ஏறக்குறைய மூன்றாண்டுகளுக்குப் பிறகு கடந்த மாதம் (ஜூன் 2022) குடும்பத்துடன் இந்தியப் பயணம் வாய்த்தது. இதற்குமுன் போட்ட இந்தியப் பயணத்திட்டம் கொவிட் பெருந்தொற்றின் கையில் சிக்கி சின்னாபின்னமானதையும் பயணச்சீட்டுக் காசு திரும்பக் கிடைத்தால்போதும் என்று மகிழ்ச்சியடைந்த கதையையும் ஏற்கெனவே எழுதியிருக்கிறேன். கடந்த 16 ஆண்டுகால சிங்கப்பூர் வாழ்க்கையில் இவ்வளவு நீண்ட காலத்திற்கு ஊருக்குப் போகாமல் இருந்ததில்லை. நண்பர்கள் பலருக்கும்கூட இதே அனுபவம்.

பெருந்தொற்றுக்குமுன் சிங்கப்பூரிலிருந்து மாதம் இருமுறை ஊருக்குச் சென்றுவந்த நண்பர்களை நான் அறிவேன். வெளிநாட்டில் வேலை என்கிற சுவடே தெரியாமல் அவர்கள் வாழ்ந்தனர். அப்படியாக வாழ்ந்துவந்த பலரையும் தம் பெண்டு பிள்ளைகளிடமிருந்து ஆண்டுக்கணக்கில் பிரித்துவைத்து, பொருள்வயின் பிரிவுத் துயரத்தை அதன் நூற்றாண்டுக்கு முன்னிருந்த ஆழத்தோடும் அழுத்தத்தோடும் உணர்த்தியதோடு, அவர்தம் வாழ்க்கைத் திட்டங்களையும் அடியோடு கலைத்துப் போட்டுவிட்டது பெருந்தொற்று. அது பெருந்துயரக்கதை, தனிக்கதை.

திருச்சிராப்பள்ளி விமான நிலையத்திலிருந்து நள்ளிரவில் வெளிப்பட்டு அதன்பிறகு, ஒரு நான்கு மணிநேரம், கிராமத்திற்குச் செல்லும் கார்ப்பயணம் வேண்டாம் என்று விமான நிலையத்திலிருந்து 10 நிமிடத் தொலைவிலுள்ள SRM விடுதியில் இரவைக் கழிக்க ஏற்பாடு செய்திருந்தேன். நள்ளிரவுக்கும் அதிகாலைக்கும் இடைப்பட்ட நேரத்தில்தான் சாலை விபத்துகள், குறிப்பாக உயிர்க்காவு வாங்கும் விபத்துகள், ஊரில் அதிகம்.

பல காரணங்கள். இரவில் இன்று ஒரு சவாரி இருக்கிறதே என்று நாம் அமர்த்தியிருக்கும் கார் ஓட்டுநர் பகலில் ஓய்வெடுத்துத் தயாராக மாட்டார். அவரைக் குறைசொல்வதற்கில்லை. ஓட்ட ஓட்டத்தான் அவருக்குக்காசு. ஆகவே பகலிலும் ஓட்டி இரவிலும் ஓட்டி அதிகாலையில் அசந்துவிடுவார். அந்த நேரத்தில்தான், ஊரடங்கிவிட்டதால், நெடுஞ்சாலையில் எல்லா வாகனங்களும் கண்மண்தெரியாத வேகத்தில் ஓடிக்கொண்டிருக்கும், கனரக வாகனங்கள் உட்பட. அசதியும் வேகமும் சந்திக்கும் தருணங்கள் ஆபத்தானவை. அவற்றை முடிந்தவரை தவிர்ப்பது நல்லது.

மழைவிட்டாலும் தூவானம் விடவில்லை என்பதுபோல, பெருந்தொற்றின் பிடி இளகினாலும் இன்னும் இயல்புநிலை முழுமையாகத் திரும்பவில்லை. திருச்சியில் இறங்கியவுடனேயே ஒரு சிக்கல். நானும் மனைவியும் தடுப்பூசி, காப்பூசி எல்லாம் போட்டுவிட்டோம். ஆகவே விமானப் பயணத்திற்குமுன் கொவிட் பரிசோதனை அவசியமில்லை. ஊசிபோட்டதற்கான ஆதாரத்தைக் காட்டினால் போதும். மகள் 12 வயதுக்குட்பட்டவர் என்பதால் தடுப்பூசியே போடாவிட்டாலும் அவருக்கும் பரிசோதனை தேவையில்லை. அப்படிப் புரிந்துகொண்டு நாங்கள் பயணம் கிளம்பிவிட்டோம். ஆனால் அது சிங்கப்பூருக்குள் வருபவர்களுக்குத்தான் பொருந்துமாம்!

திருச்சியில் இறங்குவோரில் 5 வயதுக்குட்பட்ட பிள்ளைகளுக்கு மட்டுமே தடுப்பூசி போடாவிட்டாலும் பரிசோதனைச் சான்று தேவையில்லை. அதற்கு மேற்பட்ட வயதினர், இரண்டு தடுப்பூசிகள் போடாதவர் என்றால், புறப்படுவதற்குமுன் செய்யப்பட்ட PCR சான்று வைத்திருக்கவேண்டும். என் மகள் சிங்கப்பூரில் ஒரு தடுப்பூசிதான் போட்டிருந்தார், அடுத்த ஊசி போடுவதற்குள் கொவிட் தொற்றுக்கு ஆட்பட்டார். ஆனால் அது வீட்டிலேயே சோதித்துப்பார்த்த ART-யில் தெரிந்தது. மருத்துவரால் உறுதிசெய்யப்படாத தொற்று என்பதால் கணக்கில் வராது. இரண்டாம் தடுப்பூசியும் போட்டால்தான் முழுமையாகத் தடுப்பூசி போட்டவராகச் சான்றிதழ் வரும். எனக்கோ அப்படிச் செய்வது அதிகப்படி ‘டோஸ்’ ஆகிவிடுமோ என்ற தயக்கம். ஆகவே இரண்டாம் தடுப்பூசி போடவில்லை. மகள் ஐந்து வயதுக்கு மேற்பட்டவர் என்பதால் திருச்சியில் எங்களைத் தனியாக அமர வைத்துவிட்டனர்.

எங்களைப்போலவே இன்னும் சில குடும்பங்களும் இருந்தனர். தடுத்துவைத்த அதிகாரியிடம் நிலைமையை விளக்கினேன். இதுபோன்ற குழப்பங்கள் தொடர்ந்து நடந்துவருகின்றன என்பது அவரது பேச்சிலும் நடவடிக்கைகளிலும் தெரிந்தது. வந்து இறங்கிவிட்டோம் இனி ஒன்றும் செய்வதற்கில்லை. முழுமையாகத் தடுப்பூசி போடாதவர்களைப் பிறருடன் கலக்க அனுமதிக்க இயலாது என்பதால் விமானத்திலிருந்த மற்ற அனைவரும் குடிநுழைவு முடிந்து வெளியேறியதும் அனுப்பிவிடுவதாகச் சொன்னார். சரி பரவாயில்லை, தனியறையில் அடைக்காமல் தாமதத்தோடு போனதே என்ற ஆசுவாசத்தில் அமர்ந்துகொண்டேன்.

