முன்னுரை

சிங்கப்பூரில் 1984 முதல் ஆண்டுதோறும் பிப்ரவரி 15ம் நாள் முழுமைத் தற்காப்பு தினமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. இளவயதிலேயே போர்க்காலத்தின் சிரமங்களை உணரவைக்கவேண்டித் தொடக்கப்பள்ளிகளின் உணவுக் கடைகள் அன்று வழக்கமான ருசிமிக்க உணவுகளைத் தவிர்த்து ரொட்டியும், கஞ்சியும், சோளமும், உருளைக்கிழங்கும், அவித்த முட்டையும், பழங்களும் மட்டுமே விற்கின்றன. தீவு முழுதும் எச்சரிக்கை ஒலி எழுப்பப்படுகிறது. அவ்வொலி ஒரு முக்கியமான வரலாற்றை மக்களின் மனதிலிருந்து மறைந்துவிடாமல் எதிரொலித்துக்கொண்டே இருக்கிறது.

இதே நாளில்தான், 1942ஆம் ஆண்டில், இரண்டாம் உலகப்போரில் ஜப்பான் உச்சத்தை அடைந்துகொண்டிருந்த வேளையில், சிங்கப்பூரைத் தற்காக்கவியலாமல் பிரிட்டிஷார் ஜப்பானிய ராணுவத்திடம் சரணடைந்தனர்.

அதன்பிறகு வந்த சுமார் மூன்றரை வருட (44 மாதங்கள்) ஜப்பானியர் ஆக்கிரமிப்புக் காலத்தின் நிகழ்வுகளைத் தற்போது நோக்குகையில் ஒருவேளை கடந்த இருநூற்றாண்டுக்கால சிங்கப்பூர் வரலாற்றிலேயே வலிமிகுந்த காலம் என்று வாதிடக்கூடிய அளவுக்கு உக்கிரமான ஒன்றாக இருக்கிறது.

இரண்டாம் உலகப்போரில் ஜப்பான் தோல்வியுற்றபிறகு, சிங்கப்பூர் மீண்டும்,  1945ஆம் ஆண்டு செப்டம்பர் 12ஆம் நாள், பிரிட்டிஷ் வசம் வந்தபோதும் அது பழைய சிங்கப்பூராக இல்லை. சமுதாயம் ஆறிப்போகாத ரணங்களையும் வடுக்களையும் கொண்டு என்றென்றைக்குமாக மாறிப்போயிருந்தது.

பிரிட்டிஷார் தரும் பாதுகாப்பு நிரந்தரமானதில்லை என்பதைக் கண்கூடாகப் பார்த்துவிட்டதால் நிம்மதி இழந்திருந்தது. லீ குவான் இயூ உட்பட சிங்கப்பூரின் வளர்ச்சிக்குப் பின்னாளில் அடித்தளமிட்டத் தலைவர்கள் ஜப்பானிய ஆக்கிரமிப்பின்போது இளையர்களாக இருந்தனர். அவர்கள் அதிகாரத்தின் பலத்தையும் பலவீனத்தையும் நேரடியாகக் கண்டும் அனுபவித்தும் உணர்ந்தனர். அவ்வகையில் சிங்கப்பூரில் ஜப்பானிய ஆக்கிரமிப்புக்காலம் கால அளவில்  குறுகியதே என்றாலும் சிங்கப்பூர் மக்களையும், தலைவர்களையும், எதிர்காலத்தையும் நிரந்தரமாக மாற்றிய ஒன்றாக இருந்திருக்கிறது.

இக்காலகட்டம் முடிந்தபிறகு எழுதப்பெற்ற சிங்கப்பூர்த் தமிழ்ப்புனைவுகள் அக்காலத்தை எவ்வாறு பதிவுசெய்திருக்கின்றன என்பதை ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கம். எடுத்துக்கொள்ளப்பட்ட புனைவுகளின் இலக்கியத் தரத்தை இக்கட்டுரை மதிப்பிடவில்லை. சிங்கப்பூரில் வசித்த, வசிப்பவர்களால் எழுதப்பட்டு அச்சில் வெளியான புனைவுகளைச் சிங்கப்பூர்த் தமிழ்ப்புனைவுகள் என்று இக்கட்டுரை வரையறை செய்துகொள்கிறது.

போரும் இலக்கியமும்

சங்க இலக்கியம் தொடங்கி இன்றைய ஈழ இலக்கியம்வரை போரை மையமாக வைத்து அமையும் இலக்கியத்திற்குத் தமிழில் தொடர்ந்த கவனமும் முக்கியத்துவமும் கிடைத்துவருகிறது. இது உலக இலக்கியத்திற்கும் பொருந்தும். தல்ஸ்தோயின் ‘போரும் அமைதியும்’ ரஷ்ய நாவல் உலக அளவில் இலக்கிய ஆர்வலர்களால் தொடர்ந்து கடந்த நூற்றைம்பது ஆண்டுகளாக வாசிக்கப்பட்டும் விவாதிக்கப்பட்டும் வருகிறது. போருக்கு முன், போரின் போது, போருக்குப்பின் எனப் போரிலக்கியம் பல காலகட்டங்களைப் புனைவுக்குத் தேர்ந்தெடுக்கிறது.

போர்க்காலம் என்பது மனிதர்களை உடலாலும் மனதாலும் அவர்களின் எல்லைகளுக்கு உந்திச்செல்லும் காலம். அக்காலத்தின் மானுடச் செயல்பாடுகளை வெறும் தகவல்களைக் கொண்ட வரலாற்றுப் பதிவுகள் ஓரளவுக்குக் கோடிகாட்டலாமேயொழிய அவற்றின் மூலாதாரங்களையும் சூழல் விசைகளையும் தீர்க்கமாக விளக்கவியலாது. ஆனால் இலக்கியம் என்பது ஒரு காலயந்திரத்தைப்போலச்  செயல்பட்டு போர்க்காலகட்டத்திற்கு உள்ளேயே வாசகரை அழைத்துச்சென்று காட்டுவதன்மூலம் அதைச் சாதித்துவிடுகிறது.

போரிலக்கியம் போர் எழாமல் தவிர்த்துவிடக்கூடிய ஆற்றல்பெற்றது என்று கருத இடமில்லை. ‘போரும் அமைதியும்’ எழுதப்பட்ட பின்னர்தான் இரு பெரும் உலகப்போர்கள் நடந்துள்ளன. போர் பல காரணிகளால் உண்டாகிறது. அக்காரணிகள் அனைத்தின் மீதிலும் இலக்கியம் செல்வாக்கு செலுத்தவேண்டும் என்று எதிர்பார்ப்பதற்கில்லை. ஆயினும் போரிலக்கியம் மானுட வளர்ச்சியின் சோதனைக் காலகட்டங்களைக் கூர்மையாக அளந்துகொள்ளவும் அதனடிப்படையில் மனித இனம் தன்னைத்தானே விமர்சித்துக்கொள்ளவும் உதவுகிறது.

