முன்னுரை

 

சிங்கப்பூரில் வெளிநாட்டுப்பெண்களை வீட்டுவேலைக்கு அமர்த்துவது 1978ஆம் ஆண்டு முதல் தொடங்கியது.[1] எழுபதுகளின் இறுதியில் வெறும் ஐயாயிரமாக இருந்த வெளிநாட்டுப் பணிப்பெண்களின் எண்ணிக்கை 2017ஆம் ஆண்டின் இறுதியில் சுமார் இரண்டரை லட்சமாக உயர்ந்துள்ளதை மனிதவள அமைச்சின் புள்ளிவிவரங்களிலிருந்து அறியமுடிகிறது.[2]

ஒவ்வொரு குடும்பத்திற்கும் இரட்டை வருமானம் அத்தியாவசியமாகக் கருதப்படும் சமூகச்  சூழலில் இவ்வெண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. சுமார் ஐந்தில் ஒரு குடும்பம் வீட்டு வேலைகளுக்கும் குழந்தைகள் மற்றும் முதியோர் பராமரிப்பிற்கும் இங்கே பணிப்பெண்களைச் சார்ந்திருக்கும்படி ஆகிவிட்ட நிலையில் வெளிநாட்டுப் பணிப்பெண்கள் சிங்கப்பூரின் பிரிக்கவியலாத அங்கமாகிவிட்டனர்.

வெளிநாட்டுப் பணிப்பெண்களை வேலைக்கமர்த்தும் திட்டம் தொடங்கப்பட்டு சுமார் நாற்பதாண்டுகள் கழிந்தபின் தற்போது திரும்பிப்பார்க்கையில் சிங்கப்பூர்த் தமிழ்ப் புனைவுகளில் அவர்களை மையப்படுத்தியோ தொடர்புபடுத்தியோ கணிசமான அளவில் கதைகள் எழுதப்பட்டுள்ளதைக் காணமுடிகிறது.

இப்புனைவுகளில் வெளிநாட்டுப்  பணிப்பெண்களின் கதைகள் பலவிதமாக   அணுகப்பட்டுள்ளன. அணுகுமுறையிலுள்ள பொதுத்தன்மையின் அடிப்படையில் அவற்றை வகைப்படுத்தி ஆராய்வதும் தனித்துவம் வாய்ந்த அணுகுமுறைகளைத் தெளிவாக எடுத்துக்காட்டுவதுமே இக்கட்டுரையின் முதன்மையான  நோக்கங்களாகும்.

கடந்த நாற்பதாண்டுகளில் சிங்கப்பூரில் அச்சில் வெளியான புனைவுகளை மட்டும் இந்த ஆய்வு கருத்தில்கொள்கிறது. மேலும் எடுத்துக்கொள்ளப்பட்ட புனைவுகளின் இலக்கியத்தரத்தை மதிப்பீடு செய்வதாக அல்லாமல், இலக்கியப்படைப்புகள் அதன் வாசகர்களுக்கு வெளிக்காட்டும் பல முகங்களில் ஒருசிலவற்றைக் கட்டுரையின் நோக்கத்திற்கு ஏற்றவகையில் பகுப்பாய்வும் ஒப்பீடுகளும் செய்வதாகவும் இவ்வாய்வு அமைந்துள்ளது.

புனைவுலகுக்குள் நுழைய தாமதம்

வெளிநாட்டுப் பணிப்பெண்களை வீட்டுவேலைகளுக்கு அமர்த்திக்கொள்வதற்கு 1978ஆம் ஆண்டில் அனுமதி வழங்கப்பட்டு விட்டாலும் அதன் பிறகு சுமார் 15 ஆண்டுகள் சிங்கைத் தமிழ்ப்புனைவுகளில் வெளிநாட்டுப் பணிப்பெண்கள் இடம்பிடிக்கவில்லை.

இரண்டு காரணிகளின் விளைவாக இத்தாமதம் ஏற்பட்டிருக்கலாம்;

முதலாவது, வெளிநாட்டுப் பணிப்பெண்களின் வாழ்க்கை புனைவுக்கான ஒரு  தளமாகக் கருதப்படாதது. சிங்கப்பூரில் எழுபது எண்பதுகளில் ஒப்பீட்டளவில் குறைந்த எண்ணிக்கையில் வெளிநாட்டுப் பணிப்பெண்கள் இருந்ததால் எழுத்தாளர்கள் நேரடியாகவோ, நண்பர்கள் உறவினர்கள் மூலமாகவோ அதுகுறித்த அனுபவங்களை அறிய வாய்ப்புகள் குறைவாக இருந்திருக்கலாம். மேலும் முதலாளி-பணிப்பெண் இடையே ஏற்பட்ட பிரச்சினைகள் குறித்த பத்திரிகைச் செய்திகளோ அதையொட்டிய விவாதங்களோ குறிப்பிடும்படி பரவலாக நிகழாமல் இருந்த காலகட்டமாதலால் புனைவுகள் எழாமல் போயிருக்கலாம்.

இரண்டாவது, சிங்கைத் தமிழ் இலக்கியச் சூழல் துடிப்பாகச் செயல்படாதது. எழுத்தாளர் லதா ‘ஆணிவேர்களும் நீர்ப்பாசிகளும்’ என்ற கட்டுரையில்,

‘ஏறக்குறைய ஒரு தலைமுறைக்காலம். இலக்கியம் மெல்ல எழுந்து, வளர்ந்து, நிலைபெறத் தொடங்கியிருந்த 1970களின் இறுதியில் பொருளியல் வளர்ச்சியில் அக்கறை செலுத்திய அரசாங்கத்தின் பயனீட்டுவாத சித்தாந்தம், துரித நகர மறுசீரமைப்பினால் சமுதாய அமைப்புகளில் ஏற்பட்ட மாற்றங்கள், சாரங்கபாணியின் தளர்வு, மறைவு, தமிழ்முரசு, தமிழ் மலர் நாளிதழ்களின் நலிவு எல்லாமாகச் சேர்ந்து ஒரு வெற்றிடத்தை உருவாக்குகின்றன’

