பிரிட்டிஷ் மலாயாவின் கள்ளுத்தொழில், தோட்டப்புறப் பொருளாதாரத்தை பாதித்த ஒரு பிரச்சினையாக வரலாற்றில் இடம்பெற்றுள்ளது. ஆனால் சிங்கப்பூரின் நவீனத்துவ வரலாற்றிலும் இனம் சார்ந்த விவாதத்திலும்கூட கள்ளுக்கடைக்குக் கணிசமான பங்குண்டு என்பது கவனத்திற்குரியது. குறிப்பாக, நகரமயமாகிவந்த சிங்கப்பூரில், பொதுவெளியின் ஒழுங்கமைவுக்கான அக்கறைகளையும் பதற்றங்களையும் கள் அருந்துதல் சார்ந்த சமூக வாழ்க்கை வெளிக்கொணர்ந்தது.

கள் அருந்துதல் தமிழினத்தின் தனிப்பட்ட கேடு என்பது போன்ற தோற்றத்தைக் காலனித்துவ அரசாங்கத்தின் கொள்கைகள் உண்டாக்கினாலும், சிங்கப்பூரில் கள்ளின் சமூக வரலாற்றைப் பார்த்தால், இனங்களைத் தாண்டி, அது ஏழைமக்களின் மதுவாக ஆகியிருந்தது புலனாகிறது. போதையூட்டக்கூடிய பானமான கள், சிங்கப்பூரில் புதிய தகவமைவுகள், புத்தாக்கங்கள், தொழில்கள் ஆகியவற்றை உருவாக்கியதன் வழியாக சிங்கப்பூரின் பண்பாட்டு வெளியில் தனக்கெனத் தனித்துவமிக்க ஓர் இடத்தைப் பெற்றுவிட்டது எனலாம்.

மறைந்துபோன கள்ளின் சில பண்பாட்டுத் தடங்களை இன்றைய சிங்கப்பூரிலும் காணலாம். எடுத்துக்காட்டாக, இன்றைய ஓர்ட் பாலம் (Ord Bridge) ஒரு காலத்தில், கள்ளுப்பாலம் என்று அழைக்கப்பட்டது.[1] அதைச்சுற்றிக் கள்ளுக் கடைகள் இருந்தன.

Darini2_கள்ளு பாலம் என்று அழைக்கப்பட்ட ஓர்ட் பாலம்-pc-rootsdotgovdotsg
[‘சிங்கப்பூர் ஆறு நடை உலா’ கையேடு, தேசிய மரபுடைமை வாரியம், roots.sg இணையதளம்]

பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில், கள் விற்பனையாளர்களுக்கும் வெதுப்பகத் (bakery) தொழில் செய்தவர்களுக்கும் கள்ளின் தேவையை முன்னிட்டுக் கடுமையான போட்டி உண்டானது.[2] கிறிஸ்மஸ் காலத்தில் யூரேசிய உணவில் முக்கிய அங்கமான ‘ப்ளடர் கேக்’ (bludder or blooder cake) தயாரிக்கக் கள் அவசியம் என்பதால் எழுந்த போட்டி அது.[3] இவ்வாறு வெவ்வேறு வடிவில் பல்வேறு பண்பாடுகளுக்குள்ளும் கள் நுழைந்தது என்றாலும் முதன்மையாக அது ஏழைகளின் பானமாகத்தான் இருந்தது.

மலாயாவிற்குள் தமிழ் உடலுழைப்புத் தொழிலாளர்களோடு கள்ளும் சேர்ந்தே குடியேறியது என்றாலும், தோட்டப்புறத்தின் கள் பயன்பாட்டை வைத்து, தமிழ்த் தொழிலாளர்களை உயிரியல் ரீதியாகவே கள்ளுக்கு அடிமையானவர்கள் என்று காலனித்துவ சமுதாயம் கருதத் தொடங்கியது. கள் விற்பனைக்கான உரிமம், ஒப்பந்தம் ஆகியவற்றைப்பெறத் தமிழர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. பல தமிழ் தொழிலதிபர்களின் செல்வச் செழிப்பிற்குப் பின்னால் கள் வியாபாரம் இருந்தது. இவர்கள் சமூகத்தில் ‘கள்ளுராஜாக்கள்’ என்று அழைக்கப்பட்டனர்.

