தமிழ் முஸ்லிம்கள் அதிகமாக வசித்த அன்றைய தஞ்சாவூர், இராமநாதபுரம் மாவட்டங்களிலிருந்துதான் பெருமளவு தமிழ் முஸ்லிம்கள் சிங்கப்பூருக்குப் பயணம் (சபுர்) சென்றனர்.[1] பொதுவாகத் தமிழ் முஸ்லிம் பெண்கள் வீட்டைவிட்டு வெளியே செல்வதே பரவலாக வழக்கத்திலில்லாத காலம் என்பதால் வெளிநாட்டுக்குச் சென்றவர்கள் குடும்பத்துடன் செல்லும் வழக்கம் இல்லாததைப் புரிந்துகொள்ளலாம். வரலாற்றில் ஒரு விதிவிலக்காக, 1930களில் பஞ்சத்தின் காரணமாக, கடையநல்லூர், தென்காசிப்பகுதி முஸ்லிம்கள் குடும்பத்துடன் புலம்பெயர்ந்தனர்.[2] மற்றபடி பொதுவாக பெண்கள் ஊரில் வீட்டில் விடப்பட்டனர்.

பொருள்தேடி வெளிநாடு செல்லும் வழக்கம் தமிழ் முஸ்லிம் ஆண்களிடையே வெகுகாலமாக இருந்ததால், திருமணத்திற்காக மாப்பிள்ளை தேடும்போது பயணம் சென்றுவரும் மாப்பிள்ளை என்றால் ‘கப்பல் மாப்பிள்ளை’ என்றும் செல்லாதவர் என்றால் ‘ஊர் மாப்பிள்ளை’ என்றும் குறிப்பிடும் வழக்கம் இருந்தது.

பொருளீட்டும் பொருட்டு பிரிந்துசென்றோர் ஊரிலுள்ள தம் குடும்பத்தாருடன் எத்தகைய தொடர்புகளைக் கொண்டிருந்தனர் எனப் பல புலம்பெயர் வரலாறுகள் ஆராய்ந்துள்ளன. ஆயினும் புலம்பெயர்ந்து சென்றடைந்த நாட்டின்மீதே ஆய்வுகளின் கவனம் அழுத்தமாக இருந்துவந்துள்ளது.[3] புதிய சூழலில், தன்னைத் தகவமைத்துக்கொள்ளும் சவால்களைப் புலம்பெயர்ந்தோர் எதிர்கொள்கின்றனர், ஆனால், அந்த அளவுக்குப் பெரிய மாற்றங்களையும் சவால்களையும் ஊரிலிருக்கும் குடும்பத்தினர், அதிலும் குறிப்பாகப் பெண்கள், எதிர்கொள்வதில்லை என்று வரலாற்று ஆய்வாளர்கள் கருதியிருக்கலாம்.[4]

ஆனால் ஓர் ஆண்மகன் வேலையின் பொருட்டுக் குடும்பத்தைப் பிரிந்து பயணம் சென்றதும், வீட்டிலிருக்கும் பெண்களின் பொறுப்புகள் கணிசமாக மாறிவிடுகின்றன. அந்தவகையில், இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில், தென்கிழக்காசியாவிற்குப் பணிநிமித்தமாக ஆண்கள் பயணம் சென்ற தமிழ் முஸ்லிம் குடும்பங்களில், ஊரில் பெண்களின் அன்றாட வாழ்க்கை எவ்வாறு இருந்தது என்பதை ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கம்.

