சுற்றியிருந்த சிறு சிறு கிராமங்களிலிருந்து கம்பளி போர்த்திய மலைவாசிகள் மூட்டைகளைத் தோளில் சுமந்தபடி சந்தை மைதானத்திற்கு வந்து சேர்ந்துகொண்டிருந்தனர். பலாப்பழம், அன்னாசி, தேன், ஜாதிக்காய், விதவிதமான கோழிகள் என விற்பனைக்கு வந்துகொண்டிருந்தன. தரையில் ஜமுக்காளத்தைப்போட்டு, ஓரத்தில் கற்களை வைத்து, கடைகளை ஒவ்வொன்றாக விரிக்க ஆரம்பித்தனர்.

(வல்வில் ஓரியும் கொல்லிப்பாவையும் கட்டுரை, பக்.251)

பொதுவாசிப்பிற்காகக் கட்டுரை எழுதுவது மொழிப்பயிற்சியுள்ள எவர்க்கும் ஆகக்கூடிய காரியம்தான் என்பதுபோலத் தோற்றமளிக்கிறது. ஆனால் ஒரு கட்டுரையை உயிர்ப்புடன் எழுதுவது பெரிய சவால். உயிர்ப்புடன் என்றால், கட்டுரையின் தகவல்கள் வாசகர் எண்ணத்தில் உறைக்கவேண்டும், மொழிநடை   சுவாரஸ்யம் குன்றாமல் செல்லவேண்டும், வாசித்தபின் கட்டுரை கொடுக்கும் தாக்கம் வலுவாக இருக்கவேண்டும். விஷயாதியாக இருப்பதோடு காட்சிப்படுத்தும் எழுத்துத்திறனும் ஒரு கட்டுரையாளருக்குத் தேவைப்படுகிறது என்பதற்கு மேலே கொடுத்துள்ள பத்தி ஓர் எடுத்துக்காட்டு.

சு.தியடோர் பாஸ்கரனின் கட்டுரைகளில் ‘கையிலிருக்கும் பூமி’ (உயிர்மை வெளியீடு, 2018) நூலிலும்சரி இதற்கு முன்னர் நான் வாசித்த அவருடைய நூல்களிலும்சரி ஒன்றைக்கூடச் சோடை என்று என்னால் ஒதுக்கமுடியவில்லை. இவருடைய எழுத்துகளுடன் எனக்கு 2014ஆம் ஆண்டுமுதல் உண்டான அறிமுகம், அவருடைய பன்முக ஆளுமை போன்றவற்றைக் குறித்து இவ்விணைப்பில் வாசிக்கலாம்.

‘கையிலிருக்கும் பூமி’ இயற்கை, காட்டுயிர் சார்ந்து ஆசிரியர் 2000~2015 ஆண்டுக் காலகட்டத்தில் எழுதிய 100 கட்டுரைகளைத் தொகுத்து உருவாக்கப்பட்டுள்ள நூல். உயிரினங்கள், உறைவிடங்கள், கருத்தாக்கங்கள், பங்களிப்பாளர்கள், விவாதங்கள், வளர்ப்புப்பிராணிகள், மொழி ஆகிய தலைப்புகளின்கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ள இக்கட்டுரைகள் வாசிப்பதற்கான தொடர்ச்சியுடனும் ஒரே செய்தி, கருத்து மீளமீள வருவது மிகக்குறைவாகவும் அமைக்கப்பட்டுள்ளன. 560 பக்கங்கள்.

