ஆய்வாளர் ஆ. சிவசுப்பிரமணியனின் நூல்கள் நூலகத்தில் கண்ணில்பட்டால் கவர்ந்துகொண்டு வந்துவிடுவேன். ஏற்கெனவே வாசித்த அவரது புத்தகத்தின் பெருநிலம், தமிழரின் தாவர வழக்காறுகள், பஞ்சமனா? பஞ்சயனா? ஆகிய நூல்கள் கவர்ந்ததுதான் காரணம். இந்த கோபுரத் தற்கொலைகள் (பரிசல் புத்தக நிலைய வெளியீடு, 2019) நூலும் அந்த வரிசையில் சேர்கிறது.

சைவம் உறிஞ்சிய முன்னோர் வழிபாடு, பக்தி இலக்கியத்தில் தீண்டப்படாதார் நிலை, தமிழ் வைணவத்தில் சூத்திரர், கோபுரத் தற்கொலைகள், விலங்கு உயிர்ப்பலித் தடைச்சட்டத்தின் அரசியல், அர்ச்சகரும் சாதியும், சித்தர்கள்: மீறலே மரபாய் ஆகிய 7 கட்டுரைகளின் தொகுப்பிது. அனைத்துத் தலைப்புகளுமே என் ஆர்வத்திற்கு உகந்தவை என்றபோதும் கடைசி நான்கு கட்டுரைகள் சுவாரஸ்யமான வாசிப்பிற்கும் ஏதுவாக அமைந்திருந்தன.

வாழ்வதற்குப் பலவழிகள் என்பதைப்போல வாழ்க்கையை முடித்துக்கொள்ளவும் பலவழிகள். ‘வரை பாய்தல்’ என்கிற மலையுச்சியிலிருந்து குதித்தல் அதிலொன்று. குறுந்தொகையிலேயே இது உள்ளது என்கிறார் ஆசிரியர். உயரமான இடங்கள் பல இருந்தாலும், கோபுரத்தில் ஏறித் தன்மாய்ப்பு செய்வதற்கு, புனிதத்தலத்தைத் தம் இறப்பின்வழியாகச் சிக்கலுக்குள்ளாக்கி கவனமீர்ப்பதும் கடுமையான எதிர்ப்பைத் தெரிவிப்பதும் பொதுவான நோக்கங்களாக இருந்ததை எடுத்துக்காட்டுகிறார். ஆனால் அது கோயில், மதம் சார்ந்த காரணங்கள் மட்டுமின்றி அரசியல் பின்னணிகளும் உண்டு என்று குடவாயில் பாலசுப்பிரமணியனை மேற்கோள்காட்டும் இடத்தில் கட்டுரை வேறொரு பரிமாணம் கொள்கிறது.

இழந்த உரிமைகளைத் தம் குடும்பத்தார்க்குப் பெற்றுத்தர நடந்த கோபுரத் தற்கொலைகள், படையெடுப்புகளின்போது நடந்தவை என்று வாசிக்கும்போது ‘உயிரைத் துச்சமாக மதிப்பது’ என்ற வழக்கின் உண்மையான பொருள் உறைக்கிறது. “..மட்டுமீறிப் பருகிய பக்தி என்னும் மது தந்த போதை உயிர் குறித்த அச்சத்தைப் போக்கியுள்ளது” என்று கட்டுரையை ஆசிரியர் முடித்துள்ளபோதும் பக்தி மட்டும் காரணமல்ல என்று கட்டுரை உணர்த்தி நிற்கிறது. ஒரே ஆய்விலிருந்து, குறிப்பாக சமூகவியல் ஆய்வுகள், வெவ்வேறு முடிவுகளுக்கு வரநேர்வது இயல்பானதுதான்.

விலங்கு உயிர்ப்பலித் தடைச்சட்டத்தின் அரசியல் கட்டுரையை இத்தொகுதியின் ஆகச்சிறப்பான கட்டுரை என்பேன்.

