அன்புள்ள ஜெமோ,

இன்று ’நான் இந்து’ கேள்விக்கான பதிலைப்படித்ததும் மேக்ரோ அளவில் சில பொதுப்புரிதல்கள் ஏற்பட்டன. ஒரே ஓரிடம் இன்னும் நெருடுகிறது. அந்த நெருடலே இக்கடிதத்தின் ஊற்றுக்கண்.

எங்கள் குலதெய்வம் முனீஸ்வரன். வருடந்தோறும் படையல்போடுவது தொடர்ந்து என் குடும்பத்தில் இருந்துவருகிறது. முனிக்கு உயிர்ப்பலியும் சாராயமும் மிகவும் பிடித்தமான விஷயங்கள் என்பது பொதுவாக எல்லோராலும் ஒத்துக்கொள்ளப்பட்ட விஷயம் என்றாலும், இன்றும் கால்நடை பலிகள் நடைபெற்று வந்தாலும், உயிர்ப்பலி இடுவதில் விருப்பமில்லாத எங்கள் குடும்பமும் (பல தலைமுறைகளாக) இன்னும் பல குடும்பங்களும் சைவ உணவுகளையே படையலிட்டு வழிபட்டு வருகிறோம். வழிவழியாக பலியிட்டு பூசை செய்யும் குடும்பங்கள் அவர்கள் பழக்கத்தைக் கைவிடவும் இல்லை.

அதாவது குலதெய்வம் என்று ஆகிவிட்ட பின், ஒரு குறிப்பிட்ட வழிபாட்டுமுறை பின்பட்டுவிட்டபின், அதை மாற்றும் தைரியம் எந்த தலைமுறைக்கும் தானாக வராது என்பது உறுதி. தெய்வத்தின் கோபத்துக்கு ஆளாக யாரும் தயாரில்லை. பொதுவாக தெய்வத்திற்கு பிரியமானதாக நாம் கருதுவதை, நமக்கு பிடித்தாலும் இல்லையென்றாலும் அப்படியே படையலிடுவதுதான் வழக்கம்.

muniswaran

ஒரு சிறுதெய்வம், புகழ் காரணமாகவோ மற்ற குழுக்கள் சேர்ப்பு காரணிகளாலோ விரிவடையும் போது ஆதியான வழிபாட்டு முறைகள், குறிப்பாக உயிர்ப்பலியைக் கைவிடுதல் போன்ற ‘சென்சிட்டிவான’ விஷயங்கள் ’பொதுவாக ஏற்புடைய முறை’ என்பற்தாக ஏற்றுக்கொள்ளப்படாது என்றே நம்புகிறேன். சிறுதெய்வங்களே அருள்மிகு பெருந்தெய்வங்களாக மாறுகின்றன என்கிற இடத்தில் இது நெருடுகிறது.

குரங்கிலிருந்து மனிதன் வந்தான் என்றதும் ஏன் எல்லாக் குரங்கும் மனிதனாகவில்லை என்ற கேள்வி எழுவதுபோல் நாட்டார்தெய்வ மாறுதல் குறித்த கருத்திலும் எழுகிறது. அசைவ உணவுப் பழக்கமுள்ள சிறுதெய்வங்கள் ’காலப்போக்கில்’ சைவமாக மாறிவிட்டன என்று பொத்தாம்பொதுவாக என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

சில ஐயங்களை உங்கள் முன் வைக்கிறேன்:

·         சிறு தெய்வங்கள் பெரிய தெய்வங்களாக வளருகையில், எண்ணிக்கையில் பெரிய அளவில் பலிகள் நிகழ ஆரம்பித்து, அதன்மூலம் பெரும் கவனத்தையும் எதிர்ப்பையும் பெற்று, சைவ உணவுக்கு மாறவேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்ட வரலாறுகள், கதைகள் ஏதேனுமுண்டா?