ஒருவேளை என்றேனும் போரில்லா உலகம் ஒன்று உருவாகி வருமாயின் அதற்குப் போரிலக்கியம் கணிசமாகப் பங்களித்திருக்கும் என்று எதிர்பார்க்கலாம். சுருக்கமாகச் சொன்னால், ஆறிப்போன காயத்தைக் கீறிப்பார்க்கும் கருவியாக அல்லாமல் மக்கள் தம் கூட்டுமனசாட்சியை விசாரித்துக்கொள்ளும் வாய்ப்பாகவே போரிலக்கியம் அமைகிறது எனலாம்.

ஆக்கிரமிப்புக்குப் பிந்தைய முதல் தமிழ்ப்புனைவு

ஜப்பானியர் சரணடைந்த பிறகு சுமார் எட்டாண்டுகள் கழித்து, 1953இல் புதுமைதாசன் ‘வாழமுடியாதவள்’ என்றொரு சிறுகதையை எழுதியுள்ளார். இதுவே ஜப்பானியர் ஆக்கிரமிப்புக் காலம் முடிந்தபின் அதைக்குறித்து எழுதப்பட்ட முதல் சிங்கைத் தமிழ்ப்புனைவு.[1]

புதுமைதாசனின் கதை ஏப்ரலில் வெளியாவதற்கு முன் அதே ஆண்டில் இரண்டு சிறுகதைகள் ஜப்பானியர் ஆக்கிரமிப்புக்காலப் பின்னணியில் தமிழ்முரசில் வெளியாகியுள்ளன; பிப்ரவரியில் வயி.சரஸ்வதிதேவி தமிழ்முரசில் எழுதிய ’மானம் காத்தவன்’ முதலாவது.[2] மார்ச் மாதத்தில் கா.பிச்சைமுத்து எழுதிய ‘தியாகம்’ இரண்டாவது.[3] ஆயினும் இவர்கள் சிங்கப்பூர் எழுத்தாளர்கள் அல்லர்.

வயி.சரஸ்வதிதேவி கோலாலம்பூரைச் சேர்ந்தவர். கா.பிச்சைமுத்துக்கு கோலாகங்சார். அதே ஆண்டின் இறுதியில் சி.வடிவேல் எழுதிய ‘எந்த வகைக் கைதி?’ சிறுகதையும் இக்களத்தைச் சேர்ந்ததே.[4] இவர் லாபு (செரம்பான்) பகுதியைச் சேர்ந்தவர். அதற்கு முன்னும் பின்னும் இல்லாதவகையில் 1953ல் திடீரென நான்கு சிறுகதைகள் ஜப்பானியர் கால மலாயாவைக் குறித்துத் தமிழ்முரசில் எழுதப்பட்டதன் பின்னணி தனியாக ஆராயத்தக்கது.

மலேசியச் சிறுகதைகள் குறித்து விரிவாக ஆராய்ந்திருக்கும்[5] ஆய்வாளர் பால பாஸ்கரனிடம் இதுகுறித்துக் கேட்டபோது சிறப்புக்காரணங்கள் ஏதுமிருப்பதாகத் தெரியவில்லை என்றார். ஆகவே ஓர் எழுத்தாளர் ஜப்பானியர் ஆக்கிரமிப்புக் காலம் குறித்து எழுதி அது அச்சில் வெளியானபின்னர் அக்களத்திலேயே மற்றவர்களும் பயணித்திருக்கலாம் என்பது இக்கட்டுரையாளரின் ஊகம்.

சுதந்திரம் பெற்ற ‘வாழமுடியாதவள்

‘வாழமுடியாதவள்’ சிறுகதையில் போருக்கு முன் தமிழகத்திலிருந்து சிங்கைக்கு வரும் கண்ணுச்சாமி இங்கே ஜப்பானியர் ஆக்கிரமிப்புக் காலத்தில் ஒரு மலாய்ப்பெண்ணைத் திருமணம் செய்துகொள்கிறான். அதைப் பெற்றோர்க்குத் தெரியப்படுத்த இயலவில்லை. ஏனெனில் சிங்கப்பூரில் ஜப்பானியர் கடிதப் போக்குவரவு பொதுமக்கள் கப்பல் போக்குவரவு அனைத்தையும் தடைசெய்துவிடுகின்றனர்.

போர் முடிந்தபிறகு கண்ணுச்சாமியும் அவனது மலாய் மனைவியும் ‘ஜலதுர்கா’வில் தமிழ்நாட்டிற்குப் புறப்பட்டுச் செல்லும் செய்தியும் இச்சிறுகதையில் இருக்கிறது. தமிழ்நாட்டில் கண்ணுச்சாமி குடும்பத்தினரால் அவளுடைய ஒழுக்கம் கேள்விக்குள்ளாக்கப்பட்டதால் அவள் தற்கொலை செய்துகொள்கிறாள்.

‘ஜனநாயகத்தையே அடியோடு குழிவெட்டிப் புதைத்துவிட்டர்கள்’ என்று அக்கால சூழ நிலையை வர்ணிப்பதோடு மீண்டும் பிரிட்டிஷார் சிங்கப்பூரைக் கைப்பற்றியபிறகு, ‘மிருகங்களாயிருந்தவர்களெல்லாம் மனிதர்களாகிவிட்டனர். எல்லோருக்கும் சுதந்திரம் அளிக்கப்பட்டதுஎன்கிறது அப்புனைவு. ஆங்கிலேய ஆட்சியில் பலவிதமான கட்டுப்பாடுகளும் கண்காணிப்புகளும் இருந்தபோதும் ஜப்பானியர் வருகை ஆங்கிலேய ஆட்சியை ‘சுதந்திரம்’ என்று பார்க்கும் அளவிற்கு மாற்றிவிட்டதை இக்கதையின் வழியே அறியமுடிகிறது.