IMG_6105

சுற்றுச்சூழல் சமநிலையில் இருக்கவேண்டுமானால் நிலப்பரப்பில் மூன்றில் ஒருபங்கு (33%) காடுகளாக இருக்கவேண்டும் என்ற சூழலியளார் கருத்தைப் பலகட்டுரைகளில் தவறாது குறிப்பிடும் ஆசிரியர், தமிழ்நாட்டில் 17.5% மட்டுமே உள்ளது என்று சுட்டிக்காட்டுகிறார். இங்கு காடு என்பதை வெறுமே மரங்களும் செடிகொடிகளும் அடர்ந்த பகுதியாக நாம் கற்பனை செய்துகொள்ளக்கூடாது. ஒரு காட்டை நாம் ஒருபோதும் உருவாக்க முடியாது, ஏற்கனவே உள்ள காடுகளைப் பாதுகாக்க மட்டுமே இயலும். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகத் தாவரங்களும் விலங்குகளும் பூச்சிபொட்டுகளும் இயற்கையாக ஒருங்கிணைந்து, தகவமைத்துப் பெருக்கமடைந்த பிணைப்புதான் காடு என்பதை ஆசியரின் கட்டுரைகள் உணர்த்துகின்றன.

இயற்கைப் பாதுகாப்பும் (conservation) நாட்டின் பொருளாதார வளர்ச்சியும் எதிரெதிர்த் திசைகளில் இழுக்காமல் பார்த்துக்கொள்வது சவாலான ஒன்றுதான் என்றாலும் அதிலிருந்து நம் அக்கறை நழுவிடக்கூடாது என்று சிங்கப்பூரின் தேசமேம்பாட்டிற்கான இணையமைச்சர் டெஸ்மண்ட் லீ  ஒரு விவாதத்தில் பேசியதை நான் கேட்டுள்ளேன். தியடோர் பாஸ்கரன் இவ்விஷயத்தில் ஒரு பொருத்தமான உவமையைச் சொல்கிறார்: வங்கியில் முதலீட்டை வைப்புத்தொகையாக வைத்து வட்டியை மட்டும் எடுத்துச் செலவிடுவதைப்போல காட்டை நாம் பயன்படுத்திக்கொள்ளலாம் என்கிறார். ஓரிரு அடிகளை விட்டுவிட்டு மீண்டும் துளிர்க்குமாறு மர அறுவடை செய்வது, கால்நூற்றாண்டுக்குச் சில காட்டுப் பகுதிகளில் கைவைக்காமல் விடுவது என ஹ்யூகோ வுட்டின் coppice method குறித்து எழுதுகிறார்.

மாங்குரோவ் காடுகள் என்று அறியப்படும் அலையாத்திக் காடுகள் கடலலையின் சீற்றத்தைத் தணிக்கும் இயற்கைப் பாதுகாப்பு அரண். இவற்றின் அருமை உணரப்படாமல் அதிகமாக அழிக்கப்பட்டுவிட்டன. 2004இல் சுனாமி தாக்கியபோதுதான் அலையின் தாக்கத்தை ஆற்றுப்படுத்தும் இந்த அலையாத்திக் காடுகளின் பெருமை பரவலாக உணரப்பட்டது. இந்த விஷயமும் நூலில் பல இடங்களில் கவனப்படுத்தப்படுகிறது. சிங்கப்பூர் முற்றிலும் நகரமயமாக்கப்பட்டுவிட்டதாகத் தோற்றமளித்தாலும் தேடிச்செல்வோரை ஆச்சரியப்படுத்தும் விதமாகப் பல்வேறு அரிய தாவரங்களும், உயிரினங்களும் கொண்ட நிலப்பரப்பாக இருக்கிறது. சுங்கை பூலோ மற்றும் உபின் தீவுப் பகுதிகளில் அலையாத்திக் காடுகள் பாதுகாப்பு முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இயற்கையின் தகவமைப்புகள் குறித்த அறிவியல் அடிப்படைகளைத் தியடோர் பாஸ்கரன் விளக்கும்போது ஆச்சரியமும் நிறைவும் ஒருங்கே கிடைக்கின்றன. எடுத்துக்காட்டாக, கடல்மட்டத்திலிருந்து அதிக உயரத்திலுள்ள பகுதிகளில் வாழும் பறவைகளுக்கு நுரையீரல் பெரிதாக இருக்கவேண்டிய தேவை இருக்கிறது. ஏனெனில் அங்கு ஆக்ஸிஜன் எனப்படும் உயிர்க்காற்று குறைவு. இந்தக் காரணத்தால் சமநிலத்தில் வாழும் ஒரு கொண்டைக்குருவியை (புல்புல்) விட மலையில் வாழும் அதே இனப்பறவை உருவத்தில் பெரியதாக இருக்கும் என்கிறார். இதற்கு உயிரியலில் ‘பெர்க்மன் விதி’ என்று பெயராம்.