உயிர்ப்பலியைத் தவிர்ப்பது நல்லது என்ற பொதுவான உயிராபிமான எண்ணம் செயல்பாட்டுக்கு வரும்போது அரசியல், மதம், பண்பாடு உட்படப் பல்வேறு காரணிகளால் இடியாப்பச் சிக்கலாவதை விரிவாகவும் வரலாற்றுப் பின்புலங்களுடனும் எதிர்கொள்ளும் கட்டுரை. தமிழகத்தில் 2003-2004 காலகட்டத்தில் கேட்பாரற்றுக்கிடந்த ஒரு பழைய சட்டத்தைத் தீவிரமாக நடைமுறைப்படுத்த முயன்று கடும் எதிர்ப்பையும் பெருங்கவனத்தையும் ஈர்த்த இப்பிரச்சனையின் பல்வேறு கோணங்களுடன் அறிந்திராத தகவல்களையும் அளிப்பதே இக்கட்டுரையின் சிறப்பு.

அண்மைக்காலத்தியது என்று நான் கருதியிருந்த ‘சிறுதெய்வம்’ என்னும் பெயர் “சென்றுநாம் சிறுதெய்வம் சேர்வோமல்லோம்” என நாவுக்கரசர் தேவாரத்திலேயே வருவதை ஆசிரியர் எடுத்துக்காட்டியபோது மாறியது. ஆயினும் இன்றைய ‘சிறிய’ என்ற அர்த்தத்தில் அல்லாமல் ‘சிறுமையான’ என்கிற பொருளில் அச்சொல் பயன்படுத்தப்பட்டுள்ளதையும் அவர் சுட்டிக்காட்டுகிறார். பெரு, சிறுதெய்வ வழிபாட்டுமுறை வேறுபாடுகளுள் உயிர்ப்பலி, சாமியாட்டம் இவ்விரண்டு அம்சங்களும் ஆதாரமானவை என்பதால் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட வேண்டியவை என்று ஆசிரியர் வாதிடுகிறார். பெருந்தெய்வங்களுக்கு உயிர்ப்பலி அளிக்கப்படுவதில்லை, அவை மனிதர்கள்மேல் இறங்கி ஆடுவதுமில்லை (“அணங்காடும் இளந்தெய்வம் அன்று” – திருவாய்மொழி).

சற்று சிந்திக்கக்கூடிய எவரும் இதைப்போன்ற தகவல்களை மேசையைத் தாண்டாமல் இணையத்திலேயே இன்று பெற்றுவிடலாம். ஆனால் திருச்சி உறையூர் குழுமாயி அம்மன் திருவிழாவில் பலியிடப்படும் முதல் ஆடு ‘சர்க்கார் குட்டி’ என்று அழைக்கப்படுகிறது என்பதும், அது ஆங்கில ஆட்சியின்போது அரசு அதிகாரிகள் முதல்பலி இட்டதால் உருவான வழக்கத்தால் வந்த பெயர் என்பதும் அரிய தகவல். விலங்குப்பலி வழக்கம் நாட்டார் தெய்வ வழிபாட்டில் மட்டுமின்றி இஸ்லாமிய தர்காக்கள், கிறித்தவ குருசடிகளிலும் உண்டு என்று தன் ஆய்வுத் தரவுகளை முன்வைக்கிறார். அந்த நம்பிக்கையைக் கண்டும்காணாமல் விடுவது, புனிதத்தல வளாகத்திற்குள் நிகழாமல் பார்த்துக்கொள்வது போன்ற அணுகுமுறைகள் கையாளப்படுவதாகவும் தெரிவிக்கிறார்.

“சாமிகள் ஆடு கோழிகளைப் பலியிடும்படி கேட்கவில்லை” என்று வைக்கப்படும் வாதத்தை “பால், பழம், சர்க்கரைப் பொங்கல் மட்டும் கேட்கிறதா” என்கிற வாதத்தால் ஆசிரியர் எதிர்கொள்வது நியாயமே என்று தோன்றியது. ஆனால் பிராணிகளுக்கு இழைக்கப்படும் கொடுமையைத் தடுப்பது சட்டத்தின் நோக்கமென்றால், வழிபாட்டுத்தலத்தைக் காட்டிலும் அதிக உயிர்ப்பலிகள் நடக்கும் இறைச்சிக்கடையில் தடுக்கலாம் என்பது இந்தத் தடைச்சட்ட விஷயத்தைப் பொறுத்தவரை பொருத்தமற்ற வாதம் என்பேன்.