போர்க்கால ‘வாரிசு’

மு.தங்கராசனின் ‘வாரிசு’ சிறுகதை ஜப்பானியர் காலகட்டத்தைக் குறித்த  இரண்டாவது பதிவு.[6] இக்கதை தமிழ்நேசன் பத்திரிகையில் 1976 அக்டோபர் 10, 17 தேதிகளில் வெளியானது. அக்கால நெருக்கடி வாழ்க்கையைக் குறித்து கீழ்க்காணும் ஒரு பத்தி மட்டுமே கிடைக்கிறது;

‘…ஒரு பிடி சோத்துக்கு ஆலாப் பறக்குற காலத்தில் பொறந்து, ஜப்பான்காரன் குண்டுக்கும் அலமலப்புக்கும், நாடோடிங்க போல ஓடித்திரிஞ்ச காலத்துல பொறந்து, எப்படியோ தானே வளந்துவிட்டான். இவுங்க அப்பாவை ஜப்பான்காரங்க சியாமுக்கு மரணபாலம்போடறதுக்குன்னு அங்க கூப்பிட்டுக்கிட்டுப் போயிடுவாங்களோன்னு காட்டுலயும் மேட்டுலயும் ஒளிஞ்சி திரிஞ்சி, இவனைக் காப்பாத்தறதுக்கு இராத்திரியோட இராத்திரியா சுரங்கத்திலே இருந்து வீட்டுக்கு வந்துட்டு பகல்லே திரும்பவும் ஒளிஞ்சுக்குவோம்…”

ஒரே பத்தியில் உணவுப்பஞ்சம், ஜப்பானியர் தொல்லைகள், நாடோடி அலைவுகள், சயாம் மரணபாலம் அமைக்கப்பெற்றதில் தமிழர் பங்கு, பதுங்குக்குழி வாழ்க்கை என்று வாசகரின் விரிவான தேடலுக்கான குறிசொற்கள் பலவற்றை அளித்துள்ளது இப்புனைவு.

போரில் பிரிந்த ‘தூய உள்ளங்கள்’

மா.இளங்கண்ணனின் ‘தூய உள்ளங்கள்’ சிறுகதை மூன்றாவது சிங்கைப் புனைவு.[7]

நேதாஜியின் உரை தரும் எழுச்சியால் இந்திய தேசிய ராணுவத்தில் சேரும் காதலர்கள் மாணிக்கமும் மங்கம்மாவும் பிரிந்துவிடுகிறார்கள். போர் முடிந்து பர்மாவிலிருந்து சிங்கை திரும்பும் இருவரின் வீடுகளும் குண்டுவீச்சில் சிதைக்கப்பட்டிருந்ததாலும் சரியான தகவல்கள் கிடைக்காததாலும் ஒருவர் இறந்துவிட்டதாக மற்றவர் நினைத்துக்கொண்டு இருவரும் திருமணம் செய்துகொள்ளாமலேயே காலத்தைக் கழித்துவிடுவதைச் சொல்லியிருக்கும் கதை அது.

ஜப்பானியர் காலம் போர் மற்றும் சயாம் ரயில் பாதை அமைக்கும் பொருட்டு உறவுகளிடையே தற்காலிகப் பிரிவுகளைக் கொணர்ந்ததோடு மட்டுமல்லாமல் பல நிரந்தரமாகச் சிதைந்துவிட்டக் குடும்பங்களையும் விட்டுச்சென்றன என்பதன் அடையாளமாக இப்புனைவைப் பார்க்கலாம்.

விரிந்து மலர்ந்த ‘வைகறைப் பூக்கள்’

மா.இளங்கண்ணனின் ‘வைகறைப் பூக்கள்’ நாவல் ஜப்பானியர் காலகட்டத்தைக் குறித்த முதல் விரிவான சிங்கை இலக்கியப்பதிவாகும்.[8]

சிங்கப்பூர் மீது ஜப்பான் 1941 டிசம்பர் 8ஆம் நாள் குண்டுபோட்டதில் தொடங்கி அடுத்த சுமார் மூன்றரையாண்டு நிகழ்வுகளும் எவ்வாறு அன்றைய சிங்கையில் சாதாரண மக்களின் – குறிப்பாகத் தமிழர்களின் – அன்றாட வாழ்வில் பிரதிபலித்தன என்பதைக் கோட்டுச்சித்திரமாக அளித்துள்ள புனைவு இது.

போர் மூளப்போவது உறுதியானதும் குடியிருப்புகளுக்கு அருகில்  பதுங்கு குழிகள், சுரங்கம் அமைக்கப்பட்டதும் சிறார்கள் அதில் விளையாடி மகிழ்ச்சி கொள்வதையும் அதேநேரத்தில் பெரியவர்கள் கவலை கொள்வதையும் ஆசிரியர் இணைத்துக்காட்டுகிறார். அபாயச் சங்கு ஒலிக்கப்பட்டதும் என்ன செய்துகொண்டிருந்தாலும் அப்படி அப்படியே போட்டுவிட்டு அனைவரும் ஓடிப்போய் உயிர்காக்கவேண்டி சுரங்கத்தில் பதுங்குகின்றனர். ‘வாரிசு’ கதையில் குறிப்பிட்டிருப்பதை விரிவாக்கியதைப்போல சுரங்கத்திற்குள்ளேயே ஒரு பிரசவமும் நடக்கிறது.

அதைப்போலவே போர் முடிந்ததும், ஜப்பானியர் காலத்தில் அச்சடித்துப் புழக்கத்தில் விடப்பட்ட ‘வாழைமர’ நோட்டுகள் அவர்களோடு காலாவதியானதால் அதைச் சிறார்கள் விசிறியடித்து விளையாடுவதையும் ஆண்டுக்கணக்கில் சேர்த்த பணம் ஒரே நாளில் வெறும்தாளாகிவிட்டதில் பெரியவர்கள் விசனப்படுவதையும் ஒப்பிட்டுக் காட்டுகிறார்.

ஜப்பானியர்கள் பொய், திருட்டு ஆகியவற்றைச் சாதாரணமாக மன்னித்து விடமாட்டார்கள் என்றும் உயிர்தண்டனை உட்படக் கடுமையான தண்டனைகளை அளித்தார்கள் என்றும் இந்நாவலில் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் பதிவாகியுள்ளது. மூன்று நாட்கள் பசியும் பட்டினியுமாக இருந்தாலும் அரிசியையோ மற்ற உணவுப்பொருட்களையோ திருடுவதற்கு மக்கள் துணியாத காரணம் ஜப்பானியர் கெத்தே அரங்கிற்கு முன்னால் தலையை வெட்டிக் கம்பில் நட்டுவைத்துவிடுவர் என்பதுதான் என்று சில உரையாடல்கள் மூலம் உணர்த்தப்படுகிறது. மரவள்ளிக்கிழங்கும் நெத்திலிக் கருவாடும்தான் அக்காலத்தின் பிரதானத் தமிழர் உணவாகக் காணக்கிடைக்கிறது.

