவென்யூ, சிப்பாய் லேன் போன்ற சாலைகளின் பெயர்கள் நீக்கப்பட்டுவிட்டன. மலாய்ப்பள்ளி ஒன்றும் (Sepoy Lines Malay School) இங்கே நீடிக்க இயலவில்லை. பினாங்கில் இன்னும் இருக்கிறது. 

சிப்பாய்கள் விட்டுச்சென்று வெகுகாலம் கழித்தும், 1959-76 காலகட்டத்தில், சிப்பாய்களை நினைவூட்டும் ஒரு நாடாளுமன்றத் தொகுதியே நம்மிடம் இருந்தது (Sepoy Lines Constituency). இன்று அது பலவாறாகப் பிரிக்கப்பட்டும் பெயர் மாற்றப்பட்டும் மறைந்துபோனது. மூத்தவர்கள் 1980-களிலும்கூட ‘சிப்பாய் லைன்ஸ்’ என்று பேச்சில் குறிப்பிடுவதைக் கேட்டிருக்கிறேன். இன்று ‘சைனா டவுன்’ என்று ஆகிவிட்டது. சைனா டவுன் முன்பே இருந்தது என்றாலும் ‘சிப்பாய் லைனுக்கு அருகில்’ என்றுதான் வழங்கப்பட்டு வந்தது. நான் சொல்வதெல்லாம் சிங்கப்பூருக்குப் புதியவர்களுக்கும் இளையோருக்கும் நம்பவே கடினமானதாக இருக்கலாம்.

உண்மைத் தகவல்களின் அடிப்படையிலான உங்களுடைய சிப்பாய்களின் ஓவியங்கள் ஆர்வத்தையும் நம்பிக்கையையும் அளிக்கின்றன. அன்றைய சிங்கப்பூரில் ஒரு சிப்பாயின் தனிப்பட்ட வாழ்க்கை எவ்வாறு இருந்தது என்பதைத் தீட்டிக்காட்டத் தேவையான வரலாற்று ஆவணங்கள் நம்மிடம் உள்ளனவா?

இல்லை. சிப்பாய்களின் நாட்குறிப்புகளோ நேர்காணல் பதிவுகளோ வேறு தனிப்பட்ட காலக்குறிப்பு ஆவணங்களோ நமக்குக் கிடைக்கவில்லை. அவர்களுள் பலர் எழுத்தறிவற்றவர்களாககூட இருந்திருக்கலாம். கண்ணால்கண்ட சாட்சியங்களாக இவ்வட்டார வாசிகளும் ஐரோப்பியர்களும் விட்டுச்சென்றுள்ள பதிவுகளைக்கொண்டுதான் இடைவெளிகளை நிரப்பவேண்டியுள்ளது. 

அப்படியான ஓர் உள்ளூர் ஆளுமை முன்ஷி அப்துல்லா. இராஃபிள்ஸின் மலாய் மொழிபெயர்ப்பாளராகப் பின்னாளில் பரவலாக அறியப்பட்டவர். மலாக்காவில் 19-ஆம் நூற்றாண்டில் இருந்த வங்காள இராணுவச் சிப்பாய்களுக்கு மலாய், இந்துஸ்தானி-உர்தூ மொழிகளுக்கிடையே இவர் மொழிபெயர்த்தார். அவருக்கு அதில் வருமானமும் கிடைத்தது. 

சிப்பாய்களின் பழக்கவழக்கங்கள், நடையுடை பாவனைகள் குறித்த சில விரிவான பதிவுகளை முன்ஷி அப்துல்லா விட்டுச்சென்றுள்ளார். தமிழும் தெரிந்தவர் என்பதால் தென்னிந்தியச் சிப்பாய்களிடமும் பிரபலமாக இருந்தார். ஆசியக் கண்ணோட்டத்துடன் செய்யப்பட்டுள்ள இவரது பதிவுகள் அரிதானவை. என்னுடைய நூலில் ‘சிப்பாய்களின் உளவியலைப் புரிந்துகொள்ளல்’ என்ற தலைப்பிலான அத்தியாயத்தில், பிரிட்டிஷ் அதிகாரிகள் எழுதிய குறிப்புகளைக்கொண்டு, ஊகங்களையும் சேர்த்து சிப்பாய்களின் உளப்பாங்கைத் தொட்டுக்காட்ட முயன்றிருக்கிறேன். 