ஒரு பெண்மணி அந்த ஏற்பாட்டிற்கு ஒப்புக்கொள்ளவில்லை. ஒன்று சிங்கப்பூரிலேயே விமானம் ஏறவிடாமல் தடுத்திருக்கவேண்டும் அல்லது இங்கேயும் ஏற்றுக்கொள்ளவேண்டும். அங்கே அனுப்பிவிட்டு இங்கே தடுத்துவைப்பது என்ன நியாயம்? நடுநிசியில் சிறுபிள்ளைகளை தாமதப்படுத்துவது மோசமானது என்று ஆதங்கத்துடன் வாதிடத் தொடங்கினார். அவர் கேட்டது நியாயம்தான். அதிகாரி காதுகொடுக்கவில்லை. எவரெவரையோ கைபேசியில் அழைத்து அதிகாரியிடம் பேசத்தந்தார். ஒரு புண்ணியமுமில்லை, கேடுதான் விளைந்தது. இரண்டு மணி நேரம் கழித்து அதிகாரி எங்களை அனுப்பிவிட்டார், ஆனால் வாதிட்ட அப்பெண்மணியையும் பிள்ளைகளையும் அனுப்பவில்லை. ஏதோ எழுதி வாங்கிக்கொண்டிருந்தார். செய்தக்க அல்ல செயக்கெடும்!

நாங்கள் அதிகாலை சுமார் 2 மணிக்குத் தடுப்பு நீங்கி வெளியேறியபோது எங்களை நகருக்குள் அனுமதிக்க குடிநுழைவு அதிகாரிகள் எவருமில்லை. சிங்கப்பூர் கடவுச்சீட்டு வைத்திருப்போர் திருச்சியில் இறங்கியதும் விசா அனுமதியை அங்கேயே விண்ணப்பித்துப் பெறுவர். அவர்களே கடைசியாக வெளியேறும் குழுவினராக இருப்பர். அவர்கள் வெளியேறியதும் அடுத்த விமானம் வரும்வரை குடிநுழைவு அதிகாரிகளுக்கு வேலையில்லை என்பதால் இளைப்பாறச் சென்றுவிடுவர் போலும். ஆனால் சிங்கப்பூரர்களும் வெளியேறியபின் நாங்கள் குடிநுழைவுக்கு அனுப்பப்பட்டதால் அதிகாரிகள் இல்லாத நிலையில் அங்கும் காத்திருந்தோம்.

ஒருவழியாக வெளியே வந்தபோது அதிகாலை 2:30 மணி. விமான நிலையத்திலிருந்து விடுதிக்குச்செல்ல வாடகைக்கார் அமர்த்தவேண்டி அதற்காக வெளியிலிருந்த ஓர் அலுவலகத்திற்குச் சென்றேன். நான் நடக்க நடக்க என் பின்னாலேயே ஒருவர் ‘எங்க சார் போணும்’ என்று கேட்டுக்கொண்டே வந்தார். நான் அவரைச் சட்டைசெய்யாமல் அந்த சிறு அலுவலகத்தின்முன் வந்து நின்றால் அங்கு எவரையும் காணோம். நான் திகைத்து நிற்க, பின்னால் வந்தவர் ‘நாந்தான் சார்’ என்று அலுவலகத்தின் உள்ளே கைகாட்டினார்.

மூட்டை முடிச்சுகள் அதிகமாக இருந்ததால் பெரிய வண்டி (7 இருக்கைகள் கொண்டது) கேட்டேன். அவர் பெரிய வண்டி கைவசமில்லை, இரண்டு சிறு கார்கள் அமர்த்திக்கொள்ளுங்கள் என்றார். பெரிய வண்டி என்றால் சத்தம் ரூ 600. இரண்டு சிறுவண்டிகள் என்றால் மொத்தம் ரூ 800. அவரது மனக்கணக்கை நான் விளங்கிக்கொண்டேன். அந்த அதிகாலை நேரத்தில் ரூ 200 கூட ஏமாற்றப்படவில்லை என்றால் நம்மூருக்குப் பிறகு என்னதான் மரியாதை!

ஏற்கெனவே தேவையான சிரமங்களுக்கு ஆட்பட்டுவிட்டதாலோ என்னவோ SRM விடுதி (ரேஸ்கோர்ஸ் சாலை, பெரியார் கலைக்கல்லூரி அருகில்) அனுபவம் சிறப்பாக அமைந்தது. நள்ளிரவில் வருவோம் என்று முன்பே தெரிவித்திருந்தேன் ஆனால் அதிகாலை 3 மணிக்குத்தான் சென்றோம். இருந்தும் வரவேற்பில் இருந்தவர்கள் தூங்கிவழியாமல் சுறுசுறுப்பாக இருந்தனர். என் முன்பதிவு விவரத்தை நான் காட்டுவதற்குமுன் அவர்களே எடுத்துவைத்திருந்தனர். அறையும் தூய்மையாக, வசதியாக இருந்தது. கட்டணம் சற்று அதிகம் என்றாலும் தாராளமாகக் கொடுக்கலாம். மறுநாள் காலை உணவும் அருமை. சில சிங்கப்பூர்ச் சீன முகங்களும் விடுதி உணவகத்தில் தென்பட்டன.

சொந்த ஊர் திருக்கண்ணங்குடிக்குச் சென்ற சில நாட்களில் அங்கிருந்து சில நாட்கள் கொடைக்கானல் பயணம் திட்டமிட்டிருந்தோம். நான் கடைசியாகக் கொடைக்கானல் சென்றது 20 ஆண்டுகளுக்கு முன். அப்போது அனுபவித்த மலையின் குளுமையும், பசுமையும், நகர் நடுவே அமைந்திருக்கும் ஏரியை (செயற்கை ஏரி) சுற்றி நடந்த இனிமையும், கால் ஓய்ந்து துவன்றபோது அருந்திய சூடான தேநீரும் அதற்குத் துணைவந்த மிளகாய் பஜ்ஜியும்..

தொலைவு சுமார் 350 கிமீதான் என்றாலும் சாலைகளின் நிலை, போக்குவரத்து நெருக்கடி, இடையிடையே இளைப்பாறல் நிறுத்தம் என்று கொடைக்கானல் சென்றுசேர ஏழுமணி நேரம் ஆகிவிட்டது. சிங்கப்பூரில் காரில் ஏறினால் அதிகபட்சம் அரைமணி நேரத்திற்குள் இறங்கிப் பழக்கப்பட்டுவிட்ட என் மகளுக்குப் பெருத்த சோதனையாக இந்தியக் கார்ப்பயணங்கள் அமைந்தன என்றாலும் ஏறியமர்ந்ததும் தூங்கிவிடும் ஒரு வழக்கத்தை வைத்துக்கொண்டு திறமையாகச் சமாளித்தாள்.