அன்பரசன் ‘நவசக்தி’ கிழமை இதழை வாசிப்பதாகவும் அதைப்பார்த்த ஜப்பானிய மேஜர், ‘நீ காந்தி ஆள்’ என்று அவனோடு நட்புகொள்வதாகவும் வருகிறது. இது திரு.வி.க தொடங்கி நடத்திய நவசக்தி இதழாக இருக்கவேண்டும். ஒருகட்டத்தில் நவசக்தி கிடைக்காமல் எதையோ இழந்துவிட்டதைப்போல உணரும் அவன் பழைய இதழ்களை மீள்வாசிப்புச் செய்வதாகவும் இப்புனைவினூடாக வருகிறது.

நேதாஜி உரையைக் கேட்டதும் தமிழினம் பெற்ற எழுச்சியானது,

‘ஜனவரி திடவில் மக்கள் உணர்ச்சி பிழம்பாய்க் குழுமியிருந்தனர்.எதற்கெடுத்தாலும் பாகுபாடு பார்க்கும் இவர்களுக்கு இந்த ஒற்றுமையும் உணர்ச்சியும் எங்கிருந்து வந்தன? என்று மற்ற இனத்தவர்கள் மூக்கின் மேல் விரல் வைக்கும் அளவிற்கு உள்ளத்தால் ஒருவரே என்று கூடியிருந்தது’

என்ற வரிகளின் மூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

மற்ற இன மக்களோடு இக்காலத்தில் தமிழர்களின் உறவு, ஊடாட்டங்களைக் குறித்த பதிவுகள் ஏதும் இந்த நாவலில் இல்லை. தமிழர்-ஆங்கிலேயர்-ஜப்பானியர் என்ற முக்கோணத்திற்கு உள்ளேயே இப்புனைவு தன் பயணத்தை முடித்துக்கொண்டுவிட்டது.

‘தூய உள்ளங்களின்’ மாணிக்கம்-மங்கம்மா இணை சேர்ந்துவாழ இயலாவிட்டாலும் ‘வைகறைப் பூக்களின்’ அன்பரசன்-மணிமேகலை இணையானது இந்திய தேசிய ராணுவத்தில் சேர்ந்து போரிட்டு, தோற்றபின் சிங்கை திரும்பி, திருமணம் செய்துகொள்கின்றனர். அந்தவகையில் இப்படியான குடும்பங்களுக்கான வகைமாதிரியாகவும் இப்புனைவைப் பார்க்கலாம்.

அன்பும் வெறுப்பும்

புதிய நூற்றாண்டில் ஜப்பானியர் காலத்தைப் பதிவுசெய்த முதற்புனைவு ஜெயந்தி சங்கரின் ‘குயவன்’ குறுநாவலாகும்.[9] கதை 1941ஆம் ஆண்டில் தொடங்கி 1978வரை சிங்கப்பூரின் குறிப்பிடத்தக்க அரசியல், சமூக, பொருளாதார மாற்றங்களைச் சுமந்துகொண்டு ஜொஹோருக்கும் சிங்கப்பூருக்கும் இடையே பயணிக்கிறது.

ஜப்பானியர்களுக்கு சீனர்கள் மீது ஏன் இவ்வளவு வெறுப்பு? என்று கணபதி கதாபாத்திரம் அங்கலாய்ப்பது குறிப்பிடத்தக்கது. நாகசாகி சம்பவம் (1886) தொடங்கி முதலாம் சீன-ஜப்பானியப் போர் (1894-95) பிறகு 1937இல் தொடங்கிய இரண்டாம் சீன-ஜப்பானியப் போர் என்று சீனர்கள் மீதான ஜப்பானியர் வெறுப்புக்கு அப்போதே குறைந்தது அரைநூற்றாண்டுக்கால வரலாறு இருந்தது.

பினாங்கில் கணபதியின் சீன நண்பன் அலோங் ஜப்பானியரால் கொலைசெய்யப்படுகிறான் அலோங்கின் சீன மனைவியும் அவர்களால் சீரழிக்கப்பட்டுக் கொல்லப்படுகிறாள். அவர்களுடைய கைக்குழந்தையை அலமேலு என்று பெயரிட்டு கணபதி குடும்பத்தினரே வளர்த்து ஆளாக்குகின்றனர்.

கா.சங்கையாவின் ‘அனாதைகள் உருவாக்கப்படுகிறார்கள்’ சிறுகதையிலும் சீன அன்பர்களின் தலைகளைக் குறிவைத்தே ஜப்பானிய வாட்கள் பாய்ந்தன என்று பதிவாகியுள்ளது.[10] அவ்வாறு அனாதையாக்கப்படும் சௌபாங் என்ற சீனப்பெண் ஓர் இந்தியக் குடும்பத்தால் உடல் முழுதும் கரி பூசப்பட்டு, பாவாடை தாவணி அணிவிக்கப்பட்டுத் தமிழ்ப்பெண்ணாக மறைத்து வளர்க்கப்படுவதும் சொல்லப்பட்டுள்ளது.

இவ்விடத்தில் இன்னொன்றைக் குறிப்பிடுவது வரலாற்றுக்கு நியாயம் செய்வதாக இருக்கும்.

ஜப்பானிய ஆட்சிக்காலத்தில் சிங்கப்பூரிலிருந்து செயல்பட்ட நேதாஜியின் சுதந்திர இந்திய அரசால் வெளியிடப்பெற்ற சுதந்தர இந்தியா (நாளிதழ்), யுவபாரதம் (வார இதழ்), சுதந்திரோதயம் (திங்கள் இதழ்) ஆகியவற்றில் ஜப்பானியரை ஆதரித்துப் படைப்புகள் வெளிவந்ததை, உதாரணமாக,

நல்ல சமயமடி பாப்பா நிப்பன்

நம் மருமைத் தோழரடி பாப்பா

வெள்ளை நிறத் தவரைப் பாப்பாவிட்டு

ஓடிடவே செய் வோமடி பாப்பா

என்ற புதுப்பாப்பா பாடலை, ஆ.இரா.சிவகுமாரன் குறிப்பிட்டுள்ளார்.[11] இப்பாடலில் நிப்பன் என்பது ஜப்பானைக் குறிக்கும்.

மேலும், பாலபாஸ்கரன், ‘ஜப்பானியர் காலம் : சிறுகதைச் செழிப்பு’ என்ற முப்பது பக்க அளவுள்ள கட்டுரையில் ஜப்பானியர் ஆக்கிரமிப்புக் காலத்தின்போதே மலாயாவிலிருந்து வெளியான சிறுகதைகளைப் பற்றி விரிவாக எழுதியுள்ளார்.[12] ஜப்பானியர் பண்பாட்டின் அம்சங்களைத் தெரிவிக்கும் நோக்கில் சிறுவரை மையமாகக் கொண்ட புனைவுகள், இந்திய நாட்டுப்பற்றும் பிரிட்டிஷாரிடமிருந்து சுதந்திர வேட்கையும் மிகுந்த கதைகள், இந்திய தேசிய ராணுவப் பின்னணி கொண்ட கதைகள் எனப் பலகதைகள் அவற்றுள் இருந்ததை அக்கட்டுரை குறிப்பிடுகிறது.