அதைப்போலக் காட்டில் தாவரங்களுக்கும் விலங்குகளுக்கும் இடையேயுள்ள பிணைப்புகள் குறித்து வாசிக்கும்போதும் உள்ளெழுச்சி உண்டாகிறது. எடுத்துக்காட்டாக, கொன்றை விதைகளை நாம் விதைத்து வளர்க்கவேண்டுமானல் அதன் கடினமான மேல்தோலை இளக்குவதற்காக 24 மணி நேரம் ஊறவைத்துத்தான் மண்ணில் ஊன்றவேண்டியுள்ளது. ஆனால் காட்டில் இம்மரங்கள் தானாகவே வளர்கின்றன, எப்படி? நரி, காட்டுப்பன்றி, குரங்கு போன்ற உயிரினங்கள் கொன்றைப் பழங்களை உண்ணும்போது விதைகள் அவற்றின் வயிற்றில்சென்று ஊறி, பிறகு அவை விலங்குக் கழிவுகளின் வழியாக வெளியேறிப் பல்வேறு இடங்களில் விழுவதால் முளைத்துக்கொள்கின்றன. ஆக கொன்றை போன்ற தாவரங்கள் ஒரு விலங்கின் உணவுப்பாதைக்குள் சென்று வெளியேறாமால் காட்டில் நீடித்திருக்கவியலாது. எப்பேர்ப்பட்ட பந்தம்!

பாம்புக்கடிக்கு மந்திரிப்பது என்பது சமீபகாலம்வரைத் தமிழ்நாட்டில் வழக்கத்திலிருந்த ஒன்று. இது மூடத்தனம் என்று ஒதுக்கிவிட்டு நகர்ந்துவிடாமல் அம்மூடப் பழக்கம் எவ்வாறு வந்திருக்கவேண்டும் என்று ஆசிரியர் சிந்திக்கிறார். கிண்டி பாம்புப்பண்ணையைத் தோற்றுவித்த ரோமுலஸ் விட்டேகர் ஆசிரியரின் நண்பர். அவரிடமிருந்து பாம்புக்கடி குறித்த பல உண்மைகளைப் பெற்று நமக்குத் தருகிறார்.

ஆளைக்கொல்லும் விஷமுடைய பாம்புகள் தமிழ்நாட்டில் நான்கு வகை மட்டும்தானாம். பிறவகைப் பாம்புகள் தீண்டினால் வலிக்கும், கடுக்கும் ஆனால் உயிராபத்தில்லை. அடுத்த விஷயம் அந்த விஷப்பாம்புகளிலும் பொய்க்கடி எனப்படும் dry bites சுமார் 85% என்கிறார். அதாவது பல் பதியும் ஆனால் விஷமிறங்காது. ஆகவே பெரும்பாலான பாம்புக்கடிகளுக்கு எந்த மருத்துவமோ, மந்திரிப்போ தேவைப்படுவதில்லை. இந்த இடத்தில்தான் மந்திரித்ததும் பிழைத்துக்கொள்ளும் நம்பிக்கைகள் நுழைகின்றன என்று ஊகிக்கிறார். நல்லவேளையாக பாம்புபிடிப்பதில் வல்லவர்களான  இருளர் சமூகத்தினர்கூட இப்போதெல்லாம் கடிபட்டால் மருத்துவமனைக்குச்சென்று விஷமுறிவு ஊசி போட்டுக்கொள்கின்றனர் என்கிறார்.