என்கிறார்.[3]

பொன் சுந்தரராசு எழுதிய ‘புதிய அலைகள்’ (1981) என்ற சிறுகதையில், ‘….நான் தனிமையிலும் வேலைக்காரி கண்காணிப்பிலும் இருந்து அலுத்துவிட்டேன்’ என்றொரு குறிப்பு காணப்படுகிறது.[4] கதாசிரியரை இக்கட்டுரையாளர் தொடர்புகொண்டு கேட்டபோது அக்குறிப்பு வெளிநாட்டுப் பணிப்பெண் குறித்தது அல்ல என்று அவர் விளக்கமளித்தார்.[5] எழுபது, எண்பதுகளில் வெளியான இராம கண்ணபிரான் கதைகளில் வரும் பணிப்பெண் கதாபாத்திரங்களும் வெளிநாட்டுப் பணிப்பெண்களை மனதிற்கொண்டு எழுதப்பட்டதல்ல என்று கட்டுரையாளரிடம் உரையாடியபோது கதாசிரியர் தெரிவித்தார்.[6]

மு.தங்கராசனின் ‘பூச்செண்டு’ (1985) சிறுகதைத் தொகுப்பின் ‘ஆசை’ கதை முதலில் தமிழ்நேசனில் 1971ல் வெளியானது.[7] ஆகவே அதில் வரும் வேலைக்காரி வெளிநாட்டுப் பணிப்பெண்ணாக இருக்க வாய்ப்பில்லை.

மொத்தத்தில் எழுபதுகளிலும் எண்பதுகளிலும் வெளிநாட்டுப் பணிப்பெண்கள் குறித்த கதை ஏதும் தட்டுப்படவில்லை.

அச்சில் வெளியான முதல் வெளிநாட்டுப் பணிப்பெண் கதை

கண்ணம்மாவின் ‘உறவுகள்’ (1990) சிறுகதைத் தொகுப்பில் ‘பாச அலைகளுக்கு ஓய்வேது’ மற்றும் ‘உறவுகள்’ ஆகிய சிறுகதைகளில் வேலைக்காரிகள் சில வேலைகளைச் செய்வதாக வருகிறது ஆனால் அவர்கள் வெளிநாட்டுப் பணிப்பெண்கள் என்பதற்காக தடயங்கள் ஏதுமில்லை.[8] அதோடு புனைவின் காலம், இடம் ஆகியவற்றையும் அக்கதைகளிலிருந்து ஊகிக்க இயலவில்லை.

பாத்தேறல் இளமாறன் 1993இல் எழுதிய ‘அலைவாசை (சபலம்)’ என்ற கதைதான் அச்சில் வந்த முதல் வெளிநாட்டுப் பணிப்பெண் கதை. முதலில் இக்கதை 13 ஜூன் 1993 அன்று தமிழ்முரசு நாளிதழில் வெளியானது.[9] பிறகு ‘மண்மணச் சிறுகதைகள்’ என்ற அவரது தொகுப்பிலும் இடம்பெற்றது.

வெளிநாட்டுப் பணிப்பெண்ணின் வாழ்க்கையைச் சிறுகதையாக எழுதத் தோன்றியதன் காரணமென்ன என்று கேட்டபோது அலைவாசையின் கதாசிரியர் மூன்று  காரணங்களைக் கூறினார்;[10]

முதலாவது, அவர் நாளேடு பயனீடு செய்யும் வேலை செய்து வந்ததால் சீன முதலாளிகள் வீடுகளில் பணிபுரிந்த வெளிநாட்டுப்  பணிப்பெண்களில் பலர் நண்பர்களாகி அவர்களின் கஷ்டங்களை இவருடன் பகிர்ந்துகொள்வதற்கு வாய்ப்பு உண்டானது.

இரண்டாவது, பண்ணிரெண்டு வயதில், ஐம்பதுகளின் இறுதியில், சிங்கப்பூரில் சில வீடுகளில் பணி செய்யும் சிறுவனாகக் கதாசிரியர் இருந்ததால் வெளிநாட்டுப் பணிப்பெண்கள் தங்கள் துன்பங்களைப் பகிர்ந்துகொண்டபோது அதன் வலியை  உடனடியாக உணர்ந்துகொண்டது.

மூன்றாவது, பணிப்பெண்ணாயினும் தன்மானம் இழக்காதவள்  ஈழத்தமிழ்ப்பெண் என்பதை வலியுறுத்தும் வகையில் இக்கதையை எழுத நினைத்தது.  ஈழம், தனித்தமிழ்  இரண்டிலும் கதாசிரியர்க்குத் தனிப்பட்ட முறையில் அதிக ஈடுபாடு இருந்தது இந்த நோக்கத்துக்குக் காரணமாக அமைந்தது.

கதாசிரியர் கூறிய அனைத்து காரணங்களையும் மெய்ப்பிக்கும் வகையிலான தடயங்கள் அக்கதையில் கிடைக்கின்றன;

அக்கதையின் கதைசொல்லி நாளேடு பயனீடு செய்கிறார். பணிப்பெண் இலங்கைத் தமிழர். அவர் கதைசொல்லியோடு தன் சொந்த வாழ்க்கையைக் குறித்த விஷயங்களைப் பகிர்ந்துகொள்கிறார். கதை முழுதும், பாத்திரப் பெயர்கள் உட்பட, தனித்தமிழ்ச் சொற்களே பயன்படுத்தப்பட்டுள்ளன. பொதுவாசகர்க்குப் புரியாத சொற்கள் என்று கருதப்பட்டுள்ள இடங்களில் அடைப்புகளுக்குள் புழக்கத்திலுள்ள வடமொழி கலந்த சொற்கள் கொடுக்கப்பட்டுள்ளன. கதையின் தலைப்பையே அதற்கு எடுத்துக்காட்டாகச் சொல்லலாம்.

