வெளிநாட்டுப் பணிப்பெண்கள் சிங்கப்பூரில் திருட்டுக் குற்றம் சாட்டப்படுவது ஒன்றும் புதிதல்ல. அதுகுறித்து அவ்வப்போது செய்திகள் வெளியாவது உண்டு. பணிப்பெண்ணை வேலையிலிருந்து நிறுத்துவதற்கு முதலாளி வழக்கமாகச் சொல்லும் காரணங்களில் முக்கியமானது திருட்டு. பல திருட்டுக்குற்ற வழக்குகளில் பணிப்பெண்கள் திருடியது உண்மை என்றும் நிரூபிக்கப்பட்டுள்ளது.

மாதம் சுமார் நானூறு முதல் என்னூறு வெள்ளிவரை ஊதியம் பெறும் இந்த பணிப்பெண்கள் திருடுவதில் வியப்பில்லை என்கிற தவறான பொதுப்புத்தியும் சமூகத்தில் படிந்துள்ளது. சிங்கைப் புனைவுலகிலும் அதன் தாக்கத்தைக் காணலாம். எடுத்துக்காட்டாக, கமலாதேவி அரவிந்தனின் ‘உத்தமி’ சிறுகதையில் வரும் பணிப்பெண் தான் வேலைபார்க்கும் வீட்டில் திருடுபவளாக இருக்கிறாள். இக்கதையின் தலைப்பு பொதுவாகப் பணிப்பெண்களின் நேர்மை விஷயத்தில் முதலாளிகளின் மனநிலையைப் பிரதிபலிக்கும் ஏளனக் குறியீடாக அமைகிறது எனலாம்.

பணிப்பெண் திருட்டுக்குற்றம் குறித்த செய்திகள் ஊடகங்களில் வெளியாகும்போது வழக்கமாக செய்தி வெளியான நாளன்று மட்டும் மக்களிடையே உணவுமேசையில் மெல்லப்பட்டு மறைந்துவிடும். ஆனால் அண்மையில் அப்படி ஒரு வழக்கு பல திருப்பங்களை அடைந்ததால் தொடர்ந்து பரபரப்புச் செய்தியானதோடு மட்டுமின்றி அவ்வழக்கு தொடர்பான விவாதம் நாடாளுமன்றம்வரை வந்துவிட்டது. சட்ட அமைச்சர் விரிவான அறிக்கை தாக்கல் செய்யவேண்டியதாகிவிட்டது. அந்த அறிக்கை மீதான விவாதத்தின்போதுதான் ‘மிக்காபெரிசம்’ (Micawberism) என்ற சொல் பயன்படுத்தப்பட்டது.

‘மிக்காபெரிச’த்திற்குள் போவதற்குமுன் இந்தத் திருட்டு வழக்கு வந்த கதையையும் திருப்பங்களையும் சுருக்கமாகப் பார்த்துவிடலாம்.

இந்தோனேசியப் பணிப்பெண் பார்தி லியானி, சாங்கி விமான நிலையக் குழுமத்தின் முன்னாள் தலைவர் லியூ மன்லியோங்கின் வீட்டில் சுமார் பத்தாண்டுகளாகப் பணிப்பெண்ணாக வேலைபார்த்தவர். முதலாளி, பணிப்பெண் உறவு சீராகவே இருந்துள்ளது. நல்ல உணவு, ஊதியம், அவ்வப்போது அன்பளிப்புகள் என்று கொடுத்துள்ளனர். ஆனால் 2015ஆம் ஆண்டு வாக்கில் வீட்டில் திருடுகிறாரோ என்ற ஐயப்பாடு மன்லியோங்கின் மனைவிக்கு எழுந்துள்ளது. ஆனால் எதையும் உறுதிசெய்யவியலாத நிலையில் பணிப்பெண்ணை மாற்றவும் மழுமாறிக்கொண்டு இருந்துள்ளார்.