·         பெரிய அளவில் பலியிடுவதில் இயல்பான குற்றவுணர்ச்சி ஏதும் மக்களுக்கு ஏற்பட்டு பெருந்தெய்வங்களின் வழிபாட்டுமுறைகள் மாறிய வரலாறு ஏதுமுண்டா? போரின் கொடுமையைப்பார்த்து புத்த மதத்திற்கு அசோகன் மாறினான் என்பதுபோல்?

·         ஆதியிலிருந்தே சைவ உணவுப்பழக்கமுள்ள தெய்வங்கள்தான் இப்போதிருக்கும் பெருந்தெய்வங்களா?

·         புத்த ஜைன மதங்கள் கோலோச்சிய காலங்களில் இந்துக்களின் சைவ/அசைவ தெய்வங்களை நிந்திப்பதில் பெரும் வேறுபாடுகள் ஏதும் காட்டப்பட்டதற்கான வரலாறு ஏதேனுமுண்டா?

·         கொன்று சாப்பிடும் மனிதர்கள் போல் அசைவ உணவு தெய்வங்கள் மனிதர்கள் போலானவைகள். சைவ உணவு தெய்வங்களே மேலானவைகள் என்று புது தெய்வங்களை அறிமுகப்படுத்திப் பிரச்சாரம் ஏதும் செய்யப்பட்டதா?

·         கடைசியாக, பலி என்ற ஆதி வழக்கத்திற்கு மாற்றாக பெரும் நிலபுலன்கள், பொருள், பணத்தை பெருந்தெய்வங்களுக்கு அறிமுகம் செய்த அரசியல் ஏதேனுமுண்டா?

 

ஆவலுடன்,

சிவா

*

 

அன்புள்ள சிவா

இந்தியாவின் வழிபாட்டுமுறைகளை எளிமையாக நம்மால் புரிந்துகொள்ளமுடியாது. அவை இந்தியாவின் பண்பாட்டு உருவாக்க வரலாற்றுடன் பின்னிப்பிணைந்து கிடக்கின்றன. இங்கே பல்வேறு இனக்குழுவினருக்கு பல்வேறு வகையான வழிபாட்டுமுறைகள் இருந்திருக்கலாம்.

பொதுவான அம்சமாக இருந்தவை நான்கு கூறுகள். 1. படையல் 2. சன்னதம் 3.வேடமிட்டு ஆடுதல். அவற்றுடன் வைதிகப்பண்பாடும் பின்னர் பௌத்த சமணப்பண்பாடுகளும் தொடர்ந்து உரையாடலில் இருந்தன. இனக்குழு வழிபாட்டுமுறைகள் வைதிக, பௌத்த, சமண மரபுகளுக்குள் சென்றன. வைதிக பௌத்த சமண மரபுகள் இனக்குழு மரபுகளை மாற்றியமைத்தன. இது ஒரு பெரும் வலைப்பின்னல் போல நூற்றாண்டுகளாக நிகழ்ந்துவந்த பரிணாமம்.

இந்தப் பரிணாமத்தில் ஒவ்வொரு தெய்வமும் எங்கே நிற்கின்றன என்பதே அதன் இயல்பைத் தீர்மானிக்கிறது. அதை வரலாற்றுக்கோணத்தில் ஆராய்ந்து புரிந்துகொள்வதே சிறந்த வழி

மேலும் பழங்காலத்தில் மக்கள் இரண்டுதள வழிபாட்டு முறைகளைக் கொண்டிருந்தார்கள்.  ஒரு தத்துவமதம் அவர்களின் மேல்தளத்தை கட்டுப்படுத்தியது. வைதிகமோ சமணமோ பௌத்தமோ. இம்மதங்கள் தங்கள் கொள்கைகளை மக்கள் ஏற்றுக்கொள்ளும்படி முயன்றனவே ஒழிய இன்றைய வழக்கப்படி தங்கள் நம்பிக்கைகளை நிராகரித்து தங்கள் மதத்தில்சேரும்படிச் சொல்லவில்லை.