‘நான் மானத்தைப் பேணும் தமிழ்ப்பெண். ஒழுக்கமான ஒரு தாய்க்குப் பிறந்தவள். எந்தச் சூழ்நிலையிலும் காசுக்காகவோ உடல் இன்பத்திற்காகவோ ஒழுக்கம் தவறமாட்டேன்’ என்று அப்பெண் எழுதும் கடிதத்திலிருந்து அவளது கற்பின் உயர்வு நிலை நாட்டப்படுகிறது.

கற்பு – உடலிலிருந்து உள்ளத்திற்கு

அலைவாசையில் ஈழத்தமிழ்ப்பெண் கயல்விழி முதலாளி அல்லாத வேறொருவரால் பாலியல் உறவுக்கு கடிதம் மூலம் அழைக்கப்படுகிறார். கடுமையான பதில் கடிதம் மூலம் அழைப்பை ஏற்க மறுத்துவிடுகிறார். அதே தடத்தில்  பயணித்து, 1998ல் வெளியான ஜே.எம்.சாலியின் ‘விரல்’கதையிலும் வெளிநாட்டுப் பணிப்பெண்கள் எளிதில் பாலியல் சீண்டல்கள்,  தொல்லைகளுக்கு ஆளாகிறார்கள் ஆனாலும் அவற்றை எதிர்த்துக் கற்பைக் காப்பதற்காகப் போராடுகிறார்கள் என்ற கருத்து தொடர்ந்து வலியுறுத்தப்பட்டுள்ளது.

விரல் கதையில் வெளிநாட்டுப் பணிப்பெண் வாணி, வீட்டிற்கு  விருந்தாளியாக வந்திருப்பவரின் பாலியல் தொந்தரவுக்கு ஆட்படும்போது, தன் கற்பைக் காத்துக்கொள்வதற்காகக் பழம் நறுக்கும் கத்தியால் அவரது விரலைச் சிதைப்பதாக வருகிறது.[11]

இவ்விரு கதைகளிலும் கயல்விழியோ வாணியோ அவர்களது முதலாளிகளால் பாலியல் தொந்தரவுக்கு ஆளாகவில்லை என்பது கவனிக்கத்தக்கது. ஆனாலும் சிங்கப்பூரில் சில முதலாளிகள் வெளிநாட்டுப் பணிப்பெண்களைப் பல சிரமங்களுக்கு உள்ளாக்குகிறார்கள் என்ற செய்தியை இருகதைகளுமே குறிப்பிடத் தவறவில்லை.

அலைவாசை கதையில்,

‘அப்படிப்பட்ட அந்த ஏழைகளை, ஏதிலிகளை இங்கே சில முதலாளிகள் சிறைப்பறவைகளாகப் பூட்டி வைத்திருக்கின்றனர். ஒரு சிலரோ அவர்களை மிகுந்த கொடுமைகளுக்கும் உள்ளாக்குகின்றனர். மனிதநேயமற்ற மாபாவிகள். நாகரிகமும் நல்லொழுங்கும் பணிவன்பும் சமத்துவமும் நன்னடை போடும் நமது நாட்டில் இப்படிச் சில முதலாளிகள் முரடர்களாகத் திரிவது மானக்கேடுதான்’

என்று வருகிறது.

விரல் கதையில், ‘கொஞ்சமாச்சும் பொறுப்பு இருக்கணும். கவலை இருக்கணும். வெளிநாட்டிலேருந்து இங்கே வந்த பணிப்பெண்தானே? உங்கிட்டே அதையெல்லாம் எப்படி எதிர்பார்க்கமுடியும்?’ என்று எந்த விசாரணையும் இன்றி முதலாளி நியாயமில்லாமல் கோபப்படுவதாக ஒரு காட்சி வருகிறது.

விரல் கதை வெளியான அதே 1998ஆம் ஆண்டு வெளிவந்த லதாவின் ‘நாளை ஒரு விடுதலை’ கதை மேற்கண்ட போக்கிலிருந்து ஒரு முக்கியமான புள்ளியில்  வேறுபடுகிறது.[12]

இக்கதையின் பணிப்பெண் வசந்தியும் உழைப்புச் சுரண்டலுக்கும் வசைகளுக்கும் ஆளாவதோடு நேரடியாக முதலாளியின் பாலியல் சுரண்டலுக்கும் ஆளாகிறார். ஆனால் வசந்தி அதை எதிர்த்துக் கற்புக்காகப் போராடவில்லை. ‘பிள்ளைங்க தூங்கிட்டாங்களான்னு பார்க்க வந்தேன்’ என்று முதலாளி ஐயா அவளை நெருங்கும்போது, ‘நமக்குந்தான் வேண்டியிருக்கிறதே என்று அன்றைக்கும் அவளுக்குத் தோன்றியது’ என்று கதையில் வருகிறது.

‘வேண்டியிருக்கிறதே’ என்ற சொல்லாடல் முக்கியமானது. அது விருப்பத்தை அல்லாமல் தேவையைக் குறிப்பிடுகிறது. மேலும் தன்னை வசந்தி தன் உடலிருந்து பிரித்துப்பார்த்து ‘தன் உடலுக்கு வேண்டியிருக்கிறதே’ என்று புரிந்துகொள்ளவேண்டிய வகையில் ஆயாசப்படுவதையும் அச்சொல்லாடலில் காணமுடிகிறது.

பாலியல் சுரண்டலை அனுமதிக்க மறுத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்படக்கூடிய ஆபத்தில் இருக்கும் வெளிநாட்டுப் பணிப்பெண்கள் அதைச் சகித்துக்கொண்டு போகும் நிதர்சனத்தை வெளிப்படுத்தியுள்ள கதை அதேவேளையில் உடற்தேவையைக் கற்போடு தொடர்புபடுத்தும் எண்ணம் மாறிவிட்டதையும் எடுத்துக்காட்டியுள்ளது.