இது ஒருபுறமிருக்க, மன் லியோங்கின் மகன் கார்ல் லியூவின் வீட்டுக்கும் அவ்வப்போது பார்தியை வேலைக்கு அனுப்பவதுண்டாம். அதற்கான கூடுதல் ஊதியமும் கொடுத்துள்ளனர். எந்த வீட்டில் பணிப்பெண் வேலைக்கு வருகிறாரோ அங்குமட்டுமே பணிசெய்யவேண்டும் என்பது சிங்கையிலுள்ள விதி. ஆனால் முதலாளியும் பணிப்பெண்ணும் ஒருவருக்கொருவர் புரிந்துணர்வின் அடிப்படையில் முதலாளியின் உறவினர் வீடுகளில் அவ்வப்போது பணிப்பெண் வேலைசெய்வது ஒன்றும் புதிதல்ல. முதலாளிக்கு இன்னொரு பணிப்பெண் வைக்காமல் வேலைமுடிகிறது, பணிப்பெண்ணுக்கு கூடுதல் வருமானம் கிடைக்கிறது என்று இந்த நீக்குப்போக்கான ஏற்பாடு இரு சாராருக்கும் நன்மைபயப்பதாகவே இருந்துவருகிறது.

ஆனால் கார்ல் லியூ தன் வீட்டை பெற்றோரின் வீட்டுக்கருகிலேயே மாற்றிக்கொண்டு வந்தபிறகு, அவ்வப்போது அவர் வீட்டுக்குச் சென்றுவந்த பார்தி அடிக்கடி இரண்டு வீட்டிலும் வேலைசெய்ய நேர்ந்துள்ளது. கூடுதல் ஊதியமும் ஒழுங்காகக் கொடுக்கப்படவில்லை. அதனால் கழிவறை சுத்தம்செய்வது போன்ற சில கடுமையான வேலைகளைச் செய்யமுடியாது என்று பார்தி மறுத்துள்ளார். அப்படியானால் வேலையைவிட்டு நிறுத்திவிடுகிறோம் என்றதும் பார்தி பதிலுக்கு தன்னை இரண்டு வீடுகளில் வேலைசெய்யச் சொன்னதை மனிதவள அமைச்சிடம் தெரிவிப்பேன் என்றிருக்கிறார். வந்தது வினை.

பார்தியை உடனே அவரது தாய்நாடான இந்தோனேசியாவுக்கு அனுப்பிவிட்டு அவர்மேல் $50,000 வெள்ளி மதிப்புள்ள பல பொருட்களைத் திருடிவிட்டதாகப் போலீசில் புகாரை அளித்துவிட்டார் கார்ல் லியூ. ஏற்கனவே அவர்மேல் இருந்த சந்தேகத்தை இந்தச் சூழலுக்குத்தக்க பயன்படுத்திவிட்டனர். இது தெரியாமல் மீண்டும் சிங்கை திரும்பிய பார்தி கைதுசெய்யப்பட்டார். இதெல்லாம் நடந்தது 2016ஆம் ஆண்டு. நீதிமன்றத்தில் வழக்கு விசாரிக்கப்பட்டு திருட்டுக்குற்றம் உறுதியாகி பார்திக்கு ஈராண்டுகாலச் சிறைதண்டனை கடந்த 2019ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் அளிக்கப்பட்டது.

அதோடு வழக்கமான ஒரு திருட்டு வழக்கு நடந்தது முடிந்தது என்று அப்படியே போயிருக்கவேண்டியது. ஆனால் பார்திக்கு அப்படி விட மனமில்லை. திருடாத தான் ஏன் திருட்டுக் குற்றத்தை ஏற்கவேண்டும் என்று மேல்முறையீடு செய்து போராட முடிவுசெய்தார். HOME (Humanitarian Organization for Migration Economics) என்கிற அரசுசாரா அமைப்பு அவருக்கு உதவமுன்வந்தது.

ஒரு பணிப்பெண் தன் வருமானத்தை வைத்துக்கொண்டு சிங்கப்பூரில் வழக்கறிஞர் நியமித்து வாதாடமுடியாது. அதுவும் இதுபோன்ற வழக்குகள் ஓராண்டு ஈராண்டு காலத்துக்கு நீளக்கூடும். இந்த அமைப்பு வசதிகுறைந்தவர்களுக்காக இலவசமாக வாதாட முன்வரும் வழக்கறிஞர்களைப் பயன்படுத்தி உதவுகிறது. வழக்கு நடைபெறும் காலத்தில் பணிப்பெண் வேறு இடத்தில் பணிபுரிய முடியாது என்பதால் அவர்களுக்கும் வருமானத்துக்கு ஒருவழி செய்துகொடுக்கிறது. மகத்தான பணி இவர்களுடையது. ‘Our Homes, Our Stories – Voices of Migrant Domestic Workers in Singapore’ என்கிற தலைப்பில் ஒரு தொகுப்பு நூலை இவ்வமைப்பு 2018ஆம் ஆண்டில் வெளியிட்டது. தங்கள் அனுபவங்களை பல நாடுகளின் பணிப்பெண்கள் இந்நூலில் பகிர்ந்துகொண்டுள்ளனர். ஆர்வமிருப்பவர்கள் வாசித்துப்பாருங்கள்.