ஒருபக்கம் ஜப்பானியரின் சீன அழிப்பைச் சகிக்கமுடியாமலும் மறுபக்கம் நேதாஜி மற்றும் பிரிட்டிஷாரிடமிருந்து இந்திய விடுதலை ஆகிய காரணிகளால் ஜப்பானியருடன் நட்புபாராட்டியும் நிற்கவேண்டிய சிக்கலான சூழல் அன்றைய மலாயாத் தமிழர்களுக்கு இருந்துள்ளது. ஆகவே தனிப்பட்ட முறையில் முடிந்தவரை சீனர்களைக் காப்பாற்றியும் அதேநேரத்தில் பொதுவாக ஜப்பானியர்க்கு ஆதரவு நல்கியும் வந்திருப்பதைக் காணமுடிகிறது.

மீண்டும் ‘குயவ’னுக்கு வரலாம். சீனராகப் பிறந்து தமிழராக வளர்ந்த அலமேலு பின்னாளில் ஒரு தமிழரை மணந்து, தமிழாசிரியராகப் பணியாற்றி நல்லாசிரியர் விருதும் பெறுகிறார். கணபதி குடும்பத்தில் மற்றொரு பெண் மலாய்க்காரரை மணக்கிறார்.

சீன, மலாய், இந்திய இனங்களுக்கிடையேயான நல்லிணக்கத்தையும் இணைப்பையும் மையப்படுத்திப் புனையப்பட்டுள்ளதாலும் நாற்பதாண்டுக்காலத்தின் முக்கிய வரலாற்று நிகழ்ச்சிகளைக் தொட்டுக்கொண்டு செல்லவேண்டியிருப்பதாலும், குறு நாவலாக இருந்த போதிலும் ஜப்பானியர் காலத்தைக் குறித்துக் குறிப்பிட்ட அளவிலான செய்திகளே குயவனில்  காணக்கிடைக்கின்றன. அவற்றை ஆசிரியரின் மொழியில், ஜப்பானியரின் அராஜகம், அரசாங்கம் என்ற பெயரில் ஆரம்பித்து விட்டிருந்ததுஎன்று சுருக்கலாம்.

ஆங்கிலத்தை அறவே நீக்கிவிட ஜப்பானியர் முயன்றதால் கல்வி பாதிக்கப்பட்டது, வரைமுறையின்றி அச்சடித்துப் புழக்கத்தில் விடப்பட்ட பணத்தால் பணவீக்கம் அதிகரித்தது, ரகசிய ஜப்பானிய எதிர்ப்பியக்கங்கள் உருவானது ஆகிய தகவல்களையும் இப்புனைவில் காணமுடிகிறது.

ஆழமாக உரையாட வீட்டுக்கு வந்தார்’  

இந்திரஜித்தின் ‘வீட்டுக்கு வந்தார்’ சிறுகதை ஜப்பானியர் தோற்று வெளியேறிய காலத்தில் மலாயாவின் ஏதோவொரு தோட்டப்பகுதியில் நடக்கும் கதை.[13]

தோட்டக்கிராணி நம்பியாரின் மகனின் பார்வையில் கதை சொல்லப்பட்டுள்ளது. நம்பியாரால் ஜப்பானியரிடம் ‘பிடித்துக்’ கொடுக்கப்பட்ட (சயாம் மரண ரயில் அமைப்பதற்காக இருக்கவேண்டும். நேரடியாகக் கதையில் குறிப்பிடப்படவில்லை) தோட்டத் தொழிலாளர்களில் உயிர்பிழைத்த துரைசாமி என்பவர் நீண்ட நாட்களுக்குப்பிறகு நம்பியாரைப் பார்க்கவருகிறார். ஏற்கனவே குற்றவுணர்ச்சியால் நடைப்பிணமாக வாழும் நம்பியாரிடம்,

‘…என் பொண்டாட்டி இன்னொரு கல்யாணம் பண்ணிக்கிச்சு. என் பையனும் அவங்களோட வேற ஊருக்குப் போயிட்டான். அவுங்களயும் போய்ப் பார்த்தேன். நல்லா இருக்காங்க. இப்ப எனக்கு வேற ஒரு பொண்ணு பார்த்துக்கிட்டு இருக்காங்க. பழசு எல்லாம் மறக்கணும்னு ஆசப்படறேன். அதான் நிதானமா இருக்கும்போதே உங்களையும் பார்த்துட்டுப் போயிரலாம்னு வந்தேன். கவலைப் படாதீங்க. உங்க மேல ஒண்ணும் கோவம் இல்லீங்க…

என்று துரைசாமி சொல்வதும், அதைக்கேட்கும் கதைசொல்லி,

‘…வாழ்க்கையில் மிகவும் அடிபட்ட மனிதர்களிடம் ஒருவிதமான தெளிவு ஏற்பட்டு விடுகிறது. பிரபஞ்சத்தின் எல்லையில் இருந்து எல்லாவற்றையும் பார்த்து பூமி ஒரு சின்னப் புள்ளி என்று முடிவு செய்துவிடுகிறார்கள். இல்லாவிட்டால் துரைசாமி ஒரு சின்னப் பேனாக்கத்தியோடுதான் அப்பாவைப் பார்க்க வந்திருக்க முடியும்..’

என்று மனதிற்குள் பேசுவதும் மொத்தம் மூன்று பக்கமே அளவுள்ள இக்கதை ஆழ்ந்து யோசிக்கச் செய்கிறது.

தகவல்களையும் சம்பவங்களையும் புனைவினூடே அளித்துச்செல்வதைக்காட்டிலும் அவற்றுடன் தொடர்புடைய உணர்வுகளையும் சிந்தனைகளையும் ஊடும்பாவுமாக நிரவி வலுவான அனுபவங்களைத் தருவது வாசகரிடம் வலுவான தாக்கத்தை ஏற்படுத்துவதோடு தனது இலக்கையும் இலக்கியம் சரியாகச் சென்றடையும் என்பதற்கு இப்புனைவு உதாரணமாக அமைந்துள்ளது. இக்கதை இக்களத்தில் ஒரு குறிப்பிடத்தக்க, முக்கியமான புனைவு.

யூகா வோங்கின் நாளேட்டிலிருந்து சில பக்கங்கள்’  

ஜெயந்தி சங்கரின் சிறுகதையான ‘யூகா வோங்கின் நாளேட்டிலிருந்து சில பக்கங்கள்’ சீன-ஜப்பானியப் போர் முடிந்து முக்கால் நூற்றாண்டு கடந்தும் மூன்று தலைமுறைகளாக சீன-ஜப்பானிய இனங்களிடையே இன்றும் வெறுப்பு தொடர்கிறது என்பதைக் கவனப்படுத்தி அமைக்கப்பட்டுள்ளது.[14] ஒருவகையில், ஆசிரியரின் மொழியில் சொன்னால்,  வரலாறு விரோதத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கிறது.