 

முதலாளி X பணிப்பெண் – இருமையின் ஆதிக்கம்

புத்தாயிரத்தில் அதிக அளவில் வெளிநாட்டுப் பணிப்பெண்கள் கதைகள்  எழுதப்பட்டுள்ளன. அவை கற்பு தொடர்பான சிக்கலிலிருந்து வெளிவந்துவிட்டாலும் முதலாளி X வெளிநாட்டுப் பணிப்பெண் என்ற இருமைக்குள் சிக்கிக்கொண்டுவிட்டன. இந்த இருமையைப் பொதுத்தன்மையாகக்கொண்டு அதனடிப்படையில் கீழுள்ள மூன்று வகைகளில் ஒன்றில் அக்கதைகளை வகைப்படுத்தலாம்;

  1. வெண்மைக் கதைகள்
  2. கறுப்புவெள்ளைக் கதைகள்
  3. சாம்பல் கதைகள்

வெண்மைக் கதைகள்

முதலாளி, பணிப்பெண் இருவருமே எந்தக் குறைகளும் இல்லாத நல்லவர்களாகவும் அவர்கள் ஒருவருக்கொருவர் உதவிக்கொள்வதாகவும் எழுதப்பட்டுள்ள கதைகளை வெண்மைக் கதைகள் எனலாம். அவர்களுக்கிடையில் முரண்பாடுகளே இல்லாததால் முற்றிலும் வெண்மை என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது.

சூர்யரத்னாவின் ‘இறைவனின் குழந்தை’ ஓர் உதாரணம்.[13] ஷீலா என்ற பணிப்பெண் தன் முதலாளியின் மனவளர்ச்சி குன்றிய மகனைக் கவனமாகப் பார்த்துக்கொள்வது மட்டுமல்லாமல் மற்ற பிள்ளைகளோடு அவனைப் பழகவைப்பதிலும் முதலாளிக்கு மனதளவில் தளர்வு வராமல் பார்த்துக்கொள்கிறாள். முதலாளியும் ஷீலாவுடன் இறுதிவரை நட்பாகவே பழகுகிறாள்.

இந்துமதி விசயபாரதியின் ‘அவள் வருவாளா?’ மற்றோர் எடுத்துக்காட்டு.[14] இக்கதையின் பணிப்பெண் பார்வதிக்குத் திருமண ஏற்பாடு இந்தியாவில் நடக்கிறது. திருமணமாகிப் போய்விட்டால் இவளைப் போன்ற ஒரு பணிப்பெண் கிடைப்பாளா என்று முதலாளி ஏங்குகிறார். பணிப்பெண்ணுக்கும் ஊரில்  ஒரு குடிகாரனைத் திருமணம் செய்துகொள்வதிலிருந்து தப்பிக்கவேண்டியிருக்கிறது. அவள் சில பொய்களை முதலாளியின் வழியாகத் தம் உறவினர்களிடம் சொல்லி மீண்டும் சிங்கைக்கே வந்துசேர்கிறாள்.

இதுபோன்ற வெண்மைக் கதைகளில் சிக்கலானது முதலாளி, பணிப்பெண் இருவரிடையே ஏற்படவில்லை என்பதைக் காணலாம்.

கறுப்புவெள்ளைக் கதைகள்

முதலாளி, பணிப்பெண் இருவரில் ஒருவர் முழுமையாகவே மோசமானவராகவும் (கறுப்பு) மற்றவர் எந்தத் தவறும் இழைக்காதவராகவும் (வெள்ளை) சித்தரிக்கப்பட்டுள்ள கதைகளைக் கறுப்புவெள்ளைக் கதைகள் எனலாம்.

கமலாதேவி அரவிந்தனின் ‘உத்தமி’ கதையில் வரும் பணிப்பெண் முதலாளியின்  பணத்தைத் திருடுபவராக இருக்கிறார்.[15] கீழை அ. கதிர்வேலின் ‘யாருக்கு வெற்றி’ கதையில் வேண்டுமென்றே பணத்தை முதலாளி தவறவிட்டுக் கவனிக்கும்போதும் பணிப்பெண் எடுத்துக்கொள்ள நினைப்பதில்லை.[16] கடைசியாக வேலை ஒப்பந்தம் முடிந்து இந்தியாவுக்குச் செல்லும்முன் அவள் ஓர் ஐம்பது வெள்ளித்தாளைத்  ‘தவறவிட்டு’ முதலாளிதான் திருட்டுகுணம் உள்ளவர் என்பதை நிரூபிக்கிறாள்.

இராம வயிரவனின் ‘குழந்தைகளின் ஓவியங்கள்’ கதையில் வீட்டில் முதலாளி இல்லாத நேரத்தில் பணிப்பெண் தன் ஆண் நண்பரை வரவழைத்து முதலாளியின் ஆறு வயது மகன் முன்னிலையிலேயே நெருக்கமாக நடந்துகொள்வதால் அச்சிறுபிள்ளையின் மனநிலை பாதிக்கப்படுகிறது.[17] சித்ரா ரமேஷின் ‘தே ஆலியா’ கதையில் வலிக்காக மீண்டும் மருத்துவரிடம் செல்லக்கேட்டால் வேலையிலிருந்து அனுப்பிவிடுவதாகச் சொல்லும் முதலாளியால் பணிப்பெண்ணின் உடல்நிலை பாதிக்கப்படுகிறது.[18]

ஆர் யோகநாதனின் ‘சபலம்’[19], பீரம்மாள் பீர் முகம்மதுவின் ‘வெட்கம் (எழுதாத சட்டம்)’[20], பாண்டித்துரையின் ‘கனவுப் பூனை’[21]என்று இந்தக் கறுப்புவெள்ளைப் பிரிவில் சேர்க்கும்படியான கதைகள் அதிக எண்ணிக்கையில் சிங்கைப் புனைவுலகில் கிடைத்துக்கொண்டே போகின்றன.