அப்படி இலவச சேவையாக ‘ஹோம்’ அமைப்பு வழியாக பார்திக்கு வாதட வந்தவர்தான் அனில் பால்சந்தானி. மனுஷன் நிதானமானவர். நியாயஸ்தர். அளந்தளந்து பேசினாலும் ஆழமாகப் பேசுகிறார். எதையும் விட்டுவைக்காமல் மொத்த ஆதாரங்களையும் அவர் அலசிப்பார்த்ததில் பார்தி திருடவில்லை என்ற நம்பிக்கை அவருக்கு வந்துவிட்டது. ‘ஹோம்’ அமைப்பினருக்கும் அதே நம்பிக்கை. அனிலுக்குத் தேவையான உதவிகளையும் தகவல்களையும் சேகரித்துத் தந்துள்ளனர்.

ஆகவே கீழ்நீதிமன்றத்தில் தண்டனை அளிக்கப்பட்டபோது உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. வழக்கு கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுக்காலம் நடந்தது. வாராவாரம் பார்தியைச் சந்தித்து அவரிடம் வழக்கு நிலவரத்தை விளக்குவதோடு நீதிமன்றத்தில் தெளிவாக, தைரியமாகத் தன்னை முன்வைப்பதற்கு பார்த்திக்குப் பயிற்றுவித்துள்ளார் அனில். இது மிகவும் முக்கியம் என்கிறார். நீதிமன்றத்தில் குறுக்குவிசாரணை நடக்கும்போது பயத்தாலும் அதிர்ச்சியாலும்  ஆட்கொள்ளப்பட்டு, ‘எனக்கு நினைவில்லை’, ‘எனக்குத் தெரியாது’ போன்ற பதில்களை இப்பணிப்பெண்கள் அளித்துவிடுகின்றனர் என்றும் அதுவே அவர்களின் நம்பகத்தன்மைக்கு எதிராக வந்து முடிந்துவிடுவதாகவும் அவர் விளக்குகிறார்.

அவர் திருடியதாகச் சொல்லப்பட்ட பொருட்கள் எல்லாம் பழைய, உடைந்த, நைந்த பொருட்கள் என்றும் திருடமுடிவுசெய்த ஒருவர் ஏன் இவற்றைத் திருடவேண்டும் என்பதுதான் அனில் வாதத்தின் மையம். அவைகூட பல ஆண்டுகள் முதலாளி குடும்பம் சவசூன்யமாக இருந்தபோது பார்திக்கு அவர்களே அளித்ததுதான். இப்போது வேண்டாதவராகிவிட்டதால் அவற்றைவைத்தே திருட்டுப்பட்டம் கட்டிவிட்டனர்.

பார்தி திருடியதாகச் சொல்லப்படும் பொருட்களின் படங்களை நீதிபதியிடம் காட்டியது வழக்கின் முக்கிய திருப்புமுனை என்கிறார் அனில். இவற்றையா $50,000 வெள்ளி மதிப்புடைய பொருட்கள் என்றனர் என்று நீதிபதி அசந்திருக்கவேண்டும். திருடப்பட்டதாகச் சொல்லப்பட்ட பொருட்கள் பலவற்றை எங்கிருந்து வாங்கினர் என்பதை லியூ குடும்பத்தினர் உறுதியாகச் சொல்லமுடியவில்லை ஆனால் தனக்கு எப்படிக் கிடைத்தது என்பதை பார்தி தெளிவாகத் தெரிவித்தார்.

நூற்றுக்கும் மேற்பட்ட தனது ஆடைகளைத் திருடிப் பெட்டிக்குள் வைத்திருந்ததாக கார்ல் லியூ புகாரளித்திருந்தார். ஆனால் அவற்றில் பல பெண்ணுடைகள். அதைச் சமாளிக்கத் தனக்கு பெண்ணுடைகளை அணியும் பழக்கமுண்டு என்று வாக்குமூலம் அளித்துள்ளார். இப்படியாக பார்தி பக்கம் நியாயமிருப்பதும் எதிர்த்தரப்பில் அநியாயம் இருப்பதும் உயர் நீதிமன்ற நீதிபதிக்கு விளங்கிவிட்டது. நூறுபக்க தீர்ப்பின் வழியாகக் கடந்த செப்டம்பரில் பார்தி லியானி முற்றிலும் குற்றமற்றவர் என்று விடுவிக்கப்பட்டுவிட்டார்.