கள் விற்பனைத் தொழிலில் கிடைத்த லாபம், இரண்டாம் உலகப்போர்க் காலத்தில், பிரிட்டிஷார்க்கு உதவியது. சிங்கப்பூரின் முதல் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ராஜரத்தினத்தின் தந்தை சின்னத்தம்பி ஒரு புகழ்பெற்ற கள் ஒப்பந்தக்காரராக இருந்தார். அபார வளர்ச்சி அடைந்த அத்தொழிலில் அவருடைய உறவினர்களையும் ஒப்பந்தங்கள் பெறச்செய்தார்.[4] இப்படியான செல்வச் செழிப்புமிக்க கள் வியாபாரிகளுடனும் அன்றைய அரசாங்கத்துடன் அவர்கள் கொண்டிருந்த உறவுகளுடனும் சுழன்றுகொண்டிருந்த உலகத்துக்கு , கள் குடிக்கும் சாதாரண உழைப்பாளிகளிடம் எவ்விதத் தொடர்பும் இருக்கவில்லை.

மலாயாவின் தோட்டத்தில் வேலைசெய்து களைத்து ஓய்ந்த தொழிலாளருக்கு, நடக்கும் தூரத்தில் சென்று அருந்தி இளைப்பாறிக்கொள்ள, சட்டபூர்வமாக அனுமதிக்கப்பட்ட ஒரே பானம் கள்தான். அவர்கள் நிலையோடு ஒப்பிடும்போது சிங்கப்பூரில் குடிக்க விரும்பியோர்க்குப் பலவகையான ஆல்கஹால் பானங்கள் விருப்பத்திற்கேற்பக் கிடைத்தன. ஆயினும், பலரோடு உறவாடவும் கேளிக்கைக்கும் வழிசெய்கிறது என்பதால் நகர சிங்கப்பூரின் உடலுழைப்புத் தொழிலாளர்களும் கள்ளையே விரும்பினர். 

‘சம்சு’ (சாராயம்) மலிவானதுதான் என்றாலும் அவ்வப்போது உயிருக்கு ஆபத்தை விளைவித்தது. ‘பியர்’ விலையதிகம். ஆகவே இவ்விரண்டுக்கும் இடைப்பட்ட கள், குறைந்த வருமானமுள்ள உடலுழைப்புத் தொழிலாளர்களின் தேர்வாக அமைந்தது. மேலும் மலாயாத் தோட்டப்புறத்தில் கள் குடிப்போர் மீதிருந்த அசூசை, கள்ளுக்கு அடிமையாகிவிடுவது ஆகியவற்றால் சமூகத்தில் உருவாகியிருந்த ஒருவித விலகல் மனப்பான்மை சிங்கப்பூரில் இல்லாததாலும் கள் இங்கிருந்த தொழிலாளர்களின் இயல்பான தேர்வாக அமைந்தது.

தம் தாய்நாட்டைக் குறித்த செய்திகளைப் பரிமாறிக்கொள்ளவும், நாள்முழுதும் கடினமாக உழைத்துமுடித்து சற்று இளைப்பாறுவதற்கும் கள்ளுக்கடைச் சந்திப்புகளே அவர்களுக்கு முதன்மையாக இருந்தன.

National Museum of Singapore Collection, Courtesy of National Heritage Board

சிங்கப்பூரில் கள் இறக்கும் தொழிலாளர் (20ஆம் நூற்றாண்டின் முற்பகுதி)
National Museum of Singapore Collection, Courtesy of National Heritage Board

சிங்கப்பூரின் கள்ளுக்கடைகளில் தென்னிந்திய வாடிக்கையாளர்கள் அதிகம் என்றாலும் பஞ்சாபிகள், சீனர்கள், அரிதாக மலாய்க்காரர்களையும்கூட அங்கே பார்க்க முடிந்தது. ஆயினும் அவர்கள் தம் மொழி, இன மக்களைக்கொண்ட குழுக்களாகப் பிரிந்துதான் அங்கு உறவாடினர்.