இயற்கை, அறிவியல் அறிவோடு ஆழ்ந்த பழந்தமிழிலக்கியப் பயிற்சி, வரலாற்றில் முதுகலைப்பட்டம் என்று இவரது எல்லைகள் விரிவதால் அவை கட்டுரைகளில் தேவையான இடங்களில் சந்தித்துக்கொள்கின்றன. அன்னம் (swan) என்பது தமிழ்நாட்டுப்பறவை அல்ல என்பதால் தமிழிலக்கியத்தில் வரும் அன்னம் பட்டைத்தலை வாத்துதான் (ban-headed goose) என்று அனுமானிக்கிறார். அதைப்போல வான்கோழி (turkey) ஓர் அமெரிக்கப்பறவை என்பதால், ‘கானமயிலாடக் கண்டிருந்த வான்கோழி’ வெண்பா ஔவையுடயதாக இருக்கமுடியாது என்கிறார். ஔவைதான் என்று விடாப்பிடியாக நின்றால் ஔவை காலத்தை 17ஆம் நூற்றாண்டுக்கு இழுக்கவேண்டியதிருக்கும்.

இந்த இடத்தில் இன்னொரு செய்தி. கானமயில் என்பது மயில் (peacock) அல்ல, The Great Indian Bustard எனப்படும் ஒரு பறவை. இது இந்தியாவில் மட்டுமே வாழும் பறவை என்பதால் இதைத்தான் தேசியப்பறவையாக இந்தியா முதலில் தேர்வு செய்ததாம் ஆனால் ‘பஸ்டர்ட்’ என்ற ஆங்கிலச்சொல்லில் ஓரெழுத்து மாறினால் கெட்டவார்த்தை வரும் என்று தேர்வுக்குழுவில் ஒருவர் சுட்டிக்காட்டியதால் அப்பெருமை மயிலுக்குப் போய்ச்சேர்ந்தது என்கிறார் தியடோர் பாஸ்கரன்.

காடுகளை அழித்துப் பணப்யிர்களான தேயிலை, ஏலக்காய், சின்கோனா போன்ற தோட்டப்பயிர்கள் (இவற்றைப் பசும்பாலைவனங்கள் என்று விளிக்கிறார்) அதிகரித்தது முதல் நிலை அழிவைக் கொணர்ந்தது என்றால், உணவுப் பயிர்களில் சேதம் விளைவிக்கும் ஒரு பூச்சியைக் கொல்வதற்காகத் தெளிக்கப்படும் பூச்சிக்கொல்லிகள் பல்வேறு நன்மைதரும் பூச்சிகளை அழிப்பது ஆழமான அடுத்தகட்ட அழிவைக் கொணர்கிறது.

முட்டைக்கோஸ், உருளைக்கிழங்கு தோட்டத்தில் பூச்சிக்கொல்லி தெளிக்கும் ஒலி ‘டுர்ர்ர்’ என்று ஊட்டி நகருக்கு வெளியே கோரகுந்தா பாதையில் பகலில் சென்றால் எப்போதும் கேட்கிறது என்கிறார். ஒரு வேதிவிஷத்தின் கொடிய தன்மை அதுதன் விஷத்தன்மை குறையாமல் பல்லாண்டுகள் இருப்பதுதான். மாட்டுவைத்தியத்தில் கொடுக்கப்படும் மருந்தின் விஷம் இறந்த மாடுகளை உண்ணும் பாறு கழுகளை அழிக்கிறது. பனிப்பிரதேசங்களில் வாழும் இனூட் மக்களுக்கும் தாய்ப்பாலுக்கும் சென்று சேர்கிறது. இயற்கை விவசாயத்திற்கு மீண்டும் திரும்பும் முனைப்புகள் உலகெங்கிலும் தொடங்கிவிட்டன. அது லாபமும் தருவதாக இருந்தால்தான் மனித இனம் தனக்குத்தானே நஞ்சூட்டிக்கொள்ளாமல் தப்பிக்கும்.

