நாடக ஆசிரியரும் சார்புநிலை விரிவுரையாளருமான ஏடலீன் ஃபூ (Adeline Foo), பெண்களுக்கு இழைக்கப்படும் சமூக பாரபட்சம், பாகுபாடுகளைக் குறித்து ஆராய்வதில் ஆர்வமுள்ளவர். இவர் ஆராய்ந்து உருவாக்கிய Last Madame என்ற நாடகத்தொடர் சிங்கப்பூரில் 1930களின் பாலியல் தொழில் குறித்தது. அத்தொடர் செப்டம்பர் 2019இல் மீடியாகார்ப் டாகிளில் (MediaCorp Toggle) முதலில் ஒளிபரப்பானது.

“பாலியல் தொழிலுக்குப் பெண்கள் விற்கப்படுவதைக் காண சிலமுறை நான் சென்றுள்ளேன். அது அந்த வயதின் கோளாறு. துறைமுகக் கிடங்குகளின்முன் ஏலம் நடைபெற்றது. தரகர், பெண்களை ஆடைகளை மாற்றிக்கொண்டு வரிசையாக வந்து நிற்கச் சொன்னார். பாலியல் தொழில் நடத்திய விடுதிகளின் உரிமையாளர்கள் அங்கேயே அப்பெண்களை ஏலத்தில் வாங்கினர். பார்க்க அழகாக இருந்த பெண்கள் 1000-2000 யெண் (yen), சுமாரான பெண்கள் 400-500 யெண் என விலை வைக்கப்பட்டனர்”

இவ்விவரிப்பை அளித்தவர் சிங்கப்பூரிலிருந்த ஜப்பானிய முடிதிருத்துநர் டோமிஜிரோ ஒண்டா. அவர் குறிப்பிடுவது 1870 முதல் 1940 வரையிலான காலகட்டம்.

சீனாவிலிருந்தும் ஜப்பானிலிருந்தும் ஏறக்குறைய ஒருமாதம் பயணித்து சிங்கப்பூருக்கு வரும் கப்பல்களில் இப்பெண்கள் கொண்டுவரப்பட்டனர். வந்திறங்கியதும் ஆடுமாடுகளைப்போல விற்கப்பட்டனர். ஒரு ஜப்பானியப் பெண்ணுக்கு, 1900-1910 காலகட்ட சராசரி விலை, 500-600 யெண். தென்சீனக் கடற்கரைப் பகுதிப் பெண்கள் என்றால் 150-500 வெள்ளி. இது பெரியபணம், ஏனெனில் அப்போது ஓர் உடலுழைப்புத் தொழிலாளியின் சராசரி மாதவருமானமே 10-15 வெள்ளிதான். 

சிங்கப்பூரின் தொடக்ககாலப் பொருளாதார வரலாற்றில் துடிப்புமிக்கத் தொழில்முனைவோரும் கடினமாக உழைத்த கூலிகளும் இடம்பெற்ற அளவுக்கு இத்துறைமுக நகரத்தின் இருண்ட மறுபக்கம் இடம்பெறவில்லை. அது ஆண்கள் மலிந்தும் பெண்கள் குறைந்தும் இருந்த காலம். சீன ஆண்களின் எண்ணிக்கை 60,000ஆக இருந்தபோது (1884இல்) சீனப்பெண்களின் எண்ணிக்கை வெறும் 6,600தான். அவர்களுள், ஓர் உத்தேச மதிப்பீட்டின்படி, 2000 பேர் பாலியல் தொழிலாளர்கள். பெருமளவு காண்டனீஸ், தியோச்சூ பிரிவினர். 

சிங்கப்பூருக்கு 1870களின் பிற்பகுதியில் நுழைந்த இளம் சீனப்பெண்களில் 80 விழுக்காட்டினர் பாலியல் தொழிலுக்கு விற்கப்பட்டனர். தேவை அதிகரித்ததை ஒட்டி வரத்தும் அதிகரித்தது. பெரும்பாலான பாலியல் தொழிலாளர்கள் சீனா, ஜப்பான் போன்ற ஆணாதிக்கச் சமுதாயங்களிலிருந்து வந்தனர். அங்கு பெண்களை விலைக்கு வாங்குவது ஆண்களின் உரிமையாகவே கருதப்பட்டது. மேலும், சில பகுதிகளில் நிலவிய கடுமையான வறுமையும் தென்கிழக்காசியாவிலும் பிறநாடுகளிலும் வேலைதேட அப்பெண்களை உந்தியது. 

