எழுத்தாளர் சுரேஷ் பிரதீப் Tamil Literary Talks என்னும் யூட்யூப் ஒளிவழி தொடக்கி அதில் இலக்கிய அடிப்படைகள் சார்ந்தும், வாசிக்க வேண்டிய புத்தகங்கள் தொடர்பாகவும் காணொளிப் பதிவுகளை வலையேற்றி வருகிறார். ஒவ்வொரு காணொளியும் ஏறக்குறைய 10 நிமிடம். அண்மையில் அவ்வொளிவழியில் ‘முப்பது நாட்கள் முப்பது நூல்கள்’ என்கிற தலைப்பில் 30 புத்தகங்களைக் குறித்து அறிமுகப்படுத்தினார். அவற்றுள் என்னுடைய கட்டுரைத் தொகுப்பு நூலான மிக்காபெரிசத்தையும் ஒன்றாகத் தேர்ந்தெடுத்துப் பேசியிருந்தார். அப்பேச்சின் எழுத்துவடிவம் இங்கே. சுரேஷ் பிரதீப்புக்கு நன்றி!

சிறுவயதில் எனக்கும் நண்பர்களுக்கும் ஒரு வித்தியாசமான பழக்கம் இருந்தது. தொலைக்காட்சியில் திரைப்படம் ஒளிபரப்பாகும்போது முதலில் வரும் ‘டைட்டில் கார்டு’ பெயர்களைக் கூர்ந்து பார்ப்போம். ‘சண்டைப்பயிற்சி’ என எவருடைய பெயரும் வரவில்லையென்றால் அந்தப்படத்தைப் பார்க்கமாட்டோம். சண்டை இல்லாத படத்தில் என்ன சுவாரஸ்யம் இருந்துவிடப்போகிறது என்று அந்த வயதில் ஓர் எண்ணம்! அப்படித்தான் எனக்குத் திரைப்படத்தில் பங்களித்தவர்களின் பெயர்களைப் பார்க்கும் பழக்கம் வந்தது.

ஹாலிவுட் திரைப்படங்களில் படம் முடிந்தபிறகு ஐந்து பத்து நிமிடத்திற்கு நூற்றுக்கணக்கான பெயர்கள் நிரைநிரையாக வந்துகொண்டே இருக்கும். ஒரு திரைப்படம் உருவாக இத்தனைபேர் பங்களிக்க வேண்டியிருக்கிறது என்று அதைப் பார்த்தபோதுதான் புரிந்தது. பொதுவாக ஒரு படத்தின் நாயகன், நாயகி, இயக்குநர், இசையமைப்பாளர் என மிகச்சிலரோடு நம் கவனம் நின்றுவிடுகிறது. இலக்கியத்திலும் அப்படித்தான். நாவலாசிரியர், கவிஞர், சிறுகதையாளர் என ஒருசில வகையினரையே இலக்கியவாதிகள் என்றதும் நினைவுகூர்கிறோம். ஆனால் இலக்கியம் என்பது அச்சிறு பிரிவினரை மட்டும் உள்ளடக்கியதன்று. சொல்லப்போனால் படைப்பிலக்கியவாதிகள் சிறப்பாகச் செயல்படுவதற்கு வேறுபலரும் தேவையாகின்றனர். உலக இலக்கியங்களை உள்ளூர் மொழிக்குக் கொண்டுவரும் மொழிபெயர்ப்பாளர், பகுப்பாய்வு செய்யும் திறனாய்வாளர் போன்ற பல்வேறு பிரிவினரின் பன்முகப் பங்களிப்புகளுடன் மட்டுமே ஒரு சூழல் செழுமையாகத் தொடரமுடியும்.