ஊரிலிருக்கும் பெண்களுக்குப் பணம் வந்துசேராதபோது அவர்கள் சமாளித்தது, ஆண்டுக்கணக்கில் ஆண்கள் ஊர்திரும்பாததால் எதிர்கொள்ளவேண்டியிருந்த சவால்கள், கூடவே வாழமுடியாத நிலையில் கடிதங்கள் வாயிலாகவே உறவுகளை ஸ்திரப்படுத்திக்கொண்டது ஆகிய அம்சங்களை இக்கட்டுரை விரிவாக ஆராய்கிறது. மொத்தம் 11 வாய்மொழி வரலாற்று நேர்காணல்கள் வழியாகவே இந்த ஆய்வின் முடிவுகள் பெறப்பட்டன். ஆய்வில் கலந்துகொண்ட பெண்கள் சுமார் 50லிருந்து 70 வயதுள்ளவர்கள். தொடக்கநிலை அல்லது உயர்நிலையோடு படிப்பை நிறுத்தியவர்கள். அவர்களின் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.

வெளிநாட்டிலிருந்து பணம் வராவிட்டால், வேறு வருமானத்திற்கு வழிசெய்ய வேண்டிய சூழல் பெண்களுக்கு இருந்தது நேர்காணலின் வாயிலாகக் கிடைத்த பதில்களிலிருந்து தெளிவாகத் தெரிகிறது. சம்பாதிப்பது ஆண்களுக்கானது என்று கருதப்பட்ட சூழல் இருந்தகாலம் அது என்பதை இங்கே கருத்தில் கொள்ளவேண்டும். வருமானத்தைத் தவிர, தந்தை-பிள்ளை உறவில் விழுந்துவிடும் இடைவெளிகளையும் ஈடுகட்டப் பெண்கள் முயன்றுள்ளது தெரிகிறது.

மேலும், ஆய்வில் கலந்துகொண்ட பெண்களின் பேச்சிலிருந்தும் மௌனங்களிலிருந்தும், ஓர் உன்னத மனைவியிடமிருந்து எதிர்பார்க்கப்படும், ஏற்றுக்கொள்ளப்படும் அளவுக்கு மட்டுமே தம் உணர்வுகளை அவர்களால் வெளிப்படுத்த இயன்றுள்ளது என்பதைக் காணமுடிகிறது. நேர்காணல் செய்த ஆய்வாளராகிய நான் ஒரு தமிழ் முஸ்லிம் பெண் என்பதால் ஆய்வில் பங்கேற்றவர்களுக்கு ‘உள் ஆள்’ ஆகவும் அதேவேளையில் தமிழ்நாட்டில் வளராத, வசிக்காத பெண் என்பதால் ‘வெளி ஆள்’ ஆகவும் ஒரேநேரத்தில் இருக்கிறேன் என்பதையும் கணக்கில்கொள்ள வேண்டியுள்ளது.

இந்தப் பின்புலத்தில், முதலில் வெளிநாட்டிலிருந்து பணம் அனுப்பப்பட்ட முறைகளைக் குறித்துப் பார்க்கலாம்.

உற்றார் உறவினர்களிடம் கையில் பணத்தைக்கொடுத்து அனுப்புவதே முதன்மையான முறையாக இருந்துள்ளது. ‘உண்டியல்’ முறை 1980கள்வரை சகஜமாக இருந்த மற்றொரு முக்கியமான வழி. அதைப்பற்றிப் பேசுவது பாதுகாப்பானதுதானா என்று ஆய்வில் கலந்துகொண்ட சிலர் விசனப்பட்டனர். நான் அவர்களுக்கு நம்பிக்கை ஊட்டி பிறகு விவரங்களைச் சேகரித்தேன்.

உண்டியல் என்பது காசையோ காசோலையையோ அனுப்புவதற்கு வியாபாரிகள் கையாண்ட ஒருவித உள்நாட்டுக் கண்டுபிடிப்பு.[5] நம்பிக்கை, நாணயம், பழக்கவழக்கம் இவற்றின் அடிப்படையில் அமைந்திருந்த உண்டியல் முறையில் எழுத்துபூர்வ பரிவர்த்தனைகள் இருக்காது என்பதால் பிரிட்டிஷ் காலனித்துவ அதிகாரிகள் உண்டியலைக் குழப்பத்துடனும் சந்தேகக் கண்களுடனுமே பார்த்தனர். பயணிகள், வியாபாரிகளிடையே 18,19ஆம் நூற்றாண்டில் பிரபலமாக இருந்த இம்முறையை 20ஆம் நூற்றாண்டு காலனித்துவப் பதிவுகளிலும் காணலாம்.