சில தென்னிந்தியக் குடும்பங்களில் அவர்கள் வீடுகளிலும் கோவில்களிலும் காவல் தெய்வமாக வழிபட்ட மதுரை வீரனுக்குக் கள் படைப்பது வழக்கத்தில் இருந்தது. சிங்கப்பூரில் கள் விற்பனை தடை செய்யப்படும்வரை அந்த வழக்கம் தொடர்ந்தது.[5] திருமணமானவர்கள், ஆகாதவர்கள் என இருவரிடமும் கள் குடிக்கும் வழக்கம் இருந்தது. அவர்களுள் சிலர் அன்றாடம் மாலையில் அரசாங்கக் கள்ளுக்கடைக்குச் செல்லும் வழக்கமுடையவர்கள்.

தமிழ்த் தொழிலாளர்களுக்கு வசதியாக இருக்கவேண்டும் என்ற நோக்கில் அவர்கள் குடியிருப்புகளுக்கு அருகே கள்ளுக்கடைகள் அமைக்கப்பட்டிருந்தன. கள்ளுக்கடைகளில் பரிமாறியவர்கள் தமிழர்களாக இருந்தனர். கள்ளின் வீச்சம் மற்ற இனத்தவர்களை அந்த வேலைக்கு வரவிடாமல் தடுத்தது. கள்ளுக்கடைகளுக்கு அருகில் கடலையும் கறியும் விற்ற பிற கடைகளும் கள்ளுத்தொழில் தமிழினத்தைச் சார்ந்தது என்ற எண்ணம் உறுதிப்பட வழிகோலியது.

கள்ளுப்பாலத்திற்கு அருகே இருந்த ஒரு கள்ளுக்கடையைக் குறித்து நினைவுகூர்ந்த பக்கிரிசாமி, சுமார் இருபது முப்பது மேசைகள் போடக்கூடிய அளவுக்கு அறுபதடிக்கு எழுபதடி பரப்பளவில் அமைந்திருந்தது என்றார்.[6] பெரிய ‘டிரம்’களில் இருந்த கள் பழைய தகரக்குவளையிலோ பிளாஸ்டிக் குவளையிலோ பரிமாறப்பட்டது. அமர்வதற்கு சரியான வசதிகளற்ற, தூய்மை பேணப்படாத இடமாகத்தான் கள்ளுக்கைடை இருந்தது. நெரிசல்மிக்க கள்ளுக்கடையில், ஏழைத்தொழிலாளர்கள் நின்றபடியோ அழுக்கான தரையில் கூடி அமர்ந்தோ தலையைக் கவிழ்த்துக் கள் அருந்தினர்.

இந்தியாவில் 1920களிலும் 30களிலும் நடந்த மதுவிலக்கு, கள்ளுக்கடை மறியல் போராட்டங்களிலிருந்து முன்மாதிரிகளைப் பெற்றுக்கொண்ட சில சீர்திருத்தவாதிகள் பிரிட்டிஷ் மலாயாவிலும் கள் முற்றாக ஒழிக்கப்படவேண்டும் என்றும் புலம்பெயர் மக்கள் கள்ளுண்ணாமைப் பண்பாட்டைக் கைக்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினர். சுயமரியாதை இயக்கத்தின் தலைவர் ஈ.வெ.ராமசாமிப் பெரியார் 1929ஆம் ஆண்டில் சுற்றுப்பயணம் வந்தபோது, மலாயாவின் இந்தியத் தலைவர்கள் அவரிடம் தென்னிந்தியத் தொழிலாளர்களிடையே கள் குடிப்பதால் எழும் பிரச்சனைகளைப் பேசவேண்டினர்.