சட்டத்தின் (Animals and Birds Sacrifices Prohibition Act 1950) நோக்கம் அதன் பெயரிலேயே இருப்பதுபோல வழிபாட்டிடங்களில் வேண்டுதல் பலியைத் (sacrifice) தடைசெய்வதே தவிர அதற்கு ஜீவகாருண்ய நோக்கங்கள் ஏதுமில்லை. பொதுப்போக்குவரத்தில் டுரியான் கூடாதென்பதற்கு அதன் மணம்தான் காரணமென்றால் அதைவிடக் கடுமையான மணம் வீசும் டுரியான் கடைகளில் சென்று தடுக்கலாமே என்பது பொருந்தாத வாதம். டுரியான் மணத்தை விரும்புவோரும் விரும்பாதோரும் கலக்கும் பொது இடத்தில்தான் சிக்கல். விரும்புவோர் மட்டும் சென்று வரிசைபிடித்து வாங்குவோரிடம் சட்டத்திற்குப் பிராது இல்லை.

பிராணிவதைத் தடுப்பாளர்கள் செய்த ஆர்ப்பாட்டங்களை மனதிற்கொண்டு அந்த வாதம் வைக்கப்பட்டிருக்கலாம். அவர்கள் பொத்தாம்பொதுவாக எல்லா இடத்திலும் இறங்குவார்கள், ஜல்லிக்கட்டு உட்பட. நல்ல நோக்கத்தில் உண்டாக்கப்படும் மோசமான விளைவுகளுக்கு சமகாலத்தின் ஆகச்சிறப்பான எடுத்துக்காட்டு பிராணிவதை என்கிற இறுக்கமான கண்பட்டையைப் போட்டுக்கொண்டு களத்தில் குதிக்கும் செயல்பாடுகள்தாம். இந்த இடத்தில் பொருத்தமாக இருக்கும் என்பதால் தியடோர் பாஸ்கரனின் ‘கையிலிருக்கும் பூமி‘ நூலுக்கு முன்பு எழுதிய கட்டுரையிலிருந்து ஒரு பகுதி:

தமிழ்நாட்டில் காட்டுயிர் பாதுகாப்பையும் பிராணி நலனையும் குழப்பியடிப்பதால் வெகுசன ஆதரவு கிடைப்பதில் சிக்கல் வருகிறது என்கிறார். அதாவது மரக்கறி உண்பதை முன்வைப்பதோ, வீட்டுப்பிராணிகள் துன்புறுத்தப்படாமல் கவனித்துக்கொள்ள வலியுறுத்துவதோ காட்டுயிர் பாதுகாப்பிற்குத் தொடர்பற்றது. காட்டுயிருக்கான அக்கறைகள் வேறானவை. அவை காடுகளைப் பாதுகாப்பதிலும் அதன் தனித்துவமிக்கச் சமநிலையைக் கெடுக்காமல் நம் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ளுதலை அடிப்படையாகக் கொண்டவை.

ஒட்டகங்கள் கணக்கின்றிப் பெருகி நீராதாரத்திற்கான போட்டி உருவானதால் மற்ற உயிரினங்கள் அழிந்துபடும் ஆபத்து வந்தபோது, ஆஸ்திரேலியாவில் 10,000 ஒட்டகங்கள் இவ்வாண்டின் (2020) தொடக்கத்தில் சுட்டுவீழ்த்தப்பட்டது நினைவிருக்கலாம். அங்குபோய் ஜீவகாருண்யம் பேசுவதில் பொருளில்லை.

