சுமார் 45 ஆண்களுக்குமுன் வீட்டு வேலைக்காக வெளிநாட்டுப் பெண்களை சிங்கப்பூருக்குள் வர அனுமதிக்கும் திட்டத்தை அன்றைய (1978) தொழிலாளர்துறை அமைச்சு வெளியிட்டது. அன்று அப்பெண்கள் ‘வெளிநாட்டு வீட்டுவேலைக்காரிகள்’ (Foreign Domestic Servants) என்று அழைக்கப்பட்டனர்.[1] திட்டம் வெளியிடப்பட்டதற்கு அடுத்தநாள், ‘அந்நியரை வீட்டுவேலைக்காரிகளாக வைத்துக்கொள்ளலாம், புதிய திட்டம் அதற்கு வகை செய்கிறது’ என்று தமிழ் முரசு முதல் பக்கத்தில் செய்தி வெளியிட்டிருந்தது.[2] 

Siva1-வீட்டு வேலைக்காக வெளிநாட்டுப் பெண்களை சிங்கப்பூருக்குள் வர அனுமதிக்கும் திட்டம்

அங்கிருந்து, இன்று ‘குடிபெயர்ந்த இல்லப் பணிப்பெண்கள்’ (Migrant Domestic Workers) என்று மனிதவள அமைச்சு வகைப்படுத்தியிருக்கும் இடத்திற்கு – பெயரளவில் மட்டுமின்றி – வருவதற்கு நாம் கடந்துவந்திருக்கும் தூரம் மிக அதிகம். இன்னும் நெடுந்தொலைவு பயணிக்கவேண்டியுள்ளது.

சிங்கப்பூரில் குடிபெயர்ந்த இல்லப் பணிப்பெண்கள் குறித்த என் ஆர்வம் சுமார் ஏழு ஆண்டுகளுக்குமுன் இலக்கியத்தின் வாயிலாக நடந்தது. பல சிறுகதைகளில் பணிப்பெண்கள் இடம்பெற்றிருந்ததைக் கண்ணுற்றபிறகு, இப்பணிப்பெண்கள் மையப்படுத்தப்பட்டோ தொடர்புபடுத்தப்பட்டோ வெவ்வேறு கோணங்களில் எழுதப்பட்டிருந்த 14 சிங்கப்பூர்ச் சிறுகதைகளைப் பட்டியலிட்டு ஒரு கட்டுரை எழுதினேன்.[3]

அதன் தொடர்ச்சியாகப் பணிப்பெண்கள் தொடர்பான சிங்கப்பூர்ப் புனைவுகளை மேலும் தீவிரமாக ஆராய்ந்து ஓர் ஆய்வுக்கட்டுரை வெளியிட்டேன்.[4] அக்கட்டுரைக்காகப் புனைவுக்கு வெளியிலும் பல தகவல்களைத் திரட்டவேண்டியிருந்தது; பின்புலங்களை யோசிக்கவேண்டியிருந்தது. வெளிநாட்டுப் பணிப்பெண்கள் சிங்கப்பூரில் திருட்டுக்குற்றம் சாட்டப்படுவது தொடர்பாக பார்தி லியானி வழக்கை முன்வைத்து ‘மிக்காபெரிசம்’ என்ற ஒரு கட்டுரையும் எழுதியிருக்கிறேன்.[5] தொடர்ந்து சிங்கப்பூரில் பணிப்பெண் அனுபவங்கள் என் ஆர்வத்திற்குரிய ஆய்வுத்தளங்களுள் ஒன்றாகவே நீடித்துவருகிறது. 

சிங்கப்பூரில் பணிப்பெண்களின் நிலை குறித்த ஆய்வுகள் அவ்வப்போது வெளிவருவதுண்டு என்றாலும் குறிப்பாகத் தமிழ்ப் பணிப்பெண்களை ஆராய்ந்த ஆய்வுகளை நான் கண்டதில்லை. அந்தவகையில் அ. ஆர்த்தி என்ற சிங்கப்பூர் இளையர், தன் முதுநிலைப் பட்டத்திற்காக சிங்கப்பூர்த் தேசியப் பல்கலைக்கழகத்தில் சமர்ப்பித்துள்ள ஓர் ஆய்வு என் கவனத்தை ஈர்த்தது.[6] மொத்தம் ஆறு இயல்களாகப் பிரிக்கப்பட்டுள்ள ஆர்த்தியின் இந்த ஆய்வில் தமிழ்ப் பணிப்பெண்கள் குறித்த விரிவான தகவல்களும், வலுவான வாதங்களும், ஆழமான பார்வைகளும், நடைமுறைச் சாத்தியமிக்க பரிந்துரைகளும் பொறுப்பான முறையில் முன்வைக்கப்பட்டுள்ளன.