‘இறக்குமதி’ செய்யப்பட்ட பெண்களைத்தவிர ஏற்கெனவே சிங்கப்பூரிலிருந்த பல பெண்களும் தந்திரமாக இத்தொழிலுக்குள் இறக்கிவிடப்பட்டது உண்டு. நன்யாங் சியாங் பாவ் (Nanyang Siang Pau) இதழில் அவ்வாறு பாதிக்கப்பட்ட ஒருவரைக்குறித்து,

“ஒரு மாதைத் தன் ஒன்றுவிட்ட அக்காளைப்போல அப்பெண் நம்பிப் பழகினார். அந்த அக்காளும் அப்பெண்ணிடமும் அவரது மகளிடமும் கரிசனமாகத்தான் நடந்துகொண்டார். பிறகு கோலாலம்பூர் அழைத்துச்சென்று வேலைவாங்கித் தருவதாக மகளுக்கு ஆசைகாட்டினார். அதை நம்பிய மகளும் தாய்க்குத் தெரியாமலேயே அம்மாதுடன் போய்விட்டார். பிறகு சிலகாலம் கழித்து இருவரும் சிங்கப்பூர் திரும்பியபோது மகள் பாலியல் தொழிலாளியாக மாறியிருந்தார். தாயைச் சென்றுபார்க்க அவர் விரும்பவில்லை. ஒருமுறை பாலியல் தொழிலாளி ஆகிவிட்டால் பிறகு அதிலிருந்து மீட்பே இல்லை என்று நினைத்தார். அத்தொழிலிலேயே இருந்து கொஞ்சம் காசு சேர்த்துக்கொண்டு தாயையும் கூட்டிக்கொண்டு ஒரேயடியாகச் சீனாவுக்குப் போய்விடவேண்டும் என்று விரும்பினார்.”

என்று விவரித்திருக்கிறது.

சில சமயங்களில், கைவிடப்பட்ட, ஆதரவற்ற பெண் குழந்தைகளைப் பாலியல் தொழிலாளர்கள் தம் மக்களாகக் கருதி வளர்த்தனர். அப்பெண்களுள் சிலர் தம் வளர்ப்புத் தாய்மார்களைப் பின்பற்றிப் பாலியல் தொழிலுக்குள் நுழைந்தனர். 

இப்பெண்கள் பூப்பெய்தியதும், பாலியல் தொழிலுக்குத் தேவையான திறன்களைக் கற்பர். பதின்மவயதிலேயே உடற்பிடிப்பு, உடற்சேர்க்கை குறித்த நுணுக்கங்கள் அவர்களுக்கு விரிவாகக் கற்றுத்தரப்படும். பாலியல் கிளர்ச்சியூட்டும் பொருட்கள், கருவிகள் போன்றவற்றைக் குறித்தும் விளக்கக் கையேடுகள், ஓவியங்கள், குறிப்பேடுகள் வழியாக போதிக்கப்படும். பயிற்சிகள் முடிந்ததும் கன்னிமையுடன் தொழிலுக்குள் இறக்கப்படுவர். அப்போது அவர்களுக்கு 13-15 வயது இருக்கலாம். இப்பெண்களில் ஒவ்வொருவருக்கும் ஆயிரம் வெள்ளியைத் தாண்டியும் கொடுக்க வாடிக்கையாளர்கள் தயாராக இருப்பார்கள்.

விடுதிகளும் வாடிக்கையாளர்களும்

தொழிலதிபர்களின் மகன்கள், வங்கி எழுத்தர்கள், உணவங்காடிக்காரர்கள், ரிக்‌ஷா இழுப்பவர்கள், உயரதிகாரிகள், சாப்பாட்டுக்கடை உரிமையாளர்கள், காலனிப் படைவீரர்கள், நிழலுலகவாசிகள் என்று பாலியல் விடுதியின் வாடிக்கையாளர்கள் பலதரப்பட்டவர்கள். சில தெருக்களில் அருகருகே அமைந்திருந்த விடுதிகளில் ஒன்றைத் தம் விருப்பத்திற்கேற்ப இவர்கள் தேர்வுசெய்வர். சைனா டவுன் பகுதியிலிருந்த விடுதிகளில் சாதாரணர்களுக்குத் தனியாகவும் வசதிக்காரர்களுக்குத் தனியாகவும் சேவைகள் கிட்டின.