நாய்களுக்காக ‘இந்திய நாயினங்கள்’ என்ற அற்புதமான நூலை எழுதிய தியடோர் பாஸ்கரன், கவனிப்பாரற்றுத் திரியும் நாய்கள் கொல்லப்பட வேண்டியவையே என்பதை அழுத்தந்திருத்தமாக முன்வைக்கிறார். காந்தியே அதை வலியுறுத்தியிருப்பதையும் மேற்கோள் காட்டுகிறார். ஏனெனில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வீட்டுவிலங்காகப் பழகிவிட்ட நாய், கவனிப்பாரின்றி சாலையில் இரண்டுமூன்று தலைமுறைகள் திரிந்தாலே அவற்றின் குணம் மாறிவிடுகிறது. அவற்றுள் பல வெறிநாய்க்கடி பிரச்சனையைக் கொடுக்கின்றன.

இந்தியாவில் இது பெரிய சிக்கல். நாய்களைக் கொல்லவும்கூடாது வெறிநாய்க்கடியையும் தவிர்க்கவேண்டும் என்றால் நடவாது என்கிறார். விலங்குகளைக் கவனிப்பதில் மிகுந்த அக்கறைகொண்ட நாடாகக் கருதப்படும் இங்கிலாந்திலும் சாலையில் திரியும் நாய் பிடிக்கப்பட்டால் குறிப்பிட்ட காலத்திற்கு யாரும் தேடிவந்து பெற்றுக்கொள்ளாவிட்டால் கண்ணியமாக உயிர்த்தியாகம் செய்விக்கப்படுகிறது. மற்றபடி கவனிப்பாரற்றுத் திரியும் நாய்களைக் கொல்வதற்குப் பதிலாகக் கருத்தடைசெய்து கட்டுப்படுத்தலாம் என்பதெல்லாம் ஆகாவழித் தீர்வுகளாக ஏற்கனவே நிரூபிக்கப்பட்டுவிட்டன என்கிறார்.

ஆடுகளைக்கொல்லும் நாய்களைக் கொல்வதற்கு பதிலாக அவற்றுக்குக் கருத்தடை செய்துவிட ஒருமுறை பரிந்துரைக்கப்பட்டபோது, ஆட்டுக்கிடை முதலாளி ஒருவர், நாய்கள் ஆடுகளைக் கொல்லாமல் சினைப்படுத்த முயன்றால் அந்த யோசனை பலனளிக்கும் என்றாராம்!

மீண்டும் கோபுரத் தற்கொலைகள் நூலுக்கு வருவோம். இந்த உயிர்ப்பலித் தடைச்சட்ட விஷயத்தில் ஆசிரியர் எடுத்துக்காட்டியுள்ள ஒரு சிறிய ஆனால் அருமையான பகுதி என்னவென்றால், இந்துத்துவர்களும் திராவிடர் கழகத்தினரும் தடையை வரவேற்பதுதான்! முன்னவர் வரவேற்பது பெருந்தெய்வ – சிறுதெய்வ வழிபாட்டு வேறுபாடுகளைக் களைந்து ஒரேகுடைக்குள் கொண்டுவருவதற்கு என்றால் பின்னவர் வரவேற்பது ஆரிய வழிபாடோ திராவிட வழிபாடோ எங்கிருந்தாலும் சீர்திருத்தம் வரவேற்கத்தக்கதே என்கிற அடிப்படையில். இவ்விரு பிரிவினரும் வேறு எந்த பிரச்சனைக்காவது ஒன்றாகக் குரல் கொடுத்துள்ளார்களா என்பது ஆய்வுக்குரியது.