தமிழ்ப் பணிப்பெண்கள் 20 பேர், ஊரிலுள்ள அவர்களுடைய குடும்பத்தினர், சிங்கப்பூர் முதலாளிகள், முகவர்கள் என மொத்தம் 35 பேரிடம் விரிவான நேர்காணல்கள் செய்து அவற்றின் அடிப்படையில் சுமார் இரண்டாண்டு உழைப்பில் உருவாக்கப்பட்டுள்ள இந்த ஆய்விற்காக 2017-18 காலகட்டத்தில் சுமார் இரண்டரை மாதம் தமிழ்நாட்டில் சென்னை முதல் திருநெல்வேலிவரை பயணங்கள் மேற்கொண்டு, பணிப்பெண்களின் குடும்பத்தினருடனேயே தங்கிக் கள ஆய்வு செய்துள்ளார் ஆய்வாளர் ஆர்த்தி.

13615015_10208296777551290_5749694866978130_n

சிங்கப்பூரிலுள்ள சுமார் இரண்டரை லட்சம் பணிப்பெண்களுள் தோராயமாக 12,000 பேர்தான் தெற்காசியப் (இந்தியா, இலங்கை, வங்கதேசம்) பணிப்பெண்கள் என ஆய்வாளர் மதிப்பிடுகிறார். அவர்களுள் தமிழ்ப்பெண்கள் என்று பார்த்தால் எண்ணிக்கை மேலும் குறையும். ஆணாதிக்கச் சமூகத்திலிருந்தும் குடும்ப வறுமையைச் சமாளிக்கவுமே இப்பெண்கள் குடிபெயர்கின்றனர். ஆகவே சிங்கப்பூரில் இனம், பாலினம், வர்க்கம் என்ற மும்முனை விளிம்பில் தாங்கள் நிற்பதாகத் தமிழ்ப் பணிப்பெண்கள்  உணர்கின்றனர் என்கிறார். 

ஆண்கள் தம் குடும்பத்தைப் பிரிந்து வெளிநாடு சென்று பொருளீட்டி ஊருக்குத் திரும்பும்போது அவர்களை மதிப்பாகவும் தியாகச் செம்மல்களாகவும் நடத்தும் சமூகம், பணிப்பெண்களை மட்டும் உடலை விற்றுத்தான் இவர்கள் இவ்வளவு சம்பாதித்திருக்கமுடியும் என்று கேவலப்படுத்தி ஒதுக்குகிறது என்று ஆய்வில் பங்கேற்ற  ஒரு பணிப்பெண் ஆதங்கத்துடன் சொல்லியிருக்கிறார். பலசமயங்களில் குடும்பத்தினரும் அப்படியே நினைப்பதால் எந்தக் குடும்பத்திற்காக உழைத்தார்களோ அதே குடும்பத்தினரால் கைவிடப்படும் கொடுமையையும் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. 

தமிழகத் தமிழர் பொருளீட்டச் செல்லும் வெளிநாடுகளில் சிங்கப்பூருக்கே முதலிடம். சுமார் ஐந்தில் ஒருவர் இங்குதான் வருகின்றனர். பல்வேறு காரணங்கள் இருந்தாலும் ‘குடிபெயர் கலாச்சாரம்’ என்ற ஒரு கல்விப்புல கருத்தாக்கத்தையும் தன் ஆய்வில் குறிப்பிட்டுள்ளார் ஆர்த்தி. உவரி என்ற கிராமத்தில் தான் சந்தித்தவர்களைக்கொண்டு அனேகமாக வீட்டுக்கொருவர் வெளிநாட்டுக்கு வேலைக்குச் சென்றிருப்பர் என மதிப்பிட்டதாகச் சுட்டிக்காட்டுகிறார். ஆனால் பணிப்பெண்களைப் பொறுத்தவரை வறுமை, கைவிடப்பட்ட சூழல் போன்ற வாழ்வாதாரப் பிரச்சனைகளே வெளிநாடு செல்ல காரணங்களாக அமைகின்றன. இந்தநிலையில் சுமார் 4 மாத சம்பளம்வரை குடிபெயர்வதை ஒட்டிய நேரடி, மறைமுகக் கட்டணங்களுக்குச் செலவாகிவிடும்.