குற்றமற்றவர் என்று விடுவிக்கப்பட்ட நிலையில், 2016-2020 காலகட்டத்தில் அவரடைந்த இன்னல்களுக்காக இழப்பீடு கோரும் வழக்கைப்போடலாம் என்று பால்சந்தானி சொல்லியதாகவும் ஆனால் இந்த வழக்கு விவகாரங்கள் எல்லாம் போதும், திருடி பட்டமில்லாமல் நான் சொந்த ஊர் போய்ச்சேர்கிறேன் என்று பார்தி மறுத்துவிட்டதாகவும் கேள்வி. பிராசிகியூஷன் தரப்பு பொறுப்பற்ற முறையில் நடந்துகொண்டது உறுதியானால் அதன்வழியாகக் கிடைக்கும் இழப்பீடுமட்டும் போதும் என்று அவர் சொந்த ஊருக்குப் போய்விட்டார்.

தன்வினை தன்னைச்சுடும். வேண்டுமென்றே அரசாங்க ஊழியரிடம் பொய்த்தகவலை அளித்த குற்றத்துக்காகத் தற்போது கார்ல் லியூ மீது குற்றம் சாட்டப்பட்டு விசாரணை நடந்துவருகிறது. எவ்வளவு திறமையும் செல்வமும் அறிவும் இருந்தபோதும், போயும் போயும் ஒரு பணிப்பெண் நம்மை எதிர்த்துப்பேசுவதா என்பதில் தொடங்கிய ஆணவமும் அதற்கு நீதித்துறையைப் பயன்படுத்த்திப் பழிதீர்க்க நினைத்ததும் இன்று அவரை இந்த நிலையில் கொண்டுவந்து வைத்துவிட்டது.

இதற்கும் சிங்கைப் புனைவுலகில் ஓர் எடுத்துக்காட்டு உள்ளது. கீழை கதிர்வேலின் ‘யாருக்கு வெற்றி’ சிறுகதை. முதலாளி குடும்பத்தினர் ஒட்டுமொத்தமாகச் சேர்ந்து பணிப்பண்ணைத் திருடியாக்க முயலும்போது அவள் அவர்களையே திருட்டுக்குணம் உள்ளவர்களாக நிரூபித்துக்காட்டி அதன்பின் ஊருக்குச் சென்றுவிடுவதாக அக்கதை.

சரி, சுருக்கமாகச் சொல்லலாம் என்று ஆரம்பித்தது சுவாரஸ்யம் கூடியதால் விளக்கமாகவே ஆகிவிட்டது. அன்றாடம் செய்தித்தாள் வாசிப்பவர்கள் அப்படித்தான், ஆரம்பித்தால் நிறுத்தமாட்டார்கள். போகட்டும்.

இந்த சம்பவங்களைத் தொடர்ந்து, சிங்கப்பூரில் நீதி அனைவருக்கும் சமமாகக் கிடைக்கிறதா? அல்லது இல்லாதபட்டவர்கள் இதிலெல்லாம் யார் மல்லுக்கட்டுவது என்று செய்யாத குற்றத்தை ஒப்புக்கொண்டு குறைந்தபட்ச தண்டனையை ஏற்றுக்கொண்டு போய்விடுகிறார்களா? இன்னும் எத்தனை பார்திகள் போராடாமல் ஈராண்டு தண்டனையை ஏற்றுக்கொண்டு போய்விட்டனர்? போன்ற கேள்விகள் எழுந்தன.

மேலும் சட்டத்தைச் செயல்படுத்தும் காவல்துறையோ பிற நீதிபரிபாலன அமைப்புகளோ பாரபட்சமாக வலியார் முன் ஒன்றும் மெலியார் முன் ஒன்றுமாக நடந்துகொள்கின்றனவா என்கிற முக்கியமான கேள்வியும் எழுந்தது. அதைக்குறித்துத்தான் இவ்வழக்கின் விவரங்களை முன்வைத்து அமைச்சர்நிலை அறிக்கையை சட்ட அமைச்சர் சண்முகம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து பேசினார்.