உண்டியலுக்கு அதிகாரபூர்வ முத்திரைத் தீர்வை அதிகரிப்பை பம்பாய் அரசாங்கம் 1908இல் அறிமுகப்படுத்தியது. வரியிலிருந்து தப்ப உண்டியல் முறையை பயன்படுத்தியோர் தம் நடவடிக்கைகளை ரகசியமாக வைத்துக்கொள்ளத் தொடங்கினர். அதனால் நிலைமையைச் சமாளிக்க, 1978இல் உண்டியல் சட்டத்திற்குப் புறம்பானதாக ஆக்கப்பட்டது. ஆகவே 70களிலும் 80களிலும் உண்டியல் வழியாகப் பணத்தைப் பெற்றுக்கொண்ட பெண்கள் அதுகுறித்துப் பேசத்தயங்கியதைப் புரிந்துகொள்ளலாம்.

இருபதாம் நூற்றாண்டில் வருமானம்தேடி வெளிநாட்டுப் பயணம் சென்ற ஆண், சென்ற இடத்தில் மாண்டு போவதோ குடும்பத்தைக் கைவிடுவதோ பரவலாக நடந்துகொண்டுதான் இருந்தது. அப்போது தமிழ் முஸ்லிம் பெண்களுக்கு ஆதரவு காட்டியது அவர்களின் குடும்ப உறவுகள்தான். 

என் ஆய்வில் கலந்துகொண்ட சயீதா, சிங்கப்பூருக்குச் சென்ற தன் தந்தை மரணமுற்றதால் தாய்வழிப் பாட்டனார் தன்னையும் தன் தாயையும் கவனித்துக்கொண்டதாகத் தெரிவித்தார்.

நிரந்தர வருமானமின்றி நிராதரவாக நிற்கும் பெண்களைக் காப்பாற்றவேண்டிய பொறுப்பு குடும்பத்தின் பிற ஆண்களுக்கு வந்துசேர்வது 1950, 60களில் வழக்கத்தில் இருந்தது. இன்றும் கணவனை இழந்தோர், கணவனால் கைவிடப்பட்டோர் விஷயத்தில் பிறந்தவீட்டின் பொறுப்பு ஒரு சமூகக் கடமையாகவும் தொடர்கிறது என்கிறார் என் ஆய்வில் பங்கேற்ற ஜலீலா.

சிங்கப்பூருக்குச் சென்ற தன் சகோதரரிடமிருந்து பணம் வராதபோது உறவினர்களிடமும் அண்டைவீட்டாரிடமும் கடன் கேட்டு சமாளித்ததையும் 1960களில் அது சகஜமான ஒன்றாக இருந்ததையும் சயீதா விவரித்தார். வரதட்சணையாக அளிக்கப்பட்ட நகைகளை அடகு வைப்பது மற்றொரு வழி என்று ஆஸ்மா, பத்ரியா இருவரும் தெரிவித்தனர். ஆனால் நீண்டகாலத்திற்குப் பணம் வராவிட்டால் குடும்பப் பொருளாதார நிலை நலிவடைந்துவிடும்.

கடன், அடகு போன்ற உபாயங்கள் உதவாத நிலையில் வேலைக்குச் சென்றும் சுயதொழில் செய்தும் பெண்கள் சமாளித்துள்ளனர். அருகிலிருக்கும் கடையில் பொருட்கள் வாங்கவேண்டுமென்றாலும் ஆண்கள்தான் செல்லவேண்டும் என்ற வழக்கம் பின்பற்றப்பட்ட காலம் அது என்பதை இங்கே கருத்தில் கொள்ளவேண்டும். பாய் முடைதல், சமையல் உதவி, ஓமியோபதி மருத்துவம் ஆகியவற்றின் மூலம் வருமானம் ஈட்டிய தன் சம்பந்தியை (மருமகளின் தாயார்) குறித்து என் ஆய்வில் கலந்துகொண்ட அப்துல் கரீம் குறிப்பிட்டார். மலேசியாவிற்குச் சென்ற அவரது கணவர் இந்தியா திரும்பவேயில்லை. இன்னொரு திருமணம் செய்துகொண்டு மூவாரில் தங்கிவிட்டார்.