அதைத்தொடர்ந்து, மலாயாவின் தாழ்த்தப்பட்ட தொழிலாளர்கள் சுயமரியாதை அடையும் குறிக்கோளுடன் முன்வைக்கப்பட்ட சீர்திருத்தங்களால் கள் குடியும் மதுப்பழக்கமும் ஒடுங்கத்தொடங்கின. பெரியாரின் வருகையால் உற்சாகமடைந்த சிங்கப்பூர் இந்தியர் சங்கம், கள்ளுக்கடைகளை ஒழித்து அவற்றுக்குப் பதிலாக இரவுப் பள்ளிகளைத் தொடங்குவதற்கு உறுதிபூண்டது. அதன்மூலம், ‘வசதிகுறைந்த நாட்டுமக்களின் கல்விக்கும் அவர்கள் நற்சிந்தனை, நல்வாழ்வு பெறுவதற்கான போதனைகளை அளிப்பதற்கும்’ வழிசெய்யத் திட்டமிட்டது.[7]

வேறு சில பிரச்சனைகளாலும் சிங்கப்பூரின் கள்ளுத்தொழில் பொது கவனத்திற்கும் அதைத்தொடர்ந்து அதிகரித்த அரசாங்கக் கட்டுப்பாடுகளுக்கும் ஆளானது. தமிழ்த் தொழிலாளர்களுக்கும் போதைக்கும் வன்முறைக்குமான தொடர்பு, 1931, 1936 ஆண்டுகளில் நடந்த இரண்டு கலவரங்களின்போது உறுதிப்படுத்திப் பேசப்பட்டது. லிட்டில் இந்தியாவில் 2013-ஆம் ஆண்டில் நடந்த கலவரத்தை ஒட்டி எழுந்த விவாதத்திலிருந்து அவை பெரிதாக வேறுபட்டிருக்கவில்லை.

அப்பர் சிராங்கூன் சாலை கள்ளுக்கடையில் ‘இரு தென்னிந்திய விரோதக் குழுக்களுக்கு’ இடையில் நடந்த மோதலில் 1931-ஆம் ஆண்டு காவல்துறையினர் தாக்கப்பட்டனர். சுங்கே சாலை கள்ளுக்கடையில் கூலித்தொழிலாளர்களுக்கு இடையே 1936-ஆம் ஆண்டில் நடந்த கலவரத்திற்கும் கள்ளின் மீதுதான் பழி விழுந்தது. இவ்விரண்டு சம்பவங்களின்போதும் வெளியான பத்திரிகைச் செய்திகள், தொழிலாளர்களின் பலவீனமான, கள் குடியே அவர்களது விரும்பத்தகாத நடத்தைக்குக் காரணம் என்றன. கலவரங்கள் அத்தொழிலாளர்களை குடிகாரர்களாகவும் கட்டுக்கடங்காதவர்களாகவும் வேறுபடுத்திக் காட்டியது. அவர்கள் நாகரிக, நவீன சமுதாயத்துடன் ஒட்டமுடியாதது போன்ற ஒரு தோற்றத்தையும் வலுப்படுத்தியது.

இச்சம்பவங்களுக்கு எதிர்வினையாற்றிய காலனித்துவ அரசாங்கம் மலாயாக் கூட்டமைப்பின் கள் கொள்கையிலிருந்து மாறுபட்ட நடவடிக்கைகளை எடுத்தது. கள்ளின் விலையை அதிகரிப்பது சூடான வாக்குவாதங்களை எழுப்பியது. அரசாங்கக் கள்ளுக்கடைகளில் கலப்படக் கள் விற்கப்படுவது முதல் ‘போருக்குப் பிறகான பொதுச்சேவை செலவினங்களை ஈடுகட்ட மறைமுக வரிவிதிப்பிலிருந்து வருமானத்தை அதிகரிக்கும் கொள்கை’யை ஆதரிக்கவேண்டிய கட்டாயம் வரை விவாதிக்கப்பட்டன.[8] இறுதியில், சிங்கப்பூரில் கள்ளின் விலை அரைலிட்டருக்கு 5 காசு (15 காசிலிருந்து 20 காசாக) உயர்த்தப்பட்டது.