கதாநாயகர் யூகா வோங் ஜப்பானியத் தாய்க்கும் சீனத் தந்தைக்கும் பிறந்த சிங்கப்பூரர். ஆகவே இரண்டு இனங்களாலுமே வேற்றாள் என்ற வெறுப்புடன் பார்க்கப்படுபவர். பாலர்பள்ளி முதல் உயர்நிலைப்பள்ளிவரை சிங்கப்பூர் வரலாறு கற்பிக்கப்படும்போதெல்லாம் யூகா வோங்கைப் பார்வையாலும் முணுமுணுப்புகளாலும் குற்றவாளிக்கூண்டில் நிறுத்துகின்றனர் வகுப்புத் தோழர்கள்.

கல்லூரிக் காலத்தில் நண்பர்களிடையே இச்சிக்கல் இல்லை என்றாலும் திருமண விருந்துகள் போன்ற கூடுகைகளின்போது எப்படியும் பேச்சு அங்குதான் வருகிறது.  ஜப்பானிய உணவுகள், மொழியைக் கற்பது என ஜப்பானியப் பண்பாட்டின் மீது கணிசமான சீன இளையர்களுக்கு ஆர்வத்துடன்கூடிய ஏற்பும் அதேநேரத்தில் வரலாற்று அடைப்படையிலான வெறுப்பும் இருக்கும் இரட்டை மனநிலையை இப்புனைவு பதிவுசெய்கிறது.

வரலாற்றுக் குற்றத்திற்கான மன்னிப்பைக்கோரி ஒரேயடியாகக் கணக்கை நேர்செய்துவிட்டுப் புது அத்தியாயம் தொடங்கலாம் என்பதே பல ஜப்பானிய இளையர்களின் உள்ளக்கிடக்கை என்றும் ஆனால் அதற்கு ஜப்பானிய அரசு ஒருபோதும் ஒப்புவதில்லை என்றும் யூகா வோங் தன்னுடைய நாளேட்டில் எழுதுவதோடு இப்புனைவு நிறைவுறுகிறது.

ரௌத்திரமும் திரவியமும்

சூர்ய ரத்னாவின் ‘ரௌத்திரம்’ சிறுகதை சீனர்களிடையே ஆபத்தானவர்களாகக் கருதப்பட்டவர்களைச் சுத்திகரிப்பு செய்ய ஜப்பானியர் செய்த ‘சூக் சிங்’ என்றழைக்கப்பட்ட நடவடிக்கையை அடிப்படையாகக்கொண்டது.[15] அவ்வாறு சாங்கி கடற்கரையில் கொல்லப்பட்ட 66 சீனர்களின் ஆன்மாக்கள் இன்றும் நீதிகேட்டும் நிறைவேறாத ஆசைகளினாலும் அலைந்துகொண்டிருப்பதாக ஒரு நம்பிக்கை இருப்பதை அப்புனைவு வெளிப்படுத்தியுள்ளது.

சித்துராஜ் பொன்ராஜின் ‘திரவியம்’ சிறுகதை ஜப்பானியர் ஆக்கிரமிப்புக் காலத்தைக் குறித்த சிங்கைத் தமிழ்ச் சிறுகதைகளுள் அதிகத் தகவற்செறிவுள்ள கதை எனலாம்.[16] இக்கதையில் சூக் சிங் நடவடிக்கை குறித்த பதிவுகள் சற்று விரிவாகவே உள்ளன.

சீன ஆடவர்கள் (18 முதல் 50 வயது) அனைவரையும் தெளிவான வழிமுறைகளின்றிச் சோதனையிட்டுப் பலரைத் தேர்வுசெய்து கடற்கரைக்கு இட்டுச்சென்று கொல்லப்பட்டதும் அதன்பிறகுக் கடற்கரை ஓரமாக வாழ்ந்த மலாய் மீனவர்கள் பலமாதங்களுக்கு மீன்பிடிக்காமல் இருந்ததாகவும் அப்புனைவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

காட்சிச் சித்தரிப்புகள் வழியாகப் பல்வேறு தகவல்கள் நேரடியாகவும் சீன வெறுப்புணர்வு மறைமுகமாகவும் கொடுக்கப்பட்டிருப்பதைக் கீழுள்ள பத்திகளின் வழியாக அறியலாம்.

 ‘சேறு படிந்த காக்கி சீருடைகளையும் தென்கிழக்காசிய வனப்பகுதிகளின் அதீத உஷ்ணத்திலிருந்து கழுத்தின் பின்பகுதியைத் தற்காத்துக் கொள்ள தலைக்குப் பின்னால் நீண்ட துணிகளை வைத்துத் தைத்த துணித் தொப்பிகளையும் அணிந்திருந்த ஜப்பான் படைவீரர்கள் நகரத்தின் தெருக்களில் நடமாடும் வரைக்கும் போர் வந்துவிட்டதாக யாருக்கும் தோன்றவில்லை’

‘…முன்னால் நடந்த ஜப்பானிய அதிகாரிகள் இடுப்பில் மிக நீண்ட வாள்களை அணிந்திருந்தார்கள். வாள்களின் நீளம் அவர்களின் உயரத்தில் பாதி இருந்தது. அதிகாரிகள் நடக்கும்போது வாள்களும் அவற்றில் மாட்டப்பட்டிருந்த செவ்வந்திப் பூச்சின்னம் பொறித்த கனமான அலங்காரங்களும் அவர்களின் திரண்ட தொடைகளின் மீது உரசி ஒலி எழுப்பின. சீனர்கள் அதிகம் வாழ்ந்த சௌத் பிரிட்ஜ் சாலைத் தெருக்களைக் கடக்கும்போது ஜப்பானிய அதிகாரிகளின் கண்கள் இங்குமங்கும் சுழன்றபடி அசாதாரணமான வகையில் சுடர்விட்டு அடங்கின’

கடைசியில், நட்புக்குத் துரோகம் செய்து, ஹாக் கீ ரேடியோ வைத்திருப்பதையும் அவனது முகவரியையும் ஜப்பானியரிடம் காட்டிக்கொடுத்து வெகுமதி பெற்றுக்கொள்ளும் கேசவராஜூவை கெட்டகனவுகள் வாட்டுகின்றன. அதிலிருந்து தப்பிக்க அவனால் இயலவில்லை.