அப்துல் கரீம் குறிப்பிட்ட அனுபவங்களைப் போலல்லாமல், சற்று வசதியான குடும்பத்திலிருந்து வந்த ஃபாத்திமா, தன்னுடைய பாட்டன் பாட்டிமார் “வசதியாக இருந்ததால் ஏழ்மை அவதிகள் இருக்கவில்லை” என்றார். ஆகவே கடன், அடகு, வேலை என்று பெண்கள் செல்லவேண்டி இருந்ததா இல்லையா என்பதை அக்குடும்பத்தின் அடிப்படையான பொருளாதார நிலையே நிர்ணயித்தது எனலாம்.

ஆய்வில் கலந்துகொண்டோரின் விவரிப்புகளை ஆழமாகவும் ஒப்பிட்டும் பார்த்தபோது, 1960களில், சுத்தம்செய்தல், சமைத்தல் போன்ற வீட்டு வேலைகளுக்குச் சென்றதும் 1980களில் தையல், சிறுதொழில் மேலாண்மை போன்ற வேலைகளில் பெண்கள் ஈடுபட்டதும் தெரிகிறது. வெளிநாட்டிலிருந்து பணம் வராதபோது சொந்தமாகவே வாழ்வாதாரத்திற்கு வழிசெய்யும் திறனை இந்தியப் பெண்களிடம் கண்ட தேசாய்-பானர்ஜியின் சமூகவியல் ஆய்வு முடிவுகளுடன் இது ஒத்துப்போகிறது.[6]

பெண்கள் வேலைக்குச் செல்வது குறித்துப் பேசியபோது, ‘முன்னேற்றம்’ என்ற சொல்லை குரைசா பயன்படுத்தினார். தமிழ் முஸ்லிம் சமூகத்தில் பெண்கள் வேலைக்குச் செல்வது குடும்பத்தின் மோசமான பொருளாதார நிலையைக் காட்டுவதாக நீண்டகாலமாகக் கருதப்பட்டு வந்தது. சம்பாதிப்பது ஆண்களின் வேலை என்ற வார்ப்புக் கண்ணோட்டமே தொடர்ந்தது. தமிழ் முஸ்லிம் பெண்கள் கல்விகற்பது அதிகரித்த பிறகுதான் காலப்போக்கில் இப்போக்கு மாறியது.

அடுத்ததாக, நீண்டகாலத்திற்கு ஆண்கள் ஊர் திரும்பாத நிலையில் பெண்கள் எதிர்கொண்ட சவால்களைப் பார்க்கலாம்.

ஆய்வில் கலந்துகொண்ட சுமார் 70 வயதானவர்கள் அவர்களின் பயணகாலம் அதிகபட்சம் ஆறு ஆண்டுவரை நீண்டதாக இருந்ததைப் பதிவுசெய்தனர். பிறகு போக்குவரத்து எளிதாகவும் மலிவாகவும் ஆன 1960, 70களில் ஆண்டுக்கு ஓரிரு தடவை ஊர் திரும்ப இயன்றது. அப்போதும் செய்யும் தொழிலின் அடிப்படையிலேயே பயணகாலம் நீடித்தது. ஊதியத்திற்கு வேலைபார்த்தவர்களோடு ஒப்பிடும்போது தொழில் வைத்திருந்தோர் அடிக்கடி ஊர்திரும்ப இயலவில்லை.