தமிழ்நாட்டில் காட்டுயிர் பாதுகாப்பையும் பிராணி நலனையும் குழப்பியடிப்பதால் வெகுசன ஆதரவு கிடைப்பதில் சிக்கல் வருகிறது என்கிறார். அதாவது மரக்கறி உண்பதை முன்வைப்பதோ, வீட்டுப்பிராணிகள் துன்புறுத்தப்படாமல் கவனித்துக்கொள்ள வலியுறுத்துவதோ காட்டுயிர் பாதுகாப்பிற்குத் தொடர்பற்றது. காட்டுயிருக்கான அக்கறைகள் வேறானவை. அவை காடுகளைப் பாதுகாப்பதிலும் அதன் தனித்துவமிக்கச் சமநிலையைக் கெடுக்காமல் நம் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ளுதலை அடிப்படையாகக் கொண்டவை. ஒட்டகங்கள் கணக்கின்றிப் பெருகி நீராதாரத்திற்கான போட்டி உருவானதால் மற்ற உயிரினங்கள் அழிந்துபடும் ஆபத்து வந்தபோது, ஆஸ்திரேலியாவில் 10,000 ஒட்டகங்கள் இவ்வாண்டின் தொடக்கத்தில் சுட்டுவீழ்த்தப்பட்டது நினைவிருக்கலாம். அங்குபோய் ஜீவகாருண்யம் பேசுவதில் பொருளில்லை.

நாய்களுக்காக ‘இந்திய நாயினங்கள்’ என்ற அற்புதமான நூலை எழுதிய தியடோர் பாஸ்கரன், கவனிப்பாரற்றுத் திரியும் நாய்கள் கொல்லப்படவேண்டியவையே என்பதை அழுத்தந்திருத்தமாக முன்வைக்கிறார். காந்தியே அதை வலியுறுத்தியிருப்பதையும் மேற்கோள் காட்டுகிறார். ஏனெனில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வீட்டுவிலங்காகப் பழகிவிட்ட நாய், கவனிப்பாரின்றி சாலையில் இரண்டுமூன்று தலைமுறைகள் திரிந்தாலே அவற்றின் குணம் மாறிவிடுகிறது. அவற்றுள் பல வெறிநாய்க்கடி பிரச்சனையைக் கொடுக்கின்றன.

இந்தியாவில் இது பெரிய சிக்கல். நாய்களைக் கொல்லவும்கூடாது வெறிநாய்க்கடியையும் தவிர்க்கவேண்டும் என்றால் நடவாது என்கிறார். விலங்குகளைக் கவனிப்பதில் மிகுந்த அக்கறைகொண்ட நாடாகக் கருதப்படும் இங்கிலாந்திலும் சாலையில் திரியும் நாய் பிடிக்கப்பட்டால் குறிப்பிட்ட காலத்திற்கு யாரும் தேடிவந்து பெற்றுக்கொள்ளாவிட்டால் கண்ணியமாக உயிர்த்தியாகம் செய்விக்கப்படுகிறது.

மற்றபடி கவனிப்பாரற்றுத் திரியும் நாய்களைக் கொல்வதற்குப் பதிலாகக் கருத்தடைசெய்து கட்டுப்படுத்தலாம் என்பதெல்லாம் ஆகாவழித் தீர்வுகளாக ஏற்கனவே நிரூபிக்கப்பட்டுவிட்டன என்கிறார். ஆடுகளைக்கொல்லும் நாய்களைக் கொல்லாமல் அவற்றுக்குக் கருத்தடை செய்துவிட ஒருமுறை பரிந்துரைக்கப்பட்டபோது, ஆட்டுக்கிடை முதலாளி ஒருவர், நாய்கள் ஆடுகளைக் கொல்லாமல் சினைப்படுத்த முயன்றால் அந்த யோசனை பலனளிக்கும் என்றாராம்! மேலும், திரியும் இந்த நாய்களைக் குறிவைத்துத்தான் அவ்வப்போது வேங்கைகள் நகருக்குள் நுழைகின்றன.