கள் விலை உயர்விற்குப் பிறகும், மலாயாக் கூட்டமைப்புப் பகுதிகளோடு ஒப்பிடும்போது சிங்கப்பூரிலும் பிற நீரிணைக் குடியேற்றப் பகுதிகளிலும் ‘படுபாடான மலிவு’ விலையிலேயே கள் கிடைக்கிறது என்றும், ஒருவேளை விலை உயர்வால் கள்ளுக்கடைகள் மூடப்பட்டாலும் அது தொழிலாளர்களை பியர் போன்ற மும்மடங்கு விலையுயர்ந்த மதுபானத்தை அருந்தவே உந்தும் என்பதால் அரசுக்கு வருமானம் பெருகும் என்றும் கள் விலை உயர்வு நியாயப்படுத்தப்பட்டது.

இரண்டாம் உலகப்போருக்கு முன்னும், போரின்போதும், பிறகும் என எப்போதுமே கள்ளுக்கடைகளில் அடிப்படைக் கட்டமைப்புகள் மட்டுமே இருந்தன. கள்ளுக்கடையின் மோசமான நிலை போருக்குப் பிறகு தீவிர கவனத்திற்கு உள்ளானது. காலனித்துவ அரசாங்கம் கள்ளுக்கடைகளின் நிலையை மேம்படுத்தவும், தூய்மையையும் சுகாதாரத்தையும் பேணவும் முயற்சி செய்தது.

புதிய மேசைகள், விசுப்பலகைகள், கண்ணாடிக் குவளைகள் என்று வாடிக்கையாளர் பயன்பாட்டிற்காகக் கள்ளுக்கடைகள் ‘மீண்டும் அலங்கரிக்கப்பட்டன’.[9] ஆயினும் மிகத்தாமதமாக வந்த மிகக்குறைந்த நடவடிக்கைகளாகவே அவை ஆயின. ஒன்று சீரிய சீர்திருத்தங்களால் மேம்படவேண்டும் அல்லது அடியோடு ஒழிக்கப்படவேண்டும் என்ற நிலைமை அரசாங்கக் கள்ளுக்கடைகளுக்கு ஏற்பட்டிருந்தது.

இந்தச் சூழலில், 1950களில், செயிண்ட் ஜார்ஜ் சாலை, ஜாலான் புசார் போன்ற பகுதிகளில் கள்ளுக்கடைகள் செயல்பட்டு வந்தன. இப்பகுதிகளில்தான் அன்றாட ஊதிய அரசு ஊழியர் குடியிருப்பு அமைந்திருந்தது.[10] தினக்கூலித் தொழிலாளர்களான இவர்கள் பெரும்பாலும் இந்திய, மலாய் இனத்தவர்களாக இருந்தனர். அரசு ஊழியர்களில் ஆகக்குறைந்த சம்பளம் பெறும் கடைநிலைப் பிரிவினர் இவர்களே. பிற பிரிவிலிருந்த ஊழியர்கள் மாதச்சம்பளம் பெறுவோர்.

இந்தக் கள்ளுக்கடைகள் இடிந்து விழும் நிலையிலுள்ள கட்டடங்களில், தகரக்கூரை வேயப்பட்டு, வாடிக்கையாளர் வெப்பத்தால் அவதிப்படும் வகையில்தான் இருந்தன. விரைவில் இக்கடைகளுக்கு மூடுவிழாதான் என்று கட்டியம் கூறுவதுபோல சிங்கப்பூர் அரசும் தொழிற்சங்கமும் இக்கடைகள் ‘தொலைவான புறநகர்’ பகுதிகளுக்கு மாற்றப்பட வேண்டும் என்று கோரின. அப்படிச் செய்தால் அது வாடிக்கையாளர் எளிதாகக் கள்ளருந்தும் தூண்டலுக்கு உள்ளாவதைக் குறைக்கும் என்று அவர்கள் நினைத்திருக்கலாம்.[11]