கேசவராஜூ அவனது சீன நண்பன் ஹாக் கீயிடம் எவரெவரோ (பிரிட்டிஷ் – ஜப்பான்) செய்துகொள்ளும் போரின் இடையில் நாம் ஏன் அல்லற்படவேண்டும் என்று எரிச்சலடைவதும் அதற்கு ஹாக் கீ இது நம் அடிப்படை அறத்தையும் தகுதியையும் நியாயத் தராசில் ஏற்றிப்பார்த்துக்கொள்ளவேண்டிய தருணம் என்ற விதத்தில் மறுமொழி கூறுவதும் ஆக்கிரமிப்புக் காலத்தில் ஒவ்வொருவர்க்குள்ளும் கனன்றுகொண்டிருந்த ‘சுயபாதுகாப்பு X மானுடஅறம்’ மனப்போராட்டத்தைத் துல்லியமாகக் காட்டுகிறது.

மாய யதார்த்தத்தின் இரைச்சல்’  

ஹேமாவின் ‘இரைச்சல்’ சிறுகதையில் நிஜத்திற்கும் மனதின் மாயவேலைக்கும் இடையே வேறுபாடு காணவியலாமல் அல்லாடும் ஜென்னி கதாபாத்திரம், தன்னுடன் உறவாடும் மாயக்குரலுடன் ஜப்பானியர் காலத்தின் சம்பவங்களை அசைபோடுகிறார்.[17]

ஜப்பானியர் கொடூரங்கள், தலைமுடியையும் ஆடைகளையும் ஆணைப்போல மாற்றிக்கொண்டு தப்பித்து வாழப் பெண்ணிடம் அறிவுறுத்தப்படுவது, சொந்தப்பகையைத் தீர்த்துக்கொள்ள ஜப்பானியர்களைப் பயன்படுத்திக்கொள்வது போன்ற காட்சிகள் இப்புனைவில் உள்ளன.

ஆக்கிரமிப்புக் காலத்தின் வரலாற்றுத் தகவல்களை அடிப்படையாக வைத்துக்கொண்டு அதைப் புனைவின் அனைத்து சாத்தியங்களுடன் உணர்வுகளை முன்னிலைப்படுத்தி உரையாட இதைப்போன்ற மாய யதார்த்தக் கதைகள் நல்லதொரு வாய்ப்பை வழங்குகின்றன எனலாம்.

முடிவுரை

சிங்கப்பூரில் ஜப்பானியர் ஆக்கிரமிப்பு முடிவுக்குவந்து முக்கால் நூற்றாண்டுக்காலம் கடந்துவிட்டது. இந்த நீண்ட இடைவெளியில் ஒரு நாவல், ஒரு குறுநாவல், பத்து சிறுகதைகள் என்று பன்னிரு சிங்கைத் தமிழ்ப் புனைவுகள் ஆக்கிரமிப்புக் காலத்தின் பல்வேறு புள்ளிகளை மையப்படுத்தித் தகவல்களுடனும்  வெவ்வேறு கோணங்களிலிருந்தும் எழுதப்பட்டுள்ளன.

சீன இனத்தைப்போன்று இந்தியர்களை ஜப்பானியர் இன அடிப்படையிலேயே எதிரிகளாகக் கருதாததும் இந்திய விடுதலைக்கானப் போராட்டத்தில் நேதாஜியின் ஜப்பானியர் நட்புறவும் ஆக்கிரமிப்புக் காலத்தின் உக்கிரத்தை ஓரளவுக்குக் குறைப்பதற்குத் தமிழர்களுக்கு உதவியிருக்கலாம்.

சுபாஷ் சந்திரபோஸ், நேரு, காந்தி ஆகியோரின் படங்கள் வீட்டில் மாட்டப்பட்டிருந்ததால் தமிழர்களிடம்  கடுமையாக நடந்துகொள்ளாமல் ஜப்பானியர் விட்டுச்செல்லும் காட்சி ஒரு புனைவில் காணக்கிடைக்கிறது. அதேநேரத்தில் சயாம் மரணரயில் அமைப்பதற்காகப் பிடித்துச்செல்லப்பட்ட தமிழர்களின் சித்திரமும் இன்னொரு புனைவில்  இருக்கிறது.

ஒருபக்கம் ஜப்பானியர் பொதுமக்களுக்குச் செய்த அக்கிரமங்களைச் சகிக்கவியலாமல் குமுறலுடனும் மறுபக்கம் அரசியல் காரணங்களுக்காக அவர்களை அனுசரித்துக் கொண்டாடிச் செல்லவேண்டியிருந்த நெருக்கடியுடனும் தமிழர்கள் தமக்குள்ளேயே போரிட்டுக்கொண்டிருந்ததும் இப்புனைவுகளின் வழியாகத் துலக்கமாக வெளியாகியுள்ளது.

மேற்கண்ட அவதானிப்புகளால் ஜப்பானியர் ஆக்கிரமிப்புக் காலத்தைக் குறித்த சிங்கைப் புனைவுகள் செம்மையான தகவல்களுடனும் தெளிவான நோக்கங்களுடனும் வெளிப்பட்டுள்ளன என்றாலும் எண்ணிக்கை அளவிலும்சரி, போர்க்காலத்தின் மானுடத் தடுமாற்றங்களை வெளிக்கொண்டுவருவதிலும்சரி இன்னும் செய்யவேண்டியது அதிகமிருப்பதாகவே கருதவேண்டியிருக்கிறது.

மலேசிய எழுத்தாளர் அ.ரெங்கசாமி ஜப்பானியர் மலாயா ஆக்கிரமிப்புக் காலகட்டத்தின் பல்வேறு சிக்கல்களை மையப்படுத்தி, சொந்த அனுபவம், விரிவான ஆய்வுகள், நேரடிச் சந்திப்பு போன்றவற்றிலிருந்து தகவல்களைச் சேகரித்துப் புதியதோர் உலகம், நினைவுச் சின்னம், இமயத் தியாகம், விடியல் ஆகிய நான்கு நாவல்களை  எழுதியிருக்கிறார். ‘மீண்டு நிலைத்த நிழல்கள்’ என்ற நூலில் வெளியாகியுள்ள இவரது நேர்காணலில் இப்படைப்புகளை உருவாக்க அவர் எடுத்துக்கொண்ட முயற்சிகளைக் குறித்து விரிவாக அறியமுடிகிறது.[18]

சிங்கப்பூரை என்றென்றைக்குமாக மாற்றிவிட்ட உக்கிரமான அந்த மூன்றரை ஆண்டுக்காலம் நிச்சயமாக ஒரு டஜன் தமிழ்ப்புனைவுகளுக்குள் அடங்கிவிடக்கூடியவை அல்ல. குறிப்பாக, புலம்பெயர்ந்து சிங்கையில் வாழும் எழுத்தாளர்கள் இக்காலகட்டத்தை ஆழ்ந்தாராய்ந்து புனைவுகளாக்கினால் அது இம்மண்ணின் வரலாற்றை நெருக்கமாக அறிந்துகொள்ள அவர்களுக்கு ஒரு வாய்ப்பை உண்டாக்கித் தருவதோடு வரலாற்றின் இலக்கியத் தேவையை நிறைவுசெய்யவும் உதவும்.