ஆகவே இந்த மதங்களை ஏற்றுக்கொண்ட மக்கள் தங்கள் அடித்தளத்தில் அவர்கள் தங்கள் நாட்டார் தெய்வங்களையும் குலதெய்வங்களையும் வழிபட்டார்கள். ஒரு இனக்குழுவின் தத்துவத்தளத்தை வைதிகமோ சமணமோ பௌத்தமோ மாற்றியமைக்கும் என்றால் அவர்களின் நாட்டார்தெய்வ வழிபாடும் குலதெய்வ வழிபாடும்கூட மாற்றமடையும்.

உதாரணமாக ஓர் இனக்குழு பௌத்தமதத்தை தத்துவ தளத்தில் ஏற்றுக்கொண்டது என்றால் அவர்கள் அதன்பின் தங்கள் குலதெய்வத்துக்கு ஊன்பலி கொடுக்கமாட்டர்கள். வெறும் உணவுப் படையலுடன் நிறுத்திக்கொள்வார்கள்.

சிவருத்ரன் என வேதங்கள் குறிப்பிடும் தெய்வமே இன்றைய சிவன். அது இன்று தூயசைவ தெய்வமே. ஆனால் சிலநூற்றாண்டுகளுக்கு முன்புவரைக்கும் அது ஊன்பலி கொடுக்கப்பட்ட தெய்வமே. சில சைவக்குறுங்குழு வழிபாடுகளில் இன்றும் ஊன்பலி உண்டு. பெருந்தெய்வமாகிய துர்க்கை இன்றும் ஊன்பலி வாங்கும் தெய்வமே.

பௌத்த சமண மதங்கள் ஊன்பலிக்கும் வன்முறைக்கும் எதிரான பலநூற்றாண்டுக்கல பிரச்சாரத்தை தொடர்ந்து நடத்தியிருக்கின்றன. புத்தர் அவரே அந்த வகையான பிரச்சரத்தைச்செய்தார் என்று நாம் அவரது கதையில் காண்கிறோம். பிம்பிசாரன் அரண்மனையில் பலிகொடுக்க கொண்டுசெல்லப்பட்ட ஆடு ஒன்றை ஏந்தியபடிச் சென்ற புத்தர் பதிலுக்கு தன்னை பலிகொடுக்கும்படிக் கோரினார்.

கிமு இரண்டாம் நூற்றாண்டு முதல் எட்டாம் நூற்றாண்டு வரை ஆயிரமாண்டுக்காலம் ஊன் உணவு, ஊன்பலிக்கு எதிராக ஏராளமான பௌத்த சமண ஞானிகள் போராடினார்கள். நம்மிடையே இன்று ஊன்பலிமீது மட்டுமல்ல ஊன் உணவு மீதுகூட இருக்கும் மனவிலக்கம் அப்படி உருவானதே. ஒரு நல்ல நாளில் ஊன் உணவு உண்ணக்கூடிய தமிழகச் சாதிகள் மிகமிகக் குறைவே.

தமிழகப் பெருமதங்கள் பக்தி இயக்கக் காலகட்டத்தில் உருவானவை. அதாவது ஆறாம்நூற்றாண்டுக்குப் பின்னர். அப்போது பௌத்தசமண மதங்களின் செல்வாக்கு வலுவாக உருவாகிவிட்டிருந்தது. அவை இரண்டுமே தூய கொலைமறுப்பு பலிமறுப்பு மதங்களாக மாறிவிட்டிருந்தன. ஆனாலும் அபூர்வமாகச் சில ஆலயங்களில் ஊன்பலி தொடர்ந்தது.

அக்காலகட்டத்தில் பெருமதங்களுக்குள் சிறுமதங்கள் இணைந்தன. நாட்டார் தெய்வங்கள் உருமாறிக் கலந்துகொண்டன. அது ஒரு பெரிய பரிணாமம்.

ஜெ

**

[இந்த உரையாடல் 2011-12 காலகட்டத்தில் நடந்தது]