ஒவ்வொரு வட்டாரத்திற்கும் வேறுபட்ட வாடிக்கையாளர்கள் இருந்தனர். மலாய், மலபார் தெருக்களின் ஜப்பானியப் பெண்டிரை ஐரோப்பியர்கள் விரும்பினர். வெளிநாட்டு சுற்றுப்பயணிகள், படைவீரர்கள், குறிப்பாக ஜப்பானியக் கடலோடிகள் மலாய், யூரேஷியப் பெண்களை விரும்பினர். ரிக்‌ஷாக்காரர்கள் வழக்கமாக சின் ஹின் ஸ்திரீட், ஃப்ரேஸர் ஸ்திரீட், சாகோ ஸ்திரீட், ஸ்மித் ஸ்திரீட், டான் க்வீ லான் ஸ்திரீட், அப்பர் ஹொக்கியன் ஸ்திரீட் பகுதிகளிலிருந்த விடுதிகளுக்குச் சென்றனர். 

வியாபாரிகள், கடைக்காரர்கள், மருத்துவர்கள், வங்கியாளர்கள் எனப் பலவகை ஜப்பானியர் குழுமியிருந்த  ஹைலாம், மலபார், மலாய், பூகிஸ் தெருக்களில் கராயுகி-சான் என்று அழைக்கப்பட்ட ஜப்பானியப் பாலியல் தொழிலாளர்களின் விடுதிகள் அமைந்திருந்தன. சிங்கப்பூரில் ஜப்பானிய சமூகம் வலுப்பெற்று, 1920இல், தங்களுக்கென ஒரு பள்ளி, இடுகாடு, செய்தித்தாள் (நான்யோ ஷிம்ப்போ, Nanyo Shimpo) என வளர்ச்சியுற்றிருந்தது. 

கராயுகி சான் என்று அழைக்கப்பட்ட ஜப்பானிய பாலியல் தொழிலாளர்களுள் ஒருவர் (1890களில்) [Gretchen Liu Collection, courtesy of National Archives of Singapore]

ஆயுட்காலப் போராட்டம்

வரலாற்றாளர் ஜேம்ஸ் வாரென் (James Warren) சிங்கப்பூரின் பாலியல் விடுதிகளைக் குறித்து, அவ்விடுதிகளின் அருகில் வசித்தவர்கள் முதல் பாலியல் தொழிலாளிகளின் மரணவிசாரணை அறிக்கைவரை, பல தரவுகளைத் தேடித்தொகுத்து ஆராய்ந்து ஆவணப்படுத்தியுள்ளார். மலிவான சோப்பைப் பயன்படுத்தாமல் பாலியல் தொழிலாளர்கள் தம் முகப்பொலிவுக்காக பச்சரிசி மாவைப் பூசிக்கொண்டனர் போன்ற விவரங்களில் தொடங்கி மூத்த பாலியல் தொழிலாளர்கள் புதிதாகத் தொழிலுக்குள் வருவோரை எவ்வாறு தயார்ப்படுத்தினர் என்பதுவரை விரிவாகப் பதிவுசெய்துள்ளார்.

சில பாலியல் தொழிலாளர்களுக்கு நிரந்தரமாகத் தொழிலிலிருந்து விலகிவிடவும் வாய்ப்பு கிடைத்தது. அவர்கள் ஒன்று பணம்சேர்த்து விடுதி உரிமையாளர்களிடம் தந்து விலகவேண்டும் அல்லது பணக்கார வியாபாரிகள் எவருக்காவது வைப்பாகச் செல்லவேண்டும். இரண்டாம் வகையினர் எண்ணிக்கையில் மிகவும் குறைவே. பாலியல் பெண்டிருக்கு அத்தொழிலின் பொதுநியதி ஆயுள் தண்டனைதான் – நோயோ இறப்போ அவர்களை ஆட்கொள்ளும்வரை. 