இயற்கை சார்ந்த கட்டுரைகள் எழுதுவதற்கு நம்மிடமிருக்கும் பாரம்பரியச் சொற்கள் பயன்படுத்தப்படமால் ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்ப்புச்செய்து எழுதும் அவலத்தைக் கண்டிக்கிறார் நூலாசிரியர். யானையும் புலியும் இல்லாத நாட்டின் மொழியில் அவ்விலங்குகளுக்கு  ஒற்றைப்பெயர்கள்தாம் இருக்கும் ஆனால் நம்மிடையே ஏழெட்டுப் பெயர்கள் உண்டு. ஆகவே அவற்றைப் பொருத்தமான இடங்களில் புழக்கத்திற்குக் கொணரவேண்டும் என்கிறார். அதோடு செய்தியாளருக்குத் தெரியவில்லை என்றால் ‘வினோத மிருகம்’ என்று எழுதிவிடுகின்றனர் என்கிறார். எடுத்துக்காட்டாக அலங்கு என்ற விலங்கு (பெ.தூரனின் கலைக்களஞ்சியம் ‘அழுங்கு’ என்கிறது – பக்.242) எறும்பைத் தின்னக்கூடியது. இதை எறும்புதின்னி (ஆங்கிலத்தில் anteater) என்று எழுதுவது, அருவியை நீர்வீழ்ச்சி (ஆங்கிலத்தில் waterfall) என்று எழுதுவதுபோல என்கிறார். கருநாகத்தை ராஜநாகம் (ஆங்கிலத்தில் king cobra) என்பதும் இப்படியே.

மேலும் மனிதமைய நோக்குடன் செய்திகளை வெளியிடுவதும் காட்டுயிர் குறித்த தவறான பார்வையை விதைக்கிறது என்கிறார். ‘யானைகள் அட்டகாசம்’ என்று தலைப்பிடுவது பிழை. அவை மனிதர்களைப்போல அட்டகாசம் செய்வதற்காக ஊருக்குள் நுழைவதில்லை. மாறாக, ‘வாழிடம் தேடும் யானைகள்’ என்று ஒரு சஞ்சிகையில் வந்திருந்த செய்தியை எடுத்துக்காட்டி அந்த அக்கறையை வலியுறுத்துகிறார். இது ஒருபுறமிருக்க, sustainable development, carrying capacity, desertification போன்ற துறைசார் கலைச்சொற்களுக்கு இணையானத் தமிழ்ச்சொல்லாடல்கள் உருவாக்கப்பட்டவேண்டிய தேவையும் இருக்கிறது. Bio-diversityயைப் பல்லுயிரியம் என்று ஆசிரியர் குறிப்பிட்டுள்ளது உற்சாகமாக இருந்தது. ‘பல்லுயிர் ஓம்புதல்’ என்று வள்ளுவர் சொன்னது இதுதான் என்கிறார். காட்டுயிர், பூவுலகு, துளிர் போன்ற இதழ்கள் இயற்கை சார்ந்த நல்ல தமிழ்க் கட்டுரைகளை வெளிடுவதைச் சுட்டிக்காட்டி அவற்றைப் பள்ளிகளில் பயன்படுத்தச் சொல்கிறார்.

விஷமே இல்லாத பல்லிக்கு விஷமிருப்பதாக நம்பவைத்துவிட்ட பள்ளிக்கூடச் சத்துணவில் பல்லிவிழும் சம்பவங்களின் பின்னால் ஊழல் இருப்பதையும், வீணாய்ப்போன காய்கறிகளும் உணவும் மாணவர்களுக்கு அளிக்கப்பட்டு அவர்கள் அவதியுறும்போது பழியைப் பல்லிமேல் போட்டுத் தப்பித்துக்கொள்வது காலகாலமாக நடந்துவருகிறது என்றும் அம்பலப்படுத்துகிறார். பல்லி இனமான உடும்புக்கறியை இன்றும் பலர் உண்பதைச்சுட்டிப் பல்லி விஷமற்றது என்கிறார்.

நூலில் என்னைக்கவர்ந்த இன்னொரு அம்சம் ஒவ்வொரு பெயரையும் ஊன்றிச் சிந்தித்து ஆசிரியர் எழுதும் ஊகங்கள். பெயரியல் துறை (toponomy) நம் கல்விப்புலத்தில் இன்னும் வளரவேண்டும் என்கிறார். ஏனெனில் பழமையான நாகரிகங்களில் இடப்பெயர்கள், ஊர்ப்பெயர்கள், இன்னபிற பெயர்கள் முக்கியமான புரிதல்களை அளிக்கவல்லவை. நீலகிரித் தொதுவர்கள் கிராமங்கள் மந்து என்று அழைக்கப்படுவதையும், ஒற்றைக்கல் மந்து ஆங்கிலத்தில் ஊட்டகமண்ட் என்று எழுதப்பட்டதையும், பின்னாளில் தமிழ்ப்பெயரிடும்போது மீண்டும் ஒற்றைக்கல் மந்து ஆக்காமல் ‘உதகமண்டலம்’ என்று பொருத்தமில்லாமல் ஆக்கிவிட்டதைப் பதிவுசெய்கிறார்.