இன்று தமிழிலக்கியப் பரப்பு என்பது இந்தியா, இலங்கை என இரண்டு நாடுகளோடு முடிந்துவிடும் ஒன்றல்ல. சிங்கப்பூர், மலேசியா, ஆஸ்திரேலியா, கனடா எனப்பல்வேறு நாடுகளிலிருந்தும் தமிழிலக்கியம் படைக்கப்படுகிறது. சிவானந்தம் நீலகண்டன் எழுதி, யாவரும் பதிப்பக வெளியீடாக, சிங்கப்பூரிலிருந்து வந்துள்ள மிக்காபெரிசம் நூலை அப்படியானவொரு பங்களிப்பைச் சூழலின் வரலாற்றுக்கு அளிக்கும் புத்தகமாக அணுகலாம்.

மிக்காபெரிசம் ஒரு கட்டுரைத் தொகுப்பு என்றாலும் கட்டுரைத் தொகுப்புகளின் பொதுப்போக்கிலிருந்து வேறுபட்டது. உதிரிக் கட்டுரைகளாக எழுதப்பட்டுத் தொகுக்கப்படும் கட்டுரைகள், பொதுவாக, அவை எழுதப்பட்ட காலத்தின் தேவையாக இருந்த விஷயங்களைப் பேசியவையாக இருக்கும். அவை தொகுக்கப்படும்போது அக்கட்டுரைகளுக்கான தேவை குறைந்திருக்கும். மிக்காபெரிசம் தொகுப்பிலும் கட்டுரைகள் பல்வேறு தலைப்புகளைத் தொட்டுப் பேசினாலும் கட்டுரையாசிரியரின் பிரக்ஞை அனைத்துக் கட்டுரைகளிலும் செயல்பட்டுள்ளதால் இக்கட்டுரைகள் முக்கியத்துவம் பெறுகின்றன.

மிக்காபெரிசம் தொகுப்பின் கட்டுரைகளை மூன்று வகைகளாகப் பிரிக்கலாம்; முதலாவது, சிங்கப்பூர் இலக்கிய வரலாற்று உருவாக்கத்தைப் பற்றியவை. இரண்டாவது, சிங்கப்பூர்த் தமிழர் வரலாற்றைப் பேசுபவை. மூன்றாவது சிங்கப்பூரின் பணிச்சூழலைக் குறித்தவை. முதல் இரண்டு வகைகளும் ஒன்றோடன்று பின்னிப் பிணைந்து வெளிப்படுகின்றன எனலாம். மூன்றாம் வகையைச் சிங்கப்பூர்ப் பணிச்சூழல் என்றும் பார்க்கலாம் சர்வதேசப் பணிச்சூழல் என்று பொதுமைப்படுத்தியும் பார்க்கலாம்.

சிங்கப்பூரின் முதல் காலை நாளிதழாக ஓர் ஆங்கில நாளிதழைத் தொடங்கி நடத்தியவர் ஒரு தமிழர் என்ற தகவல் வரும் கட்டுரை, அத்தகவலின் சுவாரஸ்யத்துக்காகவோ தமிழ் வாசகர்களைக் கிளர்ச்சியடையச் செய்வதற்கோ அல்லாமல், தன்னுடைய தேடல் எப்படித் தொடங்கி எங்கே விரிந்துசென்றது என்பதை முன்வைப்பதாக அமைந்துள்ளது. தலைப்புக் கட்டுரையான மிக்காபெரிசமும் இன்னொரு கட்டுரையும் சிங்கப்பூரில் வாழும் புலம்பெயர் இல்லப் பணிப்பெண்களின் பிரச்சனைகளைப் பேசுகின்றன. இக்கட்டுரைகள் ஒருசில நூல்களிலிருந்து எடுத்த தகவல்களின் தொகுப்பாக அளிக்காமல் ஒவ்வொரு சிக்கலையும் அதன் வரலாற்றுப் பின்புலத்தில் பொருத்திக் காட்டுகிறார் கட்டுரையாசிரியர். எடுத்துக்காட்டாக, வெளிநாட்டு வீட்டுவேலைக்காரிகள் என அழைக்கப்பட்ட இடத்திலிருந்து தற்போது புலம்பெயர் இல்லப் பணிப்பெண்கள் என கௌரவமாக அழைக்கப்படும் இடத்திற்குப் பெயர்கள் மாற்றமடைந்த வரலாற்றை நுண்மையாகத் தொட்டுப்பேசுகிறார்.