நீண்ட கார்ப்பயணங்களில் 80களின் இளையராஜாவைத் துணைகொள்வது எம்காலத்தில் பிறந்தோரின் பண்பாடு, வழிபாடு. அடுத்த தலைமுறைக்கு அப்பாடல்களில் பரிச்சயமோ உவப்போ இல்லை என்பது நான் ஒலிக்கவிட்ட பாடல்களைக் குறித்த இளம் காரோட்டியின் கேள்விகளிலிருந்து தெரியவந்தது. அவருக்கு ரஹ்மான் பாடல்களேகூட பழையவை என்பதும் புரிந்தது. அவர் விருப்பத்திற்கு விட்டுவிட்டேன். ஆங்காங்கு இமானில் இணைந்துகொண்டோம். ‘ரம்மி’யும் ஒருவகையில் இளையராஜா இசைதானே!

வழியில் திண்டுக்கல் தலப்பாகட்டி பிரியாணியைத் திண்டுக்கல்லிலேயே ருசித்தோம். நான் பிரியாணி ரசிகர் அல்ல என்றாலும் தலப்பாகட்டி பிரியாணி எனக்கு உவப்பானது. அரிசியை நன்றாகக் குழைய வைத்துப் பானைபோன்ற பாத்திரத்தில் கொடுப்பர். இன்னோரிடத்தில் தேநீருக்கு நிறுத்தியபோது மணப்பாறை முறுக்கு கிடைத்தது. அந்தக் குறுமுறுக்குகளின் மொறுமொறுப்பும் ருசியும் தனி. ‘எண்ணம்:15, விலை:20’ என்று அந்த முறுக்கு பாக்கெட்டில் அச்சிடப்பட்டிருந்தைப் பார்த்ததும் இங்கேயே மலையாள வாடை அடிக்கிறதே என்று நினைத்துக்கொண்டேன். எண்ணம் என்றால் மலையாளத்தில் எண்ணிக்கை.

கொடைக்கானல் செல்லும் மலைப்பாதையில் முதலில் அனைவரையும் கவர்வது வெள்ளி அருவிதான். இருபதாண்டுகளுக்குமுன் நான் சென்றபோதும் அங்கு குளிக்கமுடியாது ஆனால் தண்ணீரைத்தொடும் அளவிற்கு அருகில் செல்லலாம். தற்போது அதையும் தடுத்துவிட்டனர், பாதுகாப்புக் காரணங்களாக இருக்கலாம். குரங்குகள் நடமாட்டம் சுற்றுலாப் பயணிகளைவிட அதிகம். தந்திரமாக நின்று ஒரு படம் எடுத்துக்கொண்டு குரங்கு அருகே வருவதற்குள் ஓடிவந்தோம். அவை தங்களுக்குள் பழகுவதைவிட மனிதர்களிடம் பழகுவது அங்கு அதிகம் என்று தோன்றியது. மனிதர்களின் தந்திரங்களை அவை நன்றாகவே கற்றுக்கொண்டுவிட்டன.

IMG_1511

என் மனதிலிருந்த கொடைக்கானலிலிருந்து நேரில் கண்ட கொடைக்கானல் வெகு அந்நியமாக இருந்தது. ஏரியில் படகோட்டத் தோன்றவில்லை, ஏரியைச் சுற்றி நடக்கக்கூட மனமில்லை. கூட்ட நெரிசல். காரிலிருந்தே சுற்றிப்பார்க்கலாம் என்று தோன்றியது. அரிசியில் சொற்கள் எழுதித்தரும் கடையில் நினைவுப்பொருட்களும் பனிக்குல்லாய், ஸ்வெட்டர் போன்றவை மட்டும் வாங்கிக்கொண்டோம்.

பைன் காடு நல்ல இடம்தான் ஆனால் அங்கும் குரங்குகள் அதிகம். அவற்றைத் துன்புறுத்துபவர்களும் அதிகம். காட்டுக்குள் சென்று சற்று மூளையைக் கழற்றிவைத்து இளைப்பாறலாம் என்று நினைத்தால் குரங்குகளைக் கல்லாலடித்து அச்செயலின் பின்னுள்ள உளவியலைக் குறித்துச் சிந்திக்க வைத்துவிடுகின்றனர். ‘குணா’ குகையெல்லாம் மூடப்பட்டுவிட்டது. செயற்கைத் தோட்டங்களைச் சிங்கப்பூரிலேயே நிறைய பார்த்துவிட்டதால் இயற்கையையே மனது நாடியது. முதல் நாளிருந்த குளிர் அடுத்தநாள் தெரியவில்லை. உடல் அதற்குள் பழகியிருந்தது. ஜூன் மாதத்தில் அங்கு பொதுவாகக் குழந்தைகளும் தாங்கக்கூடிய குளிர்தான்.

எந்த சுற்றுலாத் தலத்தில் இறங்கினாலும் நீண்ட நேரம் சுற்றாமல் திரும்பிவிடும் எங்கள் மனப்போக்கை உணர்ந்துகொண்ட இளம் காரோட்டி, இன்னோரிடத்திற்கு அழைத்துச் செல்கிறேன் என்று சொல்லி, மலையிறக்கத்தில் 20கிமீ தொலைவிலுள்ள மன்னவனூர் பகுதிக்கு அழைத்துச் சென்றார். ஆஹா.. அந்த இடத்தின் அழகைக் காணக் கண்கோடி வேண்டும். சும்மாவே அமர்ந்து மலையையும் காட்டையும் புல்வெளிகளையும் அவற்றின்மேல் வெண்புள்ளிகளாகத் தொலைவில் தெரியும் செம்மறி ஆடுகளையும் ஏரியையும் (இது இயற்கை ஏரி) பார்த்துக்கொண்டே இருக்கலாம். கொடைக்கானல் கூட்டத்தில் பத்து விழுக்காடுகூட இங்கு வருவதில்லை. ஆகவே மாசில்லை. குரங்குத் தொல்லையில்லை. ஒரேயொரு தேநீர்க்கடை மட்டுமே.

எந்தெந்த தமிழ்த் திரைப்படத்தில் என்னென்ன காட்சிகள் அங்கு படமாக்கப்பட்டன என்று நீளமான பட்டியல் ஒன்றை எழுதிப்போட்டிருந்தனர். அவற்றில் ஒருபடத்தைக்கூட நான் பார்க்கவில்லை என்பது தமிழ்ச் சமூகத்தின் மையப்புள்ளியிலிருந்து விலகிவிட்டோமோ என்ற பயத்தை உண்டாக்கியது. ஊரிலிருந்த மூன்று வாரத்தில் முப்பது தடவையாவது ‘விக்ரம்’ பார்த்துவிட்டீர்களா என்ற விசாரிப்பிற்கு ஆளானேன். விசாரித்தவர்கள் 20 முதல் 70 வயதானவர்கள், பாமரர் முதல் புத்திஜீவிகள்வரை அனைவரும் அடக்கம். கமலுக்குத் தேர்தல் தோல்வியைத் தந்ததின் குற்றவுணர்ச்சியை இப்படிப் போக்கிக்கொள்கிறதோ நம் சமூகம்? கமலும் படத்தில் காண்போரையெல்லாம் கண்டபடி சுடுகிறார் என்று கேள்விப்பட்டேன். அவருக்கும் கோபம் இருக்கத்தான் செய்யும்.