சம்பாதிக்கும் பணம் அனைத்தையும் அவர்களே வைத்துக்கொள்ள இயலாது. விடுதி உரிமையாளர்களுக்கு, பாதுகாப்பு அளிக்கும் குண்டர் குழுக்களுக்கு, உணவுக்கு, உடை, ஆபரணங்களுக்கு, மருத்துவத்துக்கு எனக் கிட்டத்தட்ட சரிபாதி செலவாகிவிடும். வாரெனின் ஆய்வு அன்றைய பாலியல் தொழிலாளர்களின் கோரமான பல இறப்புகளையும் வெளிச்சம் போட்டுக் காட்டியது. 

பால்வினை நோய்களால், போட்டிக் குழுக்களின் வன்முறைகளால், போதைக் அடிமையாதலால் எனக் காரணங்கள் மட்டும் வேறுவேறு. தற்கொலைகளும் அனேகம்; அதிக போதைமருந்தை உட்கொள்வது, நஞ்சுண்பது, தூக்கிலிட்டுக்கொள்வது, கழுத்தை அரிந்துகொள்வது, தீமாய்வது என்று அவர்கள் தேர்ந்தெடுத்த முறைகள்தாம் வேறுபட்டிருந்தன. ஏழ்மை, கடன், நோய்மை, விடிவுகாலமே இல்லாத அர்த்தமற்ற ஆயுள்காலப் போராட்டம் இவற்றிலிருந்து இறப்பு அவர்களுக்கு உடனடி விடுதலையை அளித்தது.

டான் சூ ஆ என்ற பாலியல் விடுதி உரிமையாளர் அவருடைய ஒரு தொழிலாளி பட்ட பாட்டினை நினைவுகூர்ந்தார். அவர் குறிப்பிடும் பெண் காசநோய், பால்வினை நோய் இரண்டுக்கும் ஆட்பட்டு மெல்லமெல்லக் கரைந்து இறந்துபோயிருக்கிறார். எட்டு ஆண்டுகளுக்கு கஞ்சா புகைத்தும் போதை மருந்துகளைத் தொடர்ந்து அதிக அளவுகளில் உடலுக்குள் செலுத்தி வலிமரப்புக்கு முயன்றதில் ஒருநாள் அளவு எல்லைதாண்டியதால் மாண்டுபோனாராம். 

சிலரின் பொழுதுபோக்கு, சிலரின் தப்பித்தல்

அன்றைய சிங்கப்பூரிலிருந்த ஆண்கள் ஏன் பாலியல் தொழிலாளர்களைத் தேடிச்சென்றனர்? சிலருக்கு அது அவர்களின் தொழில் சார்ந்த பொழுதுபோக்கு. வசதிமிக்க சீனரும் ஐரோப்பியரும் தொழில்சார்ந்த பேச்சுவார்த்தைகளை மாலை வேளைகளில் பாலியல் விடுதிகளில் வைத்துக்கொண்டனர். பேசிமுடிந்ததும் பொழுதுபோக்கு தொடங்கிவிடும். ஆனால் வசதிமிக்கோர் மட்டுமே அவ்விடுதிகளுக்குச் செல்வது இயல்பானது என்று நினைக்கவில்லை. சூங் கியோ சை என்பவர்: 

“மாதம் ஒரு 10 வெள்ளி சம்பாதித்த கூலியாக இருந்தேன். உடனிருந்தவர்கள் சூதாட்டத்தில் 80, 100 வெள்ளி வென்றபோது என்னையும் பாலியல் விடுதிகளுக்கு அழைத்தனர். ஒரு பாலியல் தொழிலாளியுடன் ஓரிரவு தங்குவதற்கு 3 முதல் 10 வெள்ளி செலுத்துவோம்”

என்று வாய்மொழி வரலாற்றுப் பதிவில் குறிப்பிட்டுள்ளார். கூலிகள் தம் ஆதார உயிரியல் விசைக்கு ஈடுகொடுக்க முற்பட்டுப் பாலியல் தொழிலாளர்களிடம் தற்காலிக ஆறுதல் பெற்றனர். அதைத்தவிர, எதிர்காலத்தில் திருமணம் செய்துகொண்டு குடும்பஸ்தராவோம் என்கிற எதிர்பார்ப்பு அவர்கள் எவரிடமும் அனேகமாக இல்லை. அந்த நிலையில்தான் அவர்களின் வருமானம் இருந்தது. எதிர்காலத்தைக் குறித்த நம்பிக்கையற்ற மனநிலையும் அவர்களைப் பாலியல் விடுதிகளுக்குத் துரத்தியது.