நீண்டகாலத்திற்கு ஊர்திரும்ப இயலாதது, ஊர்திரும்பினாலும் குறுகிய காலத்தில் மீண்டும் பயணம் சென்றுவிடுவது ஆகியவற்றால் தந்தையருடனான பிள்ளைகளின் உறவு தகவல்தொடர்பு சாதனங்களை நம்பியே இருந்தது. ஆஸ்மா, நஸ்ஸரீன் இருவரும் தத்தம் தந்தையருடன் நெருக்கமாக இல்லாததற்கு நேரடித்தொடர்பு குறுகி அமைந்ததே காரனம் என்றனர். என்னுடைய கேள்வியும் நஸ்ஸரீன் அளித்த ஒரு பதிலும் இங்கே:

கேள்வி: வெளிநாட்டிலிருந்த அப்பாவுடன் எவ்வாறு தொடர்புகொண்டீர்கள்?

பதில்: அப்போதெல்லாம் அப்பாவுடன் நாங்கள் சரியாகப் பேசவில்லை. அவர் தொலைபேசியில் அழைத்து, எங்களிடம் தொலைபேசி தரப்பட்டதும், “அத்தா, நல்லாருக்கீகளா?” என்போம் அவ்வளவுதான். இப்போது உள்ளதுபோல நண்பர்கள் மாதிரி நாங்கள் பேசிக்கொள்ளவில்லை. இது நம்முடைய அப்பா, நெருக்கமாகப் பேசலாம் என்பதெல்லாம் எங்களுக்கும் அப்போது புரியவில்லை.

இந்த அனுபவங்கள், ஆண்களின் புலப்பெயர்வு, தந்தை-மக்கள் உறவை பாதித்த விதத்தையும் தொலைத்தொடர்புச் சாதனங்கள் பெரிதாக உதவவில்லை என்பதையும் காட்டுகின்றன. கடிதங்களும் வீட்டிலிருந்த பெரியவர்களுக்கே எழுதப்பட்டன. இதற்கு நேர்மாறாக, ஃபாத்திமா தன் தாயைக்காட்டிலும் தந்தையிடம் நெருக்கமாக உணர்ந்ததாகவும் அதற்குக் காரணம் 1970களில் அடிக்கடி சந்திக்கமுடியாதபடி தந்தை பயணத்தில் பிரிந்ததுதான் என்றும் தெரிவித்துள்ளார்.

ஃபாத்திமா, பத்ரியா இருவரும் தம் தந்தையர் கடிதம் எழுதச் சொல்லியதைப் பகிர்ந்துகொண்டனர். உறவுப் பிணைப்புகளுக்கு அப்பால் பிள்ளைகளின் கற்றல்திறன் குறித்தும் தந்தையர் அறிந்துகொள்ள அக்கடிதங்கள் உதவின. இருபதாம் நூற்றாண்டு புலம்பெயர் சீனக்குடும்பங்களிலும் அத்தகைய வழக்கம் இருந்ததை அறியமுடிகிறது.[7]

தந்தையருடனான உறவு நெருக்கமாக இல்லாத நிலையில் தாயாருடனான பிணைப்பு தமிழ் முஸ்லிம் பிள்ளைகளுக்கு அதிகரித்து, அதனால் தந்தையின் இடத்திலிருந்து கண்டிப்பு காட்டல், பொறுப்புகளைக் கவனித்தல் போன்ற பிற கடமைகளையும் பெண்களே நிறைவேற்ற வேண்டியிருந்தது என்பது என் பார்வை.

நீண்டகாலப் பிரிவுகள் திருமண உறவுகளையும் பாதித்தன. திருமணமான பின்னர் முதன்முறை பயணப்பிரிவு அடைந்த உணர்வுகளை ‘சொல்லமுடியாதது’ என்று ஆய்வில் கலந்துகொண்டோர் வர்ணித்தனர். புதிதாகத் திருமணமான பெண்கள் அவர்களின் பெற்றோர் வீட்டிற்கு அனுப்பப்பட்டதால் கணவனின் பிரிவாற்றாமை அளித்த வேதனையிலிருந்து ஓரளவுக்கு ஆறுதல் அடைந்தனர்.