நாங்கள் தங்கியிருந்த ‘ஸ்டெர்லிங் கோடை லேக்’ விடுதி வசதிகள் நன்றாகவே இருந்தன. அங்கு சாப்பிட்ட இட்லி அளவுக்கு மிருதுவான ஒன்றை அதற்குமுன் உண்டதில்லை. தோசை போடுமிடத்தில் சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருந்த மாஸ்டரிடம் பேச்சுக்கொடுத்தேன். சொந்த ஊர் கும்பகோணம் என்றார். நெருங்கிவிட்டாரே என்று மேலும் விசாரித்ததில் நான் பெண்ணெடுத்திருக்கும் அதே ஊரைச் சேர்ந்தவர். அவர் தமிழகத்திலும் இந்தியாவின் பல பகுதிகளிலும் எங்கெங்கோ சுற்றிக் கடைசியாகக் கொடைக்கானலில் குடும்பத்துடன் நிலைபெற்றுவிட்ட கதையை உற்சாகமாகச் சொன்னார். அசத்தலான பொடிதோசைகளையும் போட்டுக்கொடுத்தார்.

நான் 20 ஆண்டுகளுக்குமுன் கொடைக்கானல் சென்ற அதே காலகட்டத்தில்தான் அவரும் அங்கு குடியேறியிருக்கிறார். அப்போதிருந்த கொடைக்கானல் முற்றிலும் மாறிவிட்டது என்றார். எனக்கும் அப்படித்தான் தெரிகிறது என்றேன். வசதிகளும் அன்றாட வாழ்க்கைத் தரமும் பெரிதும் மேம்பட்டுள்ளன என்றார். நிகழ்ந்துள்ள மாற்றங்கள், கனவிலிருக்கும் இடத்தைக்காணச் சுற்றுலா வருவோர்க்கு அதிருப்தியையும் அங்கேயே வசிப்போர்க்கு நிறைவையும் ஒருங்கே கொணர்ந்துள்ளன. வளர்ச்சி என்பதை அதன்போக்கில் விடப்பட்டால் அப்படித்தான், ஒன்றைத்தின்று இன்னொன்று வளரும்.

IMG_1743

கொடைக்கானலில் சில நாட்கள் தங்கிக் கிளம்புவதற்கு முதல்நாளிரவு விடுதியின் மதுக்கூடத்திற்குச் சென்றேன். ஒரேயொருவர் மட்டும் தனியாக அமர்ந்து பியர் அருந்திக்கொண்டிருந்தார். ஒரு துணை கிடைத்ததில் அவருக்கும் உற்சாகம். பேச்சுக்கொடுத்ததில் அவர் மும்பைக்குச் சிறுவயதிலேயே சென்றுவிட்ட தமிழர் என்று தெரிந்தது. தமிழ் பேச வரவில்லை. மும்பையின் மதுக்கூடங்களில் இந்நேரம் உட்கார இடம் கிடைப்பதே அரிது என்றார். தற்போது ஹைதராபாத்தில் குடும்பத்துடன் வசிக்கிறார். அங்கு மருந்து தயாரிக்கும் பெருநிறுவனம் ஒன்றில் வேதியியல் விஞ்ஞானி வேலை. ஐஐடியில் படித்தவர்.

கொரோனா மருந்து தயாரிப்பில் ஈடுபட்டிருந்தீர்களா என்றேன். அன்றாடம் நான்கைந்து மணிநேரத் தூக்கத்தைத் தவிர்த்து (அதுவும் அலுவலகத்திலேயே) மற்றபடி மாதக்கணக்கில் ஆய்வகத்திலேயே உழன்ற கதையைச் சொன்னார். கடும்வேலை அளித்த பிரிவினால் குடும்பத்தினர் ஒருகட்டத்தில் கடுப்பாகி, “இதற்குமேல் தாங்காது எங்களை உடனே எங்காவது அழைத்துச்செல்லுங்கள்” என்று உத்தரவிட்டதால்தான் கொடைக்கானல் அழைத்து வந்ததாகச் சொன்னார். அடுத்தநாள் காலை மதுரையிலிருந்து விமானத்தைப் பிடிக்கவுள்ளதாகச் சொல்லி விடைபெற்றுக்கொண்டார்.

பிறகு அங்கிருந்த ஊழியர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தேன். அவர் கேரளத்தைச் சேர்ந்தவர். கொரோனாவின் பிடி இன்னும் முழுமையாக விலகாததே மதுக்கூடம் காலியாகக் கிடப்பதற்குக் காரணம் என்றார். பலரும் அறைக்கே பானங்களைக் கொண்டுவரச் செய்துவிடுவதைக் குறிப்பிட்டார். விடியவிடிய கும்மாளமிட்டப் பழைய நாட்கள் விரைவில் மீளும் என்று நம்புவதாகச் சொன்னார்.

ஆட்கள் குறைவு என்பதால் மாதத்திற்கு நான்கு நாட்கள் ஓய்வுண்டு என்றாலும் அவை வழக்கமாகக் கிடைப்பதில்லை என்றார். கிடைக்கும்போது சில நாட்கள் சேர்த்து எடுத்துக்கொண்டு பிறகு மீண்டும் ஒருமாதம் தொடர்ந்து வேலைபார்ப்பது வழக்கம் என்றார். கொடைக்கானலில் திரைப்பட அரங்கு கிடையாது, பழனி சென்று படம் பார்த்துத் திரும்ப ஒருநாள் ஓடிவிடும் என்றார். ஆண்டுக்கொருமுறை சொந்த ஊருக்குச் செல்வாராம். அவரூரில் நடக்கும் ஆனையூட்டுத் திருவிழாவிற்கு ஒருமுறை வாருங்கள் என்று அழைப்பு விடுத்தார்.

தாகத்துக்குத் தண்ணீர் போத்தல் கிடைப்பது கொடைக்கானலில் குதிரைக்கொம்பாக இருந்தது. விசாரித்ததில் ஒரு லிட்டர், இரண்டு லிட்டர் நெகிழிப் போத்தல்களை வாங்கித் தண்ணீர் அருந்திவிட்டு போத்தல்களைக் கண்ட இடத்தில் குப்பை போட்டுவிடுகின்றனர் என்பதால் அதைத் தவிர்க்கும் உபாயமாக குண்டுசட்டி போன்ற 5 லிட்டர், 10 லிட்டர்  ‘கேன்’கள் மட்டுமே நகரில் விற்பனைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளன. அதற்குப் பலன் இல்லாமலில்லை. ஆனால் தண்ணீர் போத்தல்கள் இல்லாத குறையைப் பிற குப்பைகள் போக்கிவிடுகின்றன. ஆகவே குப்பைக் குறைப்பைவிட குளிர்பான விற்பனை எகிறலுக்குத்தான் இக்கட்டுப்பாடு உதவியிருக்கிறது என்பது என் கணிப்பு.

கொடைக்கானலிலிருந்து திரும்புகாலிலும் தலப்பாகட்டிதான், ஆனால் இடம் சற்று மாற்றம்; திண்டுக்கல்லுக்குப் பதில் வத்தலகுண்டு. ருசி ஒன்றாகத்தான் இருந்தது. உண்டபின் மெல்லும் இனிப்புச் சீரகத்தில் மட்டும் கொஞ்சம் வாசனை சுபாரி கலந்திருந்தது. இந்தமுறை ஊர்ப்பயணத்தில் கற்றுக்கொண்டது ‘லெமன் சோடா’. அதில் இனிப்பு, உப்பு, கலப்பு என்று மூன்றுவகை செய்கின்றனர். மூன்றையும் வெவ்வேறு இடங்களில் ருசிபார்த்ததில் இனிப்புதான் என் தேர்வு.