பாலியல் தொழில் பல்வேறு சமூகச் சிக்கல்களைக் கூடவே கொணர்ந்தது. விடுதிகளைத் தம் கட்டுப்பாட்டில் வைத்திருந்த குண்டர் குழுக்கள், அவர்களிடையே பூசல்கள், பரப்பப்பட்ட பால்வினை நோய்கள் என அப்பட்டியல் நீண்டது. எவ்வளவு பிரச்சனைகள் இருந்தாலும் ஆண்-பெண் எண்ணிக்கை ஒப்பிடக்கூடிய அளவுக்கு இல்லாத காரணத்தால் காலனிய அரசு அவற்றைப் பொறுத்துக்கொண்டு பாலியல் தொழிலைச் சட்டபூர்வமானதாக அங்கீகரித்தே வைத்திருந்தது.

மூய் சாய்களும் பிப்பா சாய்களும்

பாலியல் தொழிலுக்கான அங்கீகாரம் இருந்தாலும், அன்றைய அரசாங்கம், சிறுமிகளும் வயதுவந்த பெண்களும் பாலியல் தொழிலுக்காகக் கொண்டுவரப்படுவதைக் குறைக்க நடவடிக்கை எடுத்தது. காலனிய அதிகாரி வில்லியம் பிக்கெரிங் (William Pickering) 1877இல் சீனர் பாதுகாவலகம் (Chinese Protectorate) ஒன்றைத் தோற்றுவித்தார். புலம்பெயர் சீனர் பிரச்சனைகளை இப்பாதுகாவலகம் கவனித்துக்கொண்டது. 

இப்பாதுகாவலகம் 1888இல் பெண்கள் பாலியல் தொழிலுக்கு விற்கப்படுவதையும் ஏமாற்றிக் கொண்டுவரப்படுவதையும் குறைக்கும்பொருட்டுத் தனிப்பிரிவு ஒன்றை நிறுவியது. அறக்காவல் அலுவலகம் (Po Leung Kuk or Office to Protect Virtue) என்று அழைக்கப்பட்ட அப்பிரிவு, மூய் சாய்களுக்கும் பிப்பா சாய்களுக்கும் தற்காலிகத் தங்குமிடமாகவும் உதவியது. 

மூய் சாய் என்றால் காண்டனீஸ் மொழியில் சிறுபெண், தங்கை. வீட்டுவேலை, திருமணம் போன்ற ஆசைகளுடன் பொன்வாழ்வைத்தேடி சிங்கப்பூருக்குள் சிறுவயதில் தம் சீனக்கிராமங்களிலிருந்து உறவினருடனோ ஊர்க்காரருடனோ நுழைந்த இவர்கள், காலப்போக்கில் பாலியல் தொழிலாளர்களாகவோ பணக்காரக் குடும்பங்களில் பாடாய்ப் படுத்தப்படும் உயிர்ப் பிண்டங்களாகவோ ஆயினர். அறக்காவல் அலுவலகம் இவர்களை மீட்டு பாதுகாப்பான தங்குமிடம் தந்து வருமானமீட்டக்கூடிய திறன்களைக் கற்றுத்தந்து, அவற்றுக்கேற்ற வேலைகளையும் பெற்றுத்தந்தது. 

பிப்பா சாய்களும் மூய் சாய்களைப் போலத்தான். இசைக்கூடங்களில் வேலை என்கிற நம்பிக்கையில் வந்து பிறகு திசைமாறிப் போனவர்கள். பிப்பா என்ற சீன வீணையை மீட்டப்பயின்ற பிப்பா சாய்கள் பாலியல் விடுதிகளிலும் மனமகிழ் மன்றங்களிலும் அவ்விசைக் கருவியை வாசித்தனர். வாசிக்கும்போது சீனக் கவிதைகளைப் பாடுவதும், கொச்சை மொழியில் கேலிகளைச் சேர்த்துக்கொள்வதும் உண்டு. மூத்த பிப்பா சாய்கள் வாடிக்கையாளர்களுடன் மேசைகளில் அமர்ந்திருப்பர். ஒருமணிக்கு இவ்வளவு என்று கட்டணம் வசூலித்த இவர்கள் பாலியல் சேவைகளை வழங்குவதும் உண்டு. 