சிங்கப்பூரில் ஜப்பானியர் ஆக்கிரமிப்புக் காலத்தின் வரலாற்று  இடைவெளிகளைப்  புனைந்து நிரப்ப முன்வரும் ஒரு சிங்கை எழுத்தாளர்க்கு அரிய வளங்களும் வாய்ப்புகளும் இன்று இருக்கின்றன;

முதலாவதாக, தேசிய ஆவணக் காப்பகத்தின் வாய்மொழி வரலாற்று நேர்காணல்கள் பிரிவு, ஜப்பானிய ஆக்கிரமிப்புக்கால அனுபவங்களைப் பதிவுசெய்வதற்கென்றே ஒரு திட்டத்தைத் தொடங்கி அதில் அக்காலத்தை அனுபவித்த பொதுமக்களிலிருந்து போர்க்கைதிகள்வரை பல்வேறு இனத்தைச் சேர்ந்த 276 பேரிடம் நேர்காணல் செய்து பதிவேற்றியுள்ளது. சுமார் ஆயிரம் மணி நேரம் நீளும் இவ்வனுபவங்களை இணையத்திலேயே கேட்கலாம்.[19]

இரண்டாவதாக, ‘சிங்கப்பூரின் ஷிண்ட்லர்’ என்றழைக்கப்படும் மமோரு ஷினோசாகி தன் சிங்கப்பூர் நாட்களை எழுதிய சுயசரிதை உட்பட பல தரப்பினர் எழுதிய அபுனைவுகளும் புனைவுகளும் ஆங்கிலத்தில் அனேகம் கிடைக்கின்றன.[20]

மூன்றாவதாக, அன்றைய நினைவுகளைச் சுமந்துகொண்டு வாழ்ந்துகொண்டிருப்பவர்கள் பலர் சிங்கப்பூரில் இன்றும் இருக்கின்றனர், தம் வாழ்க்கையின் இறுதிக்காலத்தில். ஆனால் இன்னும் பத்தாண்டுகள் கழித்து இவர்களில் பலரின் நினைவுகள் நிரந்தரமாக அவர்களுடன் மறைந்துவிடக்கூடும்.

ஆவணக்காப்பகத்தின் ஒலிப்பதிவுகளுக்குள்ளும் ஆய்வுநூல்களுக்குள்ளும் அக்கால நினைவுகளுடன் இம்மண்ணில் வாழ்ந்துகொண்டிருப்பவர்களுக்குள்ளும் ஜப்பானியர் ஆக்கிரமிப்புக் காலத்தைக் குறித்து இன்னும் பத்து நாவல்களும் நூறு சிறுகதைகளும் மறைந்துகொண்டிருக்கலாம். அவை சிங்கப்பூரின் ரெங்கசாமிகளுக்காகக் காத்துக்கொண்டிருக்கின்றன. கடிகாரம் துடித்துக்கொண்டிருக்கிறது.

***

[1] தமிழ்முரசு, ஏப்ரல் 22 1953, ப.9

[2] தமிழ்முரசு, பிப்ரவரி 25 1953, ப.10

[3] தமிழ்முரசு, மார்ச் 22 1953, ப.2

[4] தமிழ்முரசு, நவம்பர் 25 1953, ப.5

[5] The Malaysian Tamil Short Stories (1930-1980), A Critical Study, Bala Baskaran, Self Publication, 2006

[6] பூச்செண்டு, மு.தங்கராசன், தை நூலகம் வெளியீடு, 1985, ப.78

[7] கோடுகள் ஓவியங்கள் ஆகின்றன, மா.இளங்கண்ணன், தை நூலகம் வெளியீடு, 1978, ப.1

[8] வைகறைப் பூக்கள், மா.இளங்கண்ணன், தேசியக் கலைகள் மன்ற ஆதரவில் சொந்த வெளியீடு, 1990

[9] தமிழ்முரசு, 2002, அக்டோபர் 05,12,17,24

[10] புது அப்பா, கா.சங்கையா, தமிழ்க் கலை அச்சகம் வெளியீடு, 2011, ப.1 (இத்தொகுப்பு ஆசிரியர் அமரரானபின் அவரது கதைகளுள் சிலவற்றைத் தொகுத்து வெளியிடப்பட்டிருக்கிறது. கதை இந்நூலில் வெளிவருவதற்கு முன் வேறெங்கும் வெளியானதா என்று அறியவியலவில்லை)

[11] சிங்கப்பூர்த் தமிழ் இலக்கியம்: ஒரு வரலாற்றுப் பார்வை, முனைவர் ஆ.இரா.சிவகுமாரன், Paper presented at the Tamil Conference in Singapore and Malaysia, 7-8 September 2002, Organized by The Centre for the Arts, National University of Singapore, p.6

[12] சிங்கப்பூர்-மலேசியா தமிழ் இலக்கியத் தடம் சில திருப்பம், பால பாஸ்கரன்,  சொந்த வெளியீடு, 2018, ப.226

[13] வீட்டுக்கு வந்தார், இந்திரஜித், சொந்த வெளியீடு, 2006, ப.21

[14] அநங்கம் இதழ், நான்காம் காலாண்டு, ஜெயந்தி சங்கர், 2009

[15] ஆ! சிங்கப்பூர் அமானுஷ்யக் கதைகள், சூர்ய ரத்னா, தங்கமீன் பதிப்பகம், 2014, ப.142

[16] தி சிராங்கூன் டைம்ஸ், சித்துராஜ் பொன்ராஜ், நவம்பர் 2017, ப.16

[17] தி சிராங்கூன் டைம்ஸ், மார்ச் 2018, ப.16

[18] உண்மைகளை மறைக்க என் புனைவுகளை நான் அனுமதிப்பதில்லை, அ.ரெங்கசாமி நேர்காணல், மீண்டு நிலைத்த நிழல்கள், தொகுப்பாசிரியர் ம.நவீன், வல்லினம் பதிப்பகம், 2018, ப.31

[19] http://www.nas.gov.sg/archivesonline/oral_history_interviews/browse-project-interviewee/4 (accessed on 03.07.2019)

[20] Syonan : My Story, The Japanese Occupation of Singapore, Shinozaki Mamoru, Mashall Cavendish Publication, 2011