கொடைக்கானலிலிருந்து நேராகக் கும்பகோணம் அருகிலுள்ள என் மனைவியின் சொந்த ஊருக்குச் சென்றோம். அவ்வூரின் காளி சுற்றுவட்டாரங்களில் பிரசித்தம். ‘பெட்டி காளி’ என்று அழைக்கப்படும் இக்காளியின் மார்பளவுச் சிலை எப்போதும் பெட்டிக்குள்தான் இருக்கும். திருவிழாக் காலங்களில் மட்டுமே காளி வெளியே வரும். அதிலும் பெரிய திருவிழா எப்போது நடக்கும் என்று எவருக்குமே தெரியாது. திடீரென்று பூசாரியின் கனவில் வந்து அன்னை விழா எடுக்கச் சொல்வாள், உடனே விழா நடக்கும். நல்லவேளையாகக் கொரோனா கட்டுப்பாடுகள் ஓரளவு நீங்கியதும் அன்னை ஆணையிட்டாள். எனக்கும் திருவிழாவை முதல்முறை பார்க்கும் வாய்ப்பு.

ஊரே விழாக்கோலம். போக்குவரத்துக் கட்டுப்பாடுகள். இராப்பகல் ஓயாது ஊருக்கே கேட்கும்படி உரத்து ஒலிக்கும் பக்திப் பாடல்கள். அதுவும் வீரமணிதாசனின் ‘எல்லாம் வல்ல தாயே… எங்கும் நிறைந்தாயே’ எனக்கு இப்போது வரிபிசகாமல் மனப்பாடமாகிவிட்டது. சிங்கை திரும்பியும் அவ்வப்போது அனிச்சையாக முனகி வீட்டில் திட்டுவாங்கிக் கொண்டிருக்கிறேன்.  அந்த ஒலிவட்டு (ஆயிரம் கண்ணுடையாள்) மிகவும் பிரபலமானது. தமிழகத்தின் எந்த அம்மன் திருவிழாவிலும் அத்தொகுப்பின் பாடல்கள் ஒலித்தே தீரும். நான் ஶ்ரீபெரும்புதூரில் வேலைசெய்த காலத்தில் ஒருமுறை வீரமணிதாசன் இசை நிகழ்ச்சியை நேரில் கண்டிருக்கிறேன். எவருக்கும் பக்திப்பரவசத்தை அளிக்கக்கூடிய ஆற்றலுள்ள ஒருவித முரட்டு பக்திக் குரல். அந்தக் குரலே குழையும்போது கேட்பவரும் நெகிழ்ந்துவிடுவார்.

கேரளத்திற்கும் இந்தப் பெட்டிகாளிக்கும் ஏதோ வலுவான தொடர்பு இருக்கவேண்டும். காளி வீதியுலாவில் சன்டை முழங்க, கொம்பூத, வஸ்திராபரணங்களிலும் கேரளச் சாயல். தெறிக்கும் சன்ட நாதத்தில் எனக்கே ஆடவேண்டும்போல இருந்தது. ஒருவேளை ஆடியிருந்தால் நிச்சயம் சாமிவந்து இறங்கியிருக்கும். ஏற்கெனவே இறங்கிய சிலரிடமிருந்து மலையேறி வேறு சிலருக்குள் இறங்கும்போது கூட்டம் அந்த சாமிகளையும் காயம்பட்டுவிடாமல் கவனமாகப் பார்த்துக்கொண்டது.

என் மகள் இதையெல்லாம் பார்க்க வசதியாக ஒரு விசுப்பலகை மீது ஏற்றிவிட்டு அருகிலேயே நின்றுகொண்டேன். ஒருவித பிரமிப்பிலும் பயத்திலும் என் புஜத்தை இறுக்கிப்பிடித்த அவள் அதைக் கடைசிவரை இளக்கவே இல்லை. அதிர்வேட்டுகள் முழங்கும்தோறும் அவள் உடல் விதிர்த்து அடங்குவதை அப்பிடியின் வழியாக உணரமுடிந்தது. சிங்கப்பூரிலிருந்து அவள் மெல்லமெல்ல ஆயிரமாண்டுகள் பின்னோக்கிச் சென்றுகொண்டிருந்தாள்.

IMG_1996

பல்லக்கில் காளி அமைதியாகச் செல்வதே இல்லை. பல்லக்கு இங்குமங்குமாக ஓடியபடியே இருக்கிறது. ஒவ்வொரு தெருவிலும் பொதுவாக அத்தெருக்காரர்களே பல்லக்கைச் சுமப்பார்களாம். எவ்வளவு நேரம் ஒரு தெருவைத் தாண்டாமல் பிடித்து வைக்கிறார்களோ அவ்வளவு அதிக நன்மையை அவர்களுக்குக் காளி அளிப்பாள் என்றொரு நம்பிக்கை. அதனால் அடுத்ததெருவை நெருங்கும்போது அத்தெருக்காரர்கள் அங்கு இழுக்க இவர்கள் இங்கு இழுக்க ஒரே களேபரமாக இருக்கிறது. இவ்வளவிற்கும் நடுவில் பல்லக்கில் துணிச்சலுடன் அமர்ந்திருக்கும் இரு பூசாரிகள் பக்தர்கள் அளிக்கும் மாலைகளை, பூசைப் பொருட்களை வாங்கிக்கொண்டு அவர்களுக்கு ஓட்டத்திலேயே பிரசாதங்களையும் கொடுத்துவிடுகின்றனர். ஏதோவொரு மாயக்கரத்தின் ஒழுங்குடன்கூடிய களியாட்டம். கரணம் தப்பினால் மரணம்தான் ஆனால் பெரும்பாலும் தப்பாது. ஒருவகையில் தமிழக வாழ்க்கையின் குறியீடு என்றும் சொல்லலாம்!

குடும்பத்தைக் கும்பகோணத்தில் விட்டுவிட்டுச் சில நாட்கள் சென்னை சென்றேன். நட்புகள், உறவுகள் சந்திப்பு. சோழன் விரைவு ரயிலில் முன்பதிவு செய்திருந்தேன். Second AC இருக்கை/படுக்கை சுத்தமாகவும், வசதியாகவும் இருந்தது. சிறிய தலையணை, போர்வை, கம்பளி, தண்ணீர் போத்தல். பகல் பயணம்தான். நண்பகலில் தொடங்கிய பயணம் சில தொலைபேசி அழைப்புகள், இலேசாக அசந்து எழுந்தது என கும்பகோணம்-எழும்பூர் பயணம் சலிப்பதற்குள்ளாகவே 6 மணி நேரத்தில் முடிந்துவிட்டது.