இவ்வழக்கில் சில தவறுகள் நடந்தேறியுள்ளனவேயொழிய அவை சிங்கை காவல், நீதியமைப்புகளின் அடிப்படையான செயல்பாட்டுக் கோளாறுகளோ அல்லது லியூ தரப்பினர் தம் செல்வாக்கினால் பெற்றுக்கொண்டவைகளோ அல்ல என்பது அவரது விளக்கத்தின் சாராம்சம். விதிகளை மீறியோர் துறைசார் நடவடிக்கைகளுக்கு உட்படுவர். பொருட்களை மதிப்பிடுவது போன்ற வேறுசில அம்சங்களுக்கு வழிகாட்டி நெறிமுறைகள் உருவாக்கப்படும் என்று தெரிவித்துவிட்டார்.

சட்ட அமைச்சரின் அறிக்கை மீதான விவாதத்தின்போதுதான் மிக்காபெரிசம் வந்தது. தொகுதிசாரா நாடாளுமன்ற உறுப்பினர் லியோங் மன்வாய் காவல்துறை, நீதித்துறை செயல்பாடுகள் குறித்த விசாரணைக் கமிஷன் அமைக்கவேண்டும் என்றார். அதற்கு மறுப்பு தெரிவித்த சட்ட அமைச்சர், எந்த குறிப்பான விஷயத்தில், எந்த இடம் தெளிவாக விளக்கப்படவில்லை என்பதைத் தெரிவித்து அதற்கான விசாரணைக் கமிஷன் கோருமாறு லியோங்கிடம் கேட்டுக்கொண்டார். இல்லையென்றால் அந்த கோரிக்கை ஒரு ‘மிக்காபெரிசம்’ ஆகிவிடும் என்றார்.

சார்ல்ஸ் டிக்கன்ஸ் 1850ஆம் ஆண்டு வெளியிட்ட ‘டேவிட் காப்பர்ஃபீல்ட்’ நாவலில் வரும் ஒரு கதாபாத்திரம் வில்கின்ஸ் மிக்காபெர் (Wilkins Micawber). அந்த மிக்காபெரின் தன்மை என்னவென்றால் எந்த முகாந்திரமுமில்லாமல் குருட்டாம்போக்காக ஏதாவது ஒரு நன்மை நடக்கத்தான் போகிறது என்று நம்புவது. மெல்லமெல்ல அது பொதுப்புழக்கத்தில் வந்து, நீதிமன்ற வாதங்கள் தீர்ப்புகளில் குறிப்பிடப்பட்டு, அகராதிகளிலும் இடம்பிடித்துவிட்டது. அதைத்தான் பொருத்தமாக சட்ட அமைச்சர் சண்முகம் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக இல்லாமல் ஒட்டுமொத்த காவல்துறை, நீதித்துறை செயல்பாடு என்று பொதுவாக விசாரணை கமிஷன் அமைத்து அதன்மூலம் ஏதும் நன்மை தானாக நடந்துவிடாதா என்று எதிர்பார்ப்பது மிக்காபெரிசத்துக்கு நல்லுதாரணம்தான்.

நமது அன்றாட வாழ்விலும் நம்மையறியாமலேயே பழக்கதோஷ மிக்காபெரிசத்தில் மாட்டிக்கொள்ளாமல் கவனத்துடன் இருந்துகொள்வது நேரத்தையும் ஆற்றலையும் குறிப்பிட்ட புள்ளியில் குவிக்க நமக்கு உதவக்கூடும்.

பார்தி லியானி சிங்கப்பூரை விட்டுக் கிளம்பும் முன் செய்தியாளர்களின் சில கேள்விகளுக்குப் பதிலளித்தார். அச்சந்திப்பில், ‘உங்களைப்போன்ற பணிப்பெண்களுக்கு என்ன ஆலோசனை சொல்வீர்கள்?’ என்று கேட்கப்பட்டது. வெளிநாட்டு வேலைக்கென்று வந்துவிட்டால் முதலில் உறுதியாக இருக்கவேண்டும். மேலும் மகிழ்ச்சியாக இருக்கும்போது முதலாளிகள் அன்பளிப்பாகக் கொடுக்கும் பொருட்களை வாங்கிவைத்துக்கொள்ளாமல் மறுத்துவிடுவது நல்லது என்றார்.

அன்பளிப்புகளை வாங்கிக்கொள்வதன் வழியாகக் காலப்போக்கில் தனது வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்திக்கொண்டுவிடலாம் என்று நினைப்பதும் ஒருவகையில் மிக்காபெரிசம்தானோ? பார்தி படிக்காதவர், அவரும் அவரது சொந்த சொற்களில் மிக்காபெரிசத்தைத் தவிர்க்கச் சொல்லியிருக்கிறார் போலும்.

***