பிப்பா சாய்களுக்கு மவுசு குன்றிய பிறகோ அவர்களின் ஒப்பந்தத்தை முறிக்கப் பெரும்பணம் செலுத்த முடிந்தாலோ அவர்கள் அங்கிருந்து வெளியேறவியலும். அறக்காவல் அலுவலகம் பலரை மீட்டது என்றாலும் அது ஒரு தற்காலிக ஏற்பாடுதான். வேறு வேலைகளுக்குச் செல்லுமளவுக்குப்  பயனுள்ள சில திறன்களைக் கற்றுத்தேற இப்பெண்களால் இயல்கிறதா என்பதே உண்மையான சவால். 

பிப்பா வாசிக்கும் சீனப்பெண் (19ஆம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில்) [Collection of the National Museum of Singapore, National Heritage Board]

காபரே

ஷாங்ஹாய் இரவுக்கேளிக்கை அம்சங்கள் அவற்றின் மினுமினுப்புகளுடன் 1920களில் சிங்கப்பூருக்குள் நுழைந்தபோது பாலியல் தொழிலாளர்களுக்கு இன்னொரு புதிய கதவு திறந்தது. புதிதாக வளர்ந்துவந்த காபரே நடனத்திற்குள் நுழைந்த பெண்கள் எவருக்கும் கட்டுப்படாமல் தங்கள் வாழ்க்கையைத் தாங்களே தீர்மானித்துக்கொள்ள முடிந்தது. 

காபரே நடனத்தில் இசை, மது, கும்மாளத்துடன் அதிகப் பணமும் சம்பாதிக்க முடிந்தது. முக்கியமாக, ஆண்களுக்கு அடிமைகளாகவும் கண்ணியமற்றும் தொழில்செய்த மூய்சாய், பிப்பாசாய், பாலியல் தொழிலாளர்களைப்போல அல்லாமல் ஆண்களைத் தமக்கேற்ப ஆட்டுவிக்கும் நிலையில் காபரே நடனமணிகள் இருந்தனர்.

காபரேக்களும் இரவுக் கேளிக்கை விடுதிகளும் அதிகரித்த சிங்கப்பூரில் பெண்களுக்கான தேவைகளும் அதிகரித்ததால் பாலியல் தொழிலிலிருந்து பலர் விடுபட்டனர் என்றாலும் அனைவருக்கும் அது சாத்தியப்படவில்லை. காபரே பெண்களாக மாறுவதற்கேற்ற திறன்களில்லாதவர்கள் வேறுவழியின்றி சதைப்பிழைப்பையே சரணடைந்தனர். துயரமான இப்பாதையைத் தேர்ந்தெடுத்தவர்களின் வாழ்க்கையும் வரலாறும் கவனிப்பாரின்றிக் காணாமற்போயின. வரலாற்றாளர் வாரெனின் சொற்களில்:

“சிங்கப்பூரின் 1870-1940 காலகட்ட வரலாற்றின் பெரும்பகுதி பாலியல் தொழிலாளர்களாலும் கூலிகளாலும் பொறுத்துக்கொள்ளப் பட்டதோடு மட்டுமின்றி வடிவமைக்கவும்பட்டது”

***

மொழிபெயர்ப்பு: சிவானந்தம் நீலகண்டன்

‘தி சிராங்கூன் டைம்ஸ்’ பிப்ரவரி 2023 இதழில் வெளியானது. This article was originally published in BiblioAsia (Jan-Mar 2020) entitled ‘When Women Were Commodities’ by Adeline Foo, a scriptwriter and an adjunct lecturer. To read the original article, please access: https://biblioasia.nlb.gov.sg/vol-15/issue-4/jan-mar-2020/women-w-commodities/#fnref:9