நல்லவேளையாகக் கொஞ்சம் கட்டுச்சோறு கொண்டுவந்தேன். வீட்டில் வற்புறுத்திக் கொடுத்ததை வேண்டாவெறுப்பாக எடுத்துவந்தேன். ஆனால் ரயிலில் வழியில் எங்குமே உணவும் தண்ணீரும் கிட்டாமல் பலர் அவதிப்பட்டனர். குளிரூட்டப்பட்ட பெட்டிகளில் சன்னலைத் திறக்கமுடியாது. அனைவரும் கதவருகே வந்து வாங்குவது இயலாது. விரைவு ரயில் என்பதால் அதிகபட்சம் 2 நிமிடம் மட்டுமே அனைத்து நிறுத்தங்களிலும் வண்டி நிற்கும். ஆகவே பிளாட்பாரத்தில் உணவு, பானம் விற்பவர்கள் சன்னல்கள் திறந்திருக்கும் குளிரூட்டப்படாத பெட்டிகளின் பக்கத்திற்குச் சென்றுவிடுகின்றனர். குளிரூட்டப்பட்ட ரயில் பெட்டிக்குள் திண்பண்டம், தண்ணீர் விற்கவும் யாரும் வரவில்லை. கைவசம் இருந்ததை சிலர் பகிர்ந்தோம் என்றாலும் போதவில்லை.

எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து நண்பர்களைச் சந்திக்க ஏற்பாடு செய்திருந்த ‘த பார்க்’ விடுதி அருகில்தான். ‘ஓலா’, ‘கிராப்’ போன்ற வாடகைக்கார்கள் வந்ததிலிருந்து சென்னையில் ஆட்டோக்காரர்களுக்கு மவுசு குறைந்துவிட்டது. ஆனாலும் உடனே கிடைப்பது, காருக்குக் காத்திருக்கும் நேரத்தில் சென்றே அடைந்துவிட வாய்ப்புள்ள அருகிலுள்ள இடங்கள் ஆகியவற்றுக்கு ஆட்டோதான். அவர்களும் ‘மீட்டருக்கு மேல’ கேட்டதெல்லாம்போய் “ஓலா ரேட்டு குடு சார்” என்று தம்மைத் தகவமைத்துக்கொண்டுவிட்டனர்.

ஆட்டோவில்தான் போனேன். பார்க் என்றதும் “எந்த பார்க் சார்?” என்றவரிடம் “ஜெமினி பிரிட்ஜாண்ட” என்றதும் வண்டி கிளம்பியது. அவர் முகக்கவசம் அணிந்திருந்தது ஆச்சரியமளித்தது. ஒரு தெரு தாண்டியதும் கழற்றிவிட்டார். அந்த முக்கில் சில காவலர்கள் அமர்ந்திருந்தனர். “போடலேன்னா பிடிப்பாங்களா?” என்றேன். “பேஜார் சார்..” என்று ஏதோ சொன்னார். அலறும் வாகன, ஒலிப்பான்களின் சத்தத்தோடு கலந்து சரியாகக் கேட்கவில்லை.

சிங்கப்பூருக்கு வருவதற்குமுன் வேலைசெய்த ஶ்ரீபெரும்புதூரில் ஒன்றாக சுமார் நான்காண்டுகள் தங்கியிருந்தபோது பழக்கமான நண்பர்களுடன் இரவு விருந்து உண்பதே ‘பார்க்’ திட்டம். அவர்களை முதன்முறை சந்தித்ததிலிருந்து 20 ஆண்டுகள் ஓடிவிட்டன. அதைக்கொண்டாடும் விதமாகவும் அவர்களை ஒன்றுகூட்டியிருந்தேன். நான் மட்டும்தான் வெளிநாட்டில் என்பதால் என் பயணத்தை ஒட்டியே அவர்களைக் கூட்டுவது வழக்கம். பல மாதங்களுக்குமுன்பே திட்டமிட்டிருந்தும் எண்மரில் ஒருவர் வரவியலாத சூழல். பிறர் வந்துசேர்ந்ததும் ஜமா நள்ளிரவைத் தாண்டியும் களைகட்டியது. வாடா போடா நண்பர்களுடன் வயிறுவலிக்கக் குலுங்கிச் சிரிக்கும் சிலநிமிடத் தருணங்களுக்காக எவ்வளவு தூரமும் பயணிக்கலாம்.

IMG_1774

விடுதியிலேயே விருந்துண்ணும் திட்டத்தை இருவர் கடுமையாக ஆட்சேபித்தனர். அவர்கள் இருவரும் பின்மதியத்திலேயே அங்கு வந்துவிட்டனர். ஒருவர் தயிர்சாதம் அறைக்குக் கொண்டுவரச்சொல்லிச் சாப்பிட்டிருக்கிறார். ரூ 800 தீட்டிவிட்டனராம். அடுத்தநாள் பிரியும்வரை அதையே சொல்லிச்சொல்லி அவர் மாய்ந்துகொண்டிருந்தார். இன்னொரு நண்பர் கொண்டுவரச்சொன்ன பானத்தின் விலை அறையிலிருந்த விலைப்பட்டியலிலிருந்து மிகவும் அதிகமாக இருந்ததைப் பார்த்ததும் விசாரித்துள்ளார். சரியான பதிலில்லை. வேண்டாம் என்று திருப்பியனுப்பிவிட்டார். அவரகள் இருவரும் கடுப்பிலிருந்தனர். வெளியே செல்லலாம் என்றனர்.

எனக்கும் அங்கு ஓர் அனுபவம் எரிச்சலூட்டியிருந்தது. அறைக்குக் கொண்டுவரச்சொன்ன உணவு, பானங்களுக்கு அவ்வப்போதே காசு கொடுக்கவேண்டும். அறைக்கட்டணத்தில் சேர்த்துவிடுங்கள் பின்னால் ஒன்றாகக் கட்டிவிடுகிறேன் என்றால் அது இயலாது என்றனர். வாங்கிய பொருளுக்கான தொகை போக மிச்சத்தொகையைத் திருப்பிக்கொடுக்க உணவு, பானம் கொண்டுவரும் ஊழியரிடம் கைவசம் காசு இருக்காது. கொண்டுவருகிறேன் என்று செல்பவர்கள் திரும்புவதில்லை. இரண்டு தடவை அப்படி நடந்தது.

சிறிய தொகைதானே ஐந்து நட்சத்திர விடுதியில் தங்குவோர் கண்டுகொள்ள மாட்டார்கள் என்று அவர்கள் நினைத்திருக்கவேண்டும். அறையைக் காலிசெய்து கிளம்பும்போது, “எனக்கு அப்படியாக ரூ 80 மீதி வரவில்லை அதைக்கழித்துக்கொண்டு மீதியுள்ள தொகையைக் கட்டுகிறேன்” என்று சொன்னேன். அறைசேவைகளைக் கவனிக்கும் மேலாளரை அழைத்தனர். அத்தொகையைத் தானே கட்டுவதாக அவர் சொன்னார். நான் மீதித் தொகையைக் கட்டிவிட்டு வெளியே வந்தேன்.