இந்த நிலைக்கு இருவிதமான காரணங்கள் இருக்கக்கூடும்;

முதலாவது காரணம் அகவயமானது. எழுத்தாளரைப் பொறுத்தது.

புனைவாசிரியர் தான் பார்த்த, கேட்ட, படித்த பணிப்பெண் தொடர்பான சம்பவங்களைப்  புனைவின் கதைக்கருவாக அமைக்கும்போது எந்தப்பக்கம் கறுப்பு எந்தப்பக்கம் வெள்ளை என்பதை முடிவுசெய்துகொண்டு அதைப் பதிவுசெய்வதற்காக அதற்கேற்ற வகையில் சம்பவங்களையும் பாத்திரப் படைப்புகளையும் அமைப்பது.

இரண்டாவது காரணம் புறவயமானது. உண்மை நிலவரத்திலுள்ள வேறுபாட்டைப் பொறுத்தது.

நவம்பர் 2017இல் Research Across Borders அமைப்பு மூன்றில் இரண்டு வெளிநாட்டுப் பணிப்பெண்கள் முதலாளிகளால் உழைப்புச் சுரண்டலுக்கோ வன்முறைக்கோ ஆளாகிறார்கள் என்று ஆய்வறிக்கை வெளியிட்டது.[22] அவ்வாய்வின் முடிவுகளை மறுத்த மனிதவள அமைச்சு 2015ல் தன்னுடைய கணக்கெடுப்பின்படி 97% வெளி நாட்டுப் பணிப்பெண்கள் சிங்கப்பூரில் பணிபுரிவது குறித்து திருப்தி தெரிவித்திருந்தார்கள் என்றது.[23]

இதிலிருந்து வெளிநாட்டுப் பணிப்பெண்கள் விஷயத்ரில் நடப்பு  நிலவரத்தைக் கண்டறிவதில் நடத்தப்படும் ஆய்வுகள், கணக்கெடுப்புகளின் முடிவுகளுக்கிடையேகூட மிக அதிக அளவில் வேறுபாடுகள் இருக்கின்றன  என்பதை உணரலாம். அதே வேறுபாடுகள் சிங்கைப் புனைவுலகிலும் எதிரொலித்துள்ளதால் இக்கறுப்புவெள்ளைப் பிரிவில் அதிகக் கதைகள் இடம்பெற்றுள்ளன எனக்கருத இடமுள்ளது.

சாம்பல் கதைகள்

முதலாளியிடமிருந்தோ பணிப்பெண்ணிடமிருந்தோ இருவரிடமுமிருந்தோ முன்முடிவுகளால் அல்லாமல்  சூழ்நிலையின் அழுத்தத்தால் சில தவறுகள் வெளிப்பட்டு அதனால் பாதிப்புகள் உண்டாவது தெளிவாகத் துலங்கும் கதைகளை சாம்பல் கதைகள் எனலாம். கறுப்பு-வெள்ளைக்கு இடையேயான கோடு   தெளிவானதாக இல்லாமல் இரண்டும் கலந்திருப்பதால் சாம்பல் கதை.

பாலு மணிமாறன் தொகுத்து தங்கமீன் பதிப்பக வெளியீடாக (2007) வந்த ‘வேறொரு மனவெளி’ சிறுகதைத் தொகுப்பில் சிவஶ்ரீ எழுதிய ‘பொழப்பு’ கதையை இவ்வகைக் கதைகளுக்கான குறிப்பிடத்தக்கத் தொடக்கமாகக் கருதலாம். ஒரு வீட்டில் இரு பணிப்பெண்கள் பணிபுரிவதாகவும் அவர்களில் ஒருவர் கதைசொல்லியாகத் தன்னைக் குறித்தும் சூழலைக் குறித்தும் பேசிக்கொண்டுபோவதாக அமைக்கப்பட்டிருக்கும் கதை இது. சூழலின் விளைவால் திசைமாறும் பணிப்பெண் – முதலாளி உறவுகள் கூர்மைபெற்ற கதை.

ஷாநவாஸின் ‘வேதாளம்’ கதையில் பணிப்பெண்ணிடம்  கதைகேட்டதால்தான் தன் மகன் படிப்பில் கவனம் செலுத்தாமல் அதிக மதிப்பெண் பெறவில்லை என்று முதலாளியால் பணிப்பெண் வேலையைவிட்டு அனுப்பப்படுகிறாள்.[24] பின்னாளில் மகன் புகழ்பெற்ற எழுத்தாளராகும்போது பணிப்பெண்ணை வெளியேற்றியதற்காக முதலாளியும், ஒருபிள்ளையின் வாழ்க்கை பெற்றோர் எதிர்பார்த்தபடி அமையாததற்கு நாம் காரணமாகிவிட்டோமோ என்று பணிப்பெண்ணும் குற்றவுணர்ச்சி கொள்கிறார்கள். சிங்கைச் சூழலில் பள்ளிப்படிப்பில் மதிப்பெண்களுக்குத் தரப்படும் அதீத முக்கியத்துவமானது  முதலாளி-பணிப்பெண் உறவில் பிரதிபலித்துத் திருகலைக் கொண்டுவந்துள்ளதாக அமைக்கப்பட்டுள்ள கதை.