இப்பணிப்பெண்களை வேலைக்கு அமர்த்துவதில் சிங்கப்பூரில் சாதி பொதுவாகப் பார்க்கப்படுவதில்லை என்றாலும் தன்னுடைய கள ஆய்வின் அடிப்படையில் பிராமணர், செட்டியார் குடும்பங்களில் வழிபாடு, உணவுப் பழக்கவழக்கங்களை முன்னிட்டு சாதி குறித்து விசாரிக்கப்பட்டதை ஆய்வாளர் பதிவுசெய்துள்ளார். தமிழ்ப்பெண்களைப் பெரிதும் இங்குள்ள தமிழ் முதலாளிகளே பணிக்கு அமர்த்துவதால் இன, பூர்விக அடிப்படையில் இருவரும் ஒன்று என்றாலும் கல்வி, நாகரிக அடிப்படையில் தாங்கள் மேம்பட்டவர்கள் என வேறுபடுத்திக்காட்ட முற்படுகின்றனர் என்று நுணுக்கமாக அவதானித்துள்ளார். இந்தச் சிக்கல் சீன, மலாய்க்கார வீடுகளில் பணிசெய்யும் பிலிப்பினோ, இந்தோனேசியப் பணிப்பெண்களுக்கு இல்லை.

ஆனாலும் இவ்வாய்வில் அரபு நாடுகளில் முதலிலும் பிறகு சிங்கப்பூரிலும் வேலைசெய்த பணிப்பெண்கள் தம் அனுபவங்களை ஒப்பிடுகையில் சிங்கப்பூர் கஷ்டங்கள் அவர்களுக்குப் பரவாயில்லை என்று ஆகிவிடுகின்றன. மாலத்தீவுகளுக்கு வேலைக்குச் சென்ற ஒருவர் மாதத்திற்கு 5 நிமிடம் மட்டும் தம் குடும்பத்தினருடன் பேச அனுமதிக்கப்பட்ட சோகத்தைச் சொல்லியிருக்கிறார். பணிப்பெண்களுக்கு குடிபெயர்வுக்கான கட்டாய ஆங்கிலத் தேர்வுகளும் தற்போது சிங்கப்பூரில் நீக்கப்பட்டுவிட்டன. பிலிப்பினோ பணிப்பெண்களுக்கு எப்படி கனடாவும் ஹாங்காங்கும் முதல் தேர்வுகளாக இருக்கிறதோ அப்படித் தமிழ்ப்பெண்களுக்கு சிங்கப்பூர் இருக்கிறது.

ஒப்பீட்டளவில் கஷ்டங்கள் குறைவு என்றாலும் பல வன்முறை, அடக்குமுறைகளை இங்கு தமிழ்ப் பணிப்பெண்கள் எதிர்கொள்கின்றனர். நீண்ட குச்சியில் துணி காயப்போட பயிற்சிபெறும்போது ஒரு பணிப்பெண் கையில் மருதாணி போட்டிருந்ததைப் பார்த்துவிட்ட பயிற்சியளிப்பவர், “வேலைக்கு வந்தியா, இல்ல மாப்பிள்ள தேட வந்தியா? ஏன் கை இப்படி இருக்கு?” என்று கேட்கப்பட்ட அனுபவம் இப்பெண்கள் ஒவ்வொரு கட்டத்திலும் எவ்வளவு நுட்பமான வன்முறைகளுக்கு ஆளாகின்றனர் என்பதைக் காட்டுகிறது. பிழிஞ்சி எடுத்தாலும் ‘அனுசரிச்சிப் போகணும்’ என்பதுதான் இவர்களுக்கு மீண்டும் மீண்டும் அளிக்கப்படும் தாரக மந்திரம் என்கிறார் ஆய்வாளர்.

