செப்டம்பர் 2020இல் அது ஒரு வழக்கமான ஞாயிறு காலைப் பொழுதாகத்தான் எனக்கு விடிந்தது. ஆனால் அன்றைய தமிழ் முரசில் ‘உம்மாவின் துப்பட்டி’ என்ற சிறுகதையை வாசித்ததும், ஒரு புதிய புனைவுக் கலைஞனின் வருகையை அறிவிக்கும், அரிதானதோர் நற்பொழுதென்று உணர்ந்ததால் சிலிர்ப்பெழுந்தது.

உடனே ஷாநவாஸைத் தொடர்புகொண்டு ஒரு புதிய நம்பிக்கை நட்சத்திரத்தின் வருகையை அறிவித்தேன். தமிழ் முரசில் வெளியாவதற்கு முன்பு அக்கதை தன் வாசிப்புக்கு வந்ததைத் தெரிவித்த அவர், என் உணர்வுகளைப் பகிர்ந்துகொண்டதோடு, ரியாஸின் கைபேசி எண்ணையும் அளித்தார். கையோடு நான் ரியாஸுக்கு ஒரு வாட்ஸாப் வாழ்த்து அனுப்பியது ஏதோ நேற்று நடந்ததுபோல இருக்கிறது.

உம்மாவின் துப்பட்டி வெளியாகி இரண்டு மாதம் கழித்து, ஒருநாள் ‘தி சிராங்கூன் டைம்ஸ்’ மாத இதழின் பொறுப்பாசிரியர் மஹேஷுடன் பேசிக்கொண்டிருந்தபோது, டிசம்பர் இதழுக்கு ஓர் அருமையான சிறுகதை வந்திருப்பதாகவும் அனிஷா மரைக்காயர் என்ற புதிய எழுத்தாளர் எழுதியிருப்பதாகவும் தெரிவித்தார். சரிதான், சிங்கப்பூர் புனைவுலகுக்கு இது யோக காலம்போல என்று எண்ணிக்கொண்டேன். விசாரித்ததில் ரியாஸ்தான் அந்த அனிஷா மரைக்காயர் என்று பிற்பாடு தெரிந்தது. அவர் குறிப்பிட்ட அக்கதை ‘அலைகள்’. பரவலாக ரசிக்கப்படும் எழுத்தாகவும் பாராட்டுபெறும் எழுத்தாளராகவும் ரியாஸ் ஆகிவருகிறார் என்பது தெரிந்தது.

பிறகு இவ்வாண்டு (2021) ஜூன் மாதத்தில் ‘சுவரை மறைத்த தூரிகை’ என்ற ரியாஸின் சிறுகதையை ‘தி சிராங்கூன் டைம்ஸ்’ இதழில் வாசித்தேன். அக்கதையின் மேம்படுத்தப்பட்ட வடிவம்தான் இத்தொகுப்பிலுள்ள ‘முளரி’. வாசகரும் வெளியிடுபவரும் திருப்தி தெரிவித்துவிட்டாலும்கூட ஒரு புனைவு தனக்கான இடத்தில் துல்லியமாக அமரவில்லை என்று தோன்றிவிட்டால் அதைத் தொடர்ந்து சலிக்காமல் செதுக்கிச் செப்பனிட்டுக்கொண்டே இருக்கிறார் ரியாஸ் என்பதை அவருடனான இந்த ஓராண்டுப் பழக்கத்தில் கண்டிருக்கிறேன்.

முதலில் ‘ஓராங் ஊத்தான்’ என்ற பெயரிலான புதுக்கருக்கு வடிவம், பிறகு அதன் செம்மைப்படுத்தப்பட்ட ‘சுவரை மறைத்த தூரிகை’, அதிலிருந்து முகிழ்த்தெழுந்த ‘முளரி’ என்று – மையம் ஒன்றே ஆயினும் – ஒரே கதையின் மூன்று தனித்துவமிக்க ரூபங்களை நானே வாசித்திருக்கிறேன். நாற்பது கதைகளை அந்த நேரத்தில் அவர் எழுதியிருக்கலாம் என்றாலும் அதைவிடுத்து ஒன்பது கதைகளை ஒவ்வொன்றையும் நான்குமுறை மாற்றி எழுதிப்பார்க்கும் ரியாஸின் வழிமுறை முன்னோடிகளின் வழிமுறை. அரிதினும் அரிதானது.

தொகுப்பாக அனைத்துக் கதைகளையும் மற்றொருமுறை வாசித்துவிட்டு ‘அருமையான தொகுப்பாக வந்துள்ளது’ என்று குறுஞ்செய்தி அனுப்பிவிட்டு இதை எழுதிக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில்கூட சில கதைகள் இன்னும் மேம்படவேண்டும்’ என்று பதிலனுப்பியுள்ளார். இவர் பயணிக்கவுள்ள தூரமதிகம்.

‘அத்தர்’ (ஜூலை 2021), ‘செந்தாழை’ (செப் 2021) கதைகள் ‘வல்லினம்’ இணைய இதழில் வெளியானதும், அதைத் தொடர்ந்து எம்.கோபாலகிருஷ்ணன் போன்ற தமிழின் முன்னோடி எழுத்தாளர்கள் உட்பட உலகத் தமிழ் இலக்கிய ஆர்வலர்களின் பாராட்டுக்கும் வரவேற்புக்கும் ரியாஸ் ஆளாதும், சிங்கப்பூர் இலக்கிய இணையக் கூடல்களில் அவரளிக்கும் தகவல்களும் கருத்துகளும் புதியதோர் உயரத்தைத் தொட்டதும், உம்மாவின் துப்பட்டி வெளியாகி ஒரே வருடத்தில், இதோ முதல் சிறுகதைத் தொகுப்பு வெளியாவதும்…மலைக்கச் செய்யும் பயணம். படைப்புகளில் ஊடுருவி உட்செல்லும் தேவ பாணம், படைப்புச் செயல்பாட்டில் அசதி இல்லாத அசுர வேகம் இதுதான் ரியாஸின் தாரக மந்திரம்.