அழகுநிலாவின் ‘உறவு மயக்கம்’ கதையில் வரும் முதலாளிக்குப் பணிப்பெண் தன் பிள்ளையைத் தாய்போலப் பார்த்துக்கொள்ளவேண்டும் என்ற ஆசை இருக்கிறது.[25] ஆனால் தாயினுடைய இடத்திலிருந்து அப்பிள்ளையின் தவறை அப்பணிப்பெண் திருத்தும்போது அதைத் தாங்கிக்கொள்ள இயலாமல் கோபத்தில் பணிப்பெண் மீதே குற்றத்தைச் சுமத்தி வெளியேற்றுகிறாள். பிறகு மனசாட்சி உறுத்துகிறது. தாய் வேலைக்குச் செல்லும்போது பணிப்பெண் தாயைப்போல இருக்கவேண்டும் ஆனால் தாய் திரும்பியவுடன் அவள் மீண்டும் பணிப்பெண்ணாக ஆகிவிட வேண்டும் என்ற சிக்கலான எதிர்பார்ப்பைச் சுட்டிக்காட்டி, சூழலின் நெருக்கடிக்கும்  ஆற்றாமைக்கும் இடையே தவிப்புகளும் பெருமூச்சுகளுமாக முதலாளி-பணிப்பெண் உறவு தொடர்வதை எடுத்துக்காட்டியுள்ள கதை.

பிரேமா மகாலிங்கத்தின் ‘நீர்த்திவலைகள்’ கதையில், அசம்பாவிதமாக, முதலாளி-பணிப்பெண் என்ற அதிகாரபூர்வ உறவின் எல்லை ஆதிக்காமத்தின் கைகளில் சிக்கி ஒருமுறை அழிபடுகிறது.[26] சூழ்நிலையின் விளைச்சலாக அதைப் புரிந்துகொண்டுவிட்டதால் இருவருக்குமே அதில் யாரை நொந்துகொள்வது என்ற நிலைதானே தவிர கோபமில்லை. இரண்டு பேரும் திட்டமிட்டுத் தவறு செய்யவில்லை ஆனாலும் இரண்டு பேருமே பங்குதாரர்கள். அது ஆயுளுக்கும் உறுத்திக்கொண்டிருக்கப்போகும் அபாயத்தைச் சுட்டிக்காட்டியுள்ள கதை.

வெண்மை, கறுப்புவெள்ளைக் கதைகளில் நவீன இலக்கியம் ஊடுருவக்கூடிய இடுக்குகள் அதிகமில்லாததால் சாம்பல் கதைகள் சமீபகாலமாக  அதிகரித்தவண்ணம் உள்ளன என்று கருதலாம்.

இருமையின் எல்லையைத் தாண்டி

ஜெயந்தி சங்கரின் ‘ஈரம்’ கதை, முதலாளி X பணிப்பெண் இருமையைத் தாண்டிய முன்னோடிக் கதைகளுள் ஒன்றாகவும் பரவலாக விவாதிக்கப்பட்ட கதையாகவும்  குறிப்பிடத்தக்கது.[27]

இக்கதை முதலில் 2004ம் ஆண்டு திசைகள்.காம் இணைய இதழில் வெளியானது. சிங்கப்பூரின் சுத்தம், சட்டம் ஒழுங்கைக் குறித்து மிகுந்த பெருமையுணர்ச்சி கொள்ளும் சற்று வயதான பணிப்பெண், ஒரு மழைப்பொழுதில்  உடையில் ஈரம்பட்டு மின்தூக்கியில் ஏற,அந்தவேளையில் அது பழுதாகிப் பாதியில் நின்றபோது, குளிரிலும் பயத்திலும் பதற்றத்திலும் தன்னையுமறியாமல் சிறுநீர் கழித்துச் சட்டத்தின் பிடியில் சிக்கிக்கொள்கிறாள், அபராதம் கட்டவியலாமல் சிறை செல்கிறாள். அனைவரையும் சமமாகப் பாவிக்கும் சட்டம் நேர்மையானது என்றாலும் ஈரமில்லாதது என்பதைப் பணிப்பெண்ணும் சட்டமும் சந்திக்கும் புள்ளியில் வைத்து விசாரணை செய்த கதை.

எம்.கே.குமாரின் ‘மஹால் சுந்தர்’ கதையில் பிலிப்பினோ பணிப்பெண்  பங்களாதேஷ் கட்டுமானத்துறை ஊழியருடன் காதலில் விழுகிறார்.[28] சிங்கப்பூரின்  வெளிநாட்டு ஊழியர்களில் ஆகக்குறைவான ஊதியம் பெறுபவர்களான  வெளிநாட்டுப்  பணிப்பெண் மற்றும்கட்டுமானத்துறை ஊழியர் இருவருக்கிடையில் தொடர்புகள் அதிகமிருக்கின்றன. ஆனாலும் அது புனைவுலகில் அரிதாகவே  பிரதிபலித்துள்ளது.

ஜெயந்தி சங்கரின் ‘நெய்தல்’ நாவலில் ஒரே தனியார் குடியிருப்பில் வசிக்கும் மூன்று தமிழ்ப் பணிப்பெண்கள் உட்பட பிலிப்பினோ, இந்தோனேசியப் பணிப்பெண்கள் ஆகியவர்களிடையே ஏற்படும் நட்பு, அங்கு செக்யூரிட்டியாக வேலைசெய்யும் தமிழருடன் ஒரு தமிழ்ப் பணிப்பெண்ணுக்கு உண்டாகும் பழக்கம் ஆகியவை பதிவாகியுள்ளன.[29] பணிப்பெண்கள் வாழ்க்கையின் விரிவான புனைவாக நெய்தலைக் குறிப்பிடலாம்.

எம்.கே.குமாரின் இன்னொரு கதையான ‘சதிபதி விளையாட்டில்’ நண்பருக்கு அவரது மனைவியுடன் சேர்ந்துவாழ சிங்கப்பூர் அரசின் நெறிமுறைகளின்படி அனுமதி கிடைக்காததால்  தன்னுடைய வீட்டுக்குப்  பணிப்பெண்ணாக வரவழைத்து நண்பருடன் சேர்ந்துவாழ வழிசெய்கிறார்.[30] சட்டம் ஓரிடத்தில் இயற்கையின் விசைகளோடு மல்லுக்கு நிற்கும்போது அது இயல்பாகத் தன்னை மீறுபவர்களையும் உருவாக்குகிறது என்பதைப் பணிப்பெண்கள் தொடர்புடைய தளத்தில் சுட்டிக்காட்டியுள்ள கதை.