எப்போதோ உண்டான பெயரை வைத்துக்கொண்டு அவ்விடுதி நடந்து வருகிறது போலும், பெருங்காயம் இருந்த பாண்டமாக. அறைகளும் வசதியில்லை. நெருக்கடியாக, குறுகலாக உள்ளன. இரண்டில் ஓர் அறையில் குளியலறையில் தண்ணீர் தேங்கும் பிரச்சனை இருந்தது. சில நிமிட மின்தடங்கல் வேறு. இனிமேல் அங்கு செல்லக்கூடாது என்று நினைத்துக்கொண்டேன். திருச்சி SRM-இல் கிடைத்த நிறைவுகூட இல்லை. ஓரிரவு தங்கும் கட்டணம் இங்கு இரண்டு மடங்குக்கும் மேல். உணவுக் கட்டணத்திலும் பல குழப்படிகள். காலையில் பலவகை உணவுகள் கொண்ட ‘புஃபே’ மொத்தமாகவே ரூ 400 தான், ஆனால் மதியத்தில் அந்த நண்பர்கேட்ட தயிர்சாதம் மட்டும் ரூ 800!

சென்னையில் ஆய்வாளர் சுப்பிரமணி இரமேஷைச் சந்தித்தேன். கடந்த ஆண்டு தொடக்கத்தில் இவரது ‘காலவெளிக் கதைஞர்கள்‘ நூலை சிங்கப்பூர் நூலகத்தில் கண்டெடுத்து வாசித்ததும் மகிழ்ந்து அவரைத் தேடித் தொடர்புகொண்டேன். சென்னை இந்துக்கல்லூரியில் உதவிப் பேராசிரியர். சுமார் 2 மணி நேரம் இலக்கிய விஷயங்கள், இன்னபிற அனுபவங்களைப் பேசிக்கொண்டிருந்தோம். எங்கள் இருவருக்குமே ஆ.இரா.வேங்கடாசலபதி ஆய்வுகளின்மீது பிரேமை இருந்ததைக் கண்டோம். தன் அண்மைய வெளியீடான ‘தமிழ் நாவல் வாசிப்பும் உரையாடலும்’ நூலைப் பரிசளித்தார்.

IMG_1997

‘தி சிராங்கூன் டைம்ஸ்’ நிறுவனர் எம்.ஏ.முஸ்தபா அவர்களைக் கவிக்கோ மன்றத்தில் சந்தித்தேன். பல நூல்களைப் பரிசளித்தார். பிறகு அவரது போயஸ் கார்டன் இல்லத்திற்குச் சென்றோம். அம்மா வீட்டருகே என்று அடையாளம் சொன்னவர்கள் தற்போது ‘தமிழில் பேசுவோம்’ வீட்டருகே என்று மாற்றிக்கொண்டுள்ளதைக் குறிப்பிட்டார். நாங்கள் இருவரும் சிங்கப்பூரில் வசிப்பவர்கள் என்றாலும் ஊரில் சந்தித்தபோதுதான் மணிக்கணக்கில் உரையாடிக்கொண்டிருக்க முடிந்தது. முத்துப்பேட்டைக்கு வருமாறு அழைப்பு விடுத்தார்.

e6e16148-0491-4488-b3fa-37cb1c487f8d

சொந்த ஊருக்குத் திரும்பியபின் அங்கிருந்து நானும் தம்பியும் முத்துப்பேட்டை சென்று முஸ்தபா அவர்களைச் சந்தித்தோம். அவர் நிறுவியுள்ள ரஹ்மத் பெண்கள் மேல்நிலைப்பள்ளி அதன் பசுமையான சூழல், கற்றல் வசதிகள், கட்டுப்பாடுகள், கல்வித்தரம், நீக்குப்போக்குள்ள கட்டணமுறை, சேவை நோக்கு இவற்றாலேயே அவ்வட்டாரத்தில் பெயர்பெற்றுள்ளது. நாங்கள் சென்ற நேரம் மாணவர் சேர்க்கை நடந்துகொண்டிருந்தது. தொலைவிலுள்ள கிராமங்களிலுள்ளோர் பலரும் தம் பிள்ளைகளை அங்கு கொண்டுவந்து சேர்த்துக்கொண்டிருந்தனர்.

பள்ளியைச் சுற்றிக்காட்டியவர் நூலகத்தில் வாசித்துக்கொண்டிருந்த பிள்ளைகளிடம் சற்றுநேரம் என்னை உரையாடச் சொன்னார். மாணவிகள் என்னைச் சூழ்ந்துகொண்டனர். “எத்தனைபேரின் தந்தையர் வெளிநாட்டில் வேலைபார்க்கின்றனர்?” என்று கேட்டதும் பாதிக்கும் மேற்பட்டோரின் கைகள் உயர்ந்தன. அது நான் எதிர்பார்த்ததுதான். ‘தி சிராங்கூன் டைம்ஸ்’ இதழில் ஆய்வாளர் ஃபன்சுரா பானு எழுதி நான் மொழிபெயர்த்த ‘சபுராளிகளின் குடும்பப் பெண்கள் சமாளித்த சவால்கள்‘ கட்டுரையைக் குறிப்பிட்டுப் பேசத்தொடங்கினேன். அவர்கள் ஒன்றிப்போய்விட்டனர். அவர்களை ஈர்த்தபின் பாடப்புத்தகத்திற்கு வெளியே வாசிக்கவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி முடித்துக்கொண்டேன். நான் வெகுகாலமாகத் தேடிக்கொண்டிருந்த சில பழைய (2010-11) சிராங்கூன் டைம்ஸ் இதழ்களும் அந்த நூலகத்தில் கிடைத்தன.

92ea6786-5d19-49f1-a1cc-cb8e9418aa29

ரஹ்மத் பள்ளியைச் சுற்றி மரங்களுக்கும் செடிகொடிகளுக்கும் தண்ணீருக்கும் தொலைநோக்குடனும் வெகுசிரத்தையுடனும் திட்டமிட்டு, ஆத்மார்த்தமாகப் பணிபுரியும் பொறியாளர்களை அமர்த்தி வடிவமைத்து அற்புதமான சூழலை முஸ்தபா உருவாக்கியுள்ளார். அவ்வளாகத்தில் விழும் ஒருசொட்டுத் தண்ணீரும் வீணாவதில்லை. மரங்களுக்காக அங்கு கட்டடங்கள் வெட்டப்படுமே தவிர (சில எடுத்துக்காட்டுகளையும் கண்டேன்) கட்டடங்களுக்காக மரங்கள் வெட்டப்படாது. நீர்ப்பிடிப்பை அதிகரிப்பதன்மூலம் அப்பகுதியின் நிலத்தடி நீரின் உப்புத் தன்மையையே மெல்லெமெல்ல மாற்றிவருகிறார். கல்விப் பங்களிப்பு போக அவரது சூழியல் செயல்பாடுகளைத் தனிக்கட்டுரையாக எழுதவேண்டும்.

சலிப்புத் தட்டாமல் நேரடியாகவும் மனந்திறந்தும் உரையாடக்கூடியவர் முஸ்தபா. எப்போதும் எதிரிலிருப்பவரிடம் தொடர்ந்து கூர்மையுடன் கற்பவர். அனுபவமும் தகவல்களும் பின்னிப்பிணைந்து உரையாடும் அவருடன் பேசுவதே சிறப்பானதொரு அனுபவம். தூங்குமூஞ்சி மரத்திற்கு நிழல்வாடி மரம் என்ற பெயருண்டு என்பதை அன்றைய உரையாடலில் கற்றேன்.