இந்த விலங்குப்பலித் தடைச்சட்டம் குறித்த ஆய்வுக்கட்டுரையின் இறுதியில் ஆசிரியர் எழுதியிருக்கும் அழகான ஒரு கருத்தை இங்கு அவசியம் மேற்கோள்காட்ட வேண்டும்:

“மனித மாண்புகளைச் சிதைக்கும் மனித உரிமைகளைப் பறிக்கும் சடங்குகளை மரபு என்ற பெயரால் அல்லது மண்ணின் பாரம்பரியம் என்ற பெயரால் ஆதரிக்க முடியாது. இதனால்தான் உடன்கட்டை ஏறலும் குழந்தை மணமும் தீண்டாமையும் சட்டத்தின் வாயிலாகத் தடைசெய்யப்பட்டன. இத்தடையை மரபு என்ற பெயரால் சனாதனிகள் மீறாது பார்த்துக்கொள்வது மனித நேயச் சிந்தனையாளர்களின் கடமை. அதே நேரத்தில் மூட நம்பிக்கை ஒழிப்பு என்ற பெயரால் மக்களின் பாரம்பரிய உணர்வுகளையும் நம்பிக்கைகளையும் ஓர் ஆணையின் மூலம் பறிப்பது ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல. உண்மையான கல்வியும், நிகழ்கால வாழ்வுக்கான உத்தரவாதமும், எதிர்காலம் குறித்த அச்சமின்மையும் அடித்தள மக்களிடம் சென்றடைந்தால் அவர்களாகவே பல்வேறு காலத்துக்கொவ்வா மரபுகளிலிருந்து தம்மை விடுவித்துக்கொள்வர்.”

சிங்கப்பூரில் தீமிதி தலைமுறைகளாகத் தொடரும் அதேவேளையில் சாட்டையடி கொடுக்கப்பட்டபின் தீமிதிக்க இறங்கும் வழக்கமும் விலங்குப்பலியும் நிறுத்தப்பட்டுவிட்டதை நளினா கோபாலின் ஆய்வுக்கட்டுரை காட்டுகிறது. மரபுகளின் மாற்றங்களைப் பொறுத்தவரை மேலே ஆய்வாளர் சிவசுப்பிரமணியன் குறிப்பிட்டுள்ள ‘காலத்துக்கொவ்வா’ என்பதுடன் ‘இடத்துக்கேற்ற’ அல்லது ‘சூழலுக்கேற்ற’ என்பதையும் சேர்த்துக்கொள்ளலாம். மரபுகள் ஓர் இனக்குழுவுடையவை என்றாலும் அவை பொதுவெளியில் நிகழும்போது பிறர்பார்வையையும் (perception) சேர்த்துக்கொண்டு மாற்றங்கள் நிகழ்கின்றன. அது அவசியமான தேவையும்கூட.

ஆசிரியரின் எடுத்துக்காட்டுகளாக உடன்கட்டை, குழந்தைத் திருமணம், தீண்டாமை ஆகிய பிரச்சனைகளில் மக்கள் ஒருபக்கம் மரபுமீறலுக்கு இயலாத நிலை மறுபக்கம் குற்றவுணர்ச்சியோடு மனசாட்சியுடன் மல்லுக்கட்டுவது என்று தவித்து வந்திருக்கக்கூடும். ஒரு சட்டம் அதைத் தடுக்கிறது என்றவுடன் உடனே சட்டத்தின்மீது பழியைப்போட்டு, மனசாட்சிக்கு ஆதரவாக, மரபை மீற ஒரு வழி உண்டாகியிருக்க வேண்டும். வழிபாட்டு விலங்குப்பலி விஷயத்தில் அப்படியான மனசாட்சி மல்லுக்கட்டலோ குற்றவுணர்ச்சியோ மக்களிடம் இல்லை என்பதுதான் அச்சட்டத்திற்கு நடைமுறை ஏற்பு பெருகாதது மட்டுமின்றி எதிர்ப்பும் வலுத்த காரணமாக இருக்கலாம் என்பது என் ஊகம்.

இந்த இடத்தில் விலங்குப்பலி தொடர்பான ஓர் இலக்கிய இடைவெட்டு.