சித்துராஜ் பொன்ராஜின் ‘இரண்டாம் வாய்ப்பாடு’ பிலிப்பீன்ஸிலிருந்து அதிக அளவில் பணிப்பெண்கள் சிங்கையில் இருப்பதால், முனைவர் பட்டம்பெற்று சக ஆராய்ச்சி ஊழியராகப் பணிபுரியும், தான் காதலிக்கும் ஒரு பிலிப்பினோ பெண்ணை மணந்துகொள்ளத் தயங்கும் தடுமாறும் ஓர் உள்ளூர்த் தமிழரைக் குறித்த கதை.[31]

‘கடைசியில உங்க ஆளுங்களோட புத்திய காமிச்சுட்டே இல்ல’ என்று அவர் குறிப்பிடும்போது நாற்பதாண்டுக்கால பணிப்பெண்கள் வாசம் சிங்கப்பூரின் பொதுப்புத்தியில் சில முன்முடிவுகளை உறையவைத்திருப்பதை அறியமுடிகிறது. ‘எங்க வீட்டுல உங்க ஊர்க்கார வேலைக்காரி ஒருத்தி இருக்கா’ என்பது ஒரு காரணமாகக் குறிப்பிடப்படும்போது காதலுக்கும் சமூக ஏளனத்தை எதிர்கொள்வதற்கும் இடையே ஒரு தத்தளிப்பு இருப்பது வெளிப்படுகிறது.

இரண்டாம் வாய்ப்பாடு கதைக்கு நேர்மாறாக, உமாகதிரின் ‘மார்க்கும் ரேச்சலும்’ கதையில் வரும் ரேச்சல் பிலிப்பினோ பெண்ணாக இருந்தாலும் உள்ளூர்த்தமிழர் மார்க் கிறிஸ்னி அவளை தயக்கமின்றித் திருமணம் செய்துகொள்ள விரும்புகிறார்.[32] ஆனால் இக்கதையின் மார்க் சிங்கப்பூரராக இருந்தபோதிலும் வெளிநாட்டுப் பணிப்பெண்ணுக்கு இணையான, உள்ளூரில் சொந்தபந்தங்கள் அற்ற, மிகக்குறைந்த வருமானம் கொண்ட விளிம்புநிலை மனிதராக இருப்பது கவனத்துக்குரியது.

மாதங்கியின் ‘தாத்தி’ கதையில் வரும் கவிதா அச்சு அசலாக மனிதரைப்போல இருந்தாலும் ஓர் இயந்திரப் பணியாள்.[33] எதிர்காலத்தில் பணியாட்கள் இயந்திரமாக ஆனாலும் அது பெண்ணாகத்தான் இருக்கவேண்டும் என்ற எண்ணம் எப்படியோ ஆழப்பதிந்து கிடப்பதை இக்கதை காட்டியுள்ளது.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள கதைகளைப்போல முதலாளி-பணிப்பெண் இருமையின் எல்லையைத் தாண்டிய கதைகள் புத்தாயிரத்தில் கணிசமாக இல்லாவிடினும் குறிப்பிடத்தக்க அளவில் எழுதப்பட்டுவருகின்றன.

முடிவுரை

எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன், ‘விளிம்புநிலை மனிதர்களைப் பற்றி எழுதுவதும் அவர்களின் உலகைப் புரிந்துகொள்வதும் சமகால இலக்கியத்தின் முக்கிய போக்காக உருவாகிக்கொண்டு இருக்கிறது’ என்று பத்தாண்டுகளுக்கு முன் குறிப்பிட்டுள்ளார்[34]. அக்கூற்றையும் கருத்திற்கொண்டு பார்த்தால் சிங்கைப் புனைவிலக்கியத்தில் வெளிநாட்டுப் பணிப்பெண்கள் பெற்றுள்ள கவனமானது  சிங்கப்பூர்க் குடும்பங்களில் அவர்கள் பெற்றுவிட்ட முக்கியமான இடம் மற்றும் தமிழிலக்கியத்தின் சமகால இலக்கியப் போக்கு இரண்டு விசைகளாலும் நிகழ்ந்துள்ளதாகச் சொல்லலாம்.

இருபத்தைந்து ஆண்டுகளுக்குமுன் பணிப்பெண்களின் கற்பை மையமாக வைத்துத் தொடங்கிய புனைவுகள் காலப்போக்கில் கற்புக்கு மறுவிளக்கம் செய்துகொண்டு, அடுத்த கட்டமாக முதலாளி-பணிப்பெண் என்ற இருமையில் கவனம் குவித்தது. பிறகு அதில் வெண்மை, கறுப்புவெள்ளை, சாம்பல் என்று அடுத்தடுத்த நிலைகளைக் கடந்து தற்போது அவ்விருமையைத் தாண்டி சமூகத்தில் உண்டான ஒட்டுமொத்த மாற்றத்தைக் கணக்கில்கொண்டு விரிந்துசெல்லத் தொடங்கியுள்ளது.

Our Homes, Our Stories (Voices of migrant domestic workers in Singapore) என்ற நூல் இவ்வாண்டு வெளியானது.[35] அதில் பல நாடுகளைச் சேர்ந்த 28 பணிப்பெண்கள் தங்கள் வாழ்க்கைப் பின்புலத்தையும் சிங்கப்பூரில் பணிப்பெண் அனுபவத்தையும் உயிர்த்துடிப்போடு எழுதியுள்ளனர். பணிப்பெண்கள் தங்கள் கதைகளைத் தாங்களே எழுதத்தொடங்கிவிட்டதால் அவர்களுக்காகப் புனைவாசிரியர்கள் செயல்படவேண்டியதன் தேவை சுருங்கியுள்ளதாகக் கருதலாம்.