உப்புநீரும் நன்னீரும் கலக்கும் முத்துப்பேட்டை போன்ற இடங்களில் கிடைக்கும் சில மீன்களுக்குத் தனி ருசியுண்டு என்றார். அருமையான கடலுணவு விருந்துடன் அந்த சந்திப்பு நிறைவுற்றது. எந்தக் குளிரூட்டியும் இல்லாமல் அந்த மதியப்பொழுதிலும் அவரது வீட்டுக்கு வெளியே ஒரு மண்டபத்தில் அலையாத்திக் காடுகளின் குளிர்ந்த காற்று அமர்ந்திருந்த எங்களை அள்ளிக்கொண்டு சென்றது. பிரியாவிடை என்பார்களே அதைப்பெற்றுக்கொண்டு திரும்பினேன்.

சிங்கை திரும்பும் முன் கடைசியாகச் சந்தித்தது எழுத்தாளர் சுரேஷ் பிரதீப். இவரும் அவரது நூலொன்றின் வழியாக அறிமுகமானவர்தான். திருவாரூர்க்காரர் என்பதால் என் வட்டாரக் கதைகளை எழுதும் நம்பிக்கை நட்சத்திரம் என்ற அடிப்படையிலும் நட்பும் ஆர்வமுமுண்டு. மூவாண்டுகளுக்குமுன் தமிழகம் சென்றபோது முதல்முறை சந்தித்தேன். இம்முறை வாசிப்பின் வழியாக அவருக்கு அறிமுகமான இன்னொரு நண்பர் கலை கார்ல்மார்க்ஸும் அவருடன் வந்திருந்தார். இலக்கியத்தையும் வாசிப்பு, எழுத்தையும் சுற்றிச் சுழன்று சுவாரஸ்யமாக நீண்டுகொண்டே சென்ற உரையாடலை அடுத்தநாள் வேலைநாள் என்பதால் விருப்பமின்றி நிறுத்த வேண்டியதாயிற்று. அண்மையில் வெளிவந்துள்ள தன் அடுத்த சிறுகதைத் தொகுப்பு ‘பொன்னுலகம்’ நூலைப் பரிசளித்தார்.

IMG_1998

இந்தப் பயணத்தில் ‘மிக்காபெரிசம்’ என்ற என்னுடைய மூன்றாவது கட்டுரைத் தொகுப்பு நூலை யாவரும் பதிப்பகம் நல்லபடியாக முடித்துத் தந்தது. இடம்பெற்றுள்ள 25 கட்டுரைகளும் சிங்கப்பூர் வாழ்க்கை சார்ந்தவை. பெரும்பாலும் ‘தி சிராங்கூன் டைம்ஸ்’ இதழில் வந்தவை. சிங்கை புறப்படுவதற்குச் சில நாட்களுக்கு முன்னர்தான் என் கைக்கு நூலின் படிகள் கிடைத்தன என்பதால் சுரேஷ் பிரதீப்பைத் தவிர நேரில் சந்தித்த பிற எவருக்கும் அளிக்கவியலாமல் போனது, நூலை நான் சமர்ப்பித்திருக்கும் முஸ்தபா அவர்கள் உட்பட.

சிங்கப்பூரில் அபுனைவு எழுத்து இதுவரை வளர்ந்து வந்திருக்கும் விதம், கடந்த ஆறேழு ஆண்டுகளாக ‘தி சிராங்கூன் டைம்ஸ்’ செய்துவரும் சில முயற்சிகள், செல்திசை, எழுதுவதற்கான வாய்ப்புகள், தேவைகள் இவற்றை அலசும் ஓர் உரையாடல் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து அதில் இந்த நூலை வெளியிடலாமா என்றொரு எண்ணம். இந்த மாதம் பணிச்சுமை மிகுதி என்பதால் ஓரிரு மாதங்கள் கழித்துத்தான் பார்க்கவேண்டும்.

IMG_1957

மீண்டும் சிங்கை திரும்ப மூட்டை முடிச்சுகளைக் கட்டினோம். திருக்கண்ணங்குடியிலிருந்து திருச்சி விமான நிலையத்திற்கு வந்த கார்ப்பயணத்தில் என் மனக்குறை நீங்கும்படியாக 4 மணி நேரமும் 80களின் இளையராஜா ஒலித்தார். காரோட்டி என் வயதையொத்தவர். வழியில் ‘இன்னோவா’ ஐயனார் கோவில் நிறுத்தி, இறங்கி வணங்கி, திருநீறு பூசிக்கொண்டு எங்களுக்கும் கொடுத்தார்.

விபத்து நேராமலிருக்கவேண்டி அவ்வழி தாண்டும் எல்லாவகைக் காரோட்டிகளும் இறங்கி வணங்குவர் என்றாலும் இன்னோவா வகைக் கார் ஓட்டுநர்கள் மட்டும் நூற்றுக்கு நூறுபேரும் இறங்கிவிடுவர் என்பதால் ஐயனாருக்கு அந்தப்பெயர் வந்ததாம். இதெல்லாம் பெரிய ஆராய்ச்சிக்குரிய விஷயம். சிங்கப்பூருக்குத் தக்க முனீஸ்வரன் தன்னைத் தகவமைத்துக்கொண்டதை ஓர் உள்ளூர்ப் பேராசிரியர் ஆராய்ந்து புத்தகம் எழுதியுள்ளார். ஆர்வமுள்ளோர் வாசித்துப் பார்க்கலாம்.

விமானத்தில் ஏறியமர்ந்தபோது நள்ளிரவு தாண்டிவிட்டது. முப்பதாயிரம் அடி உயரத்தில் ஏனோ வெகுநேரத்திற்கு உறக்கம் பிடிக்கவில்லை. சற்றுக் கண்மூடியபோது கூடிவந்த உறக்கமும், அதற்காகவே காத்திருந்ததுபோல முன்னிருக்கையில் ஐந்தாறு வயதுப் பிள்ளையொன்று பெருங்குரலெடுத்து அழத்தொடங்கியதில், கலைந்து போனது. அப்பிள்ளையை அடக்கப் பெற்றோர் செய்த முயற்சிகள் எதுவும் பலனளிக்காததில் அடிக்கவும் கிள்ளவும் தொடங்கினர். பிள்ளை மேலும் ஓவென்று அலறியது. அடி விழவிழ எனக்குப் பதற்றம் அடங்கவேயில்லை. குரங்கையும் குழந்தையையும் ஏன்தான் என் முன்னால் கொண்டுவந்து அடிக்கின்றனரோ தெரியவில்லை!

பொழுதுபுலர சிங்கப்பூரில் இறங்கியதும், “ஊரில் சென்று இறங்கியபோது படபடப்பாகவும் இங்கே இப்போது இறங்கும்போது நிதானமாகவும் உணர்கிறேனே ஏன்?” என்று மனைவி கேட்டார். “கட்டுப்பாடுதான் காரணம்” என்றேன். குடிநுழைவை இரண்டு நிமிடத்தில் முடித்து மூட்டை முடிச்சுகளை எடுக்கச் சென்றபோது, விமானத்தில் அழுது அடிவாங்கிய அந்தக் குழந்தை ஒன்றுமே நடக்காததுபோலப் பெற்றோர் மடியில் அமைதியாக உட்கார்ந்திருந்தது.

***