விலங்குப்பலித் தடையிலுள்ள இந்துத்துவ அரசியலை (சிறுதெய்வ மேனிலையாக்கம்) விளக்கும் கதையாக ஜெயமோகனின் புகழ்பெற்ற ‘மாடன் மோட்சம்‘ சொல்லப்படுவதுண்டு. மாடன் மோட்சம் நல்ல கதைதான் ஆனால் அது மேனிலையாக்கத்தை மையப்படுத்தியது. அதன் ஒரு பகுதியாக மாடனுக்கு விலங்குப்பலி மறுக்கப்படுவதும் வருகிறது. அதைவிட நேரடியாகவே விலங்குப்பலித் தடைச்சட்டத்தின் பல்வேறு முகங்களைக் காட்டும் ஒரு சிறப்பான சிறுகதை மேலாண்மை பொன்னுச்சாமியின் ‘காலப்பார்வை’. அவரது ‘மின்சாரப்பூ’ தொகுப்பில் உள்ளது.

திடீர்திடீரென்று வலிப்பு வந்துதுடிக்கும் மகளை நோயிலிருந்து விடுவித்தால் கிடாவெட்டிப்  படையலிடுவதாக தன் குலதெய்வத்துக்கு நேர்ந்துகொள்கிறாள் ஒரு கரிசல் கிராமத்துத் தாய். மகளுக்கு முறையான மருத்துவமும் ஒரு பக்கம் நடக்கிறது. எப்படியோ வலிப்புநோய் தீர்ந்துவிடுகிறது. வேண்டிக்கொண்டபடி படையல்போட ஏற்பாடு செய்கையில் அரசு பலிகொடுப்பதைத் தடைசெய்யும் சட்டத்தைத் தீவிரமாகச் செயல்படுத்துகிறது. நேர்ந்துகொண்டு நிறைவேற்றாவிட்டால் தெய்வக்குத்தமாகி மீண்டும் தன் மகளுக்கு வலிப்பு திரும்பிவிடுமோ என்று தாய் அஞ்சுகிறாள்.

கிராம நிர்வாக அதிகாரியை எப்படியாவது சரிக்கட்டி பலியை கமுக்கமாக நடத்திவிடலாமென்று முயலும்போது, தான் பதவி இடைநீக்கம் செய்யப்பட்டு சமீபத்தில்தான் மீண்டும் வேலையில் சேர்ந்துள்ளதால் பலிக்கான அனுமதி மட்டும் கொடுக்கவே முடியாது என்று அவர் உறுதியாக மறுத்துவிடுகிறார். ‘ஏங் குலை கொதிக்குதே..நெஞ்சு எரியுதே..எம்புள்ளையை காப்பாத்த நேத்திக்கடன் செலுத்தவுடாம… குறுக்க நிக்குறவுக வெளங்குவாகளா? எங்கொல தெய்வம் சும்மாவுட்ருமா? கேக்காம வுட்ருமா?’ என்று அத்தாய் மார்பிலறைந்து ஒப்பாரிவைத்து அந்த அதிகாரி வீட்டிலேயே அரற்றுவதுடன் கதை முடிகிறது.

இதுதான் கதையின் சுருக்கம். கதைக்குள் இரண்டு முக்கியமான காட்சிகள் இருந்தன.

முதலாவது, கிடாய் முத்துவீரனுக்காக வெட்டப்படும்போது ஐயனார் சன்னதியின் திரையை மூடிவிடுகிறார்கள். ஏனெனில் ஐயனாருக்குக் கவிச்சி ஆகாது. இரண்டாவது, அசைவம் சாப்பிடப் பிடிக்காதவர்கள் ஒன்றிரண்டுபேர் வந்தால் தேவைப்படுமே என்று ஆட்டுக்கறி சமைப்பவர் சுத்தபத்தமாகக் கொஞ்சம் சாம்பாரும் வைக்கிறார்.

‘பன்மை’ச் சமூகத்தின் பண்பாட்டுக்கூறுகள் தன்னியல்பாக ஒன்றன்மீது மற்றொன்று காட்டும் அக்கறையை மையப்படுத்தும் இக்கதை, சமூகத்தில் காலங்காலமாக இயல்பாக இருந்துவரும் இவ்வக்கறையை புரிந்துணர்வை ஏன் அதிகாரம் தேவையின்றித் தலையிட்டுக் குலைத்து ‘ஒருமை’ப்படுத்த நினைக்கிறது என்கிற கேள்வியை எழுப்புகிறது. இக்கதையை வாசித்ததும்தான் எனக்குப் பொன்னுச்சாமியின் எழுத்துக்களின்மீது பிரியமுண்டானது.