வீடுகளில் தொலைபேசி 80களில் புழக்கத்திற்கு வந்துவிட்டபோதிலும் கிராமப்புறங்களில் பரவ பல ஆண்டுகள் ஆனது. கடிதங்கள் எழுதுவதோ அண்டைவீட்டார் தொலைபேசியிலிருந்து மாதமொருமுறை பேசுவதோதான் 90களுக்குமுன் வழக்கம். தனக்கு 13 வயதிலேயே திருமணமாகிவிட்டதால் 19 வயதுவரை கணவனைப் பிரிவது குறித்துப் புரியவோ கவலைப்படவோ இல்லை என்றார் ஆய்வில் பங்கேற்ற ஒரு பெண். இக்காலகட்டத்தில் இவர் ஒரு குழந்தைக்குத் தாயும் ஆகிவிட்டார்.

கணவன்மார்களால் தொல்லைகளுக்கு ஆளாகியிருந்தாலும் அவர்களைப் பிரிந்ததால் நிம்மதி அடைந்ததாக ஆய்வில் கலந்துகொண்ட ஒருவர்கூடக் குறிப்பிடவில்லை. ஓர் உன்னத மனைவி திருமண உறவைக்குறித்தோ கணவனைக் குறித்தோ குறைசொல்லக்கூடாது என்ற வழக்கத்திற்கேற்ப அவர்கள் நடந்துகொண்டிருக்கலாம். விட்டுச்செல்லப்பட்ட சீன மனைவிகள் கணவன்மார்களைக் குறித்த அதிருப்திகளை வெளிப்படையாகப் பேசினர் என்பது இங்கே தெளிவான கலாச்சார வேறுபாட்டைக் காட்டுகிறது.[8]

கடிதப் போக்குவரத்து இல்லாதபோது பெண்கள் கூடுதல் மனவழுத்தத்திற்கு ஆளாகினர். பத்ரியாவுக்குக் கணவருடன் உண்டான கருத்துவேறுபாடு தொலைத்தொடர்பு போதாமையினால் மேலும் மோசமடைந்தது என்கிறார். ஆயினும் தொடர்பு குறைந்ததால் சிக்கல்கள் மேலும் தீவிரமாகாமல் தவிர்க்கப்பட்ட கதைகளும் இருந்திருக்கலாம். அவற்றை ஆய்வில் பங்கேற்றவர்கள் விட்டுச்சென்ற மௌன இடைவெளிகளில்தான் தேடவேண்டும்.

சபுராளிகளின் குடும்பப் பெண்கள் இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் எதிர்கொண்ட அனுபவங்களை என்னுடைய ஆய்வு முடிவுகளின் அடிப்படையில் இவ்வாறு தொகுத்துச் சொல்லலாம்;

அவ்வப்போது தடைபட்டும், சீராக இல்லாமலும் நீடித்த பணவரவு, தொலைத்தொடர்பு ஆகியவற்றால் பெண்களுக்கு சமூகத்தால் அளிக்கப்பட்டிருந்த எல்லைகளைத் தாண்டிச்சென்று அன்றாட வாழ்க்கையைத் தமிழ் முஸ்லிம் பெண்கள் சமாளிக்க வேண்டியிருந்தது. குடும்பத்தினர் ஆதரவு, நகை அடமானம், வேலைக்குச் சென்று சம்பாதித்தல், சுயதொழில் ஆகியவற்றை அவர்கள் நாடவேண்டியிருந்தது.

மனைவி வேலைக்குச் செல்வது கணவருக்கு அவமானம் என்று கருதப்பட்டதால் வேலையை அவர்கள் ரகசியமாகவும் வைத்திருக்க வேண்டியிருந்தது. இத்தகைய மனப்போக்கு 2000களிலும் நீடித்ததால்தான் கல்வி கற்றும் தமிழ் முஸ்லிம் பெண்கள் வேலைக்குச் செல்லும் விகிதம் மிகவும் குறைவாக இருந்ததை ஆய்வுகள் காட்டியுள்ளன.