மூணார் மலைப்பகுதிகளின் முதுவர்கள் எந்த உயரத்திலுள்ள தேனையும் பாடுபட்டு எடுத்துவிடுவதைக் குறிப்பிட்டு, ‘முதுவன் கொம்புத்தேனுக்கு ஆசைப்படுவது’ என்ற விடாமுயற்சியை வலியுறுத்தும் சொலவடையை நினைவூட்டுகிறார். முடவன் கொம்புத்தேனுக்கு ஆசைப்படுவதாக அது திரிந்துள்ளது. கடல் பாம்புகள், மீன்களை உண்ணும் ஆலா (white-bellied sea eagle) கழுகுதான் ‘ஆலாய்ப் பறப்பது’ என்ற வழக்கு உருவாகக் காரணம் என்றாராம் மா.கிருஷ்ணன்.

சினிமா வரலாற்று ஆய்வாளராகவும் இருப்பது இவருடைய எழுத்துக்குப் புத்துணர்ச்சி அளிக்கிறது. பலப்பல இடங்கள். கட்ச் குதிரைகள் குறித்து எழுதும்போது அலிபாபாவும் நாற்பது திருடர்களும் படம் உட்பட அனேகத் திரைப்படங்களில் வரும் குதிரைகள் இவ்வகையைச் சேர்ந்தவை என்கிறார். இரு காதுகளின் முனைகளும் ஒன்றையொன்று இடித்துக்கொள்ளுமாறு அமைந்திருப்பது இவைகளின் சிறப்பு.  ‘தமிழ்த்திரையில் காட்டுயிர்’ என்ற தனிக்கட்டுரை ஒன்றும் உள்ளது. படம் பார்க்கும்போதும் இயற்கை சார்ந்த கண்ணோட்டத்திலேயே பார்ப்பார் என்று நினைக்கிறேன். 1956இல் வெளியான அமரதீபம் படத்தில் சாவித்திரி அடையாறு பாலத்தில் போகும்போது பின்னணியில் தெரியும் சதுப்பு நிலக்காடுகள் அடர்த்தியாக இருப்பதையும் தற்போது குறைந்துவிட்டதாகவும் எழுதுகிறார்!

ஆஸ்திரிய நாட்டு விலங்கியலாளர் கான்ராட் லாரன்ஸின்,

இளைமையில் இயற்கையிலிருந்து விலகி வாழ்ந்தவர்கள் வாழ்வில் விழுமியங்கள் அற்றவர்களாக உருவாகின்றனர். கிராமப் புறத்தில் சுற்றியலைந்தவர், காடுகளில் நடந்து திரிந்தவர், நீருக்கடியில் பவளத்திட்டுகளின் வசீகரத்தைக் கண்டவர் பணத்திற்கும் அந்தஸ்திற்கும் அடிமையாக மாட்டார்.

(அறுபட்ட பிணைப்பு கட்டுரை, பக்கம் 360)

என்ற கோட்பாட்டை ஆமோதிக்கும் தியடோர் பாஸ்கரனின் இந்த நூல், நம் வாழ்க்கையைக் குறித்தும் நாம் வாழ்வதைக் குறித்தும் நமது பார்வைகளைத் திருப்பிவிடக்கூடிய ஆற்றல்வாய்ந்தது. தமிழின் அபுனைவு வரலாற்றில் முக்கியமான இடத்தைப் பிடிக்கிறது. உயிர்களுக்கிடையேயான பிணைப்பை விளக்கும் உயிருள்ள எழுத்து.

***