WhatsApp Image 2022-02-07 at 3.22.53 PM
“பயப்பட வேண்டாம். இப்போதெல்லாம் நாங்கள் மனித மாமிசம் சாப்பிடுவதில்லை” என்று ஒரு கதைக்கான முதல் வரியிலேயே வாசகரை வலுவான கொக்கியால் கொத்தித் தூக்கிப் புனைவுக்குள் இழுத்துச் செல்லும் இலாவகத்திலும் சரி, “பூக்கள்தான் ஞானம். கசக்கிய கரங்களுக்கு வாசனையைத் தவிர வேறொன்றும் தராது. எல்லோருக்குள்ளயும் பூ இருக்குதானே” என்று ஒரு கதையை ஆன்மிகமாக முடித்து வாசித்தவரை வெளியேறிவிடாமல் கதையைச் சுற்றியே சிந்திக்கவைக்கும் நுட்பத்திலும் சரி – ரியாஸ் ஆடிப்பழக வரவில்லை, அரங்கேற்றம் செய்யவே வந்திருக்கிறார் என்பது தெரிகிறது.

‘உம்மாவின் துப்பட்டி’, ‘ஷாகிபா சவுண்ட் சர்வீஸ்’ போன்ற கதைகளின் தமிழ் முஸ்லிம் வாழ்வியல் களம் ரியாஸ் அனாயசமாக விளையாடும் பேட்டை என்றாலும், ‘செந்தாழை’யில் இரண்டாம் உலகப்போர்க் காலகட்டத்தையும் ‘மென்பொருள்’ கதையில் சமகால அலுவலக அரசியலையும்கூடத் துல்லியமாக அவரால் காட்சிப்படுத்த முடிகிறது. யதார்த்தவாத எழுத்து என்று ஒரு கட்டம்போட்டு அடைத்துவிட முடியாமல் ‘முளரி’ தடுக்கிறது. வடிவத்திலும் ஏற்கனவே பலபேர் பயணித்துக் கட்டாந்தரையாக ஆகிக்கிடக்கும் பாதையிலேயே பயணித்துவிடக்கூடாது என்கிற தன்னுணர்வையும் ரியாஸ் புனைவுகளில் காண்கிறேன்.

“ஈகை யசன்குத்தூசு ஈன்ற இணையில் அலி அலி, நாகையான் துயர் அகல நாடும் ஒலி ஒலி” என்ற அப்துல்காதிறப்பா முனாஜாத் வரிகளைக் கதைக்குள் கலந்து ஓசைகளின் அதிர்வுகளைப் புனைவுக்குப் பக்கபலமாக ஆக்குவதாகட்டும், அலைகள் கதையில் சுனாமியில் சிக்கிய நூருல் ஃபராவின் அனுபவத்தை விவரிக்க கேஸ் கட்டுகளிலிருந்து அவளது வாக்குமூலத்தைத் தேடியெடுத்து வாசகருக்குத் தருவதாகட்டும் – தேவையான, பொருத்தமான இடங்களில் சோதனை முயற்சிகளுக்கும் தன் கைப்பெட்டியிலுள்ள கருவிகளுடன் ரியாஸ் எப்போதும் தயார் நிலையிலேயே இருக்கிறார்.

athar
சிங்கப்பூர்த் தேசிய நூலக வாரியம் இலவசக் காலாண்டிதழாக வெளியிடும் ‘Biblioasia’-வை அறிமுகப்படுத்தி அதன் அண்மைய இதழ்களின் சிறப்பான, சுவாரஸ்யமான ஆய்வுக்கட்டுரைகள் சிலவற்றைச் சுட்டிக்காட்டி என் வலைப்பூவில் ஒரு கட்டுரை எழுதியிருந்தேன். அக்கட்டுரையை வாசித்த ரியாஸ், தான் தொடர்ந்து அவ்விதழ்களை வாசித்து வருவதாகவும் தன் வரலாற்றுப் புனைவுகளுக்கான கச்சாப்பொருட்கள் அவ்வாய்வுகளில் நிரம்பிக்கிடப்பதாகவும் தெரிவித்தார். ஆக இவர் ஆங்கிலத்தில் வெளியாகும் சமகால ஆய்வுகளையும் விட்டுவைக்கவில்லை; மனித ஆக்டபஸாக நான்கு சோடிக் கரங்களுடனும் தீராத தாகத்துடனும் புனைவுக் களமாடுகிறார்.

தற்காலத் தமிழ்ப் புனைவு முனைந்து செயல்பட வேண்டிய களங்கள், வடிவத்தில் எதிர்கொள்ள வேண்டிய சோதனைகள், வாசகருக்கு அளிக்க வேண்டிய அனுபவங்கள், கவ்விப்பிடிக்கும் மொழி, நம்பகமான கதையாக ஆக்கும் நுண்தகவல்கள் எனப் பல்வேறு தளங்களிலும் பாடமெடுப்பதுபோல அமைந்துள்ள ‘அத்தர்’, தன் சுகந்தத்தைச் சிங்கப்பூரின் எல்லைகளைத் தாண்டி உலகளவில் பரப்பவேண்டும் என்பது என் எதிர்பார்ப்பு, நிச்சயம் பரப்பும் என்பது என் கணிப்பு.

***

[அத்தர் நூலில் வெளியானது. டிசம்பர் 2021இல் எழுதப்பட்ட கட்டுரை]