‘காலப்பார்வை’ கதையில் எந்தப் பிரச்சாரமும் கிடையாது. இடதுசாரி எழுத்தாளரென்றால் பிரச்சாரமாக இருக்கும் என்பதுதான் பொய்ப்பிரச்சாரம்! மேலே சொன்ன கருத்தெல்லாம் கதையிலிருந்து நானாக உணர்ந்துகொண்டதுதான். மேலும் பெருந்தெய்வத்துக்கு மட்டுமல்ல, ஐயனாருக்கும் கவிச்சி ஆகாது என்பதையும் ஆனாலும் அதை நீக்குப்போக்குடன் கையாளும் ஒரு நடைமுறை பலகாலமாக ஏற்கெனவே பயன்பாட்டில் இருக்கிறது என்பதும் பொன்னுச்சாமி போன்ற ஒரு மண்ணின் கலைஞனால்தான் சொல்லமுடியும்.

குலதெய்வங்களின் உணவுப்பழக்கம் குறித்து சொந்த அனுபவங்களால் வெகுகாலமாகவே எனக்குப்பல ஐயங்கள் உண்டு. எம் குலதெய்வமான முனீஸ்வரனுக்கு நாங்கள் பலி கொடுப்பதில்லை, கள்ளு சாராயம் பீடி சுருட்டு வைப்பதில்லை. அடையும் களியும்தான். ஆனால் அதே ஆலயத்தில் பிறர் பலிகொடுக்கின்றனர். மேலும் சிறுதெய்வங்கள்தான் காலப்போக்கில் மேனிலையாக்கமும் நிறுவனமயமும் ஆகிப் பெருந்தெய்வங்களாக ஆகின்றன என்கிற கருத்தாக்கத்திலும் எனக்குக் கேள்விகள் இருந்தன. பத்தாண்டுகளுக்குமுன் இதை ஜெயமோகனிடம் கேட்டுள்ளேன். அதற்கு அவர் இந்தியக் குடும்பங்களின் இறைவழிபாடு ஒரு தத்துவமரபு, ஒரு குலமரபு என இரண்டு தளங்களில் செயல்படுவதாக ஒரு விளக்கத்தை முன்வைத்தார். அதாவது சைவமோ, வைணவமோ, பௌத்தமோ தத்துவத்தளத்தில் மாறிக்கொண்டே இருக்கலாம் ஆனால் குலமரபு மாறாமல் நீடிக்கும். ஆயினும் தத்துவமரபிற்கேற்ப (எடுத்துக்காட்டாகத் தத்துவத்தளத்தில் பௌத்தம் என்றால் குலமரபில் ஊன்பலி நிறுத்தப்பட்டுவிடும்) சில தாக்கங்கள் குலமரபுக்குள் வரும். விஷயம் மேன்மேலும் சிக்கலாகிக்கொண்டே போவதைக் காணலாம்.

கோபுரத் தற்கொலைகள் நூலின் கடைசி நான்கு கட்டுரைகள் ஆசிரியரின் பார்வையுடன் இணைந்தோ எதிர்த்தோ வேறுகோணங்களை உள்ளடக்கியோ பல புள்ளிகளைத் தொடும் சிந்தனைகளை எழுப்பக்கூடியவை, எனக்கு எழுப்பின. சித்தர்கள்: மீறலே மரபாய் கட்டுரையில் மாற்றுக்கருத்து (dissent), எதிர்ப்பு (protest), சீர்திருத்தம் (reform) என சமூக மரபுகள் மாற்றியமைக்கப்படும் படிநிலைகளாக ஒரு கோட்பாட்டை ஆசிரியர் முன்வைக்கும் இடம் ஆழ்ந்து சிந்திக்கத்தக்கது.

ஆர்வமுள்ளோர் அவசியம் வாசித்துப் பார்க்கவேண்டும்.

***