தங்களுக்கான நேரம், இடம் இரண்டுமே தெளிவாக வரையறுக்கப்படாத பணிச்சூழலில் வீட்டிலுள்ள எவர் கண்ணுக்கும் தெரியாமலேயே ஆனால் அனைவரின் தேவைகளையும் நிறைவேற்றவேண்டிய வினோதமான நெருக்கடிக்கு இப்பணிப்பெண்கள் ஆளாவதைச் சுட்டிக்காட்டுகிறார். வீட்டிலுள்ள ஒவ்வொருவரின் தேவைகள், விருப்பங்கள், மனநிலைகள், ருசிகள் என அனைத்திற்கும் ஏற்ப தாங்கள் நடந்துகொள்ளும்போது தங்களுக்கான குறைந்தபட்ச ஆதரவுகூட மறுக்கப்படும்போது உளைச்சலுக்கு ஆளாகி அவஸ்தைப்படுவதைக் குறித்துப் பணிப்பெண்கள் இந்த ஆய்வில் பகிர்ந்துகொண்டுள்ளனர்.

குழந்தைகளுக்கும் வயதானவர்களுக்கும் சேவைகள் அளிப்பதில் உள்ள சிரமங்கள் ஒருபக்கம் என்றால் ஏதும் நடந்துவிட்டால் எளிதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுவிடும் அபாயத்திலேயே இப்பணிப்பெண்கள் வாழநேர்கிறது. தன் கவனிப்பிலிருந்த மூதாட்டி, திடீரென்று மூச்சுவிட சிரமப்பட்டபோது அவரது மகனை அழைத்துத் தெரிவித்த பணிப்பெண்ணிடம் அவசர மருத்துவ வாகனத்தை அழைக்குமாறு கூறிவிட்டு அதோடு விட்டுவிட்டாராம் மகன். ஏதாவது ஆகியிருந்தால் தன்மேல் பழியைப்போட வெகுநேரம் ஆகியிருக்காது என்கிறார் ஒரு பணிப்பெண். 

என்னதான் பல்வேறு கஷ்டங்கள் கவலைகள் இருந்தாலும் எல்லாச் சூழலுக்கும் தம்மைத் தகவமைத்துக்கொள்ளும் பணிப்பெண்களின் அணுகுமுறைகளைக் காட்டும்படியான சம்பவங்களும் இவ்வாய்வில் கிடைக்கின்றன. எடுத்துக்காட்டாக, கடவுள் பக்தியில்லாத வீட்டில் வேலைசெய்யும் ஒரு பணிப்பெண் தன்னுடைய முயற்சியில் செய்யப்படும் வழிபாடுகளால்தான் அந்த வீட்டில் கடவுள் தங்கியிருக்கிறார் என்று தனக்கான முக்கியத்துவத்தை உருவாக்கிக்கொண்டு அதன்மூலம் ஆறுதல்கொள்வதைக் குறிப்பிடலாம். 

சில நேரங்களில் தம்மை முட்டாள்களாகக் காட்டிக்கொள்வதன்மூலம் தம் முதலாளிகளின் அகங்காரத்தைத் திருப்திசெய்யும் பணிப்பெண் குறித்த பதிவில் தொடங்கி, பணிப்பெண்ணுக்குத் தன் இறப்புக்குப்பின் 3000 வெள்ளி ரொக்கமும் சில தங்க நகைகளும் கிடைக்குமாறு ஏற்பாடு செய்துசென்ற ‘அம்மோக்கியோ பாட்டி’ குறித்த குறிப்புவரை பல்வேறு நெஞ்சைத்தொடும் பகுதிகளும் இந்த ஆய்வில் இடம்பெற்றுள்ளன. 

ஓய்வுநாளான ஞாயிற்றுக்கிழமைகளில் தமிழ்ப் பணிப்பெண்களுக்கு ஆங்கிலம் கற்றுத்தரும் தன்னார்வலராகவும் ஆய்வாளர் ஆர்த்தி பணிபுரிந்துள்ளார். வகுப்பிற்குப்பின் பணிப்பெண்களிடம் உரையாடி அவர்களின் சிக்கல்களை அணுக்கமாகவும் ஆழமாகவும் அவதானிக்கவும் ஆராயவும் அவரால் முடிந்துள்ளது. சில பெண்கள் அக்கடா என்று ஓய்வாக வீட்டிலிருக்கவே விரும்பினாலும் ஏதாவது வீட்டுவேலை கொடுத்துவிடுவார்கள் என்பதாலேயே வாரவிடுப்பு எடுத்துக்கொண்டு அவர்கள் வெளியேசெல்ல நேர்கிறது என்கிறார். 