இரண்டாம் உலகப்போர்க்காலத்தில் பல சிப்பாய்களின் நேர்காணல்கள் எழுத்திலும் ஒலிநாடாக்களிலும் பதிவுசெய்யப்பட்டுள்ளன. போருக்குப் பின், போர்க்கைதிகளின் பதிவுகளும் ஆவணப்படங்களும் புதிய தொழில்நுட்பங்களுடன் பதிவாயின. ஜெனரல் கரியப்பா, ஜெனரல் திம்மையா, ஃபீல்ட் மார்ஷல் மானெக்‌ஷா போன்ற உயரதிகாரிகள் நினைவுக் குறிப்புகள் எழுதியுள்ளனர். விரிவான நேர்காணல்களும் செய்யப்பட்டுள்ளனர். சுதந்திர இந்தியாவின் இராணுவத்தில் தலைமைப் பதவியை வகித்த இம்மூவரும் பிரிட்டிஷ் இந்திய இராணுவத்தில் கீழ்நிலை அதிகாரிகளாப் பணியாற்றியவர்களே.

சாதாரணச் சிப்பாய்கள் ஐரோப்பாவின் போர்க்களங்களில் முதலாம் உலகப்போரின்போது (1914-18) எழுதிய கடிதங்கள் சிலவற்றை அண்மைய புத்தகங்கள், ஆவணப்படங்கள் குறிப்பிட்டுள்ளன. அவர்களின் அச்சங்கள், ஐயங்கள், நம்பிக்கைகள் அனைத்தும் அவற்றில் வெளிப்பட்டுள்ளன. துரதிருஷ்டவசமாக, 19-ஆம் நூற்றாண்டு பிரிட்டிஷ் மலாயாவின் சிப்பாய்களின் உணர்வுகள் அடையாளமின்றியும் மௌனமாகவுமே  ஒலித்துக்கொண்டிருக்கின்றன. 

Nedu3-சுமார் 170 ஆண்டுகளுக்குமுன் சிங்கப்பூரின் பாடாங்கில் மெட்ராஸ் மாகாணச் சிப்பாய் (The Padang Singapore, 1851. Oil on canvas by J.T.Thomson)

சிங்கப்பூரின் பாடாங்கில் மெட்ராஸ் மாகாணச் சிப்பாய் 170 ஆண்டுகளுக்கு முன்னால் நின்றுகொண்டு (சிவப்பு மேலாடை) நம்மை ஊடுருவிப் பார்க்கிறார். “எனது வரலாறு என்ன ஆனது?” என்று கேட்பதைப்போல!

PC: The Padang Singapore 1851, Oil on canvas by J.T.Thomson (only a portion is shown in the picture above)

வரலாற்றாளர்கள் சீரிய ஆய்வின் அடிப்படையில் கூரிய ஊகங்களை மட்டுமே முன்வைக்க இயலும். ஆனால் அதையும் நான் ஒருவன் மட்டுமே செய்யவியலாது. மேலும் மூளைகளும் கைகளும் சிந்திப்பதற்கும் செயல்படுவதற்கும் முன்வந்தால் அவ்வெளிச்சத்தில் சிப்பாய்கள் தம் இழந்துபோன முகங்களை மீட்டெடுக்கக்கூடும். அதற்கு நாம் திறனாளர்களையும் இளையர்களையும் ஈர்த்து ஆய்வுப் பணிகளுக்கான ஆதரவும் வழிகாட்டலும் அளிக்கவேண்டும். முதல்படியாக, இந்திய மரபுடைமை நிலையத்தில் சிப்பாய்களுக்கான ஒரு நிரந்தரக் கண்காட்சியை ஏற்பாடு செய்யலாம். அதற்கு உதவ நான் தயாராக இருக்கிறேன்.

***

[கேள்விகள், மொழிபெயர்ப்பு – சிவானந்தம் நீலகண்டன்]

[‘தி சிராங்கூன் டைம்ஸ்’ செப்டம்பர் 2022 இதழில் வெளியானது]