செயிண்ட் ஜார்ஜ் சாலை அரசாங்கக் கள்ளுக்கடை அருகே குடிபோதையர் செய்த அமளிதுமளியினால் பாதிக்கப்பட்ட அப்பகுதிவாசிகள், ‘கள்ளுக்கடையை  வேறிடத்திற்கு மாற்றவேண்டும்’ என்று அரசுக்கு மனு அளித்திருந்தனர். தொழிற்சங்கத் தலைவர்களும் ‘தொழிலாளர்களைக் கொஞ்சம் நடக்கவிட்டால் கள் அருந்துவதும் குறையும் அப்பகுதிவாசிகளுக்குத் தொல்லைகளும் குறையும்’ என்று ஆமோதித்தனர்.[12]

அரசாங்கக் கள்ளுக்கடைகள் தீர்க்கமாகக் கண்காணிப்பதற்கு ஏற்றவகையில் இல்லை என்பதால், 1950களில், அவற்றை நவீனப்படுத்துவதற்கான தேவைகள் மேலும் அதிகரித்தன. அவ்வேளையில், சுங்கக் கட்டுப்பாட்டு அதிகாரியின் கூற்றுப்படி, மோசமான முறைகேடுகள் கள் விநியோகக் கண்ணிகளைப் பாதித்திருந்தன.

TMBeer

சிங்கப்பூரில் கள்தொழிலை ‘மறைமுகமாக முற்றாகத் தன்னிடம் வைத்திருந்த’ ஒரு சக்திவாய்ந்த ஒப்பந்தக்காரர், கள் இறக்குவோர்க்குக் குறைந்த ஊதியத்தை அளித்துவிட்டு, அதற்கு ஈடுகட்டும் வகையில் குறிப்பிட்ட அளவு கள்ளை அவர்களே விற்றுக்கொள்ள அனுமதியளித்தது கண்டுபிடிக்கப்பட்டது.[13] இருப்பினும் ஒருவேளை அந்த ஒப்பந்தக்காரர் பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டால், அது ‘சில காலத்திற்குக் கள் முற்றாகக் கிடைக்காமற்போகும் நிலையை உண்டாக்கலாம்’ என்பதால் அவர்மீது நடவடிக்கை எடுக்கவும் அரசு தயங்கியது.[14]

இந்த மோசமான சூழல், கள்ளச்சந்தை கள்விற்பனையால், மேலும் சீரழிந்தது. கள்ளுத்தொழிலை 1950களின் மத்தியில் இந்திய, சீன குண்டர் குழுக்கள் தம் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்திருந்தன. கள்ளுக்கடைகள் திறப்பதற்கு முன்பே அவற்றுக்கு முன்புறம் கலப்பட மதுவை அவர்கள் விற்றுக் கொள்ளை லாபம் பார்த்தனர். சிங்கப்பூர் அரசு ஊழியர் சங்கப் பிரதிநிதி ஒருவர் கள்ளுக்கடைகளில் தொலைபேசிகள் வைக்கப்பட்டால் கட்டுப்பாடு மேம்படும் என்று வலியுறுத்தினார். ‘ராஃபிள்ஸ் கீ, கொழும்பு கோர்ட், நகராட்சிக் கட்டடங்களுக்குப் பின்புறம், பல பரபரப்பாக இயங்கும் தெருக்களிலும்’ கலப்படக் கள்ளை எளிதாக வாங்கமுடிந்தது.[15]

பழைய பிரச்சனைகளோடு, 1960களில், புதிய சிக்கல்களும் முளைத்தன. அவற்றுள் ஆகத் தீவிரமானது, சக்திவாய்ந்த குழுவான சிங்கப்பூர் கள் இறக்குவோர் சங்கம் ஊதிய உயர்வும் வேலையிட மேம்பாடும் கோரி அரசாங்க ஒப்பந்தக்காரர்களுக்கு அழுத்தம் அளித்ததுதான். சிங்கப்பூரில், 1976ஆம் ஆண்டில், நான்கு கள்ளுக்கடைகள் இருந்தன. அன்றாடம் சுமார் 2500 வாடிக்கையாளரின் தேவைகளை இக்கடைகள் பூர்த்திசெய்தன.