தேக்கா நிலையத்திலும் சுற்றியுள்ள படிக்கட்டுகளிலும் தென்னிந்திய, இலங்கைப் பெண்கள், ஆனந்தபவன் உணவகத்திற்கு வெளியேவுள்ள பகுதியில் பஞ்சாபி, வடகிழக்கிந்தியப் பெண்கள், ஈரச்சந்தைக்குப் பின்னாலுள்ள சிறார் விளையாட்டுத் திடலில் மியன்மார் தமிழ்ப்பெண்கள் என்று ஓய்வுநாளில் அவர்கள் ஒன்றுகூடும் இடங்களாக ஆர்த்தி தரும் பட்டியல் வியப்பை அளிக்கிறது. வீட்டில் எப்படி ஒருசில சிறு பகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளனவோ அப்படியே வெளியிலும் சிற்சிறு வெளிகளே இப்பணிப்பெண்களுக்காக இருக்கின்றன என்கிறார். அச்சிறு இடங்களுக்குச் சென்று வருவதற்கும் வழியில் எரிக்கும் பார்வைகளையும், ஆபாசப் பேச்சுகளையும் இப்பெண்கள் கண்டுகொள்ளாமலும் சகித்துக்கொண்டும் செல்லவேண்டியுள்ளது. 

சட்டத்திற்குப் புறம்பான வகையில் பகுதிநேர வேலைகள் செய்து இப்பணிப்பெண்கள் பொருளீட்டுவதைக் குறிப்பிடும் ஆய்வாளர், அதேவேளையில் ஒருவேளை பிடிபட்டால் வேலையிழக்க நேரிடும் அபாயத்தையும் தாண்டி பகுதிநேர வேலைகளுக்குச் செல்லவேண்டிய அளவுக்குத்தான் தமிழ்ப் பணிப்பெண்களின் ஊதியம் உள்ளது என்பதைக் கவனப்படுத்துகிறார். தற்போது இணையம், கைபேசி ஊடுருவல்களுக்குப்பின் அவ்வப்போது ஊரில் குடும்பத்தில் தன்னுடைய இடத்தைத் தொடர்ந்து உறுதிசெய்துகொள்ள முடிவது இவர்களுக்குப் பெரிய ஆசுவாசத்தை அளிக்கிறது. 

ஆனால் நேரடி வளர்ப்பிலில்லாத பிள்ளைகள் ஊரில் எதிர்பார்த்த கல்வி, பொருளாதார முன்னேற்றத்தை அடையாமல்போவதும் அதனால் தம்முடைய வாழ்க்கையின் கஷ்டங்கள் பொருளற்றவை என்று உணரும் வலிமிகுந்த தருணங்களை எதிர்கொள்வதும் பணிப்பெண்களுக்கு நடந்துகொண்டுதான் இருக்கிறது. எங்கே தகவல் தெரிந்தால் ஒப்பந்தம் முடியும் முன்னரே வேலையை விட்டு வந்துவிடுவாளோ என்று தந்தையின் இறப்புச்செய்தி மறைக்கப்பட்ட ஒரு கண்ணீர்க் கதையும் இந்த ஆய்வில் உண்டு.

சிங்கப்பூரில் தமிழ்ப் பணிப்பெண்களின் வாழ்வில் பெருத்த மாற்றங்களையும் முன்னேற்றங்களையும் கொண்டுவரவேண்டும் என்று தனிப்பட்ட முறையிலும், ஆய்வாளராகவும், WOS (Women of Shakti) அமைப்பாளர்களுள் ஒருவராகவும் ஆர்த்தி பெரும் உழைப்பைச் செலுத்தியுள்ளது கண்கூடு. பெயருக்கு ஓர் ஆய்வைச் செய்து சமர்ப்பித்துப் பட்டம்பெறுவதற்கு இவ்வளவு சிரமப்பட்டிருக்க வேண்டியதில்லை. 

சிங்கப்பூரில் 2019-இல் நடந்த ஊடறு அனைத்துலகப்  மாநாட்டிலும் ஆர்த்தி கலந்துகொண்டு பணிப்பெண்கள் குறித்த ஆய்வுக்கட்டுரை வாசித்ததை நான் நேரில் கண்டிருக்கிறேன். அவருடன் இணைந்து ஒரு பணிப்பெண்ணும் அக்கட்டுரையைப் படைத்தார். வெட்கமும் நிதானமும் கூச்சமும் துணிச்சலும் கலந்துகட்டி அப்பணிப்பெண் அவ்வரங்கில் அக்கட்டுரையை வாசித்த அத்தருணம் சிலிர்ப்புமிக்கது.