ஆயினும் சிங்கப்பூரில் தொடர்ந்து வளர்ந்துகொண்டே போகும் வெளிநாட்டுப் பணிப்பெண்களின் தேவை, ஏற்கனவே சிக்கலாக இருந்துவரும் இடநெருக்கடியில்  அவர்களுக்கான வெளி, பணிப்பெண் இல்லாமல் வாழ்வதை அறிந்திராத ஒரு தலைமுறை, மேன்மேலும் அடுத்தவருக்கான அக்கறையையும் கண்ணியத்தையும் ஒரு சமூகமாக அதிகரிக்க முனையும்போது எதிர்கொள்ளவேண்டிய கடினமான கேள்விகள் போன்றவற்றின் ஊடாகப் புனைவாசிரியர்கள் கவனத்திற் கொள்ளவேண்டிய தளங்கள் விரிந்துகொண்டேதான் செல்கின்றன.

***

[1] Foreign Domestic Servant Scheme, Singapore Governement Press Release, Ministry of Labour, 20 May 1978

[2] https://www.mom.gov.sg/documents-and-publications/foreign-workforce-numbers (25-08-2018)

[3] வல்லினம் 100, ம.நவீன் (தலைமைத் தொகுப்பாசிரியர்), வல்லினம் பதிப்பகம், 2017, பக்கம் 212

[4] புதிய அலைகள், பொன் சுந்தரராசு, தமிழ்ப் புத்தகாலயம், 1984, பக்கம் 46

[5] கட்டுரையாளருடன் பொன் சுந்தரராசு தொலைபேசி உரையாடல், 27-08-2018

[6] கட்டுரையாளருடன் இராம கண்ணபிரான் உரையாடல், 01-09-2018

[7] பூச்செண்டு, மு.தங்கராசன், தை நூலகம் பதிப்பகம், 1985, பக்கம் IX

[8] உறவுகள், கண்ணம்மா, இந்தியர் பண்பாட்டு நிகழ்ச்சி ஏற்பாட்டுக்குழு வெளியீடு, 1990, பக்கங்கள் 1, 14

[9]மண்மணச்சிறுகதைகள், பாத்தேறல் இளமாறன், சொந்த வெளியீடு, 2014, பக்கம் 33

[10]கட்டுரையாளருடன் பாத்தேறல் இளமாறன் உரையாடல், 02-09-2018

[11] அந்த நாள், ஜே.எம்.சாலி, கவிதா பப்ளிகேஷன், 1998, பக்கம் 74

[12] நான் கொலை செய்யும் பெண்கள், லதா, சொந்த வெளியீடு, 2007, பக்கம் 31

[13] நான், சூர்யரத்னா, தங்கமீன் பதிப்பகம், 2013, பக்கம் 72

[14] சிங்கப்பூர்க் குறுநாவல்கள் தொகுப்பு, சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம், 2016, பக்கம்

[15] சூரிய கிரஹணத் தெரு, கமலாதேவி அரவிந்தன், சொந்த வெளியீடு, 2012, பக்கம் 98

[16] நம்பர் விளையாட்டு, கீழை அ. கதிர்வேல், அகநாழிகை பதிப்பகம், 2017, பக்கம் 110

[17] நகர மறுத்த மேசை, இராம.வயிரவன், சொந்த வெளியீடு, 2013, பக்கம் 40

[18] பறவைப் பூங்கா, சித்ரா ரமேஷ், சொந்த வெளியீடு, 2015, பக்கம் 106

[19] வலை, ஆர் யோகநாதன், சொந்த வெளியீடு, 2010, பக்கம் 31

[20] பிரகாசம், பீரம்மாள் பீர் முகம்மது, சொந்த வெளியீடு, 2006, பக்கம் 82

[21] வாசகர் வட்ட சிறுகதைகள், ஷாநவாஸ், சொந்த வெளியீடு, 2018, பக்கம் 65

[22]https://www.researchgate.net/profile/Anja_Wessels/publication/321298753_Bonded_to_the_system_Labour_exploitation_in_the_foreign_domestic_work_sector_in_Singapore/links/5a23672a4585155dd41cc58b/Bonded-to-the-system-Labour-exploitation-in-the-foreign-domestic-work-sector-in-Singapore.pdf (07-09-2018)

[23] https://www.mom.gov.sg/newsroom/press-replies/2017/1201-mom-statement-on-rab-study (07-09-2018)

[24] ஒலிமூங்கில், ஷாநவாஸ், சொந்த வெளியீடு, 2018, பக்கம் 58

[25] ஆறஞ்சு, அழகுநிலா, சொந்த வெளியீடு, 2015, பக்கம் 52

[26] நீர்த் திவலைகள், பிரேமா மகாலிங்கம், ஆர்யா கிரியேஷன்ஸ் வெளியீடு, 2017, பக்கம் 165

[27] முத்துக்கள் பத்து, ஜெயந்தி சங்கர், அம்ருதா பதிப்பகம், 2014, பக்கம் 74

[28] மருதம், எம்.கே.குமார், சொந்த வெளியீடு, 2006, பக்கம் 35

[29] நெய்தல், ஜெயந்தி சங்கர், சந்தியா பதிப்பகம், 2007

[30] பதிசதி விளையாட்டு, எம்.கே.குமார், தி சிராங்கூன் டைம்ஸ், 2017, பக்கம் 5

[31] மாறிலிகள், சித்துராஜ் பொன்ராஜ், அகநாழிகை பதிப்பகம், 2015, பக்கம் 51

[32] மார்க்கும் ரேச்சலும், தி சிராங்கூன் டைம்ஸ், மே 2017, பக்கம் 18

[33] மெல்பகுலாஸோ, மாதங்கி, சந்தியா பதிப்பகம், 2014, பக்கம் 100

[34] கதாவிலாசம், எஸ்.ராமகிருஷ்ணன், விகடன் பிரசுரம், 2005, பக்கம் 82

[35] Our Homes, Our Stories, Edited by Karien Van Ditzhuijzen, HOME Publishing, 2018