தமிழர் வைத்திருந்த கள் விற்போர் சங்கம், நிலைமையைச் சற்று மேம்படுத்த எண்ணி, மருத்துவ மாணவர்களைக்கொண்டு ஒரு கணக்கெடுப்பு நடத்தச் செய்தது. ‘இந்தியரிடையே பரவலாக இருப்பதாகத் தோன்றும் மதுவடிமைத்தனத்திற்கும் பிற மதுசார்ந்த பிரச்சனைகளுக்கும் இன்னதுதான் காரணம் என்று உறுதியாகச் சொல்வதற்கில்லை’ என்று அக்கணக்கெடுப்பின் முடிவு வெளியானதில் ஆச்சரியப்படுவதற்கு ஏதுமில்லை.[16] அப்போது சிங்கப்பூரின் கள்ளுத்தொழில் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு நின்றுகொண்டிருந்தது.

இறுதியில், நவம்பர் 1979-இல், மீதமிருந்த ஒரே ஒப்பந்தக்காரர், கள் இறக்குவோர், சுங்கச் சேவையினர் ஆகியோருக்கிடையே உருவான பிரச்சனைக்கு சிங்கப்பூரின் கள்ளுத்தொழில் பலியானது. இவ்விவகாரம் சிங்கப்பூரில் கள்ளுத்தொழிலின் இறுதிமூச்சைப் பறித்தது உண்மை என்றாலும் நீண்டகால அளவில் சிங்கப்பூர் என்ற நகரநாடு அடைந்துவந்த நவீனமும் முன்னேற்றமும்தான் கள்ளின் கதையை மெல்ல முடித்தது எனலாம்.

சிங்கப்பூரின் கள் ஒப்பந்தக்காரரும் கடைசி கள்ளுராஜாவுமான ஜி.சதாசிவத்தை மேற்கோள் காட்டினால்: “கள் இறக்குவதை இந்தியர்கள் இப்போதெல்லாம் கேவலமாக (low class) நினைக்கிறார்கள்.”[17]

**

[‘தி சிராங்கூன் டைம்ஸ்’ பிப்ரவரி 2022 இதழுக்காகப் பிரத்தியேகமாக முனைவர் தாரிணி அழகிரிசாமி (விரிவுரையாளர், தெற்காசியக் கல்வி நிறுவனம், சிங்கப்பூர்த் தேசியப் பல்கலைக்கழகம்) எழுதிய கட்டுரை. ஆங்கிலத்திலிருந்து  மொழிபெயர்ப்பு, பெட்டிச்செய்தி தகவல்கள்: சிவானந்தம் நீலகண்டன்]

உசாத்துணை
[1] Victor R. Savage and Brenda Yeoh, Singapore street names: a study of toponymics (Singapore: Marshall Cavendish, 2013), p. 10. 
[2] Ibid. 
[3] Oral History Interview of De Conceicao, Aloysius, Accession No. 002057, Oral History Centre, Singapore. See also Straits Times, 17 December 1989.
[4] Irene Ng, The Singapore lion: a biography of S. Rajaratnam (Singapore: ISEAS, 2010), pp. 12-13. 
[5] Author’s email correspondence interview with Gejapathy Radhakrishnan and Gailsingh Massasingh, 22-23 June 2014.
[6] Oral History Interview of Kannusamy s/o Pakirisamy, Accession No. 000081, Oral History Centre, Singapore. 
[7] Straits Times, 26 December 1929, p. 14. 
[8] CO 852/1243/1, Foreign Secretary to Comptroller of Customs, CSO6534/46, 17 March 1949, The National Archives, UK. 
[9] Straits Times, 11 November 1952, p. 9. 
[10] Personal email correspondence with Gejapathy Radhakrishnan. 
[11] Singapore Free Press, 4 October 1951, p. 5. 
[12] Singapore Free Press, 12 June 1954, p. 7. 
[13] C. Mclaren Reid, Comptroller of Customs to the Financial Secretary, Singapore, 18 July 1949 and 7 September 1951, in Customs Confidential, 8/49. 
[14] Ibid. 
[15] Straits Times, 1 April 1951, p. 11. 
[16] Singapore Medical Journal, Volume 36  (Singapore: Singapore Medical Association), p. 575. 
[17] Straits Times, 9 November 1979, p. 9.