‘என்னோட கனவு’, ‘சாதிக்கணும்’, ‘கடமையை முடிக்கணும்’, ‘பிளான் போட்ருக்கேன்’ என்று பணிப்பெண்கள் தன்னிடம் பகிர்ந்துகொண்ட சிறுவாக்கியங்களுக்குப் பின்னால் ஒளிந்துகிடக்கும் திறன்களையும், ஏக்கங்களையும், வாழ்க்கைகளையும் வெளிக்கொண்டுவந்து கண்ணுக்குத் தெரியாக காரிகைகளான இப்பணிப்பெண்களின் மீது வெளிச்சத்தைத் தன் ஆய்வின் மூலமாகப் பாய்ச்சியுள்ளார் ஆய்வாளர் ஆர்த்தி. 

சிங்கப்பூரிலேயே பிறந்து வளர்ந்த நான்காம் தலைமுறை இளையர் என்றபோதிலும் வசதியான வாகனங்கள், உயர்தர விடுதிகள் என்று தன்னுடைய தமிழ்நாட்டுப் பயணத்தை அமைத்துக்கொள்ளாமல் பணிப்பெண்களின் குடும்பத்தினருடனேயே மாதக்கணக்கில் தங்கியிருந்து, அவர்களுடனேயே பயணித்து, எல்லாக் கேடுபாடுகளையும் நேரடியாக அனுபவித்து ஆய்வுசெய்தவர் என்கிற வகையில் ஆர்த்தியை அடுத்த தலைமுறை ஆய்வாளர்களுக்கு ஒரு முன்னோடி எனலாம். 

தமிழ்ப் பணிப்பெண்கள் குறித்த சிங்கப்பூர் இளையரின் அக்கறையை ஆர்த்தியின் ஆய்வும் முயற்சிகளும் அழுத்தமாக வெளிப்படுத்தியுள்ளன. இனி சிங்கப்பூரில் தமிழ்ப் பணிப்பெண்கள் படும் கஷ்டங்கள் எங்காவது பேசப்பட்டால் ஆர்த்தி போன்றோரின் முயற்சிகளும் சேர்த்தே பேசப்படும். சிங்கப்பூரில் உயர்கல்வி கற்கும் தம் பிள்ளைகளிடத்தில், அவர்களின் பெற்றோர் ஆர்த்தியின் பெற்றோரைப் போலவே, பொருளாதார மேம்பாட்டுக்கான போட்டியை ஊக்குவிக்கும் அதேவேளையில் சமூகப் பொறுப்பையும் விதைக்கவேண்டும்.

இத்தகைய சமூக ஆய்வுகள் பல்கலைக்கழக வளாகத்திற்குள்ளேயே முடங்கிவிடாமலும் ஆங்கிலத்தில் கல்விப்புலம்சார்ந்து அலசப்படும் ஆய்வுப்பொருள்களுள் ஒன்றாகமட்டும் ஆகிவிடாமலும் தமிழில் வெளியிடப்பட்டு, தமிழ்ச் சமூகத்தில் பரவலாக்கப்பட்டால் விளைவுகள் விரைவாவதோடு பலன்களும் கணிசமாக அதிகரிக்கக்கூடும். 

 ***

[ஏப்ரல் 2022 ‘தி சிராங்கூன் டைம்ஸ்’ இதழில் வெளியானது]

உசாத்துணை

[1] Foreign Domestic Servant Scheme, Singapore Government Press Release, Ministry of Labour, 20 May 1978

[2] தமிழ் முரசு, 21 மே 1978, பக்கம் 1

[3] https://sivananthamneela.wordpress.com/2017/10/22/சிங்கப்பூர்-மெய்ட்-கதைக/

[4] சிங்கைத் தமிழ்ச் சமூகம் வரலாறும் புனைவும், காலச்சுவடு, 2019

[5] https://sivananthamneela.wordpress.com/2020/11/06/மிக்காபெரிசம்/

[6] Understanding The Textures of Power and Patriarchy: Everyday Lives of Tamil Domestic Workers in Singapore, Unpublished Masters Thesis by A. Aarthi, Department of Sociology, National University of Singapore, 2019