சிங்கப்பூர் இலக்கியத்தைக் குறித்துப் பேசும்போது சிங்கப்பூத் தமிழ் இலக்கியம் ஒட்டுமொத்தத் தமிழிலக்கியப் பரப்புடன் இணைந்தும் விலகியும் செல்லும் புள்ளிகள் தொட்டுக்காட்டப்பட்டுள்ளன. தமிழிலக்கியம் எனப் பார்க்கும்போது, சிங்கப்பூர்ப் படைப்புகளுக்குத் தமிழ்நாட்டில் பிரதிநிதித்துவம் அளிக்கப்படுகிறதா, சிங்கப்பூரின் இலக்கியச் சூழல், சிங்கப்பூர் அரசு இலக்கிய வளர்ச்சிக்காகச் செய்யும் முயற்சிகள் எனத் தொடர்புடைய விஷயங்கள் விரிவாக ஆராயப்படுகின்றன. சிங்கப்பூர்ப் பணிச்சூழல் குறித்த கட்டுரைகளில் வளர்ந்த நாடுகளுக்குரிய பல பிரச்சனைகள் பேசப்பட்டுள்ளன.

இத்தொகுப்பின் கட்டுரைகளில், குறிப்பாகப் பணிச்சூழல் சார்ந்த கட்டுரைகளில், பல புதிய தமிழ்ச் சொற்களை சிவானந்தம் பயன்படுத்துகிறார். இச்சொற்கள் ஏற்கெனவே இருப்பவையா அல்லது இவரே உருவாக்கியவையா என்பது எனக்குத் தெரியவில்லை ஆனால் அவற்றின் ஆங்கிலப் பிரயோகங்களுக்குச் சரியாகப் பொருந்துகின்றன என்று சொல்லமுடியும். எடுத்துக்காட்டாக, peer pressure என்பது நாம் கேள்விப்பட்டதுதான், அடிக்கடிப் பயன்படுத்துவதும்கூட. அதற்கு ‘சகவழுத்தம்’ என்னும் சொல்லைப் பயன்படுத்துகிறார். Screen time reduction என்பதற்கு ‘திரைத்துறவு’ என்கிறார். எப்போதும் திரையை முன்னும்பின்னுமாக scroll செய்து பார்த்துக்கொண்டே இருப்பதை ‘திரையுழல்வு’ என்கிறார். Updation என்பதற்கு இணைச்சொல்லாக ‘இற்றைப்படுத்துதல்’ என்கிறார். இதுபோன்ற நிறைய சமகாலப் பயன்பாட்டுக்கான சொற்கள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.

அனைத்தையும்விட முக்கியமானது இந்நூல் ஓர் ஆய்வுநூலின் இறுக்கமான மொழியில் எழுதப்படவில்லை என்பது. பொது வாசகர்களுக்கு உகந்த அதேவேளையில் வரலாறு சார்ந்தும் ஆய்வுகள் சார்ந்தும் போதமுடைய ஒரு மொழியில் எழுதப்பட்டுள்ளது. நான் முன்னர் குறிப்பிட்டதுபோல, ஓர் இலக்கியச் சூழல் செழுமையுற அச்சூழலின் வரலாறு தொடர்ந்து தொகுக்கப்படுவது அவசியம். மிக்காபெரிசம் போன்ற நூல்களைப் படிக்கும்போது அத்தகைய தொகுத்தல் பணியின் முக்கியத்துவத்தை நன்கு உணரலாம். புனைவுகளைத் தாண்டி இவ்வகையான அல்புனைவுகளும் படிக்கப்படவேண்டும்.

இலக்கிய வரலாறு, சமூக வரலாறு சார்ந்து நம்மை வாசிக்கத் தூண்டக்கூடிய வகையில் வெளிவந்துள்ள மிக்காபெரிசம் நூலினை நண்பர்கள் வாசிக்கப் பரிந்துரைக்கிறேன், நன்றி!

சுரேஷ் பிரதீப்