நேர்காணல்களின் அடிப்படையில், பாசமிக்க தந்தையாக இருப்பதில் குடும்பப் பின்னணிக்கேற்ப அதிக வேறுபாடுகளைக் காணமுடிந்தது. தந்தையரிடமிருந்து சீரான தொடர்பு கிட்டாத நிலையில் அப்பொறுப்புகளையும் வழக்கத்திற்கு மாறான வகையில் தாய்மார்களே நிறைவேற்ற வேண்டியிருந்தது.

இறுதியாக, திருமண உறவு குறித்து அதிருப்தி வெளியிடுவது உன்னதமான பெண்மைக்கு ஏற்புடையதல்ல என்கிற சமூகத்தின் எதிர்பார்ப்பை ஒட்டியே ஆய்வில் பங்கேற்றவர்களின் பதில்கள் அமைந்திருந்தன.

இனி இத்தலைப்பில் ஆராய விரும்புவோர்க்கு என்னிடம் ஒரு பரிந்துரை உண்டு. தமிழ் முஸ்லிம் எழுத்தாளர்கள் புலம்பெயர்தல் குறித்து எழுதிய கவிதை, புனைவு ஆகியவற்றையும் அவர்கள் கருத்திற்கொள்ளவேண்டும். சல்மாவின் கவிதைகள் அவற்றின் உள்ளடக்கத்திற்காக மட்டுமின்றி தமிழ் முஸ்லிம் சமூகத்திடமிருந்து பெற்ற காட்டமான எதிர்வினைகளையும் ஆராயவேண்டும். அஜ்னபி (மீரான் மைதீன், காலச்சுவடு, 2014) சபராளி அய்யுபு (சாரா, வலசை வெளியீடு, 2016) ஆகிய புனைவுகளும் ஆண்-பெண் உறவுகளில் வெளிச்சம் காட்டக்கூடும்.

தமிழ் முஸ்லிம் பெண்களின் வரலாறு எழுதப்படுவதற்காகக் காத்திருக்கிறது.

**

[கட்டுரையாளர் ஃபன்சுரா பானு, ஆய்வு அலுவலர், ஐசீஸ்-யூசோஃப் இஷாக் ஆய்வுக் கழகம் (Research Officer at ISEAS-Yusof Ishak Institute). Email: fanzura_banu@iseas.edu.sg மொழிபெயர்ப்பு: சிவானந்தம் நீலகண்டன். மார்ச் 2022 ‘தி சிராங்கூன் டைம்ஸ்’ இதழில் வெளியானது]

உசாத்துணை 

[1] Chinmay Tumbe, Migration Persistence across Tewntieth Century India, Migration and Development, Vol1 (1) 2012

[2] Pillay Patrick, Yearning to Belong, Malaysia’s Indian Muslims, Chitties, Portuguese Eurasians, Peranakan Chinses and Baweanese, Singapore, ISEAS Publishing, 2015

[3] Anuja Cabraal and Supriya Singh, Contested Representations of Remittances and the Transnational Family, South Asia: Journal of South Asian Studies 36, no.1, 2013

[4] Sen Samita, Without His Consent?: Marriage and Womens Migration in Colonial India, International Labor and Working-Class History Vol 65 (2004)

[5] Marina Martin, An Economic History of Hundi, 1858-1978, Dissertation for Order No. U639900 (London School of Economics and Political Science), 2012

[6] Sonalde Desai and Majistha Banerji, Negotiated Identities: Male Migration and Left-Behind Wives in India, Journal of Population Research 25, no.3, Oct 2008

[7] Dong Huiying, Warm Tidings in a Cold War, In Singapore’s Social & Business History Through Paper Ephemera In The Koh Seow Chuan Collection, edited by Koh Keng We, National Library Board Singapore, 2017

[8] Shen Huifen, China’s Left-Behind Wives: Families of Migrants from Fujian to Southeast Asia, 1930s-1950s. Singapore, NUS Press, 2012